வணக்கம்,
இது எனது 125 ஆவது பதிவு. கடந்த 9 ஆண்டுகளாக என் எழுத்துக்கு மதிப்பு கூட்டி, எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்!!! 🙏
இரண்டு படம் ஒரே நேரத்தில் வரும் போது, எந்த படம் வெற்றி அடையும் என்ற கேள்விக்கு இரண்டு படமும் வெற்றி அடைய வேண்டும் என்று ஒரு பேட்டியில் பதில் சொல்லியுள்ளார் நம்ம 'ராக்கிங் ஸ்டார்' யாஷ். அதனால் Beast Vs KGF: Chapter 2 என்று தனித்தனியாய் இல்லாமல், Beast & KGF: Chapter 2 என இரண்டு படத்துக்கும் ஒன்றாகவே விமர்சனம் எழுதி விடலாம் என நினைத்தேன். வாங்க விமர்சனத்துக்குள்ளே போவோம். இன்னைக்கி நாம முதல்ல பாக்க போற படம்...
பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வந்துள்ள படம் தான் பீஸ்ட். பர்ஸ்ட் லுக் வந்ததிலிலிருந்து இது வேற மாறி...வேற மாறி... என ரசிகர்களும், இயக்குனரும் மாறி மாறி சொல்லிவந்தனர். ஏற்கனவே வந்த இரு பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் reels போடும் அளவுக்கு போயுள்ளதால், எல்லாரையும் போல நாமும் ரிலீசுக்காக காத்திருந்தோம்.
ஒரு தீவிரவாதி கும்பல் மாலில் உள்ள மக்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்து கொண்டு, அவர்களின் தலைவரை விடுவிக்க கோரி அரசை மிரட்டுகின்றனர். அதே சமயம் மாலில் செக்கூரிட்டி ஆபிஸராக வேலைக்கு போகும் ஒரு முரட்டுத்தனமான முன்னாள் உளவாளி (விஜய்) இருக்க, மக்களை அவர் எப்படி மீட்கிறார் என்பதேயே கதையாக ட்ரைலரில் காட்டினார்கள். இதற்கு முன் இயக்குனரின் டாக்டர் படத்தில் ட்ரைலரில் வேற மாறி கதையும், படத்தில் வேற மாறி டார்க் காமெடியாக காண்பித்தது போல, இதிலும் செய்வார்கள் என நினைத்தேன். ஆனால், அப்படி செய்யவில்லை; நம்மை தான் நல்லா வச்சு செஞ்சுட்டார்கள்.
டிரைலரில் சொன்ன அதே கதை தான். இயக்குனர் நெல்சன் கொஞ்சம் சீரியஸா யோசிச்சு படம் எடுத்திருந்தா செமையா வந்திருக்கும். ஆனா உண்மை என்னன்னா சீரியல் அளவுக்கு கூட யோசிக்கல. ஒரு சில காட்சிகள் தலையில அடிச்சிகிற மாறி எடுத்து வச்சிருக்காங்க. கமர்ஷியல் படத்தில் லாஜிக் பார்க்க கூடாது தான், அதுக்காக இப்படியா நெல்சன் ?
மால் போன்ற பெரிய செட், ஆப்கானிஸ்தான் செட்டெல்லாம் உண்மையிலேயே நன்றாக பிரமாண்டமாக இருந்தது.
அனிருத் இசையில் பாடல்கள் கேட்க ஜாலிலோ ஜிம்கானாவாக இருந்தாலும் இந்த இடத்தில் ஏன் இந்த பாட்டு என யோசிக்க வைக்கிறது. Beast BGM உன்மையிலேயே தாறுமாறு!👌 இப்ப கூட என் காதில் கேட்டு கொண்டே இருக்கிறது.
விஜயின் நடிப்பு மற்றும் ஸ்கிரீன் பிரசன்ஸ் குட். அவர் திரையில் அழகாய் தெரிகிறார். ஆக்ஷன், காமெடி, டான்ஸ், அவருடைய நக்கல், சர்காஸம் என எல்லாம் சரியாக செய்துள்ளார். அவர் ஏன் உளவாளி வேலையை விட்டார், ஏன் இந்த மாலில் உள்ளவர்களை காப்பாற்ற முயல்கிறார் என அதற்கான காரணத்தையெல்லாம் சரியாய் சொல்லிவிட்டு, கதையை சொதப்பி வைத்துள்ளனர்.
நாயகி பூஜா ஹெக்டே எப்போதும் போல சில காட்சிகளுக்கிடையே வந்து போய்விட்டார்.
செல்வராகவன் என்னும் இயக்குனர் அரக்கனை, நடிக்க விட்டுவிட்டு எப்படி டம்மி ஆக்கிவிட்டார் பாருங்கள் என அங்கலாய்த்து கொள்ள வேண்டியது தான்...ஹ்ம்ம்.. அதுவும் அமைச்சருடன் அவர் பேசும் வசனங்கள் எல்லாம் லொள்ளு சபா சந்தானம் - மனோகர் வசனங்களை போல கலாய்த்து கொள்ளு(ல்லு)ம் வசனங்களாக இருக்கிறது. படம் பார்க்கும் போது நாமே அட கண்ணறாவியே என கடுப்பாகி விடுவோம்.
மலையாள நடிகர் டாம் சாக்கோ தீவிரவாதி தலைவனாக, ஹைஜாக் ஆப்ரேஷனை சரியாய் செய்யாமல், குழப்பி கடைசியில் ஹீரோ கையால் சாகிறார்.
யோகிபாபு, டாக்டரில் நடித்த மாகாளி, கிளி, வி.டி.வி கணேஷ் என எல்லோர் பாத்திரமும் வீண். முதல் இரண்டு படங்களில் டார்க் காமெடியில் புகுந்து விளையாடிய இயக்குனர், பீஸ்ட்-ல் நம்ம டிக்கெட் காசில் டார்க் காமெடி செய்துவிட்டார்.
பெரிய நடிகரை வைத்து எந்த புது தலைமுறை இயக்குனர் இயக்கினாலும் இப்படி தான் இருக்கும் போல. நெல்சனின் அடுத்த படம் சூப்பர் ஸ்டாருடன் என யோசிக்கும் போது, இப்பவே என் கண்ணில் நீர் வழிகிறது...🙄😭
இரண்டு நாளாய் கலவையான விமர்சனம் வந்த போதும், யார் சொல்லியும் கேட்காமல், "ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.." என Beast க்கு போய் நான் கடுப்பில் Burst ஆனது தான் மிச்சம். விஜய் ரசிகர்கள் மட்டும் பார்த்த, சிலகிக்க வேண்டிய படம். மற்றவர்கள் இதை படித்தும் பார்க்க ஆசை என்றால், ஒரு முறை பார்க்கலாம்.
கே.ஜி.எஃப்: Chapter 2
கே.ஜி.எஃப் முதல் பாகத்தை தியேட்டரில் பார்க்காத பலர், இம்முறை கண்டிப்பாக தவறவிட்டிருக்க மாட்டார்கள். நானும் தான்! K. G. F: Chapter 1 முழுவதும் ஆக்ஷன், ஆங்காங்கே அம்மா சென்டிமன்ட், ஹீரோ பில்ட்அப் என கலந்து கட்டி கமர்ஷியல் கலவையாக பான் இந்தியா படமாக கல்லா கட்டினார்கள். வசனங்களும், ஒரு சில சிலிர்க்க வைக்கும் காட்சிகளும், வசனங்களும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு போனது.
அதே வேகத்தோடு இரண்டாம் பாகம் இருக்குமா? என்ற மிக பெரிய கேள்விக்குறியோடு படம் பார்க்க சென்றவர்கள், களிப்பு பெருமிததோடு தான் படம் பார்த்து விட்டு போனார்கள். பொதுவாக முதல் பாகத்தின் தாக்காதாலும், வெற்றியினாலும் தான் இரண்டாம் பாகம் எடுப்பார்கள். இங்கு படம் எடுக்கும் போதே இரண்டாக பிரித்து, இரண்டாம் பாகத்துக்கு தனி கதை என ஒரு வித வெற்றி ஃபார்முலாவை வைத்து முயற்சி செய்து, வெற்றியும் பெற்றுள்ளார்கள்.
கருடனை கொல்ல KGF வந்த ராக்கி பாய், தங்கம் இங்கிருந்து தான் எடுக்கப்படுகிறது என அறிந்து அந்த சாம்ராஜ்யதிற்குத் தானே அதிபதி ஆகி விட எண்ணி கருடனை போட்டு தள்ளுவதில் முடியும் முதல் பாகம், அவர் எப்படி அந்த தங்க சுரங்க ராஜாங்கத்தை ஆட்கொண்டார், எப்படி எதிரிகளை விழ்த்தினார், நாட்டிற்கே எப்படி சிம்ம சொப்பனமாக மாறி பின்னர் எப்படி royal death ஆகிறார் என்பதே கே. ஜி. எஃப்: Chapter 2 வின் கதை.
முதல் சீனிலேயே ராக்கியின் அம்மா வந்து கதை சொல்லுகிறார் (பிளாஷ் பேக் கட்). அது தான் கிளைமாக்ஸாக இருக்குமோ என நினைத்தேன். அதேதான்... பின்வரும் நாளில் விட்ட இடத்திலிருந்து இன்னொரு புதையல் வேட்டை கதை எடுக்க வாய்ப்புண்டு. படம் பார்ப்பவர்களுக்கு புரியும்... 😉
யாஷ் பெரிய ராஜாங்கத்தை கட்டி ஆளும் தாதா /கிரிமினல் சுல்தானாக வந்து கம்பீரமாய் செல்கிறார். சண்டை காட்சியிலும், அம்மா பாசத்தை காட்டும் போதும் அதகள படுத்தியிருக்கிறார். படம் முழுக்க கோட் சூட்டுடன் எப்போதும் கையில் பாட்டிலோடு வந்து, எதிர்பவர்களையெல்லாம் மிஷின் கன்னால் டுப்..டுப்..டுப்..டுப் என சுட்டு தள்ளி விடுகிறார். மிச்சம்வர்களை ஒரே அடியில் மட்டையாக்கி விடுகிறார். "என்னை வெல்பவன் எவனடா?" என கெத்து காட்டியுள்ளார். ஆரம்பித்தது முதல், படம் முழுக்க ராக்கி பாய் பன்ச் பேசி கொண்டே இருக்கிறார். வில்லன்ஸ் குரூப் வேறு ஹீரோக்கு பில்டப் கொடுத்து கொண்டே போகின்றனர். அதை மட்டும் கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.
சஞ்சய் தத் மெயின் வில்லன் அதிராவாக வந்து மிரட்டுகிறார். பல முறை அடிபட்டு, சாகும் அளவுக்கு போய், பீனிக்ஸ் பறவை போல திரும்பி வந்து ஹீரோவை எதிர்த்து கடைசியில் இறக்கிறார். பிரகாஷ் ராஜ் அவரது தந்தை இடத்தில் இருந்து கொண்டு கே. ஜி. எஃப் -ன் கதையின் இரண்டாம் பாகத்தை நமக்கு சொல்கிறார். மற்ற கமர்ஷியல் பட ஹீரோயின் போல சில காட்சிகளுக்கு மட்டும் வந்து செல்லாமல், வசனம் நிறைய இல்லையென்றாலும் படம் முழுக்க அழகாக வலம் வந்து கிளைமாக்ஸ் சண்டைக்கு காரணமாகி இறக்கிறார் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி. Chapter 1ல் முகம் காட்டாத ரவினா டன்டன், இதில் பிரதமர் ரெமிகா சென்னாக வந்து கம்பீரமாய் போகிறார். பெரிய கம்பேக் ரோல் தான். இன்னும் Chapter 1 -ல் நடித்த பலர் இதிலும் வந்து போயுள்ளனர்.
சவ சவ என இழுத்து கொண்டே போகும் படத்தின் முதல் பாதி, இண்டர்வெலில் சூடு பிடித்து "அட!" போட வைக்கிறது. இரண்டு மூன்று காட்சிகளில் "செம்ம டா" என சொல்லி நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். உண்மையிலேயே படத்தை ரசிக்கும் படியாக, மாஸாக கொடுத்து யாஷ்க்கு மேலும் மாஸ் கூட்டியிருக்கிறார்.
முதல் பாகம் போல KGF சுரங்கமும், மாளிகையும் தான் இதிலும் வருகிறது. படம் முழுக்க தூசும், மண்ணும், தெறிக்கும் புல்லட்டும் தான் பறக்கிறது.
அடப்பாவிகளா.. இப்படியெல்லாம் செய்ய முடியுமா? எங்காவது நடக்குமா?? என லாஜிக் பார்க்க முடியாத, பக்கா south indian மசாலா காட்சிகளாக சில இருந்தாலும், கதையின் ஓட்டத்தில் புல்லட்டை விட வேகமாய் கடந்து மறைகிறது.
மொத்தத்தில் KGF: CHAPTER 2 என்னும் அதிரடி மாஸ் மசாலாவை அலுப்பு தட்டாமல் மீண்டும் கொடுத்திருக்கிறார்கள் கன்னட சந்தன கட்டைகாரர்கள் (Sandalwood).😁
நன்றி!!!
பி.விமல் ராஜ்