புதன், 3 மே, 2023

வர்கலா என்னும் கடல் சொர்க்கபுரி!

வணக்கம்,

வெயில் சுட்டெரிக்கிறது. சித்திரை வெயிலும் அலுவலக வேலைகளும் மண்டையை பிளக்க, கோடை  விடுமுறைக்கு எங்காவது செல்லலாம் என யோசித்தோம். இம்முறை கடற்கரை நகருக்கு செல்லலாம் என எண்ணி, நீண்ட நாள் செக்-லிஸ்டில் உள்ள வர்கலாவை டிக் செய்தோம். வர்கலா பற்றியும், நான் கண்டு ரசித்ததையும் இங்கு பகிர்கிறேன்; படித்து மகிழுங்கள்.

வரலாறு-
வர்கலாவின் பெயர் புராண கதைகளின்படி காரணம் சொல்லப்படுகிறது. அது இப்போது நமக்கு தேவையில்லை. வர்கலாவில் கடற்கரைக்கு அருகில் இயற்கையாகவே அமைக்க பெற்றுள்ள செந்நிற பாறைகளும், மலைக்குன்றுகளும் (cliffs) தான், இவ்விடத்திற்கு தனித்தன்மையையம் பெருமையும் சேர்க்கிறது. 23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வண்டல் செம்மண் பாறைகளால் ஆன இக்குன்றுகளை 'Varkala Formation' என்று புவியியல் அறிஞர்கள் சொல்கின்றனர். இது அரபிக்கடலில் அமைந்துள்ள cliff beachகளில் முக்கியமானதும் அழகானதும் ஆகும். குதூகல நகரமான கோவாவிலும் இது போன்ற cliff beachகள் இருக்கிறது. வர்கலாவை 'மினி கோவா' என்றும் 'தென்னிந்தியாவின் கோவா' என்றும் 'அரபிக்கடலின் முத்து' என்றும் பெருமையாய் சொல்வதுண்டு. 2005-ல் ஸ்ரீ நாராயண குரு (கேரளாவின் ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி) அவர்களின் மறைவுக்கு  பின், இங்குள்ள ரயில் நிலையம் வர்கலா சிவகிரி என்று அழைக்கப்படுகிறது. 2015-ல் இந்திய புவியியல் ஆய்வு மையம் (Gelogical Survey of India), வர்கலாவை தேசிய புவியியல் நினைவுச் சின்னமாக (National Geological Monument) அறிவித்தது.

வர்கலா - கேரளா மாநிலத்தில் திருவானந்தபுரத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் இருக்கும் ஓர் அழகிய கடற்கரை நகரம். திருவானந்தபுரத்திலிருந்தும் கொல்லம் நகரிலிருந்தும் வர்கலாவிற்கு பஸ்ஸிலோ/ காரிலோ ஒன்றரை மணி நேரத்தில் செல்லலாம்.  சென்னையிலிருந்தும் மற்ற மாவட்டங்களிலிருந்தும் ரயில்கள் தினசரி வந்து செல்கின்றன. வர்கலா டவுன் மற்ற எல்லா ஊரையும் போல எந்த ஒரு சலசலப்பும் இன்றி அமைதியாய் இருக்கின்றது. இங்கு எல்லா முக்கிய கடைகளும், அலுவலகங்களும், வீடுகளும், குடியிருப்புகளும் டவுனில் தான் இருக்கிறது. ATM சென்று பணம் எடுக்க வேண்டுமானாலும், மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானாலும் வர்கலா டவுனுக்கு தான் வரவேண்டும். மேலும் 2000 ஆண்டு பழமையான ஜனார்த்தன சுவாமி கோவிலும், 17ஆம் நூற்றாண்டு போர்த்துகீசிய அன்ஜெங்கோ கோட்டையும் இங்குள்ளது.

வர்கலா டவுனிலிருந்து 3 கி.மீ தூரத்தில் மலைக்குன்றுகளும் கடற்கரையும் இருக்கின்றது. மற்ற கடற்கரை நகரை போலவே இங்கும் பல கடற்கரைகள் இருக்கிறது. Kappil beach, Black sand beach, Papanasam beach, Odayam  beach என பல இருக்கிறது. அனைத்துமே ஒரே வரிசையில் ஒன்றாய் இருக்கின்றது. கடற்கரையை ஒட்டிய மலைகுன்றுகள் (cliffs) வளைவான தோற்றத்தை கொண்டுள்ளது. அதாவது ஒரு முகட்டில் பார்த்தல் முழு மலைத்தொடரும் 'நெக்லெஸ்' போல வளைந்து இருக்கும். 

Varkala-beach

குன்றுகளின் உச்சியை ஒட்டி ஒரு கடைசியிலிருந்து மறுகடைசி வரை கடைகளும், தங்குமிடங்களும் (resort), உணவு விடுதிகளும் (restaurant) வரிசைகட்டி இருக்கின்றது. எல்லா ரிசார்ட்களும் மலைக்குன்றின் cliff முகட்டில் தான் இருக்கிறது. அதனால் பெரும்பாலான ரிசார்ட்களில் அறையிலிருந்தோ அல்லது வெளியே பால்கனி வழியே பார்த்தாலே கடல் காட்சியளிக்கிறது. அதுவும் முதல்/இரண்டாம் மாடி என்றால், பரந்து விரிந்த கடலின் காட்சி அகல கோணத்தில் தெளிவாய் தெரிகிறது. நாங்கள் தங்கியிருத்த அறையின் வெளியே உள்ள திண்ணையின் அருகே வந்து பார்த்தாலே கடல் தெரிந்தது. கண்ணை மூடி கடலின் அலையோசையை கேட்பது தியானத்தை  விட பெரிது. மேலும் காலை எழுந்தவுடன் அலைக்கடலின் ஓசையோடு கடலையும், காபியையும் ரசிப்பது அலாதியான இன்பம்! கூகிள் மற்றும் பிற வலைத்தளங்களில் தங்குமிடங்களை பற்றி தீர தேடி அலசிய பின் அறையை பதிவு செய்வது உசிதமானது.   

Varkala-seashore

கடைகளில் பெரும்பாலும் வெளிநாட்டினரையே குறிவைப்பது போல இந்தயாவின் கலை பொருட்களை மைய வியாபாரமாக வைத்துள்ளனர். காஷ்மீரி புடவை/ ஷால்/ கம்பளிகள், திபெத்திய துணிகள்/பாத்திரங்கள், சின்ன சின்ன வெண்கல சிலைகள்/ பொம்மைகள், மரத்திலான கலைப்பொருட்கள், தோல் பைகள், காதி பொருட்கள் என அனைத்தும் விற்கப்படுகின்றன. மூலிகை பொருட்கள், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் அணிகலன்கள் (வெள்ளி, கிரிஸ்டல், நவரத்தினம், சிலிகா மற்றும் ஆடம்பர அழகு கற்கள் போன்றவற்றால் செய்யப்பட்டவை) ஆகியவையும் விற்கப்படுகின்றன. இவையனைத்துக்கும் யானை விலை, குதிரை விலை சொல்கிறார்கள். ஆரம்ப விலையே 2000க்கு மேல் தான். இதை தவிர காட்டன், லினனில் செய்த ஆண் பெண் துணிமணிகள், ஜூட் பைகள், சிறிய அலங்கார பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், கழுத்தில் போடும் மணிகள் என சாமான்யர் வாங்கும் விலையிலும் பொருட்கள் இருக்கிறது. பெரும்பாலான கடைகளை திபெத்திய மக்களும், வடகிழக்கு மக்களும், வடஇந்திய மக்களுமே வைத்து நடத்துகின்றனர். வெகுசில கடைகளில் தான் சேட்டனின் மலையாளம் வருகிறது. மற்றவர்கள் ஆங்கிலத்தில் தான் பேசுகின்றனர். மலையாளமோ/தமிழோ அங்குள்ள பலரும் புரிந்து கொள்வது சற்றே சிறப்பு.    

இரண்டு கடைகளுக்கு ஒரு கடை காபி கடையும் (கஃபே), ஓட்டல்களும் இருக்கின்றது. பெரும்பாலும் சைனீஸ் உணவுகள், பராத்தா, நான், ரொட்டி, பர்கர், பீட்சா, மோமோ, சிக்கன், மீன், ஆகியவை கிடைக்கிறது. வெஜ் பிரியர்களுக்கு மிகவும் சொற்பமாக தான் உள்ளது. நம்மவூர் இட்லி, தோசை, சாதா மீல்ஸ் எல்லாம் ஏதாவது ஓரிரு கடையில் கிடைத்தால் பெரிதினும் பெரிது. இரவு நேரத்தில் எல்லா ஓட்டல்களிலும் வாசலில் சுட சுட கடலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களை காட்சிப்படுத்தி, உணவுக்கு தயார் செய்து கொடுக்கிறார்கள். மினி கோவா என்றதும் எல்லா கடைகளிலும் சரக்கு இருக்கும் நினைத்து கொண்டு வருவோர்க்கு ஏமாற்றம் நிச்சயம். ஒரு சில ரிசார்ட்களிலும், ஓட்டல்களிலும் மட்டுமே விற்கப்படுகிறது. பல இடங்களில் காலி பாட்டில்களை நம்மால் காண முடிகிறது. இரவில் எல்லா கடைகளும் விளக்கொளியில் பளபளவென கலர்கலராய் மின்னிகொண்டிருக்க, எதிரே கரும் இருட்டில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் சிறு சிறு வெளிச்ச புள்ளிகளாய் கடலில் படகுகள் தெரிந்து கொண்டிருந்தன. 

Varkala-shopping

குன்றின் விளிம்பில் சிறிய இரண்டடி கல் சுவர்/மரப்பலகை தடுப்புகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. அங்கங்கே கடலையும், கடற்கரையையும் பார்த்து ரசிக்க வியூ பாயிண்ட்களும், செல்பி பாயிண்ட்களும் உண்டு. மலையின் எந்த பக்கம் இருந்தாலும் கடலும் கடற்கரையும் தெரியும். எப்போதும் கடல் சீற்றத்தில் அலறி கொண்டே இருக்கிறது. சாதாரணமாக கரையிலிருந்து கடலை பார்த்தாலே நம் கண்பார்வையில் கிட்டத்தட்ட 4.5 கி.மீ தூரம் வரை பார்க்க முடியும் (நேரம், வெளிச்சம் மற்றும் சீதோஷ்ணம் பொறுத்தது). ஆனால் 80 அடி உயரமுள்ள வர்கலா மலை குன்றுகளின் மேல் நின்று அரபி கடலை கிட்டத்தட்ட 15 கி.மீ வரை பார்க்கலாம் (என் அனுமானம் தான்!). தூரத்தில் போகும் பெரிய சிறிய கப்பல்கள், அங்கங்கே மிதக்கும் மீன் பிடி படகுகள், வானில் நமக்கு அருகில் பறக்கும் கழுகுகள் என ரம்மியமான காட்சிகளை பார்க்க முடியும். அதுவும் காலையிலோ/மாலையிலோ வெயில் தாழ இருக்கும் போது நாமும் இயற்கையோடு இயற்கையாக ஒன்றி விடுவோம். உச்சி வேளையின் போது  சூரியன் கடலில் பட்டு, கடல் தங்க நிறத்தில் தகதகவென ஜொலித்து கொண்டிருக்கும். நங்கள் சென்ற போது வெயில் கடுமையாக இல்லாமல் அவ்வப்போது நல்ல (கன) மழை பெய்து நம்மை குளி(ர்)வித்தது. 

Varkala beach

மலை முகட்டிலிருந்து கீழே கடற்கரைக்கு வர சில இடங்களில் படிக்கட்டுகள் இருக்கின்றது. மலைகுன்றுகளின் அடிபாகத்தை கடல் நீர் அரிக்காமல் இருக்க படிக்கட்டுகளின் முடிவில் (குன்றின் அடிப்பகுதியில்) பாறைக்கற்கள் போடப்பட்டுள்ளன. அதிலிருந்து சில அடிதூரத்திலேயே கடல் அலைகள் நம்மை வரவேற்கிறது. சில சமயத்தில் அலைகள் இப்பாறைகள் வரை வந்து முட்டி மோதி, சுற்றுலா பயணிகள் போட்டு வைத்திருந்த செருப்புகளை கவர்ந்து செல்கின்றன. மற்ற கடற்கரை காட்டிலும் இங்கு அலைகள் சற்றே ஆக்ரோஷமானதாய் இருப்பதை போல எனக்கு தெரிந்தது. அந்த நீண்ட கடற்கரை முழுவதும், ஆங்காங்கே மக்கள் கரையிலிருந்தும், சற்றே தள்ளி கடலிலும் சென்று குதித்து அலையோடு விளையாடி, குளித்து, களித்து கொண்டிருந்தனர். சில ஆபத்தான இடங்களில் முக்கோண சிகப்பு கொடி நடப்பட்டிருந்தது; அதை தாண்டி செல்வது அவரவர் பொறுப்பும் விருப்பும். ஓர் குறிப்பிட்ட உயரமான இடத்தில், அவசர உதவி மீட்பு குழுவை சேர்ந்த நபர் (Emergency Rescue Person) கலர் குடையின் கீழ் அமர்ந்து கொண்டு தூரத்தில் (ஆழ்) கடலில் நீந்த செல்பவர்களை விசில் போட்டு தடுத்து கொண்டிருந்தார். மற்றபடி வேறு எந்த முதலுதவி சாதனமோ, மற்ற பொருட்களான structure, மிதக்கும் மிதவைகள், safe jacketகள், speed boat போன்றவை இருந்த மாறி தெரியவில்லை. 

கரையில் ஒரு ஓரத்தில் sea surfing என சொல்லப்படும் கடலில் மிதக்கும் விளையாட்டு, சுற்றுலா பயணிகளுக்கு பயிற்சியாளர் மூலம் பயிற்சி தரப்பட்டு கொண்டிருந்தது. கடல் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே இந்த விளையாட்டிற்கு செல்வது நல்லது. காயக்கிங் (kayaking) போன்ற படகு விளையாட்டும் உண்டு என சொன்னார்கள். அனால் எங்கே நடக்கிறது என தெரிந்து கொள்ள முடியவில்லை. நான் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்த பாரா கிளைடிங் (Para Gliding) தற்போது சீசன் இல்லாதால் போக முடியவில்லை. அதில் கொஞ்சம் வருத்தம் தான்.

ஏற்கனவே சொன்னது போல முழு நீள கடற்கரையையும் நாம் நடந்தே கடக்கலாம். அப்படி நடந்து செல்லும் போது மீனவர்கள் (வேலைசெய்யும்) வலைபோடும் இடமும், அதையும் தாண்டி சென்றால் கருப்பு நிற கடற்கரை மண்ணையும் காணலாம். ஒர் இடத்தில சிகப்பு கொடியை தாண்டி சென்றாலோ அல்லது மலைக்குன்றின் மறுபக்கத்தில் உள்ள படிக்கட்டுகளின் மூலமாகவோ மறுபக்க கடற்கரைக்கும் செல்லலாம். 

வர்கலாவில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலமே பீக் சீசன் என சொல்கிறார்கள். இப்போது ஏப்ரலில் நாங்கள் சென்றது off-season என்றாலும், மிதமான கூட்டமும், இதமான வானிலையும் இருந்ததால் நிம்மதியாய் சென்று வர முடிந்தது. கடலையும் கடற்கரையையும் ஆறு முதல் அறுபது வயது வரை எல்லோருக்கும் பிடிக்கும். அவ்வளவாக பிடிக்காதவர்கள் கூட இங்கே வந்தால் சில மணிநேரத்தில் சொக்கி போய் குதூகலிப்பார்கள். மொத்தத்தில் கடலும் கடல் சார்ந்த இடமும் பிடித்தவர்களுக்கு வர்கலா ஓர் அருமையான சொர்கபுரியாக இருக்கும் என்றே சொல்ல வேண்டும். 


நன்றி!!!
பி. விமல் ராஜ் 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!