திங்கள், 27 அக்டோபர், 2014

திரையை கிழித்த கத்தி !

வணக்கம்,

நான் பொதுவாக சினிமா விமர்சனங்களை என் வலைப்பூவில் எழுதுவதில்லை. இதற்கு முன்னால் 'கோச்சடையான்' பற்றி எழுதியுள்ளேன். அதற்கு அடுத்த விமர்சனம் கத்திக்கு தான். சில காலங்களுக்கு முன்னால் வரை, இளைய தளபதியின் படங்களை பார்க்கவே விரும்பியதில்லை. ஒரே மாதிரியான முக பாவனை, கதை, பன்ச்சு வசனங்கள் என கில்லிக்கு பிறகு, விஜயின் எந்த ஒரு படமும் அவ்வளவாக எனக்கு பிடிக்கவில்லை. ஆனால், 'துப்பாக்கி' மற்றும் 'நண்பன்' பார்த்த பிறகு, என் எண்ணத்தை கொஞ்சம் மாற்றி கொண்டேன். மீண்டும் தலைவா, ஜில்லாவில் கடுப்பான நான், இன்று கத்தி பார்த்த பிறகு, இந்த பதிவை எழுதுகிறேன்.

படம் ரிலிஸ் என்று சொன்ன நாள் முதல் எதிர்ப்பு மேல் எதிர்ப்பு. தயாரிப்பு லைக்கா என்பதால், படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று பல தமிழ் இன ஆர்வலர்கள் (?!?!?!?!?) எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசியில் ரிலீசுக்கு முந்துன நாள் லைக்கா பெயரை மட்டும் நீக்கி விடுவதாக கூறி படத்தை வெளியிட்டுள்ளனர்.

சரி... இப்போ படத்துக்குள் வருவோம். ஆரம்பித்த முதல் முக்கால் மணி நேரம், கொஞ்சம் மொக்கையாகவே இருந்தாலும், இடைவேளைக்கு முன் கதைக்குள் வந்துருப்பது நல்ல விஷயம். அவ்வப்போது விஜய், ப்பிளு பிரிண்ட் பார்த்து, பிளான் போடுவது, சில்லறைகளை விட்டேறிந்து அடியாட்களை துவம்சம் செய்வது போன்ற காட்சிகள் மட்டும் லேசாக முதுகை நெளிய வைக்கிறது.

இரண்டு விஜய்க்கும் அழகிய தமிழ் மகனில் வித்தியாசம் காட்டியது போல இல்லாமல், கொஞ்சம் வேற்றுமை காட்டியிருப்பது வரவேற்க்கதக்கது. அமைதியான விஜய், அடிக்கடி கண்சிமிட்டுவது போலவும், சற்றே நடுத்திர வயதுடையவராக காட்டியதும், பறந்து பறந்து அடிக்காமல் எதிரியிடம் அடி வாங்குவது என வேறுபடுத்தி காட்டியுள்ளனர். பட இயக்குனரின் திறமை பொறுத்து தான் விஜயின் நடிப்பு வெளிவரும் என்பதை நீங்களே கத்தியில் பார்க்கலாம்.

டிரைலரில் இரும்பு கம்பியுடன், பைப் லைனில் உட்கார்ந்திருப்பதை பார்த்து, என்ன படத்தில் ஹீரோ ப்பிளம்பரா?  என்று கேலி பேச ஆரம்பித்தனர். ஆனால் படத்தில், அந்த காட்சி வரும் போது  மிகவும் நன்றாகவே இருந்தது. எனக்கு பிடித்த காட்சியும் அதுதான். 


"நம்ம பசிக்கு அப்புறம் சாப்பிடுற ஒவ்வொரு இட்லியும், இன்னொருவருடையது",  என கம்யூனிசம் பேசும் போது ஏ.ஆர். முருகதாஸின் வசனங்கள் தெறிக்கிறது . பிரஸ் மீட்டில் விஜய் பேசும் வசனங்கள் தான் படத்தின் மொத்த பலமே. அதிலே கொஞ்சம் மசாலா தூவப்பட்டிருந்தால், கத்தி எடுத்து நம்மை நாமே குத்தி கொள்ளும் நிலை வந்திருக்கும். நல்ல வேளை! அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

வழக்கம் போல இந்த படத்திலும், ஹீரோயின் சமந்தா நான்கு பாடல்களுக்கு ஆடிவிட்டு, உருகி உருகி ஹீரோவை காதலித்துவிட்டு போகிறார். அவர் வேலை அத்துடன் முடிகிறது. சதீஷ், படம் முழுக்க விஜயுடன் வந்தாலும், சிரிக்கும் படியான காமெடியோ, ஓன்-லைனரோ ஒன்றும் இல்லை. மத்தபடி படத்தில் பாடல்களும் சொல்லி கொள்ளும் அளவுக்கு இல்லை. கத்தி தீம் மியூசிக் மட்டும் படம் முடிந்த பின்னும், நம் காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது.

விவசாய நிலத்தை பிளாட் போட்டு விற்பது, நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பது, கார்ப்ரேட்க்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்துவது, மீத்தேன் வாயு எடுப்பது, விவசாயி தற்கொலை என விவசாயிகளின் கஷ்டங்களை தெளிவாக படம் போட்டு காட்டியுள்ளார். கோகோ கோலா நிறுவனம் தாமிரபரணி ஆற்றில் தண்ணிர் எடுப்பது, கிங் பிஷ்ஷர் விஜய் மல்லையாவை சாடியிருப்பது, 2ஜி ஊழல் என பார்க்கும் எல்லா இடங்களிலும் இயக்குனர் சதம் அடித்துள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் இந்த படம் கண்டிப்பாக பிடிக்காமல் போகாது. 

படத்தை படமாக பார்க்காமல், சிலர் புரட்சியாக பேசுவது போல, விஜய் கோகோ கோலா விளம்பரத்தில் நடித்துவிட்டு, இப்போது அந்த கம்பெனிக்கே எதிராக பேசுவது போல மக்களை எமாற்றுகிறார் என சமூக வலைதளங்களில் அரைகூவல் விட்டு கொண்டிருகின்றனர். இந்த அரைவேற்காடுகளுக்கு வேற வேலையே இல்லை. அதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

தைரியமாக இது போன்ற சமூக கருத்துகளை, சரியான மசாலா கலவையுடன் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு ஒரு "ராயல் சல்யூட்!".
எதிப்பாளர்களையும், கார்ப்ரேட்க்ககளின் முகத்திரையையும் கிழித்து கொண்டு வந்த கத்தி, உண்மையாகவே ஒரு கூரான குத்துவாளாக தான் மக்களிடையே தெரிகிறது.நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

பேய் பயம் !

வணக்கம்,

பேய் இருக்கா இல்லையா? யாரவது பாத்துருக்காங்களா இல்லையா? பேய் எப்படி இருக்கும்? என்ன செய்யும்? இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் சத்தியமாய் இப்பதிவில் பதில் கிடையாது. பேய், பிசாசு பற்றி எதாவது பதிவு  போட வேண்டும் என்று எண்ணம். அதான் எழுதிவிட்டேன்!

"நான் நேத்து கடவுளை பார்த்தேன் !", என்று யாரிடமாவது சொன்னால் "போதையில் உளறாதடா!!" என்று கேலி செய்வார்கள்.  அதுவே "நான் பேயை பார்த்தேன்! " என்று சொன்னால், "அதில் உண்மை இருக்குமா ? இருக்காதா? என்று கூட சிலர் யோசிக்காமல் பீதியுடன் பேதியாவார்கள்.


இந்த பேய் பற்றிய பயம் எப்படி நமக்குள் வந்திருக்கும்? நாம் எல்லோர் மனதிலும் பேய்/பிசாசு  பற்றிய பயம் ஏதோ ஒரு மூலையில் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். இதற்கெல்லாம்  காரணம், நாம் வளரும் முறை தான்.  சின்ன வயசில்,"கண்ணு, சரியா சாப்படலன்னா பூச்சாண்டி புடிச்சுக்கிட்டு போய்டும்"-னு  பயமுறுத்தினாங்க. பிறகு நாமே தொலைக்காட்சிகளிலும், படங்களிலும், போடப்படும் பேய் படங்களை பார்த்து பயந்தோம். "13-நம்பர் வீடு", "உருவம்", "வா அருகில் வா", "யார்?", "ஜமீன் கோட்டை" போன்ற படங்களை, என் சிறு வயதில் நான் பார்த்து ரொம்ப பயந்து போயிருந்தேன். படத்தை பார்த்து விட்டு, மறுநாள் பள்ளியில் திகிலுடன் பேசும் போது பயம் இன்னும் அதிகரிக்கும். அப்படியே வாய்வழி பேய்கதைகளை கேட்டு கேட்டு பேய் பற்றிய பயம் நம்மை ஆட்கொண்டு விட்டது.

சவுக்கு தோப்பிலும், புளியமரத்திலும், பேய்கள் இருப்பதாக கிராமபுறங்களில் சொல்வதுண்டு. கிராமங்களில்தான் பேய், பிசாசு, ஆவி, மோகினி, காட்டேரி  பற்றிய பயமமும், புரளியும் அதிகமாக இருக்கும் என்று நினைத்திருப்போம். இந்த பேய் பற்றி பயம் கிராமங்களில் மட்டுமல்ல, சில நகரங்களில் கூட இருந்து வருகிறது.  ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து துர்மரணத்தில் இறந்தவர், இறந்த பின்னும் அவர் இ -மெயில் ஐ.டி யிலிருந்து, எல்லோருக்கும் தினமும் ஸ்டேடஸ் மெயில் அனுப்பி கொண்டிருக்கிறாராம். அது எப்படி சாத்தியம் என அந்த கம்பெனி நெட்வொர்க் இஞ்சினியர்க்கே புரியவில்லையாம். இது போன்ற பல ஆரம்பமில்லா கதைகள் எல்லா ஐ.டி பார்க்களிலும் ஏதோவோன்று வலம் வந்து கொண்டுதான் இருக்கிறது.

சில நாட்களாக கீழுள்ள காணொளி, சமூக வலைதளங்களில் உலவி வருகிறது. நடுநிசியில் ஓர் அலுவலகத்தில் என்ன கூத்து நடக்கிறது என்று பாருங்கள். ஆனால் இது உண்மையா? பொய்யா? என்று தான் புரியவில்லை.


பேய் புகைப்படம், பேயை தேடி போவது, பேய் ஓட்டுதல் என
வெளிநாடுகளில் பெரும்பாலானோர் இதையே வேலையாக செய்து வருகின்றனர். 

மேலும் பேய் பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும், நடந்து கொண்டு தான் இருக்கிறது. பேய் , பிசாசு போன்ற அமானுஷ்யமான விஷயங்களை பற்றி கதைகளும், கட்டூரைகளும் வந்த வண்ணம் இருக்கிறது. அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று தான் தெரியவில்லை. இணையத்தில் ஆவி/ பேய் பற்றி பலரும் எழுதியுள்ளனர். அதில் நான் படித்த சிலவற்றை உங்களிடம் பகிர்கிறேன்.

பேய்கள் பற்றிய பல உண்மைகள் -பயப்படாமல் படிங்க..

* பேய்கள் உறங்குவதில்லை. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்குமாம்.

* பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும். எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.
* பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும். உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.

* பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.

* பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவர்கள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்களாம்.

* பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும். சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்யும்.

* பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது. எப்பவுமே கோவில்கள், ஆலயங்கள் என வழிபாட்டுத் தலங்களை அண்டியே சுற்றிய படி இருக்குமாம். சிலநேரம் பாழடைந்த கட்டடங்களை அண்டியும் இருக்கும்.

* பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings) உண்டு. ஆனால் உணர (sense) முடியாது.

* பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்.

* பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை செய்ய முடியாது. ஆனால் ஒருவன் தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு.

* பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல. எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.

* பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.

* பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.

* பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.

* பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) ‘O’ (+) அல்லது O’ (–) ஆக இருக்கும். மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்.

* குழந்தைகளாக இறந்து போயிருந்தால் பேய்கள் அல்லது ஆவிகள் தேவதைகள் என அழைக்கப்படுவார்கள்.

* பேய்களால் சும்மா  இருக்க முடியாது. எப்பொழுதும் தங்கள் மேல் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தொந்தரவு செய்த படியே இருக்குமாம்.

* பேய்கள் எப்போதுமே தாங்கள் இறந்துவிட்டதாக நினைப்பது இல்லை. எதாவது ஒன்றை செய்து தான் இறக்கவில்லை என்பதை நிரூபிக்க முயற்சிக்கும்.

* பேய்கள் பல்வேறு விதங்களில் மனிதர்களுடன் தொடர்புகொள்ளுகின்றன.. கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக எழுதுவது, சத்தம், புகை, போன்ற பல்வேறுவகையான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.


*பேயோ,ஆவியோ உங்கள் அருகில் இருக்கும் போது,அறையின் வெப்பநிலை சூடாக இருந்த போதிலும், உங்களுக்கு குளிர்வது போல இருக்கும்.


* பேய்களுக்கு வாசனை மோப்பசக்தி அதிகம். சில வாசனைகளை அவைகள் நுகர்ந்த்து அது பிடித்துவிட்டால் அங்கே தன்னை இருக்க வைக்க முயற்சிக்கும். சில வகை பெர்ஃபியூம் வாசனைகளும் ரொம்ப பிடிக்குமாம்.

* பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது என்றாலும், நள்ளிரவு நேரங்களில் பகலை விட கூடுதலாக அலையும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், பேய்களால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் வேகத்தையும், அதன் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சக்தி நிச்சயமாக உண்டு.

* அமைதியான இடம், நிசப்த்தமான இடங்கள், நேரங்களில் திடீரென சத்தத்தை உண்டாக்கி திகிலூட்டுவது பேய்களுக்கு பிடித்த விஷயமாம்.

* பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக் கோடுகள், மூடுபனி, புகார், கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலான தெரிவது, கரு உருவம், காற்றுத் தூசிகள், காற்று போன்றவைகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும் எப்பொழுதும் வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் சாத்தியம் உண்டு. சலங்கை சத்தம், பெண்குரல் சிரிப்பு போன்ற சினிமாவில் காண்பிக்க படுபவை கூடுமானவரை கற்பனையே.

* கூட்டமாக வருபவர்களுக்கு பேய்கள் தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதில் ஒரு ஆளை தேர்ந்தெடுத்து அவரை மட்டுமே பின்தொடர்ந்து செல்லும்.

* பேய்கள் குழந்தைகள், அல்லது பெண்கள், ஆண்கள் உடலுக்குள் நுழைய முடியும். பேய்களுக்கு நிறை அதிகம் என்பதால் அவைகளுக்கு நிறைய சக்தி தேவை என்பதால் பீடிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். நிறைய சக்தியை உறிஞசி விடுவதால் பீடிக்கப்பட்டவர்கள் நாளடைவில் மெலிந்து போவார்கள்.

* பேய்களுக்கு ஞபாக சக்தி அதிகம். வாழும் காலத்தில் நடந்த உணர்வுப் பூர்வமான விடயங்களை , சம்பவங்களை அடிக்கடி நினைத்து பார்க்குமாம். ஆனால், சாவுக்கு காரணமான சம்பவம் தான் அதிகம் நினைவில் நிற்கும். பழிவாங்கும் எண்ணம் ஏற்பட அதுவே காரணமாகும்.

* குழந்தைகள், மிருகங்களால் பேய்களை அடையாளம் காணமுடியும். மிருகங்களின் மீதும் பேய்கள் இறங்கி அவைகளை தாறுமாறாக செயல்பட வைக்க முடியும்.

* பேய்களுக்கு உதவிசெய்யும் குணம் உண்டு. பல சந்தர்ப்பங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்களை காப்பாற்றி இருப்பதை நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள். பேய்ப் பிடித்தவருக்கே பல சமயங்களில் உதவி செய்த சம்பவங்களும் உண்டு. அவர் குடும்பத்தினரை கூட ஆபத்துகளில் காப்பாற்றியிருக்கிறது. புதையல்கள், கொலைகளில் துப்புகளை கூட காட்டிக்கொடுத்தும் இருக்கின்றனவாம்.

* இருப்பிடத்தை விட்டு வெளியே வராத பேய்களும் உண்டு. ஆனால், அந்த வழியாக யார் வந்தாலும் அவர்களை மட்டும் பயமுறுத்தி வேடிக்கை காட்டும் பழக்கம் பேய்களுக்கு உண்டாம்.

* பேய்கள் இடம்பெயரும்பொழுது பயங்கர காற்று, காற்றுச்சுழல், நீர்நிலைகள் அதிருதல், சுழிகள் உண்டாகுதல், மரங்களை முறித்தல், கதவுகள் தானாக அடிபடுதல் போன்றவை ஏற்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் உண்மை என்றாலும் பயப்பட தேவையில்லை. இவை பேய்களை பற்றி மூட நம்பிக்கையை வளர்ப்பதற்காக எழுதவில்லை. பேய் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் பொழுதுபோக்காக படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.


என்ன.. பேயாவது ..பிசாசாவது என்று நினைத்த உங்களுக்கு, லேசாக குளிர்வது போல இருகிறதா??? நா வறண்டு போன மாதிரி இருக்கிறதா??
அப்படி தான் இருக்கும்.. இதையேல்லாம் படிக்கும்போது அவ்வபோது கொஞ்சம் திரும்பி திரும்பி பார்த்து கொள்ளுங்கள்.  ஏனென்றால் உங்கள் பின்னால் வேறு ஒரு உருவமும் நின்று இந்த பதிவை படித்து  கொண்டு இருக்கலாம்...நன்றி !!!

-பி .விமல் ராஜ்