rajnikanth லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
rajnikanth லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 அக்டோபர், 2024

வேட்டையன் - விமர்சனம்

வணக்கம்,

போன வருடம் ஜெயிலரில் மெகா ஹிட் வெற்றி கொடுத்த சூப்பர் ஸ்டார், இந்த வருடம் வேட்டையன் படத்துக்காக களம் இறங்கியுள்ளார். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, துஷாரா, மஞ்சு வாரியர் என பெரிய லிஸ்ட் இருக்கிறது.  பான் இந்தியா படமாக்க முயற்சி செய்து, எல்லா மொழி நடிகர்களையும் நடிக்க வைத்துள்ளனர். ஆனால் கதைக்கு  அவ்வளவு அவசியமா? என்பது தான் பெரும் கேள்வி.

ஃபர்ஸ்ட் சிங்கிள் "மனசிலாயோ" பாடலை நம்மால் மனப்பாடம் செய்து பாட முடியவில்லையே தவிர செம்ம vibe.. செம்ம ஹிட்.. சமூக வலைதளங்களில் இன்றும் அந்த இசையும், ஸ்டெப்பும் வலம் வந்து கொண்டிருக்கிறது. ட்ரைலர் சுமாராக இருப்பது போல தான் எனக்கு தெரிந்தது. சூப்பர் போலீஸ் - என்கவுன்டர் - ஆக்சன் - பழிவாங்கல் என்பது போல தான் காட்டியிருந்தர்கள்.

Vettaiyan review

எது எப்படி இருந்தாலும் இயக்குநர் TJ ஞானவேல் படத்தில் ஏதாவது surprise element ஒளித்து வைத்திருப்பார் என நம்பி கொண்டு படம் செல்ல தயாரானேன். படம் பார்ப்பதற்குள் எந்த ஒரு விமர்சனமோ, முதல் பாதி விறுவிறு, இரண்டாம் பாதி சறுக்கல், படத்தின் முக்கிய சீன் ஸ்கிரீன் ஷாட் போன்ற எவ்வித spoiler கர்மதையும் பார்த்து தொலைக்க கூடாது என்று கவனமாய் scroll செய்து தள்ளி கொண்டிருந்தேன்.

கதை இது தான். கன்னியாகுமரியில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான அதியன் ரவுடிகளை விரட்டி வேட்டையாடுகிறார். சென்னையில் உள்ள பள்ளிகூட ஆசிரியை துஷாரா ஒரு பெரிய ஆன்லைன் கல்வி நிறுவனம் செய்த ஊழல்களை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வர முயல்கிறார்; அதனால் கொலையும் செய்யப்படுகிறார். போலீஸ் கொலையாளி (அசல் கோலார்) என ஒருவரை உருவகப்படுத்தி என்கவுன்டர் செய்ய முயல, அவர் தப்பிகிறார். அதை கண்டுபிடிக்க சூப்பர் ஸ்டார் வந்து, 48 மணி நேரத்தில்  சோலியை முடிக்கிறார். பின்னர் தான் அது தப்பான என்கவுன்டர் என்று தெரிகிறது. மனம் வருந்தி மீண்டும் சரியான  வில்லனை கண்டுபிடித்து, போலீசில் சிக்க வைத்து நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி தருகிறார்.

கடந்த சில படங்களாக மாஸ் கமர்சியல் மசாலாவாக மட்டுமே இருந்த ரஜினி படம், இம்முறை விறுவிறுப்பான ஆக்சனுடன் கல்வி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுவது, போலி என்கவுண்டர், எல்லோருக்கும் சமனான சட்டம், மனித உரிமை மீறல், சில பல சமூக கருத்துகளை கொண்ட படமாகவும் வந்துள்ளது. 

சூப்பர் ஸ்டார் எப்பவுமே மாஸ் தான். ஸ்கிரீன் பிரசென்ஸ், ஸ்டைல் லுக், clipon கூலிங் கிளாஸ், அந்த சிரிப்பு என எல்லாமே அட்டகாசம் தான். 😎 ஆனால் தலைவர் கெட்டப் தான் லேசாக ஜெயிலர் படத்தில் இருப்பது போலவே தெரிவது எனக்கு மட்டும் தானா என புரியவில்லை..🧐

சூப்பர் ஸ்டோர் கூடவே வரும் போலீஸ் கேரக்டர்களாக கிஷோர், ரித்திகா சிங் வந்து சிறப்பாக நடித்துள்ளனர். துஷாரா கொஞ்சமாகவே வந்தாலும் படம் முழுக்க பேசப்படுகிறார். 

அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதலில் வேட்டையனுக்கு எதிராய் பேசி, பின்பாதியில் நண்பனாக மாறுகிறார். 

பாகத் பாசில் சூப்பர் ஸ்டார் கூடவே வந்து அங்கங்கே காமெடிகள், சின்ன சின்ன முகபவனைகள் காட்டி கவர்கிறார். அவர் சுடப்பட்டு இறக்கும் போது, 'அடடா ' என நம்மை தவிப்புக்குள்ளக்கிறார்.

அதியன் மனைவியாக மஞ்சு வாரியர் 
வருகிறார். அவ்வளவுதான்! மாஸா சீன் வைக்கணுமென்னு அவருக்கென ஒரு சீன் வைத்துள்ளார். மற்றபடி அவருக்கு பெருசாய் நடிக்க வாய்ப்பில்லை. 

விஜய் டிவி ரக்ஷனும், அபிராமியும் இந்த படத்தில் எதற்கென தெரியவில்லை.

மெயின் வில்லனாக ராணா. வாட்டசாட்டமான பணக்கார கல்வி வியாபாரியாக, கோபத்துடன் மிரட்டி செல்கிறார். 

அனிருத் இசை இம்முறை ரொம்ப இரைச்சலாக இல்லை.. ஆனால் ஏதோ ஒண்ணு குறைச்சல் தான். 'மனசிலயோ' பாட்டை தவிர வேறு எதுவும் மனசில் ஒட்டவே வில்லை. வழக்கம் போல சூப்பர் ஸ்டார் பில்டப் பாட்டு ஒன்று ராப்-பில் பாடி கோரசில் கோவிந்தா போட்டுள்ளனர். "அடேய்..போதும் டா.. நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர் எப்பவுமே சூப்பர் ஸ்டார் தான்; எல்லா படத்திலேயும் சொல்லிட்டே இருக்க வேணாம்ன்னு" தான் சொல்ல தோன்றுகிறது. அடுத்த படத்திலும் இப்படி ஒரு பாட்டு கண்டிப்பா வச்சு தொலைப்பங்க.. ஹம்ம்..🤦

போன இரண்டு மூன்று படத்தில் கதையென பெரிதாய் என்னை ஏதும் கவர வில்லை. ஜெயிலர் கூட ஓகே ரகம் தான் என புலம்பி இருந்தேன். ஆனால் வேட்டையன் நன்றாக இருந்தது,  பிடித்திருந்தது என்பதை விட போரடிக்காமல் திருப்தியாகவே இருந்தது.

இம்முறை வச்ச குறி தப்பவில்லை!🦅


நன்றி!!!
பி. விமல் ராஜ்

ஞாயிறு, 2 மே, 2021

புதிய விடியல் ஆரம்பம் !

வணக்கம்,

சின்ன இடைவெளி விட்டு மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். தேர்தல் முடிவை அலசும் என்னை போன்ற ஓர் சாமானியனின் அரசியல் பதிவு இது. 

இதுவரை வந்த ஓட்டு எண்ணிக்கை முடிவின் படி, திமுக கூட்டணி வெற்றி பெற்று விட்டது. எல்லா முடிவுகளும் அப்படிதான் சொல்கின்றன. ஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜ.க வுடன் கூட்டணி இருந்திருக்காது. இம்முறையும் அதிமுகவே வென்றிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜ.கவின் நடவடிக்கைகளும், செயல்பாடும் நம் மக்களை மேலும் கடுப்பாகி விட்டது. அதனால் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என அதிமுகவை சற்று ஒதுக்கி வைத்துள்ளனர். எதிர்பார்த்தபடி நட்சத்திர தொகுதியில்  யார் வெல்வார்கள் என மக்கள்  நினைத்தார்களோ அவரே வென்றுள்ளனர். சில இடங்களில் மாறுபட்டிருப்பது சற்றே வேதனைக்குரியது. 

இன்று காலை முதல் பெரும்பாலானோர் வீட்டில் தேர்தல் லைவ் செய்திகள் தான் ஓடி கொண்டிருக்கும். நேற்று வரை கொரோனா தா(க்)கம் கொண்ட டி.வி சேனல்கள், "போனால் போகட்டும் போடன்னு" இன்று மட்டும் கொரோனா செய்திகளுக்கு லீவு விட்டு விட்டார்கள். உயிரிழப்பு, நோய் தொற்று, மருத்துவனை சேர்க்கை, ஆக்சிஜன் பற்றாக்குறை என எல்லாவற்றுக்கும் பாஸ் (Pause) போட்டு வைத்துள்ளார்கள். நாளை முதல் மறுபடியும் லூப்பில் போட்டு ப்பிளே (Play) செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். சில சேனல்களில், நடுநடுவே விளம்பரம் போட்டு வழக்கத்தைவிட சற்று அதிகமாய் சம்பாதித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

புதிய விடியல் ஆரம்பம் !

சரி.. கட்சி நிலவரத்துக்கு வருவோம். அதிமுக ஏன் தோற்றது என நாலரை வருட பழைய புராண கதையை சொல்லி போரடிக்க விரும்பவில்லை. மக்கள் அதிருப்தி, நிர்வாக சீர்கேடு என்றெல்லாம் கூட  அளக்க தேவையில்லை. பா.ஜ.க வுடன் கூட்டணி என்ற ஒற்றை விஷயமே அவர்களை ஒதுக்குவதற்கு போதுமான காரணம் என எண்ணுகிறேன். பேரிடர் சமயத்தில் ஓடி ஓடி சென்று வேலை செய்தவரின் வெற்றி இழுபறியில் இருக்க, ராக்கெட் விஞ்ஞானியின் வெற்றியும், கொங்கு பக்கத்து வெற்றியும் சுலபமாகி இருப்பதை கண்டு மக்களின் மனநிலையை என்னவென்று சொல்ல தெரியாமல் முழி பிதுங்கி போயுள்ளேன்.

உலக நாயகன் கமலஹாசன் கட்சி ஆரம்பித்து, அதிரடியாக வலம் வந்து, கடைசி வரை ஜெயிப்பது போல வந்து கொண்டிருக்கிறார். நல்ல ஒரு போட்டியாளராக தான் களத்தில் இருந்திருக்கிறார். இன்னும் பெரிதாய் வந்திருக்கலாம்! ம்ம்ச்ச்... ஹ்ம்ம்.. 2006 தேர்தலில் விஜயகாந்த் ஒரு சீட்டுடன் சட்டசபைக்கு வந்து, பின்னர் 2011 தேர்தலில் பலமான எதிர்க்கட்சியாக உட்கார்ந்தார். அதேபோல ம.நீ.ம க்கும் நடந்திருக்கலாம் என சொல்லவில்லை... நடந்திருந்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறேன். அதைவிட ஒரு சினிமா ரசிகனின் ஆசையாக, உலக நாயகனின் புரிபடாத கன்னி பேச்சை சட்டசபையில் கேட்பதற்கு பதிலாய், சேனாபதியின் கரகர குஜராத்தி பேச்சையும், விக்ரமின் மிரட்டலான விருந்தையும் காண என் கண்கள் விழைகிறது! (நடந்தால் நன்றாக இருக்கும்..)

அடுத்து நம்ம தம்பிகளின் அன்பு அண்ணன்/ தமிழ் சமூகத்தின் இனமான, வீரமான, தலைவன் செந்தமிழன் சீமான். இம்முறையும் ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை.  2011, 2016 தேர்தலில் ஏன் தோற்றீர்கள் என கேட்டதற்கு, எங்கள் வாக்காளர்கள் இன்னும் ஓட்டு போடும் வயதுக்கு வரவில்லை சொல்லி  கொண்டிருந்தனர். இந்த முறையும் அவர்கள் வாக்காளர்கள் வயசுக்கு வரவில்லை போல. அடுத்த முறையாவது... ஹ்ம்ம் வேண்டாம் விடுங்க... ஆனால் ஒரு விஷயத்தில் இவரை பாராட்டலாம்; கூட்டணி இல்லை என்று சொல்லி தனியே நின்று கெத்து காட்டி நிற்கிறார். தமிழ் தேசிய ஆட்சியில் அதிபர் சீமான் என்கிற கனவுலகில் இருந்த இவர் தம்பிகள் மீண்டு வர சில நாட்கள் ஆகும். வாயுள்ள பிள்ளை பிழைச்சிக்கும் தான்; ஆனா ஓவரா பேசுற வாய் .........  இம்முறையும் ஓட்டை பிரிக்கும் இவர்கள் தொழிலை செவ்வனே செய்துள்ளார்கள். இல்லாவிட்டால் இன்னும் சில தொகுதிகளில் தி.மு.க வென்றிருக்கும். 

அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் என காத்திருந்து பின்வாசல் வழியாக வாளேந்தி வந்த ஆர்.எஸ்.எஸ்./ பா.ஜ.க. / இந்துத்துவா கட்சிகள், சற்றே பலமான அடியுடன் யோசித்து கொண்டிருப்பார்கள். தற்போது 4 தொகுதிகளை கைப்பற்றி நிற்கின்றனர். அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருந்தாலும் திமுக தில்லுடன் மோத சமாளிக்க வேண்டும்.   

10 வருடங்களுக்கு பிறகு தி.மு.க ஆட்சிக்கு வருகிறது. வாழ்த்துக்கள்! இன்னும் கொஞ்ச காலங்களில் விழபோகும் பேரடியை யோசிக்காமல் ஊரெங்கும் உடன்பிறப்புக்கள் மகிழ்ச்சி பொங்க வெற்றி களியாட்டதில் இருக்கின்றார்கள். ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளை விட, எக்கச்சக்க இடியாப்ப சிக்கலில் நாடும், மாநிலமும் இருக்கிறது. சற்றே உண்மையை சொல்ல வேண்டுமானால், நம் டோப்பாவை கழட்டிவிட்டு மண்டையை சொரியும் அளவுக்கு பிரச்சனைகள் இருக்கிறது. அதை சரிவர கவனித்து, மத்தியில் சமாளித்து ஆட்சி நடத்த வேண்டும். ஏற்கனவே மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை அல்லது மிகவும் சொற்பமாக நிதியை ஒதுக்குகிறார்கள் என சொல்லி  கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் இழுபறியாக இல்லாமல், இருபுறமும் அவதானித்து, சரியான முடிவுகளை எடுப்பது நல்லது. கத்தி மேல் நடக்க போகும் தளபதியின் ஆட்சி எப்படி இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இதிலிருந்து ஒன்று தெளிவாய் தெரிகிறது. மூன்றாம் அணி என யார், எப்பொது வந்தாலும் இந்த இரு பெரும் கட்சிகளை தாண்டி வ(ள)ர முடியவில்லை. மதிமுக, மநகூ, நாதக, மநீம.. என யார் வந்தாலும் மக்கள் முடிவு வேறு விதமாக தான் இருக்கிறது. 

எனக்கு இதில் ஒரே ஒரு அல்ப சந்தோஷம். அப்பாடா! நல்ல வேளை!! ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை... எத்தனை பேர் வாயில் புகுந்து புறப்பட வேண்டியதோ.. மயிரிழையில் தப்பித்தார் தலைவர்! ஹி..ஹி ஹி.. :-) 

தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் பா.ஜ.க. கூட்டணியை கூட்டி அள்ளி குப்பையில் போட்டுவிட்டார்கள் அந்த மாநில மக்கள். நம்மை விட சேட்டன்களும், பெங்காளிகளும் ரோஷகாரங்க போல... 

ஒரு வழியாக விடியல் வந்துவிட்டது. கட்சிக்கா, மக்களுக்கா, யாருக்கென தான் தெரியவில்லை. இனிமேலாவது நம்ம தமிழ் நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி! 

"வெற்றி நடை போடும் தமிழகமே" பாடலின் வேறொரு வெர்ஷனை 2026-ல் கேட்கலாம், தயாராகுங்கள்! 


நன்றி!!!

பி. விமல் ராஜ்

சனி, 12 டிசம்பர், 2015

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

வணக்கம்,

டிசம்பர் 12 - தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

இது சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் சிறப்பு பதிவு :-)

ஒரு சாதாரண பஸ் கண்டக்டரிலிருந்து ஒரு புகழ் பெற்ற உச்ச நட்சத்திரமாக மாறி, அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். 1980-களில் முரட்டு காளை, பில்லா, போக்கிரி ராஜா, மூன்று முகம் ஆகிய படங்கள் வெளிவந்த போது அவர் கட்-அவுட்க்கு மாலைபோட்டு ஆடியவர்களின் பேரன் வயதுடையவர்கள் தான் இப்போது எந்திரன், லிங்காவுக்கு முன் ஆடுகிறார்கள். மூன்று தலைமுறைகளாக தமிழ் மக்களை காந்த விழியாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்துள்ளார்.


இங்கே ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருமே அவர் ரசிகர்கள் தான். எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்று மன்னனாக, ராஜாதி ராஜாவாக இமயத்தை வென்ற பாண்டியனாக, கோச்சடையானாக  உச்ச நட்சத்திரமாய் இன்னும் மின்னி கொண்டிருக்கிறார். அதற்கு சாட்சி, கபாலி படப்பிடிப்புக்கு போன இடத்தில் அவருக்கு கிடைத்த மலேசியா வரவேற்பு.

கூகிள் இமேஜ் தளத்தில் சென்று "Thalaivar" என டைப் பண்ணி தேடுங்கள். இரு தலைவர்களின் புகைப்படங்களை காட்டும். ஒன்று விடுதலை புலி தலைவர் பிரபாகரன்... மற்றொன்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.

ஒரு சினிமா பிரபலரை பிடித்தவர்கள் என கோடி பேர் இருக்கும் போது, பிடிக்காதவர்கள் என லட்சம் பேராவது இருப்பார்கள். சூப்பர் ஸ்டாரை   பிடிக்காதவர்கள், அவருடைய புகழை வெறுப்பவர்கள், அவரை துதிபவர்களை தூற்றுபவர்கள் என பலர் உள்ளனர். அவர்கள் கேட்கும் கேள்வியெல்லாம் இது தான்...

"தமிழ் நாட்டுக்காக உங்க ரஜினி என்ன செய்தார்???
 தமிழ் மக்களுக்காக உங்க தலைவர் என்ன செய்தார்???
 தமிழ் ரசிகனுக்காக உங்க சூப்பர் ஸ்டார் என்ன செய்தார்??? "

இது அந்த பில்லியன் டாலர் கேள்வி!

தமிழ் ரசிகர்கள் மூலம் சம்பாதிப்பதை ரஜினி வேறு மாநிலங்களில் சொத்து வாங்கி சேர்க்கிறார்; தமிழ் மக்கள் நலனுக்காக ஒன்றுமே செய்யவில்லை;
அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி ஏமாற்றுகிறார்; காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு சாதகமாக பேசுகிறார்; நதிநீர் திட்டத்துக்கு கொடுக்கிறேன் என்று சொன்ன பணத்தை தரவில்லை; அவரது படம் ஓட வேண்டும் என்பதற்காக ரசிகர்களை சந்தித்து பேசி, ஏமாற்றுகிறார். இது போல இன்னும் பல கேள்விகள்/ குறைகள் இருக்கிறது பொது ஆர்வலர்கள் கையில்.

மேலுள்ள கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதிலளிக்கிறேன். நீ யார் பதில் சொல்ல எனக் கேட்காதீர்கள். அவருடைய கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். அவ்வளவே!

* முதலில் ஒரு நடிகரை நடிகராக பார்க்க வேண்டும். சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை. நற்பெயரையும், ரசிகர்கள்  கூட்டத்தையும் அவ்வளவு சீக்கிரம் யாராலும் சம்பாதிக்க முடியாது. அவருடைய நடிப்பும், அமைதியும், பண்பும், வேகமாக வசனம் பேசும் திறனும் அனைவரையும் கவர்ந்தது (ஆரம்பத்தில் தமிழ் பேச தெரியாததால், வேகமாக பேசினார். பின்னாளில் அதுவே ஸ்டைலாகி போனது). அவர் பணியின் மீதுள்ள மரியாதை, நேர்மை காரணமாக இன்று கம்பீரமாக வளர்ந்து நிற்கிறார். இவை தான் தமிழ் மக்களின் மனதில் அவரை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்தது.

* ரஜினி மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என சிலர் சொல்லி வருகின்றனர். தெரியாமல் தான் கேட்கிறேன்... அவர் என்ன செய்ய வேண்டும்??? அவர் நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். நடிப்பு அவரது தொழில். அதை மக்கள் பணம் கொடுத்து பார்க்கிறார்கள். அவர்கள் கொடுத்த பணத்துக்கு தானே படம் பார்கிறார்கள். வேறு என்ன செய்ய வேண்டும் என  எதிர்ப்பார்கிறார்கள் ? தெரியவில்லை... ஒரு நடிகன் ரசிகனுக்கும், ஒரு ரசிகன் நடிகனுக்கும் வேறு என்ன தொடர்பு இருக்க முடியும். நமக்கு பிடித்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்; நாம் ரசிக்கிறோம். இதை தவிர வேறு என்ன செய்ய வேண்டும்... ??? படத்தில் வருவது போல எங்கு தவறு நடந்தாலும் வந்து தட்டி கேட்க வேண்டும் என நினைக்கிறார்களா??? புரியவில்லை.

* ரஜினி தமிழ் நாட்டில் சம்பாதித்த பணத்தை, வெளி மாநிலங்களில் சொத்து சேர்த்து வைக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஹ்ம்ம்..அவர் பணம், அவர் சொத்து.. எங்கு வாங்கினால் என்ன? அது அவர் இஷ்டம். தமிழகத்தில் சம்பாதித்தால் இங்குதான் முதலீடு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா?? அப்படி பார்த்தால், தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் மூலம் பணம் சம்பாதித்த பல தொழிலதிபர்கள் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் சொத்து சேர்த்துள்ளனர். அதை ஒருவனும் கேட்கவில்லையே?


ஆளுக்கு இல்லேன்னா வீட்டுக்கு  ஒரு பத்தாயிரம் கொடுத்தால் அவரை புகழ்வார்களா? இல்லையெனில், வேட்டி சேலை, தையல் மெஷின், பாட புத்தகம், இலவச திருமணம் என சேவை செய்தால் போற்றுவார்களா?? இதை எல்லாம் வழக்கமாய் செய்து கொண்டிருக்கும் நடிகர்களையுமே சேர்த்து தானே திட்டுகிறார்கள்.

* நாட்டுக்காக ரஜினி என்ன செய்தார்? என கேட்கிறார்கள். இந்த கேள்வியை வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளையும், நாட்டை ஆண்டவர்களையும் பார்த்து கேட்காமல் இவரை பார்த்து கேட்டால் என்ன செய்வது ??? ரஜினிக்கா இவர்கள் ஓட்டு போட்டார்கள்? இவரை கேட்டா இலவச பொருட்களை வாங்கினார்கள்??? பிறகு ஏன் ரஜினியை பார்த்து கேட்கிறார்கள் என தெரியவில்லை.

* காவிரி விஷயத்தில் தமிழ்நாட்டுக்காக பேசாமல், கர்நாடகாவுக்கு சாதகமாக பேசுகிறார் என வாதிடுகிறார்கள். அவர் தமிழ் நாட்டுக்கு சாதகமாக பேசினாலோ, குரல் கொடுத்தாலோ, கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாக்கபடுவார்கள். அதற்காக தான் இப்படி இருதலை கொல்லியாக செயல்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.

* தேசிய  நதிகளை ஒன்றாக்க தன் பங்குக்கு ஒரு கோடி தருவதாக சொன்னாரே? ஏன் தரவில்லை என கேட்கிறார்கள் ? முதலில் அந்த திட்டத்தை முறையாக ஆரம்பிக்க சொல்லுங்கள். அப்புறம் பணம் கொடுப்பதை பற்றி கேட்கலாம்.

* ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை பொதுமக்களுக்கு எழுதி தரேன்னு சொன்னாரே? ஏன் செய்யவில்லை என கேட்கிறார்கள். ஹ்ம்ம்.. அவர் தான் உயில் எழுதி வைத்துவிட்டேன் என சொல்லிவிட்டாரே.. பிறகு ஏன் இவர்கள் குடைகிறார்கள் என தெரியவில்லை.

* ரஜினி அவரால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கிறார். டிரஸ்ட் மூலமாகவும் வேறு வாயிலாகவும் செய்கிறார். அதை மேடை போட்டு சொல்வதில்லை.

* அடுத்து அரசியல் - தலைவருக்கு அரசியல் ஆசை இருந்தது. உண்மை தான். ஆனால் எந்திரன் படம் ரிலிசுக்கு முன் ஒரு விழாவிலேயே சொல்லிவிட்டார். எனக்கு அரசியலுக்கு வர பயமாய் இருக்குன்னு.. அப்புறம் ஏனோ தெரியவில்லை, மீண்டும் மீண்டும் இந்த மீடியாக்கள், அவரை அரசியல் கேள்விகளுடன் சுற்றி வருகிறார்கள் என அவர்களுக்கு தான் வெளிச்சம்!

* கடந்த 25 வருடமாக மக்களை ரஜினி ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள். "தமிழ் மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னு சொல்றார்.. ஆனா செய்யல..." என சொல்கிறார்கள். ஹ்ம்ம்...ஒருவர் 25 வருஷமா எதாவது செய்வார்... நம்மளும் எதாவது வாங்கி கட்டி கொண்டு போலாம்னு இருக்கிற மனநிலை உடைய மக்களிடம் என்ன சொல்வது ??????

மொத்தத்தில், இது சூப்பர் ஸ்டாருக்கு வக்காளத்து வாங்கும் பதிவு என்றோ, சப்பைகட்டு கட்டும் பதிவு என்றோ என எண்ணிவிடாதீர்கள். அவருக்கு மட்டுமல்ல... எந்த ஒரு நடிகராயினும், நடிப்பார், பணம் சம்பாதிப்பார், வேலை முடிந்தும் சென்று விடுவார். நாம் படம் பார்த்து, கைதட்டிவிட்டு, ரசித்துவிட்டு போய்விட வேண்டும். அதை விட்டு அவர் ஒன்றுமே செய்யவில்லை என குறை கூறுவது எந்த வகையில் நியாயம்???

யார் என்ன சொன்னாலும் சரி. அவர் பெயர் சினிமா வரலாற்றிலும், தமிழகம் முழுவதிலும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னும் பேசப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.

பின்குறிப்பு- இப்பதிவை படித்தபின் 'பொங்கி' எழுபவர்கள் பின்னூட்டத்தில் பதிவு செய்யமாறு கேட்டு கொள்கிறேன்.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 13 டிசம்பர், 2014

லிங்கா - விமர்சனம்

வணக்கம்,

கிட்ட தட்ட ஒன்றரை மாதங்களாக அடித்து பிடித்து தலைவரின் தரிசனத்திற்காக காத்துக்கொண்டிருந்த கோடான கோடி தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன்.

போன மாசம் வெளியான லிங்கா பாடல்களில், ஒன்று கூட
ஏ.ஆர். ரகுமானின் இசை என்று சொல்லி கொள்ளும்படி இல்லை.
'மோனா மோனா ' பாடல் மட்டும் நன்றாக இருக்கிறது என யாரோ சிலர் சொன்னதால், அதையும் கேட்டு ஏமாந்து போயிருந்தேன். சரி... மோனா போனா போகட்டும்ன்னு விட்டுவிட்டு, நமக்கு படம் தானே முக்கியம் என்று ஆவலாய் இருந்தேன்.

பெரும்பாலும் சூப்பர் ஸ்டாருக்கு ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால், அடுத்த படம் கண்டிப்பாக மெகாஹிட்தான். கோச்சடையான் சரியாக போகவில்லை என்பதால், எப்படியும் இந்த படம் நன்றாகதான் இருக்கும் என்று தலைவர் மீதும், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் மீதும் அளவற்ற நம்பிக்கை வைத்து இன்று ஏ.ஜி.எஸ். திரையரங்கில் சென்று படம் பார்த்து விட்டு........ சற்றே கனத்த மனதுடன் தான் வீடு திரும்பினேன்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தலைவர் தான் திரையில் மின்னுகிறார். ஆரம்ப பாடலில் வருவதிலிருந்து டூயட் வரை தலைவரின் நடை, பேச்சு, பன்ச்சு, ஸ்டைல் இன்னும் எதுவுமே குறையவில்லை. ப்ப்பா..தலைவா!!! 63 வயசென்ன; 75 வயசிலும் நீ நடித்தால் இதே போன்று, ஏன் இதை விட அதிகமாக கூட்டம் கூடும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

படத்தில் இரண்டு ரஜினி. ஒருவர் பேரன், இன்னொருவர் தாத்தா. முதல் ரஜினி யூத் கெட்-அப்பில் அசத்துகிறார் என்றால், பிளாஷ் பாக்கில் வருபவர் பிரிட்டிஷ் கலெட்டராகவும், ராஜா லிங்கேஷ்வரனாகவும் கம்பீரமாய் வாழ்ந்திருக்கிறார்.
 

முதல் ரஜினியை இளமையாக காட்ட ரொம்ப முயற்சி செய்துள்ளனர்- உடையிலும், வசனத்திலும் (உதாரணம். நண்பேன்டா, திருட்டுப் பய... )
பொதுவாக சந்தானத்தின் காமெடி ஒன் லைனர்கள் பெரிய நடிகர்களின் முன் எடுபட வாய்ப்பில்லை. இதிலும் தான்.

கதை ட்ரைலரிலேயே எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஊருக்காக தான் சொந்த செலவில் அணை கட்டி கொடுக்கிறார், ராஜா லிங்கேஷ்வரன். அணை கட்டும் போது அதில் வரும் பிரச்சனைகள், அணை கட்டி முடித்த பிறகு வரும் பிரச்சனைகளும் தான் படத்தின் மீதி கதையோட்டம். ராஜாவின் அரண்மனை, கட்டிகொண்டிருக்கும் அணை, என படத்தில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேல். ராஜா லிங்கேஷ்வரனின் பாத்திரத்தில் சில வசனங்களை அசால்டாக பேசியுள்ளார் ரஜினி. வெள்ளையனுக்கு எதிராக பேசும் இடங்களில் மட்டும் இன்னும் கொஞ்சம் பன்ச்சு வைத்திருக்கலாம்.

சூப்பர் ஸ்டார் நகை திருடும் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளை மட்டும் தவிர்த்திருக்கலாம். ஆனால் பாலத்திலிருந்து ஓடோடி வந்து ரயிலில் பா.....ய்ந்து ஏறுவது; தரையில் ஓடிவந்து, விண்ணில் பறக்கும் ஹெலிகாப்டரை விரட்டி பிடிப்பது; பத்தாவது மாடியிலிருந்து கயிற்றை படித்து கொண்டு விறுவிறுவென இறங்குவது என பல ஆக்க்ஷன் காட்சிகளை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பார்த்து பூரித்துள்ளதால், இதை அவ்வளவு பெரிய குறையாக நம்மாட்கள் எடுத்து கொள்ள மாட்டார்கள்.

படத்தில் இரு நாயகிகள். அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி சின்ஹா. இருவரும் தலா ஒரு பாடலுக்கு டூயட் பாடி செல்கிறார்கள். இருவருக்குமே நடிக்க சமமான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சோனாக்ஷிக்கு தமிழ் பெண்ணின் முக சாயலே வராததால், அனுஷ்காவே முன்னணியில் ஜொலிக்கிறார்.

கதையின் கரு புதுசுதான். காப்பியடிக்கபட்டது/ திருடப்பட்டது என்பதையெல்லாம் கூட ஓரம் கட்டி வைத்து விடுவோம். தலைவர் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பது ஊரறிந்த ஒன்று தான். கொஞ்சம் வித்தியாசமான கதைக்காகதான் இப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருப்பார் தலைவர். அவரை ரசிக்க வந்தவர்கள், அவரை மட்டுமே படம் முழுக்கவும் காண முடியும். இது ஒரு சாதாரண கமர்ஷியல் ரஜினி படம். மத்தபடி ஏதுமில்லை.

சூப்பர் ஸ்டார் என்னும் மாய பிம்பத்திற்காக உருவாக்கப்பட்ட கதை என்று இயக்குனரும், கதையாசிரியரும் ஆடியோ ரிலீஸில் சொன்னார்கள். ஹ்ம்ம்.. படம் சுத்த மோசம் என்று சொல்விட முடியாது. நீங்கள் ரஜினி ரசிகரா? அப்போ கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். திரைக்கதையை மட்டும் கொஞ்சம் சரியாக கவனித்திருந்தால், ராஜா லிங்கேஷ்வரன் ரசிகர்களை மட்டுமல்ல, எல்லார் மனதிலும் அணை கட்டி கவர்ந்திருப்பார்.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 25 மே, 2014

மக்களின் மனம் கவர்ந்த கோச்சடையான் !

வணக்கம்,

There are Heroes, There are Superheroes, But There is Only One Rajnikanth.

இங்கு ஹீரோக்கள் இருக்கிறார்கள்; சூப்பர் ஹீரோக்களும் இருக்கிறார்கள்; ஆனால் ரஜினிகாந்த், ஒரே ஒருவர் மட்டுமே.

இது தலைவருக்காக சொல்லபட்டதானாலும், அது தான் உண்மை. கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ஒரே உச்சபட்ச நடிகர். இவரை பல்வேறு பாத்திரங்களில், பல்வேறு நடிப்பில், பல்வேறு கோணங்களில் பார்த்துள்ளோம். கருப்பு-வெள்ளை, ஈஸ்ட் மென் கலர், 3D என திரையில் பல வடிவங்களில் ரசித்துள்ளோம். இப்போது மோஷன் கேப்சர் (motion capture) என்னும் புதிய தொழில் நுட்பத்தில், புதிய பரிமாணத்தில் தமிழ் சினிமாவை அடுத்த படிக்கு கொண்டு போக, முதல் அடி எடுத்து  வைத்து நம்மை ஆள வருகிறார் கோச்சடையான்.     

படத்தின் ட்ரெயிலர் வந்த நாள் முதல், படத்தில் அனிமேஷன் சரியில்லை; கார்ட்டூன் படம் போல இருக்கிறது ; கம்ப்யூட்டர் வீடியோ கேம் போல ஆட்கள் இருக்கிறார்கள் என்று குறை கூறப்பட்டது . சொல்லப்போனால் உண்மையும் அது தான். டிரைலரில் ரஜினியின் தாண்டவம், நடந்து வருவது, எல்லாம் பார்த்து ஒரு கார்ட்டூன் படம் என்றே கேலி பேச ஆரம்பித்து விட்டார்கள்.  சூப்பர் ஸ்டார் ஒரு சீனில் நடித்தாலும் படம் ஓடிவிடும் என்று நம்பி கொண்டிருந்தவர்கள், இந்த படம் ஓடாது என்று பகிரங்கமாகவே சொன்னார்கள்; "கோச்சடையான்  பிளாப் ஆக 10 காரணங்கள் " என்று சில இணைய தள ஊடகங்கள் செய்திகளை பரப்பவும் ஆரம்பித்தன.

இதையேல்லாம் பார்த்து கொஞ்சம் யோசித்த தலைவர், கோச்சடையான் படம் வருவதற்கு முன் "லிங்கா"-வை ஆரம்பித்து விட்டார். பொதுவாக ரஜினியின் படம் வந்து சில நாட்களுக்கு பிறகு தான் அடுத்த படத்தின் பேச்சு அடிப்படும். லிங்காவின் இந்த அவசர ஆரம்பத்திற்கு காரணம் இதுவாக கூட இருக்கலாம்.

ஆனால், இந்த கேலிகூத்தை அடித்து, துவைத்து தன் வழக்கமான பாணியில் ரசிகர்களையும் , மக்களையும் கவர்ந்திழுத்து விட்டார் ரஜினி.
இப்படம் ஆஹா !! ஓஹோ!!!,  இந்தியா சினிமாவில் இது போன்ற கதையே வரவில்லை என்றெல்லாம் நான் சொல்லவில்லை. நாம் ஏற்கனவே கருப்பு வெள்ளை படங்களில் பார்த்த  ஒரு சாதாரண கதை தான். அதைதான்  தொழில் நுட்பத்துடன் சேர்த்து, இரண்டு மணி நேரம் நம்மை உட்காரவைத்து, போரடிக்காமல் காட்டுகின்றனர். இரண்டு மணி நேர படத்தில், 6 பாடல்கள்  தான் கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது. ஆக மொத்தத்தில்,  குடும்பத்துடன் பார்க்கும் ஓர் நல்ல பொழுது போக்கிற்கான படம் என்று சொல்லலாம்.


படத்தின் background animation நன்றாக உள்ளது. 3டி -யில் பார்பதற்கும், 2டி யில் பார்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்களின் முக அமைப்புதான் சற்று தடுமாற வைக்கிறது... "இவரா அவர் ???? "; "அந்த பெண்ணா அது??? " என்று நம்மையே குழப்பம் அடைய செய்கிறார்கள். அது மட்டும் தான் எனக்கு குறையாக தெரிகிறது. சற்றே பழைய ராஜா காலத்து பழி வாங்கும் கதை என்றாலும், அனிமேஷனுக்காக குழந்தைகளும், ரஜினிக்காக ரசிகர்களும் , பொழுது போக்கிற்காக மற்றவரும் இந்த படத்தை ஒரு முறை தாராளம் பார்க்கலாம்.! 

அவதார், டின்-டின் போன்ற ஆங்கில படங்களோடு ஒப்பிடுபவர்களுக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். ஹாலிவுட் திரைப்படங்களெல்லாம் 2000 கோடி/ 4000 கோடியில், 5 அல்லது 6 ஆண்டுகளில் தயாரகிறது. இந்தியாவில் 200 கோடியில் அதே அளவில் ரிசல்ட்டை எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. நம் மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக அவதார், டின்-டின் போன்ற படங்களை எடுத்த அதே தொழில்நுட்பம் உபயோகிக்கப்படுக்கிறது என்று பட இயக்குனர் சொல்லியிருக்கலாம்.

இந்த 100 வருட இந்திய திரைப்பட வரலாற்றில்,


ராஜா ஹரிசந்திரா (1913) -இந்திய சினிமாவின் முதல் ஊமை படம்.

கீசக வதம் (1918) - தென் இந்திய சினிமாவின் முதல் ஊமை படம்.

ஆலம் ஆரா (1931)  - இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்.
 
கிசான் கன்யா (1937) - இந்திய சினிமாவின் முதல் கலர் படம்.

அலிபாபாவும் 40 திருடர்களும் (1956) - இந்திய சினிமாவின் முதல் கேவா கலர் படம்.

பானியன் டீர்  (1957) - இந்திய சினிமாவின் முதல் அனிமேஷன் படம்.

ராஜாராஜ சோழன் (1973) - தென் இந்திய சினிமாவின் முதல் சினிமா ஸ்கோப் படம்.

மை டியர் குட்டி சாத்தான் (1984) - இந்திய சினிமாவின் முதல் 3டி படம்.

ராஜா சின்ன ரோஜா (1989) - இந்திய சினிமாவில் முதல் முதலில் அனிமேஷன் கதாபாத்திரங்கள், நடிகர்களுடன் நடித்த படம்.

கோச்சடையான் (2014) - இந்திய சினிமாவின் முதல் மோஷன் கேப்சர் படம்.

அந்த வரிசையில் இந்திய சினிமாவின் முதல் மோஷன் கேப்சர் திரைப்படம் கோச்சடையான் என்று  பெருமையாக சொல்லி கொள்ளாமல் இருக்க முடியாது.

இது ஒரு டை-ஹர்ட் ரஜினி ரசிகனின் விமர்சனம் என்று ஏளனம் செய்தாலும் சரி , அல்லது பொதுவாக ஓர் சினிமா ரசிகனின் பார்வை என்று நினைத்தாலும் சரி. என்னை பொருத்தவரை, கோச்சடையான் - இந்திய சினிமாவின் ஓர் மைல்கல் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்