வெள்ளி, 31 ஜூலை, 2020

பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் - பகுதி 2

வணக்கம், 

வலைப்பதிவில் சில நாட்களுக்கு இடைவெளி விட்டு, மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளேன். கொரோனா பொது முடக்க காலத்தில் நிறைய பதிவுகள் வேண்டும் என நினைத்திருந்தேன், ஆனால் இப்போது தான் எழுத ஆரம்பித்துள்ளேன்.

ஒருவருடைய செய்கையோ, செயலையோ, குறிக்க பழமொழிகளை சொல்லுவது நம்மூரில் வழக்கம். தமிழில் பல பழமொழிகளும் அதற்கு பல அர்த்தங்களும் சொல்லப்படுவதுண்டு. ஏற்கனவே பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் என்ற தலைப்பில் எழுதிய பதிவு நல்ல வரவேற்பை பெற்று, பெரும்பாலானோர் அப்பதிவை பார்த்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகத்திலும் எனக்கு தெரிந்த, கேட்ட பழமொழிகளையும் அதன் அர்த்தங்களும் இணையத்தில் தேடி இங்கு பகிர்கிறேன்.


பழமொழிகள்:

1.) அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான். 

சொல்லப்படும் பொருள்:
 சில மணி நேர மழையில் முளைக்கும் காளான்களை சொல்வது. ஒரே நாளில் முளைத்து இறக்கும் காளானை போல, திடீரென பணக்காரனாகும் நபரை பார்த்து ஏளனமாய் சொல்வது. 

உண்மையான விளக்கம்:
இதற்கு இரண்டு வித அர்த்தகங்களை சொல்வார்கள். ஒன்று, அர்ப்பணித்து வாழ்பவன் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். ஒருவன் தர்மத்தை அர்ப்பணித்து வாழ்பவன், எந்நேரமாயினும் மற்றவருக்கு தானம் அளிப்பான் என்பதே சரியான அர்த்தம். மற்றொன்று, சிறு பிள்ளைகளுக்கு போடப்படும் விடுகதை. மழையில் பெய்த காளான் குடை போல விரிந்து நிற்கும். அதைத்தான் விடுகதை போல அப்படி சொல்வார்கள்.

2.) கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்க கூடாது

சொல்லப்படும் பொருள்:
கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னத்தில் கை வைத்து கொண்டு உட்கார கூடாது.

உண்மையான விளக்கம்:
கப்பல் விடும் அளவிற்கு செல்வம் இருந்து, பின் கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னமிடுதல் - திருட்டு (கன்னத்தில் கை ) கூடாது.

3.) கோத்திரம் அறிந்து பெண் கொடு பாத்திரம் அறிந்து பிச்சை இடு.

சொல்லப்படும் பொருள்
யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை தான் கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் தானம் தருமம் செய்ய கூடாது.

உண்மையான விளக்கம்:
கிட்டத்தட்ட சரியான அர்த்தம் தான். ஆனால் இது மன்னர்களுக்கு சொல்லப்பட்ட பழமொழி. 'கோத்திரம் ' என்பது கோவின் திறம். அதாவது அரசனின் திறம் அறிந்து பெண் கொடுக்க வேண்டும். 'பாத்திரம்' என்பது புலவர்களின் பாட்டு திறமை அறிந்து பரிசளிக்க வேண்டும் என்பதே சரியான பொருள்.

4.) தை பிறந்தால் வழி பிறக்கும்.

சொல்லப்படும் பொருள்:
தை மாதம் பிறந்தால் நல்ல வழி அல்லது நல்ல விஷயம் நடக்கும் .

உண்மையான விளக்கம்:
தை மாதத்தில் அறுவடை காலத்தில், விவசாயிகளின் கையில் பணவரவு இருக்கும். அதை வைத்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்யலாம்.
இன்னொரு பொருள், வயலில் முளைத்து இருக்கும் நெல் மணிகள் வரப்பை அடைத்து கொண்டு வழியில்லாமல் வளர்ந்து நிற்கும். தை மாதம் பிறந்தவுடன் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, வரப்பில் நடக்க வழி கிடைக்கும்.  

5.) முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல.

சொல்லப்படும் பொருள்:
தன் தகுதிக்கு மீறிய செயலை ஒருவர் செய்யும் போது இப்படி சொல்வார்கள்.

உண்மையான விளக்கம்:
முயலான் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போல என்பதே சரியான பொருள்.
கொம்பு தென் மலை உச்சியில் தான் இருக்கும். முயற்சி செய்யாமல், சோம்பி இருப்பவன் அதை அடைய முடியாது என்பதற்க்காக சொல்லப்பட்டது.

6.) பெண் புத்தி பின் புத்தி.

சொல்லப்படும் பொருள்:
பெண்கள் எந்த ஒரு செயலையும் முன் யோசனை இல்லாமல் செய்து விடுவார்கள். அதற்கு பின் வருத்தப்படுவார்கள்.

உண்மையான விளக்கம்:
உங்கள் எந்த ஒரு முடிவாயினும், செயலாயினும் பின் விளைவுகளை யோசித்து அதற்கு ஏற்றார் போல முடிவு எடுப்பார்கள் என்பதே சரியான பொருள்.நாம் அதையே தலைகீழாக புரிந்து கொண்டு சொல்கிறோம்.

7.) கோல் ஆட குரங்கு ஆடும்.

சொல்லப்படும் பொருள்:
குரங்காட்டி ஆடு என்று சொன்னால் குரங்கு ஆடாது. கோலை எடுத்து மிரட்டினால் தான் ஆடும்.

உண்மையான விளக்கம்
என்னதான் சிறு பிள்ளைகளுக்கு நல்லொழுக்கங்களை சொல்லி கொடுத்தாலும், கண்டித்து சொன்னாலொழிய மனதில் பதியாது.

8.) யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்.

சொல்லப்படும் பொருள்:
நல்லவனுக்கு ஒரு காலம் வந்தால், தீயவனுக்கு ஒரு காலம் வரும். வலியவனுக்கு ஒரு காலம் வந்தால், எளியவனுக்கு ஒரு காலம் வரும் என்று சொல்வார்கள்.

உண்மையான விளக்கம்:
'ஆ நெய்' - பசுவின் நெய் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் சத்து சேர்ந்து பருமனாக மாறமுடியும். அதே போல 'பூ நெய்' - பூவிலுள்ள தேனை சாப்பிட்டு வந்தால் உடலின் எடை குறையும். 

9.) ஆமை புகுந்த வீடு விளங்காது

சொல்லப்படும் பொருள்:
வீட்டுக்குள் ஆமை புகுந்தால் வீட்டில் நல்லது நடக்காது.

உண்மையான விளக்கம்:
கல்லாமை, இல்லாமை, முயலாமை, அறியாமை, பொறாமை முதலியவை வீட்டில் புகுந்தால் நல்லது நடக்காது என்பதற்காக சொன்னார்கள்.

10.) குறைக்கிற நாய் கடிக்காது 

சொல்லப்படும் பொருள்:
தெருவில் போகும் போது நாய் குரைத்து கொண்டே இருந்தால் அது நம்மை கடிக்காது. வெறும் வாய் பேச்சில் வீரர்கள், பெரிதாக ஏதும் செய்ய மாட்டார்கள்.

உண்மையான விளக்கம்:
குழைகிற நாய் கடிக்காது. நம்மிடம் பாசமாய் குழைந்து காலை நக்கும் நாய் நம்மை கடிக்காது. நம் மீது பாசம் உள்ளவர்கள் நமக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் என்பது தான் சரியான அர்த்தம்.

11.) ஆற்றில் போட்டாலும் அளந்து போடு. 

சொல்லப்படும் பொருள்:
நாம்  தர்மம் செய்யும் போதோ, வேறு ஏதாவது செய்யும் போதோ அளவுடன் தான் கொடுக்க/ செய்ய  வேண்டும். 

உண்மையான விளக்கம்:
அகத்தில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பது சரியான பொருள்.
அகம் என்பது உடல். அதாவது என்ன சாப்பிட்டாலும் அளவுடன் தான் சாப்பிட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான வாழு கிடைக்கும் என்பது இதன் அர்த்தம்.

12.) கழுதை கெட்டால் குட்டி சுவர்/ கழுதைக்கு பரதேசம் குட்டிச்சுவர். 

சொல்லப்படும் பொருள்:
கழுதை எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு குட்டி சுவத்திற்கு அருகே போய் நின்று கொண்டிருக்கும். அதுபோல ஒரு சிலர் அடிக்கடி ஒரே இடத்துக்கு போகும் போது இந்த பழமொழியை சொல்வார்கள். 

உண்மையான விளக்கம்:
ஒருவர் எந்த முயற்சியும் செய்யாமல், சாதாரண விஷயம் கூட பரதேசம் போவது போல நினைத்து திருப்திப்பட்டு கொல்வபவர்களுக்காக சொன்ன பழமொழி இது.

இன்னும் நிறைய இருக்கிறது. அதை பின்வரும் பதிவுகளில் பகிர்கிறேன். 

முதல் பகுதிக்க்கான சுட்டி - பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

4 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல விளக்கங்கள்...

விமல் ராஜ் சொன்னது…

மிக்க நன்றி!!

Sn Gamer Tamil சொன்னது…

நண்பா அருமையான விளக்கம். ஆனால் ஒரு சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

msuzhi சொன்னது…

அத்தி பழத்தை பிட்டால் அத்தனையும் புழு. இதற்கு என்ன பொருள் சொல்ல முடியுமா? நன்றி.