வணக்கம்,
போன வருடம் ஜெயிலரில் மெகா ஹிட் வெற்றி கொடுத்த சூப்பர் ஸ்டார், இந்த வருடம் வேட்டையன் படத்துக்காக களம் இறங்கியுள்ளார். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, துஷாரா, மஞ்சு வாரியர் என பெரிய லிஸ்ட் இருக்கிறது. பான் இந்தியா படமாக்க முயற்சி செய்து, எல்லா மொழி நடிகர்களையும் நடிக்க வைத்துள்ளனர். ஆனால் கதைக்கு அவ்வளவு அவசியமா? என்பது தான் பெரும் கேள்வி.
ஃபர்ஸ்ட் சிங்கிள் "மனசிலாயோ" பாடலை நம்மால் மனப்பாடம் செய்து பாட முடியவில்லையே தவிர செம்ம vibe.. செம்ம ஹிட்.. சமூக வலைதளங்களில் இன்றும் அந்த இசையும், ஸ்டெப்பும் வலம் வந்து கொண்டிருக்கிறது. ட்ரைலர் சுமாராக இருப்பது போல தான் எனக்கு தெரிந்தது. சூப்பர் போலீஸ் - என்கவுன்டர் - ஆக்சன் - பழிவாங்கல் என்பது போல தான் காட்டியிருந்தர்கள்.
எது எப்படி இருந்தாலும் இயக்குநர் TJ ஞானவேல் படத்தில் ஏதாவது surprise element ஒளித்து வைத்திருப்பார் என நம்பி கொண்டு படம் செல்ல தயாரானேன். படம் பார்ப்பதற்குள் எந்த ஒரு விமர்சனமோ, முதல் பாதி விறுவிறு, இரண்டாம் பாதி சறுக்கல், படத்தின் முக்கிய சீன் ஸ்கிரீன் ஷாட் போன்ற எவ்வித spoiler கர்மதையும் பார்த்து தொலைக்க கூடாது என்று கவனமாய் scroll செய்து தள்ளி கொண்டிருந்தேன்.
கதை இது தான். கன்னியாகுமரியில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான அதியன் ரவுடிகளை விரட்டி வேட்டையாடுகிறார். சென்னையில் உள்ள பள்ளிகூட ஆசிரியை துஷாரா ஒரு பெரிய ஆன்லைன் கல்வி நிறுவனம் செய்த ஊழல்களை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வர முயல்கிறார்; அதனால் கொலையும் செய்யப்படுகிறார். போலீஸ் கொலையாளி (அசல் கோலார்) என ஒருவரை உருவகப்படுத்தி என்கவுன்டர் செய்ய முயல, அவர் தப்பிகிறார். அதை கண்டுபிடிக்க சூப்பர் ஸ்டார் வந்து, 48 மணி நேரத்தில் சோலியை முடிக்கிறார். பின்னர் தான் அது தப்பான என்கவுன்டர் என்று தெரிகிறது. மனம் வருந்தி மீண்டும் சரியான வில்லனை கண்டுபிடித்து, போலீசில் சிக்க வைத்து நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி தருகிறார்.
கடந்த சில படங்களாக மாஸ் கமர்சியல் மசாலாவாக மட்டுமே இருந்த ரஜினி படம், இம்முறை விறுவிறுப்பான ஆக்சனுடன் கல்வி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுவது, போலி என்கவுண்டர், எல்லோருக்கும் சமனான சட்டம், மனித உரிமை மீறல், சில பல சமூக கருத்துகளை கொண்ட படமாகவும் வந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் எப்பவுமே மாஸ் தான். ஸ்கிரீன் பிரசென்ஸ், ஸ்டைல் லுக், clipon கூலிங் கிளாஸ், அந்த சிரிப்பு என எல்லாமே அட்டகாசம் தான். 😎 ஆனால் தலைவர் கெட்டப் தான் லேசாக ஜெயிலர் படத்தில் இருப்பது போலவே தெரிவது எனக்கு மட்டும் தானா என புரியவில்லை..🧐
சூப்பர் ஸ்டோர் கூடவே வரும் போலீஸ் கேரக்டர்களாக கிஷோர், ரித்திகா சிங் வந்து சிறப்பாக நடித்துள்ளனர். துஷாரா கொஞ்சமாகவே வந்தாலும் படம் முழுக்க பேசப்படுகிறார்.
அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதலில் வேட்டையனுக்கு எதிராய் பேசி, பின்பாதியில் நண்பனாக மாறுகிறார்.
பாகத் பாசில் சூப்பர் ஸ்டார் கூடவே வந்து அங்கங்கே காமெடிகள், சின்ன சின்ன முகபவனைகள் காட்டி கவர்கிறார். அவர் சுடப்பட்டு இறக்கும் போது, 'அடடா ' என நம்மை தவிப்புக்குள்ளக்கிறார்.
அதியன் மனைவியாக மஞ்சு வாரியர்
வருகிறார். அவ்வளவுதான்! மாஸா சீன் வைக்கணுமென்னு அவருக்கென ஒரு சீன் வைத்துள்ளார். மற்றபடி அவருக்கு பெருசாய் நடிக்க வாய்ப்பில்லை.
விஜய் டிவி ரக்ஷனும், அபிராமியும் இந்த படத்தில் எதற்கென தெரியவில்லை.
மெயின் வில்லனாக ராணா. வாட்டசாட்டமான பணக்கார கல்வி வியாபாரியாக, கோபத்துடன் மிரட்டி செல்கிறார்.
அனிருத் இசை இம்முறை ரொம்ப இரைச்சலாக இல்லை.. ஆனால் ஏதோ ஒண்ணு குறைச்சல் தான். 'மனசிலயோ' பாட்டை தவிர வேறு எதுவும் மனசில் ஒட்டவே வில்லை. வழக்கம் போல சூப்பர் ஸ்டார் பில்டப் பாட்டு ஒன்று ராப்-பில் பாடி கோரசில் கோவிந்தா போட்டுள்ளனர். "அடேய்..போதும் டா.. நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர் எப்பவுமே சூப்பர் ஸ்டார் தான்; எல்லா படத்திலேயும் சொல்லிட்டே இருக்க வேணாம்ன்னு" தான் சொல்ல தோன்றுகிறது. அடுத்த படத்திலும் இப்படி ஒரு பாட்டு கண்டிப்பா வச்சு தொலைப்பங்க.. ஹம்ம்..🤦
போன இரண்டு மூன்று படத்தில் கதையென பெரிதாய் என்னை ஏதும் கவர வில்லை. ஜெயிலர் கூட ஓகே ரகம் தான் என புலம்பி இருந்தேன். ஆனால் வேட்டையன் நன்றாக இருந்தது, பிடித்திருந்தது என்பதை விட போரடிக்காமல் திருப்தியாகவே இருந்தது.
இம்முறை வச்ச குறி தப்பவில்லை!🦅
நன்றி!!!
பி. விமல் ராஜ்