சனி, 14 ஜனவரி, 2023

துணிவு & வாரிசு - விமர்சனம்

வணக்கம்,

அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! இந்த வருட பொங்கல் ஸ்பெஷலில் வாரிசும், துணிவும் எப்படியோ சேர்ந்து கொண்டது. ரிலீஸ் தேதி சொன்னது முதல் இரண்டு பெரிய நிறுவனங்களும், இயக்குனர்களும் கவலைப்பட்டதை விட சமூக வலைத்தளங்களில் எந்த படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும், எந்த படம் நன்றாக ஓடும், யாரு நம்பர் 1 என ரசிகர்களும், ஊடகங்களும் பேசி, அலசி, அடித்து கொண்டது தான் அதிகம். கடைசியில் தலயா? தளபதியா? என்ற ரேஸில் விளையாட்டாய் விளையாட்டு துறை அமைச்சர் (ரெட் ஜெயண்ட்) முந்தி விட்டார்! ஓ.. இங்க நோ பாலிடிக்ஸ்... சரி.. இப்போ நாம இரண்டு படத்தையும் பற்றி பார்க்கலாம். தல AK படத்துக்கு முதலில் டிக்கெட் கிடைத்ததால், முதலில் துணிவு!

துணிவு: 
பட போஸ்டரிலேயே தல அஜித்தின் கெட்டப்  மாஸாக தான் இருந்தது. டிரைலரில் பாங்க் கொள்ளை பற்றிய படம் என்று தெளிவாக தெரிந்துவிட்டது. இயக்குனர் H.வினோத் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போல (வலிமையை மறந்து விடுவோம்) இதிலும் அதகளம் பண்ணுவார் என எண்ணி துணிவோடு படம் பார்க்க போன என்னை போன்றனவர்களின் நிலை..  ஹூக்கும்.. என பெருமூச்சு விட்டபடி தான் வெளியே வரவேண்டிய சூழ்நிலை. ஹ்ம்ம்...

நகரின் மையத்தில் உள்ள பாங்க் கொள்ளையடிக்கபடுகிறது. கொள்ளையடிப்பது நம்ம தல தான். கொள்ளையர்கள் எப்படி தப்பிதார்கள்? கொள்ளைக்கு என்ன மாறியான சென்டிமென்டல்-மெகா-ஹீரோயிக் காரணம் சொல்லி, (வடை) சுட்டு தப்பிக்க போகிறார்கள் என்பதே இயக்குனர் சொல்ல துணிந்த கதை! 

படம் முழுக்க ஒரே லொகேஷன். பாங்க் கட்டிடம், உள்ளே உள்ள அமைப்புகள் எல்லாம் செட் ப்ராபர்ட்டி என பளீரென தெரிகிறது. பின்னே, எல்லாம் வெடிச்சு சிதரணுமே.. இசைன்னு பெருசா ஒன்னும் தெரியலை எனக்கு. ஆனா 'சில்லா சில்லா' பாட்டு மட்டும் கேட்க நல்லா இருக்கு. 

சமுத்திரகனி போலீஸ் கமிஷனராக வந்து வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருக்கிறார். கடைசியில் ஹீரோ நல்லவன் தான் என certificate கொடுத்து, சரண்டரக சொல்கிறார். மற்றொரு போலீஸாக வரும் மகாநதி சங்கர், பகவதி பெருமாள், கொள்ளை கூட்டத்தில் ஒருவராக வரும் வீரா (ராஜதந்திரம் பட ஹீரோ) இவர்களுக்கெல்லாம் இன்னும் கொஞ்சம் சீன்ஸ் வச்சியிருக்கலாம். அஜித் வழக்கம் போல மாசும், வில்லனிசமும் காட்டியுள்ளார். கூலான கொள்ளையன் என டான்ஸ், ஸ்டைல், கொஞ்சம் மொக்க ஜோக், அதிரடி ஆக்ஷன், படபடவென எதிரிகளை சுடுதல் என படம் முழுக்க சுட்டுகொண்டே இருக்கிறார். இந்த வாட்டி பைக்கு பதிலாக ஜெட் ஸ்கை (வாட்டர்-பைக்) ஓட்டுகிறார். ஹீரோயின் கேரக்டர் வைக்கணுமே என்பதற்காக மஞ்சு வாரியர் இருக்கிறார். கொள்ளைக்கு துணை போகிறார்; சண்டைக்காட்சியில் எல்லாரையும் வெறிகொண்டு சுட்டு வீழ்த்துகிறார்; ஹீரோவுக்கு அப்பப்போ அப்டேட் கொடுக்கிறார்; படத்தில் அவ்ளோதான் அவர் வேலை. மேலும் வில்லன், உப வில்லன் எல்லாம் மிக பெரிய பணக்காரர்களாகவே இருந்தாலும் டம்மியாகவே இருக்கின்றனர். எனக்கு சீனியர் மீடியா ரிப்போர்ட்டராக வரும் மைபா (பட்டிமன்றம் புகழ் மோகன சுந்தரம்) கேரக்டர்தான் இயல்பாகவும், கூலாகவும், நன்றாகவும் இருப்பது போல தோன்றியது .

பாங்க் மக்களை எப்படி ஏமாற்றி பண மோசடி செய்கிறது, சம்பாரிகிறது என நக்கலுடன் காட்சியில் சொல்லியுள்ளனர். அந்த வசனங்கள் மட்டும் ஓகே ரகம்.. ஆனால் அது தான் கதையின் மெயின் கருவாகவே இருக்கும் பட்சத்தில் அதை வெளிகொணரும் விதம் கொஞ்சம் பிரில்லியன்ட்டாக இருந்திருக்க வேண்டாமா???

கதையின் ஆரம்பம் நன்றாக வந்திருப்பது போல இருந்தாலும் இயக்குனர் வினோத் வலிமையில் சொதப்பியது போல இதிலும் சற்றே சொதப்பியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். கடைசி 15 நிமிடம் சினிமாத்தனமான காட்சிகள் தான் அதிகம்.. என்ன கதை சொன்னாலும் மக்கள் பார்த்து விடுவார்கள்; எப்படியும் படம் ஓடிவிடும் என்ற நினைப்பு தான். 

துணிந்து போய் பாருங்கள்.. படம் பரவாயில்லன்னு சொல்லிக் கொள்ளலாம் !

thunivu-varisu-movie-review

வாரிசு:
ஃபேமிலி என்டர்டைனர் என்று ஆடியோ ரிலீஸ் விழாவில் இயக்குனர் வம்சி சொல்ல,  டிரைலரில் கிட்டதட்ட சூரியவம்சம் படம் போலவே இருப்பதை கண்ட தளபதி ரசிகர்கள் இன்னொரு பீஸ்ட்டா என்று சற்றே பீதியடைந்தனர். சரத்குமார், ஶ்ரீகாந்த் (தெலுங்கு ஹீரோ), ஷாம், பிரபு, யோகிபாபு, பிரகாஷ் ராஜ், என பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளிவந்துள்ள படம், லேசான தெலுங்கு வாடை அடிப்பது போல தான் இருந்தது. இயக்குனரின் முந்தைய படமான 'தோழா' ஃபீல் குட் படம் என்பதால் அவர் மேல் கொஞ்சம் நம்பிக்கை வைத்து படத்துக்கு போனது தான் பெரிய தவறு !!!

பணக்கார அப்பா சரத்குமாருக்கு பிடிக்காத கடைசி பையன் விஜய். மற்ற இரு மகன்கள் ஶ்ரீகாந்த்தும், ஷாமும் சொத்துக்காக மோதி கொள்ள, நொடித்து போகிறது குடும்பமும் வியாபார சாம்ராஜ்யமும். அப்பா சாவதற்குள் கடைசி மகனை வாரிசாக அறிவிக்க, தளபதி எப்படி குடும்பத்தையும் சொத்தையும் மீட்டெடுக்கிறார் என்பதே வாரிசு சீரியலின் கதை.

படம் முழுக்க விஜய் அழகாகவும் ஸ்டைலாகவும் தெரிகிறார். விஜயின் நடிப்பும் ஸ்கீரன் ப்ரசென்சும் நன்றாக  இருக்கிறது. அவ்வபோது குழந்தை மாறி பேசுவது, பம்மி கொண்டு பேசுவது, உதட்டை பிதுக்குவது என மேனரிசம் பண்ணாமல் இருந்தால் நலம். பார்க்க முடியல... ஆக்ஷன் காட்சிகளில் தாறுமாறாய் சண்டை போடுகிறார். அங்கேயும் தெலுங்கு வாடை வருகிறது. 

இளைய தளபதியின் படங்களில் ஹீரோயின் வேலை எதுவோ அதை சரியாக செய்துள்ளார் ராஷ்மிகா மண்டனா. சில நேரங்களில் அவர் செய்யும் முக பாவனைகளை பார்க்க கடுப்பாக தான் இருக்கிறது. யோகிபாபு சும்மா பேருக்குதான். மற்றபடி எல்லாரும் வந்து போகிறார்கள். அம்மாவாக வரும் ஜெயசுதா அழுதே ஒப்பேற்றுகிறார்.

எப்பவுமே விஜயின் படம் சுமாராக என்றாலும் அவரின் அறிமுக பாடல் செம்ம மாஸா துள்ளலா இருக்கும். இதில் அதுவும் குறைச்சல் தான். 'தீ தளபதி' பாட்டும், 'ரஞ்சிதமே' பாட்டும் கேட்கவும், பார்க்கவும் நன்றாகவும் கலர் ஃபுல்லாகவும் இருந்தது.

படத்தில் தளபதி 'கோலங்கள்' சீரியலின் டைட்டில் சாங் பாடுவார். அப்போதே எனக்கு லைட்டா சந்தேகம் வந்திருக்கணும். முதல் பாதி மெகா சீரியலே தான். இரண்டாம் பாதியில் கொஞ்சம் ஆக்ஷன்,  குடும்பம், சென்டிமென்ட் என ஒன்று சேர்ந்து படம் சுபமடைகிறது.

இந்த படமெல்லாம் வீட்டிலேயே OTT அல்லது 'இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக' ன்னு போடும் போது பார்த்துக்கலாம்.. செலவு மிச்சம்.. கேட்டுகோங்க..அவ்ளோதான்..!

இந்த இரண்டு படத்துக்காடா இப்படி சண்டை போட்டுகிட்டீங்க?? என தல-தளபதி ரசிக பெருமக்களிடம் கேட்க வேண்டும் போல இருக்கிறது. 


நன்றி!!!
பி. விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!