செவ்வாய், 26 மார்ச், 2024

குடிபோதையில் பய(மர)ணம் !

வணக்கம், 

சில வருடங்களுக்கு முன், வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் வழியில் மதுராந்தகம் அருகே நண்பரின் கார், மற்றொரு பெரிய வண்டி மீது மோதி அப்பளம் போல நொறுங்கியது. நொறுங்கிய வண்டியில் இருவர் (நண்பரும் ஒருவர்) படுகாயம், மற்றொருவர் உயிரிழந்தார். குடித்து விட்டு வண்டி ஓட்டியதால் ஏற்பட்ட விளைவு. சில நாட்களுக்கு முன் ECR சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கார், விபத்தில் சிக்கிய பைக்கில் வந்த இருவரை போலீஸ்காரர்கள் ஓரம்கட்டி நிறுத்தி வைத்து விசாரித்து கொண்டிருந்தனர். அதுவும் குடிபோதை பயணமே! இது போன்ற பல சம்பவங்களை நாம் செய்திகளிலும், தினசரி பயணத்தின் போதும் பார்த்திருப்போம்.


ஒவ்வொரு ஆண்டும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர் அல்லது காயமடைகின்றனர். இக்காலத்தில் சாலை விபத்துக்களுக்கு குடித்துவிட்டு வண்டி ஓட்டுதல் முக்கிய காரணமாகிவிட்டது. அது சட்டவிரோதமானது மட்டுமல்ல, பொறுப்பற்றது கூட. குடித்துவிட்டு வண்டி ஓட்டுதலால் ஏற்படக்கூடியவை பற்றி இணையத்தில் படித்து தெரிந்து கொண்டதை உங்களிடம் பகிர்கிறேன்.


Drunk-and-drive-effects

நாம் சாலையில் போய் கொண்டிருக்கும் போது போலீசார் வழிமறித்து தேவையான ஆவணங்களையெல்லாம் பேப்பர்களையெல்லாம் சரிபார்த்த பின்,  குடித்திருக்கிறோமா இல்லையா என சோதிக்க ஒரு சிறிய மெஷின் ஒன்றை வைத்து கொண்டு அதில் நம்மை ஊத சொல்வார்கள். அதுதான் BreathAlyzer. மூச்சு காற்றில்/ சுவாசத்தில் உள்ள ஆல்கஹால் அளவை அளவிடும் சாதனம். 

குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் வரம்பு BAC-ல் அளவிடப்படுகிறது. BAC (Blood Alchohol Content) என்பது உங்கள் இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவை குறிக்கும்.


குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் அல்லது BAC வரம்புகள் ஒவ்வொரு நாடு மற்றும் அவற்றின் சட்டங்களை பொறுத்தது. இந்தியாவில் BAC வரம்பு 0.03%. அதாவது இரத்தத்தில் 100 மில்லியில் 0.03 கிராம் ஆல்கஹால் வரை இருக்கலாம். மூச்சு, இரத்தம், சிறுநீர் அல்லது உமிழ்நீர் சோதனை மூலம் BAC சரிபார்க்கப்படலாம். பெரும்பாலும் இது மூச்சு மற்றும் ப்ரீத் அலைசரில் அவர்கள் பயன்படுத்தும் கருவி மூலம் சோதிக்கப்படுகிறது. இரத்தப் பரிசோதனைகள் துல்லியமான மற்றும் நம்பகமான BAC கொடுக்கின்றன என்றாலும். BAC லிமிட்க்கு மேல் இருந்தால் அபராதம் அல்லது சிறை கண்டிப்பாக உண்டு. நீங்கள் எவ்வளவு குறைவாக குடித்திருந்தாலும், நீங்கள் ஒரு முறை குடித்தாலும் நீங்கள் வாகனம் ஓட்ட தகுதியற்றவர் என்ற பொறுப்புணர்வு நம்மிடையே நிச்சயம் வேண்டும்.


குடிபோதையில் அல்லது எந்த ஒரு போதையிலும் வாகனம் ஓட்டுவதும், இந்தியாவில் கிரிமினல் குற்றமாகும். இந்திய மோட்டார் வாகனச் சட்டம், 1988ன் பிரிவு 185ன் கீழ், போதையில் வாகனம் ஓட்டுவது குற்றமாகும். ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மூன்று ஆண்டுக்குள் அதே தவறை செய்பவருக்கு, 2 வருட சிறை தண்டனை அல்லது 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.


சமீபத்தில் டில்லியில் நடந்த ஒரு கருத்துக்கணிப்பில், 30,000 பேரில் 81.2% பேர் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை ஓப்புக் கொள்கிறார்கள். 2022-ல் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது இந்தியாவில் சாலை இறப்புகளுக்கு/விபத்துகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளது. சட்ட வரம்புக்குக் கீழே இருந்தாலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது ஆபத்தானது. 0.01 சதவிகிதத்துக்கும் குறைவான BAC கொண்ட ஓட்டுநரின் திறன்களைக் குறைக்கும் பக்கவிளைவுகளை மதுவும் அதன் போதையும்  ஏற்படுத்தலாம்.  

 • போதையால் மெதுவாகும் செயல்திறன் மற்றும் கவன குறைவு 
 • கண் பார்ப்பதை மனதோ/கையோ கேளாமல் ஒருங்கிணைக்க முடியாமல் தடுமாறுவது
 • சாலையில் முன்னே போகும் வாகனம்/ ஆட்கள் பற்றிய தவறான முடிவு  (wrong judgement)
 • என்ன செய்கிறோம் என தெரியாதவாறு நினைவாற்றலை இழப்பது  
 • விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது
 • வாழ்க்கையையே மாற்றும் விபத்துகளும் ஏற்படலாம்
 • விபத்தினால் போதையில் ஓட்டுபவரே விபத்தில் சிக்க வாய்ப்புண்டு. 
 • போதையில் ஓட்டுபவரால் சாலையில் போவோரும், சாலையோரம் இருப்பவரும் மற்றவரும் விபத்தில் சிக்க வாய்ப்புண்டு 
 • போதையில் ஓட்டுபவரின் வாகனமோ அல்லது மற்றவருடைய வாகனமோ சேதமாக வாய்ப்புண்டு.

வெளியே சென்று மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும், மது அருந்தவும் திட்டமிட்டால், ஓட்டுனரோ அல்லது மது அருந்தாத வேறு ஒருவரோ வாகனத்தை ஓட்டும்படி செய்யலாம். அல்லது வாடகை வண்டி பதிவு செய்து போவது, அல்லது போதையில் பயணத்தையே தவிர்ப்பதும் சால சிறந்தது.நன்றி!!!

பி. விமல் ராஜ்

வியாழன், 29 பிப்ரவரி, 2024

பௌத்தமும் சமணமும் !

வணக்கம், 

பண்டைய காலத்தில் சைவமும் வைணவமும் தமிழ்நாட்டில் முழுமையாய் செழுமை பெறும் முன்பே, பௌத்தமும் சமணமும் தழைத்தோங்கி இருந்துள்ளது. சங்ககாலத்தில் சைவத்துக்கும் வைணவத்துக்கும் இணையாய் பௌத்தமும் சமணமும் நடைமுறையில் இருந்துள்ளது என்பதற்கு பல சான்றுகள் இருப்பதாக சொல்கின்றனர்.


பௌத்தமும் சமணமும் நம் நாட்டின் மிக பழமையான சமயங்களில் ஒன்று. பௌத்தம் கி.மு 400-500-ல் கவுதம புத்தரால் தோற்றுவிக்கப்பட்டது. சமணம் அதற்கும் முன்னரே 24-ஆம் தீர்த்தங்கரர் மகாவீரரால் கி.மு.900-600-ல் தோற்றுவிக்கப்பட்டது. 


நம் நாட்டின் கலாச்சாரம், பழக்கவழக்கத்தில் உள்ள பல விஷயங்கள் புத்த, சமண மதத்தையொட்டி தழுவி பின்பற்றப்பட்டுள்ளது என பல மானுடவியல் ஆர்வலர்கள் சொல்கின்றனர். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.


Buddhism-Jainism-tamilnadu


பள்ளிக்கூடம் - பள்ளியறை என்பது 'படுக்கையறையை' குறிக்கும். 'பள்ளி கொள்ளுதல்' என்னும் சொல்லுக்கு 'உறங்குதல்' என்று அர்த்தம். ஆனால் அது ஏன் கல்வி கற்கும் இடத்திற்கு சொல்கிறார்கள் என தெரியுமா? சங்க காலத்தில் (கிமு 2ஆம் நூற்றாண்டு முதல்) சமணர்கள் ஊருக்கு வெளியே மலைகளை குடைந்து படுக்கைகள் அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். அங்கு சென்று தான் ஊரில் உள்ள சிறுவர்/சிறுமியர் கற்படுகையில் அமர்ந்து கல்விப்பாடம் கற்று கொண்டிருந்தனர். சமணர்கள் பள்ளி கொள்ளும் இடத்தில் சென்று கல்வி கற்று கொண்டதால் அது பள்ளிக்கூடம் என இன்றளவும் அழைக்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் விரதமிருந்து காவியுடை தரித்த துறவிகளுக்கு உணவிடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அமாவாசை, பௌர்ணமி எனப்படும் காருவா, வெள்ளுவா நாளில், பௌத்த துறவிகள் கூடி சங்க கூட்டம் நடத்துவார்கள். இதனை இலங்கையில் 'போயா தினம்' என இன்றும் கொண்டாடுகின்றனர். 


சைவ வைணவ வைதீக சமயத்தில், துறவு கொள்பவர்கள் காவியுடை உடுத்துவது வழக்கம். முதன் முதலில் செந்துவராடையை அணிந்து துறவு கொண்டது பௌத்த துறவிகளே ஆகும். அதை பின்பற்றி தான் மற்ற சமயங்கள் துறவர்கள் செவ்வாடையை உடுத்தும் வழக்கம் பின்பற்றப்பட்டது.


முருகனுக்கும், பெருமாளுக்கும் வேண்டிக்கொண்டு தலைமுடியை மொட்டையடிக்கும் பழக்கம் நம்மிடையே பலகாலமாக இருந்து வருகிறது. மொட்டையடிப்பது என்பது புத்த மத துறவறத்தில் உள்ள ஓர் முக்கிய விடயமாகவும். பௌத்த துறவிகள் வைத்திருக்க கூடிய 8 பொருட்களில் மழிக்கும் கத்தியும் ஓர் முக்கியமானதாகும். அதுவே பின்னாளில் இந்து சமயங்களில் பின்பற்றப்பட்டு வேண்டுதலுக்காக மொட்டையடிக்கப்படுகிறது.


தமிழர்கள் பரவலாக ஏற்று கொண்டிருக்கும் பட்டிமன்றம் என்ற கலை வடிவம் பௌத்த மதத்திலிருந்து வந்தது. பௌத்த துறவிகள் பிற மதவாதிகளுடன் வாதம் செய்து புத்த மதத்தை பரப்புவது வழக்கமாக்கி கொண்டிருத்தனர். அவர்கள் எந்த ஊருக்கு சென்றாலும் அவ்வூரில் அரச மரத்தின் ஒரு கிளையை நட்டு வைத்துவிட்டு பிற சமயவாதிகளை வாதிட அழைப்பார்கள். அக்காலத்தில் பட்டிமண்டபம் என்பது சமய கருத்துக்களை வாதிடும் இடம் என்று சங்க கால நூல்களில் காட்டப்படுகின்றன. புத்தர் ஞானம் பெற்ற இடம் போதி மரம் என அறியப்படுகிறது. போதிமரம் என்பது அரசமரமே ஆகும். அது புத்த மதத்தினரின் புனித சின்னமாகவும். ஞானத்தின் குறியீடாகவும் கருதப்படுகிறது. இன்றளவும் மக்கள் அரச மரத்தை சுற்றும் வழக்கம் கொண்டுள்ளதையும் பார்க்களாம்.


சமண மதத்தின் 24ஆவது தீர்த்தங்கரரான வர்த்தமனா மகாவீரரின் முக்தியடைந்த நாளை சமணர்கள் விளக்கேற்றி விழாவாக கொண்டாடியுள்ளனர். அதுவே சமய மாற்றத்தின் போது தீபாவளியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.


இந்த மதங்கள் வளராமல் போக போல காரணங்கள் உண்டு. கி.மு 3 நூற்றாண்டு முதல் கி.பி. 6 நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் பலரால் போற்றி வளர்க்கபட்ட புத்த, சமண மதங்கள் பின்னர் 7 நூற்றாண்டுக்கு பின்னர் சரிவடைய தொடங்கியது. அக்காலத்தில் சைவமும் வைணவமும் பல தமிழ் துறவிகளாலும், மன்னர்களாலும் வளர்க்கப்பட்டது. சில நேரத்தில் சமய பற்று, சமய வெறியாகி போய் மாற்று சமயத்தின் மீது பலமான விவாதமும், வன்முறையும் கையாளப்பட்டுளது. சைவர்கள் சமணர்களை கழுவேற்றி கொன்றதாக வரலாறுகள் உண்டு. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பௌத்தமும் சமணமும் மறைய தொடங்கியது.


சமண மதம் மறைய தொடங்கியதில் மற்றொரு காரணம், அதில் கடைப்பிடிக்கபடும் கடுமையான நெறிமுறைகள் தான். துறவு மேற்கொள்பவர்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக இருக்க வேண்டும்; தலையை மழித்து மொட்டையடித்து கொள்ள வேண்டும்; எட்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்ண வேண்டும்; அதுவும் பிச்சையெடுத்து உண்ண வேண்டும் என்ற கடுமையான நெறிமுறைகள் மதத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைத்தன. இவ்விரண்டு மதங்களும் ஏழாம் நாற்றாண்டு வரை செழித்து வளர்ந்துள்ளதை பல புத்த மடாலயங்கள், புத்த விகாரங்கள், சமணர் படுக்கைகள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். இதிலிருந்து தமிழ் மக்களிடையே இவ்விரு மதங்களும் ஒன்றோடு ஒன்றாக பின்னி இணைந்திருந்தன என்பதையும் அறியமுடிகிறது.


தகவல்கள்: சமண பௌத்த கட்டுரைகள் - தொ.பரமசிவம் 


நன்றி!!!

பி. விமல் ராஜ்

புதன், 14 பிப்ரவரி, 2024

உலக அதிசயம் தாஜ் மஹால் !

வணக்கம்,

உலக அதிசயமான தாஜ் மஹால் காதல் சின்னமாகவும், இந்தியாவின் கலை மற்றும் புராதான சின்னமாகவும் விளங்குகிறது. அது உண்மையிலேயே அந்த அளவுக்கு மதிப்பானதா, இல்லை வெறும் கட்டமைக்கப்பட்ட ஒன்றா என்ற சந்தேகம் எனக்குள் ரொம்ப நாளாய் இருந்தது.


அதை நிவர்த்தி செய்து கொள்ள இம்முறை விடுமுறைக்கு புது தில்லி - ஆக்ரா செல்ல கடந்த ஜனவரியில் திட்டமிட்டிருந்தோம். எனக்கு தில்லி ஏற்கனவே சென்றிருந்த அனுபவம் இருந்திருந்த போதிலும் ஆர்வம் என்னவோ குறையவில்லை. ஏற்கனவே டெல்லி போன கதை பற்றி பழைய பேப்பரில் எழுதியுள்ளேன். போனமுறை கனவான தாஜ் மஹால் பயணம், இம்முறை எனது மும்தாஜூடன் சேர்ந்து சென்று நினைவாக்கி விட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்😁.


Taj Mahal Visit

தாஜ்மஹால் ஷாஜஹானின் ஆசை மனைவி மும்தாஜ்க்காக கட்டப்பட்டது; முழுக்க முழுக்க பளிங்கு கற்களால், ஆக்ராவில் யமுனை நதி கரையில் கட்டப்பட்டுள்ளது. 1632ல் ஆரம்பிக்கப்பட்டு முழுமையாய் 1658ல் கட்டி முடிக்கப்பட்டது என எல்லாமே நமக்கு தெரிந்த கதை தான். அதை பற்றியெல்லாம் இங்கு விவரிக்க போவதில்லை.

 

தில்லி/புது தில்லி முழுவதும் சுற்றி பார்க்க, மார்க்கெட் ஷாப்பிங் என மூன்று நாட்கள் போதுமானது. பொதுவாய் வட இந்திய பயணத்திற்கு நவம்பர் - மார்ச் காலங்களில் செல்வது சாலச்சிறந்தது. நவம்பர், டிசம்பர் குளிர்காலத்தின் பீக்; கடும் குளிர் கொண்டு எல்லாம் விரைத்து போகும். ஜனவரி முதல் பிப்ரவரி பாதிவரை குளிர் (08-20℃) இருக்கும்; பகல், இரவு என இரு வேளையிலும் குளிர் அள்ளும்; காலை பத்து மணிக்கு சூரியன் மேகத்திலிருந்து எட்டிப்பார்க்காவிட்டால் வெறும் பனிமூட்டமாக தான் இருக்கும். பிப்ரவரி - மார்ச் நேரங்களில் லேசாக வியர்வை பூக்கும்; பகல் நேரத்தில் ஃபேன் கண்டிப்பாக போட வேண்டி வரும். ஏப்ரல்-மே மாதமெல்லாம் வெயில் (45-50℃ வரை) மண்டையை பிளக்கும். நம்ம ஊரை விட இரு மடங்கு ஜாஸ்தி!


தாஜ் மஹாலை பார்க்க ஒரு வாரம் முன்னலேயே ஆன்-லைனில் டிக்கெட் போட்டுவிட முடியும். தில்லி மற்றும் ஆக்ராவில் உள்ள எல்லா புராதான நினைவு சின்னங்களுக்கும் ஒரே இணையதளத்தில் (https://asi.payumoney.com/) டிக்கெட் எடுத்து விட முடியும். நாம் அங்கு போய் சேரும் நேரம் சரியாய் தெரியாலிருக்கும் பட்சத்தில், சில நேரத்தில் ஆன்-லைனில் டிக்கெட் எடுப்பதை விட நேரில் சென்று எடுப்பது உத்தமம்.


தில்லியிலிருந்து ஆக்ரா சாலை வழி பயணம் சுமார் மூன்றரை முதல் நான்கு மணி நேரம் தான். ஆனால் காலை வேளையில் பனி மூட்டத்தில் செல்ல நான்கரை முதல் ஐந்து மணி நேரம் வரை ஆகும். அதிகாலை ஆறரை மணிக்கு கிளம்பினாலும் 11/12 மணிக்கு தான் ஆக்ரா போய் சேர முடியும். யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவேயில் வண்டி 60-70 தாண்ட முடியாது. டிராபிக், பனி என பொறுமையாய் தான் போகமுடியும். ஹைவே எங்கும் பார்க்கிங் லைட்டில் கண் சிமிட்டியபடி எல்லா வண்டிகளும் சென்று கொண்டிருக்கும். ஆனால் அந்த எட்டு வழி சாலை வெண்ணெய் போல அருமையாக இருப்பதால் பயணத்தில் பெரிய கஷ்டம் தெரியவில்லை, ஆக்ராவினுள் நுழையும் வரை! ஆக்ரா நகருக்குள் சாலைகள் சற்று சுமாராகவும், கட்டிடங்கள் ஓரளவுக்கு தான் இருந்தது. Typical tier 3 வடஇந்திய நகரம் என பார்த்தவுடனே தெரிந்துவிடும்.    


தாஜ் மஹால் அருகே தனியார் மற்றும் வாடகை கார்கள் (பெட்ரோல்/டீசல்) செல்ல தடை. குறிப்பிட்ட தூரத்திற்கு பின் பேட்டரி ஆட்டோவில் (1 கி .மீ) தான் செல்ல வேண்டும். பாறை கற்களினால் போடப்பட்ட சாலை; மேடுபள்ளத்தில் குலுங்கி குலுங்கி போக வேண்டி வரும். பக்கவாட்டில் உள்ள எலும்புக்கூடான செங்கல் கட்டிடங்கள், சிறு சிறு கடைகள், குடிசை வீடுகள், இடிந்த பழைய கட்டிடங்கள், தெருவோரம் ஓடும் சாக்கடைகள், புளிச்..புளிச்.. என துப்பிய பான் கரைகள், என போகும் பாதையே படாவதியாய் இருக்கும். ஆட்டோ டிரைவர் நம்மை நாம் தாஜ் மஹாலுக்கு தான் கூட்டி போகிறாரா?  இல்லை வேறு எங்காவதா போகிறாரா என சந்தேகம் வருமளவுக்கு இருந்தது. அடப்பாவிகளா!! எவ்வளவு பெரிய புராதன, பிரபலமான சுற்றுலா தளம் இது... ஊரையும், போகும் வழியையும் இப்படியா பராமரிப்பது..?? எதிர்கட்சிகாரன் வெள்ளைக்காரன் பார்த்தா நம்மை பத்தி என்ன நினைப்பான்.. ?? 🙄🙄 ஹம்மம்.. இப்பல்ல.. 40/50 வருஷமாகவே இப்படி தான் இருக்கிறது போலும்!


குலுங்கி, குலுக்கி கொண்டே போய் தாஜ் மஹால் நுழைவு வாசல் வரை கூடி கொண்டு போய் விட்டுவிட்டார் ஆட்டோவாலா. அங்குள்ள கடைகளில் (ஆன்-லைன்) டிக்கெட் எடுத்துக்கொண்டோ, அல்லது கவுண்டரில் வரிசையில் நின்று 50 ரூபாய்க்கு என்ட்ரி டிக்கெட் எடுத்துக்கொண்டோ கிழக்கு வாசல் (east gate) வழியாய் உள்ளே செல்லலாம். அதே போல மேற்கு வாசல் (west gate) வழியாகவும் டிக்கெட் எடுத்து உள்ளே நுழைய முடியும். பெரும்பாலும் இரு வாசலிலும் பாட்டரி வண்டிகள், ஆட்டோக்கள், Golf cart வண்டிகள் என வரிசைகட்டி நிற்கும். இங்கு நாம் பார்க்கும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் தான். அனைவரிடமும் ஒரு DSLR காமிராவும், tripodம் கண்டிப்பாக இருக்கும். நம்மூர் மக்களும் கணிசமாக தான் இருந்தனர்.


பின்னர் அங்கிருந்து Darwaza என்று அழைக்கப்படும் மெயின் நுழைவு வாயிலை அடையலாம். செந்நிற சலவை கல்லை கொண்டு கட்டப்பட்டுள்ள வாயிலின் மேலே 22 சிறு சிறு குவிமாடங்கள் (dome) கொண்டுள்ளது அஃது தாஜ்மஹாலை கட்டிமுடிக்க 22 ஆண்டுகளை ஆனதை குறிக்கின்றனது என்று கைடு ஒருவர் சொன்னார்.   


மெயின் நுழைவு வாயில் வழியே உள்ளே செல்லும் போதே கொஞ்சம் கொஞ்சமாக தாஜ் மஹாலின் அழகை பார்க்க முடிகிறது. வாயிலை அடுத்து உள்ளே வரும் போது முழு பளிங்கு மாளிகையின் பிரமாண்டமும் நம் கண்ணில் ஒளிர்விடுகிறது. வாயில் முதல் தாஜ் மஹால் வரை வானிற குளம் அமைக்கப்பட்டுள்ளது; அதில் பவுண்டைனும் (fountain) அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இரு புறமும், முன்பும் பின்பும் பெரிய புற்கள், மரங்கள் நடப்பட்டு, பெர்சிய முறைப்படி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சார் பாக் (Char Bagh) என்று சொல்லுவார்கள்.


Click play for Taj Mahal photos

தாஜ் மஹாலின் ஒரு பக்கத்தில் மசூதியும், மறுபக்கம் கெஸ்ட் அவுஸ்ம் (assembly hall என்றும் சொல்கின்றனர்) கட்டப்பட்டுள்ளது. இம்மசூதியில் ஒவ்வொரு வெள்ளியும் உள்ளூர் பொதுமக்கள் நமாஸ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்; அதனால் வெள்ளியன்று மட்டும் சுற்றுலா பயணிகள் தாஜ் மஹாலுக்கு செல்ல அனுமதி இல்லை.


தாஜ் மஹால் இந்திய பொருட்களை மட்டுமல்லாமல் ஆசியாவில் பல்வேறு நாட்டிலிருந்து பொருட்களை கொண்டும் கட்டியுள்ளனர். ஆயிரம் யானைகள், 22,000 கட்டிட தொழிலாளர்கள், எம்பிராய்டரி வல்லுநர்கள், என பலர் வேலை செய்துள்ளனர். தாஜ் மஹால் கட்டடத்தின் வெளியே பெர்சிய மொழியில் குரான் எழுத்துக்களும் வடிக்கப்பட்டுள்ளன. ஒளி ஊடுருவக்கூடிய அந்த வெள்ளை பளிங்கு ராஜஸ்தானின் மக்ரானா பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் பகுதியிலிருந்து (japser) ஜாஸ்பர், சீனாவிலிருந்து ஜேட் மற்றும் கிரிஸ்டல் (jade & crystal), டர்க்கைஸ் (turquoise) திபெத்திலிருந்தும், லேபிஸ் லாசுலி (labis lazulli) ஆப்கானிஸ்தானிலிருந்தும், நீலக்கல் (sapphire) இலங்கையிலிருந்தும், கார்னிலியன் அரேபியாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், 28 வகையான விலைமதிப்பற்ற கற்கள் வெள்ளை பளிங்கு சுவற்றிலும் உள்பகுதியிலும் பதிக்கப்பட்டுள்ளன.🔷💎💠


வெளிப்புற சுவற்றில் பூச்செடிகள் போலவும், பல வண்ண நிறங்களில் அலங்கார மலர் வடிவமைப்பும் அமைக்கப்பட்டுள்ளன. 240 அடி உயரமுள்ள தாஜ் மஹாலின் உச்சியில் வெங்காய வடிய குவிமாடத்தில் மேல் முகலாயர்களின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இஸ்லாமிய மசூதிகளில் உள்ள மினார்கள் (தூண்கள்) போலவே இங்கும் தாஜ் மஹாலை சுற்றி நான்கு மினார்கள் (தூண்கள்) கட்டப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் 180 அடி அளவு உயரம் இருக்கும். இந்த 4 மினார்களும் சற்று சாய்வாகவே கட்டப்பட்டுள்ளது. ஏதேனும் இயற்கை பேரிடர்கள் ஏற்படுமாயின், இந்த மினார்கள் தாஜ் மஹாலின் மேல் விழாதவாறு கட்டப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.


தாஜ் மஹாலின் mausoleum (அடக்கம் செய்யப்பட்டுள்ள மசூதி) உள்ளே செல்ல இருநூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி கொள்ள  செல்லலாம். முன்கூட்டியே ஆன்-லைனில் கூட எடுத்து கொண்டும் செல்லலாம். உள்ளே அழுக்காகாமல் 👣இருக்க, நம் செருப்பு/ஷூ மேல் கவர் அணிந்து கொண்டுதான் போக வேண்டும். அதுவும் அங்கேயே தரப்படுகிறது. முசோலியம் உள்ளேயும் முழுக்க பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. சுவரெங்கும் அழகிய வேலைப்பாடுகளும், உள் குவிமாடத்தில் பிரமாண்ட வண்ணமயமான பூ மற்றும் அலங்கார வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஷாஜகானின் சமாதி சற்று பெரியதாகவும் மற்றும் மும்தாஜின் சமாதி சிறியதாகவும் முசோலியம் நடுவே வீற்றிருக்கிறது. ஆனால் அது போலியான சமாதி என்றும், அவர்களின் உண்மையான சமாதி முசோலியம் கீழே பாதாளத்தில் புதைக்கபட்டுள்ளது. அதற்குள் செல்ல படிக்கட்டுகள் இருக்கிறது; பாதாள அறைக்கு செல்லும் பாதை இரும்பு கேட் போட்டு மறைக்கப்பட்டுள்ளதை நம்மால் பார்க்கமுடிகிறது. 


அப்படியே இரு சமாதிகளை ஒரு முறை சுற்றி வந்து பின்பக்கமாக மசூதியின் பின்பக்கம் வந்து விடலாம். தாஜ் மஹாலின் இரு பக்கவாட்டிலும் சற்றே காலியாய் இருப்பதால் பலர் அங்கு இன்று போட்டோவும் செல்பியும் எடுத்து கொண்டிருந்தனர். தாஜ் மஹாலின் பின்பக்கத்திலிருந்து யமுனை நதியின் அழகை கண்டு ரசிக்கலாம்; ஆனால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. நதி அசுத்தமாகவும் சற்றே வறண்டுபோய் ஆங்காகே மணற்திட்டுகளாய் இருந்தது. நதிக்கரைக்கு அந்த பக்கம் மேதாப் பாக் Mehtab bagh என்னும் ஒரு முகலாய தோட்டம் இருக்கிறது. மேலும் அங்கு இடிந்த, தரைமட்டமான நிலையில் ஒரு கட்டிடதின் அடையளவும் இருக்கிறது. அது ஷாஜஹான் தனக்காக கட்டிக்கொண்ட சமாதி என்றும், அஃது கருமை நிற சலவை கற்களால் கட்ட திட்டமிட்டு, பின்னர் ஷாஜகானின் மகன் அவ்ரங்கசீப் அவர் தந்தையை கைது செய்ததால் இத்திட்டம் கைவிடப்பட்டது என சொல்கின்றனர். 


பிறகு இன்னொரு விஷயம். தாஜ் மஹால் பார்க்கிங்கில் இறங்கியது முதல் முசோலியம் உள்ளே செல்லும் வரை கைடுகளும் போட்டோஃகிராப்பர்களும் நம்மை மொய்த்து கொண்டே இருப்பார்கள். கைடுகள் சொல்வதில் எது உண்மை, எது சும்மாச்சிக்கும் அடித்து விடுகிறார்கள் என தெரியாமல் நம்மையே தலை சொரிய வைக்கிறார்கள். வெளிநாட்டினருக்கும், விவரம் தெரியாத சில நம்மூர் மக்களுக்கும் கைடுகள் சொல்வது தான் வரலாறு. எங்களுக்கும் ஒரு கைடு வந்து ஆத்து ஆத்து என ஆற்றிகொண்டிருந்தார். நாமே தனியே சென்று தெரிந்து கொள்வது சாலச்சிறந்தது. போட்டோஃகிராபர்கள் வகைதொகை இல்லாமல் நிமிடம் பேரம் பேசி கொண்டடே பின் தொடர்வார்கள். ஒருவரிடம் வேண்டாம் என்று சொன்னாலும், அடுத்து இன்னொருவர், அதற்கடுத்து இன்னொருவர் என ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருப்பார்கள். அதுதான் நமக்கு சற்று நச்சரிப்பாக இருந்தது. மேலும் இவ்விடத்தில் அவர்களுக்கு மட்டுமே சில இடங்கள் (viewpointகள்) தெரியும். அங்கிருந்து போட்டோ எடுத்தால் (அவ்வளவாக) கூட்டம் இல்லாமல் நம்மை மட்டுமே வைத்து போட்டோ எடுத்து கொடுப்பார்கள். தாஜ் மஹாலின் முன் புறத்தில் நீச்சல் குளத்துக்கு முன் சிறு மார்பில் பலகை போடப்பட்டிருக்கும் (போட்டோக்காக தான் !) அதற்கென பெரும் போட்டியும் வரிசையும் இருக்கும். அவையெல்லாம் வேண்டாம் என எங்களை நாங்களே எடுத்து கொள்கிறோம் என எடுத்து கொண்டாலும் சரி. (ஸ்மைல் ப்ளீஸ் 📸)

  

தாஜ் மஹாலை முழுக்க சுற்றி பார்த்து, ரசித்து, சிலாகித்து, போட்டோ எடுத்து முடித்து திரும்ப கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரமாவது தேவைப்படும். அதுவும் கூட்டத்தை பொறுத்தது. கூட்டத்தை தவிர்க்க காலை எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள் சென்றுவிடுவது நல்லது என அரசு தொல்லியல் துறை இணையதளத்திலும் மற்றவர்களும் சொல்கின்றனர். ஆனால் 8 மணிக்கு போக வேண்டுமாயின், அதிகாலை நான்கு/ஐந்து மணிக்கு தில்லியிலிருந்து கிளம்பியாக வேண்டும். உங்கள் பயணத்தையும் சௌரியதையும் கொண்டு முடிவு செய்யுங்கள்.


தாஜ் மஹாலுக்கு பின் ஆக்ரா கோட்டை பார்த்துவிட்டு, மாலை நேரத்தில் mehtab bagh சென்று அங்கிருந்து தாஜ் மஹாலின் அழகை panoramic viewவில் கண்டு ரசிக்கலாம். அது மேலே சொன்னதை விட பேரழகான ரம்மியமான காட்சியாக இருக்கும். தோட்டத்தில் பூக்கள் பூத்துள்ள காலத்தில் சென்றிருந்தால், நம் கண்ணுக்குத் மனதுகும் இன்னும் போனஸாக இருக்கும். இரவு அறைக்கு வந்த பின்னும் தாஜ் மஹால் என் கண்களை விட்டு மறையவே இல்லை.  உண்மையிலேயே தாஜ் மஹால் நம் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையெனும் பார்த்துவிட வேண்டிய ஒரு இடம் தான். காதல் மாளிகை, காதல் அடையாளம், காதலின் புனிதம் என்பதற்காகெல்லம் இல்லை; அப்படி ஒரு அற்புதமான கலைநய பேரழகை யாரும் பார்க்காமல் விட்டுவிட கூடாது என்பதற்காக தான். நீங்களும் ஒரு உங்கள் மும்தாஜுடன் தாஜ் மஹாலுக்கு சென்று மகிழுங்கள்! 😉🤩நன்றி!!!

பி. விமல் ராஜ்

வெள்ளி, 26 ஜனவரி, 2024

கொன்றால் பாவம், தின்றால் போச்சு!

வணக்கம்,

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் மற்றும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டில் எல்லோருக்கும், எல்லா வளமும் மகிழ்ச்சியும் பெற்றிட வாழ்த்துக்கள்!

2024-ன் முதல் பதிவில் உணவை பற்றி எழுதலாம் என எண்ணியுள்ளேன். நாம் பெரும்பாலும் அசைவ ஓட்டல்களுக்கு செல்லும் போது அங்கு 'ஹலால்' (Halal) என்று ஆங்கிலத்திலும், உருதுவிலும் எழுதி ஓட்டப்பட்டிருக்கும். நானும் பலமுறை பார்த்திருக்கிறேன். முன்பெல்லாம் அதற்கு சரியான அர்த்தம் தெரிந்திருக்கவில்லை. சில காலம் பின்னர் அந்த ஹலால் ஸ்டிக்கர் இருந்தால் மட்டுமே முஸ்லீம் மக்கள் சாப்பிட வருவார்கள் என தெரிந்து கொண்டேன். சில நாட்கள் முன்பு மாமிச உணவு, ஹலால் சர்ச்சைகள் எழுந்த போது தான் ஹலால் போல மற்ற மதங்களிலும் உணவு முறைகள் இருக்கிறது என தெரிந்து கொண்டேன். இணையத்தில் அதை பற்றி படித்ததை உங்களிடம் பகிர்கிறேன்.

Halal-koscher-jhatka-foods

உணவும் மதமும் எப்போதுமே பிரிக்க முடியாத ஒன்று. ஓவ்வொரு மதமும் அந்தந்த மக்கள் எதை சாப்பிட வேண்டும், எதையெல்லம் சாப்பிட கூடாது என்று சில வழிமுறைகளை வைத்துள்ளது. நம் உணவை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்றாலும், சில நேரத்தில் அப்படி இருப்பதில்லை. நமக்கு தெரிந்ததெல்லாம் சைவம் (Vegeterian), அசைவம் (Non-Vegeterian), சமீபமாக வீகன் (Vegan). அவ்வுளவுதான். 


உணவு முறைகளில் என்னென்ன மத கட்டுப்பாடுகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம். 

 • ஹலால் (Halal)
 • கோஷர் (Koscher)
 • ஜட்கா (Jhatka) 

முதலில் ஹலால் பற்றி வருவோம். 'ஹலால்' (Halal) என்னும் அரபி சொல்லுக்கு அனுமதிக்கப்பட்டது என்று அர்த்தம். இஸ்லாம் மதத்தின் போதனைப்படி எவையெல்லாம் அனுமதிக்கபட்டுள்ளதோ, எப்படியெல்லாம் நடக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் 'ஹலால்' என்று சொல்வார்கள். அனுமதிக்கப்படாததை 'ஹராம்' (Haraam) என சொல்வார்கள். 


இஸ்லாமிய சட்டம் எந்த உணவு உட்கொள்ளத்தக்கவை மற்றும் எவை உட்கொள்ளத் கூடாது என்று வகுத்துள்ளது. உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையினையும் வகுத்துள்ளது. அம்முறை தபிஹாஹ் (Dabihah) எனப்படுகின்றது. இஸ்லாமிய சட்டப்படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். தபிஹாஹ் பின்பற்ற சில விதிகலும் இருக்கிறது:


*) கூரான கத்தி/இறைச்சி வெட்டும் ஆயுதம் கொண்டு கழுத்து, உணவுக் குழாய் மற்றும் கழுத்து நரம்பின் மேல்பகுதியில் கீறப்பட்டு, தண்டுவடம் பகுதியை வெட்டாமல் தலையை மட்டும் துண்டிக்க வேண்டும்.

*) இறைச்சியை வெட்டும் போது காபாவின் திசையை நோக்கி வெட்ட வேண்டும்.

*) மேலும் பிஸ்மில்லா அல்லா-ஒ-அக்பர் என்ற இஸ்லாமிய பிரார்த்தனையை சொல்லி வெட்ட வேண்டும். 

*) ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கால்நடையும் வெட்டும் போது பிரார்த்தனை சொல்லி கால்நடைகளை வெட்ட வேண்டும்.

*) இரத்தம் அல்லது இரத்தம் சார்ந்த உணவுகளை உண்ண கூடாது.

*) மற்ற மிருகங்களால் கொல்லபடாமல், அதுவாய் இறந்த விலங்காய் இருத்தல் வேண்டும்.

*) பன்றி இறைச்சி உண்ண கூடாது.

*) ஆல்கஹால் மற்றும் போதை தரும் பொருட்கள் கூடாது.

*) அதே போல சமைக்க பயன்படுத்தும் பொருட்கள், சுத்தமாகவும் இருக்க வேண்டும்; தபிஹாஹ் இல்லாமல் தயாரிக்கப்பட்ட உணவ பொருளை பயன்படுத்தவோ சேர்க்கவோ கூடாது.


விலங்குகளை இறைச்சிக்காக கொல்லும் போது குறைந்த துன்பத்தில் உயிர் பிரிவதற்காகவும், அல்லாவின் பெயரை சொல்லி அவருக்காக பலியிடபடுகிறது என்று உறுதி செய்யவும் தான் இத்தகைய விதிகள் பின்பற்றப்படுகிறது. உலகில் உள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் இதனை விடாது கடைப்பிடித்து வருகின்றனர். இறைச்சி பொருட்கள் மட்டுமல்ல மற்ற சைவ பொருட்களான காய்கறிகள், தானியங்கள், பால், எண்ணெய் பொருட்கள், இனிப்பு/மிட்டாய் பொருட்களிலும் ஹலால் சமாச்சாரம் வியாபாரம் இருக்கிறது. உலகளாவிய ஹலால் சந்தை 2023-ல் 2500 பில்லியன் டாலர் அளவு எட்டியுள்ளது. இந்த ஹலாலை சுற்றிய சந்தை அடுத்த 10 வருடத்திற்குள் 5800 பில்லியன் டாலர் அளவுக்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


கோஷர் (Koscher) உணவு முறை என்பது யூதர்கள் பயன்படுத்தும் முறை ஆகும். யூதர்களின் புனித நூலில் இதனை காஷுருட் உணவு சட்டங்கள் மூலம் கடவுளால் சொல்லப்பட்டது என சொல்கிறார்கள். எந்தெந்த உணவுகளை உண்ண வேண்டும், அவற்றை எவ்வாறு தயாரிப்பது மற்றும் எவ்வாறு சேர்த்து சமைப்பது போன்ற விதிகளை உடையது. அனைத்து யூதர்களும் கோஷர் உணவை உண்பதன் மூலம் காஷுருட் விதிகளை கடைபிடிப்பதில்லை. கோஷர் என்னும் சொல்லுக்கு Fit என்று அர்த்தம். அதாவது யூதர்கள் உணவு உண்ண ஏற்ற முறை என்று பொருள் வரும். இதிலும் சில கோஷர் உணவுவிற்கான விதிமுறைகள் இருக்கிறது.


*) பாலும், இறைச்சியும் சேர்த்து சாப்பிடவோ, சமைக்கவோ கூடாது.

*) பழைய உணவை உண்ண கூடாது. சில நேரத்தில் மீன் உணவு மட்டும் விதிவிலக்கு 

*) வைன் குடித்தல் யூதர்களின் உணவில் முக்கிய ஒன்று. அந்த வைனும் கோஷர் விதிப்படி செய்யப்பட்ட, பதப்படுத்தப்பட்ட முறையில் இருக்க வேண்டும்.

*) ஷோகேட் (shochet ) என்பவர் யூத சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட முறையில் கால்நடைகள் கொல்வதற்கு தகுதியானவர் என்று அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட நபர். அவர் மட்டுமே இறைச்சியை குறிப்பிட்ட முறையில் வெட்ட வேண்டும்.

*) மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி, வான்கோழி, வாத்து, மான் இறைச்சி போன்ற கோஷர் கோஷர் உணவில் அனுமதிக்கப்பட்டவை ஆகும்.

*) இறைச்சி உண்ணும் பறவைகள், வவ்வால் போன்றவற்றை உன்ன கூடாது. முயல், ஒட்டகம், பன்றி மற்றும் ஹைராக்ஸ் ஆகிய 4 விலங்குகளை உண்ண கூடாது.

*) மற்ற மிருகங்களால் இறந்த விலங்கை  உண்ண கூடாது.

*) கடல் சிப்பிகள், இறால் போன்றவற்றை உண்ண கூடாது.

*)  இந்த வழிகாட்டுதளின்படி, இறைச்சிக்காக வெட்டும் போது விலங்குகள் தொண்டையின் குறுக்கே துல்லியமான ஆழத்தில் வெட்டப்பட்டு, கழுத்து நரம்புகள், வேகஸ் நரம்புகள், மூச்சுக்குழாய் மற்றும் உணவுக்குழாய் ஆகிய இரண்டையும் துண்டித்து வெட்ட வேண்டும். இப்படி வெட்டும் போது, இரத்தம் கசியாமல் இறப்பதன் மூலம் அதிக துன்பம் இல்லாமல் விலங்கு உடனடியாக இறந்துவிடுவதை இது உறுதி செய்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த முறையை ஷேச்சித்தா (Shechita) என்று சொல்வார்கள். ஒரே முறை பிரார்த்தனை செய்து பல கால்நடைகளை வெட்டலாம்.

*) சில அனுமதிக்கப்பட்ட விலங்குகளின் முன்பகுதியை மட்டுமே மக்கள் உண்ண முடியும்.

*) இரத்தத்தின் அனைத்து தடயங்களையும் அகற்றுவதற்கு  சாப்பிடுவதற்கு முன் இறைச்சியை ஊறவைக்க வேண்டும்.


பழமைவாத மரபுவழி (ஆச்சாரமான) மத கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் யூதர்கள் மற்ற சைவ உணவுகளையும், டப்பாவில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவுகளையும் கோஷர் குறியீடுயில்லாமல் வாங்குவதில்லை. 2023-ல் கோஷர் உணவு சந்தையின் உலகளாவிய சந்தை மதிப்பு 42 பில்லியன் டாலர்களாம். இன்னும் பத்து ஆண்டுகளில் 72 பில்லியன் டாலர்களாக மாறும் என ஆய்வுகள் சொல்கிறது. 


ஜட்கா (Jhatka) என்பது சீக்கிய மதத்தினரும், இந்து மதத்தினரும் பின்பற்றப்படும் உணவு முறை ஆகும். ஜட்கா என்னும் சொல் சமஸ்கிருத சொல்லான ஜதிதி (Jhatiti) என்னும் சொல்லிலிருந்து வந்துள்ளது. அதற்கு 'உடனடியாக, விரைவாக' என்று பொருள் வரும்.


கால்நடையை இறைச்சிக்காக வெட்ட, கூரான வாள்/கத்தி/கோடாரி கொண்டு ஒரே வெட்டில் தலையை துண்டாக்க செய்ய வேண்டும். இதன் மூலம் உடனடியாக அதிக துன்பமில்லாமல் கால்நடையின் உயிர் பிரியும் என்பதான நம்பிக்கை. மேலும் வெட்டும் முன் விலங்கு வெட்டப்பட போகிறோம் என விலங்கு பயப்படாமல் இருத்தல் வேண்டும். சீக்கிய மதபாரம்பரியத்தின் படி, ஆயுதத்தால் ஒரே வெட்டில் கொல்லப்பட்ட விலங்குகளிடமிருந்து பெறப்படும் இறைச்சி மட்டுமே மனித உணவுக்கு ஏற்றது என குரு கோவிந்த் சிங் கூறியுள்ளார். இந்து மதத்திலும் இதே முறை கடைபிடிக்கப்படுகிறது.


இதே போல கிருஸ்துவ மதத்திலும் புதிய ஏற்பாட்டில் உணவுக் கட்டுப்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன: சிலைகளுக்குப் பலியிடப்பட்ட உணவு, இரத்தம், கழுத்தை நெரிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான்.


இந்தியாவில் இஸ்லாமிருடைய இறைச்சி கடையில் ஹலால் முத்திரையுடன் இருக்கும். மற்ற மதத்தினர் நடத்தும் கடையில் அவர்கள் என்ன முறை கடைபிடிக்கிறார்கள் என பெரும்பாலும் தெரியாது. நாடு முழுவதும் எல்லா அசைவ ஓட்டல்களிலும், நட்சத்திர ஓட்டல்களிலும், Thalapakatti, KFC, McD போன்ற பெரும் வணிக உணகத்திலும் ஹலால் உணவே கிடைக்கிறது. அதன் stickerகளை எங்கும் பார்க்க முடிகிறது. சில நாட்களுக்கு முன், இந்து அமைப்புகள் எங்களுக்கும் ஏன் அல்லாவின் பெயரை சொல்லி வெட்டப்படும் ஹலால் உணவு திணிக்க படுகிறது என கேள்வி எழுப்ப ஆரம்பித்து சர்ச்சையாக்கினர். பெரும்பாலான இடங்களில் ஹலால் மட்டுமே கிடைத்த போதிலும் இப்போது ஜட்கா மற்றும் கோஷர் மாமிசங்களும் ஆங்காங்கே கிடைக்கின்றன. இந்த மத கோட்பாடுகள் எல்லாம் உணவில் திணிக்கப்படுவது வியாபாரத்திற்கு தான் ஒழிய வேறேதும் இல்லை.


ஒவ்வொரு மதத்திலும் இது போன்ற உணவு பழக்க வழக்கங்கள் கட்டாயமாக பின்பற்ற சொல்லப்பட்டுள்ளன. அதை பின்பற்றாதோர் பாவம் செய்தவர்களாக மதம் சொல்கிறது. எம்மதமாயினும் யார்யாருக்கு என்ன விருப்பமோ அதை அவர்கள் அதை உட்கொள்ளலாம்; என்னை பொறுத்தவரையில் கொன்றால் பாவம் தின்றால் போச்சு. அவ்ளோதான்.! அப்புறம் என்னங்க... வர ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்ல என்ன ஸ்பெஷல்? சிக்கனா?? மட்டனா?? மீனா?? Beaf ஆ?? பின்னோட்டதில் சொல்லுங்க...நன்றி!!!

பி. விமல் ராஜ்

வியாழன், 28 டிசம்பர், 2023

வாங்களேன்! ஒரு கை குறையுது..

வணக்கம்,

சீட்டுக்கட்டு பற்றி தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் நண்பர்கள் /உறவினர்கள் கூடும் இடத்திலும், திருமணம் மற்றும் விசேஷ நாட்களிலும், கிளப்களிலும் விளையாடப்படுகிறது. சில இடங்களில் பொழுது போக்காகவும், சில இடங்களில் சூதாட்டமாகவும் விளையாடப்படுகிறது. இந்த சீட்டாட்டத்திற்கு பெரிய வரலாறே உண்டு. நான் படித்து தெரிந்து கொண்டதை சொல்கிறேன். தொடர்ந்து படியுங்கள்.

9ஆம் நூற்றாண்டில் சீனாவின் டாங் (Tang dynasty) பேரரசின் காலத்தில் தான் முதன்முதலில் சீட்டு விளையாட்டு ஆரம்பிக்கபட்டுள்ளது. காய்ந்த இலையில் படம் வரைந்து அச்சு எடுக்கப்பட்டு விளையாடப்பட்டது. இதனை leaf game என குறிப்பிடுகின்றனர். அக்குறிப்பில் இந்த விளையாட்டை அரச குடும்பத்தினர் 868 பேர் சேர்ந்து விளையாடியதாக சொல்கின்றனர். பின்னர் பெர்சியா, அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளில் பல்வேறு மாற்றங்களுடன் விளையாடப்பட்டது. பின்னர் ஐரோப்பாவில் பெரும் மாற்றத்துடன் அட்டை வடிவில் அச்சடிக்கப்பட்டு விளையாடப்பட்டது. 13/14 ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பெயின், இங்கிலாந்து, போர்த்துக்கல் வரை சென்று பின்னர் ஜப்பானுக்கும் பரவியது. ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் மொழி/ கலாச்சாரத்திற்கு ஏற்ற படங்களை வரைந்து அதற்கேற்ற விளையாட்டு சட்டங்களை சேர்த்து விளையாடியுள்ளனர்.
 
Playing cards

இப்போது உள்ளபடி நான்கு முதல் பத்து பேர் வரை விளையாடும் இவ்விளையாட்டில், அக்காலத்தில் முப்பது நாற்பது பேர் வரை விளையாடியுள்ளனர்.
பின்னர் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவிற்கு முகலாயர் மூலம் வந்துள்ளது. இங்கு இந்த சீட்டாட்டத்தை கஞ்சிஃபா (Ganjifa) என்று பெயரிட்டு விளையாடியுள்ளனர். கஞ்சிஃபா என்னும் சொல்லுக்கு 'புதையல்' என்னும் பொருள் தரும். இதை விளையாடி பொருள் ஈட்ட பயன்படுத்தியும் உள்ளனர்.

இவ்விளையாட்டை சதுர/வட்ட வடிவில் உள்ள மரக்கட்டை அல்லது பனை ஓலை வைத்து விளையாடியுள்ளனர். பின்னாளில் நம் நாட்டிற்கேற்ப தசாவதார கஞ்சிஃபா, அஷ்ட மல்லா கஞ்சிஃபா, ராமாயண கஞ்சிஃபா, ராசி கஞ்சிஃபா, மொகல் கஞ்சிஃபா, மைசூர் சாட் கஞ்சிஃபா, அக்பர் கஞ்சிஃபா, பிரெஞ்சு கஞ்சிஃபா என பல்வேறு மாற்றங்களையம் மாறுபாடுகளை கொண்டுள்ளது இவ்வகை சீட்டாட்டம். ஒவ்வொரு வகையிலும் அதற்கேற்ற படங்களும், காய்களும், சில சமயங்களில் தாயக்கட்டையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில ஆட்டங்கள் 20 பேர் ஆடக்கூடியது. சில ஆட்டங்கள் 3/4 பேர் சேர்ந்து 120 அட்டைகளை கொண்டு ஆடக்கூடியது.   
பின்னாளில் ஐரோப்பியர்களின் வருகைக்குப்பின் சீட்டாட்டம் வேறு வகையில் மாற்றம் பெறுகிறது. இப்போது இருப்பது போல ஒரு (சீட்டு) கட்டில் 52 கார்டுகள் கொண்டு ஆட ஆரம்பித்தனர். முதலில் ஜோக்கர் என்ற கார்டே இருக்காது. பிற்காலத்தில், அதாவது 20ஆம் நூற்றாண்டில் தான் ஒரு கட்டுக்கு இரு ஜோக்கர் சீட்டுகளை சேர்த்து கொண்டனர். உலகளாவிய சீட்டுக்கட்டு ஆட்டத்தில் பின்பற்றபடுவது French suite என்ற முறையே ஆகும். அதில் தான் heartin, spade, club/clover, diamond/dice/tiles போன்ற சின்னங்கள் இருக்கும். இதில் ஒவ்வொரு கட்டிலும் 4 Ace க்கள் , இரண்டு முதல் பத்து மற்றும் face card என்று சொல்லப்படும் King , Queen, Jack ஆகிய கார்டுகள் இருக்கும். கூடுதலாக இரு ஜோக்கர்கள் இருக்கும். இதை தவிர ஜெர்மன், இத்தாலியன், ஸ்பானிஷ், சுவிஸ்-ஜெர்மன் ஆகிய suite களில் வெவ்வேறு சின்னங்கள் இருக்கும்.    

Playing-cards-suites

முதலில் அட்டையில் வரையப்பட்டு விளையாடப்பட்டன; பின்னர் பேப்பரில் அச்சடிக்கப்பட்டது; பின்னர் பிளாஸ்டிக் அட்டையில் மாறியது; அதன் பின்னர் அதற்கான அலங்கார அட்டை பெட்டியில் வைக்கப்பட்டு பல வெளிப்புற மாற்றங்களை கொண்டு மாறியுள்ளது சீட்டுக்கட்டுக்கள். கடந்த 20 ஆண்டுகளில் லேப்டாப், டெஸ்க்டாப்பில் solitaire/rummy விளையாடி, இப்போது online rummy வரை வந்துவிட்டது. இன்றளவும் மக்களிடையே விளையாடப்படும் ஒரு பொழுதுபோக்கு ஆட்டமாகவும் இருக்கிறது. மரத்துக்கடியிலோ, திண்ணையிலோ விளையாடினால் அது லோக்கல் விளையாட்டு; அதுவே உயர்தர ஓட்டலில்/கிளப்பில் விளையாடும் போது, அது பணக்கார மக்களின் சூதாட்டமாக ஆக மாறிவிடுகிறது. இந்த சீட்டுக்கட்டுகள் விளையாட மட்டுமல்லால், கார்டு மேஜிக் செய்யவும், கோபுரம் (வீடு) கட்டி விளையாடவும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சீட்டுக்கட்டுக்கள் இன்னும் பலவகையான பரிணாம வளர்ச்சிகளை அடைய காத்துக் கொண்டிருக்கிறது.


உங்களுக்கு சீட்டுக்கட்டில் என்னென்ன விளையாட்டுகள் தெரியும் என பின்னூட்டத்தில் சொல்லுங்கள்...


நன்றி!!!
பி. விமல் ராஜ் 

புதன், 29 நவம்பர், 2023

ச்சில் பண்ணலாம் வாங்க!

வணக்கம், 

சில (40, 50) ஆண்டுகளுக்கு முன்வரை சரக்கடிப்பவர்களை ஒழுக்கமில்லாதவர்கள் என்று குறிப்பிட்டது உண்டு. சமூகத்திலும் சினிமாவிலும் அப்படி தான் காட்டுவார்கள். ஆனால் இப்போது கதையே வேறு. சரக்கடித்தல் அல்லது social drinking என்பது normalise ஆன ஒன்றாக மாறிவிட்டது. அது காலப்போக்கில் மாறியதில் எனக்கு பெரிய கவலையோ/வருத்தமோ இல்லை. குடிப்பது உடலுக்கும், உயிருக்கும் தீங்கானது என எல்லோருக்கும் தெரியும். மகிழ்ச்சி, வருத்தம், போதை என குடித்து குடித்து மொடா குடிகாரனாகி நோய்வாய்ப்பட்டு இறப்பதெல்லாம் அவரவர் விதி. ஆண் பெண் இருவருக்கும் இது பொருந்தும்.

சில நாட்களுக்கு முன் வேலை நிமித்தமாக பெங்களூரு செல்ல வேண்டி வந்தது. வேலை முடிந்து டீமுடன் பெங்களூருவை சுற்றி பார்க்கையில் அவர்கள் எல்லோருமே சொன்னது பெங்களூரு ஐ.டிக்கு மட்டுமல்ல; (Pub) பப்க்களுக்கும் hub என்பது தான். ஒரு வியாழன் இரவில் ஆறு பேர் கொண்ட குழுவாக கோரமங்களாவில் உள்ள உயர்தர பப் ஒன்றுக்கு சென்றிருந்தோம். மூவர் KF pint beer, Bira சிறிய பாட்டில் என ஆர்டர் செய்து கொள்ள, நானும் மற்ற இருவரும் sprite, lemonade, சிக்கன் side dish என ஒதுங்கி கொண்டோம். 

Bengaluru-pub-culture

அன்று தான் முதன் முதலில் பப் வாழ்க்கை எப்படி இருக்கிறது என பார்த்தேன். உடன் வந்த பெங்களூரு நண்பர் ஒருவர், தான் +2 படித்த காலம் முதல் பப்பும், பாரும் ஆரம்பித்து விட்டதாக சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார். மேலும் இந்தியாவில் பெங்களுரில் தான் அதிக pubs இருப்பதாக சொல்லிக் கொண்டார். ஆயிரத்துக்கும் அதிகமாய் இருக்கிறதாம்! இங்கு pub and night culture மிகவும் famous & fashion. இதுதான் இங்குள்ள பெரும் பொழுதுபோக்கு, டைம்பாஸ், என சொல்லிக்கொண்டே போனார்கள். பெங்களூரு Pub Capital of India என்று அழைக்கப்படுகிறதாம். ஏன்? மற்ற மாநகரங்கள் போலவே பெங்களூரும் வளர்ந்து வந்த போதிலும், இங்கு மட்டுமே ஏன் இந்த pub and night culture மீது இவ்வ்ளவு மோகம் என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. இணையத்திலும் நண்பர் ஒருவரிடமும் அறிந்து கொண்ட சில தகவல்களை உங்களிடம் பகிர்கிறேன்.

ஒரு தொழில்துறை ஆய்வின்படி, இந்தியாவில் பப் மற்றும் இரவு வாழ்க்கை கலாச்சாரத்தை அமைத்த/ஆரம்பித்த முதல் நகரங்களில் பெங்களூருவும் ஒன்றாகும். மற்ற மாநிலங்களை போல கள்ளுக்கடைகளும், சாராயக்கடைகளும் பெங்களூரில் இருந்து வந்தது. 1989-ல் முதன் முதலில் Pecos என்னும் பப் ஆரம்பிக்கப்பட்டது. அஃது வேகமாக மாறிக்கொண்டிருந்த நகரத்திற்கு மேலும் ஒரு புதிய உற்சாகத்தையும் vibe-யும் சேர்த்தது. வேலைக்குப் பின் மாலையிலும் இரவிலும் பப், டான்ஸ், ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம் என இரவு நேர கலாச்சாரத்தை அனுபவிக்க ஆரம்பித்து இன்று பெரிய அளவில் போய் கொண்டிருக்கிறது. பெங்களூரில் இரவு ஒரு மணிவரை பெரும்பாலும் எல்லா பப்களும், டிஸ்கோத்தேக்களும், (longue) லாஞ்களும், பார்களும், திறந்தே இருக்கும். இரவு நேர ரெஸ்டாரண்ட்கள், பெட்டிக்கடைகள் என பெங்களூரில் சில ஏரியாக்கள் விடியற்காலை வரை ஜகஜகவென ஜொலித்து கொண்டிருக்கும். அக்காலங்களில் மால்கள் (Malls) பெரிதாய் இருக்கவில்லை; பீச் கிடையாது; மற்ற பொழுதுபோக்கு சமாசாரங்கள் இருந்த போதிலும், பப்பும் மப்பும் பெங்களூரில் முக்கியமான பொழுதுபோக்கு ஒன்றாகி போனது. பெங்களூரு மக்கள் வாரம் தோறும் பகல் முழுக்க உழைத்து மாலையில் stress இல்லாமல் பொழுதை கழிக்க ஆரம்பிக்கப்பட்டது என சொல்கின்றனர். முதலில் weekendகளில் களைகட்டிய பப்கள், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தினசரி நாட்களில் இரவு நேரத்தில் 9 மணிக்கு மேல் வெளுத்து வாங்க ஆரம்பித்தது. அரசுக்கும் வருமானம் பலமாய் வருவதால் பல சலுகைகளை பப்களுக்கு வழங்க ஆரம்பித்தது. 90களில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற் நிறுவனங்கள், ஐடி கம்பெனிகள்,  ஸ்டார்ட் அப் கம்பெனிகள் என தொழில்முறையிலும் நகர கட்டமைப்பிலும் வளர்ந்து கொண்டே இருக்க, பப்புகளும் வளர்ந்து கொண்டே போயின. வாடிக்கையாளர்களை கவர karoke, open nights, dating nights, cusine evenings, conventional bar games, bartender shows, happy feet, happy hours என புது புது விஷயங்களை கூட்டி கொண்டே சென்று அவர்களது வியாபாரத்தை பெருக்கி கொண்டது. 

2010-களில் The Biere Club என்னும் பப் நிறுவனம், Microbreweries -ஐ (தாமாகவே மதுபானத்தை தயாரித்து விற்க) ஆரம்பித்தது. பெரும்பாலும் பீர் வகையறாக்கள் தான். அதுவரை பப்கள், பீர் பாட்டில்களை வாங்கி விற்று வந்தவர்கள்; அவர்களே தயாரித்து  அரசின் உத்தரவுடன் லைசென்ஸ் பெற்று) தமது பார், பப் களில் விற்க ஆரம்பிக்க விற்பனை படுஜோரானது. அல்கொஹோலின் அளவு என்று சொல்லப்படும் ABV - Alcohol By Volume 4-8% மட்டுமே தான் இருக்க வேண்டும்.  Microbreweries-ல் பெரும்பாலும் 4 முதல் 4.5 வரை தான் அல்கொஹோல் அளவு சேர்க்கப்படுகிறதாக சொல்லப்படுகிறது. ஆனால் சில இடங்களில் 5- 6.5% வரை சேர்க்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். 

இந்த பப் மற்றும் இரவு நேர கலாச்சாரங்களால், சில பல இடங்களில் பெண்களிடம் சீண்டல்கள், பாலியல் முயற்சி, குடித்துவிட்டு அடிதடி,  குடித்துவிட்டு வண்டியோட்டுதல், சில சமயங்களில் கொலை போன்ற விஷயங்களும் நடந்தேறியுள்ளன. 

பெங்களூருவை போலவே மற்ற நகரங்களிலும் இது போன்ற பப் கலாச்சாரங்கள் பெருகி வருகிறது. புனே, மும்பை, ஹைதராபாத், புது தில்லி, என நாட்டின் பல நகரங்கள் மேற்கத்திய கலாச்சாரத்தின் பின்னால் போக ஆரம்பித்துள்ளது. சென்னையிலும் பல பப்கள் இருக்கிறது. ஆனால் பெரும் வசதி படைத்தவர்கள், பணக்காரர்கள் மட்டுமே போவார்கள் என்ற எண்ணம்தான் மோலோங்கி இருக்கிறது. அதுவே ஓரளவு உண்மையும் கூட. மற்றவர்கள் சரக்கடிக்க தெருவுக்கு தெரு இருக்கும் பாருக்கு சென்றுவிடுகின்றனர். நம்ம ஊரில் சரக்கடிக்க போகலாம் என்று சொன்னாலே பாண்டிச்சேரி தான் நினைவுக்கு வரும். புதுவை 'மது'வை நகரமாக மாறிய கதையே வேறு. பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆட்சியிலிருந்து இந்தியாவுடன் சேர்ந்த பின்பும், பல வெளிநாட்டவர்கள் இன்றளவும் பாண்டிச்சேரியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்; அவர்களுக்காக மதுபானங்கள் விற்பனையில் இருந்தது. மேலும் பாண்டிச்சேரி சிறிய யூனியன் பிரதேசமாக இருப்பதால், பொருளாதார வளர்ச்சிக்காக அங்கு பல பொருட்களுக்கு சேவை வரி (Service tax/VAT/GST) மிகவும் குறைவாக விதிக்கப்பட்டுள்ளது (கார், பெட்ரோல், விவசாய பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், மதுபானங்கள், முதலியன..)

பாண்டிச்சேரி அரசு, எல்லா வகையான மதுபானங்களுக்கும் 40% மட்டுமே கலால் வரி விதிக்கிறது. மற்ற மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மற்ற மாநிலங்கள் முறையே 65% மற்றும் 300% வரை வரியை  விதிக்கின்றன. எனவே, மதுபானம் பாண்டியில் ஒப்பீட்டளவில் மிகவும் மலிவானது. இதனால் புதுச்சேரிக்கு பிற மாநில மக்கள் மலிவு விலையில் மதுபானம் அருந்த வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தமிழ் நாட்டில் 1970-80 களில் மதுவிலக்கு அமலில் வந்து, பின்னர் ரத்தாகி, பின்னர் மீண்டும் மதுவிலக்கு அமல் என தொடர் சட்ட மாற்றங்களால் குழப்பங்களால் கடலூர்/விழுப்புரம் மக்கள் அருகே உள்ள பாண்டிசேரிக்கு படையெடுத்து தங்கள் தாகத்தை தீர்த்து கொண்டனர். சில பல பாட்டில்களை வாங்கி வந்து தமிழ் நாட்டிற்குள் குடிக்கவும், விற்கவும் செய்தனர். மேலும் பாண்டிசேரி கடற்கரை நகரமாகவும் இருப்பதால் சுற்றுலா துறைக்கு பெரும் உதவியானது. பெரும்பாலும் தமிழ் சினிமாகளில் பாண்டிச்சேரியை 'போதை நகரம்' என்று சித்தரிப்பது அந்த இடத்தின் மதுபானத் தொழிலை இன்னும் பிரபலப்படுத்தியது. அதனால்தான் பாண்டிச்சேரி தென்னிந்தியாவின் 'மது தலைநகரம்'  (Alcohol Capital of South India) என்று அழைக்கப்படுகிறது.    

இப்படி எல்லா ஊரிலும் சரக்கு ஆறாய் போனாலும், தமிழ் நாட்டை மட்டும் குடிகார மாநிலமாக மாற்றிவிட்டார்கள் என சிலர் ஏன் சொல்கிறார்கள் என தெரியவில்லை. குடிப்பது தவறு (????!!!!) தான்... ஆனால் மக்களை குடிக்க வைக்கதான் எல்லா அரசும் முயற்சி செய்கிறது. இன்னும் சில நாட்களில் சென்னையிலும் இந்த இரவு நேர பப்கள் பெருகி, மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள் என மார்க்கெட் நிலவரம் சொல்லுகிறது. என்ன நடக்கிறது என்று நாமும் பொறுத்திருந்து பார்க்கலாம்! அதுவரை Cheers !!!  

நன்றி!!!
பி. விமல் ராஜ் 

புதன், 15 நவம்பர், 2023

கடல் சூழ் உலகு!

வணக்கம்,

உலகம் தோன்றி கிட்டத்தட்ட 120 கோடி ஆண்டுகளுக்கு பின்னர் பூமியில் இருந்த வாயுமண்டலங்கள் நீராக மாறியும், மழை பெய்தும் பெரும் நீர் படுகைகளாக தோன்ற ஆரம்பித்தன. இதுவே இன்றைய கடல்களாகும். இன்றைய பூமியானது 71% கடலால் சூழப்பட்டுள்ளது. இவைதான் உலகின் பெருங்கடல்கள் (World Oceans) என்று அழைக்கப்படுகிறது. 

பள்ளிக்கூடத்தில் social studies பாடத்தில் map குறிக்கும் போது சில கடல் பகுதிகளை sea என்றும், சில கடல் பகுதிகளை ocean என்றும் குறிப்போம். கடல் நிலப்பரப்புகளால் சூழப்பட்டிருக்கும் அல்லது கரையோரம் உள்ள நிலப்பரப்பிலிருந்து விரிந்து இருக்கும்; பல கடல்கள் சங்கமிக்கும்/ஒன்று சேரும் இடம் பெருங்கடலாகும்.

அதே போல சின்ன வயதில் நாம் கேட்கும் கதைகளில் "ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி..." என்று சொல்வதுண்டு. ஆங்கிலத்திலும் "Across Seven Seas.." என்று வரும். இந்த ஏழு கடல்கள் எதை குறிக்கின்றன என தெரியுமா? 

நம் உலகில் ஐந்து பெருங்கடல்கள் இருக்கிறது. அவை,

 • பசிபிக் பெருங்கடல் (North Pacific Ocean & South Pacific Ocean)
 • அட்லாண்டிக் பெருங்கடல் (North Atlantic Ocean & South Atlantic Ocean)
 • இந்திய பெருங்கடல் (Indian Ocean)
 • ஆர்டிக் பெருங்கடல் (Artic Ocean)
 • அண்டார்டிக் பெருங்கடல் (Atlantic Ocean)
five-world-oceans

பசிபிக் பெருங்கடல் : 

 • பசிபிக் பெருங்கடல் உலகின் மிக பெரிய பெருங்கடல் ஆகும். வட ஆர்டிக் பெருங்கடல் முதல் தெற்கு அண்டார்டிக் பெருங்கடல் வரை பரவியுள்ள உலகின் மிகப்பெரிய பெருங்கடல் ஆகும். கிட்டத்தட்ட பூமியின் 30% பரப்பளவை கொண்டுள்ளது. இதன் கிழக்கில் தென் அமெரிக்கா வட அமெரிக்காவும், மேற்கில் ஆஸ்திரேலியா, ஆசிய நாடுகளின் நிலப்பரப்பும் உள்ளன. இது பூமத்திய ரேகையால் (Equator) வடக்கு மற்றும் தெற்கு பசிபிக் பெருங்கடல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
 • 1519 -ல் Ferdinand Magellan என்னும் போர்த்துகீச மாலுமி தான் முதல் முதலில் உலகை கப்பலில் சுற்றி வந்தவர். அவர் பசிபிக் பெருங்கடலைக் கடக்கும்போது, மகலன் இதனை மார் பசிபியோ (Mar Pacifico) என்றழைத்தார். இச்சொல்லுக்குப் போர்த்துக்கீசிய மொழியில் அமைதியான கடல் என்று பொருளாகும். பசிஃபிக் என்னும் பெயர் இதிலிருந்து உருவானது. 25000 மேற்பட்ட தீவுக்கூட்டங்கள், பவள பாறைகளை கொண்டுள்ளது. பெரும்பாலானவை தெற்கு பசிபிக் கடல் பகுதியில் இருப்பதாக சொல்கின்றனர். 
 • UNESCO அங்கீகாரம் பெற்ற Eastern Island Monument Statues, சிலி நாட்டின் கடற்கரை பகுதியில் தான் அமைந்துள்ளது.
 • உலகின் மிக பெரிய பவளப்பாறை திட்டுகள் இந்த கடல் பகுதியில் தான் இருக்கின்றன. 
 • உலக பெருங்கடகளில் உள்ள மிக ஆழமான இடம் (11,034 m ஆழம்) என்று சொல்லப்படும் மரியானா ட்ரென்ச் (Mariana Trench) பசிபிக் பெருங்கடலில், பிலிப்பைன்ஸ் கடல்பகுதியருகே இருக்கிறது. இப்பகுதியில் இதுவரை யாரும் காணாத அதிசிய கடல்வாழ் உயிரினங்களும், ஆபத்தான உயிரினங்களும் இருப்பதாக ஆராய்சியாளர்கள் சொல்கின்றனர்.
 • Point Nemo என்று அழைக்கப்படும் இடமான கடற்பகுதியும் பசிபிக் பெருங்கடலில் தான் இருக்கிறது. தென் அமெரிக்காவுக்கும் நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில தான் பழுதடைந்த/ சுற்றுப்பாதையிலிருந்து தவறிய விண்கலங்கள் அழியும்படி/விழும்படி செய்யப்படுகின்றன. இப்பகுதியை விண்வெளி கல்லறை (Space Cemetry) எனவும் சொல்கின்றனர். 2600 கி.மீ  தூரத்திற்கு எந்த நிலப்பரப்பும்  அருகே இல்லாத தனிமையான, ஒதுக்கப்பட்ட இடமாக இது சொல்லப்படுகிறது.
 • மேலும் Ring of Fire என்று சொல்லப்படும் இயற்கை பேரிடர்கள் (பூகம்பம், ஏரிமலை) அதிகம் ஏற்படக்கூடிய இடமும் இப்பகுதியில் இருக்கிறது. 
 • 1521-ல் தான் பசிபிக் கடல் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், இது கி.மு. 3000-16000 ஆண்டுகளில் பல மக்கள் இடம் சிறு படகுகள் மூலம் இடம் பெயரவும், வாணிபத்துக்காகவும் இக்கடலை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லாண்டிக் பெருங்கடல்:

 • அட்லாண்டிக் பெருங்கடல் உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடல் ஆகும். கிழக்கே ஆப்பிரிக்க ஐரோப்பிய நாடுகளும், மேற்கே வட அமெரிக்க, தென் அமெரிக்க நாடுகளுக்கிடையில் அமைந்துள்ளது. உலகின் பரப்பளவில் 20% கொண்டுள்ளது அட்லாண்டிக் பெருங்கடல். சுமார் 155 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் pangea கண்டம் பல கண்டங்களாய் பிரியும் போது உருவானது அட்லாண்டிக் பெருங்கடல்.
 • மார்ட்டின் வால்டுசிமுல்லர் (Martin Waldseemüller) என்னும் ஜெர்மனிய வரைபடவியலாளர், கிரேக்க கடவுளான அட்லாஸ்-ன் (Atlas) பெயரால் இக்கடலுக்கு அட்லாண்டிக் பெருங்கடல் என பெயர் சூட்டினார். மேற்கத்திய மற்றும் கிரேக்க கதைகளில் வரும் அட்லாண்டிஸ் (Atlantis) நாடு /கண்டம் இக்கடலில் தான் இருந்ததாகவும், 5000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் அழிந்து போனதாகவும் சொல்கின்றனர். இதன் பெயராலேயே அட்லாண்டிக் பெருங்கடல் பெயர் பெற்றது என்றும் சொல்கின்றனர். 
 • உலகப்புகழ் பெற்ற டைட்டானிக் கப்பல் இங்கிலாந்திலிருந்து அமெரிக்க செல்லும் வழியில் அட்லாண்டி பெருங்கடலில் மூழ்கியுள்ளது. மேலும் இரண்டாம் உலக போரின் போது பல போர்கள் இங்கு நடந்தேறியுள்ளது. 
 • வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle). இங்கு கடலின் அதீத புவியிசை காரணமாக ஏராளமான கப்பல்கள் மற்றும் விமானங்கள் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது.
 • உலகின் பெரிய முகத்துவாரங்கள் (estuaries) அட்லாண்டிக் பெருங்கடலில் தான் கலக்கிறது. புகழ் பெற்ற பிரேசில் நாட்டு அமேசான் நதியும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் தான் கலக்கிறது.
 • வட அட்லாண்டிக் பெருங்கடலில் மிக பெரிய எரிமலை தீவுகளும் இருக்கிறது.
 • அட்லாண்டிக் பெருங்கடல் ஆண்டுக்கு சுமார் 1.5 அங்குலங்கள் (3.8 சென்டிமீட்டர்) விரிவடைகிறது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.  
 • நீல திமிங்கிலம், சுறாமீன்கள், டால்பின்கள், ஜெல்லி மீன்கள் என பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்களுக்கும் உறைவிடமாக அட்லாண்டிக் பெருங்கடல் விளங்குகிறது.

இந்திய பெருங்கடல்:

 • இந்திய பெருங்கடல் உலகின் மிக மூன்றாவது பெரிய பெருங்கடல் ஆகும். கிழக்கே ஆஸ்திரேலியாவும், மேற்கே ஆப்ரிக்க நிலப்பரப்பும், வடக்கே இந்திய நிலப்பரப்பும் இருக்கிறது. பூமி பரப்பளவில் 20% கொண்டுள்ளது இந்திய பெருங்கடல். சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடைசியாக உருவான கடல் என்று சொல்கின்றனர்.  
 • ஐரோப்பியர்கள் இக்கடலை Eastern ocean (அன்றைய பசிபிக் - Western ocean க்கு எதிர்பக்கம் இருந்ததால்) என்று அழைத்து வந்தனர். சீன கடல் மாலுமிகள், இதனை Western Oceans என்றும் அழைத்து வந்தனர். பழங்கால கிரேக்க புவியலில், இக்கடலை Erythraean Sea என்று அழைத்தனர். 14ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் Indian Ocean என பெயரிடப்பட்டது. இக்கடற்பகுதியில் இந்திய நிலப்பரப்பில் தான் அதிக கடற்கரையை கொண்டுள்ளது; அதனாலேயே இப்பெயர் பெற்றது.  
 • பூமத்திய ரேகை அருகே இருப்பதால் இஃது உலகின் வெப்பமான கடல் என சொல்லப்படுகிறது. வெப்பம் காரணமாக கடல் உயிரிக்கள் வாழ தேவையான உணவு (phytoplanktons) கிடைக்காமல் போகும் என்பதால் மற்ற பெருங்கடலை காட்டிலும் கடல் வாழ் உயிரினங்கள் சற்று குறைவாகவே இருக்கும்.
 • குறைவான கடல்வாழ் உயிரினங்கள் இருந்தபோதிலும், இது குறிப்பாக ஹம்ப்பேக் திமிங்கலத்திற்கு (Humpback Whale) இனப்பெருக்கதிற்கு ஏற்ற இடமாக திகழ்கிறது.
 • இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் அண்டார்டிகா பிரதேசத்திற்கு அருகில் கேர்கைலன் பீட பூமி (Kerguelen Plateau) என்னும் பகுதி இந்தியாவையும் அண்டார்டிகாவையும் இணைத்த பாலம் போன்ற பெரிய நிலப்பரப்பு, கடலில் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மூழ்கி போனதாக சொல்கிறார்கள்.
 • அதே போல லெமுரியா என்னும் கடலில் மூழ்கி போன நிலப்பரப்பு (ஆஸ்திரேலியா, தென் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி ) இந்திய பெருங்கடலில் இருப்பதாக சொல்கிறார்கள். இதனை தமிழர்கள் வாழ்ந்த குமரி கண்டம் என்றும் சொல்கின்றனர்; அதற்கு ஆதாரமாக சில மேற்கோள்களையும் காட்டுகின்றனர். இதை பற்றிய என்னுடைய முந்தைய பதிவை பற்றி படிக்க லெமூரியாவும் குமரி கண்டமும்
 • இந்தோனேஷியா கடல்பகுதிக்கு அருகே Java Trench என்னும் இடம் தான் இந்திய பெருங்கடலில் ஆழமான இடம் (7258 மீ) என சொல்கிறார்கள்.
 • இந்தியாவின் தென்முனையிலிருந்து (குமரி) 1200 கி.மீ தொலைவில் மிக பெரிய ஈர்ப்பு துளை Gravity hole ஒன்று உருவாக்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் 100 மீ வரை கடலின் ஆழம் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 • மசாலா பொருட்கள் (மிளகு, ஏலக்காய், இலவங்கம் முதலியன) வாங்கவும், பட்டு துணிகள், தந்தங்கள், விலையுயர்ந்த கற்கள், கைவினை பொருட்கள், குதிரைகள் என பல்வேறு பொருட்கள் வாங்கவும் spice route, silk route ஆக இருந்த இக்கடற்பகுதி பல்லாயிரம் ஆண்டுகளாகவே பல்வேறு பொருட்களை எடுத்து செல்லவும், வாணிபத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டுளது. சங்ககால பாண்டிய /சேர மன்னர்கள் ரோம் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இந்திய பெருங்கடல் வழி வர்த்தகம் செய்து வந்தற்கான ஆதாரங்கள் உண்டு. அதே போல பல (தெற்காசிய) நாடுகளை போரிட்டு வென்றெடுத்த இராஜேந்திர சோழன் பெரும் கடற்படையோடு, இந்திய பெருங்கடலை தம் கடற்படை கட்டுப்பாட்டில் வைத்திருந்த வரலாற்று பெருமையும் உண்டு. 
 • உலக வர்த்தகத்தில் இந்தியப் பெருங்கடல் பங்களிப்பு பெருமளவில் உள்ளது. பல்வேறு கடல் வர்த்தகத்தின் பாதை மட்டுமல்லாமல் மற்றும் கனிமங்களின் இருப்புகளையும் கொண்டுள்ளது. இந்த பெருங்கடலில் பல எண்ணெய் வைப்புகளும்(oil deposits) உள்ளன. மொத்த உலக எண்ணெய் உற்பத்தியில் 40 % இந்திய பெருங்கடலிலும், கடல் மூலமாகவும் வர்த்தகம் செய்யப்படுகின்றன.
ஆர்டிக் பெருங்கடல்:

 • பூமி பந்தின் மேல் பகுதியில் கனடா, க்ரீன் லாந்து மற்றும் ரஷ்யாவின் வட பகுதியில் அமைந்துள்ளது ஆர்டிக் பெருங்கடல். உலக பெருங்கடலில் மிக சிறியதும், ஆழமில்லாத கடல் ஆர்டிக் பெருங்கடல் ஆகும்.
 • Artikos என்னும் கிரேக்க சொல்லுக்கு 'near the bear' என்று பொருள். மேலும் வட துருவத்தை சுற்றி இருப்பதால் இது ஆர்டிக் பெருங்கடல் என பெயர் பெற்றது.
 • பல காலங்களுக்கு வெயிலோ வெளிச்சமோ படாத காரணத்தால், கடல் வாழ் உயிரினத்துக்கு தேவையான phytoplanktons & zooplanktons என ஏதும் பெரிதளவில் கிடைக்க வாய்ப்பில்லை. 
 • பணிகரடிகள், சீல் என்னும் கடல் சிங்கங்கள் , திமிங்கிலங்கள் என கடல்வாழ் பாலூட்டிகள் அதிகம் இருக்கின்றன.
 • கடலில் மேற்பகுதி பெரும்பாலும் பனியால் மூடப்பட்டிருக்கும். ஆர்க்டிக் பெருங்கடலின் பெரும்பகுதி வட துருவத்தைச் சுற்றி அமைந்திருப்பதாலும், உறைந்த நிலையில் உள்ள நீரினால் இருப்பதாலும், கடலில் முழுமையாக பயணம் செல்ல இயலாது.

அண்டார்டிக் பெருங்கடல்:
 • இதனை Southern Ocean என்றும் அழைப்பார்கள். அண்டார்டிக் கண்டதை சுற்றி இருப்பதால் இது அண்டார்டிக் பெருங்கடல் என பெயர் பெற்றது. 
 • எல்லோருக்கும் தெரிந்தது போல முழுக்க முழுக்க பனிப்பாறைகளால் நிரம்பியுள்ளது அண்டார்டிக் பெருங்கடல்.
 • மனிதர்களால் உருவாக்கப்பட்ட கார்பன் உமிழ்வுகளில் (Carbon Emmisions) 15% இந்த தெற்கு பெருங்கடல் இழுத்து கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

இது போன்ற எண்ணற்ற அதிசயங்களையும், ரகசியங்களையும், பல ஆபத்துகளையும் கொண்டுள்ளது நம் உலக பெருங்கடல்கள். உங்களுக்கு வேறு ஏதாவது செய்திகள் தெரியுமாயின் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம். 

நன்றி !!!
பி. விமல் ராஜ்