ஞாயிறு, 17 மார்ச், 2013

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா !!!

வணக்கம், 

எல்லோர்க்கும் அவர்களுடைய சொந்த ஊரை பற்றி மற்றவருக்கு சொல்ல வேண்டும் என ஆசை உண்டு. எனக்கும் தான். அதை பற்றி தான் இங்கு பதிய போகிறேன். நான் பிறந்து வளர்ந்தெல்லாம் சிங்கார சென்னை என்றாலும் எனது அப்பா, தாத்தா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரு சிறு கிராமத்தில் தான். கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் நன்னிலத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சேங்கனூர் என்னும் குக்கிராமம்.  

ஊர் பேர் சொன்னவுடன் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு பிரபலம் இல்லை என்றாலும், எங்கள் ஊரில் உள்ள சோமநாத சுவாமி கோவில் அந்த வட்டாரத்தில் மிகவும் பிரச்சியத்தம்.  சேங்கனூரிலிருந்து சற்று தூரத்தில் உள்ள திருவாஞ்சியம் ஊரில் உள்ள சிவன் கோவிலும் மிகவும் பிரபலம். திருவாஞ்சியத்தில் சிவபெருமான் தான் மூலக்கடவுள் என்றாலும் எமதர்மராஜனுக்கு தனி சன்னதி இங்கு மட்டும் தான் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இங்கு வந்து சென்றுள்ளனர்.   

சிறு வயது முதல் நகர வாழ்க்கையை பார்த்து வளர்ந்த நான், எங்க ஊருக்கு செல்வது என்பது மிகவும் பிடித்தமான விஷயம். பொதுவாக குலதெய்வ வழிபாட்டிற்காகவோ அல்லது எங்கள் வீட்டு சுட்டிகளுக்கு மொட்டையடித்து காது குத்தவோதான் ஊருக்கு செல்வோம் (எனக்கும் அங்குதான் !!!). முன்பெல்லாம் ஊருக்கு போகும் போது, சேங்கனூர் பேருந்து 
நிலையத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து போக மாட்டு வண்டி வரும். அதில் வைக்கோல் 'குஷனில்' உட்கார்ந்து கொண்டு வண்டி குலுங்க குலுங்க வீட்டுக்கு செல்வோம். ஆனால் இப்போதெல்லாம் நங்கள் வரும்முன் சித்தப்பாவின் கார் வந்துவிடுகிறது.

சினிமாவிலும்,கதைகளிலும் நான் பார்த்த கிராமங்களை போலவே, இங்கும், கண்ட இடமெல்லாம் பச்சை பசெலன வயல்வெளி,தண்ணீர் நிறைந்த குளம், வரிசையாக தென்னை மரங்கள், ஓட்டு வீடு, கூரையின் மீது மயில், வைக்கல்போர்,பெரிய கொல்லை, முங்கில் காடு, மாந்தோப்பு, ஒத்தை மரத்து பாலம்,மாட்டுவண்டி, டிராக்டர் , கதிரறுக்கும் இயந்திரம் என நகர வாழ்க்கையில் பார்த்திராத காட்சிகள். சிறு வயதில் என் தம்பி 
தங்கையருடன் வைக்கோல் போரிலும், மாட்டுவண்டியிலும்  ஏறி விளையாடிய நாட்களும் உண்டு.   

சேங்கனூரைப்  பற்றி மேலும் சொல்ல வேண்டுமானால், இங்குள்ள மக்கள்  மற்ற கிராமங்களை போல விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். பெரியார் காலத்தில் ,பெரும்பாலானோர் திராவிட கழகத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் இந்த ஊரில் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய இந்து பண்டிகைகளை விமர்சையாக கொண்டாடுவதில்லை என் சொல்கிறனர். இன்னும் சிலர், சில ஆண்டுகளுக்கு முன் தீபாவளியன்று ஊரில் உள்ள பெரிய வீட்டு பெரியவர் ஒருவர் இறந்ததால், அதிலிருந்து நம் ஊருக்கு தீபாவளி இல்லை என என் பாட்டி சொல்லி கேட்டதுண்டு. உழவர் திருநாளாம் பொங்கல் விழாவின் பொது மட்டும் ஊரே களைக்கட்டும். கோவிலில் விசேஷ பூஜை, பெரியவர்கள் முதல்  சிறியவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனியே விளையாட்டு போட்டிகள் என கொண்டாடி மகிழ்வர். 

மாட்டு பொங்கலின் போது காளைகளை அலங்கரித்து தெருக்களில் ஓட விடுவார்கள். அவ்வளவுதான் எங்க ஊர் ஜல்லிகட்டு. அதுமட்டுமல்ல மாட்டு பொங்கலன்று பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கினால், ஆசியோடு, பரிசாக பணமும் தருவார்கள் (எனக்கு இதுதான் ரொம்ப பிடித்தது!!!).



சமீபத்தில் நாங்கள் குல தெய்வ வழிப்பாட்டிற்காக ஊருக்கு சென்றிருந்தோம். சுற்றி பார்க்கும் போது தங்களுடைய நிலத்தில் சவுக்குத்தோப்பு போட்டிருப்பதாக என் சித்தப்பா கூறினார். நேரில் சவுக்குத்தோப்பை பார்க்காத நான் அதை காண தயாரானேன். அந்த உச்சி வேலையிலும் வெயிலே தெரியாமல் ரம்மியமாக இருந்தது. தரையில் சவுக்கை மர இலைகள் கிழே விழுந்து தார்ப்பாய் போல விரிந்திருந்தது. நான் சுற்றி பார்க்கும் போதே என் தம்பி சவுக்குத்தோப்பை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து கொண்டிருந்தான். காற்று அடிக்கும் போது மரங்கள் ஆடுவது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. 

அடுத்தது எங்கள் குலதெய்வ கோவில். கோவில் என்றவுடன் அடுக்கு கோபுரமும்,கலசமும், பெரிய தூண்களும் இருக்கும் 
என்றோ,அல்லது  வெட்டவெளியில் ஆறடி உயரத்தில் வீச்சரிவாளோடு நிற்கும் காவல் தெய்வமோ என்று எண்ணி விட வேண்டாம். ஊருக்கு வெளியே, வயல்களுக்கு நடுவே  சிறிய திட்டு,அதில் ஒரு சிறு அம்மன் கோவிலும், அதனருகே அலுமினிய கூரையின் கிழ் ஒரு முழு செங்கல் அளவுள்ள கருங்கல்லை முக்கால்வாசி மண்ணில் புதைத்து,வெள்ளை துணியால் சுற்றி, சந்தனம்,குங்குமம் வைத்து இது தான்  நம்ம குலசாமி வீரன் என்று சொல்லுவர். ஒவ்வொரு முறையும் பூஜை போடும் போது , கிடவோ/கோழி கறியோ வைத்து கும்பிடுவார்கள் என நினைப்பேன். ஆனால் அதெல்லாம் நமக்கு பழக்கம் இல்லை என கூறி வெறும் மாவிளக்கும், பொட்டுகடலையும் வைத்து படைத்தது விடுவார்கள்.


வீரன் கோவில் 
என்னதான் விழுந்து விழுந்து வர்ணித்தாலும் இரண்டு நாட்களுக்கு மேல் அங்கு இருந்தால் நமக்கு பொழுது போகவே மாட்டேன்கிறது. என்ன இருந்தாலும் சென்னையிலேயே இருந்து விட்டு கிராமத்திற்கு சென்றால் இரண்டு,முன்று நாட்களுக்கு மேல் இருக்க நமக்கு தறி கொடுக்காது.     

மீண்டும் வரும் பொங்கலுக்கு ஊருக்கு போக வேண்டும் என அப்பா சொல்லி வருகிறார். கால நேரம் சரியாக இருந்து ஜனவரியில் ஊருக்கு போனால், பொங்கல் கொண்டாட்டத்தை பற்றி விவரமாக எழுதுகிறேன்.  

நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

1 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஊர் பெருமை அருமை...

முக்கியமான தனி சன்னதி உள்ளதே...

எல்லாமே அவசரம் என்ற நிலையிலிருந்து, தீடிரென்று அமைதியான நிலைக்கு மாறினால் சிறிது சிரமம் தான்... (அனுபவம் தான்...) இப்போது அமைதியான நிலை தான் பிடித்திருக்கிறது...