புதன், 29 ஆகஸ்ட், 2018

டெல்லிக்கு போன கதை !

வணக்கம்,

பணிச்சுமை காரணமாக பழைய பேப்பருக்கு சற்றே நீண்ட லீவு விட்டிருந்தேன். மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம் என எண்ணி, எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம் பல தடங்கல்கள், வேலைகள் என தள்ளிக்கொண்டே போனது. இன்று தான் மீண்டும் நேரம் கிடைத்துள்ளது. நேரம் கிடைத்துள்ளது என்பதை விட நேரம் ஒதுக்கியுள்ளேன் என்பதே சரி!

கடந்த ஜனவரியில் வேலை காரணமாக ஆன்சைட் (டெல்லி தாங்க) வரை போக வேண்டியிருந்தது. புது தில்லி போவது புதுசாக இருந்தாலும், ஏற்கானவே இருமுறை பிளைட்டில் போயிருப்பதால், பெரிதாய் ஒன்றும் எதிர்பார்ப்பு இருக்கவில்லை. என் பயணத்தில் பார்த்த, பார்க்கும் போது தோன்றிய சில விஷயங்களை உங்களிடம் இங்கு பகிர்கிறேன்.

ஏர்போர்ட் பரிதாபங்கள்- ஏர்போர்ட்டில் காத்திருக்கும் நேரத்தில், ஏரோபிளான் பயணத்தையும், நாம் வழக்கமாய் போகும் பயணத்தை பற்றியும் ஒப்பிட்டு யோசித்து கொண்டிருந்தேன்.

பஸ்ஸில் போகும் போது பெரிய லக்கேஜ்/ பெட்டிகளை பஸ் டாப்பில் வைத்து பயணம் செய்வது போல, ஏர்போர்ட்டில் கன்வேயர் பெல்ட்டில் லக்கேஜை போட்டுவிட்டு, ஃபிளையிட்டில் பயணம் செய்கிறோம்.

போர்டிங் நேரத்தில், புனே 630 ஃபிளையிட் போர்டிங் பாசஞ்ஜர்ஸ்.. டெல்லி 7ஓ கிளாக் ஃபிளையிட் போர்டிங் பாசஞ்ஜர்ஸ்... என கூவி கூவி அந்தந்த அலுவலர்கள் அழைப்பது, கோயம்பேடு/தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் திருச்சி... திருச்சி.. திருச்சி.. மதுரை .. மதுரை...1030 மணி வண்டி எல்லாம் ஏறு..ஏறு.. உடனே ஏறு.. என கூவுவது போல தெரிவது எனக்கு மட்டும்தானா !?!?!?!?

"இஸ் திஸ் டில்லி 7 'ஓ' கிளாக் ஃபிளையிட் ??", என கேட்பது, "அண்ணே இது பத்தரை மணி பஸ்ஸாண்ணே??", என கேட்பது போல தான் எனக்கு தெரிகிறது.

அதே போல டே எக்ஸ்ப்ரஸில் ட்ரைனில் போதும் போது சூடாக இட்லி வடை, பிரியாணி, பிரட் ஆம்லெட் போன்றவற்றை விற்பது போல, இங்கும் பிளைட் எரியவுடன் டீ, காபி, டிபன், லஞ்ச், கூல் டிரிங்க்ஸ் எல்லாம் விற்கிறார்கள்... விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி!

அதே போல நாம் டவுன் பஸ்ஸில் பெண் கண்டக்டரை பார்த்தவுடன், 'அட லேடி கண்டக்டரா?" என ஒரு செகண்ட் பார்த்துவிட்டு, டிக்கெட் கேட்டு பின் நார்மலாவதை போல, ப்ளைட்டில் நம்முடன் பறந்து வரும் பேரழகிகளை பார்த்துவிட்டு (யாராயினும்) ஓரிரு நிமிடம் லயித்துவிட்டு பின் முகம் திருப்பி கொள்வது சாதாரணமாக நடப்பதே! என்னடா இது.. இந்த சிவப்பு சொக்கா பொண்ணு நம்மள பார்த்து சிரித்து "ஹாய் ! குட் மார்னிங்.. வெல்கம்..."ன்னு சொல்லுதேன்னு நானே சிலாகிச்சிட்டேன்னா பார்த்துகோங்களேன்!
என்னுடன் வந்தது இந்த அழகி இல்லை! ;-)
டெல்லி போக 3 மணி நேரம் ஆகும் சொன்னங்க.. சரி கொடுத்த டிபனை சாப்பிட்டுவிட்டு , கொஞ்சம் நேரம் மேகங்களை வேடிக்கை பார்த்துவிட்டு தூங்கலாம்ன்னு நினைச்சா, அப்பப்போ டொய்ங்.. டொய்ங்..ன்னு மியூசிக் போட்டு பறக்கும் போதே ஷாப்பிங் பண்ணுங்க.. ஏதாவது ஸ்னாக்ஸ் ஐட்டம் சாப்பிடுங்க.. வேதர் ரிப்போர்ட்.. அது..இதுன்னு ஏதாவது சொல்லி எழுப்பி விட்டுடுரங்க...

நம்மவூரு மார்கழி மாச குளிருக்கே மூச்சுக்கு முன்னூறு வாட்டி மூச்சா வரும்.. டெல்லில இப்போ 8 டிகிரியாம்!! அம்மடியோவ்.. சரி விடுறா...எல்லாமே வெரச்சிக்கும்ன்னு நினைச்சிகிட்டேன் !!!

கடைசியா டெல்லி வந்ததும், ஸ்வெட்டர், ஜெர்கின், குரங்கு குல்லா சகிதமாக கீழே இறங்கினேன். ஆரம்பத்தில் குளிர்வதை போல தெரிந்தாலும்,போக போக அந்த குளிர் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. உடம்புக்கு இதமாகவே இருந்தது.

புது தில்லி வந்தாயிற்று. இங்கும் பீக் அவர் கடும் டிராபிக்காக தான் இருக்கிறது. ஆட்டோ ரிக்க்ஷாக்கள் மஞ்சள்-பச்சை கலர்களில் சீறி பாய்கிறது. சென்னையில் எப்படி TN registration போர்டு வண்டிகளையும் ஆங்காங்கே PY போர்டுகளையும் பார்க்க முடிகிறதோ, அது போல டெல்லியில் DL மட்டுமல்லாமல் RJ, HR, PB ஆகிய registration போர்டு வண்டிகளை எளிதில் பார்க்க முடிகிறது. ஒன்றிரண்டு UP registration வண்டிகளையும் பார்த்தேன். எங்கு காணினும் கார்கள் சாரை சாரையாய் விரைந்து கொண்டிருந்தது. வெகு சில டூ-வீலர்களை மட்டுமே பார்க்க முடிந்ததது. தில்லியில் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மெட்ரோ ட்ரெயின் தான். நகரின் எல்லா மூலையிலும் மெட்ரோ பாய்கிறது. மேலும் புதுதில்லியில் பெரும்பாலான சாலைகளெல்லாம் அகலமாகவும், சுத்தமாகவும் இருப்பதை காண முடிந்தது. அங்கங்கே முக்கிய சாலைகளில் கட்டண கழிப்பிடமும் இருந்தது. சாலையெங்கிலும் மரங்களும், பல ரௌண்ட்டானாக்களும் (roundtana) , மேம்பாலங்களையும் பார்த்து, திட்டமிட்டு கட்டப்பட்டது புது தில்லி என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. சாலையெங்கிலும் ஆரஞ்சு கட்சியின் போஸ்டர்களும், அந்த ஊர் 'சந்தான பாரதியின்' படங்களும் பெரிதும் காணப்பட்டன.

நாங்கள் தங்கும் இடத்திலிருந்து அலுவலகம் போகும் வழியில் தான் இந்தியா கேட்டும் (India Gate), ஜனாதிபதி மாளிகையும் (Rastrapathi Bhavan) இருந்தது. தினமும் வேடிக்கை பார்த்து கொண்டே போவோம். கிடைத்த கேப்பில் ஒரு நாள் காலைவேளையில் போய் ராஜ் காட்டில் (Raj Ghat) உள்ள இரண்டையும் பார்த்தாயிற்று. இந்தியா கேட் - முதலாம் உலக போரில் இறந்த ஆங்கிலேய-இந்திய போர் வீரர்களின் நினைவு சின்னம். மொத்தம் 70,000 வீரர்களின் பெயர்கள் அங்கு பொறிக்கபட்டுள்ளன. மேலும் அங்கு போர் வீரரின் தொப்பி மற்றும் துப்பாக்கியுடன், அமர் ஜவான் ஜோதி (AmarJawan Jothi ) ஒன்று ஓயாமல் எரிந்து கொண்டிருக்கிறது.



ஜனாதிபதி மாளிகையை உள்ளே சென்று சுற்றி பார்க்க முன்அனுமதி பெற வேண்டுமாம். நாங்கள் வெளியிருந்தபடியே கட்டடங்களை பார்த்துவிட்டு செல்பி எடுத்து கொண்டு திரும்பிவிட்டோம். ஜனாதிபதி மாளிகை அருகே தான் பார்லிமென்ட் வளாகமும் இருக்கிறது. நேரமின்மையால் அதை விட்டுவிட்டோம்.

வேறொரு நாள் செங்கோட்டைக்கு (Red fort ) சென்றோம். செங்கோட்டை இருப்பதோ பழைய தில்லியில். பாரீஸ் கார்னர், மண்ணடி போல குறுகிய சாலைகள், சிறு பெரு வண்டிகள் என கூட்ட/கட்டட நெரிசல். செங்கோட்டை 1639ஆம் ஆண்டு ஐந்தாம் முகலாய மன்னன் ஷா ஜஹான் கட்டியுள்ளான். அதன் பின் 200 ஆண்டுகள் வரை முகலாயர்களின் வாரிசுகள் வசிக்கும் வீடாகவே இருந்துள்ளது. செங்கோட்டை Indo-Islamic architecture -ல் கட்டப்பட்டுள்ளது. 2007-ல் UNESCO உலகின் பாரம்பரிய சின்னமாக இதை அறிவித்தது.

கோட்டைக்குள் போக நபருக்கு 35 ரூபாய் டிக்கெட் எடுக்க வேண்டும். கோட்டை வாசலை கடக்கும் போது உள்ளே பலவிதமான கடைகள், கைவினைப்பொருட்கள் என பல இருந்தது. கோட்டைக்குள் மிக பெரிய தர்பார் அறை, கலை நிகழ்ச்சிகள் நடக்கும் பெரிய மேடை, புகழ் பெற்ற ஷா ஜஹானின் மயில் சிம்மாசனம் என எல்லாமே சிறப்பாய், பிரம்மாண்டமாய் இருந்தது.



தில்லி முழுவதும் கோட்டைகளும், மசூதிகளும், நினைவு சின்னங்களும் தான் அதிகம் இருக்கிறது. பலவும் முகலாய சாம்ராஜ்யத்தின் போது கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நம்மவூர் பர்மா பஜார், திநகர் ரெங்கநாதன் தெரு போல, இங்கு பல இடங்கள் இருக்கிறது. சரோஜினி நகர் மார்க்கெட், அமர் காலனி மார்க்கெட், கரோல் பாக் மார்க்கெட், கான் மார்க்கெட், கன்னாட் சர்கிள், பாலிகா பஜார், சோர் மார்க்கெட், சாந்தினி சவுக் மார்க்கெட் என நிறைமாதமான நம் பர்சின் டெலிவரிக்காக பல மார்க்கெட்க்கள் இருக்கிறது. அமர் காலனி, சாந்தினி சவுக், சரோஜினி நகர் போன்ற மார்க்கெட்களில் பெண்களுக்கான துணிமணிகள், அவர்களுடைய அணிகலன்கள் என பல பொருட்கள் மலிவாக கிடைக்கின்றன. கரோல் பாக் மார்க்கெட், கான் மார்க்கெட் ஆகிய இடங்களில் லெதர் பொருட்கள், ஆண்/பெண்களுக்கான உடைகள் என மலிந்து கிடைக்கிறது. ஆனால் பேரம் பேசி மலிவாக வாங்குவது அவரர் திறமை. பஜாரில் உஷாராக ஹிந்தியில் பேசாவிட்டால், நிஜாரை உருவி விட்டுவிடுவார்கள் என்பதை மட்டும் கவனத்தில் கொள்க!



ஜன்பத் ரோடு (Janpath Road) மற்றும் கன்னாட் சர்கிள் (Connaught Circle) ஆகிய இடங்களில் நாம் எல்லா வித பிராண்டட் கடைகளும்/ பொருட்களையும், எல்லா விலையிலும் வாங்க முடியும். உணவகங்களை பொறுத்தவரை சற்று காஸ்டலி போலதான் எனக்கு தெரிந்தது. ரொட்டி வகைகள் பல வெரைட்டியில் கிடைக்கிறது. இரு மாதங்களாக ரொட்டியும் சப்பாத்தியும், ராஜ்மா ரைஸ்சும் சாப்பிட்டு நாக்கு செத்தது தான் எங்களுக்கு மிச்சம். ஆயினும் அவ்வப்போது ஆந்திரா பவன், கேரளா ஹவுஸ் போன்ற இடங்களில் தென்னக சாப்பாட்டை ருசிபார்த்து பசியாறி கொண்டோம். ஜன்பத் ரோட்டிலும், கன்னாட் சர்கிளிலும் நம்ம ஓட்டல் சரவண பவன் இருக்கிறது. இங்கு போல அங்கும் பீக் ஹவரில் கூட்டம் அலை மோதுகிறது. ஒரு நாள் மதிய உணவிற்கு அங்கு சென்று ஒரு ஃபுல் கட்டு கட்டிவிட்டு வந்தோம்.

வேலைப்பளு காரணமாக வேறு எங்கும் பெரிதாய் சுற்றி பார்க்க முடியவில்லை. புது தில்லி சுற்றி பார்க்க வேண்டுமாயின் நவம்பர்-பிப்ரவரியில் போகலாம். பிப்ரவரி-ஜூன் -ல் உச்சி வெயில் மண்டையை பிளக்கும். மற்ற நாட்களில் மழையும் வெயிலும் மாறி மாறி வரும். மூன்று நாட்கள் வைத்தால் தில்லி பூராவும் பொறுமையாய் சுற்றி பார்த்து விடலாம். நான்காம் நாள் ஆக்ராவுக்கு பயணப்படுங்கள். அங்கு தாஜ் மகாலையும், ஆக்ரா கோட்டையையும் பார்த்துவிட்டு திருப்தியாக ஊர் திரும்பலாம்.


நன்றி!!!
-பி.விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

4 Comments:

Krishna's Journey சொன்னது…

Well written vimal..:) நிறைமாதமான நம் பர்சின் டெலிவரிக்காக பல மார்க்கெட்க்கள் இருக்கிறது hahaha....nice way of putting the info :)

---Krishna

iramuthusamy@gmail.com சொன்னது…

டெல்லி போன கதை பதிவு உங்கள் கோணத்தில் டெல்லி. எப்படிச் சொன்னாலும் டெல்லி பயணம் சுவாரஸ்யம் மிக்கதுதான்.

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !!

கலியபெருமாள் புதுச்சேரி சொன்னது…

ORU MURAI NANUM SENRU IRUKKIREN NANBA..BUT IN TRAIN ONLY..SAME FEELING..NICE EXPERIENCE..