செவ்வாய், 28 ஜூன், 2022

யாருக்கான பெருமை இது ? : June Pride

வணக்கம்,

பொதுவாக நம் எல்லோருக்கும் இரு பாலினங்கள் இருக்கிறது என தெரியும். ஒன்று ஆண், இன்னொன்று பெண். சினிமா மூலமாகவும், ஏதாவது ஃபாரம் எழுதும் போதும் ஆண், பெண், திருநங்கை என மூன்றாம் பாலித்னதை பற்றியும் நாம் அறிந்திருப்போம். ஆனால் இந்த மூன்று பாலினத்தையும் தவிர 76 வகையான பாலின வகைகள் இருக்கிறது. அதற்கான மக்களும், அவர்களுக்கான ஆதரவும் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. இவர்களை பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.

இந்த ஜூன் மாதத்தை Pride June என்று சொல்கிறார்கள். பல்வேறு நாடுகளில் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். 1969 களில் மேற்கத்திய நாடுகளில் மாற்று பாலின மக்களுக்கும், அதே பாலினத்தின் மீது விருப்பு கொண்டவருக்கும்சில போராட்டங்களுக்கு பின்னர் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதை கொண்டாடும் விதமாகதான் இந்த ஜூன் மாதத்தில் LGBTQ/ LGBTQIA (Lesbian, Gay, Bisexual,Transgender, Queer, Intersex & Asexual) என்று சொல்லப்படும் திருநங்கைகள், திருநம்பிகள், ஓரின சேர்க்கையாளர்கள், ஈரின சேர்க்கையாளர்கள் என எல்லோரும் ஒன்று கூடி ஊர்வலம் போகிறார்கள். வானவில் நிறங்களில் கொடியேந்தி, முகத்தில் வண்ணம் பூசி ஊர்வலவாக சென்று கொண்டாடுகிறார்கள். 

LGBTQ flag-June pride

கடந்த 10/20 ஆண்டுகளுக்கு முன் வரை இந்த கேளிக்கை கொண்டாட்டங்கள், பாலின சேர்க்கை பற்றிய திரைப்படங்களும், விவாதங்களும், அதற்கான ஆதரவுகளும் வெளிநாடுகளில் மட்டுமே நடந்து கொண்டிருந்தன. ஆனால் சில ஆண்டுகளாக நம் நாட்டிலும் இதற்கான குரல்கள் ஒலிக்க தொடங்கியிருக்கிறது.

இரு நாட்களுக்கு முன் சென்னை, கோவை, மதுரை, ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், புது தில்லி, மும்பை என நாடு முழுவதும் இதற்கான கொண்டாட்ட ஊர்வலங்கள் நடந்து வருகிறது. இதற்கு முன் நம்மூரு மக்களுக்கு இந்த சமாச்சாரம் பற்றி பெரிதாய் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வடஇந்தியாவில் சில பாலிவுட் படங்கள் மூலமாகவும் (Dostana, Girlfriend, Fire, Monsoon Wedding..), செய்திகளில் சில lesbian மற்றும் gay சம்பவங்களாலும் நமக்கு அறிமுகமாயின. தமிழிலும் ஆங்காங்கே சில படங்களில் இது போன்ற ஓரின சேர்க்கை பற்றி தொட்டும் தொடாமலும் வந்து சென்றது (பொம்மலாட்டம், கோவா, வேட்டையாடு விளையாடு...). மற்ற மொழிகளிலும் இந்த கதையமைப்பை கொண்ட படங்கள் வந்து கொண்டு தான் இருந்தன. ஆனால் இப்போதைய OTT காலத்தில், வெப் சீரிஸ்களிலும், படங்களிலும் நேரடியாக ஓரின சேர்க்கையை ஆதரித்தும், அந்த வாழ்க்கை சரியன்றும் சொல்லி படம் எடுத்துள்ளனர். அப்படங்கள் வந்த இடம் தெரியாமல் போனதும், பெரிதாய் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றாலும், இது போன்ற படங்கள் எதை ஊக்குவிக்கின்றன என தெரியவில்லை. இதை பார்த்து வருங்காலம் கெட்டுவிடும் என்றோ, கலாசாரம் சீர்கெட்டு போகும் என்பதோ என் வாதம் அல்ல. இதை இப்போது இங்கு ஏன் திணிக்க அல்லது மக்களிடையே பரப்ப முயல்கிறார்கள் என்ற கேள்விதான் எனக்குள் புரியாமல் ஓடிக்கொண்டிருகிறது. 

ஆட்டிசம் என்பது ஒரு கொடிய நோயல்ல; ஓர் மன ரீதியான கோளாறு மட்டுமே என்று சொல்வதை போலவும், கொடும் தொற்று நோயால் பாதிக்கபட்டவர்கள் ஒதுக்கி வைக்க பட வேண்டியவர்கள் இல்லை என்று சொல்வதை போலவும், இது போன்ற ஓரின சேர்க்கை, மூன்றாம் பாலினம் போன்ற பிரச்சனைகள் ஒருவகையான ஹார்மோன் கோளாறு மட்டுமே என்றும், இவர்களை ஒதுக்கி வைக்காமல் ஆதரவு கொடுக்க வேண்டும் என சொல்லி விழிப்புணர்வு செய்ய வேண்டிய சில தனியார் அமைப்புகளும், திரைத்துறையினரும் இதை ஒரு வேறு வடிவில் மார்க்கெட்டிங் ப்ரோமோஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கான காரணம் தான் ஏன் என புரியவில்லை.

சாதி மறுப்பு திருமணம் செய்தால் சாதி ஒழியும் என சொல்கிறார்கள்; பெண்கள் படித்தால் நாளைய சமூகம் நன்றாக முன்னேறும் என சொல்கிறார்கள். அது போல இந்த LGBTQ ஊர்வலங்கள் எதை குறிக்க ஊர்வலம் செல்கின்றது என இதை பெரிதாய் ஊக்குவிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும்.

தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் இந்த மீடியாக்கள் ஆதரித்து ப்ரோமோஷன் செய்யலாம் என்ற எண்ணம் ஏன்? எப்படி? வந்தது என தெரியவில்லை.    

இது போல எண்ணம் கொண்டவர்கள் அல்லது மக்கள் யாவும் நம்மை போலவே சாதாரண மக்கள் தான். யாரும் தம் குடும்பத்தில் திருநங்கையோ, திருநம்பியோ அல்லது இன்ன பிறபாலினங்களோவோ இருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டோ, ஆசைப்படுவதோ இல்லை. உடலில் ஹார்மோன் ரீதியான பிரச்சனைகள் காரணமாக இந்த எண்ணங்கள் வருகிறது என சொல்கிறார்கள். அவர்களை வெறுக்காமல் ஆதரவு அளித்து அவர்கள் போக்கில் வாழ விட்டு விடவேண்டும். அதை விடுத்து இது போன்ற கேளிக்கை கொண்டாட்டங்கள் அவர்களுடைய நடைமுறையை ஊக்குவிவைப்பது போலவும், இதை பற்றி தெரியாத மற்றவர்களுக்கு நாமே டமாரம் அடித்து இப்படி இருந்தாலும் பரவாயில்லை.. தப்பில்லை என இயற்கைக்கு மாறான ஒன்றை நாமே சொல்லி கொடுப்பது போல தான் இருக்கிறது.  

இரு நாட்களாய் பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக வரும் வீடியோக்களை பார்த்த பின் தோன்றியதையே இங்கு பகிர்ந்துள்ளேன்.


நன்றி!!!

பி.விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

1 Comments:

முத்துகிருஷ்ணன் சொன்னது…

மாறும் உலகம். மாற்றம் ஒன்றே மாறாதது. சிலர் அம்மா சமையல்தான் உயர்வு என்று சொல்லும் ஒருவன் அதைவிட மனைவி நன்றாக சமைத்தாலும் ஏற்காது மனது. இது போல் ஏராளம் உண்டு அதில் இதுவும் ஒன்று.