சனி, 27 ஜூன், 2015

இன்று நேற்று நாளை - விமர்சனம்

வணக்கம்,

தமிழ் படங்களில் சயின்ஸ் பிக்க்ஷன் ஒரு புதுக் கதைக்களம். டைம் மெஷின் என்று சொல்லப்படும் காலயந்திரம் ரொம்ப புதுசுதான். படத்தின் முதல் போஸ்டரும், ட்ரைலரும் பார்த்த போது, "அடடே ! இந்தப் படம் நல்லா இருக்கும் போலருக்கே!" என்று அனைவரையும் யோசிக்க வைத்தது. குருட்டாம் போக்கில் சினியுலகம் வைத்த ஒரு போட்டியில் கலந்து கொண்ட நான், ஒரு இலவச டிக்கெட் கிடைக்க, எஸ்கேப்பில் பார்க்க தயாரானேன்.

இதற்கு முன்னால் பாலகிருஷ்ணா நடித்த அதித்யா 369 (அபூர்வ சக்தி 369) என்ற தெலுங்கு டப்பிங் படத்தில் டைம் மெஷின் பற்றிப் பார்த்ததாக ஞாபகம். அதற்குப் பின் தென்னகத்தில் இந்தப் படம்தான். சில ஹாலிவுட் படங்களில் டைம் மெஷின் பற்றிப் படம் பார்த்துள்ளேன்.

கதை இதுதான். கி.பி. 2065-ல் கண்டுப்பிடிக்கபட்ட ஒரு டைம் மெஷின், சோதனையோட்டதிற்க்காக 50 வருடங்களுக்கு முன்னால், அதாவது நடப்பு ஆண்டுக்கு (2015) வருகிறது. அது இப்போதுள்ளவர்கள் கையில் கிடைத்தால் என்னனெனச் செய்வார்கள், என்ன செய்தார்கள் என்பதே கதை.


கதாநாயகனாக விஷ்ணு நடித்துள்ளார். படத்தில் தன் நடிப்பு பணியைச் செவ்வனே செய்துள்ளார். மியா ஜார்ஜ் நாயகியாம். பதுமையாக அவ்வபோது வந்து சென்றுள்ளார். படத்தின் பலம் கருணாகரன் தான். ஹீரோ கூடவே இருந்து படம் முழுவதிலும், டைம் மெஷினுடனும் பயணப்படுகிறார். படத்தில் காமெடி ஆங்காங்கே தூவபட்டுள்ளது. படம் முழுக்கக் காமெடி இருந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். வில்லன் கதாபாத்திரமாக வரும்வரும் சாய் ரவியும், விஞ்ஞானியும் மெக்கானிக்குமாக நடித்திருக்கும் டி.எம் .கார்த்திக்கும் ('நண்பன்' படப் புகழ் price tag ) கதையைக் கொஞ்சம் நகர்த்த உதவி செய்துள்ளார்கள். அதுவும் சரியாகச் செய்துள்ளார்கள். கௌரவப் பாத்திரமாக ஆர்யா விஞ்ஞானியாக நடித்துள்ளார்.

டைம் மெஷினை வைத்துக் கொண்டு ராஜாக்கள் வாழந்த காலம் போவார்கள், 100 வருடம் முன்னோக்கி போவார்கள் என்று எண்ணி கொண்டிருக்கும் ரசிகர்களின் மனஓட்டத்தை மாற்றி, தங்கள் வாழ்வில் நடந்தையே மாற்றி அமைக்கக் காலயந்திரத்தில் பயணிக்கிறார்கள். இரண்டு மணி நேரம் படத்தைப் போரடிக்காமல் காட்டியுள்ளனர். அதைவிட இறந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் சரியாக லிங்க் கொடுத்திருக்கார்கள். அதுவே படத்தின் மிகப் பெரிய ப்ளஸ். டைம் மெஷின் கிராபிக்ஸ் நன்றாகவே வந்திருகிறது. இன்னும் கொஞ்சம் சி.ஜியில் ஜிகினா வேலை காட்டியிருக்கலாம். பாடல் வரிகளிலும், இசையிலும் அவ்வளவாக ஹிப்-ஹாப் இல்லை.

அரைத்த மாவையே அரைக்கும் படங்களுக்கு மத்தியில், புதுசாய் ஒரு கதைக்கருவை நமக்கு அளித்த இயக்குனர் ரவிகுமாருக்கு எனது  பாராட்டுக்கள். ஆக மொத்தத்தில், கண்டிப்பாகத் திரையில் சென்று பார்க்க வேண்டிய ஒரு படம் தான் இது.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

2 Comments:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல விமர்சனம்...
படம் பார்க்க வேண்டும்...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

உங்களின் இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று வாசிக்கவும்.