ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பொறியியல் படித்து என்ன பிரயோஜனம் ???

வணக்கம்,

நாள் : ஏப்ரல் 5. காலை 8:30 மணி. அலுவலக பேருந்தில் எப்போதும் போல தூங்கி கொண்டே பயணித்து கொண்டிருந்தேன். தீடீரென முழிப்பு வர, தனியார் பண்பலை வரிசையில் (FM) ஒரு முக்கிய தலைப்பை பற்றி பேசி கொண்டிருந்ததை கேட்டேன். தலைப்பு என்னவென்று பார்த்தால், நாட்டில் பல தரமில்லாத பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது பற்றி தான். அட ! இதை கேட்டவுடன் இதை பற்றியே ஒரு பதிவு போடலாமே என்று எண்ணம் தோன்றியது. பாதி தூக்கத்தில், தொகுப்பாளர் ' அஜய் விக்னேஷ்' பேசியதையும், என்னுடைய சில கருத்துகளையும் உங்களிடம் பகிர்கிறேன்.

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வெறும் 231 சுயநிதி கல்லூரிகள் தான் இருந்தது. ஆனால் இன்றோ, 570 சுயநிதி கல்லூரிகளும் 37 பல்கலைகழங்களும் இருக்கின்றது. இந்த ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட  தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நூறுக்கும்  மேற்பட்ட கல்லூரிகள் அனுமதி கோரிக் காத்துள்ளன. பொறியியல் கல்லூரி மட்டுமல்லாமல் புதிதாய் முளைக்கும் சில கலைக்கல்லூரிகளும் இதே நிலைமையில் தான் உள்ளது.

இதில் பெரும்பாலான கல்லூரிகள் தரமானதாக இருப்பதில்லை. போதிய வசதிகள் கிடையாது. திறமையான விரியுரையாளர்கள் கிடையாது. வசதியுள்ள ஆய்வகங்கள் இருப்பதில்லை. இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் கல்லூரிக்கு அருகில் உள்ள சுற்றுவட்டாரத்திலிருந்து வருகின்றனர். சிலர் பல்கலைகழக ஆலோசனைப்படி வந்து சேர்கின்றனர். அவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் பெயரளவில் மட்டும் பொறியியல் படித்தவர்களாக இருகின்றனர். 15/ 20 ஆண்டுகளுக்கு முன்னால் பொறியியல் மாணவர் என்றாலோ, அல்லது அரசு/தனியார் நிறுவனத்தில் பொறியியலாளர்  என்றாலோ தனி மதிப்பு தான். என் மகள்/மகன் பி.ஈ (B.E)  படிக்கிறாள்(ன்) என பெற்றோர்கள் பெருமையுடன் சொல்வார்கள்.

ஆனால் இப்போது ஊருக்கு 10 சுயநிதி கல்லூரிகளை திறந்து வைத்து, அதுவும் ஓர் கலைகல்லூரி படிப்பை போல ஆக்கிவிட்டனர். இந்த கல்லூரிகளில் படித்து விட்டு வருடந்தோறும் 10 லட்சம் பேருக்கும் அதிகமானோர் வருகின்றனர். அதில் ஒரு சிலர் மட்டும் வேலை வாய்ப்பு பெற்று தப்பிவிடுகின்றனர். முக்கால்வாசி பேர் தரமான பொறியியல் கல்வி  இல்லாததாலும், சரியான உரையாடல் திறன் இல்லதாதலும் (BPO) பி.பி.ஒ-விலும் மற்ற சிறிய நிறுவனங்களிலும் தங்கள் படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலையில் போய் சேர்கின்றனர். ( ஹ்ம்ம்! ஒரு சிலர் நல்ல கல்லூரியில் சேர்ந்தும், சரியாக படிக்கத்தால் சரியான வேலையின்றி இருக்கின்றனர் !!!)

அதுமட்டுமல்லாமல் இப்போதெல்லாம் எந்த வேலைக்கும் எந்த கல்வித்தகுதியும் (பட்டப்படிப்பும்) பரவாயில்லை என்ற  நிலை வந்துவிட்டது.


எனக்கு தெரிந்த வரை மருத்துவ மாணவர்கள் மட்டும் தான் படிப்புக்கு பிறகு, அவர்தம் துறையில் போய் வேலை செய்கின்றனர். பொறியியல் படித்த மாணவரும், கலைகல்லூரி மாணவரும் சேர்ந்தே எல்லா வேலைவாய்ப்புக்கும் வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரே  அளவு சம்பளமும் சிலர் வாங்குகின்றனர். அதில் பெரிதாக  தப்பு ஏதும் இல்லை என எல்லோருக்கும் தெரியும் . ஒரு வளமான சமுதாயம் வளர இந்த நிலை தேவைதான். எல்லா பொறியியல் மாணவருக்குமுள்ள வாதம் என்னவென்றால், எல்லா வித பட்டதாரிகளும்  ஒன்றாக வேலை செய்து சம்பளமும் வாங்க, நாம் மட்டும் ஏன் கஷ்டப்பட்டு கடன் வாங்கி,  நான்கு வருடம் படிக்க வேண்டும்? நாம் மட்டும் ஏன் அதிகமாக கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும்? பேசாமல், நாமும் இளங்கலையோ (B.A), அறிவியல் இளங்கலையோ(B.Sc)  படித்து விட்டு தபால் முலமாக ஒரு முதுகலை படிப்பை படித்து இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. என் வீட்டில் "நீயெல்லாம் இன்ஜினியரிங் படித்து என்ன பிரயோஜனம் ??? " என்று திட்டுவது ஞாபகம் வருகிறது.

திருமண பத்திரிக்கையில் மணமகன்(ள்) பெயருடன் பி.ஈ /பி.டெக் என்று போட்டு கொள்ளவும், வரதட்சணையாக 50 பவுன் நகைக்காகவும் ,மாமனார் வீட்டில் கார் வாங்கி தர சொல்லவும் தான் பொறியியல் படிப்பு உபயோகமாக இருக்கிறது.

நாம் எவ்வளவோ பொருமினாலும் சில பொறியியல் படித்த மாணவர்கள், உயர்ந்த நிறுவனத்தில் லகரங்களில் சம்பளம் வாங்குவதை யாராலும் ஓப்பு கொள்ளாமல் இருக்க முடியாது. 

இதையெல்லாம் பண்பலையில் கேட்டு கொண்திருந்த நண்பர் ,
"போதும் பா!, -(FM) எஃப். எம் - ஐ  நிறுத்த சொல்லுங்க. காலங்காத்தாலேயே வெறுப்பபேத்துறது போல இருக்கு .. " என்று நொந்து கொண்டார் .

தலைப்பு முழுசாக முடியும் முன், அலுவலகம் வந்ததால், பேருந்தில் உள்ள அனைவருக்கும் நமூட்டு சிரிப்புடன் இறங்கி சென்றோம். 
      

நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

3 Comments:

சேக்காளி சொன்னது…

//நீயெல்லாம் இன்ஜினியரிங் படித்து என்ன பிரயோஜனம்//
நீங்களும் இன்ஜினியருதான் னு தெரிஞ்சிகிட்டோம்.

விமல் ராஜ் சொன்னது…

ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு .. வலைப்பூவிற்கு வந்ததற்கு நன்றி...

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

கரெக்ட்... கல்யாண பத்திரிகையில் இஞ்சினியர் அவசியம் தான்...