ஞாயிறு, 16 டிசம்பர், 2018

சிறுகதை - நானும் தண்டம் தான்!

வணக்கம்,

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் சிறுகதை ஒன்றை முயற்சித்து உள்ளேன். படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களை சொல்லவும்.

சிறுகதை - நானும் தண்டம் தான்!
*****************************************

அந்த காலை நேரத்தில் வழக்கம் போல G70 பஸ் கூட்டமாக தான் இருந்தது. விஜய்க்கு பஸ்சில் போவதே கடுப்பு; அதுவும் கூட்டமாக இருக்கிறது என்றால் இன்னும் கடுப்பு தான். தன் அம்மா வள்ளியை முன்னால் எற சொல்லிவிட்டு, அவள் உள்ளே முண்டியடித்து போகும் வரை பார்த்துவிட்டு, இவனும் பின்புற வழியாக ஏறி கொண்டான். உள்ளே போக இடமில்லை. நான்கு பேரோடு ஐந்தாவது ஆளாய் கடைசி படிக்கட்டில் தொத்தி கொண்டான்.

tamil-shortstory

"ரெண்டு வடபழனி.." என பக்கத்தில் இருப்பவரிடம் சொல்லி டிக்கெட் வாங்கி கொண்டான். ஒவ்வொரு ஸ்டாப்பிங்கிலும் இறங்கி ஏற சிரமமாய் இருந்ததால், கொஞ்சம் உள்ளே சென்று கண்டக்டருடன் நின்று கொண்டான். அவன் அம்மாவும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கண்டக்டரிடம் நின்று கொண்டாள். விஜய் அம்மாவை முறைத்து கொண்டே, "இதுக்கு தான் சீக்கிரம் கிளம்பனும்ன்னு சொன்னேன்.. இப்போ பாரு..இவ்வளோ கூட்டம்.."என கடிந்து கொண்டான். அவளும், "ஏண்டா... நான் துணி துவச்சிட்டு, இட்லிக்கு மாவு போட்டுட்டு தானே வரணும்..இல்லனா திங்கட்கிழமை என்ன பண்ணுவே??" என ஆதங்க பட்டுக்கொண்டாள். "நேத்தியே போலாம்ன்னு பாத்தா உனக்கு வேலை வந்துடுச்சு. போயிட்டு ஒன்பது மணிக்கு தான் வந்தே.. அப்போ இப்போ தான் போணும்.." என்றாள் அவள்.

 "ஆமா இப்போ உன் தங்கச்சி வீட்டுக்கு போகனும்னு ரொம்ப அவசியம்.." என கூறி கொண்டு முணுமுணுத்தான்.. வண்டி டிராஃபிக் காரணமாக மெதுவாக போவதால் கொஞ்ச நேரம் போனை எடுத்து பாட்டு கேட்டு கொண்டிருந்தான் விஜய். சிறிது நேரம் போனது. கிண்டியை தாண்டியவுடன், விஜய்யின் அம்மா குரல் கேட்பது போல உணரவே, நிமிர்ந்து பார்த்தான். ஆம்! அவன் அம்மா யாரோ  ஒருவனை திட்டி சண்டையிட்டு கொண்டிருந்தாள். என்ன ஏது என அவசரமாக ஹெட்செட்டை கழட்டி அருகில் போனான்.. "பொறுக்கி கம்மினாட்டி! அந்த பொண்ணு ஓரமா தானடா நிக்குது.. மேல வந்து எறுறியே.. எருமை.. அப்படி தள்ளி போடா..." என பொறுமி கொண்டிருந்தாள். "இடம் இல்லல.. பஸ் வேற கூட்டமா இருக்கு.. எங்க போவ நானு.." என்று சொல்லியபடி  தலையை தொங்கப் போட்டன் அந்த இடி மன்னன். ஜீன்ஸ் பேண்டும், ஒரு டிசன் பனியனும் போட்டிருந்தான். காதில் ஹெட்போன். பார்க்க சிறு வயசு பையன் போல தான் இருந்தான்.

"நானும் அப்போலருந்து பார்கிறேன், இவனும், அந்த பொண்ண உரசுரதுலேயே குறியா இருக்கான், காவாளி பய.." அருகில் நின்ற பெரிசு ஒன்று சவுண்ட் விட்டது." "இதுக்குனே பஸ்ல வரா இவாலெல்லம்... " என்றார் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த மாமி.

பலரும் முனுமுனுக்கவே அவன் தள்ளிப்போய் படிக்கட்டு அருகே நின்று கொண்டான். எல்லோரும் சேர்ந்து தர்மஅடி போடுவதற்குள் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி கொண்டான்.

இருப்பினும் வள்ளியின் வாய் சும்மா இல்லை. அவனை கரித்து கொண்டே வந்தாள்."இதெல்லாம் எங்க உருப்பட போகுது..தெரு தெருவாக போய் பிச்சை தான் எடுக்கும்..சனியன்..சனியன்.."

"சரி விடுமா.. போகட்டும் அவன்", என்றான் பக்கத்தில் உள்ள ஒரு நடுத்தர வயது ஆண்.. அவள் சடாரென திரும்பி அவரை பார்த்து, "அதெப்படி விட முடியும்.?? சின்ன விஷயமா அவன் பண்ணான்..? இத்தனை ஆம்பளைகள் இருகீங்கன்னு தான் பேரு.. எல்லாம் தண்டமா இருக்கீங்க.. ஒருத்தராவது  தட்டி கேட்கலாம்ல..??" என்று  கேட்டாள்.. டிக்கெட் கிழித்து கொண்டிருந்த கண்டக்டர், அவரை யாரோ கிழிப்பது போல நிமிர்ந்து பார்த்து கொண்டிருந்தார்.

பஸ்சில் இருந்த அனைவரும் சில நொடிகள் மௌனமானார்கள். விஜயும் தான். பஸ் எரியவுடனயே அவன் அந்த பெண்ணிற்கு நடந்ததை பார்த்து விட்டான். ஆனாலும், பார்க்காதது முகத்தை திருப்பி கொண்டு, பாட்டு கேட்க ஆரம்பித்து விட்டான். அவன் மட்டுமல்ல. பலரும் அந்த பெண்ணிற்கு நடந்ததை பார்த்திருப்பார்கள். தப்பு நடந்ததை பார்த்தும் பார்க்காதது போல இருப்பதாலும், வாய்பிருந்தும் தட்டி கேட்காமல் இருப்பதால் தான், இது போன்ற கொடுமைகள் நடந்து வருகிறது.  வள்ளி கூறியது உண்மை தான். வாய்ப்பிருந்தும் தப்பை தட்டி கேட்காத எல்லா ஆண்களும் தண்டம் தான். அந்த தண்டத்தின் தண்டமாக அவனும் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தான்.

 நன்றி!!!
 பி.விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

5 Comments:

கலியபெருமாள் புதுச்சேரி சொன்னது…

அருமை நண்பா..செருப்பால் அடிப்பது போல் இருந்தது.

Kasthuri Rengan சொன்னது…

யதார்த்தமான முடிவு செயல்படத் தூண்டும் படி இருப்பது சிறப்பு

Kasthuri Rengan சொன்னது…

நல்ல
நடை
நல்ல
கதை

விமல் ராஜ் சொன்னது…

@மது, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

Unknown சொன்னது…

நல்ல பதிவு நண்பரே 😍