girls boys should not talk to each other லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
girls boys should not talk to each other லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 ஜூலை, 2013

ஏட்டில்லாத விதிகள் !!!

வணக்கம்,

இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர், முகநூலில் (பேஸ்புக்கில்) தற்போது கல்லூரிகளால் கட்டாயமாக்கப்படும் ஒரு புதிய வழக்கத்தை பற்றி பகிர்ந்திருந்தார். கல்லூரிகளில் மாணவ/மாணவியர் எதிர் பாலினத்தவரோடு பேச / பழக கூடாது என்பதுதான். இதைப்பற்றியே பதிவு போடலாமே என எண்ணி இங்கு பகிர்கிறேன்.

ஒரு மாணவனோ /மாணவியோ ஒரு கல்லூரியில் சேரும் போது, அவர்களுக்கு போடப்படும் முதல் விதி, ஆண்/ பெண் இருவரும் எக்காரணதிற் கொண்டும் பேசி கொள்ள கூடாது. பள்ளி, கல்லூரிகளில் தான் மாணவர்கள் நல்ல ஒழுக்கத்தையும், ஆண்/ பெண் நட்பையும், கருத்துரையாடல் திறமையும் வளர்த்து கொள்ள முடியும். ஆனால் இப்போது கல்லூரிகள் மாணவியர் எந்த ஒரு சக மாணவரோடும், மாணவர் சக மாணவியோடும் பேச கூடாது என்ற 'உயர்ந்த சமூக கொள்கையை' (?!?!?) கடைப்பிடித்து வருகிறது . இதை பற்றி பல சமூக ஆர்வலர்களும், மனிதவள மேம்பாட்டு துறையினரும் எதிர்ப்பு குரல் கொடுத்து கொண்டிருந்தாலும், கல்லூரிகள் அவர்கள் நினைத்ததை நடத்தி கொண்டு தான் இருக்கின்றனர். இவை பெரும்பாலும் தொழில்முறை கல்லூரிகளில் தான், இந்த ஏட்டில்லா சட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. ஒரு சில பள்ளிகளிலும் இது அமலில் இருப்பது  வருந்ததக்கது.


ஒரு சில கல்லூரிகளில், இவ்விதியை உணவகங்களிலும் (Canteen) மற்றும் பேருந்துகளிலும் செயல்படுத்துகின்றனர்.  சில கல்லூரி பேருந்துகளில் வலது மற்றும் இடது  (முன்/பின்) என தனியாக கயிறுகள் அல்லது க்ரில்கள் மூலம் பிரித்து மாணவ / மாணவிகளை உட்கார செய்வர். சில நேரங்களில் ஓட்டுனர்கள் ஒற்றர்களாகவும் இருப்பர். ஆண்/பெண் பேசுவதை பழகுவதை கண்டுபிடித்து தண்டிக்கவே ஒரு தனிப்படையே (அவர்கள் தான் SQUAD !)  செயல்படும். சாதாரணமாக படிப்பு பற்றி பேசினாலே, என்ன ஏது  என விசாரித்தும், ஐ.டி கார்டை பிடுங்கி கொண்டும் அபராதம் கட்ட சொல்வார்கள். சில நேரங்களில் "ஆபிஸ் -ரூம்  ட்ரீட்மென்ட்களும்" நடைபெறும். (நான் படித்த கல்லூரியிலும் இதே நிலை தான் !!!)
 
படிக்கிற வயதில் மாணவர்கள் தவறான வழியில் போக கூடாது  என்பதற்காக கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் இத்தகைய கண்டிப்பு மாணவர்களில் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடும்.

இன்றைய நவீன உலகில், பல பழமைவாத விஷயங்களை தகர்த்து வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறோம். ஆனாலும் சில பொறியியல் கல்லூரிகளில் ஒழுக்கம் என்ற பெயரில் (மாணவ/மாணவியர்) பெண்களுடன் ஆண்களும், ஆண்களுடன் பெண்களும் பேச கூடாது என்ற விதியை போட்டுள்ளனர். காரணம் என்னவென்று கேட்டால், இதனால் தனி மனித ஒழுக்கம் மேம்படும் என்றும், கல்லூரி காதல் போன்ற கசமுசாக்களுக்கு முடிவு கட்டும் என்றும் சொல்லி பெருமைப்படுகின்றனர்.

இத்தகைய 'பலத்த சட்டங்கள் ' மூலம் பெற்றோர்கள் புன்முறுவல் பூக்கின்றனர் என்பதாலும், அவர்தம் பிள்ளைகள் தவறான வழிக்கு போகமாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும், இவை இன்னும் நடைமுறையிலேயே இருக்கிறது. ஆனால் இதன் மூலம் இளைய சமூகத்தினரிடம், சமூக திறன்கள் குறைந்து வருகின்றது என்பதே நிதர்சன உண்மை. 

இன்றைய 'கார்ப்பரேட்' உலகத்தில், அலுவலகங்களில் உடன் வேலை செய்யும்  எதிர் பாலினத்தவரோடு பேசி, பழகி வேலை செய்யும் நிலையில் தானுள்ளது. இதில் சில ஆண்கள் / பெண்கள்  எதிர் பாலினத்தவரோடு சகஜமாக பேச முடிவதில்லை. இந்த பிரச்சனை எல்லாருக்கும் ஏற்படுவது இல்லை. ஆனால் பலர், கல்லூரிகளில் போடப்பட்டுள்ள இத்தகைய விதியினால் அலுவலகங்களில் பாதிக்கபடுகின்றனர். உளவியலாளர்கள் இது தொழில்முறை மற்றும் சமூக திறன்ககளை பாதிக்கிறது என கூறுகின்றனர். மனிதவள மேலாளர்களும், பொறியியல் கல்லூரியில்  நன்றாக படித்து கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து, அலுவலகங்களில் சேரும்  போது, மற்றவரிடம் பேச/பழக கூச்சபடுகின்றனர். இதனால் அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கை பெரிதும் பாதிக்கபடுகிறது.

இன்னும் சிலரோ,மாணவர்கள் பள்ளியிலும்,கல்லூரியிலும் எதிர் பாலினத்தவரோடு பேசாமல் இருந்து விட்டு, அலுவலகங்களில் சேரும் போது இரு பாலினத்தவரும் 'காய்ந்த மாடு கம்பில் பாய்வது போல'  பேசி, பழகி, இணைந்து காதலா அல்லது வெறும் ஈர்ப்பா எனத் தெரியாமல் தடுமாறுகின்றனர். பெண்கள் பள்ளியில்/கல்லூரியில் படித்த பெரும்பாலான (எல்லோரும் அல்ல !) பெண்களுக்கு ஆண் நண்பர்கள் (பாய் பிரண்டு ) இருப்பதற்கும் காரணம் இதுதான்.

எதிர் பாலினத்தவரோடு நல்ல ஆரோக்கியமான உறவு இல்லாத போது, அவர்களிடம் பேசும் போது குற்ற உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான சமூகத்துக்கு அடித்தளம் இல்லை என பலரும் தெரிவிக்கின்றனர். இது எப்போது கல்வியாளர்களுக்கு புரியுமோ என்பது தான் தெரியவில்லை.  

நன்றி !!!

-பி .விமல் ராஜ்