சனி, 30 மே, 2015

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

வணக்கம்,

வெங்கட் பிரபுவுடன் சூர்யா இணைந்துள்ள முதல் படம். இயக்குனருக்கு முந்தைய படமான 'பிரியாணியில்' காரம் இல்லாததாலும், சூர்யாவின் 'அஞ்சானை' கண்டு மக்களே அஞ்சியதாலும் இந்த படம் மாஸாக வரும் என்று அனைவரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளார்கள். சென்சாரில் 'யு' சான்றிதழ் கிடைத்த பின், வரிவிலக்குக்காக பெயர் மாற்றி வந்துள்ளான் இந்த 'மாசு என்கிற மாசிலாமணி'.

தமிழ் சினிமாவில் பேய் படங்களின் டிரெண்ட் தான் இப்போது டாப் வரிசையில் நிற்கிறது. இப்படம் 'சூப்பர் நேச்சுரல் காமெடி திரில்லர்' வகையறாவை சேர்ந்தது என்று சொல்லும் போதே தெரிந்து விட்டது, இதுவும் ஒரு மொக்கையான பேய் படமாக தான் இருக்கும் என்று. நான் நினைத்ததும் பொய்க்கவில்லை. இருந்தாலும் வெங்கட் பிரபு மீதுள்ள சிறு நம்பிக்கை, சூர்யாவின் நடிப்பு - இவை இரண்டிற்காகவாவது படத்தை பார்க்கலாம் என்று எண்ணி போன என்னை தமிழ்திரை ரசிகர்களுக்கு, வழக்கம் போல ப்பூ...பூ...பூச்சாண்டி காட்டியுள்ளான் இந்த மாசு.


கதையின் படி சூர்யாவுக்கு ஒரு விபத்தினால் ஆவிகளை, பேய்களை பார்க்கும் மற்றும் பேசும் சக்தி கிடைக்கிறது. முதலில் பயந்துவிட்டு, பின்னர் அவைகளுக்கு உதவுகிறார். உதவி கேட்டு வரும் பேய்களில் ஒரு பேய், இன்னொரு சூர்யா. அந்த பேய்க்கு இந்த சூர்யா உதவினாரா இல்லையா என்பது தான் மிச்ச சொச்ச கதை. கதையின் கரு புதிது என்று நினைக்கும் போது, அதே பழைய பழி வாங்கும் கதையை பேய் படம்  என்ற போர்வையில் சொல்லியிருக்கிறார்கள். முதல் பாதியில் மொக்கை போட்டுவிட்டு, இரண்டாம் பாதியில் கொஞ்சம் மாஸ் காட்டியிருக்கிறார்கள். 

இரண்டு சூர்யாகளின் இன்ட்ரோ சீன்களை மட்டும் மாஸாக காட்டிவிட்டு, போக போக தூசாகி போகிறார். இருவரில் இரண்டாம் சூர்யா கொஞ்சம் மாஸ் காட்டுகிறார். அவருடைய வசன உச்சரிப்பை பார்த்தால், ஈழ தமிழில் கதைப்பது போல இல்லை. மேலும் இவரின் ஹேர் ஸ்டைல், ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி போட்டது போல இருக்கிறது. எந்த படமென்று தான் யோசித்து கொண்டிருக்கிறேன்.
 
படத்துக்கு நயன்தாராவை கதாநாயகியாக போட்டதே வீண். நாலு சீன்களுக்கு வந்து போய்விடுகிறார். இயக்குனரின் முந்தைய படங்களை போல, இப்படத்திலும் சில கதாபாத்திரங்களில் 'சென்னை-28 கேங்' ஒரு காட்சிக்கு வந்து போகின்றனர். அதில் எனக்கு பிடித்த சீன், ஜெய்க்கு வரும் ஃப்ளாஷ்பேக் தான். நன்றாக லிங்க் பண்ணியிருக்கிறார் வெங்கட். காமெடிக்கு வழக்கம் போல அவர் தம்பி பிரேம்ஜி தான். இதிலும் படம் முழுக்க சூர்யாவுடன் வருகிறார். சூர்யா - நயன்தாரா காட்சிகளை விட சூர்யா - பிரேம்ஜி காட்சிகள் தான் அதிகம். பார்த்திபன் போன்ற மிக சிறந்த நடிகரை ஏன் இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை என தெரியவில்லை.

பாடல்களும் கூட அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. ஹாலிவுட் படமான தி சிக்ஸ்த் சென்ஸ் (The Sixth Sense) போன்ற நல்ல கதை கரு இருந்தும், இக்கதையில் திகிலோ, த்ரில்லோ ஒன்றும் இல்லை. அப்படி இருந்திருந்தால், படம் தாறுமாறாக மாஸாக இருந்திருக்கும். இயக்குனர் சூர்யாவை வைத்து ஜனரஞ்சக படமும் இல்லாமல், பேய் படமும் இல்லாமல் ஒரு மாதிரி வீணடித்து விட்டார்.

வெங்கட் பிரபு சிக்ஸர் அடிக்கிறேன் என்று சொல்லி, டொக் வைத்து டபுள்ஸ் எடுத்து இருக்கிறார். நல்ல வேலை தூக்கியடித்து அவுட்டாக வில்லை. மொத்தமாக படத்தில் கதை, திரைக்கதை, நாயகன், ஒலி, ஒளி என எதிலும் மாஸ் இல்லை.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!