tamil nadu splitup லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil nadu splitup லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

தமிழ்நாடு இரண்டாக பிரிந்தால் ?!?!

வணக்கம்,

கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களிலும், தொலைகாட்சிகளிலும் தொடர்ந்து பேசபடுவது தனி தெலுங்கானாவைப்பற்றி தான். 1968-ல் மாநில மறுசீரமைப்பு சட்டம் காரணமாக ஐதராபாத் மாநிலத்தில் தெலுங்கு பேசும் பகுதிகள் ஆந்திர மாநிலமாக சேர்க்கப்பட்டது. அப்போது முதலே தனி தெலுங்கானா  கோரிக்கை எழுப்பட்டுள்ளது. பல போராட்டங்களுக்கு பிறகு, இப்போது தான் தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க இந்திய பாராளுமன்றம் ஒப்புதல் (மட்டுமே !)அளித்துள்ளது. ஐதராபாத் நகரம் இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக 10 ஆண்டுகள் செயல்படும் என அறிவித்துள்ளனர்.

அதை தொடர்ந்து, கூர்காலாந்து (மேற்கு வங்காளம்), விதர்பா (மகாராஷ்டிரம்) பகுதிகளை பிரிக்க கோரி வருகின்றனர். இதை பார்த்து, படித்த பின், இதே போல் நமது தமிழ்நாடும் இரு மாநிலங்களாக பிரிந்தால் என்ன ஆகும் என எண்ணி பார்த்தேன். அதற்கு யாரும் ஒப்பு கொள்ள மாட்டார்கள் என எனக்கு தெரியும். அதனால் மக்கள் யாருக்கும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏற்கனவே, பல முறை தனி தமிழ்நாடு கோரிக்கைகள் எழுந்த போதிலும், அவ்வப்போதே அந்த சத்தம் அமுங்கி போய்விட்டது. அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றாலும் ஒருவேளை பிரிந்துவிட்டால் ?!?! 

தமிழ்நாடு இரண்டாக பிரிய வேண்டும் என்ற எண்ணம் நிச்சியமாக எனக்கு இல்லை. இருந்தாலும் இது முழுவதும் என்னுடைய சின்ன கற்பனைதான்.

கடந்த 50 ஆண்டுகளாக தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க கோரி பல போராட்டங்களை தொடர்ந்து, இப்போது தான் அதை தனி மாநிலமாக பிரிக்க முடிவு செய்துள்ளனர். ஆகையால் தமிழ்நாட்டை, இன்று குரலெழுப்பி நாளை இரண்டாக பிரித்திட முடியாது.

சரி, தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும். ஏன், எதற்கு ,எப்படி என்ற காரணமெல்லாம் எழும் அல்லவா?

தென் இந்தியா, வட  இந்தியா என இரண்டாக பிரித்து கூறுவது போல தமிழ் நாட்டில், வட தமிழகம், தென் தமிழகம் என பிரித்து சொல்வதுண்டு. வடக்கில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் , கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலைஆகிய மாவட்டங்களும், ஏனைய மாவட்டங்கள் தென்  தமிழகம் என்றும் அழைக்கபடுகின்றன.

இரண்டு தனி மாநிலமாக பிரிக்கும் போது சரிசமமாக பிரிக்க வேண்டும் என்பதால், கிழே உள்ள படத்தில் இருப்பது போல பிரிக்க வேண்டும் (இதுவும் என் கணிப்புதான் ). வடக்கு பகுதி,  'வட தமிழகம் '  என்று அழைக்கப்படலாம். எப்போதும் போல தலைநகரமாக சென்னை செயல்படும்.

தென்பகுதி 'பாண்டிய நாடு'  (மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை, இராமநாதபுரம்,  தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளை  பாண்டியர்கள் ஆண்டுள்ளதால்!) என்று பெயரிடபடலாம்.

Tamil nadu-Seperation

ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை உள்ளது. தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகை, ஆகிய பகுதிகள் சோழர்களால் ஆளப்பட்டது. அதனால் அந்த மாவட்டங்களுக்கு பாண்டிய நாடு என்று  பெயரிட ஒப்பு கொள்ள மாட்டார்கள். பல சண்டை சச்சரவுகளுக்கு பிறகு, தமிழகத்தின் தென் பகுதி 'தென்னகம்' என்று பெயரிடப்படலாம். தலைநகரம் திருச்சிராப்பள்ளியா அல்லது மதுரையா என கலந்துரையாடி, கடைசியில் மதுரை தென்னகத்தின்  தலைநகரமாக செயல்படும்.

பிறகு வட தமிழகத்தின் சின்னமாக சென்னை சென்ட்ரல்  நிலையமோ அல்லது செயின்ட் ஜார்ஜ் கோட்டையோ இருக்கும். தென்னகத்தில் தஞ்சை பெரிய கோவில் கோபுரம் அரசு சின்னமாக இருக்கும்.

மாநிலத்தை இரண்டாக பிரித்தாகிவிட்டது. தனி மாநில கோரிக்கை எழுமானால், அதற்கு என்னவெல்லாம் காரணம் இருக்கும் ?

ஏற்கனவே பல பிரச்சனைகள் தமிழ்நாட்டில் உள்ளது. வாரிசு அரசியல், நில ஆக்கிரமிப்பு, கட்ட பஞ்சாயத்து, ஊழல் குற்றசாட்டுகள், சாதி /சமய சண்டைகள், விலைவாசி ஏற்றம், குடிநீர் தட்டுப்பாடு, ஈழ பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை, என பிரச்சனைகளின் பட்டியல்களுக்கு குறைவில்லை.

முதல் காரணம், நதிநீர் பிரச்சனைத்தான்.  ஒவ்வொரு முறையும், கோடைகாலத்திலும், பாசன காலத்திலும், காவிரியையும்,கிருஷ்ணா நதியும்  கர்நாடக மாநிலம் தர மறுப்பது, கோடையில் வெயில் அடித்து, ஐப்பசியில்  மழை பெய்வது போல வாடிக்கையான ஒன்று. பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் போது, அரசு ஊழியர்கள்,  நடிக /நடிகைகள், அரசியல்வாதிகள் என எல்லோரும் தனித்தனியே போராட்டம்  என்ற பேரில் ஒன்றை நடத்தி அவர்களுடைய எதிர்ப்பை காட்டுவார்கள். பெரும்பாலும், இதனால் எந்த ஒரு பயனும் இருக்காது. இதனேயே சாக்காக வைத்து தமிழ்நாட்டை தனியாக பிரிக்க சொல்வார்கள். 

தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டுமானால் மத்திய அரசின் ஆதரவு வேண்டும். அப்படி இருந்தால் தான் மாநிலத்தில் ஆட்சி செம்மையாக இருக்கும். நடுவண் அரசு அனுமதி தர வேண்டிய புதிய ரயில்கள், மின் பாதை அமைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்/டீசல் , தொலைத்தொடர்ப்பு, என பல உள்ளது. இவை அனைத்திலும் மாநிலமும் மத்திய அரசும் ஒன்று சேராவிட்டால், பொதுமக்களுக்கு தான் பிரச்சனை. ஒரு சிலர், மத்திய அரசின் ஆதரவை பெறுவதற்காக கூட தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க சொல்வார்கள்.

அடுத்த காரணம், இருக்கவே இருக்கிறது சாதியம். சாதி போர்வையில் இருக்கும் சில அரசியல் கட்சிகள், என் இன மக்களுக்கு ஒரு திட்டமும் பயனளிக்கவில்லை, என் சாதிக்காரன் தான் நாட்டை ஆள வேண்டும், தென்பகுதியில் உள்ள என் மக்களுக்கு நீதியும் நியாயமும் வேண்டும். தனியாக பிரித்து கொண்டு நாங்களே எங்கள் மக்களை பார்த்து கொள்கிறோம். அதனால் தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பலாம்.

தமிழ்நாட்டில் இரு பெரும் அரசியல் கட்சிகளின், இரு பெரும் தலை(வி)களின் காலத்துக்கு பின்,  அரியணையில் யார் அமர்வது  என்ற போராட்டத்தில்  பல பிரச்சனைகள் வரும்.  அந்த சண்டையில் தமிழ்நாட்டின் தென் மண்டலம் எனக்கு, வடக்கு மண்டலம்  உனக்கு என அடித்து கொண்டு கட்சி இரண்டாக பிரிப்பார்கள். இதனால் சில வன்முறைகளுக்கு பிறகு அவர்களின் ஆதாயத்துக்காக கூட தமிழ் நாடு தனியாக பிரிக்கபடலாம்.

எல்லாவற்றையும் விட பெரியது, ஈழ பிரச்சனை. தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லபடுவதைவும், இலங்கையில் போரில் பாதிக்க பட்டவர்களுக்கு மறுவாழ்வு  தரவும் எந்த அரசும் முயற்சி எடுக்க..... (நீங்களே நிரப்பி கொள்ளுங்கள் ). நிற்க. அதனால் சில தமிழ் அமைப்புகளுக்கும், சில அரசியல் கட்சிகளும் நாங்களே மத்திய அரசுடனும், இலங்கை அரசுடனும் பேசி தீர்த்து கொள்கிறோம் எனக் கூறி தமிழ் நாட்டை பிரிக்க சொல்வார்கள்.

தமிழ்நாடு இரண்டாக பிரியும் போது , பிரிவினைவாதிகளால் சொல்லப்படும் சில நன்மைகள்...
  1. தமிழகத்தில் 32 மாவட்டங்களை இரு மாநிலமாக பிரித்தால், மாநில அரசு, நிர்வாகம் (ஆட்சி) செய்ய ஏதுவாக இருக்கும்.
  2. சட்டமன்ற வரவு செலவு திட்டத்தின் போது ( Legislative Budget) நலத்திட்ட உதவிகள்,  மாவட்டங்களுக்கு எளிதில் போய் சேர வாய்ப்புண்டு (திட்டம் போட்டால், போய் சேரலாம் !? ).
  3. ஒவ்வொரு வரவு செலவு திட்டத்தின் போது எல்லா மாவட்டங்களுக்கும் நலத்திட்டங்கள் பயன்பட வாய்ப்புள்ளது.
  4. நீதிமன்றங்கள், காவல்துறையின் அமைப்பும், செயல்பாடும் எளிதாக இருக்கும். 
  5. மாநிலம் பிரிவதால் மேலும் ஒரு புதிய தலைநகரம் உருவாகும். தொழிற்முறையிலும், கல்வியிலும் மற்ற எல்லாவற்றிலும் சென்னைக்கு இணையாக முன்னேறி விடும். (ஒரு 50 ஆண்டுகளில்! ).
  6. புதிய தலைநகரத்திற்கு அருகே உள்ள மாவட்டங்கள், சிறிய நகராட்சிகள் வெகுவாய் முன்னேறும். அங்குள்ள மனையின் மதிப்பு 20 முதல் 80 சதவிகிதம் வரை ஏறிவிடும்.    
  7. புதிய மாநிலத்தில், புது தொழிற்சாலைகள், பல்கலைகழகங்கள் மற்றும் பல நல்ல திட்டங்கள் ஆரம்பிக்கப்படலாம். 
  8. புதிய ரயில் முனையங்கள் தொடங்கப்படும்; மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சர்வதேச விமானநிலையங்கள் திறக்கப்படும்.
  9. அடுத்து மிக முக்கியமானது, சேது சமுத்தர திட்டம் மீண்டும் எழுச்சி பெற்று ஆரம்பிக்கப்படும். மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் போது, தென்னக அரசு, மத்திய அரசுடன் சேர்ந்து சேது சமுத்தர திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், இராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய சிறுசிறு துறைமுகங்கள் சர்வதேச துறைமுகங்களாக மாறும். இதனால் அந்த மாவட்டங்கள் பெரும் வளர்ச்சி அடையும்.
  10. தென்கோடியில் உள்ள மாவட்டங்கள், தலைநகரில் மனு கொடுக்கவோ அல்லது மாவட்ட பிரச்னையை பற்றி பேசவோ 600/ 700 கீ.மீ பயண பட வேண்டியதில்லை. 
பிரிவினை வேண்டாம் என்று சொல்லுபவர்களால் சொல்லப்படும் விஷயங்கள்...

தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பதால், மேலும் பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மாநிலங்களை பிரித்து தனி தலைநகரம், தனி அரசு அலுவலகங்கள் ஆரம்பிக்க வேண்டுமானால் முதலில் கஜானாவில் பணம் வேண்டும். அதற்காக அதிக வரிவசூலிக்க வேண்டும்; விலைவாசியை கொஞ்ச நாட்களுக்கு ஏற்றி தான் வைக்க வேண்டும். மாநில எல்லை வரையருப்பு ; நதி நீர் பகிரபடுவது; போக்குவரத்து  என எல்லாவற்றிலும் மக்களுக்குதான் பிரச்சனை. இப்போது ஆந்திராவில் நடப்பது போல தொடர் பொது வேலைநிறுத்தங்களும், பல வன்முறைகளும் நடைபெறும்; பலர் பாதிக்கபடுவார்கள்.

இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போதும் தமிழ் நாட்டை பிரிக்க நினைத்தால், அது முழுக்க முழுக்க அரசியல் சுயநலம் மட்டுமே காரணமாக இருக்கும். முன்னரே சொன்னது போல சாமானியனுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. அதனால் தனி மாநிலம் /தனி  தமிழ்நாடு என்று கோஷம் போடும் அரசியல்/ அரசியல் சார்ந்த பிரிவினைவாதிகளுக்கு இது புரிய வேண்டும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்