ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்!

வணக்கம்,

நம் பாரத தேசம் ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு, நாம் உலகின் சிறந்த பணக்கார நாடாக தான் இருந்து வந்தோம். வெள்ளைகாரர்கள் நாட்டை விட்டு போகும் போது, இந்தியா ஏழ்மையான நாடாக மாறிவிட்டது.

சங்க காலத்தில் நாம் கல்வி, செல்வம், அறிவியல், வணிகம், மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கினோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் வளமாக வாழ்ந்தோம் என்பதை சொல்ல சங்க காலம் வரை பின்னோக்கி செல்ல வேண்டாம்; வெறும் 500 ஆண்டுகள் பின்னால் சென்று பார்த்தாலே தெரிந்துவிடும்.

15 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை :

தமிழ்நாடு -

அன்றைய தமிழகத்தை விஜயநகர பேரரசுகளும், மதுரை, தஞ்சை நாயக்கர்களும், மராட்டிய மன்னர்களும் ஆண்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் தான் மதுரை நாயக்கர் மகால், சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவில் கட்டப்பட்டது. மயிலை கபாலிசுவரர் கோவில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விஜய நகர அரசால் விரிவாக கட்டப்பட்டது. வேலூர் கோட்டை விஜய நகர அரசாலும், திண்டுக்கல் மலை கோட்டை மதுரை நாயக்கர்களாலும் கட்டப்பட்டது.  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருமலை நாயக்கரால் புதிப்பிக்கபட்டு விரிவாக்கப்பட்டது. இதையெல்லாம் விட காரைக்குடி செட்டிநாடு (பங்களா) வீடுகளை பார்த்தாலே நம் வளத்தை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

india-in-16-to-19-century

மேலும் வீரத்திற்கு பெயர் போன வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள், தீரன் சின்ன மலை, வீர பாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் வாழ்ந்ததும் இக்காலகட்டதில் தான்.

ஆந்திரா பிரதேசம் -

தற்போதைய ஆந்திராவில், விஜய நகர பேரரசுகள் தான் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களுடைய ஆட்சி காலத்தில் தான் தெலுங்கு மொழி இலக்கியத்தில் புலமை பெற்றதாக விளங்க ஆரம்பித்தது. மேலும் பல புலவர்கள், சான்றோர்கள் அந்த காலத்தில் வாழ்ந்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் பெருமாள் கோவிலும், காலஹஸ்தி சிவன் கோவிலும் விஜய நகர பேரரசால் விரிவாக்கம் செய்யபட்டுள்ளது. இப்போதுள்ள நகைகள் பலவும் கிருஷ்ண தேவராயரால் திருப்பதி கோவிலுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் முகல் படையெடுப்பின் தாக்கத்தால், பாமினி மற்றும் குதுப் ஷா ஆட்சியின் கீழ் தெலுங்கு தேசம் சில காலம் இருந்தது. சார்மினார் மசூதி, கோல்கொண்டா கோட்டை இவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.

பின்னர் ஆட்சிக்கு வந்த நிஜாம் அரசு 200 ஆண்டுகள் வரை ஐதராபத்தை தம் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு, செல்வ செழிப்புடன் நாட்டை மாற்றியது. ஆந்திராவில் இன்றுள்ள பல கோட்டைகள், மாட மாளிகைகள், அரண்மனைகள், மசூதிகள் எல்லாம் நிஜாம் ஆட்சியில் கட்டபட்டவை ஆகும். 1930-ல் உலகின் மிக பெரிய செல்வந்தர் (மதிப்பு சுமார் $200 கோடி) என்ற பட்டதை பெற்றவர் நிஜாம் உஸ்மான் அலி கான். தனக்கென தனி நாடு, தனி அரசாங்கம், நாணயம், போர் படை, ராணுவம், என எல்லாவற்றுளும் தனித்து முதன்மையாக விளங்கியுள்ளது நிஜாம் அரசு. உலகிலேயே இந்தியாவில்தான் வைர சுரங்கம் இருந்து வந்தது. அதில் ஒன்று கொல்லூர் (குண்டூர் மாவட்டம்) வைர சுரங்கம்.  உலக புகழ் பெற்ற கோஹினூர் வைரம், இங்கிருந்து தான் எடுக்கப்பட்டது. இங்கு தான் தரமான வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன.

கர்நாடகம் -

இப்போதுள்ள கர்நாடகம், முதலில் பாமினி, கேளடி நாயக்கர்கள்  மற்றும் விஜயநகர பேரரசால் ஆளப்பட்டுள்ளது. விஜயநகர பேரரசின் காலத்தில் கன்னட மொழியின் வளர்ச்சி வேகமாக இருந்தது. பல நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டது. ஹம்பி (பெல்லாரி  மாவட்டம்) விருபாக்ஷா சிவன் கோவில் உலக பிரசத்தி பெற்றது. இன்றும் திராவிட கட்டட கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.  மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் விஜய நகர பேரரசால் விரிவாக்கபட்டது.

பின்னர் மைசூர் வாடியார்களால் 13-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை ஆளப்பட்டது. சில காலம் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தனால் ஆளப்பட்டது. திப்பு சுல்தானின் போர் படை மிகவும் சக்தி வாய்ந்தது. இந்தியாவிலேயே முதன் முதலில் பீரங்கி மற்றும் ராக்கெட் தொழில் நுட்பத்தை உபயோக படுத்தியது திப்பு சுல்தான் ஆட்சியில் தான். அதே போல வீரத்திற்கும் பெயர் போனவன் திப்பு சுல்தான். இக்காலகட்டத்தில் தான் பல அரண்மனைகளும், மசூதிகளும் இங்கு கட்டப்பட்டது. திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலியின் காலத்தில் தான் மைசூர் பட்டு பிரசித்தி பெற ஆரம்பித்தது.

மேலும் மைசூரில் உள்ள அம்பா விலாஸ் அரண்மனை, ஜகன்மோகன் அரண்மனை, லலிதா மஹால், ஜெயலக்ஷ்மி விலாஸ், காரஞ்ஜி  விலாஸ் மற்றும் ராஜேந்திர விலாஸ் ஆகிய அனைத்தும் வாடியர்களால் கட்டப்பட்டது. இந்த அரண்மனைகள் எல்லாமே இந்திய - இஸ்லாமிய கட்டடக்கலையையும், மேற்கத்திய கட்டடகலையும் இணைத்து கட்டப்பட்டதாகும்.

வாடியர்களின் மகாராணி அணிந்திருந்த தங்க வைர நகைகளின் மதிப்பு 600 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் வாடியர்களின் சொத்து மதிப்பு மைசூர், பெங்களூர் அரண்மனைகளை சேர்க்காமல், 1500 கோடிகளுக்கு மேல் இருக்கிறது என்று கணிக்கிடப்பட்டுள்ளது.

கேரளம்  -

இடைகால கேரளா தேசத்தை சேர மன்னர்களும், இந்து நாயர் அரசர்களும் ஆண்டு வந்தனர். பின்னர் திருவிதாங்கூர் அரசரின் கீழ் மலையாள தேசம் இருந்தது. பத்மநாபபுரம் அரண்மனை 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கேரளா கட்டடக்கலையின் அழகையும், நுட்பத்தையும் இதை வைத்தே சொல்லிவிடலாம். இலக்கியத்திலும், கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா காலத்தில் பத்மநாப சாமி கோவிலுக்கு பல காணிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அக்கோவிலின் ரகசிய அறையில், ஒன்றரை லட்சம் கோடிகள் மதிப்புள்ள தங்க வைர ஆபரணங்கள், நகைகள், விக்ரகங்கள், மூட்டை மூட்டையாய் நாணயங்கள் என கணக்கிலடங்கா சொத்துக்கள் கோவிலுக்கு கொடுக்கபட்டுள்ளது. கொடையாக கொடுக்கப்பட்டதே இவ்வளவு என்றால், அசல் சொத்து மதிப்பு போல லட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று சொல்லபடுகிறது. டச்சுக்கரர்கள் போர் தொடுத்த போது, அவர்களை எதிர்த்து போரிட்டு வென்றவர்கள் திருவிதாங்கூர் அரசர்கள். மேலும் தற்காப்பு கலையான களரி வித்தைக்கு பெயர் போனவர்கள் அன்றைய மலையாள மன்னர்கள்.

வட இந்தியா -

வடக்கில் பல அரசர்கள் நம் பாரதத்தை ஆண்டு சென்றுள்ளனர். அதில் முகல் சாம்ராஜ்யம் ஆட்சி காலம் தான் இந்தியாவின் பொற்காலம் என்று சொல்லபடுகிறது. பேரரசர் அக்பர் காலத்தில் கட்டப்பட்டது தான் ஆக்ரா பக்திபூர் சிக்ரி கோட்டை. பேரரசர் ஷாஜகான் கட்டிய தாஜ் மகால் இன்றும் உலக அதிசியமாக கருதப்படுகிறது. வடக்கில் கட்டிய பல கோட்டைகள் இன்று இவர்களின் கலை வளத்திற்கு சான்றாக இருக்கிறது. 16-ஆம் நூற்றாண்டில் பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரானா ரஞ்சித் சிங்கின் வைர சேகரிப்புகளில் ஒன்றாக இருந்தது தான் கோஹினூர் வைரம்.  அமிர்தசரசு பொற்கோவிலும் 16 ஆம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது.

டச்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வருவதற்கு முன் வியாபார பரிவர்த்தனைக்கு தங்கம் மற்றும்  வெள்ளி நாணயங்கள் தான் வழக்கத்தில் இருந்தனவாம். இப்படி எல்லா வகையிலும், எல்லா கலைகளிலும், வளத்திலும், எல்லா பிராந்தியத்திலும் சிறந்து விளங்கிய நாம் இன்று எப்படி இருக்கிறோம்? எல்லா மாநிலத்திலும் கடன்,  ஊழல், வறுமை கோட்டிற்கு கீழ் 20 கோடி மக்கள் என எங்கு காணினும் பஞ்ச பாட்டு தான். இந்தியா சுதந்திரம் பெற்று ஜனநாயக நாடாக மாறி, ஆளுக்கு ஆள் நாட்டை சுரண்டவும், கூரு  போட்டு விற்கவும் தான் செய்துள்ளார்கள். நாட்டின் இந்த நிலைக்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டுமே காரணம் ஆகிவிட முடியாது. மக்களாகிய நம்மிடையும் சில பொறுப்புக்கள் இருக்கிறது.

ஆங்கிலேயர் இந்தியாவிற்கு சுதந்திரம் தராமல் போயிருந்தால், நாம் இன்னும் இங்கிலாந்திற்கு அடிமையாக தான் இருந்திருப்போம். சில பல போராட்டங்களுடன், இந்தியர்கள் யாவரும் ஒற்றுமையுடன் இருந்திருப்போம். இப்போதுள்ள சாதி/மத இடஒதுக்கீடுக்கு பதிலாக ஆங்கிலேயர்-இந்தியர் வேற்றுமையில் இருந்திருப்போம். இப்போது பெருமையாக பேசிகொண்டிருக்கும் சில விஞ்ஞான சரித்திரங்களை 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர் செய்து முடித்திருப்பார்கள். உதாரணத்திற்கு, மெட்ரோ ரயில், அதிவேக ரயில், ஊரெங்கும் நல்ல தார் சாலை, தரமிக்க பள்ளி கல்லூரி கல்வி, தொழில்முனை நகரங்கள், விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் முன்னேறி இருப்போம். ஆனால், எதிலும் நமக்கு முழு பங்கு இருந்திருக்காது; ஏற்றத்தாழ்வு நிறைய இருந்திருக்கும்.

vijayanagara kings

ஆங்கிலேயர்களோ, ஐரோப்பியர்களோ நம் நாட்டை படையெடுக்காமல், ஆட்சி செய்யாமலேயே இருந்திருந்தால், இந்நேரம் இந்தியா என்ற ஒன்றிணைந்தே நாடே இருந்திருக்காது. பிராந்திய மொழிகளில் தனித்தனி சமஸ்தானமாக தான் இருந்திருக்கும். தமிழகம் இந்துயிசம் மட்டும் பின்பற்றப்படும் நாடாக இருந்திருக்கும். இன்றளவிலும் நாம் துபாய், குவைத், எகிப்து போன்ற நாடுகளை போல பிற கலாசாரங்கள் கலக்காத மன்னராட்சியில் உள்ள பணக்கார நாடாக இருந்திருப்போம். ஆனால் என்ன... சுயமரியாதை, பெண்கள் சுதந்திரம், தொழிலாளர் உரிமை, ஜனநாயகம், மக்கள் உரிமை, போன்ற எந்த ஒரு கண்டாராவியும் இருந்திருக்காது. எல்லாமே அரசின் ஆணை கீழ்படி தான் இருக்கும். ம்ச்ச்.... இப்போது மட்டும் என்ன வாழுதாம் ???

பேசாமல், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றே நடந்திருக்கலாம் என்று தான் எண்ண தோன்றுகிறது. நாடும், நாட்டின் வளமும் சூரையாட படாமளாவது இருந்திருக்கும். ஹ்ம்ம்.. வாழ்க பாரதம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 22 ஆகஸ்ட், 2015

நம்ம சென்னை 377 !

எல்லாத்துக்கும் வணக்கம்பா,

இன்னைக்கி 'மெட்ராஸ் டே' வாம். இன்னையோட நம்ம சென்னை சிட்டிக்கு 377 ஆவது வருசம் ஆரம்பிக்குதாம். எவரோ சென்னப்ப நாயக்கராண்ட 1639 வருசத்தில ஆகஸ்ட் மாசம்  22 ஆம் தேதி, மூணு மைல் இடத்த வெள்ளைக்கார இங்கிலிஸ் துரைங்க வாங்கி, சென்னைபட்டணம்-ன்னு  பேரு வெச்சானாம்மா.

அதுகோசம் எல்லாருமே பேஸ்புக்ல, டுவிட்டர்ல வாய்த்து செய்தி போட்டுன்னுகிறாங்க.. அதே மேரி நானும் என் பங்குக்கு சலாம் போட்டுகிறேன்..

சென்னையை பத்தி என்னோட பழைய பேப்பர்-ல நிறைய தபா கிறுக்கிட்டேன். அதோட ரிப்பீட்டு தாமே இது. படிச்சு குஜாலா இருங்க..

பதிவு 1:
நமது சென்னையின் வரலாற்றை சுருங்க சொல்ல வேண்டுமானாலும் கூட குறைந்தபட்சம் முதலாம் நூற்றாண்டு வரையாவது போக வேண்டும்.
So கி.பி .1-ஆம். நூற்றாண்டு...

கி.பி. 1-ஆம். நூற்றாண்டில் (52-70), ஏசு கிறுஸ்துவின் சீடர்  செயின்ட் தாமஸ் (St. Thomas) மயிலாப்பூரில்  மத போதகம் செய்துள்ளார். கி.பி. 5-ஆம். நூற்றாண்டில், திருவள்ளுவர் பாண்டிய மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்தவர். கி.பி. 16-ஆம். நூற்றாண்டில் சோழ மற்றும் விஜயநகர மன்னர்களால் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விரிவாக்கப்பட்டது.

தர்மாலா சென்னப்ப நாயக்கரரிடமிருந்து ஆகஸ்ட் 22, 1639-ல் மூன்று மைல் நீள இடத்தை ஆங்கிலேயர் வாங்கி, சென்னை பட்டணம் என்று பெயரிட்டனர் . புனித ஜார்ஜ் கோட்டைக்கு (St. George Fort) அடித்தளம் போடப்பட்டது.

மேலும் சென்னையின் வரலாற்றை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

madras-day-377
நானே டிசைன் பண்ண நம்ம சென்னையின் அடையாளங்கள் 

பதிவு 2: 
எல்லாரும் சொல்றது சென்னையில பயங்கர ட்ராபிக், ரொம்ப தூசு/புகை, கடுமையான விலைவாசி, அதிக ஜனத்தொகை, வெயில் ஜாஸ்தி, என்னும் என்னனவோ... தெரியாம தான் கேக்றேன், அவ்ளோ கஷ்டப்பட்டுகிட்டு என்ன இ....துக்கு இங்க வரணும்?  உங்க ஊரிலேயே குப்பையை கொட்டிக்க வேண்டியது தானே. இவங்களால சென்னைக்கே வராதவங்க கூட, சென்னை இப்படி தான் இருக்குன்னு நினைச்சுகிறாங்க.

மத்தவங்க மாதிரி சென்னையிலே ஷாப்பிங் மால் இருக்கு, தீம் பார்க் இருக்கு, பெரிய ஸ்டார் ஓட்டல்கள் இருக்கு, பெரிய பீச் இருக்கு, மூர் மார்கெட் இருக்கு, இங்கு எல்லாமே கிடைக்கும்ன்னு சொல்லமாட்டேன். மக்களுக்கு தேவையான சாப்பாடு, வீடு, துணிமணி, வைத்தியம், வேலைக்கு ஏத்த சம்பளம்,  நிம்மதியான வாழ்க்கை  என சராசரி மனிதன் வாழ தேவையானது எல்லாம் இருக்கு.

மேலும் சென்னையின் சிறப்பை படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

பாத்தியா நைனா.. சென்னைக்கு எம்மாம் பெரிய ஹிஸ்டிரி, எவ்ளோ விசேஷம் கீதுன்னு. சோக்கா சொல்றியே சென்னை படா பேஜாருன்னு.. இங்க வந்து வாழ்ந்து பாத்தா தாமே தெரியும் எங்க ஊரு எப்படீன்னு... ஆட்டோ ஓட்டுறவன், மீன் புடிக்கிறவன், சாக்கடை அள்ளுறவன், பாங்க் வேலை பாக்கிரவன், கவர்மெண்ட் ஆபிசர், கம்ப்யூட்டர் கம்பெனி வேலைக்காரன், இப்படி எல்லாருமே இங்கே பொயப்புக்காக தான் இங்க அல்லாடுறான். சந்தோசமா புள்ள குட்டியோட கீறான். ஒன்னொரு தபா எவனாவது சென்னையில ஒண்ணும் இல்ல, கலீஜு, கப்பு தாங்கலன்னு பீலா வுட்டான் .. நான் செம காண்டா ஆயிடுவேன்..படவா..கீசிடுவேன் கீசி..  உஷாரா இருந்துக்கோ.. பி கேர்புல் !

அப்புறம் இன்னொரு முக்கியமான மேட்டரு. படிச்சிட்டு சும்மா போவாம, இத்த உன்னோட பேஸ்புக், டுவிட்டர்-ல ஷேர் பண்ணிட்டு, அப்டியே ஷேர் ஆட்டோல அப்பீட் ஆயிடு.. சர்தானா..வரேன்ப்பா ..


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

தடைகள் 800!

வணக்கம்,

நண்பர் ஒருவர் அலுவலகம் முடிந்து இரவு வீடு வந்த பின், அவர் லேப்டாப்பை எடுத்து, "இன்று ஏதாவது நல்ல 'பிட்டு ' வந்திருக்கிறதா??" என்று ஆராய ஆரம்பித்திருக்கிறார். வழக்கம் போல அவர் போகும் எல்லா இணையதளங்களுக்கும் சென்று பார்த்திருக்கிறார். எதுவுமே 'நடக்கவில்லை'. எல்லாவற்றிலும் access denied ; page cannot be displayed; அல்லது வெறும் வெள்ளை பக்கங்களாக தான் வந்துள்ளது. ஒரு மணிநேரம் அவர் புக்மார்க் லிஸ்டில் உள்ள  எல்லா தளங்களுக்கும் சென்று பார்த்திருப்பார். ஒன்று கூட சிக்க வில்லை. வெறுத்து போன நண்பர் கடைசியில், போர்வையை போர்த்தி கொண்டு படுத்து தூங்கியே விட்டார்.

இந்த வாரத்தில், இது போன்ற சம்பவம் இந்தியாவில் பலரது வீட்டில் நடந்திருக்க வாய்ப்புண்டு. ச்ச்சீசீசீய்ய்ய்.. நான் ஒன்றும் அப்படியெல்லாம் இல்லை என்று பொய்யாய் சினுங்குபவர்கள் இதற்கு மேல் படிக்காமல் வேறு பக்கத்துக்கு சென்று விடவும்.


இரண்டு நாட்களுக்கு முன் இந்தியாவில் 857 இணையதளங்கள் தடை செய்யப்பட்டன. Child pornography என்று சொல்லப்படும் சிறார் ஆபாச படங்களை தடுக்கும்  பொருட்டு, உச்சநீதி மன்றம் இந்த தடை உத்தரவை போட்டுள்ளது. எல்லா இணைய சேவை வழங்கிகளுக்கும் இந்த குறிப்பிட்ட இணைய தளங்களை முடக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவு போடப்பட்ட நாள் முதல் மக்கள் பலரும், மனித உரிமை ஆர்வலர்களும், சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்த தடையை எதிர்த்து கொண்டிருகின்றனர். எல்லோரும் சொல்வது, "ஆபாச படம் பார்ப்பது அவரரர் உரிமை, அதையெல்லாம் அரசு தடை செய்ய கூடாது. அப்படி தடை செய்வது இந்திய ஜனநாயகத்துக்கு எதிரானது", என்று போர்க்கொடி தூக்கி வருகின்றனர். லோக்சபாவிலும் இந்த பிரச்சனையை எதிர்த்து கூட்டத்தை நடக்க விடாமல் செய்து விட்டனர். இன்னும் நாடு முழுவதும் போராட்டம் தான் நடத்தவில்லை. மற்றபடி எல்லாம் நடந்தாயிற்று.

ஒரு சிலர் திருடனுக்கு தேள் கொட்டியது போல திருதிருவென முழித்து கொண்டிருகிறார்கள். யாரிடம் சொல்வது, என்ன சொல்வது, என்ன கேட்பது,
 எங்களுக்கு யாரை தெரியும் என்ற ரீதியில் விழி பிதுங்கியுள்ளனர். இன்னும் சிலரோ, "போங்கடா, எங்களுக்கு இருக்கிறது ப்ராக்சி வெப்சைட்டுகள் (proxy websites)", என்று ஆறுதல் சொல்லி கொள்கிறார்கள். இன்னும் சிலர், "அப்படா, நான் பார்க்கும் தளங்கள், அந்த 800-ல் இல்ல.. ஐ..ஜாலி!! " என்று பெருமிதம் கொள்கின்றனர்,

ஊடகங்கள் இந்த தடையை பற்றி கேட்டதற்கு, பல இளைஞர்/இளைஞிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மத்திய அரசே இதற்கு இத்தகைய எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருக்காது. ரேடியோ ஜாக்கி RJ பாலாஜி விடியோ ஒன்றில் இதை பற்றி தன் பாணியில் ராப் செய்துள்ளார்.


ஆபாச விடியோகளால் தான் எல்லோரும் கேட்டு போகிறார்கள்; குறிப்பாக பதின்பருவ பிள்ளைகள் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. ஒரு சில திரைப்படங்கள்,  திரைப்பட பாடல்கள், இரட்டை அர்த்த பட வசனங்கள், தொலைக்காட்சி தொடர்கள், ஆபாச போஸ்டர்கள், ஆபாசம் மிகுந்த அருவருப்பான விளம்பரங்கள் என தடை செய்ய எவ்வளவோ இருக்கிறது. அதேல்லாம் விட்டு விட்டு, எதோ நம்மாட்க்கள் பொழுதுபோக்கிற்காக கொஞ்சம் 'பிட்டை' புட்டு-புட்டு  பார்த்தால் கலாச்சாரம் சீர்குலையுமாம். என்னங்கடா இது அநியாயம் ??

உனக்கேன் இவ்வளவு அக்கறை? என்று நீங்கள் கேட்கலாம். ஆம்! அக்கறை தான். நானும் இந்நாட்டின் குடிமகன் தானே!

அரசின் ஓர் அறிக்கை படி, உலகில் 14.3 பில்லியன் ஆபாச இணையதளங்கள் இருக்கிறதாம். அதில் 40% இணைய போக்குவரத்து இந்தியாவில் தான் இருக்கிறது என்று சொல்கின்றனர். இதற்கு 'நம்மவர்கள் காய்ந்து போய் கிடப்பதே' முக்கிய காரணம். பதின்பருவ வயதில், சரியான பாலியல் கல்வி இல்லாததால் தான் இந்த வறட்சி. இந்த வறட்சியின் தாக்கம் தான் தில்லி நிர்பயா சம்பவம், குழந்தை பாலியல் வன்கொடுமை போன்றவையெல்லாம். வயது வரும் போதே, இதுதான் இது, இதெல்லாம் ஒன்றும் இல்லை.. எல்லோருக்கும் இருப்பது போல தான். வெறும் உடம்பு தான்.. என்று  இ(ணை)ளைய தலைமுறைக்கு புரிய வைப்பது தான் சமுதாயத்தின் கடமை. சமூகம் என்பது யார்? ஆசிரியர், பெற்றோர், சுற்றம், அரசாங்கம் எல்லோரும் தான். அதை விடுத்து ஆபாச தளங்களை தடை செய்தால் சரியாகி விடாது. தியரியில் பார்க்காவிட்டால், பிராக்ட்டிகலாக செய்து பார்க்க வழி தேட மாட்டார்களா???

இந்த பிரச்சனையை சீர் செய்ய சம்பந்தபட்டவர்கள் தான், சரியான முடிவை தேர்ந்தெடுக்க வேண்டும். வெறும் தற்காலிக தடை வழிமுறைக்கு ஒத்துவராது.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்