வியாழன், 31 டிசம்பர், 2015

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

வணக்கம்,

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

நாளை பிறக்க போகும் இந்த புதிய 2016 ஆண்டு, உங்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும், வளத்தையும் அள்ளி கொடுக்கட்டும் !

happy-new-year-2016-wishes
click to enlarge
வரும் புத்தாண்டில் நம் வீடும், நாடும் எல்லா புகழும், வளமும், செல்வமும் பெற்று சிறந்து விளங்க வேண்டும் என வேண்டுகிறேன்.

2014 ஆம் ஆண்டு முடியும் போது, அடுத்த ஆண்டு (2015-ல்) குறைந்தது 50 பதிவுகளாவது எழுத வேண்டும் என எண்ணி இருந்தேன். ஆனால் 2015 ஆம் ஆண்டில் வெறும் 28 பதிவுகளை மட்டுமே எழுதியுள்ளேன். நேரமின்மை மற்றும் பணி காரணமாக பதிவுகள் எழுத முடியவில்லை.

அடுத்த ஆண்டாவது 50 பதிவுகளை எழுதி விட வேண்டும் என நினைக்கிறேன். அது கூட சந்தேகம் தான் போல. போன வருடத்தை விட, வரும் வருடத்தில் பல புதிய சுகமான பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், முடிந்த அளவு எழுத முயற்சி செய்யல்லாம் என எண்ணி உள்ளேன். என்னை பாராட்டி, ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் பல கோடி!

மீண்டும் Happy New Year !!!

2015 ஆண்டில் பழைய பேப்பரில் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகள் :

ஃபேஸ்புக் அபத்தங்கள் !
http://www.pazhaiyapaper.com/2015/01/facebook-hoaxes.html

அர்த்தமில்லாத வார்த்தைகள் !
http://www.pazhaiyapaper.com/2015/03/meaningless-tamil-words.html

அ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு !
http://www.pazhaiyapaper.com/2015/05/ghost-haunted-places-in-tamilnadu.html

காப்பியடிக்கப்பட்ட கதை !
http://www.pazhaiyapaper.com/2015/06/inspiration-and-copied-tamil-movies.html

தடைகள் 800!
http://www.pazhaiyapaper.com/2015/08/800-porn-sites-ban.html

நம்ம சென்னை 377 !
http://www.pazhaiyapaper.com/2015/06/namma-chennai.html

எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்!
http://www.pazhaiyapaper.com/2015/08/india-before-british-invasion.html

புல்லுக்கு இரைத்த நீர்!
http://www.pazhaiyapaper.com/2015/09/wasted-indian-money.html

கல்லூரி கட்ட பஞ்சாயத்துக்கள் - திணறும் மாணவ / மாணவிகள்!
http://www.pazhaiyapaper.com/2015/10/college-attrocities.html


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 12 டிசம்பர், 2015

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

வணக்கம்,

டிசம்பர் 12 - தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

இது சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் சிறப்பு பதிவு :-)

ஒரு சாதாரண பஸ் கண்டக்டரிலிருந்து ஒரு புகழ் பெற்ற உச்ச நட்சத்திரமாக மாறி, அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். 1980-களில் முரட்டு காளை, பில்லா, போக்கிரி ராஜா, மூன்று முகம் ஆகிய படங்கள் வெளிவந்த போது அவர் கட்-அவுட்க்கு மாலைபோட்டு ஆடியவர்களின் பேரன் வயதுடையவர்கள் தான் இப்போது எந்திரன், லிங்காவுக்கு முன் ஆடுகிறார்கள். மூன்று தலைமுறைகளாக தமிழ் மக்களை காந்த விழியாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்துள்ளார்.


இங்கே ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருமே அவர் ரசிகர்கள் தான். எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்று மன்னனாக, ராஜாதி ராஜாவாக இமயத்தை வென்ற பாண்டியனாக, கோச்சடையானாக  உச்ச நட்சத்திரமாய் இன்னும் மின்னி கொண்டிருக்கிறார். அதற்கு சாட்சி, கபாலி படப்பிடிப்புக்கு போன இடத்தில் அவருக்கு கிடைத்த மலேசியா வரவேற்பு.

கூகிள் இமேஜ் தளத்தில் சென்று "Thalaivar" என டைப் பண்ணி தேடுங்கள். இரு தலைவர்களின் புகைப்படங்களை காட்டும். ஒன்று விடுதலை புலி தலைவர் பிரபாகரன்... மற்றொன்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.

ஒரு சினிமா பிரபலரை பிடித்தவர்கள் என கோடி பேர் இருக்கும் போது, பிடிக்காதவர்கள் என லட்சம் பேராவது இருப்பார்கள். சூப்பர் ஸ்டாரை   பிடிக்காதவர்கள், அவருடைய புகழை வெறுப்பவர்கள், அவரை துதிபவர்களை தூற்றுபவர்கள் என பலர் உள்ளனர். அவர்கள் கேட்கும் கேள்வியெல்லாம் இது தான்...

"தமிழ் நாட்டுக்காக உங்க ரஜினி என்ன செய்தார்???
 தமிழ் மக்களுக்காக உங்க தலைவர் என்ன செய்தார்???
 தமிழ் ரசிகனுக்காக உங்க சூப்பர் ஸ்டார் என்ன செய்தார்??? "

இது அந்த பில்லியன் டாலர் கேள்வி!

தமிழ் ரசிகர்கள் மூலம் சம்பாதிப்பதை ரஜினி வேறு மாநிலங்களில் சொத்து வாங்கி சேர்க்கிறார்; தமிழ் மக்கள் நலனுக்காக ஒன்றுமே செய்யவில்லை;
அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி ஏமாற்றுகிறார்; காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு சாதகமாக பேசுகிறார்; நதிநீர் திட்டத்துக்கு கொடுக்கிறேன் என்று சொன்ன பணத்தை தரவில்லை; அவரது படம் ஓட வேண்டும் என்பதற்காக ரசிகர்களை சந்தித்து பேசி, ஏமாற்றுகிறார். இது போல இன்னும் பல கேள்விகள்/ குறைகள் இருக்கிறது பொது ஆர்வலர்கள் கையில்.

மேலுள்ள கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதிலளிக்கிறேன். நீ யார் பதில் சொல்ல எனக் கேட்காதீர்கள். அவருடைய கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். அவ்வளவே!

* முதலில் ஒரு நடிகரை நடிகராக பார்க்க வேண்டும். சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை. நற்பெயரையும், ரசிகர்கள்  கூட்டத்தையும் அவ்வளவு சீக்கிரம் யாராலும் சம்பாதிக்க முடியாது. அவருடைய நடிப்பும், அமைதியும், பண்பும், வேகமாக வசனம் பேசும் திறனும் அனைவரையும் கவர்ந்தது (ஆரம்பத்தில் தமிழ் பேச தெரியாததால், வேகமாக பேசினார். பின்னாளில் அதுவே ஸ்டைலாகி போனது). அவர் பணியின் மீதுள்ள மரியாதை, நேர்மை காரணமாக இன்று கம்பீரமாக வளர்ந்து நிற்கிறார். இவை தான் தமிழ் மக்களின் மனதில் அவரை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்தது.

* ரஜினி மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என சிலர் சொல்லி வருகின்றனர். தெரியாமல் தான் கேட்கிறேன்... அவர் என்ன செய்ய வேண்டும்??? அவர் நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். நடிப்பு அவரது தொழில். அதை மக்கள் பணம் கொடுத்து பார்க்கிறார்கள். அவர்கள் கொடுத்த பணத்துக்கு தானே படம் பார்கிறார்கள். வேறு என்ன செய்ய வேண்டும் என  எதிர்ப்பார்கிறார்கள் ? தெரியவில்லை... ஒரு நடிகன் ரசிகனுக்கும், ஒரு ரசிகன் நடிகனுக்கும் வேறு என்ன தொடர்பு இருக்க முடியும். நமக்கு பிடித்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்; நாம் ரசிக்கிறோம். இதை தவிர வேறு என்ன செய்ய வேண்டும்... ??? படத்தில் வருவது போல எங்கு தவறு நடந்தாலும் வந்து தட்டி கேட்க வேண்டும் என நினைக்கிறார்களா??? புரியவில்லை.

* ரஜினி தமிழ் நாட்டில் சம்பாதித்த பணத்தை, வெளி மாநிலங்களில் சொத்து சேர்த்து வைக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஹ்ம்ம்..அவர் பணம், அவர் சொத்து.. எங்கு வாங்கினால் என்ன? அது அவர் இஷ்டம். தமிழகத்தில் சம்பாதித்தால் இங்குதான் முதலீடு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா?? அப்படி பார்த்தால், தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் மூலம் பணம் சம்பாதித்த பல தொழிலதிபர்கள் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் சொத்து சேர்த்துள்ளனர். அதை ஒருவனும் கேட்கவில்லையே?


ஆளுக்கு இல்லேன்னா வீட்டுக்கு  ஒரு பத்தாயிரம் கொடுத்தால் அவரை புகழ்வார்களா? இல்லையெனில், வேட்டி சேலை, தையல் மெஷின், பாட புத்தகம், இலவச திருமணம் என சேவை செய்தால் போற்றுவார்களா?? இதை எல்லாம் வழக்கமாய் செய்து கொண்டிருக்கும் நடிகர்களையுமே சேர்த்து தானே திட்டுகிறார்கள்.

* நாட்டுக்காக ரஜினி என்ன செய்தார்? என கேட்கிறார்கள். இந்த கேள்வியை வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளையும், நாட்டை ஆண்டவர்களையும் பார்த்து கேட்காமல் இவரை பார்த்து கேட்டால் என்ன செய்வது ??? ரஜினிக்கா இவர்கள் ஓட்டு போட்டார்கள்? இவரை கேட்டா இலவச பொருட்களை வாங்கினார்கள்??? பிறகு ஏன் ரஜினியை பார்த்து கேட்கிறார்கள் என தெரியவில்லை.

* காவிரி விஷயத்தில் தமிழ்நாட்டுக்காக பேசாமல், கர்நாடகாவுக்கு சாதகமாக பேசுகிறார் என வாதிடுகிறார்கள். அவர் தமிழ் நாட்டுக்கு சாதகமாக பேசினாலோ, குரல் கொடுத்தாலோ, கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாக்கபடுவார்கள். அதற்காக தான் இப்படி இருதலை கொல்லியாக செயல்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.

* தேசிய  நதிகளை ஒன்றாக்க தன் பங்குக்கு ஒரு கோடி தருவதாக சொன்னாரே? ஏன் தரவில்லை என கேட்கிறார்கள் ? முதலில் அந்த திட்டத்தை முறையாக ஆரம்பிக்க சொல்லுங்கள். அப்புறம் பணம் கொடுப்பதை பற்றி கேட்கலாம்.

* ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை பொதுமக்களுக்கு எழுதி தரேன்னு சொன்னாரே? ஏன் செய்யவில்லை என கேட்கிறார்கள். ஹ்ம்ம்.. அவர் தான் உயில் எழுதி வைத்துவிட்டேன் என சொல்லிவிட்டாரே.. பிறகு ஏன் இவர்கள் குடைகிறார்கள் என தெரியவில்லை.

* ரஜினி அவரால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கிறார். டிரஸ்ட் மூலமாகவும் வேறு வாயிலாகவும் செய்கிறார். அதை மேடை போட்டு சொல்வதில்லை.

* அடுத்து அரசியல் - தலைவருக்கு அரசியல் ஆசை இருந்தது. உண்மை தான். ஆனால் எந்திரன் படம் ரிலிசுக்கு முன் ஒரு விழாவிலேயே சொல்லிவிட்டார். எனக்கு அரசியலுக்கு வர பயமாய் இருக்குன்னு.. அப்புறம் ஏனோ தெரியவில்லை, மீண்டும் மீண்டும் இந்த மீடியாக்கள், அவரை அரசியல் கேள்விகளுடன் சுற்றி வருகிறார்கள் என அவர்களுக்கு தான் வெளிச்சம்!

* கடந்த 25 வருடமாக மக்களை ரஜினி ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள். "தமிழ் மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னு சொல்றார்.. ஆனா செய்யல..." என சொல்கிறார்கள். ஹ்ம்ம்...ஒருவர் 25 வருஷமா எதாவது செய்வார்... நம்மளும் எதாவது வாங்கி கட்டி கொண்டு போலாம்னு இருக்கிற மனநிலை உடைய மக்களிடம் என்ன சொல்வது ??????

மொத்தத்தில், இது சூப்பர் ஸ்டாருக்கு வக்காளத்து வாங்கும் பதிவு என்றோ, சப்பைகட்டு கட்டும் பதிவு என்றோ என எண்ணிவிடாதீர்கள். அவருக்கு மட்டுமல்ல... எந்த ஒரு நடிகராயினும், நடிப்பார், பணம் சம்பாதிப்பார், வேலை முடிந்தும் சென்று விடுவார். நாம் படம் பார்த்து, கைதட்டிவிட்டு, ரசித்துவிட்டு போய்விட வேண்டும். அதை விட்டு அவர் ஒன்றுமே செய்யவில்லை என குறை கூறுவது எந்த வகையில் நியாயம்???

யார் என்ன சொன்னாலும் சரி. அவர் பெயர் சினிமா வரலாற்றிலும், தமிழகம் முழுவதிலும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னும் பேசப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.

பின்குறிப்பு- இப்பதிவை படித்தபின் 'பொங்கி' எழுபவர்கள் பின்னூட்டத்தில் பதிவு செய்யமாறு கேட்டு கொள்கிறேன்.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

சென்னை மழை - இரண்டான இரண்டாற்று கரை !

வணக்கம்,

கடந்த ஒரு வாரமாக சென்னையில் அடித்து வாங்கி, மக்களை புரட்டி போட்டது மழை. ஒரே நாளில் 39 செ.மீ மழை;  ஒரு வாரத்தில் 108 செ.மீ மழை; ஊர் முழுவதும் வெள்ளம்; எங்கு காணினும் தண்ணீர் என அல்லோலபட்டது சென்னை மாநகரம். 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழையை பார்த்துள்ளது சென்னை.

கடந்த செவ்வாய் (டிசம்பர் 2) அன்று அதிகாலை ஆரம்பித்த மழை, அன்று இரவு  12 மணி வரை கொட்டி தீர்த்தது. ஏற்கனவே கடந்த வாரங்களில் (தீபாவளி முதல்), பெய்த மழையில் வெள்ள காடாகி போனது சென்னையும் இன்னும் சில மாவட்டங்களும். இதில் மிகவும் மோசமாகி போனது கடலூர், காஞ்சிபுரம் தான். இப்போது  மீண்டும் தொடர் மழையால் மக்களை மிகுந்த துன்பத்துக்கு ஆளாக்கியுள்ளது.

prayforchennai

சென்னையில் உள்ள பெரிய ஏரிகளான புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, போரூர் ஏரி, பள்ளிகரணை எரி, வேளச்சேரி ஏரி, மடிப்பாக்கம் ஏரி ஆகியவை உடைந்து உடைக்கப்பட்டு சென்னையை ஆக்கிரமித்து விட்டது.

ஆற்றங்கரையையும், ஏரியையும் வளைத்து போட்டு வீடு, கல்லூரி, வணிக வளாகம் என சிட்டியாக மாற்றிவிட்டால்.. அது என்ன செய்யும் ??? பிறகென்ன ??? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! 

சென்னைக்கு இரண்டாற்றுகரை என்ற மற்றொரு பெயரும் உண்டு. அடையாறு, கூவம் என இரு ஆறுகள் ஓடுவதால் தான் இப்பெயர். பெருமழையால் இந்த இரு ஆறுகளும் நிரம்பி பெருக்கெடுத்து கரையோர இடங்களை கபளீகரம் செய்துவிட்டது.

மழையால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போனது. வேளச்சேரி, மடிப்பாக்கம், முடிச்சூர், அசோக் நகர், கிண்டி, கோயம்பேடு, ஆவடி, தாம்பரம், ஊரப்பாக்கம், கோட்டூர்புரம், சைதாபேட்டை, மாம்பலம், எழும்பூர், பாரிஸ், போரூர், அடையாறு, பெசன்ட் நகர், சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம்,  வட சென்னையின் பல பகுதிகள் என  கிட்ட தட்ட எல்லா இடங்களும் நீரில் முழுகி போயின. கரையோர ஏரியாக்கள் முழுவதும் முழுகி போய்விட்டது. முக்கிய சாலைகளும், சுரங்க பாதைகளும் நீரில் மூழுகி போய் சென்னை தீவாகவே மாறி போனது.

அத்தியாவசிய பொருட்களுக்கு  தட்டுப்பாடாகி போகவே, அதன் விலைகள் மலைபோல ஏறிபோனது. பால், குடிநீர், மெழுகுவர்த்தி, காய்கறி, உணவு என எதுவும் கிடைக்கவில்லை. பால் லிட்டருக்கு 140 ரூபாய்க்கும், காய்கறிகள்  கிலோ 100 ரூபாய்க்கு விற்கபட்டது.

பலரின் வீட்டில் 2 ஆவது மாடி வரை வெள்ளநீர்  புகுந்து விட்டதால், மக்கள் அனைத்தையும் இழந்து விட்டனர். மின்சாரம், தொலைதொடர்பு என எதுவும் மூன்று நாள் வரை இல்லை. இது வரை 280 பேர் இறந்து விட்டதாக சொல்கின்றனர். தரை, வான் மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது.

அரசின் மீட்பு பணி/  நிவாரண பணிகள் ஏற்கனவே மெதுவாய் நடக்கிறது என பொதுமக்கள் சொல்லி வருகின்றனர். மேலும் இவர்களது அட்ராசிட்டிகள் ஒரு படி மேலே போய், நிவாரண பொட்டலங்களில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி தீவிரமாக நடப்பதாக சொல்கின்றனர். இதை கண்டு பலரும் பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் பொங்கி வருகின்றனர்.


டி.வியில் செய்திகளை உடனுக்கு உடன் தருகிறேன் என சொல்லி விட்டு, மணிக்கு ஒருமுறை போட்ட செய்திகளையே போட்டு காட்டி, சொன்னதையே திருப்பி சொல்லி மக்களை மேலும் பீதிக்கு ஆளாக்குகிறார்கள். தண்ணீர் எங்கு வடிந்துள்ளது, எந்த சாலையில் பயணிக்கலாம், அவசர உதவி எண்கள், பேருந்து வசதி பற்றிய செய்திகளை சொல்லாமல், ஒவ்வொறு ஏரியாவாக சென்று இடுப்பளவு தண்ணீரில் உள்ளவர்களை பேட்டி எடுத்து அவர்கள் துன்பத்தை காசாக்க பார்க்கிறார்கள். ஆளுங்கட்சியின் டி.வி யில்,  அம்மாவின் ஆணைக்கிணங்க, நிவாரண பணிகள் மின்னல் வேகத்தில் நடப்பதாகவும், மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் சொல்லி துதி பாடுகின்றனர்.

chennai-rains

அரசியல்வாதிகள் பொதுமக்களை பார்க்கவரும் போது, மக்கள் அவர்கள் மீது கடும்கோபத்துடன் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஒருவரும் பார்க்க வருவதில்லை... அப்படியே வந்தாலும் கடனுக்கு வந்து ஒரு விசிட் அடித்து சென்று விடுகின்றனர்.

இதற்கிடையில் அவ்வபோது பரவி வரும் சில புரளிகளுக்கும் பஞ்சமில்லை. அந்த ஏரி உடைந்துவிட்டது, இந்த ஏரி உடைந்துவிட்டது, பாலம் இரண்டாகி போனது, முதலை பண்ணையிலிருந்து 20 முதலைகள் தப்பித்து விட்டது, இன்னும் இரு நாட்களில் 250 செ.மீ மழை என நாசா அறிவிப்பு (??!!) ... இன்னும் பல காமெடிகள் வலம் வருகிறது வாட்ஸ் அப்பில்.

இவ்வளவு கொடுமையிலும் ஒரு சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளது. மதம், சாதி, இனம் என எதையும் பாராமல், அனைவரும் ஒருகிணைந்து மக்களுக்கு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வருகின்றனர். தர்காவில் பல இந்து கிறுஸ்தவ மக்களும், இந்து கோவில்களில் பல இஸ்லாமிய மக்களும்  தங்கியுள்ளனர். மதம் பாராமல் மனித நேயத்துடன் உணவளித்து உதவி வருகின்றனர்.

சென்னையில் உள்ள பல தொண்டு நிறுவனங்களும், பல நல்ல உள்ளம் படைத்த மக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கின்றனர்; இன்னும் செய்து கொண்டு வருகின்றனர். மற்ற மாநிலத்திலிருந்தும் அன்புக்கரம் நீட்டப்பட்டு வருகிறது. இச்செய்திகளை நாம் ஊடகங்கள் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய ராணுவமும், தேசிய பேரிடர் குழுவும் சேர்ந்து சீரிய பணியை  ஆற்றியுள்ளது. மீண்டும் ராணுவம் தங்கள் கடமையை செவ்வனே செய்துள்ளது. ராணுவம் மட்டுமல்ல... வலிய வந்து உதவிய இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள், சில மீடியா பிரபலங்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் என இவர்களின் மனிதநேயமிக்க சேவை பணி மகத்தானது. இவர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் !!!

எவ்வளவு தான் நாம் ஒருவரை ஒருவர் அடித்து/தூற்றி கொண்டாலும், ஒரு பிரச்சனை என்று வரும் போது நாம் அனைவரும் ஒன்றுபடுகிறோம் என்ற நினைக்கும் போது மனம் சிலிர்த்து மகிழ்கிறது.

சென்னை மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்த காலம் போக, "எப்படா மழை நிக்கும்?? ", என்ற மன நிலைக்கு வந்து விட்டார்கள். ஆளானப்பட்ட சென்னை மாநகருக்கே இந்த நிலை என்றால், மற்ற மாவட்டங்களின் நிலை???  "ஹ்ம்ம்.. உச்...பாவம்.." என்று சொல்ல தான் முடிகிறது நம்மால்.

"மழையே, போதும் நீ எங்களை சோதித்தது.
சென்று அடுத்த ஆண்டு வா..
நாங்களும் கொஞ்சம் மீண்டு வருகிறோம்... !
#சென்னைமக்கள்  


நன்றி !!!

-பி .விமல் ராஜ்