சனி, 21 அக்டோபர், 2023

லியோ - விமர்சனம்

வணக்கம்,

மாநகரமும் கைதியும் ஹிட்டடித்து, விக்ரம் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டமையால், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ படம் மிகுந்த எதிர்பார்ப்புக்குள் எப்போதோ வந்துவிட்டது. படத்தின் ஒவ்வொரு அப்டேட் வரும் போதும், இப்படம் கண்டிப்பாக LCU -குள் தான் வரும் என பல திரை விமர்சகர்கள் டிகோடிட்டு கொண்டிருந்தனர். மேலும் படக்குழு விட்டுக் கொண்டிருந்த போஸ்டர் அப்டேட்டுகளால் திக்குமுக்காடி போனது சினிமா/விஜய் ரசிகர்கள் கூட்டம். ஜெயிலர் பட வெற்றியை முந்திவிட வேண்டும் என்பதில் தயாரிப்பு தரப்பு மிகுந்த கவனத்துடன் இருப்பதை சமூக வலைத்தளங்களிருந்தும், லோகேஷின் பேட்டிகளிலிருந்தும் அறிய முடிந்தது.

தளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் என பல பல நட்சத்திர பட்டாளங்களுடன் வெளிவந்துள்ளது லியோ. இதை தவிர LCU சீரிஸில் வரும் மற்ற நடிகர்களும் இருக்கிறார்கள் என்ற  பேச்சும் அடிபட்டது. ஒரு பிரமாண்ட படம் அல்லது எதிர்பார்ப்புக்குரிய படம் என்று சொல்ல வேண்டுமாயின், இது போல பெரிய பட்டாளங்களுடன் கதை பண்ணுவதும் இப்போது பேஷனான ஒன்றாகிவிட்டது. உண்மையிலேயே அவர்களெல்லாம் கதைக்கு தேவையா இல்லையா என்பதெல்லாம் இங்கு தேவையில்லை. எப்படி இயக்குனர் ஷங்கர் படத்தில் சாலமன் பாப்பையா நீதிபதியாக (பாய்ஸ்) /பக்கத்துக்கு வீட்டுகாரராக (சிவாஜி) ஒரு சீனுக்கு வருவாரா அது போல தான் இந்த நட்சத்திர கூட்டமும். 

Leo-movie-review

முதல் சிங்கிள் ட்ராக் "நான் வரவா.."வில் விஜய் சிகரெட் பிடிப்பதை பெருமையாக சொல்கிறார் என சில கோஷ்டிகள் வரிந்துகட்ட ஆரம்பித்தன. டிரைலரில் விஜய் பேசிய (கே)கெட்ட வார்த்தை மீண்டும் சர்சையாக பேசப்பட்டு, படத்திற்கு மேலும் விளம்பரத்தை கூட்டின. இந்த கோஷ்டியெல்லாம் மற்ற படங்கள் வரும் போது எங்கே போனது என தெரியவில்லை. ட்ரைலர் ரிலீஸின் போது தியேட்டரை நாசமாக்கியது, ஆடியோ லான்ச் இல்லை என முடிவெடுத்தது, 4 மணி காட்சி அனுமதி இல்லை என தடை போட்டது என எல்லாமே படத்துக்கு ப்ரமோஷன் ஆகி போனது மேலும் ஹைப்பை கூட்டிவிட்டது. மற்ற படத்தை காட்டிலும் லியோவிற்கு டிக்கெட் டிமாண்ட் கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருந்தது எல்லோராலும் பார்க்க முடிந்தது.

ட்ரைலரிலேயே லேசாக கதை புரிவது போல தான் இருந்தது. ஹிமாசலத்தில் மனைவி திரிஷா, மகன், மகளுடன் சந்தோஷமாக காபி ஷாப் நடத்தி வருகிறார் பார்த்திபன்(விஜய்). ஒரு பிரச்சனையில் அவரது காபி ஷாப்பில் ஒரு சைக்கோ வழிப்பறி கும்பலிடம் சண்டையிட்டு அவர்களை சுட்டு கொள்வதில் ஆரம்பிக்கிறது விஜய்க்கு பிரச்னை. அது பெரும் செய்தியாகி நாட்டின் மற்ற மாநிலத்தில் உள்ள ரவுடி தாதாக்களுக்கு தெரிய வர, தளபதியை லியோ என சொல்லி தேடி வருகிறது சஞ்சய் தத், அர்ஜுன் கேங். பிளாஷ்பேக்கில் லியோவின் கதையை சொல்ல, உண்மையிலேயே அவர் கடத்தல்/கொலைகாரன் லியோ வா? அல்லது பார்த்திபன் தானா என்று நமக்கும் வில்லன் கோஷ்டிக்கும் சொல்லி புரிய வைப்பது தான் படத்தின் மீதி கதை !

படம் முழுக்க விஜய் Middle-aged man ஆக இருந்தாலும் பாடி fit ஆக வைத்துள்ளார். என்ன.. தலையை மட்டும் கொஞ்சம் சீவியிருக்கலாம். ஆங்காங்கே தளபதியின் நடிப்பும், ஹீரோயிசமும் மிளிர்கிறது. கதைக்கு ஏற்றவாறு நடித்தும் உள்ளார். வெறிக்கொண்டு அலறும் போதும், ஆக்ரோஷமாக சண்டையிடும் போதும், உடைந்து அழும் போதும், குடும்பத்துக்கு ஏதும் ஆகிவிட கூடாது என்னும் படபடப்பிலும் மிறுக்கேறிய முகபாவங்களை காட்டியுள்ளார். அவருடைய ரெகுலரான பாடி லாங்குவெஜ், மனரிசம் என்ற பெயரில் செய்யும் எதையும் இதில் செய்யாமல் இருந்தது நன்று! படம் முழுக்க முக்கால்வாசி சண்டைக்காட்சிகள் தான். எல்லோரையும் அடித்து, மண்டையை/தாடையை உடைத்து, முகரையை கிழித்து தொங்க விடுகிறார். ஹீரோயின் திரிஷா ஓரிரு சீனுக்கு மட்டும் வராமல் படம் முழுக்க வந்து அப்பப்போ ரொமான்ஸும், விஜய்க்கு ஆறுதலும் சொல்கிறார். அவரது நண்பர் கெளதம் மேனன் வனசரக அதிகாரியாக படம் முழுக்க வந்து ஹீரோவிற்கு உதவுகிறார்.

பெரும் போதை வியாபாரியாக வரும் சஞ்சய் தத் வில்லனாய் ஒன்றும் மிரட்டவில்லை. அர்ஜுனுக்கும் நடிக்க பெரிய ஸ்கோப்போ/சீனோ இருக்கவில்லை. அவரையும் கொஞ்சம் கெத்தாக, மாஸாக காட்டியிருக்கலாம். அனுராக் காஷ்யப் என்னும் அருமையான நடிகரை ஒரு சீன், ஒரு டயலாக்கில் கொன்று விடுகின்றனர். பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டின், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், மிஷ்கின் என பலரும் சீனில் வந்து போகின்றனர். மன்சூர் அலி கான் பிளாஷ்பேக் சொல்ல ஒரு சீனுக்கு வந்து செல்கிறார். லியோவின் பிளாஷ்பேக் நறுக்கென சின்னதாய் இருந்தாலும், முறுக்கு போல இல்லாமல் சவசவ என பிசுபிசுத்து இருந்தது கொஞ்சம் ஏமாற்றம் தான்.

LCU கனெக்ட் எப்படி, எந்த சீனில் வரும் என்று எதிர்பார்க்கையில், கான்ஸ்டபிள் நெப்போலியன் வந்து சில காட்சிகள் அதகள படுத்தி போகிறார். முதல் பத்து நிமிடம் வரும் hynea fighting scene விறுவிறுப்பாக இருந்தது; எனக்கு பிடித்திருந்தது. பின்பாதியில் 'சுப்பிரமணி'யை உதவிக்கு அழைக்கும் சீன், சின்ன சர்பிரைஸ் போல இருந்தது. மற்றபடி Goosebump scene என எதுவுமே இல்லாதது என்பது ஒரு பெரும் குறை. முதல்பாதி விறுவிறுப்புடன் அதிரிபுதிரியாய் முடிய, பின்பாதி வளவள என்று இழுத்து கொண்டே போனது சற்றே சலிப்பை தருகிறது. இயக்குனர் லோகேஷ், ஒரு மல்டி-ஸ்டாரர் கமர்சியல் படத்துக்கு வெறும் ஆக்ஷன் மற்றும் மசாலா மட்டும் போதும் என நினைத்து விட்டார் போலும்.

பாடல்கள் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. "நான் வரவா.." பாடல் ரசிகர்களுக்காகவே சொருகி சேர்க்கப்பட்டுள்ளது. "அன்பென்னும்" பாட்டு சுமார் ராகம் தான். "Badass மா...." பெரிசா ஒன்னும் இல்லமா...

லியோ விஜய்க்கு மேலும் ஒரு பிளாக் பஸ்டர் தான். 1000 கோடி தொடுமா என்றால் அது சந்தேகம் தான். ஆனால் ஏற்கனவே முதல் இரு நாள் கலெக்ஷன் 200C என சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். லியோ காலத்தை வென்ற ரசனை-யாய் ஆகியிருக்க வேண்டிய படம்; ஆனால் வெறும் hype, commercial, சொதப்பல் திரைக்கதை என சாதாரண விஜய் படமாக போனது கொஞ்சம் வருத்தம். கிளைமேக்ஸில் LCU Connectக்கு முத்தாய்ப்பாக Agent விக்ரமின் வாய்ஸ ஓவர் வருவது, பின் வரும் பார்ட்களில் இவர்கள் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
என்னை பொறுத்தவரை, Keep Calm and Watch the Movie One time ! அந்த அளவு மோசம் இல்லனாலும் It's Bloody Sweet தான்!


நன்றி!!!
பி. விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!