வியாழன், 16 ஜனவரி, 2014

கந்தசஷ்டி கவசமும் சுவிசேஷ கூட்டமும் !

வணக்கம்,

இந்த பதிவில் பக்தியும், மதம் சார்ந்த என்னுடைய கருத்துகளையும், கடவுள் நம்பிக்கையையும், அவைகளை பற்றி என் மனதில் பட்டதை இங்கே பகிர்கிறேன்.

நான் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு கிறிஸ்துவ பள்ளியில் படித்ததால், எனக்கு இந்து சமய மந்திரங்கள், சாமி பாட்டெல்லாம் அவ்வளவாக தெரியவில்லை. வீட்டில் எதோ ஒன்றிரண்டு  சொல்லி கொடுத்தனர். எல்லா பிள்ளைகளுக்கும் சொல்வது போல, தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்தும் என சொல்லிதான் என் வீட்டிலும் வளர்த்தனர். பள்ளியிலும் தப்பு செய்தாலோ, வால்தனம்/ விஷமதனம் செய்தாலோ, எல்லாம் வல்ல பரமபிதா தண்டிப்பார் என்று தான் போதித்தனர்.  பெற்றோருடன் பிள்ளையார் கோவிலுக்கு போனால் கூட, 'பாலும் தெளிதேனும்' சொல்லிவிட்டு, சிலுவை குறிபோட்டு 'ஆஃப்  ஜீசஸ் க்ரைஸ்ட் ஆமென் ' என்று தான் முடிப்பேன். ப்ரெயர் முடிந்ததும் அப்படி தான் எங்க பள்ளியிலும் சொல்லுவார்கள்.

பிறகு ஐயர்/ஐயங்கார் பிள்ளைகள் அதிகம் படிக்கும் பள்ளியில் படித்தேன்.  கொஞ்சம் மந்திரமும், ஸ்லோகமும் சொல்லி கொடுத்தனர். அவ்வபோது  பக்தி கதைகளும் சொல்லிக் கொடுத்தனர். என்னுடன் படித்த கிறுஸ்துவ, இஸ்லாமிய பிள்ளைகளுக்கும் அதுவே போதிக்கப்பட்டது. அப்போதும் எனக்கு பக்தியிலும், ஆன்மீகத்திலும் அதிகம் நாட்டம் இல்லை.


எனக்கென்னவோ இதுவும் ஒரு வகையில் கட்டாய மதபோதகம் போலதான் தெரிந்தது. சில பள்ளிகளில் பிள்ளைகளுக்கே தெரியாமல் இந்த கடவுள் தான் சிறந்தவர்; இந்த கடவுள் வழிபாட்டு முறைதான் சிறந்தது என்று மனதில் பதியவைத்து விடுகின்றனர். பள்ளிகூடத்தில் மாற்று மதத்தின்  நம்பிக்கைகளையும், பழக்கங்களையும் கற்று கொள்வது நல்ல விஷயம் தான். ஆனால் கடவுள் பக்தியும், மதநம்பிக்கையும் பதிய வைப்பதை விட, நற்பண்புகளையும், தேசபக்தியையும் வளர்த்தால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்.

பின்னர் கல்லூரி காலங்களில் பகுத்தறிவு பேசும் நாத்திகன் போல என்னை காட்டிக் கொண்டேன். கோவிலுக்கு போவதில்லை. போகவும் இஷ்டமில்லை. யாரவது கேட்டால், கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லி கொண்டேன். "கோவிலுக்கு போய் சாமியை நல்லா கும்பிடு.. அப்பதான் பரீட்சையில் பாஸ் ஆவாய்..",  என்று கூறினார்கள். "கடவுளா வந்து பரீட்சை பேப்பரை திருத்த போறார்?"  என நக்கலாக கூறிவிட்டு போய்விடுவேன். ஆயினும், செமஸ்டர் ரிசல்ட் வரும் போது ரிஜிஸ்டர் நம்பரை டைப்பிவிட்டு, ரிசல்ட் விண்டோஸ் ஸ்க்ரீனில் தெரியும் வரை (30 நொடி முதல் 2 நிமிடதிற்குள்) குறைந்தது 200 முறையாவது முருகனையும், அவர் அண்ணனையும் கூப்பிட்டு விடுவேன்.

பிற்காலக்தில், வேலை தேடும் போதும், இண்டர்வ்யூ போகும் போதும்,  இந்த வேலையாவது கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்வேன். அவ்வளவுதான் என் பக்தி மார்க்கம். மொத்தத்தில் எல்லோரையும் போல, கஷ்டம் வரும் போது மட்டும் கடவுளை நினைக்கும் சாதாரணன் நான்.

**********

சில மாதங்களுக்கு முன் தொலைக்கட்சியில் ஒவ்வொரு சேனல்களாக மாற்றி பார்த்து கொண்டிருந்தேன். ஒரு சேனலில் பிரதர் (பொதுவாக கிறுத்துவ மதத்தில்  நன்னெறிகளை போதிப்பவர், பிரதர் (Brother) என்று தான் சொல்கின்றனர் ) ஒருவர் சுவிசேஷ கூட்டம்  ஒன்றை நடத்தி கொண்டிருந்தார். சரி ! என்னதான் சொல்கிறார் பார்ப்போமே என்று கொஞ்ச நேரம் அவர் கூறிய 'ஞான உரையை' கேட்டேன். பதினைந்து நிமிடம் கேட்டிருப்பேன் . தாங்க முடியல! இதுவரை  நீங்கள் (கிறுஸ்துவர்  அல்லாத) எந்த ஒரு சுவிசேஷ கூட்ட உரையை கேட்கவில்லை என்றால் ஒரு முறை கேட்டு பாருங்கள். உங்களுக்கே புரியும்!

"என்னடா,  இவன் ஒரு மத கலவரத்தை உண்டாக்காமல் இருக்க மாட்டான் போலயே !!!" என்று நீங்கள் எண்ணினால், அதற்கு நான் பொறுப்பல்ல. மிச்சத்தையும் படித்து விட்டு என்னை திட்டவா, வேண்டாமா என்று முடிவு எடுக்கவும்.

சேனலில் நடந்து கொண்டிருந்த சுவிசேஷ கூட்டத்தில், அவர் ஒன்னும் தப்பாகவோ அல்லது மாற்று மதத்தினரையோ அவமதித்தோ பேசவில்லை. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பைபிள் வசனங்களையும், மேற்கோள்களையும், கிறுஸ்துவின் மதம் சார்ந்த சிறு சிறு நீதி கதைகளையும், நல்ல அறிவுரைகளையும் தான் சொல்கிறார். கூட்டத்தில் கிட்ட தட்ட 1000 பேராவது இருப்பார்கள். உட்கார்ந்து கேட்கும் மக்களுக்கு இதெல்லாம் அவர்களுக்கே தெரியாதா ? அல்லது புரியாதா ? எனக்கு புரியவே இல்லை. சமீபத்தில் ஒரு  திரைபடத்தில் கூட கதாநாயகன், திருமண மேடையில் நின்று சுவிசேஷ கூட்டத்தில் பேசும் தோரணையில் எதோ இங்கிலிபீசில் பினாத்துவார். (பினாத்தியது ஹீரோ மட்டுமே...)

இத்தனை பேர் கேட்கும் போது, நமக்கு ஏன் புரியவில்லை / பிடிக்கவில்லை என யோசித்தேன். எனக்கு மட்டுமல்ல. மக்கள் பலரும், மாற்று மதத்தினரின் வழிபடுதலை, வழிபாட்டு முறையை கேட்க  அல்லது அறிய விரும்புவதில்லை. நம்மவர்களுக்கு கந்த சஷ்டிகவசத்தையோ, சுப்ரபாதமோ கேட்டால் பக்தி மார்க்கத்தில் உருகி விடுவார்கள். பலருக்கு பாட்டின் அர்த்தமே புரியாத போதும், வெறும் சாமி படத்தை காட்டினாலே பக்தியில் முழ்கி கன்னத்தில் தப்பு போட்டு கொள்வார்கள். இதே பாடல்களை வேற்று மதத்தினர் கேட்டால், எப்படி ஒன்றுமே புரியாதோ, அது போல தான் நமக்கும் இந்த சுவிசேஷ கூட்டத்தின் அருமை பெருமை தெரியவில்லை என நினைத்து கொண்டேன்.

இந்துகளுக்கு சுப்ரபாதம்,சஷ்டிகவசம், திருப்பாவை, சிவ புராணம், கீதை என முப்பது முக்கோடி தேவர்களுக்கும், கடவுள்களுக்கும் துதிபாடல்கள், கிளை கதைகள் என்று பலஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பின்பற்றி வரப்படுகிறது. கிறுஸ்துவ மதம் செயின்ட் தாமஸ் என்பவரால் கிட்டத்தட்ட சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு கிறுஸ்துவை போற்றி பாடப்பட்ட துதி பாடல்களும், இது போன்ற கூட்டு பிரார்த்தனைகளும் தான் அவர்களுக்கு தேவாரமும், திருப்பாவையும்.

என்னை பொறுத்தவரையில் எல்லா மதமும் ஒன்றுதான். எல்லா மதங்களும், "நன்மையே செய்; நன்னெறி கொண்டு ஒழுக்கமாய் இரு" என்று தான் போதிக்கிறது. இதில் உயர்ந்த மதமென்றும், தாழ்ந்ததென்றும் என ஒன்றும் இல்லை. வழிபாட்டு முறையும், வழிப்பாடும் தான் வித்தியாசமே தவிர, எல்லா கடவுளும் ஒன்று தான். இது ஏன் பலருக்கு புரியவில்லை என்றுதான் எனக்கு தெரியவில்லை.

இவ்வளவும் படித்துவிட்டு, இவன் நம் மதத்திற்கு எதிராக பேசுகிறான், கேலி செய்கிறான் என்று நீங்கள் யோசித்தால், தயவு செய்து மீண்டும் இப்பதிவை முதலிருந்து படிக்கவும் !நன்றி !!!

-பி .விமல் ராஜ் 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

3 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// இது ஏன் பலருக்கு புரியவில்லை என்றுதான் எனக்கு தெரியவில்லை... //

புரிந்து உணர்ந்தவர்கள் அதிகம் இதைப்பற்றி சிந்திப்பதே இல்லை என்பதும் உண்மை...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// என்னை பொறுத்தவரையில் எல்லா மதமும் ஒன்றுதான். எல்லா மதங்களும், "நன்மையே செய்; நன்னெறி கொண்டு ஒழுக்கமாய் இரு" என்று தான் போதிக்கிறது. இதில் உயர்ந்த மதமென்றும், தாழ்ந்ததென்றும் என ஒன்றும் இல்லை. வழிபாட்டு முறையும், வழிப்பாடும் தான் வித்தியாசமே தவிர, எல்லா கடவுளும் ஒன்று தான். ///

அருமை... வாழ்த்துக்கள்...

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே....!!!