வெள்ளி, 26 ஜனவரி, 2024

கொன்றால் பாவம், தின்றால் போச்சு!

வணக்கம்,

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் மற்றும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டில் எல்லோருக்கும், எல்லா வளமும் மகிழ்ச்சியும் பெற்றிட வாழ்த்துக்கள்!

2024-ன் முதல் பதிவில் உணவை பற்றி எழுதலாம் என எண்ணியுள்ளேன். நாம் பெரும்பாலும் அசைவ ஓட்டல்களுக்கு செல்லும் போது அங்கு 'ஹலால்' (Halal) என்று ஆங்கிலத்திலும், உருதுவிலும் எழுதி ஓட்டப்பட்டிருக்கும். நானும் பலமுறை பார்த்திருக்கிறேன். முன்பெல்லாம் அதற்கு சரியான அர்த்தம் தெரிந்திருக்கவில்லை. சில காலம் பின்னர் அந்த ஹலால் ஸ்டிக்கர் இருந்தால் மட்டுமே முஸ்லீம் மக்கள் சாப்பிட வருவார்கள் என தெரிந்து கொண்டேன். சில நாட்கள் முன்பு மாமிச உணவு, ஹலால் சர்ச்சைகள் எழுந்த போது தான் ஹலால் போல மற்ற மதங்களிலும் உணவு முறைகள் இருக்கிறது என தெரிந்து கொண்டேன். இணையத்தில் அதை பற்றி படித்ததை உங்களிடம் பகிர்கிறேன்.

Halal-koscher-jhatka-foods

உணவும் மதமும் எப்போதுமே பிரிக்க முடியாத ஒன்று. ஓவ்வொரு மதமும் அந்தந்த மக்கள் எதை சாப்பிட வேண்டும், எதையெல்லம் சாப்பிட கூடாது என்று சில வழிமுறைகளை வைத்துள்ளது. நம் உணவை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்றாலும், சில நேரத்தில் அப்படி இருப்பதில்லை. நமக்கு தெரிந்ததெல்லாம் சைவம் (Vegeterian), அசைவம் (Non-Vegeterian), சமீபமாக வீகன் (Vegan). அவ்வுளவுதான். 


உணவு முறைகளில் என்னென்ன மத கட்டுப்பாடுகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம். 

  • ஹலால் (Halal)
  • கோஷர் (Koscher)
  • ஜட்கா (Jhatka) 

முதலில் ஹலால் பற்றி வருவோம். 'ஹலால்' (Halal) என்னும் அரபி சொல்லுக்கு அனுமதிக்கப்பட்டது என்று அர்த்தம். இஸ்லாம் மதத்தின் போதனைப்படி எவையெல்லாம் அனுமதிக்கபட்டுள்ளதோ, எப்படியெல்லாம் நடக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் 'ஹலால்' என்று சொல்வார்கள். அனுமதிக்கப்படாததை 'ஹராம்' (Haraam) என சொல்வார்கள். 


இஸ்லாமிய சட்டம் எந்த உணவு உட்கொள்ளத்தக்கவை மற்றும் எவை உட்கொள்ளத் கூடாது என்று வகுத்துள்ளது. உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையினையும் வகுத்துள்ளது. அம்முறை தபிஹாஹ் (Dabihah) எனப்படுகின்றது. இஸ்லாமிய சட்டப்படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். தபிஹாஹ் பின்பற்ற சில விதிகலும் இருக்கிறது:


*) கூரான கத்தி/இறைச்சி வெட்டும் ஆயுதம் கொண்டு கழுத்து, உணவுக் குழாய் மற்றும் கழுத்து நரம்பின் மேல்பகுதியில் கீறப்பட்டு, தண்டுவடம் பகுதியை வெட்டாமல் தலையை மட்டும் துண்டிக்க வேண்டும்.

*) இறைச்சியை வெட்டும் போது காபாவின் திசையை நோக்கி வெட்ட வேண்டும்.

*) மேலும் பிஸ்மில்லா அல்லா-ஒ-அக்பர் என்ற இஸ்லாமிய பிரார்த்தனையை சொல்லி வெட்ட வேண்டும். 

*) ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கால்நடையும் வெட்டும் போது பிரார்த்தனை சொல்லி கால்நடைகளை வெட்ட வேண்டும்.

*) இரத்தம் அல்லது இரத்தம் சார்ந்த உணவுகளை உண்ண கூடாது.

*) மற்ற மிருகங்களால் கொல்லபடாமல், அதுவாய் இறந்த விலங்காய் இருத்தல் வேண்டும்.

*) பன்றி இறைச்சி உண்ண கூடாது.

*) ஆல்கஹால் மற்றும் போதை தரும் பொருட்கள் கூடாது.

*) அதே போல சமைக்க பயன்படுத்தும் பொருட்கள், சுத்தமாகவும் இருக்க வேண்டும்; தபிஹாஹ் இல்லாமல் தயாரிக்கப்பட்ட உணவ பொருளை பயன்படுத்தவோ சேர்க்கவோ கூடாது.


விலங்குகளை இறைச்சிக்காக கொல்லும் போது குறைந்த துன்பத்தில் உயிர் பிரிவதற்காகவும், அல்லாவின் பெயரை சொல்லி அவருக்காக பலியிடபடுகிறது என்று உறுதி செய்யவும் தான் இத்தகைய விதிகள் பின்பற்றப்படுகிறது. உலகில் உள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் இதனை விடாது கடைப்பிடித்து வருகின்றனர். இறைச்சி பொருட்கள் மட்டுமல்ல மற்ற சைவ பொருட்களான காய்கறிகள், தானியங்கள், பால், எண்ணெய் பொருட்கள், இனிப்பு/மிட்டாய் பொருட்களிலும் ஹலால் சமாச்சாரம் வியாபாரம் இருக்கிறது. உலகளாவிய ஹலால் சந்தை 2023-ல் 2500 பில்லியன் டாலர் அளவு எட்டியுள்ளது. இந்த ஹலாலை சுற்றிய சந்தை அடுத்த 10 வருடத்திற்குள் 5800 பில்லியன் டாலர் அளவுக்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


கோஷர் (Koscher) உணவு முறை என்பது யூதர்கள் பயன்படுத்தும் முறை ஆகும். யூதர்களின் புனித நூலில் இதனை காஷுருட் உணவு சட்டங்கள் மூலம் கடவுளால் சொல்லப்பட்டது என சொல்கிறார்கள். எந்தெந்த உணவுகளை உண்ண வேண்டும், அவற்றை எவ்வாறு தயாரிப்பது மற்றும் எவ்வாறு சேர்த்து சமைப்பது போன்ற விதிகளை உடையது. அனைத்து யூதர்களும் கோஷர் உணவை உண்பதன் மூலம் காஷுருட் விதிகளை கடைபிடிப்பதில்லை. கோஷர் என்னும் சொல்லுக்கு Fit என்று அர்த்தம். அதாவது யூதர்கள் உணவு உண்ண ஏற்ற முறை என்று பொருள் வரும். இதிலும் சில கோஷர் உணவுவிற்கான விதிமுறைகள் இருக்கிறது.


*) பாலும், இறைச்சியும் சேர்த்து சாப்பிடவோ, சமைக்கவோ கூடாது.

*) பழைய உணவை உண்ண கூடாது. சில நேரத்தில் மீன் உணவு மட்டும் விதிவிலக்கு 

*) வைன் குடித்தல் யூதர்களின் உணவில் முக்கிய ஒன்று. அந்த வைனும் கோஷர் விதிப்படி செய்யப்பட்ட, பதப்படுத்தப்பட்ட முறையில் இருக்க வேண்டும்.

*) ஷோகேட் (shochet ) என்பவர் யூத சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட முறையில் கால்நடைகள் கொல்வதற்கு தகுதியானவர் என்று அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட நபர். அவர் மட்டுமே இறைச்சியை குறிப்பிட்ட முறையில் வெட்ட வேண்டும்.

*) மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி, வான்கோழி, வாத்து, மான் இறைச்சி போன்ற கோஷர் கோஷர் உணவில் அனுமதிக்கப்பட்டவை ஆகும்.

*) இறைச்சி உண்ணும் பறவைகள், வவ்வால் போன்றவற்றை உன்ன கூடாது. முயல், ஒட்டகம், பன்றி மற்றும் ஹைராக்ஸ் ஆகிய 4 விலங்குகளை உண்ண கூடாது.

*) மற்ற மிருகங்களால் இறந்த விலங்கை  உண்ண கூடாது.

*) கடல் சிப்பிகள், இறால் போன்றவற்றை உண்ண கூடாது.

*)  இந்த வழிகாட்டுதளின்படி, இறைச்சிக்காக வெட்டும் போது விலங்குகள் தொண்டையின் குறுக்கே துல்லியமான ஆழத்தில் வெட்டப்பட்டு, கழுத்து நரம்புகள், வேகஸ் நரம்புகள், மூச்சுக்குழாய் மற்றும் உணவுக்குழாய் ஆகிய இரண்டையும் துண்டித்து வெட்ட வேண்டும். இப்படி வெட்டும் போது, இரத்தம் கசியாமல் இறப்பதன் மூலம் அதிக துன்பம் இல்லாமல் விலங்கு உடனடியாக இறந்துவிடுவதை இது உறுதி செய்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த முறையை ஷேச்சித்தா (Shechita) என்று சொல்வார்கள். ஒரே முறை பிரார்த்தனை செய்து பல கால்நடைகளை வெட்டலாம்.

*) சில அனுமதிக்கப்பட்ட விலங்குகளின் முன்பகுதியை மட்டுமே மக்கள் உண்ண முடியும்.

*) இரத்தத்தின் அனைத்து தடயங்களையும் அகற்றுவதற்கு  சாப்பிடுவதற்கு முன் இறைச்சியை ஊறவைக்க வேண்டும்.


பழமைவாத மரபுவழி (ஆச்சாரமான) மத கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் யூதர்கள் மற்ற சைவ உணவுகளையும், டப்பாவில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவுகளையும் கோஷர் குறியீடுயில்லாமல் வாங்குவதில்லை. 2023-ல் கோஷர் உணவு சந்தையின் உலகளாவிய சந்தை மதிப்பு 42 பில்லியன் டாலர்களாம். இன்னும் பத்து ஆண்டுகளில் 72 பில்லியன் டாலர்களாக மாறும் என ஆய்வுகள் சொல்கிறது. 


ஜட்கா (Jhatka) என்பது சீக்கிய மதத்தினரும், இந்து மதத்தினரும் பின்பற்றப்படும் உணவு முறை ஆகும். ஜட்கா என்னும் சொல் சமஸ்கிருத சொல்லான ஜதிதி (Jhatiti) என்னும் சொல்லிலிருந்து வந்துள்ளது. அதற்கு 'உடனடியாக, விரைவாக' என்று பொருள் வரும்.


கால்நடையை இறைச்சிக்காக வெட்ட, கூரான வாள்/கத்தி/கோடாரி கொண்டு ஒரே வெட்டில் தலையை துண்டாக்க செய்ய வேண்டும். இதன் மூலம் உடனடியாக அதிக துன்பமில்லாமல் கால்நடையின் உயிர் பிரியும் என்பதான நம்பிக்கை. மேலும் வெட்டும் முன் விலங்கு வெட்டப்பட போகிறோம் என விலங்கு பயப்படாமல் இருத்தல் வேண்டும். சீக்கிய மதபாரம்பரியத்தின் படி, ஆயுதத்தால் ஒரே வெட்டில் கொல்லப்பட்ட விலங்குகளிடமிருந்து பெறப்படும் இறைச்சி மட்டுமே மனித உணவுக்கு ஏற்றது என குரு கோவிந்த் சிங் கூறியுள்ளார். இந்து மதத்திலும் இதே முறை கடைபிடிக்கப்படுகிறது.


இதே போல கிருஸ்துவ மதத்திலும் புதிய ஏற்பாட்டில் உணவுக் கட்டுப்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன: சிலைகளுக்குப் பலியிடப்பட்ட உணவு, இரத்தம், கழுத்தை நெரிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான்.


இந்தியாவில் இஸ்லாமிருடைய இறைச்சி கடையில் ஹலால் முத்திரையுடன் இருக்கும். மற்ற மதத்தினர் நடத்தும் கடையில் அவர்கள் என்ன முறை கடைபிடிக்கிறார்கள் என பெரும்பாலும் தெரியாது. நாடு முழுவதும் எல்லா அசைவ ஓட்டல்களிலும், நட்சத்திர ஓட்டல்களிலும், Thalapakatti, KFC, McD போன்ற பெரும் வணிக உணகத்திலும் ஹலால் உணவே கிடைக்கிறது. அதன் stickerகளை எங்கும் பார்க்க முடிகிறது. சில நாட்களுக்கு முன், இந்து அமைப்புகள் எங்களுக்கும் ஏன் அல்லாவின் பெயரை சொல்லி வெட்டப்படும் ஹலால் உணவு திணிக்க படுகிறது என கேள்வி எழுப்ப ஆரம்பித்து சர்ச்சையாக்கினர். பெரும்பாலான இடங்களில் ஹலால் மட்டுமே கிடைத்த போதிலும் இப்போது ஜட்கா மற்றும் கோஷர் மாமிசங்களும் ஆங்காங்கே கிடைக்கின்றன. இந்த மத கோட்பாடுகள் எல்லாம் உணவில் திணிக்கப்படுவது வியாபாரத்திற்கு தான் ஒழிய வேறேதும் இல்லை.


ஒவ்வொரு மதத்திலும் இது போன்ற உணவு பழக்க வழக்கங்கள் கட்டாயமாக பின்பற்ற சொல்லப்பட்டுள்ளன. அதை பின்பற்றாதோர் பாவம் செய்தவர்களாக மதம் சொல்கிறது. எம்மதமாயினும் யார்யாருக்கு என்ன விருப்பமோ அதை அவர்கள் அதை உட்கொள்ளலாம்; என்னை பொறுத்தவரையில் கொன்றால் பாவம் தின்றால் போச்சு. அவ்ளோதான்.! அப்புறம் என்னங்க... வர ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்ல என்ன ஸ்பெஷல்? சிக்கனா?? மட்டனா?? மீனா?? Beaf ஆ?? பின்னோட்டதில் சொல்லுங்க...



நன்றி!!!

பி. விமல் ராஜ்