வெள்ளி, 14 அக்டோபர், 2022

நடு சென்டரில் நிற்போம்!

வணக்கம்,

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எல்லோருக்கும் அவரவருடைய கருத்துக்களை பொதுவெளியில் சொல்ல முடியும். சொல்லும் கருத்துக்களுக்கு ஏற்றார் போல அதன் எதிர்வினைகள் வரும். சில சமயம் பெரிதாகவும், சில சமயம் அற்பமாகவும் இருக்கும். இதைதான் நாம் இத்தனை ஆண்டுகளாக பார்த்து/கேட்டு வருகிறோம்.   

முன்பெல்லாம் வலதுசாரியோ அல்லது மதவாத கட்சிகளோ பேசுவதை கேட்கும் போது சற்றே முகசுளிப்பு உண்டாகும். இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் போகட்டும்; மசூதிகளை இடித்து எல்லா கோவில்களையும் மீட்போம்; நாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள்; நாடு முழுவதும் ஒரே மதம், ஒரே மொழி என அவர்கள் சொல்வதை கேட்கும் போது 50 ஆண்டுகளாய் திராவிட சிந்தனைகளை கொண்ட ஒரு மாநிலத்து மக்களின் மனம் எப்படி வெறுப்படையும் என்பது எல்லோருக்கும் தெரியும்.    

hindutva-dravidam


ஆனால் இப்போதெல்லாம் இடதுசாரி மற்றும் திராவிட சிந்தனை கருத்துக்களை பற்றி சிலர் பேசும்/  போது என்னடா இது... இவர்களும் இப்படி ஆரம்பித்து விட்டார்களே என கோபம் தான் வருகிறது. அதில் ஒரு சில... 

இராஜராஜ சோழன் தமிழ் மன்னர். சைவ மதத்தை கடைப்பிடித்தவர். அவரை இந்து மன்னனாய் காட்ட முயல்கிறார்கள் சிலர் சொல்வதும், எனக்கு வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருக்கிறது. சைவமும் வைணவமும் சேர்ந்தது தான் இன்றைய இந்து மதம் என எல்லோருக்கும் தெரியும். சோழர் காலத்தில் இந்து என்ற வார்த்தையோ, இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது தான். ஆனால் சைவரும், வைணவரும் கும்பிட்ட அதே சிவனும் பெருமாளும் தான், இன்று இந்து மதத்தில் வணங்கப்படுகிறார்கள். பிறகு எல்லாம் ஒன்று தானே! இந்து மன்னனையும், சைவ மன்னனையும் எப்படி இவர்கள் பிரித்து வித்தியாசம் காட்டுவார்கள் என தெரியவில்லை. அடுத்த சில நாட்களில், விடுதலைக்காகவும், வாடிவாசலுக்காகவும் இவர்களுக்கிடையில் நிற்க வேண்டிவரும் என்று  யோசிக்காமல் வார்த்தையை விட்டுவிட்டு நிற்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.    

அதே போல தெலுங்கு படமான RRR-ல் படத்தில் ஒரு காட்சியில் இராமர் சிலையையும், இராமரை போல கதாநாயகன் வேடம் பூண்டு வில்லன்களை அழிக்கிறார் என காட்டியுள்ளனர்.  இன்னொரு படமான பாகுபலியில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போலவும் வரும். அதை வைத்து இது இந்துத்வா கொள்கை பரப்பும் படம் என சொல்லி மட்டம் தட்ட ஆரம்பித்துவிட்டனர் சிலர். தீண்டாமை மற்றும் சாதி கொடுமைக்கு ஆதரவாகவோ, சமூக நீதி எதிராகவோ பேசினால் மட்டுமே சொல்ல வேண்டியதை இராமனும், சிவனும் இருந்தாலே அதை சங்கி படம் என சொல்லி சிங்கி அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

பாரத இதிகாசங்களான ராமாயணமோ/ மகாபாரதமோ இங்கு நடக்கவே இல்லை; அவையாவும் பொய் புரட்டு என சொல்லி கொள்பவர்கள், இராமாயணத்தில் வரும் இலங்கேஸ்வரனான இராவணன் தமிழ் மன்னன் என்று சொல்கின்றனர். இராவணன் வடநாட்டில் உள்ள ரிஷி ஒருவரின் மகன் என புராணம் சொல்கிறது. குபேரனை வீழ்த்தி இலங்கையை கைப்பற்றினான் இராவணன் என்றே சொல்கின்றனர். இதெல்லாம் உண்மையா பொய்யா என்று கூட எனக்கு தெரியாது. கற்பனை கதையான இராமாயணதில் வரும் இராவணன் மட்டும் எப்படி உண்மையான தமிழ் மன்னன் ஆவான் என தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் இராமாயண போர் என்பது ஆரியருக்கும், திராவிடருக்கும் நடந்த போர் என்றும் சொல்லி வருகின்றனர்.    

ஒரு திராவிட சிந்தனை கொண்ட யூடியுப் சேனல் கந்த ஷஷ்டி பாடலையும், நடராஜர் ஆடலையும் பற்றி பகுத்தறிவாய் விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என கொச்சையாய் பேசி வாங்கி காட்டி கொண்டது. முதலாமவர் கைது செய்யப்பட்டார், இரண்டாமவர் இன்னும் கைதாக செய்யப்படவில்லை. 

சில நாட்களாய் திராவிட கட்சிகள், சிந்தனைவாதிகளின் செயல்கள் இப்படித்தான் இருக்கிறது. இச்செயல்களால் இந்துதுவாவையும் அதன் கொள்கைகளையும் பிடிக்காதவர்கள் கூட சில நேரங்களில் அவர்களுக்கு ஆதரவாக அல்லது இவர்களுக்கு எதிராக பேச ஆரம்பித்து விடுவார்கள். வார்த்தைக்கு வார்த்தை நாங்கள் இந்துக்களுக்கு விரோதியல்ல என சொல்லிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக விரோதிகளாய் தெரிய ஆரம்பிக்கிறார்கள். ஆகவே திராவிட மக்களே, சிந்தனைவாதிகளே, இடதுசாரி கொள்கை பிடிப்புள்ள அரசியல்வாதிகளே... நீங்கள் ஒரேடியாய் அந்த பக்கமும் இல்லாமல், இந்த பக்கமும் இல்லாமல் நடு சென்டரில் கவனமாய் நில்லுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மாநிலங்களில் அடியெடுத்து வைத்து நாட்டை ஆக்கிரமிப்போருக்கு, இது போன்ற செயல்களால் நம் தமிழ் நாட்டிலும் சிவப்பு கம்பளமிட்டு வரவேற்பது போல ஆகிவிடும். ஒட்டகம் கூடாரத்துக்குள் ஒருமுறை வந்துவிட்டால், பின்பு அதை விரட்டவே முடியாது; நாம் தான் கூடாரத்தை பிரித்து கொண்டு வேறு இடதிற்கு செல்ல வேண்டும்.

முழுவதுமாய் எழுதிய பின்னர் நானே இந்த பதிவை மீண்டும் படிக்கும் போது, லேசான பலமான வலதுசாரி வாடை அடிப்பது போல தான் இருந்தது. ஆனாலும் இக்கருத்தை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. 


நன்றி!

பி.விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!