புதன், 5 ஜூன், 2024

மீண்டும் மோடி !

வணக்கம்,

தேர்தல் திருவிழா முடிந்து, முடிவுகளும் வந்தாகிவிட்டது. பெரும்பாலானோர் வீட்டில் நேற்று காலை 8 மணிமுதல் பல்வேறு சேனல்களிலும், இணையதளம் வாயிலாகவும் ரிசல்ட்டை பார்த்துக்கொண்டே இருந்திருப்பார்கள். முடிவு என்னவோ தேர்தலுக்கு முன்னமே தெரிந்து விட்ட போதிலும், ஏதாவது மாற்றம், ஏற்ற/இறக்கம் வருமா என பலரும் ஓட்டு எண்ணிக்கையை பார்த்துக்கொண்டே இருந்தனர். டி.வி சேனல்களும் அவரர் கட்சி விருப்பு, வெறுப்புக்கு ஏற்றது போல இஷ்டத்துக்கு ஒரு நம்பரை காட்டி முன்னிலை என சொல்லி கொண்டிருந்தனர். ஒரு சேனலில் NDA 220+ ; INDIA- 250+ என்றும் மற்றொரு சேனலில் NDA 275+ ; INDIA- 180+ என்றும் வாதிட்டு கொண்டிருந்தனர். இவர்கள் சொல்வதையெல்லாம் பார்ப்பவன் தான் மடையன் !

இம்முறையும் பா.ஜ.க.வே வென்று, மீண்டும் மோடியே பிரதமராக போகிறார். இவர்களது பா.ஜ.க கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வென்றுள்ளது. இம்முறை எப்படியாவது தமிழ் நாட்டில் 10 இடமாவது வென்று விட வேண்டும் என்பதில் குறியாக இருந்த பா.ஜ.க, பல ராஜதந்திரங்கள் பயன்படுத்தியும், தமிழக சுற்று பயணம் வந்தும், ஸ்டார் வேட்பாளர்கள் நிறுத்தியும், திராவிட எதிர்ப்பு பிரச்சாரம் செய்தும் பார்த்துவிட்டது; குட்டி கரணம் அடிக்காத குறை ஒன்று தான். ஆனால் என்னதான் முட்டி மோதி(டி) யும் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாமல் போனதுதான் அந்தோ பரிதாபம்!


ஏன் பா.ஜ.கவால், மோடியால் தமிழ் நாட்டில் ஜெயிக்க முடியவில்லை.? ஏன் ஆர்.எஸ்.எஸ் / ஹிந்துத்வா தத்துவம் இங்கு எடுபடவில்லை.? என்ற கேள்விகளுக்கு இன்னும் புரியாமல் வடக்கில் பலர் சுற்றி கொண்டிருக்கின்றனர். 2019 தேர்தல் முடிவின் போதும் இதே போல ஒரு பதிவை பழைய பேப்பரில் எழுதி இருந்தேன். கிட்டத்தட்ட இதே content தான். 

தாமரை இங்கு மலராமல் போனதற்கு காரணம், தமிழ்நாட்டில் நாங்கள் ரொம்ப அறிவாளிகள், மெத்த படித்தவர்கள், இது பெரியார் மண் என்பதெல்லாம் இல்லை. அதற்கு காரணம் பா.ஜ.க. வே தான்!  

*) போன வாரம் வரையிலும் அவர்களின் பிரசாரத்தில் மத வெறுப்புணர்வு மட்டுமே மேலோங்கி இருந்தது. இந்துக்களின் நகைகளை பிடுங்கி இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார்கள்; நம் பணத்தை/உடைமைகளை எடுத்து அதிகம் பிள்ளைகளை பெறும் சமூகத்துக்கு (முஸ்லீம்) கொடுத்து விடுவார்கள். கோவில்களை பராமரிக்காமல் விட்டு, மசூதிகளை கட்டுவார்கள் என நீட்டி கொண்டே போகிறார்கள். 

*) பத்து ஆண்டு கால சாதனையாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதையே பெரிதாய் நினைக்கின்றனர். ஏதோ 30 வருடம் முன் இடித்து விட்டார்கள்; அசம்பாவிதம் நடந்து விட்டது; கலவரமும் நடந்து பலகாலம் ஆகி, வழக்கும் முடிந்துவிட்டது. ராமர் கோவில் கட்டி திறக்கும் முன், அங்கு நீதிமன்றம் குறிப்பிட்ட இடத்தில் ஒரு மசூதியும் கட்டி திறந்திருந்தால், கொஞ்சம் நல்ல பெயர் கிடைத்திருக்கும். ஆனால் அதை தான் இவர்கள் செய்யவில்லையே! ராமர் கோவில் திறப்பதையே பெரிய வைபவம் போல நாடெங்கும் விமர்சையாக கொண்டாடி மற்றவர்களை கடுப்பேற்றினார்கள்.  

*) வாரணாசியில் ஞானவாபியில் உள்ள மசூதியில் சிவலிங்கம் இருக்கிறது என பிரச்சனை கிளப்பி, இப்போது அங்கு மசூதி சுவற்றில் உள்ள இந்து சிலைகளுக்கு பூஜை செய்யலாம் என்று நீதிமன்றமும் சொல்லிவிட்டது. அடுத்து அவர்கள் கையில் எடுக்க போவது மதுரா ஷாஹி இடிகாஹ மசூதி (Shahi Idigah Masjid) என்று நினைக்கிறேன். போன மாதம் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மோடி 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்வதற்க்கு பதிலாய் 'ஜெய் ராதே கிருஷ்ணா' என்று மேடையில் முழங்கியுள்ளார். அது எங்கே போய் முடியுமோ என தெரியவில்லை. 

*) குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியரின் வெறுப்பை மேலும் சம்பாதித்து கொண்டது பா.ஜ.க. இதனால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்ற போதிலும், அண்டை நாட்டிலிருந்து வரும் எந்த ஒரு இஸ்லாமியருக்கும் அனுமதி கிடையாது என்ற மனமே வெறுப்பின் அடையாளம் தான்.   

*) அங்கங்கே ஒன்றிரெண்டு நல்ல திட்டங்களும் செயல்படுத்தபட்டுள்ளது என்பதையும் சொல்லியாக வேண்டும். 

*) வீடு கட்டி தரும் அல்லது வீடு கட்ட மானியம் தரும் திட்டமும் பலருக்கு உதவியுள்ளது. அந்த வங்கி மூலம் வழங்கபடுவதால் சரியான ஆவணங்கள் வைத்திருப்போருக்கு உதவி கிடைப்பதாக சொல்லப்படுகிறது. 

*) வட மாநிலங்களில் நகரங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ் ஹைவே பல இடங்களில் அருமையாக போடப்பட்டுள்ளது. அது பெரிதாய் சொல்ல வேண்டிய விஷயம் தான். சில நகரங்களில் மேம்பாலங்கள், உட்கட்டமைப்பு போன்ற விஷயங்கள் செய்து கொடுத்துள்ளது.   

*) வடக்கில் இன்றும் சமையலுக்கு விறகு வெட்டி பயன்படுத்தும் மக்கள் பலர் இருக்கையில், இலவச கேஸ் சிலிண்டர் கொடுத்தது பல ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாய் இருந்துள்ளது. ஆனால் கேஸ் விலை தான் ஏகிறிவிட்டது. மானியமாக 200/300 ரூபாய் பணம் வங்கி கணக்கில் வரும் என சொல்லி, இப்போது 25 ரூபாய் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது (எனக்கு!); மற்றவர்களுக்கு எப்படி என தெரியவில்லை. 

*) விலைவாசி விண்ணுலகை விர்ரென எட்டி, சாதாரண மக்களுக்கு பெரும் சுமையாய் இருப்பது கொஞ்சம் கஷ்டமான ஒன்றுதான்.  

*) நாடு முழுவதும் வந்தே பாரத், புல்லட் ரயில் என அமல்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இத்திட்டம் காசு இருப்பவனுக்கு மகிழ்ச்சி ; நல்ல திட்டம்... மற்றவருக்கு?  

*) கருப்பு பணத்தை ஒழிக்க அமல் படுத்தப்பட்ட Demonetization-னால் பல நடுத்தர குடும்பங்கள்/மக்கள் ஓரிரு மாதங்கள் சில்லறைக்காக பெரிதும் கஷ்டப்பட்டனர். ஆனால் எந்த ஒரு பெரிய முதலைகளிடமும் கருப்பு பண புழுக்கம் ஒழிந்தது போல தெரியவில்லை. 

*) டிஜிட்டல் இந்தியாவால் பண வர்த்தகமெல்லாம் டிஜிட்டல் மயமாகி போனதால், எல்லாமே UPI transaction னாக மாறியுள்ளது. இஃது மற்ற நாடுகளில் இல்லாத நல்ல திட்டம் என்றே நினைத்து வந்த போதிலும், சில்லறை தட்டுப்பாடு யாருக்கும் தெரியாமல் நாடு முழுக்க பரவியிருப்பது மறுக்க முடியாத உண்மை. UPI transactionனால் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதே பலருக்கு தெரிவதில்லை. இதன் மூலம் வங்கிகள் பெருமளவு சம்பாதிப்பது தான் பெரும் உண்மை.    

*) கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஹிந்தி/சமஸ்கிருதத்தை நுழைக்க முயற்சி செய்து செய்து.. செய்து கொண்டே இருக்கிறார்கள். 

*) NEET ரத்து பற்றி தமிழ் நாட்டில் மட்டுமே பேசி கொண்டிருக்கிறோம். மற்ற மாநிலங்களில் பெரிதாய் எதிர்ப்பு கொடி காட்டியது போல தெரியவில்லை.

*) GST யால் பல சிறு வியாபாரிகள், வருடத்தில் சில லட்சங்கள் பணம் பண்ணும் வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் பல பெரு நிறுவனங்கள், பெரு வணிகர்கள் பெரிதாய் நட்டம் அடைவது போல தெரியவில்லை. Lower /middle class வியாபாரிகள் கறுப்புப்பணம் வைக்காமல்/சேர்க்காமல் இருக்கவே இந்த வரி. மற்றபடி பெரும் முதலாளிகள் சகஜமாய் ஏப்பம் விட்டு கொண்டு போகின்றனர். மேலும் நாம் கொடுக்கும் வரிக்கு ஏற்ற அளவு நற்திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதில்லை என சொல்கிறார்கள்; அது எந்த அளவு உண்மை என எனக்கு தெரியவில்லை.

இவர்கள் செய்யும் அக்கப்போரால் நம்மை போன்ற சாதாரண மக்களின் மனம் பெரிதும் மாசுபடுகிறது. டீ.வியிலோ/நேரிலோ யாரவது ஒருவரை காவி வேஷ்டி, சட்டை, பட்டை, ருத்திராட்ச கொட்டை என பார்த்தாலே, இவர் ஆர்.எஸ்.எஸ். ஆளாக இருப்பாரோ என்ற சந்தேகத்தை நமக்குள் வர வைக்கிறது. அதே போல ஏதாவது ஒரு ஐயர்/ஐயங்காரை பார்த்தால் கண்டிப்பாக பா.ஜ.க காரராக, ஆதரவாளராக தான் இருப்பார் என்ற judgemental thinking நம்மிடையே உருவாகிறது. உண்மையிலேயே அவர் பகுத்தறிவாளராக, நல்ல மனிதர்களாகவே இருந்தாலும், சமூக நீதிக்கு எதிராக இருப்பார், மற்றவர்களை மட்டம் தட்டிதான் பேசுவார் என்ற எண்ணமும் நமக்குள் வந்து தொலைகிறது. இப்படிபட்ட நினைப்பு நமக்குள் வருவதில்  நம் திராவிட கட்சிகளுக்கும் பெரும்பங்கு உண்டு என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. இதை பற்றி வேறு ஒரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இதெல்லாம் கூட பரவாயில்லை. இப்போதெல்லாம் ராமர் பற்றி பேசினாலோ, ராமரை வணங்கினாலோ, ரோட்டில் காரின் பின்னால் ஆஞ்சநேயர் படம் ஓட்டப்பட்டிருந்தாலோ.. ஒரு வேளை இருக்குமோ???🤔 என்ற மனக்கசப்பு/ எரிச்சல் வருவது எனோ தெரியவில்லை. அவ்வளவு ஏன்??!  கடவுள் (ராமர்) மேலேயே கோபம் வரும் அளவுக்கு செய்து விட்டார்கள் நம்ம அரசியல் வியா(வா)திகள். அது பொய்யான கோபமாக இருந்தாலும், அவ்வாறு வந்ததற்கு காரணம்  பா.ஜ.க.வின் நடத்தை தான்.

சரி... எது எப்படியோ.. மீண்டும் மோடியே நம் பிரதமர். இதிலிருந்து நாம் மீண்டு வர இன்னும் ஒரு ஐந்து வருடம் பொறுத்திருந்து பார்ப்போம்.


நன்றி!!!
பி. விமல் ராஜ்