வியாழன், 31 டிசம்பர், 2015

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

வணக்கம்,

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

நாளை பிறக்க போகும் இந்த புதிய 2016 ஆண்டு, உங்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும், வளத்தையும் அள்ளி கொடுக்கட்டும் !

happy-new-year-2016-wishes
click to enlarge
வரும் புத்தாண்டில் நம் வீடும், நாடும் எல்லா புகழும், வளமும், செல்வமும் பெற்று சிறந்து விளங்க வேண்டும் என வேண்டுகிறேன்.

2014 ஆம் ஆண்டு முடியும் போது, அடுத்த ஆண்டு (2015-ல்) குறைந்தது 50 பதிவுகளாவது எழுத வேண்டும் என எண்ணி இருந்தேன். ஆனால் 2015 ஆம் ஆண்டில் வெறும் 28 பதிவுகளை மட்டுமே எழுதியுள்ளேன். நேரமின்மை மற்றும் பணி காரணமாக பதிவுகள் எழுத முடியவில்லை.

அடுத்த ஆண்டாவது 50 பதிவுகளை எழுதி விட வேண்டும் என நினைக்கிறேன். அது கூட சந்தேகம் தான் போல. போன வருடத்தை விட, வரும் வருடத்தில் பல புதிய சுகமான பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், முடிந்த அளவு எழுத முயற்சி செய்யல்லாம் என எண்ணி உள்ளேன். என்னை பாராட்டி, ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் பல கோடி!

மீண்டும் Happy New Year !!!

2015 ஆண்டில் பழைய பேப்பரில் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகள் :

ஃபேஸ்புக் அபத்தங்கள் !
http://www.pazhaiyapaper.com/2015/01/facebook-hoaxes.html

அர்த்தமில்லாத வார்த்தைகள் !
http://www.pazhaiyapaper.com/2015/03/meaningless-tamil-words.html

அ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு !
http://www.pazhaiyapaper.com/2015/05/ghost-haunted-places-in-tamilnadu.html

காப்பியடிக்கப்பட்ட கதை !
http://www.pazhaiyapaper.com/2015/06/inspiration-and-copied-tamil-movies.html

தடைகள் 800!
http://www.pazhaiyapaper.com/2015/08/800-porn-sites-ban.html

நம்ம சென்னை 377 !
http://www.pazhaiyapaper.com/2015/06/namma-chennai.html

எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்!
http://www.pazhaiyapaper.com/2015/08/india-before-british-invasion.html

புல்லுக்கு இரைத்த நீர்!
http://www.pazhaiyapaper.com/2015/09/wasted-indian-money.html

கல்லூரி கட்ட பஞ்சாயத்துக்கள் - திணறும் மாணவ / மாணவிகள்!
http://www.pazhaiyapaper.com/2015/10/college-attrocities.html


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 12 டிசம்பர், 2015

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

வணக்கம்,

டிசம்பர் 12 - தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

இது சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் சிறப்பு பதிவு :-)

ஒரு சாதாரண பஸ் கண்டக்டரிலிருந்து ஒரு புகழ் பெற்ற உச்ச நட்சத்திரமாக மாறி, அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். 1980-களில் முரட்டு காளை, பில்லா, போக்கிரி ராஜா, மூன்று முகம் ஆகிய படங்கள் வெளிவந்த போது அவர் கட்-அவுட்க்கு மாலைபோட்டு ஆடியவர்களின் பேரன் வயதுடையவர்கள் தான் இப்போது எந்திரன், லிங்காவுக்கு முன் ஆடுகிறார்கள். மூன்று தலைமுறைகளாக தமிழ் மக்களை காந்த விழியாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்துள்ளார்.


இங்கே ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருமே அவர் ரசிகர்கள் தான். எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்று மன்னனாக, ராஜாதி ராஜாவாக இமயத்தை வென்ற பாண்டியனாக, கோச்சடையானாக  உச்ச நட்சத்திரமாய் இன்னும் மின்னி கொண்டிருக்கிறார். அதற்கு சாட்சி, கபாலி படப்பிடிப்புக்கு போன இடத்தில் அவருக்கு கிடைத்த மலேசியா வரவேற்பு.

கூகிள் இமேஜ் தளத்தில் சென்று "Thalaivar" என டைப் பண்ணி தேடுங்கள். இரு தலைவர்களின் புகைப்படங்களை காட்டும். ஒன்று விடுதலை புலி தலைவர் பிரபாகரன்... மற்றொன்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.

ஒரு சினிமா பிரபலரை பிடித்தவர்கள் என கோடி பேர் இருக்கும் போது, பிடிக்காதவர்கள் என லட்சம் பேராவது இருப்பார்கள். சூப்பர் ஸ்டாரை   பிடிக்காதவர்கள், அவருடைய புகழை வெறுப்பவர்கள், அவரை துதிபவர்களை தூற்றுபவர்கள் என பலர் உள்ளனர். அவர்கள் கேட்கும் கேள்வியெல்லாம் இது தான்...

"தமிழ் நாட்டுக்காக உங்க ரஜினி என்ன செய்தார்???
 தமிழ் மக்களுக்காக உங்க தலைவர் என்ன செய்தார்???
 தமிழ் ரசிகனுக்காக உங்க சூப்பர் ஸ்டார் என்ன செய்தார்??? "

இது அந்த பில்லியன் டாலர் கேள்வி!

தமிழ் ரசிகர்கள் மூலம் சம்பாதிப்பதை ரஜினி வேறு மாநிலங்களில் சொத்து வாங்கி சேர்க்கிறார்; தமிழ் மக்கள் நலனுக்காக ஒன்றுமே செய்யவில்லை;
அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி ஏமாற்றுகிறார்; காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு சாதகமாக பேசுகிறார்; நதிநீர் திட்டத்துக்கு கொடுக்கிறேன் என்று சொன்ன பணத்தை தரவில்லை; அவரது படம் ஓட வேண்டும் என்பதற்காக ரசிகர்களை சந்தித்து பேசி, ஏமாற்றுகிறார். இது போல இன்னும் பல கேள்விகள்/ குறைகள் இருக்கிறது பொது ஆர்வலர்கள் கையில்.

மேலுள்ள கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதிலளிக்கிறேன். நீ யார் பதில் சொல்ல எனக் கேட்காதீர்கள். அவருடைய கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். அவ்வளவே!

* முதலில் ஒரு நடிகரை நடிகராக பார்க்க வேண்டும். சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை. நற்பெயரையும், ரசிகர்கள்  கூட்டத்தையும் அவ்வளவு சீக்கிரம் யாராலும் சம்பாதிக்க முடியாது. அவருடைய நடிப்பும், அமைதியும், பண்பும், வேகமாக வசனம் பேசும் திறனும் அனைவரையும் கவர்ந்தது (ஆரம்பத்தில் தமிழ் பேச தெரியாததால், வேகமாக பேசினார். பின்னாளில் அதுவே ஸ்டைலாகி போனது). அவர் பணியின் மீதுள்ள மரியாதை, நேர்மை காரணமாக இன்று கம்பீரமாக வளர்ந்து நிற்கிறார். இவை தான் தமிழ் மக்களின் மனதில் அவரை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்தது.

* ரஜினி மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என சிலர் சொல்லி வருகின்றனர். தெரியாமல் தான் கேட்கிறேன்... அவர் என்ன செய்ய வேண்டும்??? அவர் நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். நடிப்பு அவரது தொழில். அதை மக்கள் பணம் கொடுத்து பார்க்கிறார்கள். அவர்கள் கொடுத்த பணத்துக்கு தானே படம் பார்கிறார்கள். வேறு என்ன செய்ய வேண்டும் என  எதிர்ப்பார்கிறார்கள் ? தெரியவில்லை... ஒரு நடிகன் ரசிகனுக்கும், ஒரு ரசிகன் நடிகனுக்கும் வேறு என்ன தொடர்பு இருக்க முடியும். நமக்கு பிடித்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்; நாம் ரசிக்கிறோம். இதை தவிர வேறு என்ன செய்ய வேண்டும்... ??? படத்தில் வருவது போல எங்கு தவறு நடந்தாலும் வந்து தட்டி கேட்க வேண்டும் என நினைக்கிறார்களா??? புரியவில்லை.

* ரஜினி தமிழ் நாட்டில் சம்பாதித்த பணத்தை, வெளி மாநிலங்களில் சொத்து சேர்த்து வைக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஹ்ம்ம்..அவர் பணம், அவர் சொத்து.. எங்கு வாங்கினால் என்ன? அது அவர் இஷ்டம். தமிழகத்தில் சம்பாதித்தால் இங்குதான் முதலீடு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா?? அப்படி பார்த்தால், தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் மூலம் பணம் சம்பாதித்த பல தொழிலதிபர்கள் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் சொத்து சேர்த்துள்ளனர். அதை ஒருவனும் கேட்கவில்லையே?


ஆளுக்கு இல்லேன்னா வீட்டுக்கு  ஒரு பத்தாயிரம் கொடுத்தால் அவரை புகழ்வார்களா? இல்லையெனில், வேட்டி சேலை, தையல் மெஷின், பாட புத்தகம், இலவச திருமணம் என சேவை செய்தால் போற்றுவார்களா?? இதை எல்லாம் வழக்கமாய் செய்து கொண்டிருக்கும் நடிகர்களையுமே சேர்த்து தானே திட்டுகிறார்கள்.

* நாட்டுக்காக ரஜினி என்ன செய்தார்? என கேட்கிறார்கள். இந்த கேள்வியை வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளையும், நாட்டை ஆண்டவர்களையும் பார்த்து கேட்காமல் இவரை பார்த்து கேட்டால் என்ன செய்வது ??? ரஜினிக்கா இவர்கள் ஓட்டு போட்டார்கள்? இவரை கேட்டா இலவச பொருட்களை வாங்கினார்கள்??? பிறகு ஏன் ரஜினியை பார்த்து கேட்கிறார்கள் என தெரியவில்லை.

* காவிரி விஷயத்தில் தமிழ்நாட்டுக்காக பேசாமல், கர்நாடகாவுக்கு சாதகமாக பேசுகிறார் என வாதிடுகிறார்கள். அவர் தமிழ் நாட்டுக்கு சாதகமாக பேசினாலோ, குரல் கொடுத்தாலோ, கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாக்கபடுவார்கள். அதற்காக தான் இப்படி இருதலை கொல்லியாக செயல்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.

* தேசிய  நதிகளை ஒன்றாக்க தன் பங்குக்கு ஒரு கோடி தருவதாக சொன்னாரே? ஏன் தரவில்லை என கேட்கிறார்கள் ? முதலில் அந்த திட்டத்தை முறையாக ஆரம்பிக்க சொல்லுங்கள். அப்புறம் பணம் கொடுப்பதை பற்றி கேட்கலாம்.

* ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை பொதுமக்களுக்கு எழுதி தரேன்னு சொன்னாரே? ஏன் செய்யவில்லை என கேட்கிறார்கள். ஹ்ம்ம்.. அவர் தான் உயில் எழுதி வைத்துவிட்டேன் என சொல்லிவிட்டாரே.. பிறகு ஏன் இவர்கள் குடைகிறார்கள் என தெரியவில்லை.

* ரஜினி அவரால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கிறார். டிரஸ்ட் மூலமாகவும் வேறு வாயிலாகவும் செய்கிறார். அதை மேடை போட்டு சொல்வதில்லை.

* அடுத்து அரசியல் - தலைவருக்கு அரசியல் ஆசை இருந்தது. உண்மை தான். ஆனால் எந்திரன் படம் ரிலிசுக்கு முன் ஒரு விழாவிலேயே சொல்லிவிட்டார். எனக்கு அரசியலுக்கு வர பயமாய் இருக்குன்னு.. அப்புறம் ஏனோ தெரியவில்லை, மீண்டும் மீண்டும் இந்த மீடியாக்கள், அவரை அரசியல் கேள்விகளுடன் சுற்றி வருகிறார்கள் என அவர்களுக்கு தான் வெளிச்சம்!

* கடந்த 25 வருடமாக மக்களை ரஜினி ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள். "தமிழ் மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னு சொல்றார்.. ஆனா செய்யல..." என சொல்கிறார்கள். ஹ்ம்ம்...ஒருவர் 25 வருஷமா எதாவது செய்வார்... நம்மளும் எதாவது வாங்கி கட்டி கொண்டு போலாம்னு இருக்கிற மனநிலை உடைய மக்களிடம் என்ன சொல்வது ??????

மொத்தத்தில், இது சூப்பர் ஸ்டாருக்கு வக்காளத்து வாங்கும் பதிவு என்றோ, சப்பைகட்டு கட்டும் பதிவு என்றோ என எண்ணிவிடாதீர்கள். அவருக்கு மட்டுமல்ல... எந்த ஒரு நடிகராயினும், நடிப்பார், பணம் சம்பாதிப்பார், வேலை முடிந்தும் சென்று விடுவார். நாம் படம் பார்த்து, கைதட்டிவிட்டு, ரசித்துவிட்டு போய்விட வேண்டும். அதை விட்டு அவர் ஒன்றுமே செய்யவில்லை என குறை கூறுவது எந்த வகையில் நியாயம்???

யார் என்ன சொன்னாலும் சரி. அவர் பெயர் சினிமா வரலாற்றிலும், தமிழகம் முழுவதிலும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னும் பேசப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.

பின்குறிப்பு- இப்பதிவை படித்தபின் 'பொங்கி' எழுபவர்கள் பின்னூட்டத்தில் பதிவு செய்யமாறு கேட்டு கொள்கிறேன்.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

சென்னை மழை - இரண்டான இரண்டாற்று கரை !

வணக்கம்,

கடந்த ஒரு வாரமாக சென்னையில் அடித்து வாங்கி, மக்களை புரட்டி போட்டது மழை. ஒரே நாளில் 39 செ.மீ மழை;  ஒரு வாரத்தில் 108 செ.மீ மழை; ஊர் முழுவதும் வெள்ளம்; எங்கு காணினும் தண்ணீர் என அல்லோலபட்டது சென்னை மாநகரம். 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழையை பார்த்துள்ளது சென்னை.

கடந்த செவ்வாய் (டிசம்பர் 2) அன்று அதிகாலை ஆரம்பித்த மழை, அன்று இரவு  12 மணி வரை கொட்டி தீர்த்தது. ஏற்கனவே கடந்த வாரங்களில் (தீபாவளி முதல்), பெய்த மழையில் வெள்ள காடாகி போனது சென்னையும் இன்னும் சில மாவட்டங்களும். இதில் மிகவும் மோசமாகி போனது கடலூர், காஞ்சிபுரம் தான். இப்போது  மீண்டும் தொடர் மழையால் மக்களை மிகுந்த துன்பத்துக்கு ஆளாக்கியுள்ளது.

prayforchennai

சென்னையில் உள்ள பெரிய ஏரிகளான புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, போரூர் ஏரி, பள்ளிகரணை எரி, வேளச்சேரி ஏரி, மடிப்பாக்கம் ஏரி ஆகியவை உடைந்து உடைக்கப்பட்டு சென்னையை ஆக்கிரமித்து விட்டது.

ஆற்றங்கரையையும், ஏரியையும் வளைத்து போட்டு வீடு, கல்லூரி, வணிக வளாகம் என சிட்டியாக மாற்றிவிட்டால்.. அது என்ன செய்யும் ??? பிறகென்ன ??? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! 

சென்னைக்கு இரண்டாற்றுகரை என்ற மற்றொரு பெயரும் உண்டு. அடையாறு, கூவம் என இரு ஆறுகள் ஓடுவதால் தான் இப்பெயர். பெருமழையால் இந்த இரு ஆறுகளும் நிரம்பி பெருக்கெடுத்து கரையோர இடங்களை கபளீகரம் செய்துவிட்டது.

மழையால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போனது. வேளச்சேரி, மடிப்பாக்கம், முடிச்சூர், அசோக் நகர், கிண்டி, கோயம்பேடு, ஆவடி, தாம்பரம், ஊரப்பாக்கம், கோட்டூர்புரம், சைதாபேட்டை, மாம்பலம், எழும்பூர், பாரிஸ், போரூர், அடையாறு, பெசன்ட் நகர், சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம்,  வட சென்னையின் பல பகுதிகள் என  கிட்ட தட்ட எல்லா இடங்களும் நீரில் முழுகி போயின. கரையோர ஏரியாக்கள் முழுவதும் முழுகி போய்விட்டது. முக்கிய சாலைகளும், சுரங்க பாதைகளும் நீரில் மூழுகி போய் சென்னை தீவாகவே மாறி போனது.

அத்தியாவசிய பொருட்களுக்கு  தட்டுப்பாடாகி போகவே, அதன் விலைகள் மலைபோல ஏறிபோனது. பால், குடிநீர், மெழுகுவர்த்தி, காய்கறி, உணவு என எதுவும் கிடைக்கவில்லை. பால் லிட்டருக்கு 140 ரூபாய்க்கும், காய்கறிகள்  கிலோ 100 ரூபாய்க்கு விற்கபட்டது.

பலரின் வீட்டில் 2 ஆவது மாடி வரை வெள்ளநீர்  புகுந்து விட்டதால், மக்கள் அனைத்தையும் இழந்து விட்டனர். மின்சாரம், தொலைதொடர்பு என எதுவும் மூன்று நாள் வரை இல்லை. இது வரை 280 பேர் இறந்து விட்டதாக சொல்கின்றனர். தரை, வான் மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது.

அரசின் மீட்பு பணி/  நிவாரண பணிகள் ஏற்கனவே மெதுவாய் நடக்கிறது என பொதுமக்கள் சொல்லி வருகின்றனர். மேலும் இவர்களது அட்ராசிட்டிகள் ஒரு படி மேலே போய், நிவாரண பொட்டலங்களில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி தீவிரமாக நடப்பதாக சொல்கின்றனர். இதை கண்டு பலரும் பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் பொங்கி வருகின்றனர்.


டி.வியில் செய்திகளை உடனுக்கு உடன் தருகிறேன் என சொல்லி விட்டு, மணிக்கு ஒருமுறை போட்ட செய்திகளையே போட்டு காட்டி, சொன்னதையே திருப்பி சொல்லி மக்களை மேலும் பீதிக்கு ஆளாக்குகிறார்கள். தண்ணீர் எங்கு வடிந்துள்ளது, எந்த சாலையில் பயணிக்கலாம், அவசர உதவி எண்கள், பேருந்து வசதி பற்றிய செய்திகளை சொல்லாமல், ஒவ்வொறு ஏரியாவாக சென்று இடுப்பளவு தண்ணீரில் உள்ளவர்களை பேட்டி எடுத்து அவர்கள் துன்பத்தை காசாக்க பார்க்கிறார்கள். ஆளுங்கட்சியின் டி.வி யில்,  அம்மாவின் ஆணைக்கிணங்க, நிவாரண பணிகள் மின்னல் வேகத்தில் நடப்பதாகவும், மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் சொல்லி துதி பாடுகின்றனர்.

chennai-rains

அரசியல்வாதிகள் பொதுமக்களை பார்க்கவரும் போது, மக்கள் அவர்கள் மீது கடும்கோபத்துடன் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஒருவரும் பார்க்க வருவதில்லை... அப்படியே வந்தாலும் கடனுக்கு வந்து ஒரு விசிட் அடித்து சென்று விடுகின்றனர்.

இதற்கிடையில் அவ்வபோது பரவி வரும் சில புரளிகளுக்கும் பஞ்சமில்லை. அந்த ஏரி உடைந்துவிட்டது, இந்த ஏரி உடைந்துவிட்டது, பாலம் இரண்டாகி போனது, முதலை பண்ணையிலிருந்து 20 முதலைகள் தப்பித்து விட்டது, இன்னும் இரு நாட்களில் 250 செ.மீ மழை என நாசா அறிவிப்பு (??!!) ... இன்னும் பல காமெடிகள் வலம் வருகிறது வாட்ஸ் அப்பில்.

இவ்வளவு கொடுமையிலும் ஒரு சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளது. மதம், சாதி, இனம் என எதையும் பாராமல், அனைவரும் ஒருகிணைந்து மக்களுக்கு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வருகின்றனர். தர்காவில் பல இந்து கிறுஸ்தவ மக்களும், இந்து கோவில்களில் பல இஸ்லாமிய மக்களும்  தங்கியுள்ளனர். மதம் பாராமல் மனித நேயத்துடன் உணவளித்து உதவி வருகின்றனர்.

சென்னையில் உள்ள பல தொண்டு நிறுவனங்களும், பல நல்ல உள்ளம் படைத்த மக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கின்றனர்; இன்னும் செய்து கொண்டு வருகின்றனர். மற்ற மாநிலத்திலிருந்தும் அன்புக்கரம் நீட்டப்பட்டு வருகிறது. இச்செய்திகளை நாம் ஊடகங்கள் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய ராணுவமும், தேசிய பேரிடர் குழுவும் சேர்ந்து சீரிய பணியை  ஆற்றியுள்ளது. மீண்டும் ராணுவம் தங்கள் கடமையை செவ்வனே செய்துள்ளது. ராணுவம் மட்டுமல்ல... வலிய வந்து உதவிய இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள், சில மீடியா பிரபலங்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் என இவர்களின் மனிதநேயமிக்க சேவை பணி மகத்தானது. இவர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் !!!

எவ்வளவு தான் நாம் ஒருவரை ஒருவர் அடித்து/தூற்றி கொண்டாலும், ஒரு பிரச்சனை என்று வரும் போது நாம் அனைவரும் ஒன்றுபடுகிறோம் என்ற நினைக்கும் போது மனம் சிலிர்த்து மகிழ்கிறது.

சென்னை மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்த காலம் போக, "எப்படா மழை நிக்கும்?? ", என்ற மன நிலைக்கு வந்து விட்டார்கள். ஆளானப்பட்ட சென்னை மாநகருக்கே இந்த நிலை என்றால், மற்ற மாவட்டங்களின் நிலை???  "ஹ்ம்ம்.. உச்...பாவம்.." என்று சொல்ல தான் முடிகிறது நம்மால்.

"மழையே, போதும் நீ எங்களை சோதித்தது.
சென்று அடுத்த ஆண்டு வா..
நாங்களும் கொஞ்சம் மீண்டு வருகிறோம்... !
#சென்னைமக்கள்  


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 11 நவம்பர், 2015

தூங்காவனம் - விமர்சனம்

வணக்கம்,

உலக நாயகனுக்கு இந்த வருடத்தில் ரிலீசாகும் மூன்றாவது படம் இது.  நீண்ட இடைவேளைக்கு பிறகு, இப்படி ஒன்றன் பின் ஒன்றாக இவருடைய படங்கள் வெளிவருகிறது. படப்பிடிப்பு  ஆரம்பிக்கும் போதே இது 'Sleepless Night' என்ற ப்ரெஞ்ச் படத்தின் அதிகாரபூர்வ தழுவல் என்று சொல்லிவிட்டனர். இல்லாவிடில் இதுவும் காப்பியடிக்க படம் என்று ஜல்லியடித்திருப்பர்கள் நம் வலைமன்னர்கள்.

டிரெய்லரை பார்க்கும் போது ஒரு விறுவிறுப்பான படம் போல தான் தெரிந்தது.  'நான் சொன்னா செய்வேன்...' என்ற பஞ்ச்சில் மிரள வைக்கிறார் உலக நாயகன் கமல் ஹாசன்.


படத்தில் பாடல்கள் இல்லை; டூயட் பாட ஹீரோயின் இல்லை. நைட் கிளப்பில் ஒரு நாள் இரவில் நடக்கிறது மொத்த கதையும். அண்டர்கவர் போலிஸ் அதிகாரியான கமலின் மகனை வில்லன் கும்பல் கடத்தி விடுகிறது. தன் மகனை எதிரிகளிடமிருந்து எப்படி மீட்டார் என்பதே கதை. பொதுவாக இது போன்ற ஆக்ஷன் திரில்லர் வகையறா படங்களில் உலக நாயகன் நடிக்கிறார் என்றால் கதையும், திரைக்கதையும் பின்னி பெடலெடுத்து இருப்பார். ஆனால்  இப்படத்தில் திரைக்கதையில் கொஞ்சம் தேய்வு இருப்பது வருத்தம் தான்.

போதை தடுப்பு பிரிவு போலிசாக கமல். நடிப்பில் எப்போதும் போலதான். நோ கமெண்ட்ஸ்! மகனிடம் பரிவு காட்டும் போதும் சரி, வில்லனிடம் கோபம் காட்டும் போதும் சரி. ஏ கிளாஸ் நடிப்பு. இன்னொரு போலிசாக திரிஷா. மேக்கப் இல்லாமல் பார்க்கும் போது பழைய நடிகை கமலா காமேஷ் போல தான் தெரிகிறார் (சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவின் மனைவியாக நடித்தவர்). அதிரடி பெண் போலிஸ் ஆபிசராக நடிக்க இன்னும் பயிற்சி வேண்டும் என நினைக்கிறன். கமலின் மகனாக அமன் அப்துல்லா. நடிப்பு பரவாயில்லை. மேலும் பிரகாஷ் ராஜ், சம்பத், உமா ரியாஸ், மது ஷாலினி, ஜெகன், கிஷோர், யூகி சேது என பலர் கதையில் வந்து சென்றிருகிருக்கின்றனர்.

கமலின் திருமண வாழ்க்கை, அவருக்கு கொடுக்கப்பட்ட அண்டர்கவர் அசைன்மெண்ட்,  யூகி சேது - கிஷோரின் முன்கதை என எதையும் விரிவாக சொல்லவில்லை.

இது கமல் படம் என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதையிலும், காட்சியமைப்பிலும் அவருடைய டிரேட் மார்கே இல்லை; மது ஷாலினி கிஸ்ஸிங் சீன் தவிர. படம் முழுக்க காட்சிகளும்,  ஹீரோவும் பரபரவென ஓடி கொண்டே இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் படம் பார்க்கவே போர் அடிக்கிறது. கொஞ்சம் தூக்கம் தான் வருகிறது. இருந்தாலும் ஒருமுறை பார்க்கலாம், கமலுக்காக !


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

சிரிச்சிடுங்க ப்ளீஸ்...

வணக்கம்,

டென்சன்.. டென்சன்.. டென்சன்.. வர வர எல்லோர்க்கும் வாழ்க்கையில் டென்சன் அதிகமாகி விட்டது.. டென்சனை குறைக்க கொஞ்சம் மனம் விட்டு சிரிக்க வேண்டுமாம். வாட்ஸ் அப்பில் வந்த சில மொக்கை ஜோக்குகளை இங்கு பகிர்ந்துள்ளேன். படிச்சுட்டு மறக்காமல் சிரிச்சிடுங்க...


சிரிப்பு 1:

"வக்கீல் சார்... என் புருஷனுக்கும், மாடி வீட்டு பெண்ணுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. எப்படி கண்டுபிடிக்கிறது சார் ?"

"ஒண்ணும் பிரச்னை இல்லை.. உங்க கணவரை அந்த பெண்ணின் வீட்டுக்கு
கூட்டிட்டு போங்க.. வீட்டுக்கு போனவுடன் Wifi ஆட்டோமேடிக்காக கனெக்ட்
ஆயிடுச்சுனா... உங்க சந்தேகம் கன்பாரம் ஆயிடும் ."

#டெக்லானஜி சில சமயம் ஆபத்தானதும் கூட.. :-)

சிரிப்பு 2:

"ஏங்க .. இன்னிக்கி நாம் சாம்பார் வைக்கட்டுமா, இல்ல ரசம் வைக்கட்டுமா??

"முதல்ல.. நீ சமைச்சி வை.. அப்புறம் அதுக்கு பேர் வைச்சிக்கலாம்..."

"???"

சிரிப்பு 3:

"என் மனைவிக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கி கொடுத்தேன். அதுக்கப்புறம் 6 மாசமா என் கூட பேசவே இல்லை.."

"ஏன் சார்..? அது டூப்பு நகையா???"

"அதெல்லாம் இல்லப்பா.. அது எங்களுக்குள்ள ஒரு டீல். ஒரு தடவை நகை வாங்கி கொடுத்திட்டா அப்புறம் ஆறு மாசம் நாம ப்ரீ..."

சிரிப்பு 4:

ஒரு பல் மருத்துவமனையில்...

பெண்: டாக்டர்..ஒரு பல் புடுங்க எவ்வளோ செலவாகும்?

டாக்டர்: 850 ரூபாய் ஆகும் மேடம்.

பெண்: 850-ஆ..ரொம்ப அதிகம்.. கொஞ்சம் குறைசிக்க கூடாதா??

டாக்டர்: இது வழக்கமா வாங்குறது தான்..

பெண்: அனஸ்தீஷ்யா கொடுக்காம கொடுத்தா எவ்வளவு ஆகும்..??

டாக்டர்: அப்படி செய்ய முடியாது... ரொம்ப வலிக்கும்...

பெண்: பராவாயில்ல..சொல்லுங்க.

டாக்டர்: அப்படி செய்யறதா இருந்தா 400 ரூபாய் ஆகும்..

பெண்: ஓ ...  உங்க ஜூனியர் யாரைவாது,ஆனஸ்தீஷ்யா இல்லாம பல் புடுங்க சொன்ன என்ன செலவாகும்.??

டாக்டர்: அதுல தொழில் நேர்த்தி இருக்காது. என்ன ஆனாலும் நான் பொறுப்பல்ல..

பெண்: பராவாயில்ல..

டாக்டர்: அதுக்கு 200 ரூபாய் ஆகும்..

பெண்: உங்க மருத்துவமனையில படிக்கிற பிள்ளையை பக்கத்தில வைச்சிகிட்டு அவங்களுக்கு சொல்லி கொடுத்துட்டு,  உங்க ஜூனியர் யாரைவாது வைச்சி, ஆனஸ்தீஷ்யா இல்லாம பல் புடுங்க சொன்ன என்ன செலவாகும் டாக்டர்???

டாக்டர்: குட்...ஒண்ணும் வேண்டா.. அப்போ நான்தான் உங்களுக்கு 200 ரூபாய் தரனும்...

பெண்: அப்படியா.. ரொம்ப நல்லது.. நாளைக்கு என் கணவரை பல் புடுங்க கூட்டிட்டு வரலாம்ல...???

டாக்டர்: ????????

சிரிப்பு 5:

கணவன் மாணவி இருவரும் மனம் ஒத்து போகாமல் விவாகரத்துக்காக நீதிமன்றம் வருகின்றனர். நீதிபதி, உங்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறது. எப்படி பிரித்து கொள்ள போகிறீர்கள் என்று கேட்டார். நீண்ட யோசனைக்கு பிறகு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து, நாங்கள் இன்னொரு குழந்தை பெற்று கொண்டு வருகிறோம் என்று கூறினார்கள்.

11 மாதங்களுக்கு பிறகு கழித்து...
.
.
.

அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது.. :-)

சிரிப்பு 6:

ராபர்ட்டும் அவரது  மனைவியும் ஜெருசலேமுக்கு செல்கிறார்கள். திடீரென அவரது மனைவி இறந்து விடுகிறார். அவரை அடக்கம் செய்ய அங்குள்ள பாதரியார் ஒருவரை அணுகுகிறார்.

"ராபர்ட்.. உங்க மனைவியை இங்கயே புதைக்க வேண்டுமானால் 100 டாலர் செலவாகும்... உங்கள் ஊருக்கு செல்ல வேண்டுமானால், பாடம் செய்து, பிளேனில் அனுப்ப 10,000 டாலர் செலவாகும் "

கொஞ்சம் யோசித்தவராய்..  நான் ஊருக்கே கொண்டு போய் அடக்கம் பண்றேன்.

உங்க மனைவி மேல அவ்ளோ பிரியமா???

அதெல்லாம் ஒண்ணும் இல்லை... இயேசுநாதர் இறந்தாரு, இங்கயே புதைச்சாங்க.. மூணு நாளைக்கு அப்புறம் உயிர்தெழுந்துட்டார்..   அதான் எதுக்கு ரிஸ்குன்னு...

சிரிப்பு 7:

பெண்மணி: சார்! என் கணவரை காணும் சார்...

போலீஸ்: கடைசியா எப்போ பாத்தீங்க??

பெண்மணி: இரண்டு நாள் முன்னாடி கடைக்கு இட்லி மாவரைக்க போனாரு.. இன்னும் வரல சார்..

போலீஸ்: இரண்டு நாள் ஆச்சா?? அப்போ, இரண்டு நாளா என்ன பண்ணீங்க ??

பெண்மணி: சப்பாத்தி சுட்டு சாப்பிட்டேன் சார்..

சிரிப்பு 8:

டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

மாணவன்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுத்தவேண்டும்..

டீச்சர்: ??!?!?!?

சிரிப்பு 9:

சுப்பாண்டி: நேற்று ரயிலில் சரியாத் தூங்க முடியல...

நண்பர்: ஏன்?

சுப்பாண்டி: மேல் பர்த் தான் கிடைச்சுது.

நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாத்தியிருக்கலாமே?

சுப்பாண்டி: செஞ்சிருக்கலாம்... ஆனா கீழே யாரும் இல்லே.. கடைசி வரை காலியாதான் இருந்துச்சு..

நண்பர்: ???!?!?

சிரிப்பு 10:

தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருவர்..

நபர் 1: யார தேடுறீங்க சார்?

நபர் 2: என் மனைவிய காணும்.. அதான் தேடுறேன்.

நபர் 1: என் மனைவியும் தான் சார் காணோம். நானும் தேடிட்டுதான் இருக்கேன்.

நபர் 2: உங்க மனைவி எப்படி இருப்பாங்க??

நபர் 1: கொஞ்சம் கருப்பா, குள்ளமா, குண்டா இருப்பா..  உங்க மனைவி எப்படி இருப்பாங்க.??

நபர் 1: ம்ம்ம்... நல்ல கலரா, அழகா.. பார்க்க செமையா கும்முன்னு இருப்பா.. நீல கலர் சேலை கட்டியிருப்பா.. ஆங்.. உங்க மனைவி என்ன கலர் சேலை கட்டியிருந்தாங்க???

நபர் 2: அவள விடுங்க சார்...வாங்க..  நாம உங்க மனைவியை தேடலாம்..

சிரிப்பு 11:

மனைவி: (கோவமாக) என்னங்க... வேலைக்காரி குளிக்கும் போது ஏன் எட்டி பாத்தீங்க??

கணவன்: நீ தப்பா நினைக்காதம்மா .. உன்னுடைய  சோப்பு,ஷாம்பு யூஸ் பன்றாலான்னு பாத்தேன்... அவ்வளோதான்...

சிரிப்பு 12:

டீச்சர்: ராமு, கிளாஸ்ல ஏன்டா தூங்கற??

ராமு: அது வந்து மிஸ், உங்க வாய்ஸ் ரொம்ப இனிமையா இருந்துச்சு.. அதான் தூங்கிட்டேன்..

டீச்சர்: அப்புறம் எப்படி மத்தவங்கெல்லாம் முழிச்சிட்டு இருக்காங்க???

ராமு: அவங்கெல்லாம் நீங்க சொல்றத கவனிக்கிறதில்ல மிஸ்...

டீச்சர்: ?!?!?!!

சிரிப்பு 13:
ஒரு டி-சர்ட் வாசகம்...


married-man-t-shirt


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 3 அக்டோபர், 2015

புலி - விமர்சனம்

வணக்கம்,

இது ஒரு ராஜா கால பாண்டஸி படம் என்பதாலும், இயக்குனர் சிம்பு தேவன் படம் என்பதாலும் பார்க்க வேண்டும் ஆவல் இருந்து வந்தது. ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே, இது ஒரு பாண்டஸி கலந்த சயின்ஸ் பிக்ஷன் படம்; விஜய் டைம் ட்ராவல் செய்து அதிசிய உலகத்துக்கு போகிறார் என்று கூறினார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் இது ஆங்கில படமான "ஜான் கார்டர்" -ன் ரீமேக் என்று சொன்னார்கள். இது எப்படியோ படத்தின் பப்ளிசிட்டிக்கு இந்த பில்டப்கள் போதும் என முடிவு செய்து, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பிறகு படம் வெளிவந்துள்ளது.


வியாழக்கிழமை மதியமே படத்தை பற்றி இணையத்தில் கிழி..கிழி..கிழியென கிழிக்க ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் புக் பண்ண டிக்கெட்டை விற்க முடியாமல் போனதால், மனதைரியத்தை வரவைத்து கொண்டு படம் பார்க்க தயாரானேன்.

கதையென்று பெரிதாக ஒன்றும் இல்லை. பழைய அம்புலிமாமா கதை தான். வேதாள கோட்டைக்கு  உட்பட்ட ஊர்களை வேதாளங்களின் மகாராணி ஆள்கிறார். சூழ்ச்சிக்கார தளபதியின் கட்டுபாட்டில் இருக்கிறது அந்த கோட்டை. அதை மீட்டு ராணியிடம் கொடுக்கிறார் நம்ம இளைய தளபதி. படம் பார்க்கும் போதே இதுதான் நடக்குமென நமக்கே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு வீக்கான ஸ்கிர்ப்ட்.

படத்துக்கு சுவாரசியம் சேர்க்க, பேசும் பறவை, ஒற்றைக்கண் ராக்ஷச மனிதன், பெரிய சைஸ் கரும்புலி, பேசும் ஆமை என குழந்தைகளுக்கு பிடிப்பது போல கதை நகர்கிறது. கிராபிக்ஸ் நன்றாக இருக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

இளைய தளபதி விஜய் ஏன் எவ்வளவு ரிஸ்க் எடுத்து இது மாதிரியான கதையில் நடித்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. சுத்தமாக விஜய்க்கு இந்த கதைக்களம் செட் ஆகவில்லை. இதில் இரண்டு விஜய் வேறு. பிளாஷ் பேக்கில் வரும் விஜய் , அப்பப்பா.. செம மோசம். நீளமான முடியும், ஆக்ரோஷமான பேச்சும் (?!?!)  அவருக்கு கொஞ்சம் கூட செட் ஆகவே இல்லை.

கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன், துணை நாயகியாக ஹன்சிகா. இருவரும் வந்து கவர்ச்சி காட்டி ஆடிவிட்டு சென்றிருகின்றனர். சுதிப் வில்லனாக, நாட்டின் தளபதியாக கோபம் காட்டி சென்றுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின் ஸ்ரீதேவி நடித்துள்ளார். ஒரு பாண்டஸி கதைக்கு தேவையான கதாபாத்திரமாக, வேதாள ராணியாக நடித்திருக்கிறார். மற்றவர்கள் கதையில் வந்து செல்கின்றனர்.

முன்பே சொன்ன மாதிரி ஒரு பாண்டஸி படம் என்பதால், லாஜிகெல்லாம் பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது. ஒரு மாயாஜால படத்துக்கு தேவையான எல்லாமே இருக்கு.  பாடல்கள் எதுவுமே ராஜ காலத்து பட பாடல் போல இல்லை. எந்த பாடல் வரியும் மனதில் கூட நிற்கவில்லை.

விஜய் நடித்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகி போகவே, படம் ஃபிளாப் என்று எல்லா ஊடகங்களும் சொல்லிவிட்டது. படமும் ஹ்ம்ம்... நன்றாக இல்லை தான். கொஞ்சம் திரைக்கதையில் மட்டும் கவனம் வைத்திருந்தால் படம் சூப்பரோ சூப்பராகி இருக்கும். இதுவே விஜய்க்கு பதில் வேறு யாராவது சாதாரண  நடிகர் நடித்திருந்தால் கூட படம் கொஞ்சம் ஓடியிருக்கும்.

கிராபிக்ஸ் மற்றும் ஃபாண்டஸி கதைக்காக சிறுவர்,சிறுமியர் ஒரு முறை பார்ப்பார்கள். மத்தபடி இது பாயாத புலி, சீறாத புலி. இது வெறும் புலி. சாதாரண புலி, வரி கட்டாத புலி. மொத்தத்தில் இது டம்மி புலி.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 1 அக்டோபர், 2015

கல்லூரி கட்ட பஞ்சாயத்துக்கள் - திணறும் மாணவ / மாணவிகள் !

வணக்கம்,

பள்ளி படிப்பு முடித்து கல்லூரியில் சேரும் போது, பசங்க எல்லோரும் மனதில் பல கனவுகளோடு, ஆசைகளோடு வருவார்கள். காலேஜுல நிறைய நண்பர்கள், நண்பிகள்  கிடைப்பார்கள், ஜாலியா சுதந்திரமா இருக்கலாம், நண்பர்களோட பேசலாம்ன்னு பல கனவுகளோட வருவாங்க. ஆனால் அவுங்க கனவையெல்லாம் தவிடு பொடியாக்குகிறது சில பொறியியல் கல்லூரிகள்.

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி - நான் இந்த காலேஜுல தான் படிச்சேன். நாம படிச்ச கல்லூரியை எவனாவது தப்பா சொல்லிடான்னா பொதுவா எல்லோரும் சண்டைக்கு வருவாங்க. ஆனா, இங்க நிலைமையே வேற. காலேஜ பத்தி ஒரு தப்பான மெசேஜ் வந்ததும் 'என்ன ஒரு ஆனந்தம்' நம்ம மக்களுக்கு (Aluminis). கடந்த இரு வாரங்களாகவே சமூக வலைதளங்களில் பெரிதும் அடிப்படும் பெயராகவே இருக்கிறது எங்கள் கல்லூரி. கல்லூரியில் மாணவிகள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் என ஒரு பக்க நீள ரூல்ஸ் சர்குலரை சமூக தளங்களில் வெளியிட்டதே காரணம். அதை அங்கு படித்த மாணவர்கள் தான் கல்லூரியின் மீதுள்ள வெறுப்பு காரணமாக வெளியிட்டுனர் என்றாலும், அதிலுள்ள விதிகள் பெரும்பாலும் உண்மையாகவே அமலில் இருப்பது கசக்கும் உண்மை.


அதாகப்பட்டது, இவை தான் அந்த சட்டங்கள். காலேஜ பத்தி தெரியாதவங்க படிங்க..

1.) சாய்ராம் கல்லூரியில் படிக்கும் பெண்கள் லெகின்ஸ், ஜெகின்ஸ் போன்ற வகை பேண்ட்டெல்லாம் போட கூடாது.

2.) பாட்டியாலா, ஜன்னல், கண்ணாடி  வைத்த டாப்ஸ், ஷார்ட் குர்தி போன்றவைகளுக்கும் தடை.

3.) பெரிய சைஸ் காது வளையம், ஜிமிக்கி வகையறாக்கள், ஃபான்சி மோதிரங்கள், ஹை-ஹீல்ஸ் செருப்புகள் , சிகை மற்றும் முக அலங்காரங்கள் போன்றவைக்கும் தடா தான்.

4.) துப்பட்டா கண்டிப்பாக மறைக்க வேண்டியதை மறைக்க வேண்டும். ( நானே லிஸ்டில் சேர்த்து கொண்டது. )

5.) கல்லூரியில் பிறந்த நாள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடாது. சாக்லேட், கேக், ஸ்நாக்ஸ் போன்ற ஐட்டங்கள் எல்லோருக்கும் பரிமாறிக் கொள்ள கூடாது.

6.) அனாவசியமாக காரிடாரில் நடக்க கூடாது. பக்கத்துக்கு கிளாசுக்கு சென்று லேப் கோட், நோட் புக்ஸ், கால்சி  போன்றவை வாங்க கூடாது.

7.) செல்போன், சிம் கார்ட், பெண் டிரைவ் போன்றவைகளை உள்ளே கொண்டு வர கூடாது.

8.) கல்லூரி பேருந்தில் தான் பணம் கட்டி வர வேண்டும் (எவ்வளவு கிட்ட இருந்தாலும்). டூ-வீலர், ஃபோர் வீலர்கள் கொண்டு வர கூடாது.

9.) பெண்களும், ஆண்களும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட படிக்கட்டில் தான் ஏற/இறங்க வேண்டும்.

10.) மிக முக்கியமானது. இரு பாலரும் எதிர் பாலினத்தோடு எக்காரணத்துக் கொண்டும் பேச கூடாது.

11.) நான்-வேஜ் அயிட்டங்களை கல்லூரிக்குள் கொண்டு வர கூடாது.

12.) ஹாஸ்டல் பசங்க நினைத்த நேரத்தில் வீட்டுக்கு போக முடியாது. கேட்-பாஸ் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது.

இந்த ஏட்டில்லா  விதிகளை பார்த்தாலே எவனுக்கும் படிக்கிற ஆசையே இருக்காது. என்ன தலை சுத்துதா???இது சும்மா டிரைலர் தான்மா. மெயின் பிச்சர் இனிமே தான்...

செமஸ்டரில் பெயிலானால், இரு அரியர்களுக்கு மேல் வைத்தால், பெற்றோரை அழைத்து வர வேண்டும். பையன் பெயிலானால் அம்மாவோ, அப்பாவோ தான் திட்டு வாங்க வேண்டும். "புள்ளைய காலேஜுல சேர்த்துவிட்டுட்டு, அப்படியே தண்ணி தெளிச்சி விட்டுவிடுவியா??" என ஒருமையில் அவர்களை திட்டுவார்கள். பலரை பலவந்தமாக நான்காம் அல்லது ஐந்தாம் செமஸ்டரில் கல்லூரியை விட்டு (டி .சி கொடுத்து ) அனுப்பியிருகிறார்கள். 

மேலும் ஃப்ளோர் சூப்பர்வைசர்கள் (FS) என்ற பெயரில் சில வெட்டி ஆபிசர்களை  கல்லூரியில் நியமித்து கொண்டு, மாணவர்களை கண்காணிப்பார்கள். அவர்கள் முக்கிய பணியே பிள்ளை பிடிப்பதும், ஐ.டி கார்டு புடுங்குவதும் தான். அதாவது மேற்கண்ட தப்புகளை பண்ணும் மாணவ/மாணவியரை கையும் களவுமாக, ஆளும் ஐ.டியுமாக பிடித்து மேனேஜ்மென்ட்டில் கொடுப்பது  தான். 

இன்னும் இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல, பசங்க பொண்ணுங்க கூடவும், பொண்ணுங்க பசங்க கூடவும் பேசவே கூடாது. அது மகா மகா தெய்வ குத்தம். மீறினால் ஐ.டி கார்டு அவுட். தர்ம அடிதான். லன்ச்சில் மற்றவரிடம் சாப்பாடு வாங்கி சாப்பிட்டாலோ,  சத்தமாக பேசி சிரித்து கொண்டிருந்தாலோ  ஐ.டி கார்டு பறிக்கப்படும். அவ்வபோது வகுப்புகளில் ரைட் (RAID ) நடக்கும். பேக்குகளை சோதனை செய்வார்கள். அதில் ஏதாவது (செல்போன், சி.டி.. ) சிக்கினால் ஐ.டி கார்டு பிடுங்கப்பட்டு ஆயிரக்கணக்கில் அபராதம். 

பஸ்ஸில் ஆண்களும், பெண்களும் தனித்தனியே தான் அமர வேண்டும். அங்கேயும் FS-க்கள் இருப்பார்கள். கான்டீனிலும் அதே கதை தான். கல்லூரியில் மதிய சாப்பாடு ரொம்ப சுமாராக தான் இருக்கும். அதைதான் முதலாம் ஆண்டு மாணவ மணிகள் பணம் கட்டி சாப்பிட்டு தொலைக்க வேண்டும். ஹாஸ்டல் பசங்க தான் ரொம்ப பாவம். நாலு வருடமும் அங்கே தான் சாப்பாடு.  சில வேளைகளில் கரப்பான் பூச்சிகள், பல்லி விழுந்ததையும் போட்டிருக்கிறார்கள். "இவ்வளவு பெரிய அண்டாவுல நாலு இன்ச் பல்லி விழுந்தா யாரும் செத்துட மாட்டங்க.." அந்நியன் பட வசனம் இது.  படம் வருவதற்கு முன்பே எங்க காலேஜுல இதை பாலு சொல்லிடாரு...

ஆங்!!! பாலு யாருன்னு உங்களுக்கு சொல்லவே இல்லைல.. அவரு தாங்க எங்க காலேஜ் ஆல் இன் ஆல். இவரை பார்க்க கிட்டத்தட்ட 'நான் கடவுள்' ராஜேந்திரன் போல இருப்பார். கருத்த கட்டுடல், நெற்றியில் லேசான செந்தூரம், மொட்டை தலையில் தொப்பி, கொஞ்சம் மிடுக்கான ஆள்தான். பிரின்சிபாலை கண்டு கூட பலர் பயபடமாட்டங்க. ஆனா இவர் பேர சொன்னா, ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடன்ட் முதல்  ஃபைனல் இயர் ஸ்டுடன்ட் வரை எல்லோருக்கும் சிம்ம சொப்பனம். எல்லா FSக்கும், எல்லா டிபார்ட்மெண்ட் HOD க்கும் இவர் தான் DON. காலேஜ்/ மேனேஜ்மென்ட் /ஹாஸ்டல் அட்மின். சுருக்கமாக மேனேஜ்மென்ட்டின் அடியாள்.


ஐ.டி கார்டு பறிகொடுப்பவர்கள் எல்லாருமே இவரிடம் தான் விசாரணைக்கு வருவார்கள். முடி கொஞ்சம் அதிகமாக வளர்த்திருந்தால், தலை மயிரை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி நாளை முடி வெட்டவில்லை என்றால், நானே கன்னா பின்னான்னு வெட்டி விடுவேன் என்று எச்சரிக்கை செய்வார். பல ஆபாச வார்த்தைகளை மாணவரிடம் உபயோகபடுத்துவார். பலருக்கு ஆபிஸ் ரூம் ட்ரீட்மென்ட்களும் நடந்தள்ளது.

இவ்வளவு கட்டுப்பாடு இருந்த போதும், சில காதல் புறாக்களும், சில பல டேட்டிங் சமாச்சாரங்களும் கல்லூரிக்குள் இருக்கத்தான் செய்தன. சட்டங்கள் ஒரு புறம் இருந்தாலும், அவ்வப்போது வெளியே தெரியாமல் இருபாலரும் பேசி கொண்டு தான் இருகிறார்கள்.  கண்ணால் பேசிக்கொண்டும், வகுப்பில் பிட்டு பேப்பரில் தகவல் பரிமாறிகொண்டும் இருந்தனர்; இருகின்றார்கள். மாட்டிகிட்டா மவனே(ளே) காலி தான்.. இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு வேண்டிகிடக்கு! 

இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல.. தமிழ்நாட்டில் இந்த ஒரு கல்லூரி மட்டுமல்ல. இன்னும் பல கல்லூரிகள் (பத்தில் ஐந்து) இப்படி தான் சத்தமில்லாமல் இயங்கி கொண்டு இருக்கிறது. எல்லா கல்லூரிகளிலும் இது போன்ற பட்டாசு பாலுக்களும், செயின் ஜெயபால்களும், பிச்சுவா பீட்டரும் இருக்க தான் செய்கின்றனர். 

இதையெல்லாம் ஏன் செய்கிறார்கள்? என்று யோசித்து பார்த்தால், நமக்கு இவர்கள் செய்வது சரி என்று ஒரு விதத்தில் படும். (சேம் சைடு கோல் அல்ல..முழுசா படிங்க..) ஏன்னா நம்ம பசங்கள கொஞ்சம் ஃபிரியா விட்டா, அப்புறம் கையில பிடிக்க முடியாது. அதான் இந்த கெடுபிடி. இப்படி காலம்காலமாக ஆண்-பெண் பேசாமை என சட்டம் போட்டு அடிமை படுத்துகிறார்களே, ஏன் எந்த பெற்றோரும் கேள்வி கேட்பதில்லை என யோசித்தால் புரியும். காரணம் என்ன.? கல்லூரிகளில் இத்தகைய 'பலத்த சட்டங்கள் ' மூலம் பெற்றோர்கள் புன்முறுவல் பூக்கின்றனர் என்பதாலும், அவர்தம் பிள்ளைகள் தவறான வழிக்கு போகமாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும், இந்த விதிகள் யாவும் இன்னும் நடைமுறையிலேயே இருக்கிறது. 

இவையாவும் மாணவ சமுதாயத்தின் உரிமை பறிக்கும் செயல் மட்டுமல்ல. அவர்களின்  சமூக திறன்களை குறைத்து கொண்டு வருகின்றது என்பதே உண்மை. இன்றைய கார்ப்பரேட் உலகத்தில், அலுவலகங்களில் உடன் வேலை செய்யும் எதிர் பாலினத்தவரோடு பேசி, பழகி வேலை செய்யும் நிலையில் தானுள்ளது. இதில் சில ஆண்கள் / பெண்கள்  எதிர் பாலினத்தவரோடு சகஜமாக பேச முடிவதில்லை. இந்த பிரச்சனை எல்லாருக்கும் ஏற்படுவது இல்லை. ஆனால் பலர், கல்லூரிகளில் போடப்பட்டுள்ள இத்தகைய விதியினால் அலுவலகங்களில் பாதிக்கபடுகின்றனர். உளவியலாளர்கள் இது தொழில்முறை மற்றும் சமூக திறன்ககளை பாதிக்கிறது என கூறுகின்றனர். மனிதவள மேலாளர்களும், பொறியியல் கல்லூரியில் நன்றாக படித்து கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து, அலுவலகங்களில் சேரும் போது, மற்றவரிடம் பேச/பழக கூச்சபடுகின்றனர். இதனால் அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கை பெரிதும் பாதிக்கபடுகிறது. இதை பற்றி ஏற்கனவே என் பதிவில்  எழுதியிருக்கிறேன்.

கல்லூரியில் ஒழுக்கத்தையும் நல்ல பழக்க வழக்கங்களையும் கற்று கொள்ள வேண்டியது தான். கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டியதுதான். ஆனால் இத்தகைய சர்வாதிகார கண்டிப்புக்கள், அராஜகங்கள் தேவையில்லாதது. இது போன்ற கட்டாய சட்டத்தினால் ஒழுக்கத்தை கொண்டு வர முடியாது. வெறுப்பை தான் சம்பாதிக்க முடியும். இதை எப்போது எல்லா கல்லூரிகளும், பெற்றோர்களும் புரிந்து கொள்ள போகிறார்களோ தெரியவில்லை. அதுவரை லட்சம் பேர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலும், எத்தனை முறை ஸ்ட்ரைக் பண்ணாலும் ஒன்றுமே நடக்காது, எதுவும் மாறாது.

இதை பதிவு செய்வதன் மூலம் எங்கள் கல்லூரிக்கு வந்து உங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம் என்றோ, இது ஒரு மட்டமான கல்லூரி என்றோ சொல்லவில்லை. நல்ல கல்லூரி தான். நன்றாக படித்தால் நல்ல படிப்பும் வேலையும் கிடைக்கும் தான்.  நாங்க படிச்ச காலேஜ எங்களுக்கு பிடிக்கலன்னு சொல்லல. ரொம்ப பிடிக்கும், ஆனா உங்க காலேஜ் ருல்லஸ் தான் பிடிக்கல. நாங்கள் பட்ட சில பல கஷ்டங்களை  உங்கள் பிள்ளைகளோ, இனி வரும் மாணாக்கரோ பட கூடாது என்பது தான் எங்களது (Aluminis) நோக்கம். யாரவது ஒருவர் இந்த சட்டங்களை தகர்க்க வழி செய்வார் என நம்புகிறோம். வளரும் இளைய சமுதாயத்தை சுதந்திரமாக வாழ விடுங்கள்!

நன்றி !!!

-பி .விமல் ராஜ்


ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

புல்லுக்கு இரைத்த நீர்!

வணக்கம் ,

இந்தியா ஏழை நாடு என சிலர் சொல்கிறார்கள். பண புழக்கம் கம்மியாய் இருக்கிறதாம். நம்முடைய பணம் எப்படியெல்லாம் வீணாகிறது தெரியுமா? கீழுள்ள சில செய்தி துணுக்குகளை பாருங்கள். இவ்வளவு பணம் புழங்குகிறது என உங்களுக்கே புரியும்...


14.5
லட்சம் கோடி ரூபாய் வரியாக கடந்த ஆண்டில் இந்தியாவில் வசூலிக்கப்படுள்ளது.

30
லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணமாக வெளிநாட்டு வங்கிகளில் இருக்கிறது என சி.பி.ஐ ஆய்வறிக்கை சொல்கிறது.

10
லட்சம் கோடிக்கு மேல் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் ஊழல் நடந்துள்ளது.

9
கோடியே கோடி ரூபாய் (910,603,234,300,000 INR ) ஊழல் கடந்த 68 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்துள்ளது.

90
இந்தியாவிலுள்ள உலக மகா கோடீஸ்சுவரர்களின் எண்ணிக்கை.

61,000
இந்திய கோடீஸ்சுவரர்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

30,000
டன் அளவுள்ள தங்கம் ஒவ்வொரு ஆண்டும் கோவில்களால் வங்கிகளில் சேமித்து வைக்கப்படுகின்றன.

1.5
லட்சம் கோடி மதிப்புள்ள புதையல் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு இருப்பதாக சொல்கிறார்கள்.

5,000
கோடி. அரசியல் கட்சிகளுக்கு தானமாகவும், வருமானமாகவும் வருகிறது என ஓர் புள்ளி விவரம் சொல்கிறது.

1,400
கோடி. செய்திதாள்களில் கட்சி விளம்பரத்திற்காக செலவு செய்யப்பட்ட தொகை.

1,800
கோடி கட்சி விளம்பர பதாகைகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.

4,800
கோடி தொலைகாட்சியில் கட்சி விளம்பரதிற்காக செலவு செய்யப்பட்டுள்ளது.

29,000
ரூபாய் தண்டமாகிறது, ராஜ்ய சபாவில் வீணடிக்கடும் ஒவ்வொரு நிமிடத்திற்கும்.

3
லட்சம் கோடி பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடனாக இருக்கிறது என ரிசர்வ் வங்கி ஆய்வு சொல்கிறது.

35
கோடி வீண். ராஜ்ய சபாவில் கடந்த குளிர்கால கூட்ட தொடரை நடக்க விடாமல் செய்ததால்.

1000
கோடி மதிப்புள்ள தங்கம் கடந்த ஆண்டில் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு பிடிபட்டுள்ளது.

71,000
கோடி வங்கி கடன் விவசாயிகளுக்காக தள்ளுபடி செய்ய பட்டுள்ளது.

1975
கோடி ஐ.பி.எல்-லில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்க பிரிவு சொல்கிறது.

2.27
லட்சம் கோடி இலவச திட்டங்களுக்காக நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் போது நமக்கு என்ன தோன்றுகிறது? நம் நாட்டில்
எவ்வளவு பணம் வீணாகிறது பாருங்கள். இவ்வாறு புல்லுக்கும், கதிருக்கும் இரைக்கப்பட்ட நீரை தவிர்த்தாலே நாடு வளமும், வளர்ச்சியும் அடையும்.

குறிப்பு - ஆனந்த விகடனில் இது போன்ற புள்ளி விவரங்கள் சில ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. அதை போல நாமும் எழுதலாம் என்று எண்ணி, இணையத்தில் பல தளங்களில் தேடி சேகரிக்கப்பட்டதை உங்களிடம் பகிர்ந்துள்ளேன்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்




வியாழன், 17 செப்டம்பர், 2015

நமஸ்தே, நிம்ம பெயர் ஏமி ?

வணக்கம்,

பெயரில் என்ன இவ்வளவு குழப்பம் என்று யோசிக்கிறீர்களா?

இந்தியாவில் பெயர்களை போட்டுகொள்வதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு முறை கடைப்பிடிக்கப்படுகிறது.  ஃபாரம் பூர்த்தி செய்யும் போது First Name - Middle Name - Last Name என்று போட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அதில் First Name என்பது நமக்கு வைக்கும் சொந்த பெயர் /அதிகாரப்பூர்வ பெயர். Middle Name என்பது தகப்பனார் பெயரை குறிக்கும். Last Name / Sur Name என்பது பெரும்பாலும் குடும்ப பெயராகவோ அல்லது சாதியின் பெயராகவோ தான் இருக்கும்.

வடக்கில் பெரும்பாலும் தங்கள் பெயருக்கு பின்னால் சமூகத்தின் பெயரையோ / குடும்ப பெயரையோ போட்டுகொள்கின்றனர். காஷ்மீர் மற்றும் பீகார் மாநில மக்கள், அவர்களுடைய பெயர்களுக்கு பின்னால் காஷ்மீரி அல்லது பீகாரி என்று சேர்த்து கொள்கின்றனர். பஞ்சாப் மாநில ஆண்கள் தங்கள் பெயருக்கு முன்னால் சிங் என்றும், பெண்கள் கவுர் என்றும் சேர்த்து கொள்கிறார்கள்.
[First Name] [Last Name] (Singh/Kaur) [Family Name ]
Harbhajan Singh
Gobindar Singh
Karanveer Singh SUMAG
Kulshan Kaur

மராட்டிய மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெயருக்கு பின்னால் தகப்பனார் பெயரையும், கடைசியில் குடும்ப பெயரையும் சேர்த்து கொள்கின்றனர்.
[First Name] [Father's/ Middle Name] [Last Name]
Sunil Manohar Gavaskar
Sachin Ramesh Tendulkar

நம் அண்டை மாநிலமான ஆந்திரா/தெலுங்கானாவில் குடும்ப பெயரை தங்கள் பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் போட்டு கொள்கிறார்கள். குடும்ப பெயர் பெரும்பாலும் அவர்களுடைய சொந்த ஊரின் பெயராகவோ அல்லது அவர்களுடைய சமூகத்தில் செய்யப்படும் குடும்ப தொழிலாக தான் இருக்கிறது. சிலர் தங்கள் சாதி /சமூகத்தின் பெயரை  Last Name-மாக போட்டுகொள்கின்றனர். குடும்ப பெயர்கள் மற்றும் சாதி பெயர்கள் நிறம் மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
[First Name]  [Last/ Family Name]
Suryaprakash Pollepalli
Kishore Illaka
Mariappan Karthik Thottapalli
Viswanath Chirani
Byrraju Ramalinga Raju
Kota Srinivasa Rao
Nara Chandrababu Naidu
Akkineni Nagarjuna
Nandamuri Taraka Rama Rao
Daggubati Venkatesh

கேரளாவில் தங்கள் பெயருக்கு முன்னால் குடும்ப பெயரையும், சாதியின் பெயரை பெயருக்கு பின்னாலும் போட்டுகொள்வார்கள். குடும்ப பெயர்கள் பெரும்பாலும் சொந்த ஊரின் பெயரையே குறிக்கும். குடும்ப பெயர்கள் நிறம் மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.


[Middle /Place Name]  [First/Given Name]   [Last /Father's /Caste Name ]
Kannott Karunakaran Marar
Tirunellai Narayanaiyer Seshan
Elankulam Manakkal Sankaran Namboodiripad
Mani Madhava Chakyar

கர்நாடகாவில் தங்கள் பெயருக்கு பின்னல் தகப்பனார் பெயரையும், சாதியின் பெயரையும் போட்டுகொள்கின்றனர். இவர்களுடைய Middle name தகப்பனார் பெயராகவும், Last Name குடும்ப பெயராகவோ அல்லது குடும்ப தொழிலாகவோ தான் இருக்கிறது.
[First/Given Name] [Middle /Father's Name]   [Last Name/Caste Name]
Sudheep Sivarajan Gauda
Rama Krishna Hedge

தமிழ்நாட்டில் தங்கள் தகப்பனாரின் பெயரை தான் தங்களுடைய முதலெழுத்தாக (Initial) போட்டு கொள்கின்றனர். இப்போதெல்லாம் தாயாரின் முதலெழுத்தையும் சேர்த்து இரண்டு இனிஷியலாக போடுகின்றனர். இன்னும் சிலர் தங்கள் ஊரின் பெயரையும் சேர்த்து முதலெழுத்தாக போடுகின்றனர். பெண்கள் திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய கணவரின் பெயரை முதலேழுத்தாகவோ/ பெயரின் பின்னலோ போட்டு கொள்கின்றனர்.
[First Name] [Last /Father's Name] 
S.Saravanan / Saravanan Sivakumar (Saravanan S/o Sivakumar)
S.P.Kumaran (Kumaran S/o - Sivakumar & Parvathi)
R.K.Narayanan ('Rasipuram' Krishnaswami Narayanan)
S.Kushboo / Kushboo Sundar (Kushboo W/o Sundar)
M.A.Chidambram (Chidambram S/o M. Annamalai Chettiar)

தமிழ்நாட்டில் மட்டும் தான் சாதி பெயரையோ, தங்கள் குடும்ப பெயரையோ தங்கள் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ளும் பழக்கம் இல்லை. சாதியின் பெயரை பெயருக்கு பின்னர் போட்டு கொள்ளும் மரபு முன்பு இருந்தது. 1960-ல் திராவிட கட்சிகளின் சமூக புரட்சி காரணமாக சாதி பெயர்கள், நம் தெருகளிலிருந்தும், பெயரிலிருந்தும் நீக்கபட்டுவிட்டது. அறிந்தோ, அறியாமலோ திராவிட கட்சிகள் செய்த நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று.

இப்படிதான், இந்தியாவில் பெயரளவில் கூட நாம் ஒன்றாய் இருப்பதில்லை. ஒருவரின் பெயரில் உள்ள குடும்ப பெயரையோ/சாதியின் பெயரையோ வைத்து அவர் என்ன சாதியை சார்ந்தவர் என்று தெரிந்து கொள்வதால் வேற்றுமை தான் ஏற்படுகிறது. தமிழகத்தில் பெயரில் உள்ள சாதி நீக்கப்பட்டது போல பாரதம் முழுவதும் எப்போது நீக்கப்படுமோ எனத் தெரியவில்லை.

தகவல்கள் : விக்கிபீடியா ,கோரா 

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 9 செப்டம்பர், 2015

தண்ணீர் ! தண்ணீர் !

வணக்கம்,

உலகில் உள்ள பல பிரச்சனைகளில் மிக முக்கியமானது தண்ணீர் பிரச்சனை தான். ஒருபுறம் பூமி வெப்பமயமாவதால் பனிபாறைகள் உருகி, பல நகரங்கள் கடலுக்கு அடியில் போக வாய்ப்புண்டு என்று சொல்லி வருகின்றனர். இதை தவிர, இன்னும் சில ஆண்டுகளில் குடிக்க நல்ல தண்ணீர் கூட கிடைக்காமல் போகலாம் என்று நம்மை பயமுறுத்துகின்றனர் சிலர். சுற்றுப்புற ஆர்வலர்கள் பலரும் இந்த பசுமையான வளத்தை கொண்ட பூமி, வறண்ட பூமியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சொல்லுகின்றனர்.

ஆப்பிரிக்கா போன்ற சில வறண்ட நாடுகள், Dry day is coming என்ற பிரச்சாரத்தை மக்களிடையே பரப்ப ஆரம்பித்து இருக்கின்றனர். அதிகமாக தண்ணீர் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கும், அனாவசியமாக தண்ணீர் செலவு செய்யாதிருக்கவும், வரப்போகும் தண்ணீர் பஞ்சத்தை பற்றியும் எடுத்து சொல்கின்றனர். அவ்வாறு நடக்காமலிருக்க, தண்ணீரை நாம் சேமித்து வைக்க வேண்டும் என்பதை முக்கிய விஷயமாக சொல்கின்றனர்.


ஏற்கனவே  கென்யாவில் உள்ள  நைரோபி நகரில், Water ATM எனப்படும் குடிநீருக்கான ஏ.டி.எம்-ஐ அந்த அரசு நிறுவியுள்ளது. கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, குறைந்த விலையில் இதுபோல ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது கென்யா அரசு.


ஐ.நா சபையின் கூற்றுப்படி தண்ணீர் தட்டுப்பாடு உலகின் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என்று சொல்கிறது. 700 கோடி மக்கள் தொகையை கொண்ட பூமியில், 43 நாடுகள் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் நிலை வரும் என்று அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்க சஹாரா பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

இதெல்லாம் எங்கோ, வேறு எதோ நாடுகளுக்கு தான் பொருந்தும் என்ற எண்ணி விட வேண்டாம்.  Water ATM கென்யாவில் மட்டுமல்ல, இந்தியாவில் பல இடங்களில் இருக்கிறது. இப்போதே நிலத்தடி நீர் இந்தியாவில் வறண்டு போய்விட்டது என்று புவுயியல் ஆராய்ச்சி துறை சொல்கிறது. ஒரு சர்வதேச ஆய்வறிக்கையின் படி,
  1. உலகில் உள்ள மொத்த ஜனத்தொகையில், இந்தியாவின் பங்கு  16%. அதில் 4% பேருக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் இருக்கிறது.
  2. புது தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய  நகரங்கள் உலகின் தண்ணீர் தட்டுப்பாடு நிறைந்த நகரங்களாக மாறபோகிறது.
  3. 2040-ல் இந்தியாவில் குடிக்க தண்ணீரே இல்லாமல் போக வாய்ப்புள்ளது.

நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு வர காரணங்களாக இருப்பவை:
  1. காடுகளை அழிப்பதால், மழை பொய்த்து விடுகிறது.
  2. சட்ட விரோத மணல் கொள்ளையினால், ஆற்று தண்ணீர் ஊருவதில்லை. 
  3. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆழ்த்துளாய் கிணறுக்காக 300,400 அடிகள் வரை தோண்டி, நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விடுகின்றனர். குடிக்கவும், விவசாயத்திற்கும் தண்ணீர் போதவில்லை. 
  4. தொழிற்சாலைகளின் கழிவுகளை ஆறு, எரிகளில் கலந்து விடுகின்றனர். நீர்நிலை மாசுபடுவதால், குடிநீர் வீணாகி போகிறது.
இதை தவிர்க்க நாமும் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. கீழுள்ள படங்கள் யாவும் ஃபேஸ்புக்கில் 'Logical Indian' பக்கத்தில் பகிரப்பட்டது.











இதை பற்றி  மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வருவோம். நீரின் அவசியத்தை சொல்வோம். தண்ணீரை சேமிப்போம்! உலகின் வளம் காப்போம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்!

வணக்கம்,

நம் பாரத தேசம் ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு, நாம் உலகின் சிறந்த பணக்கார நாடாக தான் இருந்து வந்தோம். வெள்ளைகாரர்கள் நாட்டை விட்டு போகும் போது, இந்தியா ஏழ்மையான நாடாக மாறிவிட்டது.

சங்க காலத்தில் நாம் கல்வி, செல்வம், அறிவியல், வணிகம், மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கினோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் வளமாக வாழ்ந்தோம் என்பதை சொல்ல சங்க காலம் வரை பின்னோக்கி செல்ல வேண்டாம்; வெறும் 500 ஆண்டுகள் பின்னால் சென்று பார்த்தாலே தெரிந்துவிடும்.

15 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை :

தமிழ்நாடு -

அன்றைய தமிழகத்தை விஜயநகர பேரரசுகளும், மதுரை, தஞ்சை நாயக்கர்களும், மராட்டிய மன்னர்களும் ஆண்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் தான் மதுரை நாயக்கர் மகால், சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவில் கட்டப்பட்டது. மயிலை கபாலிசுவரர் கோவில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விஜய நகர அரசால் விரிவாக கட்டப்பட்டது. வேலூர் கோட்டை விஜய நகர அரசாலும், திண்டுக்கல் மலை கோட்டை மதுரை நாயக்கர்களாலும் கட்டப்பட்டது.  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருமலை நாயக்கரால் புதிப்பிக்கபட்டு விரிவாக்கப்பட்டது. இதையெல்லாம் விட காரைக்குடி செட்டிநாடு (பங்களா) வீடுகளை பார்த்தாலே நம் வளத்தை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

india-in-16-to-19-century

மேலும் வீரத்திற்கு பெயர் போன வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள், தீரன் சின்ன மலை, வீர பாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் வாழ்ந்ததும் இக்காலகட்டதில் தான்.

ஆந்திரா பிரதேசம் -

தற்போதைய ஆந்திராவில், விஜய நகர பேரரசுகள் தான் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களுடைய ஆட்சி காலத்தில் தான் தெலுங்கு மொழி இலக்கியத்தில் புலமை பெற்றதாக விளங்க ஆரம்பித்தது. மேலும் பல புலவர்கள், சான்றோர்கள் அந்த காலத்தில் வாழ்ந்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் பெருமாள் கோவிலும், காலஹஸ்தி சிவன் கோவிலும் விஜய நகர பேரரசால் விரிவாக்கம் செய்யபட்டுள்ளது. இப்போதுள்ள நகைகள் பலவும் கிருஷ்ண தேவராயரால் திருப்பதி கோவிலுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் முகல் படையெடுப்பின் தாக்கத்தால், பாமினி மற்றும் குதுப் ஷா ஆட்சியின் கீழ் தெலுங்கு தேசம் சில காலம் இருந்தது. சார்மினார் மசூதி, கோல்கொண்டா கோட்டை இவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.

பின்னர் ஆட்சிக்கு வந்த நிஜாம் அரசு 200 ஆண்டுகள் வரை ஐதராபத்தை தம் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு, செல்வ செழிப்புடன் நாட்டை மாற்றியது. ஆந்திராவில் இன்றுள்ள பல கோட்டைகள், மாட மாளிகைகள், அரண்மனைகள், மசூதிகள் எல்லாம் நிஜாம் ஆட்சியில் கட்டபட்டவை ஆகும். 1930-ல் உலகின் மிக பெரிய செல்வந்தர் (மதிப்பு சுமார் $200 கோடி) என்ற பட்டதை பெற்றவர் நிஜாம் உஸ்மான் அலி கான். தனக்கென தனி நாடு, தனி அரசாங்கம், நாணயம், போர் படை, ராணுவம், என எல்லாவற்றுளும் தனித்து முதன்மையாக விளங்கியுள்ளது நிஜாம் அரசு. உலகிலேயே இந்தியாவில்தான் வைர சுரங்கம் இருந்து வந்தது. அதில் ஒன்று கொல்லூர் (குண்டூர் மாவட்டம்) வைர சுரங்கம்.  உலக புகழ் பெற்ற கோஹினூர் வைரம், இங்கிருந்து தான் எடுக்கப்பட்டது. இங்கு தான் தரமான வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன.

கர்நாடகம் -

இப்போதுள்ள கர்நாடகம், முதலில் பாமினி, கேளடி நாயக்கர்கள்  மற்றும் விஜயநகர பேரரசால் ஆளப்பட்டுள்ளது. விஜயநகர பேரரசின் காலத்தில் கன்னட மொழியின் வளர்ச்சி வேகமாக இருந்தது. பல நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டது. ஹம்பி (பெல்லாரி  மாவட்டம்) விருபாக்ஷா சிவன் கோவில் உலக பிரசத்தி பெற்றது. இன்றும் திராவிட கட்டட கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.  மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் விஜய நகர பேரரசால் விரிவாக்கபட்டது.

பின்னர் மைசூர் வாடியார்களால் 13-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை ஆளப்பட்டது. சில காலம் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தனால் ஆளப்பட்டது. திப்பு சுல்தானின் போர் படை மிகவும் சக்தி வாய்ந்தது. இந்தியாவிலேயே முதன் முதலில் பீரங்கி மற்றும் ராக்கெட் தொழில் நுட்பத்தை உபயோக படுத்தியது திப்பு சுல்தான் ஆட்சியில் தான். அதே போல வீரத்திற்கும் பெயர் போனவன் திப்பு சுல்தான். இக்காலகட்டத்தில் தான் பல அரண்மனைகளும், மசூதிகளும் இங்கு கட்டப்பட்டது. திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலியின் காலத்தில் தான் மைசூர் பட்டு பிரசித்தி பெற ஆரம்பித்தது.

மேலும் மைசூரில் உள்ள அம்பா விலாஸ் அரண்மனை, ஜகன்மோகன் அரண்மனை, லலிதா மஹால், ஜெயலக்ஷ்மி விலாஸ், காரஞ்ஜி  விலாஸ் மற்றும் ராஜேந்திர விலாஸ் ஆகிய அனைத்தும் வாடியர்களால் கட்டப்பட்டது. இந்த அரண்மனைகள் எல்லாமே இந்திய - இஸ்லாமிய கட்டடக்கலையையும், மேற்கத்திய கட்டடகலையும் இணைத்து கட்டப்பட்டதாகும்.

வாடியர்களின் மகாராணி அணிந்திருந்த தங்க வைர நகைகளின் மதிப்பு 600 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் வாடியர்களின் சொத்து மதிப்பு மைசூர், பெங்களூர் அரண்மனைகளை சேர்க்காமல், 1500 கோடிகளுக்கு மேல் இருக்கிறது என்று கணிக்கிடப்பட்டுள்ளது.

கேரளம்  -

இடைகால கேரளா தேசத்தை சேர மன்னர்களும், இந்து நாயர் அரசர்களும் ஆண்டு வந்தனர். பின்னர் திருவிதாங்கூர் அரசரின் கீழ் மலையாள தேசம் இருந்தது. பத்மநாபபுரம் அரண்மனை 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கேரளா கட்டடக்கலையின் அழகையும், நுட்பத்தையும் இதை வைத்தே சொல்லிவிடலாம். இலக்கியத்திலும், கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா காலத்தில் பத்மநாப சாமி கோவிலுக்கு பல காணிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அக்கோவிலின் ரகசிய அறையில், ஒன்றரை லட்சம் கோடிகள் மதிப்புள்ள தங்க வைர ஆபரணங்கள், நகைகள், விக்ரகங்கள், மூட்டை மூட்டையாய் நாணயங்கள் என கணக்கிலடங்கா சொத்துக்கள் கோவிலுக்கு கொடுக்கபட்டுள்ளது. கொடையாக கொடுக்கப்பட்டதே இவ்வளவு என்றால், அசல் சொத்து மதிப்பு போல லட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று சொல்லபடுகிறது. டச்சுக்கரர்கள் போர் தொடுத்த போது, அவர்களை எதிர்த்து போரிட்டு வென்றவர்கள் திருவிதாங்கூர் அரசர்கள். மேலும் தற்காப்பு கலையான களரி வித்தைக்கு பெயர் போனவர்கள் அன்றைய மலையாள மன்னர்கள்.

வட இந்தியா -

வடக்கில் பல அரசர்கள் நம் பாரதத்தை ஆண்டு சென்றுள்ளனர். அதில் முகல் சாம்ராஜ்யம் ஆட்சி காலம் தான் இந்தியாவின் பொற்காலம் என்று சொல்லபடுகிறது. பேரரசர் அக்பர் காலத்தில் கட்டப்பட்டது தான் ஆக்ரா பக்திபூர் சிக்ரி கோட்டை. பேரரசர் ஷாஜகான் கட்டிய தாஜ் மகால் இன்றும் உலக அதிசியமாக கருதப்படுகிறது. வடக்கில் கட்டிய பல கோட்டைகள் இன்று இவர்களின் கலை வளத்திற்கு சான்றாக இருக்கிறது. 16-ஆம் நூற்றாண்டில் பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரானா ரஞ்சித் சிங்கின் வைர சேகரிப்புகளில் ஒன்றாக இருந்தது தான் கோஹினூர் வைரம்.  அமிர்தசரசு பொற்கோவிலும் 16 ஆம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது.

டச்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வருவதற்கு முன் வியாபார பரிவர்த்தனைக்கு தங்கம் மற்றும்  வெள்ளி நாணயங்கள் தான் வழக்கத்தில் இருந்தனவாம். இப்படி எல்லா வகையிலும், எல்லா கலைகளிலும், வளத்திலும், எல்லா பிராந்தியத்திலும் சிறந்து விளங்கிய நாம் இன்று எப்படி இருக்கிறோம்? எல்லா மாநிலத்திலும் கடன்,  ஊழல், வறுமை கோட்டிற்கு கீழ் 20 கோடி மக்கள் என எங்கு காணினும் பஞ்ச பாட்டு தான். இந்தியா சுதந்திரம் பெற்று ஜனநாயக நாடாக மாறி, ஆளுக்கு ஆள் நாட்டை சுரண்டவும், கூரு  போட்டு விற்கவும் தான் செய்துள்ளார்கள். நாட்டின் இந்த நிலைக்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டுமே காரணம் ஆகிவிட முடியாது. மக்களாகிய நம்மிடையும் சில பொறுப்புக்கள் இருக்கிறது.

ஆங்கிலேயர் இந்தியாவிற்கு சுதந்திரம் தராமல் போயிருந்தால், நாம் இன்னும் இங்கிலாந்திற்கு அடிமையாக தான் இருந்திருப்போம். சில பல போராட்டங்களுடன், இந்தியர்கள் யாவரும் ஒற்றுமையுடன் இருந்திருப்போம். இப்போதுள்ள சாதி/மத இடஒதுக்கீடுக்கு பதிலாக ஆங்கிலேயர்-இந்தியர் வேற்றுமையில் இருந்திருப்போம். இப்போது பெருமையாக பேசிகொண்டிருக்கும் சில விஞ்ஞான சரித்திரங்களை 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர் செய்து முடித்திருப்பார்கள். உதாரணத்திற்கு, மெட்ரோ ரயில், அதிவேக ரயில், ஊரெங்கும் நல்ல தார் சாலை, தரமிக்க பள்ளி கல்லூரி கல்வி, தொழில்முனை நகரங்கள், விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் முன்னேறி இருப்போம். ஆனால், எதிலும் நமக்கு முழு பங்கு இருந்திருக்காது; ஏற்றத்தாழ்வு நிறைய இருந்திருக்கும்.

vijayanagara kings

ஆங்கிலேயர்களோ, ஐரோப்பியர்களோ நம் நாட்டை படையெடுக்காமல், ஆட்சி செய்யாமலேயே இருந்திருந்தால், இந்நேரம் இந்தியா என்ற ஒன்றிணைந்தே நாடே இருந்திருக்காது. பிராந்திய மொழிகளில் தனித்தனி சமஸ்தானமாக தான் இருந்திருக்கும். தமிழகம் இந்துயிசம் மட்டும் பின்பற்றப்படும் நாடாக இருந்திருக்கும். இன்றளவிலும் நாம் துபாய், குவைத், எகிப்து போன்ற நாடுகளை போல பிற கலாசாரங்கள் கலக்காத மன்னராட்சியில் உள்ள பணக்கார நாடாக இருந்திருப்போம். ஆனால் என்ன... சுயமரியாதை, பெண்கள் சுதந்திரம், தொழிலாளர் உரிமை, ஜனநாயகம், மக்கள் உரிமை, போன்ற எந்த ஒரு கண்டாராவியும் இருந்திருக்காது. எல்லாமே அரசின் ஆணை கீழ்படி தான் இருக்கும். ம்ச்ச்.... இப்போது மட்டும் என்ன வாழுதாம் ???

பேசாமல், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றே நடந்திருக்கலாம் என்று தான் எண்ண தோன்றுகிறது. நாடும், நாட்டின் வளமும் சூரையாட படாமளாவது இருந்திருக்கும். ஹ்ம்ம்.. வாழ்க பாரதம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்