திங்கள், 24 நவம்பர், 2014

பிரியாணி பிறந்த கதை

வணக்கம், 

நம்மில் பலருக்கு பிரியாணி பிடிக்கும். பிடிக்கும் என்பதை விட அலாதி பிரியம். சுட சுட, மண மணக்க மசாலா வகைகளை போட்டு, சில பல பீசுகளோடு, பாஸ்மதி அரிசியில் பிரியாணி என்றால் பலர் உயிரையே விட்டு விடுவார்கள். அது அப்படி பிரியாணி எல்லோருக்கும் பிடித்த ஒரு தேசிய உணவாகவே மாறி போனது என்று தான் விளங்கவில்லை. அந்நிய உணவான பிரியாணி எப்படி இந்தியாவிற்குள் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?

பெயர் காரணம்: பிரியாணி பிறந்த இடம் பெர்சியா (இப்போதைய ஈரான்). 14-ஆம் மற்றும் 15-ஆம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பின் போது மன்னர்களுக்காக சமைக்கப்பட்ட உணவு என்று சொல்லபடுகிறது. எனினும் பிரியாணி பிறந்த இடம் பெர்சியாவா அல்லது அரேபியாவா என்று இன்னும் சரியாக தெரியவில்லை.பிரியாணி என்ற சொல்லுக்கு பார்ஸி மொழியில் 'வறுத்த /வறுக்கப்பட்ட உணவு ' என்று பொருள்.

ஹைதிராபாதி பிரியாணி

ஆரம்பகாலத்தில் பிரியாணிக்கு, நெய்யில் அரிசியை (கழுவாமல்) வறுத்து எடுப்பார்கள். இதன் மூலம், அரிசி நன்றாக வறுக்கப்பட்டு , மசாலா கலவையெல்லாம் சரியாக கலந்து, கறிவகைகளை அரிசிக்கு இடையில் வைத்து வெந்தவுடன், ஓர் நல்ல சுவையை தரும். இதை தான் தம் பிரியாணி என்று சொல்கின்றனர்.

மேலும், 1593-1631 -ல் ஷாஜகான் தன் ஆசை மனைவி மும்தாஜுன் அன்பு கட்டளையின் பெயரில் தம் போர் வீரர்களின் சீரான ஊட்டசத்துக்காக  சமைக்கப்பட்ட / உருவாக்கபட்ட  உணவு தான் பிரியாணி என்றும் சிலர் சொல்வதுண்டு.

வடக்கில், அவாத்தை (இன்றைய லக்னோ) முகலாயர்கள் சில காலம் ஆண்டனர். அங்கிருந்து அவாதி பிரியாணி என இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது. பின்னர் தில்லியிலிருந்து முகல் பிரியாணி என்றும் பரவியது.

பின்னர் 1856-ல் கல்கத்தாவை ஆண்ட நவாப் வாஜித் அலி ஷா மூலம் கல்கத்தா பிரியாணி உருவாகி பரவியது.

தென்னிந்தியாவில், மைசூர் திப்பி சுல்தானின் கோட்டையில் பல சைவ இந்து சமையல்காரர்களின் மூலம் , வெறும் காய்கறிகளின் வைத்து, தாகிரி பிரியாணி சமைத்து பரப்பினார்கள்.

அதே காலகட்டத்தில் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம்கள்  மூலம் ஹைதிராபாதி பிரியாணி  என்றும் ஆற்காட்டை ஆண்ட நவாப்கள் (வாணியம்பாடி/ஆம்பூர்)  ஆற்காடு பிரியாணி  என இந்தியா முழுவதும் பரவவிட்டனர்.

கேரளத்தில், கோழிகோடு தலச்சேரி வழியாக படையெடுத்து வந்த நவாப்கள், அந்த பகுதிகளை சில காலம் ஆண்டனர். அங்கிருந்து தலச்சேரி பிரியாணி என ஊரெங்கும் என்று பரப்பினர்.

இன்னும் இதை தவிர கடலோர கர்நாடகாவில் பத்களி பிரியாணி,   மகாராஷ்டிராவில் பம்பாய் பிரியாணி, ஜம்முவில் காஷ்மீர் பிரியாணி, குஜராத்தில் மிமோனி பிரியாணி,  தமிழ் நாட்டில் திண்டுக்கல் பிரியாணி என பிரியாணி வகையாறாக்கள் இந்தியா முழுவது பறந்து விரிந்து பரவியுள்ளது.

இந்தியா தவிர சிலோன் பிரியாணி, பாகிஸ்தான் சிந்தி பிரியாணி , மலேசியன் பிரியாணி என கடல் கடந்தும் பிரியாணிகள் மக்களை ஆட்கொண்டுள்ளது.

ஒரு சில பிரியாணி வகைகள் அந்தந்த ஊர்களில் உள்ள கடைகளின் மூலம் தனி ருசி ஏற்படுத்தப்பட்டு பிரபலமானவை. 

இப்படிதான் இந்தியா முழுவது பிரியாணி பரவி நம் அனைவரின் மனதை கொள்ளையடித்தது. இதுவரை நான் பிரியாணி என்றாலே ஹைதிராபாதி அல்லது ஆம்பூர் பிரியாணி தான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் இத்தனை ஊரில் இத்தனை வகைகளா என நினைக்கும் போது நாக்கில் நீர் ஊறுகிறது.

இணையத்தில் நான் பார்த்த, படித்த பிரியாணி வகைகளை உங்களிடம் இங்கு பரிமாறியுள்ளேன். இதில் உங்களுக்கு தெரிந்த ஏதேனும் பிரியாணி வகை விடுபட்டிருந்தால் எனக்கு பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

தகவல்கள்  - கூகிள் 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

5 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எங்க ஊருக்கு எப்ப வர்றீங்க...?

Unknown சொன்னது…

தலப்பாக்கட்டு பிரியாணியை பத்தி சொல்லாம விட்டுட்டீங்களே.......

விமல் ராஜ் சொன்னது…

வெகுவிரைவில் வருகிறேன் தனபாலன் அவர்களே...வருகைக்கு நன்றி !

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி மாடிப்படி மாது அவர்களே !

தலப்பாக்கட்டு பிரியாணி 50 வருடங்களுக்கு முன்னால், நாகசாமி நாயுடுவின் திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி கடை மூலம் பெயர் பிரபலமானது ... அதான் "தமிழ்நாட்டில் திண்டுக்கல் பிரியாணி" என்று சொல்லி விட்டேனே...

KGF MIRROR சொன்னது…

சங்கத் தமிழ் நூல்களில் ~ ஊன்சோறு' என்றும் புலவு(புலால்)சாப்பாட்டை பற்றி பல இடங்களில் சொல்லப்படுகிறது.அரபு நாடுகளிலோ அல்லது பாரசீக நாட்டில் நெல் விளைச்சல் உண்டா எனபது கேள்வி குறி.அவர்களிடம் மக்காச்சோள நொய்யை இறைச்சியில் கலந்து செய்வதை கண்டுள்ளேன்.உசிலைப்பொடி("மசாலா) பெரும்பாலும் தென்னிந்தியாவில் உள்ளதாலேயே அரபு நாடுகள் முதல் ஐரோப்பியர் வரை அதற்காகவே தமிழகம் வந்தனர், வணிகம் செய்தனர்.