சில (40, 50) ஆண்டுகளுக்கு முன்வரை சரக்கடிப்பவர்களை ஒழுக்கமில்லாதவர்கள் என்று குறிப்பிட்டது உண்டு. சமூகத்திலும் சினிமாவிலும் அப்படி தான் காட்டுவார்கள். ஆனால் இப்போது கதையே வேறு. சரக்கடித்தல் அல்லது social drinking என்பது normalise ஆன ஒன்றாக மாறிவிட்டது. அது காலப்போக்கில் மாறியதில் எனக்கு பெரிய கவலையோ/வருத்தமோ இல்லை. குடிப்பது உடலுக்கும், உயிருக்கும் தீங்கானது என எல்லோருக்கும் தெரியும். மகிழ்ச்சி, வருத்தம், போதை என குடித்து குடித்து மொடா குடிகாரனாகி நோய்வாய்ப்பட்டு இறப்பதெல்லாம் அவரவர் விதி. ஆண் பெண் இருவருக்கும் இது பொருந்தும்.
சில நாட்களுக்கு முன் வேலை நிமித்தமாக பெங்களூரு செல்ல வேண்டி வந்தது. வேலை முடிந்து டீமுடன் பெங்களூருவை சுற்றி பார்க்கையில் அவர்கள் எல்லோருமே சொன்னது பெங்களூரு ஐ.டிக்கு மட்டுமல்ல; (Pub) பப்க்களுக்கும் hub என்பது தான். ஒரு வியாழன் இரவில் ஆறு பேர் கொண்ட குழுவாக கோரமங்களாவில் உள்ள உயர்தர பப் ஒன்றுக்கு சென்றிருந்தோம். மூவர் KF pint beer, Bira சிறிய பாட்டில் என ஆர்டர் செய்து கொள்ள, நானும் மற்ற இருவரும் sprite, lemonade, சிக்கன் side dish என ஒதுங்கி கொண்டோம்.
அன்று தான் முதன் முதலில் பப் வாழ்க்கை எப்படி இருக்கிறது என பார்த்தேன். உடன் வந்த பெங்களூரு நண்பர் ஒருவர், தான் +2 படித்த காலம் முதல் பப்பும், பாரும் ஆரம்பித்து விட்டதாக சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார். மேலும் இந்தியாவில் பெங்களுரில் தான் அதிக pubs இருப்பதாக சொல்லிக் கொண்டார். ஆயிரத்துக்கும் அதிகமாய் இருக்கிறதாம்! இங்கு pub and night culture மிகவும் famous & fashion. இதுதான் இங்குள்ள பெரும் பொழுதுபோக்கு, டைம்பாஸ், என சொல்லிக்கொண்டே போனார்கள். பெங்களூரு Pub Capital of India என்று அழைக்கப்படுகிறதாம். ஏன்? மற்ற மாநகரங்கள் போலவே பெங்களூரும் வளர்ந்து வந்த போதிலும், இங்கு மட்டுமே ஏன் இந்த pub and night culture மீது இவ்வ்ளவு மோகம் என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. இணையத்திலும் நண்பர் ஒருவரிடமும் அறிந்து கொண்ட சில தகவல்களை உங்களிடம் பகிர்கிறேன்.
ஒரு தொழில்துறை ஆய்வின்படி, இந்தியாவில் பப் மற்றும் இரவு வாழ்க்கை கலாச்சாரத்தை அமைத்த/ஆரம்பித்த முதல் நகரங்களில் பெங்களூருவும் ஒன்றாகும். மற்ற மாநிலங்களை போல கள்ளுக்கடைகளும், சாராயக்கடைகளும் பெங்களூரில் இருந்து வந்தது. 1989-ல் முதன் முதலில் Pecos என்னும் பப் ஆரம்பிக்கப்பட்டது. அஃது வேகமாக மாறிக்கொண்டிருந்த நகரத்திற்கு மேலும் ஒரு புதிய உற்சாகத்தையும் vibe-யும் சேர்த்தது. வேலைக்குப் பின் மாலையிலும் இரவிலும் பப், டான்ஸ், ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம் என இரவு நேர கலாச்சாரத்தை அனுபவிக்க ஆரம்பித்து இன்று பெரிய அளவில் போய் கொண்டிருக்கிறது. பெங்களூரில் இரவு ஒரு மணிவரை பெரும்பாலும் எல்லா பப்களும், டிஸ்கோத்தேக்களும், (longue) லாஞ்களும், பார்களும், திறந்தே இருக்கும். இரவு நேர ரெஸ்டாரண்ட்கள், பெட்டிக்கடைகள் என பெங்களூரில் சில ஏரியாக்கள் விடியற்காலை வரை ஜகஜகவென ஜொலித்து கொண்டிருக்கும். அக்காலங்களில் மால்கள் (Malls) பெரிதாய் இருக்கவில்லை; பீச் கிடையாது; மற்ற பொழுதுபோக்கு சமாசாரங்கள் இருந்த போதிலும், பப்பும் மப்பும் பெங்களூரில் முக்கியமான பொழுதுபோக்கு ஒன்றாகி போனது. பெங்களூரு மக்கள் வாரம் தோறும் பகல் முழுக்க உழைத்து மாலையில் stress இல்லாமல் பொழுதை கழிக்க ஆரம்பிக்கப்பட்டது என சொல்கின்றனர். முதலில் weekendகளில் களைகட்டிய பப்கள், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தினசரி நாட்களில் இரவு நேரத்தில் 9 மணிக்கு மேல் வெளுத்து வாங்க ஆரம்பித்தது. அரசுக்கும் வருமானம் பலமாய் வருவதால் பல சலுகைகளை பப்களுக்கு வழங்க ஆரம்பித்தது. 90களில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற் நிறுவனங்கள், ஐடி கம்பெனிகள், ஸ்டார்ட் அப் கம்பெனிகள் என தொழில்முறையிலும் நகர கட்டமைப்பிலும் வளர்ந்து கொண்டே இருக்க, பப்புகளும் வளர்ந்து கொண்டே போயின. வாடிக்கையாளர்களை கவர karoke, open nights, dating nights, cusine evenings, conventional bar games, bartender shows, happy feet, happy hours என புது புது விஷயங்களை கூட்டி கொண்டே சென்று அவர்களது வியாபாரத்தை பெருக்கி கொண்டது.
2010-களில் The Biere Club என்னும் பப் நிறுவனம், Microbreweries -ஐ (தாமாகவே மதுபானத்தை தயாரித்து விற்க) ஆரம்பித்தது. பெரும்பாலும் பீர் வகையறாக்கள் தான். அதுவரை பப்கள், பீர் பாட்டில்களை வாங்கி விற்று வந்தவர்கள்; அவர்களே தயாரித்து அரசின் உத்தரவுடன் லைசென்ஸ் பெற்று) தமது பார், பப் களில் விற்க ஆரம்பிக்க விற்பனை படுஜோரானது. அல்கொஹோலின் அளவு என்று சொல்லப்படும் ABV - Alcohol By Volume 4-8% மட்டுமே தான் இருக்க வேண்டும். Microbreweries-ல் பெரும்பாலும் 4 முதல் 4.5 வரை தான் அல்கொஹோல் அளவு சேர்க்கப்படுகிறதாக சொல்லப்படுகிறது. ஆனால் சில இடங்களில் 5- 6.5% வரை சேர்க்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
இந்த பப் மற்றும் இரவு நேர கலாச்சாரங்களால், சில பல இடங்களில் பெண்களிடம் சீண்டல்கள், பாலியல் முயற்சி, குடித்துவிட்டு அடிதடி, குடித்துவிட்டு வண்டியோட்டுதல், சில சமயங்களில் கொலை போன்ற விஷயங்களும் நடந்தேறியுள்ளன.
பெங்களூருவை போலவே மற்ற நகரங்களிலும் இது போன்ற பப் கலாச்சாரங்கள் பெருகி வருகிறது. புனே, மும்பை, ஹைதராபாத், புது தில்லி, என நாட்டின் பல நகரங்கள் மேற்கத்திய கலாச்சாரத்தின் பின்னால் போக ஆரம்பித்துள்ளது. சென்னையிலும் பல பப்கள் இருக்கிறது. ஆனால் பெரும் வசதி படைத்தவர்கள், பணக்காரர்கள் மட்டுமே போவார்கள் என்ற எண்ணம்தான் மோலோங்கி இருக்கிறது. அதுவே ஓரளவு உண்மையும் கூட. மற்றவர்கள் சரக்கடிக்க தெருவுக்கு தெரு இருக்கும் பாருக்கு சென்றுவிடுகின்றனர். நம்ம ஊரில் சரக்கடிக்க போகலாம் என்று சொன்னாலே பாண்டிச்சேரி தான் நினைவுக்கு வரும். புதுவை 'மது'வை நகரமாக மாறிய கதையே வேறு. பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆட்சியிலிருந்து இந்தியாவுடன் சேர்ந்த பின்பும், பல வெளிநாட்டவர்கள் இன்றளவும் பாண்டிச்சேரியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்; அவர்களுக்காக மதுபானங்கள் விற்பனையில் இருந்தது. மேலும் பாண்டிச்சேரி சிறிய யூனியன் பிரதேசமாக இருப்பதால், பொருளாதார வளர்ச்சிக்காக அங்கு பல பொருட்களுக்கு சேவை வரி (Service tax/VAT/GST) மிகவும் குறைவாக விதிக்கப்பட்டுள்ளது (கார், பெட்ரோல், விவசாய பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், மதுபானங்கள், முதலியன..)
பாண்டிச்சேரி அரசு, எல்லா வகையான மதுபானங்களுக்கும் 40% மட்டுமே கலால் வரி விதிக்கிறது. மற்ற மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மற்ற மாநிலங்கள் முறையே 65% மற்றும் 300% வரை வரியை விதிக்கின்றன. எனவே, மதுபானம் பாண்டியில் ஒப்பீட்டளவில் மிகவும் மலிவானது. இதனால் புதுச்சேரிக்கு பிற மாநில மக்கள் மலிவு விலையில் மதுபானம் அருந்த வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தமிழ் நாட்டில் 1970-80 களில் மதுவிலக்கு அமலில் வந்து, பின்னர் ரத்தாகி, பின்னர் மீண்டும் மதுவிலக்கு அமல் என தொடர் சட்ட மாற்றங்களால் குழப்பங்களால் கடலூர்/விழுப்புரம் மக்கள் அருகே உள்ள பாண்டிசேரிக்கு படையெடுத்து தங்கள் தாகத்தை தீர்த்து கொண்டனர். சில பல பாட்டில்களை வாங்கி வந்து தமிழ் நாட்டிற்குள் குடிக்கவும், விற்கவும் செய்தனர். மேலும் பாண்டிசேரி கடற்கரை நகரமாகவும் இருப்பதால் சுற்றுலா துறைக்கு பெரும் உதவியானது. பெரும்பாலும் தமிழ் சினிமாகளில் பாண்டிச்சேரியை 'போதை நகரம்' என்று சித்தரிப்பது அந்த இடத்தின் மதுபானத் தொழிலை இன்னும் பிரபலப்படுத்தியது. அதனால்தான் பாண்டிச்சேரி தென்னிந்தியாவின் 'மது தலைநகரம்' (Alcohol Capital of South India) என்று அழைக்கப்படுகிறது.
இப்படி எல்லா ஊரிலும் சரக்கு ஆறாய் போனாலும், தமிழ் நாட்டை மட்டும் குடிகார மாநிலமாக மாற்றிவிட்டார்கள் என சிலர் ஏன் சொல்கிறார்கள் என தெரியவில்லை. குடிப்பது தவறு (????!!!!) தான்... ஆனால் மக்களை குடிக்க வைக்கதான் எல்லா அரசும் முயற்சி செய்கிறது. இன்னும் சில நாட்களில் சென்னையிலும் இந்த இரவு நேர பப்கள் பெருகி, மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள் என மார்க்கெட் நிலவரம் சொல்லுகிறது. என்ன நடக்கிறது என்று நாமும் பொறுத்திருந்து பார்க்கலாம்! அதுவரை Cheers !!!
நன்றி!!!
பி. விமல் ராஜ்