வியாழன், 28 டிசம்பர், 2023

வாங்களேன்! ஒரு கை குறையுது..

வணக்கம்,

சீட்டுக்கட்டு பற்றி தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் நண்பர்கள் /உறவினர்கள் கூடும் இடத்திலும், திருமணம் மற்றும் விசேஷ நாட்களிலும், கிளப்களிலும் விளையாடப்படுகிறது. சில இடங்களில் பொழுது போக்காகவும், சில இடங்களில் சூதாட்டமாகவும் விளையாடப்படுகிறது. இந்த சீட்டாட்டத்திற்கு பெரிய வரலாறே உண்டு. நான் படித்து தெரிந்து கொண்டதை சொல்கிறேன். தொடர்ந்து படியுங்கள்.

9ஆம் நூற்றாண்டில் சீனாவின் டாங் (Tang dynasty) பேரரசின் காலத்தில் தான் முதன்முதலில் சீட்டு விளையாட்டு ஆரம்பிக்கபட்டுள்ளது. காய்ந்த இலையில் படம் வரைந்து அச்சு எடுக்கப்பட்டு விளையாடப்பட்டது. இதனை leaf game என குறிப்பிடுகின்றனர். அக்குறிப்பில் இந்த விளையாட்டை அரச குடும்பத்தினர் 868 பேர் சேர்ந்து விளையாடியதாக சொல்கின்றனர். பின்னர் பெர்சியா, அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளில் பல்வேறு மாற்றங்களுடன் விளையாடப்பட்டது. பின்னர் ஐரோப்பாவில் பெரும் மாற்றத்துடன் அட்டை வடிவில் அச்சடிக்கப்பட்டு விளையாடப்பட்டது. 13/14 ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பெயின், இங்கிலாந்து, போர்த்துக்கல் வரை சென்று பின்னர் ஜப்பானுக்கும் பரவியது. ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் மொழி/ கலாச்சாரத்திற்கு ஏற்ற படங்களை வரைந்து அதற்கேற்ற விளையாட்டு சட்டங்களை சேர்த்து விளையாடியுள்ளனர்.
 
Playing cards

இப்போது உள்ளபடி நான்கு முதல் பத்து பேர் வரை விளையாடும் இவ்விளையாட்டில், அக்காலத்தில் முப்பது நாற்பது பேர் வரை விளையாடியுள்ளனர்.
பின்னர் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவிற்கு முகலாயர் மூலம் வந்துள்ளது. இங்கு இந்த சீட்டாட்டத்தை கஞ்சிஃபா (Ganjifa) என்று பெயரிட்டு விளையாடியுள்ளனர். கஞ்சிஃபா என்னும் சொல்லுக்கு 'புதையல்' என்னும் பொருள் தரும். இதை விளையாடி பொருள் ஈட்ட பயன்படுத்தியும் உள்ளனர்.

இவ்விளையாட்டை சதுர/வட்ட வடிவில் உள்ள மரக்கட்டை அல்லது பனை ஓலை வைத்து விளையாடியுள்ளனர். பின்னாளில் நம் நாட்டிற்கேற்ப தசாவதார கஞ்சிஃபா, அஷ்ட மல்லா கஞ்சிஃபா, ராமாயண கஞ்சிஃபா, ராசி கஞ்சிஃபா, மொகல் கஞ்சிஃபா, மைசூர் சாட் கஞ்சிஃபா, அக்பர் கஞ்சிஃபா, பிரெஞ்சு கஞ்சிஃபா என பல்வேறு மாற்றங்களையம் மாறுபாடுகளை கொண்டுள்ளது இவ்வகை சீட்டாட்டம். ஒவ்வொரு வகையிலும் அதற்கேற்ற படங்களும், காய்களும், சில சமயங்களில் தாயக்கட்டையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில ஆட்டங்கள் 20 பேர் ஆடக்கூடியது. சில ஆட்டங்கள் 3/4 பேர் சேர்ந்து 120 அட்டைகளை கொண்டு ஆடக்கூடியது.   
பின்னாளில் ஐரோப்பியர்களின் வருகைக்குப்பின் சீட்டாட்டம் வேறு வகையில் மாற்றம் பெறுகிறது. இப்போது இருப்பது போல ஒரு (சீட்டு) கட்டில் 52 கார்டுகள் கொண்டு ஆட ஆரம்பித்தனர். முதலில் ஜோக்கர் என்ற கார்டே இருக்காது. பிற்காலத்தில், அதாவது 20ஆம் நூற்றாண்டில் தான் ஒரு கட்டுக்கு இரு ஜோக்கர் சீட்டுகளை சேர்த்து கொண்டனர். உலகளாவிய சீட்டுக்கட்டு ஆட்டத்தில் பின்பற்றபடுவது French suite என்ற முறையே ஆகும். அதில் தான் heartin, spade, club/clover, diamond/dice/tiles போன்ற சின்னங்கள் இருக்கும். இதில் ஒவ்வொரு கட்டிலும் 4 Ace க்கள் , இரண்டு முதல் பத்து மற்றும் face card என்று சொல்லப்படும் King , Queen, Jack ஆகிய கார்டுகள் இருக்கும். கூடுதலாக இரு ஜோக்கர்கள் இருக்கும். இதை தவிர ஜெர்மன், இத்தாலியன், ஸ்பானிஷ், சுவிஸ்-ஜெர்மன் ஆகிய suite களில் வெவ்வேறு சின்னங்கள் இருக்கும்.    

Playing-cards-suites

முதலில் அட்டையில் வரையப்பட்டு விளையாடப்பட்டன; பின்னர் பேப்பரில் அச்சடிக்கப்பட்டது; பின்னர் பிளாஸ்டிக் அட்டையில் மாறியது; அதன் பின்னர் அதற்கான அலங்கார அட்டை பெட்டியில் வைக்கப்பட்டு பல வெளிப்புற மாற்றங்களை கொண்டு மாறியுள்ளது சீட்டுக்கட்டுக்கள். கடந்த 20 ஆண்டுகளில் லேப்டாப், டெஸ்க்டாப்பில் solitaire/rummy விளையாடி, இப்போது online rummy வரை வந்துவிட்டது. இன்றளவும் மக்களிடையே விளையாடப்படும் ஒரு பொழுதுபோக்கு ஆட்டமாகவும் இருக்கிறது. மரத்துக்கடியிலோ, திண்ணையிலோ விளையாடினால் அது லோக்கல் விளையாட்டு; அதுவே உயர்தர ஓட்டலில்/கிளப்பில் விளையாடும் போது, அது பணக்கார மக்களின் சூதாட்டமாக ஆக மாறிவிடுகிறது. இந்த சீட்டுக்கட்டுகள் விளையாட மட்டுமல்லால், கார்டு மேஜிக் செய்யவும், கோபுரம் (வீடு) கட்டி விளையாடவும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சீட்டுக்கட்டுக்கள் இன்னும் பலவகையான பரிணாம வளர்ச்சிகளை அடைய காத்துக் கொண்டிருக்கிறது.


உங்களுக்கு சீட்டுக்கட்டில் என்னென்ன விளையாட்டுகள் தெரியும் என பின்னூட்டத்தில் சொல்லுங்கள்...


நன்றி!!!
பி. விமல் ராஜ் 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

1 Comments:

Umamaheswari சொன்னது…

Good one.. to know about the evolution of playing cards..

Keep up the good work .. Learn a lot !!!

Best wishes ..