திங்கள், 13 ஜூன், 2016

பனியும் பனி சார்ந்த இடமும் !

வணக்கம்,

கடந்த ஓரிரு மாதங்களாய் சென்னையில் வெயில் வாட்டி எடுக்க, ஏதாவது குளிர் பிரதேசம் போகலாமென எண்ணினேன். சமயம் கை கொடுக்கத்ததால், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க விஜிபி ஸ்நோ கிங்டம் (VGP Snow Kingdom) மற்றும் புதியாய் திறந்துள்ள 3D ஆர்ட் மியுசியமும் போகலாம் என முடிவு செய்து கடந்த சனியன்று சென்றிருந்தேன். நான் பார்த்து, பிரம்மித்து, பூரித்து, விறைத்து போனதை பற்றி கொஞ்சம் விவரிக்கிறேன். படியுங்கள்!

விஜிபி ஸ்நோ கிங்டம்:
சென்னை ஈஞ்சம்பாக்கதில் உள்ள விஜிபி ஸ்நோ கிங்டம் மே 2015 ல் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விஜிபி யூனிவெர்சல் கிங்டம் (VGP Universal Kingdom) அருகே தான் இதுவும் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் தான் இது போல ஒரு பனிக்கூடம் இருக்கிறது என்பதை அறிந்தேன். சரி எப்படி தான் இருக்கிறது என்பதை பார்க்க நேரில் சென்றிருந்தோம். நபர் ஒன்றுக்கு 345 ரூபாயும், சிறியவர்களுக்கு 295 ரூபாயும் வசூலிக்கின்றனர். எங்களுக்கு மாலை 0415 க்கு டைம் ஸ்லாட். 04 மணிக்கே உள்ளே அனுப்ப ஆரம்பித்துவிட்டனர். உள்ளே செல்லும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சாக்ஸ், பூட்ஸ், கிலோவ்ஸ், ஜெர்கின் என சைஸுக்கு ஏற்றவாறு கொடுக்கிறார்கள். நம் உடமைமைகளான செருப்பு, தண்ணி பாட்டில் ஏனைய பொருட்களை மூட்டைக்கட்டி டோக்கன் போட்டு கொடுத்து விடுகிறார்கள்.

vgp-snow-kingdom

ஜெர்கின், குல்லா என எல்லாம் போட்டுக்கொண்டு சுவிஸ் சிட்டிசன் கெட்டப்பில் உள்ளே சென்றோம். வாசலருகே போகும் போதே குளிரில் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அப்பப்பா !!!  -6 டிகிரி C -ல் குளிர். அதுவும் சென்னையில்... அறை முழுவதும் ஐஸ்! வெண்ணிற மணலை அள்ளி கொட்டி பரப்பியது போல, எங்கு காணினும் வெண்பனி ஐஸ் குவியல்! பிரமாண்ட ஐஸ் மாளிகை போல ஒன்றை செட் போட்டு வைத்துள்ளனர். உள்ளே நுழைந்து அதை பார்க்கும் போதே நம் மனம் குதூகளிக்கிறது. மேலும் பனிக்கரடி, நீர்நாய், மான், பென்குயின், பனி மனிதன் போன்றவற்றின் பொம்மைகளையும், ஒரு சிறு ஈக்லூவும் (igloo) வைத்துள்ளனர். இதுபோக ஸ்லெட்ஜ் வண்டியும் வைத்துள்ளனர். 30 அடி உயர பனி சறுக்கு விளையாட்டு, (சுவர்) பனிமலை ஏறும் விளையாட்டு என பனியில் விளையாட சில சமாச்சாரங்களும் உள்ளது.


உள்ளே பலரும் செல்ஃபி எடுத்து கொண்டும், வீடியோ எடுத்து கொண்டும் பிசியாக இருந்தனர். சிறுவர், சிறுமியர், சிறு பிள்ளைகள் என அனைவரும் ஓடி ஆடி விளையாடி கொண்டும், ஐஸை அள்ளி வீசியும் விளையாடி கொண்டிருந்தனர். சிறு பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களும் தான். ஒரு பதினைந்து நிமிடத்தில் பனி மழையை செயற்கையாக பொழிய வைத்தனர். ஏற்கனவே நடுங்கி கொண்டிருந்த வேளையில் இன்னும் குளிர் அதிகமாகி போனது. போட்டோ எடுக்க கிலோவ்ஸ் கழட்டி மாட்டும் சில மணி துளிகளில் கை விறைத்து கொள்கிறது. பலரும் அந்த ஐஸ் மணலில் தத்தக்கா பித்தக்கா என நடந்து கொண்டும், வழுக்கி விழுந்து கொண்டும் இருந்தனர் (நானும் தான்!). 40 நிமிடத்திற்கு பின் டைம் முடியும் போது விசிலடித்து அனைவரையும் வெளியே அனுப்பி விடுகின்றனர். வெளியே வந்தவுடன் நாம் போட்டு கொண்ட உடுப்புகளையெல்லாம் சலவைக்கு போட்டு விட்டு மீண்டும் அடுத்த ஷோவுக்கு ஆயுத்தம் செய்கின்றனர்.

அவசரத்திற்கு கழிப்பறையும், இளைப்பாற ஒரு சிறு கான்டீனும் உள்ளது. இங்கு காபியை குடித்துவிட்டு வெயிலில் சற்று நேரம் நின்ற பின்தான் நார்மலுக்கு நம்மால் வரமுடிகிறது.

சிறியவர்கள், பெரியவர்கள் என் யார் வந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு தங்களை மறந்து ஆச்சிரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் தான் வெளியே போவார்கள். ஆக மொத்தத்தில் கோடையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் இனிதே பொழுதை கழிக்க நல்ல இடம் இது.

மேலும் தகவல்களுக்கு vgpsnowkingdom.com

3-டி ஆர்ட் மியுசியம் : 
ஸ்நோ கிங்டத்திலேயே முதல் மாடியில் Click Art Museum என்ற 3D ஆர்ட் கேலரி ஒன்றை கடந்த மே 2106-ல் தான் ஆரம்பித்து உள்ளனர். இந்தியாவிலேயே முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தந்திரகலை காட்சிக்கூடம் இது. நபர் ஒன்றுக்கு 150 ரூபாய் வசூலிக்கின்றனர்.

clickartmuseum

புகைப்படங்களில் என்ன இருக்க போகிறது என்று நினைத்து கொண்டு போனாலும், அங்கே போனதும் அந்த எண்ணம் தந்திரமாக மறைந்து போனது. ஒவ்வொரு 3டி போட்டோவிலும்,  ஃபிரேமைவிட்டு படங்களும், உருவங்களும் வெளியே வருவது போல தீட்டியுள்ளனர். போட்டோகளுக்கு அருகே நின்று போஸ் கொடுக்கும் போது, போட்டோவில் உள்ள உருவமும்/ படமும் நேரில் இருப்பவரும் சேர்ந்து இருப்பது போல தெரிவது இதன் சிறப்பம்சம்.

click to enlarge
மேலும் ஒவ்வொரு படங்களிலும், எப்படி போஸ் கொடுக்க வேண்டும், எங்கே நின்று போட்டோ எடுக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளனர். அதை பார்த்து நம் மக்களும் விதம்விதமாக போட்டாவுக்கு போஸ் கொடுத்து தள்ளுகின்றனர். அடிக்கடி செல்ஃபி எடுத்து கொள்ளும் பழக்கம் உடைய பலருக்கும், கலை விரும்பிகளுக்கும் இந்த இடம் மிகவும் பிடிக்கும். ஒரே குறை. உள்ளே சென்று சுற்றி வருவதற்குள் வியர்வையில் குளித்து விடுவீர்கள்.

சென்னையில் எக்ஸ்பிரஸ் அவன்யூ மற்றும் புத்தக கண்காட்சியிலும் இந்த 3டி கலைக்கூடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம். நீங்களும் சென்று பார்த்து வியந்து வாருங்கள்.

மேலும் தகவல்களுக்கு http://www.clickartmuseum.com/


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!