சனி, 1 பிப்ரவரி, 2014

இது ஹாலிவுட் கடலை மிட்டாய் !

வணக்கம்,

கிரானோலா பார்-னா (Granola Bar) என்னனு உங்களுக்குத் தெரியுமா ??? அதை தான் ஹாலிவுட் கடலை மிட்டாய் என்று சொன்னேன். நீங்க கேள்விப்பட்டதே இல்லையா ??? அப்படியென்றல் முதலில் இதை படிக்கவும்...

இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், பூரி, பஜ்ஜி, போண்டா, சாம்பார், ரசம், வடை, பாயாசம், மோர் என சப்பு கொட்டி சாப்பிட்டு வந்த நம் மக்களுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்னால் மற்ற மாநிலத்துச் சாப்பாடெல்லாம் எப்படி இருக்கும் என ருசிக்க ஆசை வந்தது. அதிலிருந்து வர ஆரம்பித்தது தான் மற்ற உணவு முறைகள் எல்லாம். அதன்பின் தான் முகலாயர் வழி வந்த பிரியாணி, பரோட்டா, வடக்கில் பிரபலமான பேல் பூரி, பானி பூரி, ஃபப், சமோசா போன்ற சாட் அயிட்டங்கள் தென்னகத்தில் பல ஓட்டல்களிலும், வீதியோர சிற்றுண்டி விடுதியிலும் வலம் வந்தன.

பிறகு நம்ம தெருக்களில் ஆந்திரா மெஸ் ஆதிக்கத்தில், காரமான சாப்பாடும், பெசரட்டும், கோங்குரா சட்னியும் கலைகட்டியது. பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் பரிமாறப்படும் வடஇந்திய தாலிகளும் ஹைவே தாபாக்களில் கிடைக்க ஆரம்பித்தது.

பின்னர் ஃபிரைடு ரைஸ், நூடுல்ஸ், பாஸ்தா எனச் சீன தேசத்து ஃபாஸ்ட் ஃபுட் உணவு சமாச்சாரங்கள் நம்ம மக்களின் பிடித்தமான உணவாக மாறியது. அதன்பின், சென்னை போன்ற பெருநகரங்களில் ஐ.டி கலாச்சாரம் ஆரம்பித்த போது, வெள்ளைக்காரன் வெண்ணெயையும், பன்னீரையும் வெறும் மைதாமாவில் தடவி, கொஞ்சம் தக்காளி நறுக்கி போட்டு, ருசி சேர்த்து பீட்சாவையும், பர்கரையும் ஊரெங்கும் நிறுவி நம் நாக்கை வசப்படுத்தினான்.

மேற்கண்ட சாப்பாட்டு அயிட்டங்கள் எல்லாம் எப்படி,என்னனு உங்களுக்கே தெரிந்திருக்கும். அந்த வரிசையில் வரும் மேற்கத்திய நாட்டின் இன்னமொரு (சிற்றுண்டி பண்டம்) சிற்றிடை உணவு தான் கிரானோலா பார் (Granola Bar).
 

கிரானோலா என்பது அமெரிக்க நகரங்களில் சாப்பிட்டப்படும் காலை நேர சிற்றுண்டி உணவு. ஓட்ஸ், பருப்புகள், அவல், தேன் ஆகியனவை நன்றாக வேக வைத்து, மொருமொருவென முறுவலாக்கி தின்னப்படும் ஒரு சத்தான உணவு பொருள். சில சமயத்தில் உலர்ந்த திராட்சைகளும், பேரீச்சம் பழங்களும் சேர்ப்பதுண்டு.

நாம் வெளியில் செல்லும் போது இட்லி, பூரி, பிரட்-ஜாம், கட்டுச் சாதம் -ன்னு எப்படி எடுத்துக்கொண்டு போகிறோமோ, அதுபோல அமெரிக்கா போன்ற நாடுகளில் தொலைதூர வெளியூர் பயணம் செய்பவர்கள், நீண்ட நடைபயணம் அல்லது முகாம் செல்பவர்கள், இதை எடுத்துக் கொண்டு செல்வார்கள். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், வேலை பளு காரணமாகக் காலை சிற்றுண்டி, மதிய சாப்பாடை துறப்பவர்கள், துறக்க நினைப்பவர்கள் கிரானோலாவை விரும்பி உண்பார்கள். பெரும்பாலும் இது பட்டி (bar) வடிவிலே வருகிறது. இதைப் பார்க்க கொஞ்சம் பெரிய சைஸ் கடலை மிட்டாய் போலத் தான் இருக்கும். மேலும் ஒரு பட்டியில் (bar -ல்) 90 முதல் 100 கலோரிகளே இருப்பதால், இரண்டு அல்லது மூன்று பட்டிகளைச் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும் போலும். கலோரி பார்த்து ஓட்ஸ், கேலாக்கஸ் (Kellogg’s) சாப்பிடுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.


கிரானோலா பெரும்பாலும் தயிர், தேன், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், பால், அவுரி நெல்லிகள் (blue berries) மற்றப் பொருட்களுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. இது கேக் அல்லது இனிப்புகள் செய்ய உபயோகப்படுகிறதாம். கிரானோலா பாரில் சேர்க்கப்படும் (flax seeds) ஆளி விதை உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் தகவலுக்கு விக்கிபீடியா.

Nature Valley என்ற அமெரிக்கத் தின்பண்ட தயாரிப்பு நிறுவனம் கிரானோலா பாரை சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், புதுத் தில்லி ஆகிய நகரங்களில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை வர்த்தகக் கடைகளில் விற்க முடிவு செய்துள்ளது. கூடிய விரைவில், வேலை ரொம்ப அதிகம், சாப்பிட நேரமில்லை போன்று காரணம் சொல்பவர்களுக்கு நல்ல ஒரு மாற்று வந்து விட்டது எனச் சொல்லலாம். 180 கிராம் கிரானோலா பாரின் விலை 30 முதல் 60 ரூபாய்கள் வரை இருக்கிறதாம். போகப் போகக் விலை இன்னும் குறையலாம். பதப்படுத்தாத சத்துள்ள பொருள்கள் இதில் சேர்க்கபட்டுள்ளதால், இதை எல்லா வயதினரும் சாப்பிடலாம் என்று சொல்லபடுகிறது. கிரானோலா பாரில் சோடியம், தேன் மற்றும் பருப்பு வகைகள் அதிகம் சேர்த்துள்ளதால், நீரிழிவு நோய் (சுகர்) உள்ளவர்கள் தங்கள் மருத்துவரை கலந்தாலோசித்துவிட்டுச் சாப்பிடலாம் எனவும் கூறுகிறார்கள்.

எப்போதும் சமூகம், வரலாறு, அரசியல் போன்ற தலைப்புகளில் பதிவு எழுதி வருபவன், இன்று ஒரு அமெரிக்கத் தின்பண்டத்திற்கு மார்கெட்டிங் பண்ணுகிறானே என்று எண்ணிவிட வேண்டாம். கடந்த வாரத்தில், அலுவலகத்தில் நண்பர் ஒருவர் கிரானோலா பார் வாங்கிக் கொடுத்தார். சாப்பிட்டு விட்டு பிடித்துப் போகவே, அதைப் பற்றி என்ன, ஏதுன்னு இணையத்தில் அலசி உங்களிடம் பகிர்ந்துள்ளேன். பதிவை ருசித்துவிட்டு எப்படி இருந்தது பின்னூட்டத்தில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

4 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லாத் தான் இருக்கு... தகவலுக்கு விக்கிபீடியாவை பார்க்கிறேன்...

கவிதை வானம் சொன்னது…

பதிவை ருசித்துவிட்டு எப்படி இருந்தது பின்னூட்டத்தில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.........?????????
அண்ணேன்...பதிவு நல்லாத்தான் இருக்கு ஆனாலும் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வருகின்றன்

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே !!!

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி PARITHI MUTHURASAN அவர்களே !!! சாப்பிட்டு விட்டு கண்டிப்பாக வரவும்...