ஞாயிறு, 31 டிசம்பர், 2017

2017-ல் நடந்தவை !

வணக்கம்,

இந்த வருடம் அப்படி இப்படின்னு எப்படியோ பரபரப்பா போயிடிச்சு. எது நடக்கணுமோ அது நடக்கவே இல்லை. எது நடக்கவே கூடாது நினைச்சோமோ அது தான் நடக்குது. எப்பவுமே இப்படி தான் நடக்குது .. எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தான். கடந்த வருடத்தில் நம்ம நாட்டில என்னன்னே முக்கிய சம்பவங்கள் நடந்ததுன்னு ஒரு வாட்டி திரும்ப போய் பார்ப்போமா? சில முக்கிய நிகழ்வுகளையம், சமூக வலைத்தளங்களில் பெரிதும் அலசப்பட்ட விஷயங்களையும், அங்கும் இங்குமாய் தேடி பதிவு போட்டிருக்கிறேன். அப்படியே கொஞ்சம் பின் நோக்கி போங்க...

  1. பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வாங்கியது. 
  2. சின்னம்மா சசிகலாவின் அரசியல் ஆசை. முதல்வராக முழு முயற்சி.
  3. அலங்காநல்லூரில் பொங்கலன்று ஜல்லிக்கட்டு வீரர்கள் கைது. 
  4. சென்னை மெரினாவில் மாணவர்கள் தன்னிச்சையாக கூடி போராட்டம்.
  5.  தமிழகம்மெங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் பெரும் புரட்சியாய் மாறியது. மாபெரும் அறப்போராட்டமாக உருவெடுத்த மெரினா போராட்டம்; 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
  6. போராட்டத்தில் கலந்து கொண்ட பேர் தெரியாத பெண்ணின்  வீர முழக்க பாட்டு. பலர் கோஷ்டியாக பாட்டு பாடி/ ஆடி அமைதியான வழியில்  போராட்டம். 
  7. தமிழக முதல்வர்  ஓ.பன்னிர் செல்வத்தையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் போராட்ட களத்தில் மக்கள் திட்டி தீர்ப்பு. OPS மிக்ஸர் சாப்பிடுகிறார் என கூறி கிண்டல்.
  8. ஜல்லிக்கட்டு தடை நீக்கம் என செய்தி. போராட்டக் களத்தில்  மாணவர்கள் களைந்து செல்ல வேண்டி போலீஸ் எச்சரிக்கை.  ஆட்டோவுக்கு தீவைப்பு, தடியடி என கலவரத்தை  உண்டாக்கிய காவல்துறை.
  9. ஜல்லிக்கட்டு தடை நீக்கம். ஜல்லிக்கட்டு சட்டம் தமிழக மற்றும் மத்திய அரசு சட்டசபையில் மாற்றப்பட்டு அமலுக்கு கொண்டு வந்தது.
  10. 45ஆவது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு.
  11. H1B விசா முறைகளில் பல கட்டுபாடுகள் விதிவப்பு.
  12. இரான். இராக், லிபியா,சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளுக்கு 90 நாட்களுக்கு விசா மறுப்பு.
  13.  வெளிநாட்டில் உள்ள பல இந்தியர்கள் வேலை இழக்க வாய்ப்பு என செய்தி பரவியது.
  14. ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக பல ஊர்களில் பிரம்மாண்டமாய் நடந்தது.
  15. சென்னை எண்ணுர்  துறைமுகத்தில், இரு வெளிநாட்டு கப்பல்கள் மோதி கச்சா எண்ணெய் கொட்டியது. கடல் நீரும், கடல் வாழ் உயிரினமும் சேதம்.
  16. கொட்டிய எண்ணெயை வாளி வைத்து எடுக்க வைத்தது மத்திய/மாநில அரசு. 
  17. OPS முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா. சின்னம்மாவை முதல்வராக பதவியேற்க அழைப்பு. கவர்னர் ராம் மோகன் ராவ் மற்ற வேலை காரணமாக மறுப்பு.
  18. OPS ஜெயலலிதா சமாதியில் தீடிரென 40 நிமிடம் தியானம். தியானத்திற்கு பின் ஜெ சாவில் மர்மம், மதுசூதன் பொது செயலாளராக ஏற்க சொல்லி ஜெ சொன்னார், சசிகலா தன்னை ராஜினாமா செய்ய சொல்லி கட்டாய படுத்தினார் என பத்திரிக்கை கூட்டத்தில் கூறல். OPS மக்களிடையே திடீர் ஹீரோ ஆனார்.
  19. சட்டப்பேரவையில் ஸ்டாலினை பார்த்து சிரித்ததாக சொல்லி சசிகலா OPS -ஐ பொருளாளர் பதவியிலிருந்து நீக்கம். சின்னம்மா இரவு ஒரு மணிக்கு பத்திரிக்கைக்கு பேட்டி.
  20. இந்தியா 104 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை.
  21. அடுத்த ஓரிரு நாட்களில் பல எம்.எல்.ஏக்கள் OPS பக்கம் ஆதரவு.
  22. சசிகலா 129 எம்.எல்.ஏக்களுடன் கூவத்தூர் 'கோல்டன் பே' ரிஸார்டுக்கு அழைத்து சென்று அடைப்பு. 
  23. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா, சசிகலா ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பு. சசிகலாவிற்கு நான்கு ஆண்டு சிறை. பெங்களூர் பரப்பானா சிறையில் அடைப்பு.
  24. சிறை செல்வதற்கு முன் ஜெயா சமாதியில் வணங்கி, ஓங்கி அடித்து சபதம். 
  25. சின்னம்மாவின் ஆணைக்கிணங்க, அதிமுக பிரதிநிதிகள் ஒப்பு க்கொள்ள எடப்பாடி பழனிசாமி புதிய முதலமைச்சாராக தேர்வு. 
  26. செயல் தலைவர் ஸ்டாலின் சட்டை சட்டசபையில் கிழிந்தது.
  27. ஜெயா இறப்புக்கு பின் தமிழ் நாட்டில் நடக்கும் எல்லா அரசியல் நகர்வுக்கு ஆளும் பா.ஜ.கவும்,மோடியும் தான் காரணம் என பலரும் திட்டவட்டமாக எண்ணினார்கள்.
  28. அதிமுக - OPS -ன் அதிமுக (அம்மா) எனவும், EPS -ன் அதிமுக (சசிகலா அணி) எனவும் பிரிந்தது.
  29. ஜெயலலிதா பிறந்த நாளன்று ஜெயாவின் அண்ணன் மகள் தீபா மாதவன் "எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை " என்ற கட்சியை தொடங்கினார்.
  30. கட்சி ஆரம்பித்த சில நாட்களில் தீபா கணவர் மாதவன் தனி கட்சி கட்சி ஆரம்பித்தார். அதிமுக அவரையும் அவர் மனைவியையும் பிரிக்க நினைப்பதாக குற்றம் சாட்டினார்.
  31. கீழடியில் பல பண்டைய தமிழர்கள் உபயோகித்த புராதன பொருட்கள் கண்டுபிடிப்பு. தொல்பொருள் ஆராய்ச்சியை நிறுத்த மத்திய அரசு முடிவு. பலர் அதிருப்தி.
  32. ஜெயலலிதாவின் தொகுதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிப்பு. இரு அணிகளும் இரட்டை இலைக்கு அடித்து கொண்டன.
  33. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி  தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைத்தது.
  34. விஜய் மல்லையா லண்டனில் கைதாகி இரண்டு மணிநேரத்தில் விடுதலை.
  35. ஹச்.ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பில் மோடியையும் பா.ஜ.காவை யம் எதிர்ப்பவர்கள் Anti Indian என கூறி காழ்ப்பு. 
  36. 'பாகுபலி 2' படம் ரிலீசாகி 1000 கோடியை (உலக அளவில்) எட்டியது. அதே போல ஹிந்தியில் 'டங்கல்' படம் (உலக அளவில் ) 2000 கோடியை எட்டி சாதனை படைத்தது. 
  37. ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால் தேர்தல் ஓத்திவைப்பு. 
  38. இரட்டை இலை சசிகலாவுக்கு கிடைக்க, தேர்தல் ஆணையத்துக்கு இரண்டு கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறி புது தில்லி போலீஸ் தினகரனை கைது செய்தனர். இரு மாதங்களுக்கு பின்னர் விடுவிப்பு.
  39. ஆளும் பா.ஜ .க உத்தரகாண்ட், உத்தர பிரதேசம்,மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடத்த தேர்தல்களில் வெற்றி. பஞ்சாபில் காங்கரஸ் வெற்றி.
  40. சுச்சி லீக்ஸ் வீடியோ வெளியானது.
  41. பல அரசியல்வாதிகள் வீட்டிலும், நடிகர்கள் வீட்டிலும் வருமான வரி சோதனை.
  42. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என சொல்லியது வீண்; நாட்டிலுள்ள கருப்பு பணம் வெளிவரவே இல்லை என பல பொருளாதார நிபுணர்கள் கருத்து.
  43. விஜய் டி.வியின்  'நீயா நானா'-வில் ஒரு பெண் ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை வந்திறங்க வேண்டும் என ஆசை கேட்பு.
  44. வைகை அணையின் நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோல் போட்டு மூட அமைச்சர் செல்லூர் ராஜு முயற்சி. 
  45. ஜி.எஸ்.டி (GST) சட்டம் அமலுக்கு வந்தது. விலைவாசி கடும் ஏற்றம். நுகர்வோர் பலர் அதிருப்தி.
  46. கடனை தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் தில்லியில் போராட்டம். 
  47. 100 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு செவிசாய்க்க வில்லை.
  48. ராம்நாத் கோவிந்த் புதிய குடியரசு தலைவராக தேர்வு. வெங்கையா நாயுடு துணை குடியரசு தலைவராக தேர்வு.
  49. தமிழ் நாட்டின் கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்.
  50. OPS -EPS மனம்/பணம் ஓத்து போக, இரண்டு அணிகளுக்கு ஒன்றாகின. OPS துணை முதல்வரானார். 
  51. .ப்ளூ வேல்' (BLUE WHALE) என்ற இணைய விளையாட்டு காரணமாக உலகில் பல டீன் ஏஜ் மற்றும் சிறுவர்கள் பலி. இந்தியாவிலும் ஊடுருவியது இந்த விளையாட்டு.
  52. மத்திய அரசு ப்ளூ வேல் கேம்மிற்கு தடை விதித்தது. 
  53. ஆதார் எண்ணை பாண் கார்ட், EPF, பாங்க் கணக்கு என எல்லாவற்றிலும் இணைக்க சொல்லி மத்திய அரசு உத்தரவு.
  54. லண்டனில் நடந்த ஐ.சி.சி.போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி 180 ரன்னில் வெற்றி.
  55. ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படம் 'காலா'; போஸ்டர் வெளியீடு.  
  56. கமலஹாசன் சில காலமாக டிவிட்டரில் அரசியல் பதிவுகளை போட்டு புரட்சி. ஏற்கனவே அரசியலில் தாம் இருப்பதாக சொல்லி, புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக நேரடி பதில்.   
  57. "மையம் விசில்" என்ற புது செயலி ஒன்றை சமூக விழிப்புணர்வுக்காக  ஆரம்பித்தார் கமலஹாசன். 
  58. ஜப்பான் கடல் பகுதியில், வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தியது. அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் பேப்பரும் சவாலாக வட கொரியா மாறியது.
  59.  ரஜினிகாந்த ரசிகர்களை சந்திப்பு. கட்சி பற்றி விரைவில் சொல்ல போவதாக கூறினார். சிஸ்டம் சரியில்லை; போருக்கு தாயாராகுங்கள் என ரசிகர்களிடம் கூறினார். பலர் இது படம் ஓட, அவர் செய்யும் வழக்கமான அரசியல் பூச்சாண்டி என்றும், அவர் வரவே மாட்டார் என்றும் கூறினார்.
  60. விஜய் டி.வியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 15 பிரபலங்களுடன் ஆரம்பித்தது. ஜல்லிக்கட்டு ஜூலி, ஓவியா, ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோருக்கு பலர் ஓட்டு போட்டனர். 4 கோடி பேருக்கு மேல் பார்க்கப்பட்ட ஜூலியையும் பலர் திட்டி தீர்த்தனர். ஓவியாவுக்கு தானாய் சேர்ந்த ரசிகர் கூட்டம். பெரும்படையான ஓவியா ஆர்மி மாறியது. கடைசியில் ஆரவ் பிக் பாஸாக தேர்வு. 
  61. நெடுவாசல், கதிராமங்கலம் ஆகிய கிராமங்களில் விளைநிலங்களில்  ஹைட்ரொ கார்பன், மீத்தேன் எடுக்க   மத்திய அரசு முடிவு. பல இடங்களில் மக்கள் போராட்டம்.
  62. சினிமா தியேட்டர் டிக்கெட் விலை ஏற்றம். மக்கள் பலரும் அதிருப்தி. தமிழ் ராக்கர்ஸ் காட்டில் அடைமழை. 
  63. மாட்டுக்கறிக்கு மத்திய அரசு தடை. பசுக்களை காக்க வேண்டி சட்டம் கொண்டு வர முடிவு. பலர் எதிர்ப்பு. 
  64. விவேகம் படம் ரிலீசானது. யூ டியுப் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படத்தையும் அஜித்தையும் கழுவி கழுவி ஊற்ற, பலர் அதற்கு எதிர்ப்பும் இணைய சண்டைகளும் நடந்தது.
  65. வண்டி ஓட்டும் போது கண்டிப்பாக ஒரிஜினல்டி ரைவிங் லைசன்ஸ் கொண்டு செல்ல வேண்டும் என தமிழக அரசு சட்டம். 
  66. மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் புத்த பிட்சுக்களால் கொன்று குவிப்பு.
  67. தமிழ் நாட்டில் நீட் தேர்வு எதிர்ப்பு. பல இடங்களில் மாணவர்கள் போராட்டம்.
  68. நீட் தேர்வை தடை செய்ய கோரி மேல்முறையீடு செய்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை. 
  69. 'ஜிம்மிக்கி கம்மல்' மலையாள பாட்டு பிரபலமானது. 
  70. டெங்கு காய்ச்சலால் தமிழ் நாட்டில் பலர் பலி.
  71. கோரக்பூரில் ஆக்சிஜன் சப்ளை இல்லாததால் 325 குழந்தைகள் இறப்பு.
  72. மெர்சல் படம் ரிலீசானது. படத்தில் GST பற்றிய தவறான கருது இருப்பதாக சொல்லி பா.ஜ .க எதிர்ப்பு. விஜய்யை மத ரீதியாய் விமர்சித்த பா.ஜ.காவின்  ஹச்.ராஜா. மக்கள் பலரும் கோபம்.
  73. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இயக்குனர் ஷங்கரின் '2.0 ' பட ஷூட்டிங் முடிவடைந்து, ஆடியோ ரிலீஸ் துபாயில் பிரம்மாண்டமாய் நடந்தது. 
  74. 'லட்சுமி' குறும்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கூட்டியது.
  75. நிர்மலா சீதாராமன் புதிய ராணுவ அமைச்சராக பதவியேற்பு.
  76. ஆளும் பா.ஜ .க குஜராத், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடத்த தேர்தலில் வெற்றி.
  77. பிட்காயின் (BITCOIN) என்ற டிஜிட்டல் கரன்சி பற்றிய செய்திகள் பெரிதும் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தன. பிட்காயினின் மதிப்பு திடீரென ஏறி இறங்கியது. 
  78. பல மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.  ஒரு முறை இந்திய கடற்படையினரே மீனவர்களை சுட்டு கொன்றுள்ளனர். 
  79. புது தில்லியில் காற்றின் மாசு அதிகமாகி ஊரே புகைமண்டலமாய் மாறியது.
  80. சென்னையில் ஒரிரு நாள் பெய்த மழைக்கே சாலைகளும், வீடுகளும் வெள்ளத்தில் மிதந்தன.
  81. பஞ்சாபை சேர்ந்த மனுஷி சில்லர் உலக அழகியாய் தேர்வு.
  82. மீண்டும் ஆர்.கே.நகரில் இடைதேர்தல். தினகரன் சுயேட்சையாக நிற்க முடிவு; குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டது. நடிகர் விஷால் தேர்தலில் போட்டியிட முடிவு. ஆனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தீபா மாதவனும் போட்டியிட விண்ணப்பித்தும், மனு நிராகரிக்கப்பட்டது
  83. ஓகி புயல் கன்னியாகுமரியை தாக்கியது. தமிழக அரசு சரியான எச்சரிக்கை தராததால் பல மீனவர்கள் கடலுக்கு சென்று இறந்தனர். 300க்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. சில மீனவர்கள் இரண்டு மூன்று வாரங்கள் கழித்து கரை திரும்பினர்கள். சிலர் கடலில் இறந்து மிதந்தனர்.
  84. இம்முறையும் ஆர்.கே நகர் தொகுதி முழுவதும் ஓட்டுக்கு பணம்   தரப்பட்டது.
  85. இடைத்தேர்தலுக்கு முந்திய நாள், தினகரன் அணி ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அது போலி/அனிமேஷன் மார்பிங் என பல சந்தேகங்கள் மக்களுக்கு வந்தது.
  86. ஆர்.கே.நகரில் இடைதேர்தலில் டி .டி .வி . தினகரன் மாபெரும் வெற்றி.
  87. பா.ஜ .க பெரும் தோல்வி. நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று தோல்வி.
  88. மீண்டும் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பு. 31 டிசம்பரில் புதிய கட்சி பற்றி சொல்ல உள்ளதாக கூறினார்.
  89. உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கான முத்தலாக் சட்டத்தை தடை செய்தது.
  90. சூப்பர் ஸ்டார் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவதாக பேட்டி. விரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து நிற்க முடிவு. ரசிகர்கள் கொண்டாட்டம்.

இதுக்கு அப்புறம் அடுத்த வருடம் இன்னும் என்னென்னெ நடக்குமோ என தெரியவில்லை. வரும் 2018 ஆம் வருடமாவது எல்லோருக்கும்  நல்ல முன்னேற்றத்தையும், வளத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஜனநாயகமும் பணநாயகமும் !

வணக்கம்,

எப்போ வரும்? எப்போ வரும்? என மக்கள் எதிர்பார்த்த ஆர்.கே நகர் இடை தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்து, இன்று முடிவுகள் வெளிவந்துள்ளது. எதிர்பாரா விதமாக சுயேச்சை வேட்பாளர் நாகராஜ சோழன் டி.டி.வி. தினகரன் முன்னணியில் வந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி  பெற்றுள்ளார். குக்கர் விசில் சத்தம் காதை  பிளக்கிறது என தொலைக்காட்சியில் மணிக்கு ஒருமுறை சொல்லி கொண்டே இருக்கின்றார்கள்.

எல்லா தேர்தலையும் போல இந்த தேர்தலிலும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. ஓட்டுக்கு பணம் வாங்குவது சரியா? தவறா? என்ற விவாதம் போய் கொண்டிருக்கையில், பலர் ஓட்டுக்கு காசுவாங்கி கொண்டும்,  ஓட்டுக்கு காசு கொடுத்து கொண்டும் தான் இருக்கின்றனர்.

cash-for-vote

ஓட்டுக்கு காசு கொடுப்பதை நமது அரசியல்வாதிகள் மக்களுக்கு நன்கு பழக்கி விட்டு விட்டனர். 2009-ல் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க ஓட்டுக்கு பணம் கொடுத்து "திருமங்கலம் பார்முலாவை" ஆரம்பித்து  வைத்தனர் என சொல்லுகின்றனர். ஆனால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது காலம் காலமாக நமது நாட்டில் நடந்து கொண்டு தான் வருகிறது. சில எம்.ஜி.ஆர்  படங்களில் ஓட்டுக்கு பணம்/பொருள் கொடுப்பது பற்றி சோ அவர்களின் வசனம் இருக்கும். அதுபோல "வீட்டுக்கு ஒரு எவர்சில்வர் குடமும், பணமும் கொடுத்து ஓட்டு கேட்டிருக்கிறோம்", என்ற வசனம் அமைதிப்படை படத்தில் வரும். இதிலிருந்தே ஓட்டுக்கு பணம் தரும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக இருப்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. முன்பெல்லாம்  ஒரு ஓட்டுக்கு பாட்டில் சாராயம் மற்றும் ஐம்பது, நூறு என தந்து கொண்டிருந்தனர். திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பிறகு ஐம்பது, நூறுக்கு பதிலாக ஐந்தாயிரம், பத்தாயிரம் என கொடுக்கின்றனர். தேர்தல் மார்க்கெட்டிலும் விலைவாசி சரமாரியாக ஏறிப்போனது தான் இங்கு பிரச்சனை.  
                   
மக்கள் ஏன் வாங்குகின்றனர்? அவர்கள் கொடுக்கின்றனர்; அதனால்  வாங்குகிறார்கள். தேர்தலுக்கு பின் எப்படியிருந்தாலும் யாரும் ஒன்றும் செய்யப்போவதில்லை. அதனால் முன்னாலேயே காசை வாங்கி விடுவோம் என்று எண்ணி தான் காசாகவோ, பொருளாகவோ வாங்குகின்றனர். காசை வாங்கி கொண்டு தமக்கு விருப்பமான கட்சிக்கு தான் ஓட்டு போடுகின்றனர். ஓட்டு போடுவது  நமது உரிமை; சரியான தலைவரை தேர்ந்தெடுப்பது நம் கடமை; ஓட்டுக்கு பணம் வாங்குவது சட்டப்படி தவறு தான். இவையனைத்தும் இருந்தும் மக்கள் ஏன் பணம் வாங்குகிறார்கள்?

சில மேல் தட்டு வர்க்க மக்களும் , நடுத்தர வர்க்க மக்களும், நமக்கு வரும் பணத்தை ஏன் விடவேண்டும் என்று எண்ணுகின்றனர். நாம் பணம் வேண்டாம் என சொன்னால் அதை நம் பெயரில் வேறு ஒருவன் வாங்கிக்கொள்வான்; அல்லது கட்சிக்காரனே 'லபக்' கிவிடுவான். வலிய வருவதை ஏன் விடவேண்டும் என்று எண்ணி எல்லா கட்சிகளிடமும் கேட்டு வாங்கி கொள்கின்றனர்.  அதே போல கடைநிலை வர்க்க மக்களுக்கு வருமானமோ மிக குறைவு. ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் கிடைக்கும் போது, நான்கு/ஐந்து பேர் கொண்ட குடிசை /கூரை /ஓட்டு வீட்டில்/  வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருப்போர்களுக்கு ஐம்பதாயிரம் வரை கிடைக்க வாய்ப்புண்டு. இது அவர்களுக்கு மிக பெரிய தொகை. இதை விட்டு உரிமையை காப்பாற்றுங்கள் என யார் கூறினாலும் கேட்கமாட்டார்கள்.  எல்லா வித மக்களுக்கும் பணம் முக்கிய தேவை.  அது கிடைக்கும் போது, அதுவும் பொறுப்பில்லாத, ஊழல் மலிந்து கிடக்கும் நம் நாட்டில் யாரும்  பணத்தை விட்டுவிட்டு ஜனநாயகம், கடமை, உரிமை, பொறுப்பு என யாரும் யோசிக்க மாட்டார்கள். இது தான் இன்றைய ஜனநாயக அரசியலின்  உண்மை  நிலை.

இந்த நிலை எப்பொழுது மாறும் என அவ்வளவு எளிதில் சொல்லிவிட  முடியாது. பொதுமக்கள் மீது தான் தவறு; அவர்கள் தான்  திருந்த வேண்டும் என பழியை முழுவதும் அவர்கள் மேல் போட்டு விட முடியாது. அவர்கள் தேவையை முதலில் முழுவதும் பூர்த்தி செய்ய வேண்டும். காசு வேண்டாம் என மக்கள் சொல்வது போல ஆட்சியையும் அரசும் நடக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே பணநாயகம் இல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடைபெறும். "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது." பொதுமக்கள், அரசியல்வாதிகள் என எல்லோருக்கும் இந்த பாடல் வரி பொருந்தும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்