செவ்வாய், 14 மார்ச், 2023

உங்க ஊரில் எது பிரபலம் ?

வணக்கம், 

நம் எல்லாருடைய ஊரிலும் ஒவ்வொரு விஷயம் பிரபலமானதாக இருக்கும். அது விரும்பி சாப்பிடும் பொருளாகவோ, விவசாய பொருளாகவோ, உற்பத்தி செய்யும் பொருளாகவோ இருக்க வாய்ப்புண்டு. அத்தகைய பொருளின் தரம், விளையும்/உற்பத்தி செய்யும் எண்ணிக்கை பொறுத்து அப்பகுதிக்கு (கிராமம்/ஊர் /நகரம்/மாநிலம்) புவிசார் குறியீடு (Geographical Indication Tag) வழங்கப்படுகிறது. இந்தியாவில் புவிசார் குறியிடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்பு) 1999-ல் இயற்றப்பட்டு, 2003 -லிருந்து அளவில் இருந்து வருகிறது. இதனால் புவிசார் குறியீடு (GI Tag) பெற்றுள்ள ஊரை தவிர மற்ற பகுதியில் அந்த பொருளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில ஊர்களுக்கு, ஒன்றிற்கும் மேற்பட்ட புவிசார் குறியிடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம்.

 மாமல்லபுரம் கற்சிற்பங்கள் 
 காஞ்சிபுரம்  பட்டு புடவை 
 ஆரணி  பட்டு 
 வேலூர்  முள் கத்திரிக்காய்
 கள்ளக்குறிச்சி மர வேலைப்பாடு பொருட்கள் (Wood Carvings) 
 சேலம்  வெண்பட்டு,
கைத்தறி 
 கருப்பூர்  கலம்காரி ஓவியம் 
 ஈரோடு  மஞ்சள் 
 பவானி ஜமுக்காளம்
 கோவை கோரா பருத்தி புடவை,
வெட் கிரைண்டர் (Wet  Grinder)
 நீலகிரி     தேயிலை (Orthodox),
தோடா சித்திரத் தையல்  வேலை (Embroidery)
 திருச்சி ஈஸ்ட் இந்தியா தோல் பொருட்கள் (EI Leather)
 நாச்சியார்கோவில் குத்துவிளக்கு 
 தஞ்சாவூர்  தலையாட்டி பொம்மை,
தஞ்சாவூர் ஓவியம்,
கலைத்தட்டுகள்,
வீணை,
நெட்டி மாலை     
 நரசிங்கப்பேட்டை  நாதஸ்வரம் 
 திருபுவனம்  பட்டு புடவை 
 அரும்பாவூர்  மரசிற்பங்கள்,
மர வேலைபாட்டு பொருட்கள் (Wood Carvings)  
 மதுரை  மல்லி,
சுங்குடி சேலை  
 கொடைக்கானல்  மலைப்பூண்டு
 பழனி  பஞ்சாமிர்தம்
 சிறுமலை  மலை வாழைப்பழம் 
 ஸ்ரீவில்லிபுத்தூர்  பால்கோவா
 விருபாக்ஷா   மலை வாழைப்பழம்
 பத்தமடை  பாய்
 செட்டிநாடு  கோட்டான்
 நாகர்கோவில் கோவில் ஆபரணங்கள்
 திண்டுக்கல் பூட்டு,
ஈஸ்ட் இந்தியா தோல் பொருட்கள் (EI Leather)
 திருபுவனம்  பட்டுப்புடவை 
 கோவில்பட்டி  கடலைமிட்டாய் 
 காரைக்குடி  கண்டாங்கி சேலை 
 இராமநாதபுரம்   குண்டு மிளகாய் 
 கன்னியாகுமரி  கிராம்பு
 ஈத்தாமொழி   நெட்டை தென்னை 
 வில்லியனுர் (புதுச்சேரி) டெரகோட்டா 
 திருக்கானுர் (புதுச்சேரி) பேப்பர் வேலைப்பாட்டு பொருட்கள் (Paper Mache Artworks)
கேரளா, கர்நாடகா, 
தமிழ்நாடு  
மலபார் மிளகு 

மேலும் மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மேக்ரூன், பண்ருட்டி முந்திரி மற்றும் பலா, கம்பம் பன்னீர் திராட்சை, உடன்குடி கருப்பட்டி, ஆத்தங்குடி பளிங்கு ஓடுகள் (Tiles), டெல்டா சீராக சம்பா அரிசி, திருநெல்வேலி அல்வா, மார்த்தாண்டம் தேன் ஆகிய பொருட்களுக்கு GI குறியீட்டுக்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் அசோகா, ராஜபாளையம் பூட்டு, தஞ்சாவூர் மரக்குதிரை ஆகிய பொருட்களுக்கு GI குறியீட்டுக்கான அனுமதி கோரப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

GI-tags-tamilnadu

இந்த பொருட்களெல்லம் எப்போதிலிருந்து செய்ய ஆரம்பிக்கப்பட்டு, எப்படி பிரபலமானது என்பதை தேடி படித்து பார்த்ததில், பெரும்பாலானவை 14-20 நூற்றாண்டு வரை ஏற்பட்ட படையெடுப்பு காலங்களில் குடிபெயர்ந்த மற்ற மாநில (இன) மக்கள் அவர்களுடைய தொழிலை இங்கு செய்ய ஆரம்பித்து மற்றவருக்கும் பயிற்றுவித்தனர். அதுவே இன்றளவும் பெரும் தொழிலாகவும் பலருக்கு வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. அதில் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

காஞ்சிபுரத்தில் சங்ககாலம் தொட்டு பட்டுபுடவைகள் நெய்யப்பட்டு வருவதாக சொல்வதுண்டு. மேலும் விஜயநகர பேரரசின் காலத்தில் ஆந்திராவிலிருந்து சாலியர் மற்றும் தேவாங்கர் ஆகிய இரு பட்டு துணி நெய்யும் சாதியினரை அழைத்து வந்து, கோவிலிகளில் உள்ள சிற்பங்களை கண்டு நூலில் கலைவண்ணம் கொண்டு பட்டுபுடவை தறிக்கபட்டது என கூறப்படுகிறது.

ஆரணியில் பட்டு நெய்தல் தொழில் 12ஆம் நூற்றாண்டு தொட்டு நடந்து வருவதாகவும்  சொல்லப்படுகிறது. அப்பகுதியில் உள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக 17 கிராமங்களில் இந்த பட்டு உற்பத்தி செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். விஜயநகர பேராசின் வீழ்ச்சிக்கு பிறகு சௌராஷ்டிரா நெசவாளர்கள் மஹாராஷ்டிரத்திலிருந்து சிலர் ஆரணி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி என குடிபெயர்ந்து பட்டு நெய்யும் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் என சொல்கிறார்கள். திருமலை நாயக்கர் காலத்தில் குடியமர்ந்த சௌராஷ்டிரா மக்கள் சேலத்து பட்டும், மதுரை சுங்குடி சேலையும் நெய்து வருகின்றனர். 

மாமல்லபுரத்தில் பல்லவ காலம் முதல் கற்சிற்பங்களுக்கும், கற்கோவில்களுக்கும், குடைவரை கோவில்களுக்கும் பிரசித்தம். அன்று தொட்டு இன்று வரை அந்த சிற்ப பாரம்பரியம் இங்குள்ள கலைஞர்களிடம் தொடர்கின்றது. இன்றும் பெரும்பாலான சிற்பக்கலைஞர்கள் உளியும், சுத்தியலும் கொண்டு தான் சிலை வடித்து கொண்டிருக்கிறார்கள்.

திப்பு சுல்தான் காலத்தில்தான் நகரின் நடுவே உள்ள கோட்டையை பாதுகாக்க திண்டுக்கல் பூட்டு தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அன்றிலிருந்து இன்று வரை பூட்டுகளும், அலமாரிகளும் செய்யப்படும் பெரும் தொழிலாக இருந்து வருகிறது. 

முந்தைய கேரளாவில் திருவாங்கூர்-கொச்சி மாகாணத்தில் உள்ள நாகர்கோவிலில் உள்ள கம்மாளர் என்ற சாதியினர் பித்தளையை உருக்கி விளக்குகள் செய்து வந்தனர். பின்னர் சரியானபடி வருவாய்  இல்லாததால் கும்பகோணத்திலும், பின்னர் நாச்சியார் கோவிலிலும் குடிபெயர்ந்து தொழிலை மற்ற மக்கள்களோடு சேர்ந்து இன்றளவும் செய்து வருகின்றனர்.  

தஞ்சையில் நாயக்கர் மற்றும் மராத்தியர் ஆட்சி காலத்தில் தங்க மூலம் பூசப்பட்ட தஞ்சாவூர் ஓவிய பாணிகள் வரைய ஆரம்பிக்கப்பட்டன. மேலும் 19ஆம் நூற்றாண்டில் சரபோஜி மன்னரின் காலத்தில் தலையாட்டி பொம்மைகள் செய்ய ஆரம்பிக்கப்பட்டு இன்றளவும் செய்யப்படுகின்றன. தஞ்சாவூர் வீணைக்கு வரலாறு புராண காலம் முதல் சொல்லப்படுகிறது. தியாகராஜ சுவாமிகளுக்கு நாரத முனிவர் ஆசி வழங்கி தரப்பட்டதாக சொல்லப்படுகிறது. பல வடிவங்களை உடைய வீணை, 17ஆம் நூற்றாண்டில் ரகுநாத நாயக்கர் காலத்தில் பொலிவு பெற்று இன்றளவும் புகழ் பெற்று விளங்குகிறது.

ஈஸ்ட் இந்தியா லெதர் (East India Leather) 1856 -ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு, அது சுதந்திரத்திற்கு பின்னரும் தொடர்கிறது. திண்டுக்கலிலும், திருச்சியிலும் தோல் பதனிடப்பட்டு தோல் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

கோவையில் 1955-ல் P.சபாபதி என்பவர் வெட் கிரைண்டர்கள் செய்யும் தொழிலை ஆரம்பித்தார். பின்னர் 1963-ல் P.B. கிருஷ்ண மூர்த்தி என்பவர் லட்சுமி கிரைண்டர்ஸ் என்ற பெயரில் தயாரிக்க ஆரம்பித்து பின்னாளில் இப்பகுதிக்கே மூலதன தொழிலாய் மாறியது.    

1914-ல் தேவ் சிங் என்னும் ராஜபுத்திரர் ஸ்ரீவில்லிபுதிரில் ஆண்டாள் கோவிலருகே லாலா ஸ்வீட்ஸ் என்ற கடையில் கோவிலிருந்து வரும் பிரசாதம் பால், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து பால்கோவா செய்து விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். பின்னர் 1970-ல் ஏற்பட்ட வெண்மை புரட்சிக்கு பிறகு பால் கூட்டுறவு சங்கமும், உள்ளூர் பால் உற்பத்தியாளர்களும் சேர்ந்து பால்கோவா செய்யும் தொழிலை ஆரம்பித்து இன்று வரை செய்து வருகின்றனர்.
  
நாகர்கோவிலில் கோவில் ஆபரணங்கள் செய்யும் தொழில் கிட்டத்தட்ட 9ஆம் நூற்றாண்டு முதல் செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இன்றளவும் 350 குடும்பங்கள் பாரம்பரிய முறையில் நகைகள் செய்து வருகிறார்கள்.

பல நூற்றாண்டுகளாக பத்தமடையில் பாய் பின்னும் தொழில் நடந்து வருகிறது. தாமிரபரணி ஆற்றங்கரையோரம் முளைத்திருக்கும் கோரை புற்களை கொண்டு பாய் தயாரிக்கும் முறை இருந்து வருகிறது. இதை கோரைப்பள்ளர் என்ற சமுகமே இதை செய்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பின்னர் 16/17 நூற்றாண்டுகளில் கிட்டத்தட்ட எல்லோரும் இஸ்லாமிய மதம் தழுவியதாக சொல்லப்படுகிறது. சிலர் பத்தமடையில் சயீத் கலீபா மீரான் என்ற லப்பை இன இஸ்லாமிய மத போதகரால் கோரைப்புல்லில் பாய் தயாரிக்கும் தொழில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நூற்றாண்டுகளாக பட்டு பாய்கள் செய்யும் தொழில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

1940-ல் பொன்னம்பல நாடார் என்பவர் கோவில்பட்டியில் அவரது மளிகை கடையில் வெல்லம் மற்றும் கடலை சேர்ந்து மிட்டாய் செய்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். இன்று பல இடங்களில் இதே பாணியில் கடலை மிட்டாய்கள் சுவையுடன் செய்யப்படுகிறது. இக்கடலைமிட்டாய்க்கு தாமிரபரணி ஆற்று தண்ணீரின் சுவையும் ஒரு காரணம் என்று சொல்கின்றனர்.     

இது போல இன்னும் பல பிரபமலமான பொருட்கள் நம் பாரம்பரியத்துக்கும், திறமைக்கும், உழைப்புக்கும், நம் தமிழ்நாட்டின் பெருமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தகவல்கள் - கூகிள், விக்கிபீடியா, Geographical Indication Registry   


நன்றி !!!
பி. விமல் ராஜ் 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

2 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான தேடல்... தகவல்கள் தொகுப்பு சிறப்பு...

விமல் ராஜ் சொன்னது…

@திண்டுக்கல் தனபாலன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!