வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

ஜெயிலர் - விமர்சனம்

வணக்கம்,

படத்தின் பெயர் வெளியிட்ட நாள் முதல் எல்லோரையும் போலவே நானும் ஜெயிலர் படத்துக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். First look ப்ரோமோவில் தலைவரின் மாஸ் லுக்கை வெளியிட்டனர். நீல சட்டையும், காக்கி பேண்ட்டும், மூக்கு கண்ணாடியும் உண்மையிலேயே தலைவருக்கு நன்றாகதான் இருந்தது. ஆனால் காருக்குள்ளிருந்து வெளியே வந்து கத்தி, துப்பாக்கி எடுப்பதையெல்லாம் பார்க்கும் போது, இன்னொரு தர்பார் போல ஆகிவிட கூடாதுடா சாமி என வேண்டிக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக இம்முறை நெல்சன் பெரிய தரமான சம்பவம் செய்ய போகிறார் என நினைத்து கொண்டிருந்தேன்.

ஏற்கனேவே சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என மோதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஆடியோ லாஞ்சில் தலைவர் சொன்ன 'காக்கா பருந்து' கதை வேறு மீடியாக்களுக்கு தூபம் போட்டது போல ஆகிவிட்டது. எங்கும் இந்த அலப்பறை தான்.

சூப்பர் ஸ்டாருக்கு முந்தைய இரு படமும் சரியாக போகவில்லை. இயக்குனர் நெல்சனும் பீஸ்ட் செமயாய் அடி வாங்கிட்டார். அதனால் இருவருக்குமே ஜெயிலர் ஒரு முக்கியமான படமாக ஆகிவிட்டது. சூப்பர் ஸ்டார் அவரது மாஸை, கெத்தை விட்டுக் கொடுக்காமலிருக்க, அவர் கொடி மீண்டும் பறக்க இந்த படம் ஜெயித்தே ஆக வேண்டும். அதேபோல வெற்றி இயக்குனர் என்ற பெயரை தக்க வைத்து கொள்ளவும், தன்னை மீண்டும் நிரூபிக்கவும் நெல்சனுக்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும். எப்படியாவது ஓடி விடவேண்டும் என்பதற்காகவா இல்லை கதைக்காகவா என தெரியவில்லை. படம் முழுக்க மெகா நட்சத்திரங்கள் கொண்டு வந்து இறக்கியுள்ளனர். இதற்கு பதிலாய் கொஞ்சம் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Jailer-movie-review

படத்தின் கதை இதுதான். போலீஸ் அதிகாரி அர்ஜுன் (வசந்த் ரவி) சிலை கடத்தல் கும்பலை தேடி போகையில் கொலை ஆவதாய் சொல்கிறார்கள். மகனை கொன்றவர்களை பழி வாங்கும் ரிடயர்ட் ஜெயிலர் அப்பாவான முத்துவேல் பாண்டியனின் கொலை மாஸான பழி வாங்கலே படத்தின் கதை. கடைசியில் மகன் சாகவில்லை; அவருக்கும் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உண்டு என தெரிந்து மகனையே போட்டு தள்ளும் பாசமான 'தங்கப்ப தக்கம்' பார்முலா கிளைமேக்ஸ்.

சூப்பர் ஸ்டார் பற்றி என்ன சொல்வது? தல முதல் அடிவரை தலைவரு அலப்பர தான்! அதே ஸ்டைல், மிடுக்கு, வேகம், பவர் டெலிவரி என நம்மை படம் முழுக்க கவர்கிறார்.🤩 வில்லன்களை கொலை செய்யும் போது, அந்த லேசான சிரிப்பு உண்மையிலேயே சைக்கோ போல தான் இருக்கிறது. ஆனால் தலைவரிடம் இது போன்ற வழக்கமான மாஸ் கமர்ஷியல் படமாய் இல்லாமல் வேற லெவலில் எதிர்பார்க்கிறோம் என யாரவது சொல்லுங்களேன் ப்ளீஸ்...🙏

ஒரு சில இடங்களில் சூப்பர் ஸ்டாரின் பழைய படங்களின் ஸ்டைல் மேனரிசம் காட்டி ரசிகர்களின் goosebumps momentகளை ஏற்றியுள்ளார். படத்தில் ஒரு சண்டை கூட இல்லை. எல்லோரையும் சதக்..சதக்... இல்லன்னா.. பட்.. பட்..பட்.. என ஸ்நைபர் ஷாட்டில் போட்டு தள்ளி விடுகின்றனர். ஒரு முன்னாள் போலீஸ் ஜெயிலர் ஆல் இந்தியா லெவல்ல தாதாகள் பிராண்டாக இருப்பது தான் எப்படி என தெரியவில்லை.

படத்தில் பெரிய பட்டாளமே நடித்துள்ளது. ரம்யா கிருஷ்ணன் மனைவியாக வருகிறார். சூப்பர் ஸ்டாரின் மகனாக வசந்த் ரவி முகத்தில் ரியாக்ஷன் காட்டாமல் சும்மா வந்து போயுள்ளார். பேரனாக மாஸ்டர் ரித்து இருக்கிறார். யோகி பாபு காமெடி ஓரிரெண்டு இடத்தில தான் இருக்கிறது. அதுவும் சுமாராக தான் இருக்கிறது. மலையாள நடிகர் விநாயகனின் வில்லன் நடிப்பு மிரட்டலாக இருந்தது. ரத்த நிற கண்ணில் எதிரிகளை அடித்தே கொல்கிறார். ரஜினிக்காக சரியான வில்லன் தேர்வு!👍மற்ற எல்லா பெரிய நடிகர்களும் திரையில் வந்து போயுள்ளனர். பிளாக் காமெடி 'டாக்டர்' அளவு ஒர்கவுட் ஆகவில்லை. ஏன் வைத்தார்கள் என தெரியவில்லை. மலையாள தேசத்திலிருந்து மோகன்லால், கன்னட தேசத்திலிருந்து சிவராஜ்குமார், தெலுங்கில் சுனில், ஹிந்தியில் ஜாக்கி ஷெராப் என எல்லா வுட்டிலிலும் ஆட்கள் இறக்கியுள்ளனர். ஆனால் இவர்கள் எல்லோரும் 10 நிமிஷத்துக்கு மேல் திரையில் வரவில்லை. இவர்கள் எல்லாரையும் வில்லனாக காட்டியிருந்தால் கூட இன்னும் அடிப்பொலியாக இருந்திருக்கும்.  

பாடல்கள் எல்லாமே எனோ எனக்கு சுமார் ரகம் போல தான் இருந்தது. அனிருத்தின் BGM மாஸு பீசு... தமன்னாக்கு ஒரு பாட்டிற்கு மட்டும் வந்து ஆடி செல்கிறார். 'காவலா' பாட்டு ரீல்ஸில் பட்டி தொட்டியெங்கும் பரபரக்க, ஏனோ பெரிதாய் என்னை ஈர்க்கவில்லை. வேணும்ன்னா தமன்னாக்காக ஒருமுறை பார்க்கலாம். 'ரத்தமாரே' பாட்டு எதுக்குனே தெரியவில்லை. 'டைகர் கா ஹுக்கும்' பாடலில் ஒரு சில வரிகள் மாஸாய் இருந்தது; பாட்டாய் கேட்டால் ஒரே இரைச்சல் தான். ஆனால் தலைவரையே தம்மை பற்றி சுய தம்பட்டம் அடிப்பது போல, வரிகள் வைப்பது என்பது எல்லா படத்திலும் (பேட்ட - மாஸு மரணம், தர்பார் - சும்மா கிழி...), எல்லா பாட்டிலும் ரசிக்க முடியவில்லை. 

நேற்று முதல் படம் பார்த்த எல்லாரும் இன்ஸ்டாவிலும் , வாட்ஸாப் ஸ்டேடசிலும் படம் தாறுமாறு, second half வேற லெவல்... அப்படி இப்படின்னு போட்டுருக்காங்க.. ஆனா எனக்கு என்னமோ அப்படி தெரியல. ஆனா ஒண்ணு மட்டும் உறுதி. தர்பார், அண்ணாத்தே-க்கு இது எவ்வளவோ தேவலை..

மொத்தத்தில் படம் ரஜினி ரகிகர்களுக்கானது. மற்றவர்கள் ஒரு முறை பார்க்கலாம் ! Tiger ka Hukum.. அவ்வளவு பெரிசா கம்பீரமான கட்டளை இல்லை. அர்த்தமாயிந்தா ராஜா !😉


நன்றி!!!
பி. விமல் ராஜ்