வெள்ளி, 30 ஜூன், 2023

குமரிக்கண்டமும் லெமூரியாவும்!

வணக்கம்,

இந்த உலகமானது உருவான காலம் முதல் பல புவியியல் மாற்றங்களுக்கு ஆளாகியுள்ளது. நம் தொன்மையை விளக்கி சொல்ல இந்தியாவில் பெரும்பாலும் 2500 முதல் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருள் ஆதாரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சில இடங்களில் புராண சான்றுகளும், இலக்கிய சான்றுகளும் நமக்கு வரலாற்று ஆதாரமாய் கிடைத்துள்ளன. தமிழ் மொழியும் மற்றும் தமிழ் மக்களின் நிலமும் தொன்மையும், பெருமையும் வாய்ந்தது. அதை சுற்றி பல கருத்து மோதல்கள், முரண்பாடுகள்,  வேறுபட்ட கோட்பாடுகள் என பல இருக்கின்றன. அதில் சில காலங்களாக பெரிதும் பேசப்படுவது குமரிக்கண்டம் பற்றி சர்ச்சைகளும் கருத்தாக்கங்களும் தான். அதனை பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை பற்றி  பார்க்கலாம்.

லெமுரியா கண்டம்:
முதலில் லெமூரியா கண்டம் பற்றி பார்ப்போம். 1864-ல் ஆங்கிலேய விலங்கியல் நிபுணர் பிலிப் ஸ்க்லேட்டெர் (Philip Sclater) என்பவர்,  லெமுர் (lemur) என்னும் ஒருவகை குரங்கின விலங்கின் படிமங்கள் மடகாஸ்கர் தீவிலும், இந்தியாவில் சில பகுதிகளிலும் இருப்பதை அறிந்தார். அது எப்படி கிழக்கு ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் இல்லாமல் நடுவில் பெரும் கடலால் பிரிக்கப்பட்டுள்ள இந்தியா, மடகாஸ்கர் ஆகிய இரு நிலப்பரப்பில் ஒரே இனம் (species) இருக்க/இருந்திருக்க முடியும் என்பதை ஆராய்ந்தார். இதன் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மடகாஸ்கர், இந்தியாவின் தென் பகுதி மற்றும் ஆஸ்திரேலியா மூன்றும் இணைக்கப்பட்டு, ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்க கூடும்; பின்னாளில் துருவ மாற்றம் (polar shift), டெக்டோனிக் தகடுகளின் மாற்றம் (tectonic plates shift), கண்டப் பெயர்ச்சி  (continental drift) ஆகிய புவியியல் காரணத்தினால் இங்குள்ள நிலப்பரப்பு கடலுக்குள் முழுகியிருக்கலாம் என அனுமானித்தார். அந்த தொலைந்த/ மூழ்கிய நிலப்பரப்பை "லெமுரியா கண்டம்" என பெயரிட்டு தன் கோட்பாட்டை முன் வைத்தார்.  இக்கருத்து சிலரால் ஒத்துக் கொள்ளப்பட்டாலும், பலர் இது வெறும் அனுமானம் மட்டுமே; உண்மையில் இப்படி இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறிவந்தனர். பின்வரும் நூற்றாண்டில்,  1912-ல் Alfred Wegener என்னும் ஜேர்மன் புவியியலாளர், பல்லாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கண்டப் பெயர்ச்சியினால் pangea என்னும் எல்லா கண்டங்களும் சேர்ந்த நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து பிரிந்தது இப்போதுள்ள உலக வரைபடம் போல ஆனது என்பதை முன்வைத்தார். அதற்கு பிறகு லெமுரியா கண்டம் பற்றி பெரிதும் பேசப்படாமல் போனது. 

பின்னர் 1930-ல் சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தமிழ் பேராசிரியர் குமரி நாடு என்றும், குமரிக்கண்டம் என்றும் தமிழர் நிலப்பரப்பை சொல்கிறார். லெமூரியாவை குமரிக்கண்டம் என்று முதன்முதலில் தம் நூலில் குறிப்பிடுகிறார். அதற்கு முன்னர் 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கந்த புராணத்தில் இடம்பெற்றுள்ள அண்டகோசப் படலத்தில் உலகம் என்பது பின்வரும் மாதிரியாக விவரிக்கப் பட்டுள்ளது.

"பிரபஞ்சத்தில் பல உலகங்கள் உள்ளன. ஒவ்வொரு உலகமும் பல கண்டங்களால் ஆனது ஆகும். இக்கண்டங்களில் பல பேரரசுகள் இருந்தன. இப்பேரரசுகளில் ஒன்று பரதன் என்ற மன்னனால் ஆளப்பட்டது. அவனுக்கு எட்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். பரதன் தன்னுடைய பேரரசுகளை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து நிர்வகித்தார். பரதனின் மகள் குமரியால் ஆளப்பட்ட பகுதி குமரிக்கண்டம் எனப்பட்டது. குமரிக் கண்டம் பூமியில் ஒரு சிறந்த பேரரசாகக் கருதப்பட்டது."

அடியாருக்குநல்லார் என்னும் புலவர் 12 ஆம் நூற்றாண்டில் எழுதிய சிலப்பதிகார உரையில், கடலில் தொலைந்து போனதக சொன்ன நிலப்பரப்பு தற்போதைய கன்னியாகுமரிலிருந்து தென்திசையில் 700 கவட்டம் (7500மைல்) தூரத்தில் குமரியாரும்,  பஃறுளியாறும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் சீன பழங்கதைகளில், தங்கத்தை வெட்டி எடுக்க பாண்டிய மன்னனால் சீன அடிமைகள் நியமிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் குமரியாறு, பஃறுளியாறு என இரு ஆறுகளும், மேரு மலையும் இருந்ததற்கான சான்றுகளும் அதில் உள்ளது. 

தேவநேய பாவாணர் மற்றும் பிற தமிழ் அறிஞர்களும் தமிழர்கள் முதன் முதலில் இங்கு தான் தோன்றினர் என்று கூறியுள்ளார். ஆதிமனிதன் தோன்றிய இடமாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றும், பின்னாளில் கடற்கோளால் அழிந்து கடலினுள் போயிருக்க கூடும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலப்பரப்பு பாண்டிய மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளதாகவும், கபாடபுரம், தென்மதுரை போன்ற நகரங்கள் இருந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பல இலக்கியங்கள் இங்குள்ள நகரங்களில் இயற்றப்பற்றிருக்க கூடும் என்றும் அதற்கான சான்று பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் சில தகவல்கள் உண்டு என்று சொல்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் 'நன்னீர் பஃறுளியாறும் குமரி நாடும் கொடும்கடல் கொண்டு போனதாக' பாடல் வரிகள் உண்டு. 4500 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்டம் இருந்துள்ளதாக குறிப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

1960-ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியில், தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். முதலாகக் கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் சொந்த அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ (Chagos Archipelago) வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த (கி.மு. 8000) பனி யுகத்தின் போது இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

மற்றுமொரு ஆராய்ச்சியின்படி இந்துமா கடலுக்கடியில் மூழ்கிய நிலப்பரப்பு ஒன்று இருக்கிறது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.ஆயினும் அஃது குறைந்தது 10,000 முதல் 15,000 ஆண்டுகள் முன் மூழ்கியிருக்க வாய்ப்புண்டு என்றும் சொல்லப்படுகிறது, இக்கருத்தின்படி அது குமரிக்கண்டமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சில கூற்றுகள் உள்ளது. மேலும் குமரிக்கண்டம் இருந்ததாக சொல்லப்படும் இடத்தில கடல் 200 மீட்டர் வரை ஆழத்தில் உள்ளது. சில இடங்களில் 2000 மீட்டருக்கு மேல் கடல் ஆழம் இருக்கிறது. 

தமிழ் தேசியவாதிகளும், தமிழ் இன ஆதரவாளர்களும் இலக்கியத்தின் ஆதாரங்களை கொண்டு, குமரிக்கண்டம் இருந்ததாக வாதிடுகிறார்கள். இன்னும் சிலர் விஞ்ஞான ஆராய்ச்சியின்படி குமரிக்கண்டம் நிரூபணம் ஆகாத ஒரு கட்டுக்கதை என்றும் சொல்கின்றனர். இந்திய அரசாங்கம் இது போன்று கடலில் மூழ்கிய நகரங்களின் (பூம்புகார், கொற்கை..) பெருமையும், அதன் வரலாற்றையும் வெளிக்கொணர்ந்து உலக நாடுகளிடைய நம் தொன்மையும் பெருமையும் பறைசாற்ற வேண்டும். நிலையான அதிகாரபூர்வ தொல்பொருள் ஆதாரம் வரும் வரையில், இது போன்ற சர்ச்சைகளும் கருத்துக்களும் குமரிக்கண்டத்தை சுற்றி வந்து கொண்டே தான் இருக்கும்.


நன்றி!!!
பி. விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!