செவ்வாய், 18 ஜூலை, 2017

பற்றி எரிகிறது வீரம் !

வணக்கம்,
இது எனது வெற்றிகரமான 100வது பதிவு! இந்த நாலரை வருடத்தில் இப்போது தான் செஞ்சுரியே போட முடிகிறது. இத்தனை நாட்களாய் என் பதிவுகளை பொறுமையாய் படித்து, கருத்தளித்து, எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்த அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் !!!

100th-post-pazhaiyapaper

எனது நூறாவது பதிவில் ஏதாவது ஒரு சமூக பிரச்சனையை பற்றி எழுத வேண்டும் என தோணியது. அதன் விளைவே இப்பதிவு. இப்போதெல்லாம் செய்திகளில், ஒரு முக்கிய செய்தி ஒன்று அடிக்கடி வருகிறது. இளைஞர் தீக்குளிப்பு! முதியவர் தீக்குளிக்க முயற்சி! பெண் தீக்குளித்து இறப்பு! 

தீக்குளித்தல் - ஒருவர் தாமாகவே நெருப்பில் பாய்ந்து உயிரை மாய்த்து கொள்வது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. விரக்தியின் விளிம்புக்கு சென்ற பின் முடிவெடுக்கும் அசாதாரண முடிவு. கொள்கை, லட்சியதிற்காக இப்படி இறப்பவர்களை, பெரும்பாலும் வீரமகனாகவே மாற்றி விடுவது நம் நாட்டின் மரபு.

"என் தலைவருக்கு நியாயம் கிடைக்காவிட்டால், நான் இங்கேயே தீக்குளிப்பேன்" என்ற அரசியல் அல்லக்கைகளின் வசனத்தை பல படங்களில் நாம் கேட்டிருப்போம். இது வெறும் வசனம் மட்டுமல்ல. இது போன்ற சம்பவங்கள், பல இடங்களில் இன்றும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

இது இன்றோ, நேற்றோ ஆரம்பித்தல்ல. சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே துணிச்சல் மிக்க வீர செயல்கள் என சொல்லப்படும் தீக்குளிப்பு சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

வருடம் 1965 ஆம் ஆண்டு. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியால், சென்னை மாகாணமெங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆரம்பித்து, பல இடங்களில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த சமயம்.

திருச்சி கீழப்பழுவூரை சேர்ந்த 27 வயது இளைஞர் இந்தி எதிர்ப்பு போராட்டதிற்காக தீக்குளித்து இறந்தார். இறக்கும் முன், "தமிழ் மொழியை காக்க நான் தீக்குளிக்க போகிறேன்" என கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்டிருக்கிறார். மொழிக்காக உயிரை விட்டதால், இவரை மொழி தியாகியாக்கி, அவர் மரணத்தை வீர மரணம் ஆகிவிட்டனர். நம் தமிழக வரலாற்றில் அச்சில் பதிந்த முதல் தீக்குளிப்பு (வீர) மரணம்.  அதன் பிறகு ஓரிரு ஆண்டுகளில் கோடம்பாக்கம் சிவலிங்கம் (21), விருகம்பாக்கம் அரங்கநாதன்(33), அய்யம்பாளயம் வீரப்பன் (26), சத்தியமங்கலம் முத்து (21).மாயவரம் சாரங்கப்பாணி (20),  கீரனூர் முத்து (21) என இந்தி திணிப்புக்காகவும், இந்தி எதிர்ப்புக்காகவும் பலர் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். இவர்கள் இறப்புக்கு பின் இவர்களை மொழிக்காக உயிர்விட்ட வீர மகன்களாகவும், தியாகிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர்.


தீக்குளித்து இறந்தவர்களுக்கு, இறந்த பின் வீரர் அல்லது போராளி அல்லது வீரமரணம் என போற்றப்பட்டு, அவர்களது குடும்பத்துக்கு உதவி பணமும், மற்ற சலுகைகளும் கொடுக்கபட்டது. பின்னாளில் இதுவே ஒரு ட்ரெண்டாகி போனது வருத்தத்திற்குரியது.

அதன் பின்னர் 1968 ஆம் ஆண்டில், அறிஞர் அண்ணா இறந்த போதும் பலர் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டனர். 1972-ல் எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து விலக்கிய போது இருவர் தீக்குளித்து இறந்தனர். 1981-ல் கலைஞர் கைதுக்காக 21 பேர் உயிரை மாய்த்து கொண்டனர். அதில் பெரும்பாலானோர் தீக்குளித்து இறந்து போயினர்.பின் 1987-ல் எம்.ஜி.ஆர் இறந்த செய்தி கேட்டு 31 பேர் தீக்குளித்தனர். இவர்கள் அனைவருக்கும் தீக்குளித்தற்காக / உயிரை தியாகம் செய்ததற்காக சன்மானமும், வீரர்கள் என புகழாரம் சூட்டப்பட்டு கொண்டும் இருந்தது.

அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு முத்துக்குமார் (26), இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து தீக்குளித்து இறந்தார். அது பெரும் செய்தியாகி அவர் சாவை வீர மரணமாக கருதி, இன்றும் வருடந்தோறும் நினைவேந்தல் கூட்டம் நடந்து வருகிறது. 2011-ல் செங்கோடி (20) ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நால்வருக்கும் நியாயம் கிடைக்க வேண்டி தீக்குளித்துள்ளார். 2016-ல் விக்னேஷ் (26) காவிரி பிரச்சனையில் தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைத்திட தீக்குளித்துள்ளார். இது போல தமிழ் நாட்டில் அரசியலில் நடந்த மாற்றத்தால் ஏற்படும் மக்கள் பிரச்னைக்காக பலரும் தீக்குளித்தும், பிற வழியிலும்  உயிரை மாய்த்துள்ளனர். கடைசியாக 2016-ல் ஜெயலலிதா இறந்தபின் சிலர் தீக்குளித்துள்ளனர்.

தம் உயிரே ஆனாலும் அதை மாய்த்து கொ(ல்லு)ள்ளும்  உரிமை யாருக்கும் கிடையாது. இறந்தவர்கள் பலரும் 20 முதல் 30 வயதுடையவர்கள் தான். இந்த வீர மரணங்களுக்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும் ???  நொடி பொழுதில் வந்த முடிவா?  கொள்கை வெறியா? இல்லையெனில் அரசியல் பின்னணியா? என யாருக்கும் இதுவரை தெளிவாக தெரியவில்லை.

இவர்கள் அனைவரும் அவர்தம் சொந்த முடிவின் பெயரிலும், கொள்கைக்கவும், தாமாகவே முன் வந்து இருந்ததாகவே எடுத்து கொள்வோம். அது ஓர் தவறான மனநிலையை தான் குறிக்கிறது. இவர்கள் இறப்பை வீர மரணம் என்றும், இறந்த பின் அவர் குடும்பத்துக்கு பொருளும் பணம் கொடுப்பது இச்செயலை அரசியல்வாதிகளே ஊக்கப்படுத்துல் போலாகும். கிட்டத்தட்ட அவர்களின் தீக்குளிப்பை வீரச்செயல் என்றே போற்றப்பட்டு அவர்களை மாவீரர்களாக்கி வருகின்றனர். ஒருவர் தீக்குளிக்க முற்பட்டால், அவரை தடுத்து கண்டிக்க/தண்டிக்க வேண்டும். அதை விடுத்து அவரை நாயகனாக்கினால், பின்னாளில் வருவோரெல்லாம் அவரை ஒரு முன் மாதிரியாக எடுத்து கொண்டு, அதை பின்பற்றி கொண்டு ,தம்மை தாமே பற்ற வைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஹ்ம்ம்..  அதை தான் செய்கிறார்கள்.

நான் இவர்களின் மரணத்தையோ, கொள்கையையோ தவறாக விமர்சிக்கவில்லை. இளம் வயதில் இறப்புக்கு பின், இவர்கள் குடும்பத்தின் நிலை என்னவாகும்? இது போன்ற கொள்கைப்பிடிப்பும், வீர மரணமும்  ஏன் வசதியில் பின் தங்கிய மக்களுக்கே வருகிறது? இறந்தவர்களில் ஒருவர் கூட வசதி படைத்தவர்களோ/ அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் சொந்தமோ இல்லை. எதையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தமிழ் நாட்டில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 2000 பேர் தீக்குளித்து இறக்கின்றனர். தமிழ் நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதும், இது போல நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கையில் விரக்தி, பரிட்சையில் தோல்வி, திருமணம் வாழ்வு கசந்து போகுதல், வன்கொடுமை, அரசியல், மொழி, சாதியம் என காரணங்கள் வெவ்வேறு இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். எந்த ஒரு பிரச்சனைக்கும் உயிரை மாய்த்து கொள்வது தீர்வல்ல. அதை எப்போது அரசும், அரசியல்வாதிகளும் மற்ற மக்களும் புரிந்து கொள்வார்கள் என தெரியவில்லை.

தகவல்கள்- The Hindu, Sify News, Tamil Tribune

நன்றி !!!
-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

8 Comments:

தனிமரம் சொன்னது…

சிந்திக்க வேண்டிய விடயம் தீக்குளிப்பு தீர்வாகாது எதுக்கும். 100 வது பதிவு இன்னும் பல ஆயிரம் தொட வாழ்த்துக்கள் .

karuppu சொன்னது…

தமது நூறாவது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள் !! அருமையான பதிவு !!! மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் !!

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன் அவர்களே!!!

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கருப்பு!!!

KILLERGEE Devakottai சொன்னது…

நூறாவது பதிவுக்கு முதலில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நண்பரே.

அருமையாக அலசி இருக்கின்றீர்கள் இதில் எவனாவது தாய்-தந்தைக்காக தீக்குளித்து இருக்கின்றானா ?
கட்டவுட்டிற்கு பாலூற்றும் பொழுது தடுக்கி விழுந்து இறந்தவனை எல்லாம் மறுவருடம் நினைவு நாளில் தியாகி என்று சுவரொட்டியில் போடுகின்றான்.
மானக்கேடு கில்லர்ஜி

விமல் ராஜ் சொன்னது…

கருத்துக்கு மிக்க நன்றி killer gee!!

கலியபெருமாள் புதுச்சேரி சொன்னது…

பதிவு எழுதிய அன்றே படித்துவிட்டேன்..விரிவாக எழுத நினைத்ததால்தான் கொஞ்சம் தாமதம்..முதலில் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..நானும் நான்கரை வருடமாகத்தான் எழுதுகிறேன்..என்னால் ஐம்பதையே தொடமுடியவில்லை..நூறு என்பதே சாதனைதான்..எத்தனை எழுதினோம் என்பது முக்கியமல்ல..நீங்கள் எழுதிய அத்தனை பதிவுகளுமே சிறந்த பதிவுதான்..உங்கள் பாதிக்கும் மேற்பட்ட பதிவுகள் சமூக அக்கறையுள்ள பதிவுகள்தான் நண்பா..உங்கள் எழுத்து நடைக்கு நான் ரசிகன்..உங்களை சந்திக்க ஆவல் எழுகிறது..பாமரருக்கும் புரியும் தெளிவான எளிமையான நடை..அதே நேரத்தில் சொல்ல வந்த விசயத்தை வளவளவென்று இழுக்காமல் அழகாய் முடிப்பதில் நீங்கள் வல்லவர்..மேலும் உம் திறமைகள் வெளிப்பட வாழ்த்துக்கள் நண்பா.

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கலியபெருமாள்!!
உங்களை போன்றவர்கள் தரும் ஊக்கத்தினால், நான் நிறைய பதிவுகளை எழுத முயற்சிக்கிறேன்.. கண்டிப்பாக நாம் ஒருநாள் சந்திப்போம்.!