ஞாயிறு, 6 டிசம்பர், 2015

சென்னை மழை - இரண்டான இரண்டாற்று கரை !

வணக்கம்,

கடந்த ஒரு வாரமாக சென்னையில் அடித்து வாங்கி, மக்களை புரட்டி போட்டது மழை. ஒரே நாளில் 39 செ.மீ மழை;  ஒரு வாரத்தில் 108 செ.மீ மழை; ஊர் முழுவதும் வெள்ளம்; எங்கு காணினும் தண்ணீர் என அல்லோலபட்டது சென்னை மாநகரம். 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழையை பார்த்துள்ளது சென்னை.

கடந்த செவ்வாய் (டிசம்பர் 2) அன்று அதிகாலை ஆரம்பித்த மழை, அன்று இரவு  12 மணி வரை கொட்டி தீர்த்தது. ஏற்கனவே கடந்த வாரங்களில் (தீபாவளி முதல்), பெய்த மழையில் வெள்ள காடாகி போனது சென்னையும் இன்னும் சில மாவட்டங்களும். இதில் மிகவும் மோசமாகி போனது கடலூர், காஞ்சிபுரம் தான். இப்போது  மீண்டும் தொடர் மழையால் மக்களை மிகுந்த துன்பத்துக்கு ஆளாக்கியுள்ளது.

prayforchennai

சென்னையில் உள்ள பெரிய ஏரிகளான புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, போரூர் ஏரி, பள்ளிகரணை எரி, வேளச்சேரி ஏரி, மடிப்பாக்கம் ஏரி ஆகியவை உடைந்து உடைக்கப்பட்டு சென்னையை ஆக்கிரமித்து விட்டது.

ஆற்றங்கரையையும், ஏரியையும் வளைத்து போட்டு வீடு, கல்லூரி, வணிக வளாகம் என சிட்டியாக மாற்றிவிட்டால்.. அது என்ன செய்யும் ??? பிறகென்ன ??? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! 

சென்னைக்கு இரண்டாற்றுகரை என்ற மற்றொரு பெயரும் உண்டு. அடையாறு, கூவம் என இரு ஆறுகள் ஓடுவதால் தான் இப்பெயர். பெருமழையால் இந்த இரு ஆறுகளும் நிரம்பி பெருக்கெடுத்து கரையோர இடங்களை கபளீகரம் செய்துவிட்டது.

மழையால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போனது. வேளச்சேரி, மடிப்பாக்கம், முடிச்சூர், அசோக் நகர், கிண்டி, கோயம்பேடு, ஆவடி, தாம்பரம், ஊரப்பாக்கம், கோட்டூர்புரம், சைதாபேட்டை, மாம்பலம், எழும்பூர், பாரிஸ், போரூர், அடையாறு, பெசன்ட் நகர், சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம்,  வட சென்னையின் பல பகுதிகள் என  கிட்ட தட்ட எல்லா இடங்களும் நீரில் முழுகி போயின. கரையோர ஏரியாக்கள் முழுவதும் முழுகி போய்விட்டது. முக்கிய சாலைகளும், சுரங்க பாதைகளும் நீரில் மூழுகி போய் சென்னை தீவாகவே மாறி போனது.

அத்தியாவசிய பொருட்களுக்கு  தட்டுப்பாடாகி போகவே, அதன் விலைகள் மலைபோல ஏறிபோனது. பால், குடிநீர், மெழுகுவர்த்தி, காய்கறி, உணவு என எதுவும் கிடைக்கவில்லை. பால் லிட்டருக்கு 140 ரூபாய்க்கும், காய்கறிகள்  கிலோ 100 ரூபாய்க்கு விற்கபட்டது.

பலரின் வீட்டில் 2 ஆவது மாடி வரை வெள்ளநீர்  புகுந்து விட்டதால், மக்கள் அனைத்தையும் இழந்து விட்டனர். மின்சாரம், தொலைதொடர்பு என எதுவும் மூன்று நாள் வரை இல்லை. இது வரை 280 பேர் இறந்து விட்டதாக சொல்கின்றனர். தரை, வான் மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது.

அரசின் மீட்பு பணி/  நிவாரண பணிகள் ஏற்கனவே மெதுவாய் நடக்கிறது என பொதுமக்கள் சொல்லி வருகின்றனர். மேலும் இவர்களது அட்ராசிட்டிகள் ஒரு படி மேலே போய், நிவாரண பொட்டலங்களில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி தீவிரமாக நடப்பதாக சொல்கின்றனர். இதை கண்டு பலரும் பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் பொங்கி வருகின்றனர்.


டி.வியில் செய்திகளை உடனுக்கு உடன் தருகிறேன் என சொல்லி விட்டு, மணிக்கு ஒருமுறை போட்ட செய்திகளையே போட்டு காட்டி, சொன்னதையே திருப்பி சொல்லி மக்களை மேலும் பீதிக்கு ஆளாக்குகிறார்கள். தண்ணீர் எங்கு வடிந்துள்ளது, எந்த சாலையில் பயணிக்கலாம், அவசர உதவி எண்கள், பேருந்து வசதி பற்றிய செய்திகளை சொல்லாமல், ஒவ்வொறு ஏரியாவாக சென்று இடுப்பளவு தண்ணீரில் உள்ளவர்களை பேட்டி எடுத்து அவர்கள் துன்பத்தை காசாக்க பார்க்கிறார்கள். ஆளுங்கட்சியின் டி.வி யில்,  அம்மாவின் ஆணைக்கிணங்க, நிவாரண பணிகள் மின்னல் வேகத்தில் நடப்பதாகவும், மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் சொல்லி துதி பாடுகின்றனர்.

chennai-rains

அரசியல்வாதிகள் பொதுமக்களை பார்க்கவரும் போது, மக்கள் அவர்கள் மீது கடும்கோபத்துடன் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஒருவரும் பார்க்க வருவதில்லை... அப்படியே வந்தாலும் கடனுக்கு வந்து ஒரு விசிட் அடித்து சென்று விடுகின்றனர்.

இதற்கிடையில் அவ்வபோது பரவி வரும் சில புரளிகளுக்கும் பஞ்சமில்லை. அந்த ஏரி உடைந்துவிட்டது, இந்த ஏரி உடைந்துவிட்டது, பாலம் இரண்டாகி போனது, முதலை பண்ணையிலிருந்து 20 முதலைகள் தப்பித்து விட்டது, இன்னும் இரு நாட்களில் 250 செ.மீ மழை என நாசா அறிவிப்பு (??!!) ... இன்னும் பல காமெடிகள் வலம் வருகிறது வாட்ஸ் அப்பில்.

இவ்வளவு கொடுமையிலும் ஒரு சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளது. மதம், சாதி, இனம் என எதையும் பாராமல், அனைவரும் ஒருகிணைந்து மக்களுக்கு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வருகின்றனர். தர்காவில் பல இந்து கிறுஸ்தவ மக்களும், இந்து கோவில்களில் பல இஸ்லாமிய மக்களும்  தங்கியுள்ளனர். மதம் பாராமல் மனித நேயத்துடன் உணவளித்து உதவி வருகின்றனர்.

சென்னையில் உள்ள பல தொண்டு நிறுவனங்களும், பல நல்ல உள்ளம் படைத்த மக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கின்றனர்; இன்னும் செய்து கொண்டு வருகின்றனர். மற்ற மாநிலத்திலிருந்தும் அன்புக்கரம் நீட்டப்பட்டு வருகிறது. இச்செய்திகளை நாம் ஊடகங்கள் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய ராணுவமும், தேசிய பேரிடர் குழுவும் சேர்ந்து சீரிய பணியை  ஆற்றியுள்ளது. மீண்டும் ராணுவம் தங்கள் கடமையை செவ்வனே செய்துள்ளது. ராணுவம் மட்டுமல்ல... வலிய வந்து உதவிய இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள், சில மீடியா பிரபலங்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் என இவர்களின் மனிதநேயமிக்க சேவை பணி மகத்தானது. இவர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் !!!

எவ்வளவு தான் நாம் ஒருவரை ஒருவர் அடித்து/தூற்றி கொண்டாலும், ஒரு பிரச்சனை என்று வரும் போது நாம் அனைவரும் ஒன்றுபடுகிறோம் என்ற நினைக்கும் போது மனம் சிலிர்த்து மகிழ்கிறது.

சென்னை மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்த காலம் போக, "எப்படா மழை நிக்கும்?? ", என்ற மன நிலைக்கு வந்து விட்டார்கள். ஆளானப்பட்ட சென்னை மாநகருக்கே இந்த நிலை என்றால், மற்ற மாவட்டங்களின் நிலை???  "ஹ்ம்ம்.. உச்...பாவம்.." என்று சொல்ல தான் முடிகிறது நம்மால்.

"மழையே, போதும் நீ எங்களை சோதித்தது.
சென்று அடுத்த ஆண்டு வா..
நாங்களும் கொஞ்சம் மீண்டு வருகிறோம்... !
#சென்னைமக்கள்  


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!