ஞாயிறு, 17 நவம்பர், 2019

டார்க் நெட் என்னும் இருள் இணையம்!

வணக்கம்,

இந்த 2k கிட்ஸ் காலத்தில், ஸ்மார்ட் ∴போன் வந்த பிறகு இன்டர்நெட் பற்றி தெரியாதவர்கள் யாருமில்லை. எது வேண்டுமானாலும் படிக்க, தேட, வாங்க, ஆராய, பார்க்க, கேட்க  என இன்டர்நெட் பெரும் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும், தொழில்நுட்பத்திற்கும் ஒரு இருண்ட பக்கம் இருப்பது போல இன்டர்நெட்டுக்கும் இருக்கிறது. அதுதான் டார்க் நெட் (Dark Net) என்னும் இருள் இணையம்.

டார்க் நெட் என்பது இன்டர்நெட்டில் ஒரு சிறு பகுதி. பொதுவான பார்வையில் இல்லாமல், தேடலில் கிடைக்காத வலைத்தளங்கள். பெரும்பாலும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கான, மறைக்கப்பட்ட வலைத்தளங்கள் தான் டார்க்நெட்டில் இருக்கிறது.

ஒரு பெருங்கடலில் மேற்பகுதியில் தெரியும் பனிப்பாறை அளவுதான் நம்மால் சாதாரணமாக பார்க்க/தேட முடிந்த வலைத்தளங்கள் (கீழுள்ள படத்தை பார்க்கவும் ). இதனை சர்∴பெஸ் வெப் (Surface Web) என சொல்வார்கள். நம் கண்ணில் தெரியாமல், கடலுக்கடியிலும், ஆழ்கடலிலும்  இன்னும் பல இணையதளங்கள் முழுகியுள்ளது என நம்மில் பலருக்கு தெரியாது. இதனை டார்க் வெப் (Dark Web) அல்லது டார்க் நெட் (Dark Net) என சொல்வார்கள்.

Deep Web & Dark Net
Deep Web & Dark Net - click to enlarge 
(Surface Web) சர்∴பெஸ் வெப் அல்லது கிளியர் வெப் (Clear web) என்பது சாதாரண பொதுமக்களால் எளிதில் (search engine) சர்ச் என்ஜின்கள் மூலம் தேட கூடிய, பார்க்க கூடிய பக்கங்களை கொண்டது. இதற்கு Clear net , indexable web என்ற பெயருமுண்டு. WWW இல் ஒரு பகுதி. எல்லோருக்கும் தெரிந்த சர்ச் என்ஜின்கள் கூகிள், யாஹூ மற்றும் பிங் ஆகியன ஆகும். இதில் கூகிள் மூலம் தேடப்படுபவை 30 ட்ரில்லியன் வெப் பக்கங்கள் மட்டுமே ஆகும். இது இன்டர்நெட்டில் வெறும் 4% மட்டுமே ஆகும்.

இன்னும் புரிய வேண்டுமானால், நாம் தினசரி இன்டர்நெட்டில் உபயோகப் படுத்தும் கூகிள், யாஹூ, யூ ட்யூப், அமேசான், ∴பிளிப்கார்ட், டிவிட்டர், ∴பேஸ்புக், விக்கிப்பீடியா, பிளாக்ஸ்.. இன்னும் பல வெப் சைட்டுகள் சர்பெஸ் வெப்பில் இருப்பவை தான்.

(Deep Web) டீப்  வெப் என்பது சாதாரண தேடலில் மறைக்கப்பட்ட பக்கங்கள் தான். ரகசிய தகவல்களை கொண்ட வலைத்தளங்கள், அரசாங்க குறிப்புகள்/ தரவுகள் (databases), பல்கலைக்கழக தகவல்கள்/தரவுகள், வங்கியின் பணபரிமாற்ற தகவல்கள், தனியார் வலைத்தளங்கள் (web portals), பணம் கட்டி பயன்படுத்தும் சேவைகள் போன்ற வலைத்தளங்கள் டீப் வெப்பில் இருக்கிறது. உதாரணத்திற்கு நாம் சந்தா பணம் கட்டி பயன்படுத்தும் நெட்பிலிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற செயலிகளின் தகவல்கள் டீப் வெப்பில் தான் இருக்கிறது. அதுபோல சில அரசாங்க குறிப்புக்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய web portalகள் நாம் நேரடியாக கூகிளில் தேடி ஆராய/கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இவற்றுக்கென தனி IP address மூலம் நாம் நேரடியாக அன்றாடம் பயன்படுத்தும் பிரௌசர்கள் மூலம் அதற்கென உள்ள username, password மூலம் பயன்படுத்தலாம்.   

(Dark Net) டார்க் நெட் என்பது சாதாரண மற்ற வலைத்தளங்கள் போல பார்க்க பயன்படுத்த முடியாதது. Deep Web -ல் ஒரு சிறு பங்கு தான் டார்க்நெட். இதில் பெரும்பாலும் எல்லா வலைத்தளங்களும் மறைக்கப்பட்ட வலை தளங்களாக தான் இருக்கும்.

இந்த டார்க் நெட்டை உபயோகபடுத்த, நாம் தினசரி பயன்படுத்தும் பிரவுசர்கள் மூலம் உலவ முடியாது. எல்லா வலைத்தளங்களும்  encrypted செய்யப்பட்டிருக்கும். டார்க் நெட்டில் உலவ உதவும் சில பிரத்யோக encrypted பிரவுசர்கள் இருக்கிறது. அவை:
 • Tor browser
 • Subgraph OS
 • Firefox
 • Opera
 • Waterfox
 • I2P
 • Tails
 • Whonix
TOR browser

இதில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது டார் பிரவுசர் (Tor browser). நாம் எப்படி Chrome, Safari, IE, Firefox போன்ற பிரவுசர்களை பயன்படுத்தி நெட்டில் உலவுகிரோமோ அது போல, டார் பிரவுசர் மூலம் டார்க் நெட்டில் உலவுகிறார்கள். டார் பிரௌசரை Onion router என்று சொல்கிறார்கள். டார்க் நெட்டில் உள்ள வலைத்தளங்களின் டொமைன்கள் பெரும்பாலும்  .onion என்று இருக்கும். இது போன்ற வலைத்தளங்களை டார் மூலம் பயன்படுத்தலாம்.

இன்டர்நெட்டுக்கு நாம் பயன்படுத்தும் பிரௌசர்களின் மூலம் நாம் என்னென்ன தளங்களை பார்க்கிறோம் என்பதை கண்காணிக்க முடியும். ஆனால் டார் மூலம்  டார்க் நெட்டில் உலவும் போது எதையும் கண்காணிக்க முடியாது.

டார்க் நெட்டில் என்னென்ன செய்கிறார்கள் ? எந்த விதமான வலைத்தளங்கள் இருக்கிறது ?? சட்டவிரோதமான, சமூக விரோதமான, மனித தன்மையற்ற இருட்டில் நடக்கும் பல செயல்பாடுகள் இங்கு தான் நடக்கிறது. போதை மருந்து, ஆயுத கடத்தல், மனித கடத்தல்கள், சிறு குழந்தைகளின் ஆபாச படங்கள், கூலிப்படைகள், திருட்டு வீடியோ /ஆடியோ (புரியும்படியாக தமிழ் ராக்கர்ஸ்) , கணினி மென்பொருள் திருட்டுகள், பேங்க் திருட்டு மற்றும் மோசடிகள், கணினி மற்றும் இணையம் மூலம் கடக்கும் திருட்டுகள் என எல்லாமே டார்க் நெட்டில் தான்நடக்கிறது. இவ்வகை சைபர் திருடர்கள் டார்க் நெட்டில்  விற்க அல்லது  வியாபாரம் செய்ய பிட் காயின் (Bitcoin) போன்ற virtual currency மூலம் பணபரிமாற்றங்களை செய்து கொள்கின்றனர். அதனாலும் இவர்களை யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை.

இந்திய/ இன்டர்போல் சைபர் கிரைம் மற்றும் உளவுத்துறை  அதிகாரிகள் சேர்ந்து பல தொழில் நுட்ப உதவியுடன் இவ்வகை குற்றங்களையும், குற்றம் செய்பவரையும் பிடிக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். சிலரை கைது செய்து நடவடிக்கையும் எடுத்துள்ளனர். ஆனால் பலரை இன்னும் எந்த இடத்திலிருந்து (நாட்டிலிருந்து) குற்றங்களை செய்கிறார்கள் என்றே அறிந்து கொள்ள முடியவில்லை.

எல்லா தொழில்நுட்பத்திலும் வரமும் சாபமும் இருப்பது போல, இதிலும் ஒரு சாபக்கேடு இருக்கிறது. எங்கு சென்றாலும் இன்டர்நெட்டை பயன்படுத்தும்  நாம் தான் எச்சரிக்கையுடனும், சமூக அக்கறையுடனும் செயல்பட வேண்டும்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்

சனி, 10 ஆகஸ்ட், 2019

உங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி ???

வணக்கம்,

மகா ஜனங்களே!!!  ஒரு நிமிஷம். தலைப்பை பார்த்துட்டு இது ஏதோ கில்மா சம்பந்தமான பதிவு என நினைத்து அவசரமாக லிங்க் கிளிக் பண்ணி உள்ளே வந்திருந்தால், மன்னிக்கவும். இது அது போன்ற பதிவு அல்ல. இப்போ மேலே படிக்கலாம்.

husband-wife-jokes-tamil

பொதுவாக கணவன் மனைவி ஜோக்குகளில், மனைவியை கிண்டல் செய்வது போல தான் பெரும்பாலும் இருக்கும். நான் பேச்சுலராக இருக்கும் போது அதையெல்லாம் படித்து விட்டு, எப்படி இந்த மொக்கை ஜோக்குக்கெல்லம் சிரிக்கிறார்கள் என யோசித்து கொள்வேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் அதன் முழு அர்த்தமும் புரிய ஆரம்பித்தது. பின்னர் அந்த ஜோக்குகெல்லம் நானும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டேன். நான் மட்டுமல்ல...பெரும்பாலானோர் இப்படிதான்.

ஏன்?? ஏனென்றால் அந்த கதையிலோ, சிரிப்பிலோ வரும் சம்பவம் அவரர் வீட்டிலும் ஏதோ ஒருமுறையேனும் அப்படிப்பட்ட காட்சியோ/ வாக்குவாதமோ நடந்திருக்கும். அதனால் தான் கணவன் மனைவி ஜோக்குகளுக்கு எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்த சிரிப்புகளில் வருவது போல எல்லா பெண்களும் கணவனை சந்தேகிப்பார்களா ? கொடுமை படுத்துவார்களா ?? நிறைய கண்டீஷன் போடுவார்களா ??? இல்லையெனில் ஓயாமல் திட்டி கொண்டே இருப்பார்களா???

கோபம், ஆசை, வெறுப்பு, அன்பு, சந்தேகம், பாசம், இவை அனைத்தும் ஆண் - பெண் ( கணவன் - மனைவி) இருவருக்குமே இருக்கும். இதையெல்லாம் கடந்து தான் போக வேண்டும். எல்லார் வீட்டிலும் இதே கதை தான்.

ஒரு திரைப்பட கலைவிழாவின் போது ஒரு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி சொன்ன வாழ்வின் ரகசியம் இது. மனைவிமார்கள் எப்பொழுதும் அவர்கள் சொல்வதையே கணவன்மார்கள் கேட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது சில நேரங்களில் நடைபெறாத பொது கோபம், சண்டை போன்றவை வரும். இதற்கு ஒரே வழி. விட்டு கொடுத்து போவது தான்.


 ஒரு சண்டை/  விவாதம்/ அல்லது கருத்து வேறுபாடு போன்ற சமாச்சாரங்களில் கணவன் விட்டுக்கொடுத்து மனைவி ஜெயிப்பது போல காட்டிகொண்டால், ஒரு பிரச்னையும் வராது (உண்மையில் கணவன் சொல்வது தான் நடக்கும்). கணவன் ஜெயிப்பது ஒரு முறை மட்டுமல்ல; வாழ்நாள் முழுவதும், தோற்று போய் மனைவியின் (அன்பை) ஜெயிக்கலாம். பெண்களுக்கு அவர்கள் ஜெயிப்பது போல இருந்தாலும் நாம் தான் இறுதியில் வெல்கிரோம். மனைவியிடம் ஜெயிப்பதை விட குடும்ப வாழ்க்கையில் ஜெயிப்பதே முக்கியம்.


இது தான் உண்மையான வாழ்வின் ரகசியம். இதை தான் பெரும்பாலானோர் பின்பற்றுகிறார்கள்.நானும் தான்!  இந்த ரகசியம் அறிந்த பின், இதை மட்டும் பின்பற்றி பாருங்கள். பிறகு தெரியும் வாழ்வின் இனிமை பற்றி... இனிய வாழ்க்கை ஆரம்பிக்கட்டும்!நன்றி!!!
பி.விமல் ராஜ்

வெள்ளி, 24 மே, 2019

தாமரை ஏன் மலரவில்லை?

வணக்கம்,

நேற்று முதல் எல்லா இடங்களிலும் இது தான் பேச்சு. தமிழ்நாடு மற்றும் கேரளா தவிர எல்லா இடங்களிலும் காவிக்கொடி. கேரளாவை விட்டு விடுங்கள்; கம்யூனிசம், காங்கிரஸ் என வேறு வரலாறு இருக்கிறது. தமிழ் நாட்டில் ஏன் தாமரை வளர முளைக்க முடியவில்லை??
 • தாமரையை பெரும்பாலான தமிழ் மக்களுக்கு ஏன் பிடிக்கவில்லை.?
 • தமிழ் நாட்டில் ஏன் மோடியை பலருக்கு பிடிக்கவில்லை? 
 • ஏன் பாஜகவை/ஆர்.எஸ். எஸை பிடிக்கவில்லை.?
 • இந்துக்களே இந்துத்துவாவை எதிர்க்க காரணம் என்ன?
ஏன்? ஏன்?? ஏன்??? வாஜ்பாய் இருந்த போது கூட இவ்வளவு எதிர்ப்புக்கள் இருந்ததாக தெரியவில்லை. இவையெல்லாம் காரணங்களா???
 • ஊழல் செய்கிறார்கள்.
 • மோடி உலகம் சுற்றுகிறார்.
 • ஜி.எஸ்.டி.
 • மீத்தேன் /ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பது.
 • தென் மாநிலங்களுக்கு வரிசலுகைகள் தரவில்லை.
 • பேரிடர்களுக்கு தக்க உதவி செய்யாமை. 
 • கார்ப்பரேட் அதிபர்களுக்கு சகாயம் செய்தல்.
இதெல்லாம் கூட எனக்கு பெரிய காரணமாக தெரியவில்லை. இதெல்லாம் காரணமாக  இருந்திருந்தால் இந்தியாவில் / தமிழ்நாட்டில் யாரும் ஆட்சியமைக்கவே முடியாது.

இவர்களை பிடிக்காமல் போக காரணம், இவர்கள் பேசும் இந்துத்துவம் என்னும் இந்து தீவிரவாதம். என்னதான் தமிழகம் முன்னாளில் இந்துகளின் பூமியாக இருந்தாலும், சைவ வைணவ மதங்களின் உறைவிடமாக இருந்த போதிலும், நம் மக்களின் மனதில் கருப்பு சட்டையின் தாக்கம் இன்னமும் ஆட்கொண்டிருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கெல்லாம் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். பெரியாரிச கொள்கைகள் தான் முக்கிய காரணம்.
பெரியாரின் பகுத்தறிவு பேச்சுகள், சுயமரியாதை இயக்கம், பெண் விடுதலை, சாதி ஒழிப்பு போன்ற விஷயங்கள் நம் மக்களின் மனதோடு ஒன்றாக ஒன்றி, இன்றும் அதை தாண்டி நம்மால் யோசிக்க முடியவில்லை. சாதி/மத பேதங்கள் முழுவதும் ஒழிந்து விட்டது, சாதியே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இப்போதும் நம்மிடம் சாதியின் பெயரை கேட்பவர்களை ஒரு அசிங்க பொருள் போல ஏற இறங்க பார்க்கும் மனநிலை தான் இருக்கிறது.


மற்ற மாநிலங்களில் இது போன்ற தலைவர் இருந்தாரா, அல்லது கொள்கைகள் இருந்ததா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் இது போன்ற உயரிய சமூக கொள்கைகளை கொண்ட தலைவர் இல்லை என்று தான் நாம் எண்ணி கொள்ள வேண்டும். இருந்திருந்தால் இந்நேரம் தமிழகம் போல மற்ற மாநிலங்களும் இது போன்ற சாதிய மத சிந்தனைகளில் வேறுபட்டிருக்கும்.

தமிழ் நாட்டில் வந்து இங்கு இந்துத்வாதான் நம் கொள்கை, நம் லட்சியம், என்று கூறுவது, மற்ற மதத்தினரை ஏசுவது/பழிப்பது போன்ற செய்கையெல்லம் தான் நம்மை இன்னும் பாஜகவை எதிர்க்க செய்கிறது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற சில தேசிய கட்சிகள், மத்தியில் ஒரு விதமான கொள்கையும், நம் மாநிலத்தில் வேறு விதமான கொள்கையும் கொண்டு ஒப்பேற்றி வருகின்றனர். அதே இவர்களும் தொடர்ந்தால், ஒரு வேளை எதிர்காலத்தில் தமிழ்நாட்டில்  மலர வாய்ப்புண்டு.. ஆனால் அவர்கள் மாற போவதும் இல்லை.. இங்கே மலர போவதும் இல்லை.

மற்றபடி படித்தவர்கள் மோடிக்கு ஓட்டு போட வில்லை என்பதெல்லாம் அபத்தம். "அடேய்! நீங்க தாண்ட திமுக/அதிமுகவை மாறி மாறி அரியணை ஏத்துறீங்க.." 


மேலே இருப்பது பழைய பேப்பரில் 2014 மக்களவை தேர்தலுக்கு முன் எழுதியது. நம்பினோம்.ஆனால் ?!!?

வேறு வழியில்லை. அவர்தான் பிரதமர். நாம் முடிவெடுக்கவில்லை. மற்ற மாநிலங்கள் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து விட்டன. மீண்டும் வந்து என்னன்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

தாமரை சேற்றில் தான் மலரும். தமிழ்நாடு தெளிந்த அழகிய நீரோடை ஆகிவிட்டதோ? என எண்ணி நம்மை சமாதான படுத்தி கொள்ளலாம்!


நன்றி!!!
பி.விமல் ராஜ்

செவ்வாய், 15 ஜனவரி, 2019

பேட்ட பராக் !

வணக்கம்,

ஒரு உண்மையான ரஜினி ரசிகன் வெறியன், ரஜினி ரசிகர்களுக்காகவே வெறியர்களுக்காகவே படம் எடுத்தால், எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கிறது பேட்ட திரைப்படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கம், சூப்பர் ஸ்டார், சிம்ரன், திரிஷா, சசிகுமார், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக் என பெரிய நட்சத்திர பட்டாளமே பேட்டையில் இருக்கிறது.

petta-movie-review

பல இடங்களில் ரஜினியின் பழைய பட வசனங்களையும், ஸ்டைல்களையும்  அள்ளி தெளித்திருக்கிறார்கள். எல்லா காட்சியிலும் தலைவரின் ஆக்கிரமிப்பு இருக்கிறது. கிளைமாக்ஸ் டுவிஸ்ட் செம.. யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓப்பனிங் ஸீன், ரவுடிகளை மிரட்டும் போதும், அவருடைய ட்ரேட் மார்க் சிரிப்பை சிரிக்கும் போதும், அந்த ஸ்டைல் நடை, மேனரிசம், சோகம், அழுகை என எல்லா காட்சிகளிலும் நம்மை கவர்கிறார் சூப்பர் ஸ்டார்.

பாடல்கள் கிட்ட தட்ட எல்லாமே கலர்புல்லாக, பெப்பியாக இருக்கிறது. "மரண மாஸ் " மற்றும் "உல்லால.. உல்லால .." பாட்டும் தாளம் போட்டு கொண்டே நம்மை மீண்டும் மீண்டும் பாட வைக்கிறது. "பேட்ட பராக்.." தீம் வரும் போது தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்கிறது.

விஜய் சேதுபதி நடிப்பிலும், கதாபாத்திரத்திலும் கெத்து காட்டியுள்ளார். வில்லனாக நவாஸுதீன் வந்து அவரும் பங்கை சரியாய் செய்துள்ளார். மற்றபடி பலரும் திரையில் வந்து போனாலும், ரஜினியே சிறப்பாய், நிறைவாய் தெரிகிறார்.

படம் முழுக்க சூப்பர் ஸ்டார் வந்தால் மாஸும்,  விசிலும் தியேட்டரை கிழிக்க வேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்துள்ளார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார். பேட்ட உண்மையிலேயே மரண மாஸ் !

சினிமா ரசிகனின் பார்வை-

இன்னும் எத்தனை நாளுக்கு தான் சூப்பர் ஸ்டாரை நாங்கள் ஒரு மாஸ் ஆக்ஷன் கமர்ஷியல் ஹீரோவாகவே பார்ப்பது என தெரியவில்லை. தீவிர ரஜினி ரசிகன் அதை தான் எதிர்பார்க்கிறான் என்று வைத்து கொண்டாலும், அவருள் இருக்கும் நடிப்பு திறமையையும், கதாபாத்திரத்தின் மூலம் மாஸ் சேர்த்து திரையில் காண்பதே என்னை போன்ற சூப்பர் ஸ்டாரின் /சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும். அதை தான் விரும்புவார்கள். 

இரண்டு நாயகிகள் இருந்தும் இருவரும் நான்கு/ ஐந்து சீன்களுக்கு மேல் வரவில்லை. ஓவர் பில்டப், எல்லோரும் ஹீரோவின் துதி பாடுவது, ஜோக் என்ற பெயரில் கிச்சு கிச்சு மூட்ட முயல்வது, பிளாஷ்-பாக், பகை, பழிவாங்கல் சென்டிமென்ட், காதல் என அதே கமர்சியல் பார்முலா.

ஏற்கனவே கபாலி, காலா, 2.0 என படங்கள் சூப்பர் ஸ்டாரின் பார்முலாவிலிருந்து விலகி வந்திருந்தாலும், திரைக்கதையில் தெளிவோ, பலமோ இல்லாதால் படம் விமர்சனங்களுக்கு உள்ளானது .

ஜிகர்தண்டா அசால்ட் சேது போல, ரமணா பிரொபஸர் போல,  வடசென்னை ராஜன் போல ஏதாவது ஒரு செம வெயிட்டான கதாபாத்திரத்திலோ, அரசியல் திரில்லர் போல, மிஸ்ட்ரி திரில்லர் என ஏதாவது ஒரு வித்தியாசமான ஒரு திரைக்கதையிலோ தலைவரை தரிசிக்க வேண்டும் என தோன்றுகிறது. பின்வரும் காலங்களில் யாரவது இப்படி எடுத்தால் நலம். கோடி புண்ணியம்.

அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் !


நன்றி!!!
பி.விமல் ராஜ்.