self லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
self லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

தவறவிட்ட தருணங்கள் !!!

வணக்கம்,

முதல் வேலை. முதல் சம்பாத்தியம். அனைவருக்கும் மறக்க முடியாத ஒன்று. எனக்கும் தான். என்னதான் இப்போது நல்ல வேலையில் இருந்தாலும், நமக்கு கிடைத்த முதல் வேலையை யாராலும் மறக்க முடியாது.

சென்ற வாரத்தில் ஒரு நாள் 'ராஜா ராணி ' படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்தேன். அதில் வந்த கால் சென்டர் (Call Center)  சம்பந்தப்பட்ட காட்சிகளை  பார்க்கும் போது நான் டாடா டோகோமோ கஸ்டமர் கேரில் (TATA DOCOMO Customer Care) வேலை செய்தது நினைவில் வந்தது. பணியின் போது நடந்த சில சுவாரசியமான சில நிகழ்வுகளை உங்களிடம் பகிர்கிறேன். கொஞ்சம் பெரிய பதிவாகவே இருப்பதால், பொறுமையாக படிக்கவும்.

ஏற்கனவே 2009-2010-லேயே பிலாசபி பிரபாகரன் கால் சென்டர் அனுபவம் பற்றி இரண்டு மூன்று பதிவுகள் போட்டுவிட்டார். நானும் பிரபாவும் ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் வேலை செய்துள்ளதால், அவர் அரைத்த மாவையே நானும் அரைக்க வேண்டாம் என எண்ணி, அவர் தவற விட்ட தருணங்களின் தொகுப்பை உங்களிடம் பதியவிருக்கிறேன்.

சரி, இப்போது கால் சென்டருக்குள் வருவோம்...

என் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் வேலை இல்லாமல் வீட்டில் வெட்டியாக இருந்து விட்டு, Allsec Technologies-ல்  வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக (Customer  Care Executive) வேலைக்கு சேர்ந்தேன். தமிழ் நாட்டில் டாடா டோகோமோ வாடிக்கையாளர்கள் 121 (டோல் ப்ரீ-விட்டு விட்டால்  FE ) எண்ணை டோகோமோ சேவைக்காக அழைத்தால், நாங்கள் தான் எடுப்போம். என்னை போலவே ஏறக்குறைய 250 முதல் 400 ஆபிசர்கள் சேவை அழைப்பில் வேலை செய்வார்கள்.


Call Center- கோப்பு படம்
பெரும்பாலும் கால் சென்டரில் வேலை செய்பவரென்றால் 20 முதல் 30 ஆயிரங்களில் சம்பளம் வாங்குவார் என்றும், காதில் ஹெட் போன் 
(head phone) வைத்து கொண்டு வெள்ளைக்கார வாடிக்கையாளரிடம் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி கொண்டு, விடுமுறை நாட்களில் பப், பார், என கூத்தாடுபவர்கள் என்றும், இரவு நேர வேலை மட்டுமே பார்பவர்கள் என்றும்   நினைக்கும் சமூகத்தில் தான் நாம் இன்னும் வாழ்ந்து வருகிறோம்.

மேற்கண்டவை எல்லாம் சில சர்வதேச அழைப்பை
(International Calls) எடுக்கும்/ பேசும்
சேவை மைய அதிகாரிக்கு தான் பொருந்தும். உள்ளூர் அழைப்பில் (Domestic Calls) பேசும் அதிகாரிக்கு சுத்தமாக சேராது.

மேலும் என்னை போன்ற டொமெஸ்டிக் கஸ்டமர் கேரில் வேலை செய்யும்/ செய்த
சேவை மைய அதிகாரிகள், முதல் மாத சம்பளமே ரூ. 6000/ தான் வாங்குவார்கள். முக்கால்வாசி பேர் வெளியூரில் இருந்து வந்து வேலை செய்பவர்கள். இங்கு பணிபுரியும் மார்டன் பெண்கள் சிலர் கார்மென்ட் கம்பெனிகளில் வேலை செய்யும் பெண்களை போல புடவையும்/ சுடிதாரும் மட்டுமே அணிந்து வருவார்கள்.

கம்பெனியில் சேர்ந்தவுடன் ட்ரைனிங்-ல் (Training) முதலில் சொல்லி தருவது, "இங்கு யாரையும் சார் என்று கூப்பிட வேண்டாம்; பெயர் சொல்லி அழைத்தாலே போதும்" என்பதுதான். 20 நாள் ட்ரைனிங் நன்றாக முடிந்து, எங்களது சேவை பணியை ஆரம்பித்தோம். நானும் சராசரியாக 16 மாதங்களில் 1 லட்சம் கால்களுக்கு மேல் எடுத்துருப்பேன். "இவனுங்களுக்கு எங்கேருந்து தான் வருமோ இந்த மாதிரி சந்தேகமெல்லாம்???? " என்றும் என்னும் அளவுக்கு கடுப்பகிவிடும். சில நேரங்களில் கஸ்டமர் தெரிந்து பேசுகிறானா? இல்லை புரியாமல் உளறுகிறானா? அல்லது நாம் தான் தப்பாக  சொல்கிறோமா? என்று கூட  நமக்கே சந்தேகம் வந்துவிடும்.


அதில் சில விஷமிகள் வேண்டுமென்றே போன் செய்து கலாய்த்து விட்டு போவார்கள். இன்னும் சிலர் அவர்கள் குறை தீராததால் புரிந்தும்
புரியாமலும் கன்னா- பின்னா என  கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு போவர்கள். கஸ்டமர் கேர் வரும் கால்களில் 30% கால்கள் இது போன்ற கால்கள் மட்டுமே!

அதுவும் குறிப்பாக சனி,ஞாயிறுகளிலும், டிசம்பர் 31 இரவிலும், முழு நாள் மின் வெட்டின் போதும், பண்டிகை தேதிகளிலும், கால்கள் எக்கச்சக்கமாக வரும். டிசம்பர் 31-ல் முழு இரவும் விடிய விடிய வாடிக்கையாளரிடம் பேசி சந்தேகத்தை தீர்த்து வைத்ததுண்டு.


"என் அக்கௌன்ட்-ல் (account) 0.55 பைசாவை பிடித்து விட்டர்கள் ! இப்போதே கொடுக்க வேண்டும்" என்று முக்கால் மணிநேரமாக திட்டி அடம் பிடித்து, பின்னர் ஹோல்ட்-லேயே (Hold) வைக்கப்பட்டு காணாமல் போன வாடிக்கையாளர்களும் உண்டு. (முடிந்தால் கொடுக்க மாட்டோமா??) 


புதிதாக வேலை செய்பவர்களுக்கு இந்த ஹோல்ட் மற்றும் ஆக்ஸ் (Aux  - Stopping calls)  இல்லையென்றால் அவ்வளவு தான்.. வாடிக்கையாளரின் கேட்கும் கேள்விகள், அருகில் இருபவரிடம் சந்தேகங்களை  நிவர்த்தி செய்தல், சற்று நேரம் ஆசுவாச படுத்தி கொள்ளுதல் என பல வசதிகள் உண்டு.  

கால் சென்டரில் வேலை செய்த போது (எங்களுக்கும்) எனக்கும், வாடிக்கையாளர்களுக்கும், நடந்த சில நகைச்சுவை உரையாடல்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.


****************************உரையாடல் 1*************************************

வாடிக்கையாளர்: சார்! நான் மதுரை மாவட்டம், தல்லாகுளத்திலிருந்து பேசுறேன்.

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: சொல்லுங்க சார். உங்களுக்கு என்ன தகவல் வேணும்?


வாடிக்கையாளர்: பஸ் ஸ்டாப்லிருந்து வீட்டுக்கு சைக்கிளில் போய் கொண்டிருக்கும் போது, டயர் பன்சர் ஆயிடிச்சி..நீங்க பன்சர்  போடா இங்க ஆள் அனுப்ப முடியுமா?????  

  
வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: மன்னிக்கணும் சார்.. அது  மாதிரி எல்லம் எங்களால செய்ய முடியாது..  டாடா டோகோமோ பற்றி கேளுங்க சார்.


வாடிக்கையாளர்: அதெல்லாம்  வேண்டாம்...பன்சர் போட ஆள் அனுப்பு. இல்லாட்டி நீ வந்து பன்சர் போடு...


வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ???!?!? 

**********************************உரையாடல் 2*******************************

வாடிக்கையாளர்:சார்.. நான் மலர்விழி பேசுறேன். என் நம்பருக்கு PIN (PUK) நம்பர் வேண்டும்.

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ஓகே மேடம். கண்டிப்பாக சொல்றேன். உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க..

வாடிக்கையாளர்: 9600...

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: உங்களுக்கு எந்த நம்பருக்கு (PUK) நம்பர்  வேணுமோ அந்த நம்பரை  சொல்லுங்க மேடம்..


வாடிக்கையாளர்: இந்த நம்பர் தான்.. 9600453..

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: இது டோகோமோ நம்பர் இல்லையே..

வாடிக்கையாளர்: ஆமாம்..என் Airtel  நம்பருக்கு தான் (PUK) நம்பர் வேணும்.

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: அதுக்கு ஏன் எங்களுக்கு கால் பண்ணீங்க  மேடம் ???

வாடிக்கையாளர்: என் Airtel நம்பருக்கு தான் PUK நம்பர் வேண்டும்.. அது தான் லாக் ஆயிடிச்சி.. அதுனாலதான் டோகோமோ  நம்பரிலிருந்து 121 கால் பண்ணேன்..

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ?????    


**********************************உரையாடல் 3*******************************

வாடிக்கையாளர்: சார் .. உங்க டோகோமோ SIM ல டைம் கரெக்டா காட்ட மாட்டேன்கிது..

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ஓகே சார் கண்டிப்பா உங்களுக்கு உதவுறேன்... உங்க பிரச்சனை என்னனு சொல்லுங்க சார்..

வாடிக்கையாளர்: உங்க டோகோமோ சிம்மை என் செல்போனில் போட்டால் மொபைலில் டைம் தப்பா காட்டுது..

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: மன்னிக்கணும் சார்..அது மாதிரியெல்லாம் இருக்காது...உங்க மொபைல் ப்ரோப்ளமாக இருக்கலாம்...

வாடிக்கையாளர்: யோவ்...எனக்கு தெரியாதா... உங்க சிம் போட்டால் தான் பிரச்சனை...

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ?????


**********************************உரையாடல் 4*******************************
 
வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: வணக்கம் உங்கள் சேவைக்காக விமல்!!!

வாடிக்கையாளர்: சார்.. மேரா நாம் சஞ்ஜெய் பிஸ்வாஸ்.. மேரா மொபைல் மே காலர் ட்யூன் கேள்...     

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: சாரி சார்..எனக்கு ஹிந்தி தெரியாது...முஜே ஹிந்தி நெய் மாலும்.. ஆப் 121 மே கால் கரோ; அவுர்  3 தபாயா ;  அவுர்  2 தபாயா ; Thank You சார்..

(தடம் மாறி வந்த ஹிந்தி வாடிக்கையாளர்களுக்கு பிரத்யோகமாக உபயோகபடுத்தும்  உரை(script) )

வாடிக்கையாளர்: நெய் சார்..என்னக்கு தமில் தெரியும்..  நீங்கோ பேசுஙொ சாப்..  

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ???.. (கடுப்பாகி ) சாரி சார்.. உங்க side la proper response இல்லாததால் இந்த கால் disconnect செய்யபடுகிறது.. டாடா  டோகோமோ அழைத்ததற்கு நன்றி..


வாடிக்கையாளர்: சார்.. சார்.. சார்.. 

**********************************உரையாடல் 5*******************************
  
வாடிக்கையாளர்: சார் !! என் account-ல amount குறைஞ்சு போச்சு...

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: மன்னிக்கணும் சார்...கண்டிப்பா உங்களுக்கு உதவுறேன்...  நான் செக் பண்ணி சொல்றேன்... ...நான் செக் பண்ணதுல நீங்க இன்டர்நெட்-ல browsing பண்ணியிருக்கீங்க.. அதான் இருபது ரூபாய் எடுத்துட்டாங்க..

வாடிக்கையாளர்: நான் use பண்றது நோக்கியா 1200. அதில எப்படி சார்
browsing???

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: இல்லை சார். நான் செக் பண்ணதுல நீங்க இன்டர்நெட் -ல browsing பண்ணியிருக்கீங்க -ன்னு தான் காட்டுது..

வாடிக்கையாளர்: நோக்கியா 1200-ல் எப்படி சார் முடியும்????


வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: சிம் வேற போன்-ல கூட போட்டு browse பண்ணலாம் சார்..

வாடிக்கையாளர்: என் கிட்ட வேற போன் கிடையாது  சார்...போன்- சுத்தி டேப் ஒட்டி இருக்கு.. இதுல போய் எப்படிங்க  முடியம்..

(20 நிமிட உரையாடலுக்கு பின் )


வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: சார் நான் செக் பண்ணி பார்த்ததுல நீங்க SAMSUNG GT-S3850-ல browse  பண்ணதா காட்டுது...

வாடிக்கையாளர்: சரி..SAMSUNG CORBY ல
browse பண்ணேன்னு சொல்றீங்களா??? ஓகே... (கால் கட்டாகி விட்டது ).....

*****************************************************************
 
 
இந்த மாதிரி கஸ்டமர்கள் இருந்தால் எல்லா அதிகாரிகளும் "ராஜா ராணி" படத்தில் வரும் ஜெய் போல அழ வேண்டியது தான்... படிக்கும் போது சில உரையாடல்கள் மொக்கையாக இருந்தாலும், அந்த நேரத்தில் சிரிப்பும், எரிச்சலும் தான் நமக்கு வரும்.


உடன் வேலை செய்பவர்கள் / நண்பர்கள் - ஆறு மாதத்தில் பல தர பட்ட மனிதர்களை நீங்கள் இங்கு பார்க்கலாம். ஹிந்தி பேசும் வாடிக்கையாளர்களிடம் பேசும்  ஹிந்தி அதிகாரிகள், மாறுப்பட்ட டீம் லீடர்கள்/ முறுக்கி கொள்ளும் மேனேஜர்கள், எல்லாம் தெரிந்தது போல காட்டி கொள்ளும் சில சீனியர் அதிகாரிகள் என பலதரப்பட்ட மக்கள்  உண்டு. அவ்வப்போது குவாலிட்டி அனலிஸ்ட்களின் (QA) அலும்பல்கள் வேறு. 

ஆனால் இந்த மாதம் நமக்கு அருகில் உட்கார்ந்து அழைப்பு எடுத்தவன் (வேலை செய்தவன்), அடுத்த மாதம் இருக்க மாட்டான். சம்பளம் வாங்கியவுடன் சொல்லாமல் ஓடிவிடும் பழக்கம் சில கால் சென்டர்களில் இன்னும் உள்ளது.

அல்செக்-ல் பல நல்ல நண்பர்கள் எனக்கு கிடைத்த போதும், சரியான தொடர்பு வைத்து கொள்ளாததால் ஒரு சிலர் தவிர யாரும் இப்போது தொடர்பில் இல்லை. இதில் ஒரே ஒரு நல்ல விஷயம். இவர்களில் பெரும்பாலானோர் இப்போது முகநூலில் நண்பர்களாக  இருக்கின்றனர்.    

இந்த பதிவை படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் கஸ்டமர் கேருக்கு கால் செய்யும் போது, உங்களிடம் பேசும் கஸ்டமர் கேர் ஆபீசர்களிடம், உங்கள் வீண் ,வெட்டி ஜம்பத்தை காட்ட வேண்டாம். உங்கள் அக்கௌன்ட்-ல் பணம் குறைவது, புது சர்வீஸ்கள் ஆக்டிவேட் செய்வது, இவை பற்றியெல்லாம் சத்தியமாக அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. இருப்பதை பார்த்து, படித்து சொல்பவர்தான் தான் அவர்கள். உங்கள் பணம் / சேவை வேண்டும்/ வேண்டாம் என்றாலோ நீங்கள் அவர்களிடம் கடிந்து கொள்ள வேண்டாம். பொறுமையாக பேசியோ/ மின்னஞ்சல் செய்தோ சரி செய்து கொள்ளலாம் .  

இப்போதும் கூட இதற்கு முன்னால் அல்செக்-ல் நான் இப்படி இருந்தேன்; அப்படி இருந்தேன்; என கூறி சக நண்பர்களிடம் பெருமைபடுவதும் உண்டு. சம்பளம் குறைவாக இருந்தாலும், நல்ல சுற்றுவட்டாரமும், நண்பர்களும் இருந்தால் யாரும் வேலையை விட மாட்டார்கள். சூழ்நிலை காரணமாக, அந்த வேலையைவிட்டு விட்டு, தற்போதுள்ள வேலைக்கு தாவி விட்டேன். மாறி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆனாலும், இன்றும் அந்த கால் சென்டர் வேலை, தவறவிட்ட தருணங்களாகவே என் மனதில் இருக்கின்றன.   



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 17 மார்ச், 2013

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா !!!

வணக்கம், 

எல்லோர்க்கும் அவர்களுடைய சொந்த ஊரை பற்றி மற்றவருக்கு சொல்ல வேண்டும் என ஆசை உண்டு. எனக்கும் தான். அதை பற்றி தான் இங்கு பதிய போகிறேன். நான் பிறந்து வளர்ந்தெல்லாம் சிங்கார சென்னை என்றாலும் எனது அப்பா, தாத்தா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரு சிறு கிராமத்தில் தான். கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் நன்னிலத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சேங்கனூர் என்னும் குக்கிராமம்.  

ஊர் பேர் சொன்னவுடன் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு பிரபலம் இல்லை என்றாலும், எங்கள் ஊரில் உள்ள சோமநாத சுவாமி கோவில் அந்த வட்டாரத்தில் மிகவும் பிரச்சியத்தம்.  சேங்கனூரிலிருந்து சற்று தூரத்தில் உள்ள திருவாஞ்சியம் ஊரில் உள்ள சிவன் கோவிலும் மிகவும் பிரபலம். திருவாஞ்சியத்தில் சிவபெருமான் தான் மூலக்கடவுள் என்றாலும் எமதர்மராஜனுக்கு தனி சன்னதி இங்கு மட்டும் தான் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இங்கு வந்து சென்றுள்ளனர்.   

சிறு வயது முதல் நகர வாழ்க்கையை பார்த்து வளர்ந்த நான், எங்க ஊருக்கு செல்வது என்பது மிகவும் பிடித்தமான விஷயம். பொதுவாக குலதெய்வ வழிபாட்டிற்காகவோ அல்லது எங்கள் வீட்டு சுட்டிகளுக்கு மொட்டையடித்து காது குத்தவோதான் ஊருக்கு செல்வோம் (எனக்கும் அங்குதான் !!!). முன்பெல்லாம் ஊருக்கு போகும் போது, சேங்கனூர் பேருந்து 
நிலையத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து போக மாட்டு வண்டி வரும். அதில் வைக்கோல் 'குஷனில்' உட்கார்ந்து கொண்டு வண்டி குலுங்க குலுங்க வீட்டுக்கு செல்வோம். ஆனால் இப்போதெல்லாம் நங்கள் வரும்முன் சித்தப்பாவின் கார் வந்துவிடுகிறது.

சினிமாவிலும்,கதைகளிலும் நான் பார்த்த கிராமங்களை போலவே, இங்கும், கண்ட இடமெல்லாம் பச்சை பசெலன வயல்வெளி,தண்ணீர் நிறைந்த குளம், வரிசையாக தென்னை மரங்கள், ஓட்டு வீடு, கூரையின் மீது மயில், வைக்கல்போர்,பெரிய கொல்லை, முங்கில் காடு, மாந்தோப்பு, ஒத்தை மரத்து பாலம்,மாட்டுவண்டி, டிராக்டர் , கதிரறுக்கும் இயந்திரம் என நகர வாழ்க்கையில் பார்த்திராத காட்சிகள். சிறு வயதில் என் தம்பி 
தங்கையருடன் வைக்கோல் போரிலும், மாட்டுவண்டியிலும்  ஏறி விளையாடிய நாட்களும் உண்டு.   

சேங்கனூரைப்  பற்றி மேலும் சொல்ல வேண்டுமானால், இங்குள்ள மக்கள்  மற்ற கிராமங்களை போல விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். பெரியார் காலத்தில் ,பெரும்பாலானோர் திராவிட கழகத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் இந்த ஊரில் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய இந்து பண்டிகைகளை விமர்சையாக கொண்டாடுவதில்லை என் சொல்கிறனர். இன்னும் சிலர், சில ஆண்டுகளுக்கு முன் தீபாவளியன்று ஊரில் உள்ள பெரிய வீட்டு பெரியவர் ஒருவர் இறந்ததால், அதிலிருந்து நம் ஊருக்கு தீபாவளி இல்லை என என் பாட்டி சொல்லி கேட்டதுண்டு. உழவர் திருநாளாம் பொங்கல் விழாவின் பொது மட்டும் ஊரே களைக்கட்டும். கோவிலில் விசேஷ பூஜை, பெரியவர்கள் முதல்  சிறியவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனியே விளையாட்டு போட்டிகள் என கொண்டாடி மகிழ்வர். 

மாட்டு பொங்கலின் போது காளைகளை அலங்கரித்து தெருக்களில் ஓட விடுவார்கள். அவ்வளவுதான் எங்க ஊர் ஜல்லிகட்டு. அதுமட்டுமல்ல மாட்டு பொங்கலன்று பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கினால், ஆசியோடு, பரிசாக பணமும் தருவார்கள் (எனக்கு இதுதான் ரொம்ப பிடித்தது!!!).



சமீபத்தில் நாங்கள் குல தெய்வ வழிப்பாட்டிற்காக ஊருக்கு சென்றிருந்தோம். சுற்றி பார்க்கும் போது தங்களுடைய நிலத்தில் சவுக்குத்தோப்பு போட்டிருப்பதாக என் சித்தப்பா கூறினார். நேரில் சவுக்குத்தோப்பை பார்க்காத நான் அதை காண தயாரானேன். அந்த உச்சி வேலையிலும் வெயிலே தெரியாமல் ரம்மியமாக இருந்தது. தரையில் சவுக்கை மர இலைகள் கிழே விழுந்து தார்ப்பாய் போல விரிந்திருந்தது. நான் சுற்றி பார்க்கும் போதே என் தம்பி சவுக்குத்தோப்பை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து கொண்டிருந்தான். காற்று அடிக்கும் போது மரங்கள் ஆடுவது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. 

அடுத்தது எங்கள் குலதெய்வ கோவில். கோவில் என்றவுடன் அடுக்கு கோபுரமும்,கலசமும், பெரிய தூண்களும் இருக்கும் 
என்றோ,அல்லது  வெட்டவெளியில் ஆறடி உயரத்தில் வீச்சரிவாளோடு நிற்கும் காவல் தெய்வமோ என்று எண்ணி விட வேண்டாம். ஊருக்கு வெளியே, வயல்களுக்கு நடுவே  சிறிய திட்டு,அதில் ஒரு சிறு அம்மன் கோவிலும், அதனருகே அலுமினிய கூரையின் கிழ் ஒரு முழு செங்கல் அளவுள்ள கருங்கல்லை முக்கால்வாசி மண்ணில் புதைத்து,வெள்ளை துணியால் சுற்றி, சந்தனம்,குங்குமம் வைத்து இது தான்  நம்ம குலசாமி வீரன் என்று சொல்லுவர். ஒவ்வொரு முறையும் பூஜை போடும் போது , கிடவோ/கோழி கறியோ வைத்து கும்பிடுவார்கள் என நினைப்பேன். ஆனால் அதெல்லாம் நமக்கு பழக்கம் இல்லை என கூறி வெறும் மாவிளக்கும், பொட்டுகடலையும் வைத்து படைத்தது விடுவார்கள்.


வீரன் கோவில் 
என்னதான் விழுந்து விழுந்து வர்ணித்தாலும் இரண்டு நாட்களுக்கு மேல் அங்கு இருந்தால் நமக்கு பொழுது போகவே மாட்டேன்கிறது. என்ன இருந்தாலும் சென்னையிலேயே இருந்து விட்டு கிராமத்திற்கு சென்றால் இரண்டு,முன்று நாட்களுக்கு மேல் இருக்க நமக்கு தறி கொடுக்காது.     

மீண்டும் வரும் பொங்கலுக்கு ஊருக்கு போக வேண்டும் என அப்பா சொல்லி வருகிறார். கால நேரம் சரியாக இருந்து ஜனவரியில் ஊருக்கு போனால், பொங்கல் கொண்டாட்டத்தை பற்றி விவரமாக எழுதுகிறேன்.  

நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 

செவ்வாய், 5 மார்ச், 2013

எனது வலைப்பயணம்


வணக்கம் !!!


எனக்கு எப்படி வலைப்பதிவு (blog) ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது என்பதை உங்களிடம் பகிர்கிறேன்.  கல்லூரி பருவம் முதல் (Web Designing) வெப் டிசைனிங், (blog) பிளாக் ஆகிய விஷயங்களில்  மிகுந்த  ஈடுபாடு.பெரிதாக இல்லாவிட்டாலும் கூட ,சாதாரண HTML பைல் ஒன்றை எழுதி அதற்கு இணைப்பு (link) கொடுத்து மகிழ்வேன். என்ன பதிவை போடுவது , எதை பத்தி எழுதுவது  என தெரியாமல் பிளாக்/ வலைத்தளம் உருவாக்கும் ஆசையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன்.

கல்லூரி படிப்புக்கு பிறகு, ஒரு தனியார் Call Center-ல் இரவு நேர வேலையில்  (நைட் ஷிப்ட் )  வேலை  செய்யும் பொது பிரபாகரன் என்பவர் தன்னுடைய தன் வலைப்பதிவு முலம் டீம் லீடர் முதல் மேனேஜர் வரை அனைவரையும் கவர்ந்துழுத்திருந்தார். அவருடைய பதிவுகளில் முக்கால்வாசி சினிமா விமர்சனங்களும், சில எதார்த்த சம்பவங்களும் ,ஒரு சில நல்ல கருத்துகளும்(!?!?!?) இருக்கும். நானும் அவருடைய  வலைப்பதிவின் ரசிகனானேன். அவரை பார்த்து எனக்கும் வலைப்பதிவு ஆரம்பிக்கும் ஆசை மீண்டும்  எட்டி பார்த்தது.

பிறகு அந்த கால் சென்டரை  விட்டு , வேறு சிறு கம்பெனியில்  வேலை 
செய்யும் போது , ஒரு வலைபதிவை  எப்படி நிரப்புவது என்பதை அறிந்து  கொண்டேன் . நாம் சொந்தமாக வலைப்பதிவு கட்டுரை (blog article) எழுத தெரியாவிட்டாலும் மற்ற வலைப்பதிவிலிருந்து காப்பி- பேஸ்ட் செய்யலாம் என அறிந்தேன். அட ! இது நல்ல யோசனையாக இருக்கவே முதலில் எனக்கு பரிச்சியமான Wordpress-ஐ தேர்ந்தெடுத்தேன். 


ஆரம்பத்தில் இணையதில் ஏதாவது ஒன்று எழுத வேண்டும் என ஆசை இருந்ததால் முதலில் சினிமாவை  பற்றி எழுதலாம் என்று நினைத்தேன் (நமக்கு தெரிந்தது அது தானே !! ஹ்ம்ம் ...கழுதை கெட்டால் குட்டி சுவர்!!! ).

அடுத்து தினசரி செய்தி வெளியிடும் வலை பதிவு எழுத  எண்ணினேன்.  நீண்ட யோசனைக்கு பிறகு எல்லாம் கலந்த ஒரு வலைபதிவை  ஆரம்பிக்க முடிவு செய்து "Vimal's Webworld" என்ற பெயரில் ஒன்றை கடந்த வருடம் ஜனவரி 6ஆம்  தேதி, ஆரம்பித்தேன்.  சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் வலைபதிவுகளை பகிர்ந்தேன். பார்பவர்களை  எல்லாம் அதற்கு லைக் போட சொன்னேன்.( ஹி..ஹி !!!எல்லாம் ஒரு விளம்பரம் தான் !!!)

 ஆரம்பித்த ஓரிரு வாரங்களில் என் வலை பதிவை தொழில்நுட்ப  வலைபதிவு என ஒரு சக வலைபதிவர் அவருடைய வலைப்பதிவில் போட, என் மனமோ ஆனந்த கூத்தாடியது. (ஏய் !!ஏய்!! நான் தான் !!நான் தான் !!நான் தான் !!). அதன் பிறகு என் வலைபதிவை தொழில்நுட்ப  வலைபதிவாக மற்றினேன். ஆறு மாதத்தில் 100 வலைப்பதிவு கட்டுரைகளை எழுதினேன். என்னோடைய  நாளடைவில் நேரமின்மை காரணமாகவும், நல்ல கட்டுரைகள்  கிடைக்காததலும் சிறிது மாதங்களுக்கு பதிவு ஏதும் போடவில்லை. 

மீண்டும் சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப பதிவுகளை போட ஆரம்பிதேன். அப்போதுதான் எனக்கு என்னமொரு வலைப்பதிவை ஆரம்பிக்க எண்ணம் தோன்றியது. நல்ல கவர்ச்சியான தலைப்பு வேண்டுமென யோசித்து,  பழைய பேப்பர்  என்ற ஒன்றை தொடங்கினேன். இதிலாவது  சொந்த கருத்துகளையும் (??!?!!) , கட்டூரைகளையும் போட வேண்டுமென எண்ணம் உள்ளது. இதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என முழுமனதுடன்  இந்த பழைய பேப்பர் -ஐ   ஆரம்பிக்கிறேன்...

நன்றி !!!

-பி .விமல் ராஜ்



புதன், 27 பிப்ரவரி, 2013

வருக ! வருக !


என் வலைப்பதிவிற்கு வந்து சிறப்பித்ததற்கு நன்றி !
சும்மா பொழுது போக்கிற்காக ஆரம்பித்த இந்த வலை பதிவில் , எனக்கு தெரிந்த சில, பல விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி !!!


-பி .விமல் ராஜ்