ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

தீர்ப்புகள் திருத்தபடலாம் - இன்று இவர் !!! நாளை ???

வணக்கம்,

நேற்று காலை பத்து மணிக்கு மெதுவாய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஆரம்பித்த அறப்போராட்டங்கள், மதியத்தை தாண்டும் போது உச்சத்தை தொட்டது. பொதுமக்கள் பலரும் சரியான நேரத்தில் வீடு போய் சேர முடியவில்லை. வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை செய்பவர்களும், படிப்பவர்களும், அவர்களது குடும்பத்தினருக்கு ஒருவரை ஒருவர் போன் செய்து நிலைமையை விசாரித்து கொண்டனர். சிலர் வீட்டுக்கு கூட போகமுடியாமல், அருகில் உள்ள தெரிந்தவர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இப்போது  நிலைமை மெல்ல மெல்ல சீராகி கொண்டிருக்கிறது.

நேற்று நடந்த சம்பவம் ஒன்றும் புதிதல்ல. இதே போல் முன்னொரு முறையும் நடந்துள்ளது. அப்போது இதை விட பயங்கரமான கலவரங்களும், பேருந்து எரிப்புகளும் நடந்துள்ளது. பல சமயங்களில் இவ்வாறு பொது சொத்துகள் எரிந்து எலும்பு கூடாய் ஆனதை,  நாமும் கண் கூடாய் பார்த்துள்ளோம். அரசியல் பெரும் புள்ளிகள் கைதின் போது, இம்மாதிரி கடையடைப்பு, பொது சொத்து சேதம் செய்வது போன்ற சம்பவங்கள் நடப்பது நமக்கு சாதாரணமான செய்தி தான்.


சில வருடங்களுக்கு முன், ஆயிரக்கணக்கில் பட்டு புடவைகளும், கிலோ கணக்கில் தங்க வைரமும்,  ஆயிரக்கணக்காண ஏக்கரில் நிலமும்  ஊழலில் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை நாம் செய்திகளில் பார்த்திருப்போம். மலைகளை வளைத்து போட்ட வழக்கில் சிறைக்கு சென்று சில நாட்களில் குற்றமற்றவர் என்று வெளியே வந்தார். ஆனால் மீண்டும் அவர்களுக்கு வாய்பளித்து  இருமுறை அவர்களையே ஆட்சியை பிடிக்க வைத்துள்ளோம்.

இன்னொரு பக்கம், லட்சம் கோடிகளில் ஊழலும், பல நூறு கோடி கணக்கில் நில கொள்ளையும், மொத்த குடும்பத்துக்கும் அரசியலில் பதவி, அதிகாரம், வன்முறை என பல விஷயங்களை ஊடகம் மூலம் கேள்விபட்டிருந்தாலும், அவர்களையும் நாம் ஐந்து முறை தேர்ந்தெடுத்துள்ளோம். இதே போல அரசியல் புள்ளிகள் பலரும் செய்யாத தப்புக்கு சிறை சென்று வந்து அரியணையில் ஏறியுள்ளனர்.

"ஒவ்வொரு முறையும் யாரும் நம்மை ஏமாற்றவில்லை; நாம் தான் ஏமாளியாக இருந்து வருகிறோம். இங்கு இரு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியமைக்கிறது " என சிலர் புரட்சியாக பேசுவதுண்டு. உண்மையை சொல்லுங்கள் இந்த இரண்டு கட்சிகளை விட்டால் நாம் என்ன தெலுங்கு தேசத்திற்கா ஓட்டை போட முடியும் ???

மற்ற கூட்டணி கட்சிகளெல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்றும் சொல்ல முடியவில்லை. அரியணையில் ஏறாததால், அவர்களின் சாயம் இன்னும் வெளுக்கவில்லை. சாதி / மத போர்வையில் உள்ள கட்சிகளை பற்றி பேசவே தேவையில்லை.
 
தேர்தல் நேரத்தில் யார் நல்ல (நமக்கு தேவையானவற்றை ) வாக்குறுதிகளை தருகிறார்களோ, அவர்களை தான் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கிறோம். கண்டிப்பாக சொல்கிறேன். நேற்று நடந்த (அற) போராட்டங்கள் எல்லாவற்றையும் நாம் மறந்து போய்,  தீர்ப்புகள் திருத்தி  எழுதப்பட்டு, அடுத்தடுத்த தேர்தல்களில் மீண்டும் இவர்களையே நாம் தேர்ந்தெடுப்போம். அது தான் நம் நாட்டின் விதி !

இந்த விதியினை மற்ற யாரவது வருவார்களா என்று ஏங்கி காத்து கொண்டிருக்கும் பல்லாயிரகணக்கான மக்களில் நானும் ஒருவன்.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 15 செப்டம்பர், 2014

கல்லறைகளும், தேவாலயமும் - ஓர் பயணம்

வணக்கம்,

இது ஓர் பயண கட்டுரை. வாரக்கடைசியில் நான் எப்போதும் வீட்டிலுள்ளபடியே  இணையம், முகநூல், பதிவு எழுதுவது அல்லது புது படத்தை தரைவிறக்கம் செய்து பார்ப்பது என்று தான் அட்டவணை போகும். எல்லா வாரம் போல இந்த சனியும் சாதாரணமாக தான் போகும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக சென்றது.

போகவே வேண்டாம் என்று எண்ணியிருந்த 'அலுவலக தின' விழாவிற்கு போயே ஆக வேண்டும் என்ற நிலை. விழாவோ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. வர்த்தக மையம் போகும் வழியில் தான் போர் கல்லறைகளும், புகழ் பெற்ற புனித தோமையர் (பரங்கிமலை) தேவாலயமும் இருக்கிறது. விழாவை முடித்து விட்டு வரும் போது பார்க்கலாம் என்ற நினைத்து கொண்டேன். ஏற்கனவே இருமுறை கல்லூரி காலத்தில் போய் வந்த ஞாபகம். மீண்டும் ஒரு முறை போக எண்ணம். காலை பத்து மணிக்கு சென்று, விழாவின் பாதியிலிருந்து கலந்து கொண்டு வருகையை பதிவு செய்தேன். பதினொரு  மணிக்குள் கிளம்பிவிடலாம் என்று எண்ணினேன். ஆனால் தப்பிக்க முடியவில்லை. வேறு வழி இல்லாமல், 2 மணி வரை இருந்து பார்த்துவிட்டு , ஓசியில் போடும் மதிய உணவை வயிறு முட்ட தின்றுவிட்டு வெளியில் நடையை  கட்டினேன்.

உடன் வேலை செய்யும் நண்பர் மதன் யேசுராஜயையும் தேவாலயம் போக (துணைக்கு) அழைத்து கொண்டேன். 'மதன்ஜி 'யுடன் எனக்கு சில நாட்களாக தான் பழக்கம். இருப்பினும், நல்ல பண்பாளர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். மதியம் மூன்று மணி வாக்கில், நாங்கள் இருவரும் போர்  கல்லறையை அடைந்தோம். உச்சி வேளையில் சுள்ளென வெயில் சுட்டு கொண்டிருந்தது. வெளியே ரோட்டிலிருந்து பார்த்தாலே கல்லறைகள் தெரியும். சுற்றியும் பச்சை பசேலென உள்ள புற்களுக்கு நடுவே கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்தன. இரண்டாம் உலக போரின் போது, இந்தியா முழுவதும் உள்நாட்டு கலவரங்களிலும், இராணுவ முகாம்களிலும் இறந்த வீரர்களுக்காக இந்த போர் கல்லறை சின்னம் 1952-ல் எழுப்பப்பட்டுள்ளது. கல்லறைகளுக்கு முன்னால் ஒரு பெரிய கல்வெட்டில் "THEIR NAME LIVETH FOR EVERMORE " என்று பொறிக்கப்பட்டிருந்தது. கல்லறை தோட்டத்தின் மூலையில், சில பூஞ்செடிகளும், மலர்கொடிகளும் கம்பதில் படர்ந்து ரம்மியமாக இருந்தது. அங்கு யாரோ இரண்டு ஜோடிகள் போட்டோ ஷூட்டில் இருந்ததால், அதனருகே செல்லாமல் விட்டுவிட்டோம்.

madras-war-cemmetry
சென்னை போர் கல்லறை
அடுத்து வண்டியை புனித தோமையர் தேவாலயத்துக்கு விட்டோம். டூ-வீலரை ஓரமாக நிறுத்திவிட்டு, படிவழியாக மேலே ஏறினோம். 300 அடி உயரமுள்ள மலையில் 135 படிகள் இருக்கிறதாம். எண்ணிக்கை தெரிந்தவுடன் தான் கால் ரொம்ப வலிக்கிறது. வயிறு புடைக்க தின்றுவிட்டு, உச்சி வெயிலில் மலை படியேறி வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. காலையில் மேகத்தில் இருந்த கருமை, மதியம் மலையேறும் போது எங்கள் முகத்திலும் வந்துவிட்டது (மதன்'ஸ் பன்ச்!).  படியேறும் வழியில் ஏசுநாதர் சிலுவை சுமந்து வருவது போலவும், காயங்களை குணமாக்குவது போலவும் சிலைகள் வடிக்க பட்டிருந்தன. பாதி மலையிலிருந்து பார்க்கும் போது, தென் சென்னையின் தோற்றத்தை கானல் நீரில் கண்டோம்.

மதன் ஏற்கனவே பல முறை இங்கு வந்துள்ளதால் தேவாலய வழிபாட்டை பற்றி சொல்லி கொண்டு வந்தார். ஏசுநாதரின் 12 சீடர்களின் ஒருவரான புனித தோமையர் (Saint Thomas), கி.பி.52 -ல் கேரளம் வழியாக இந்தியா வந்து மத போதகம் செய்துள்ளார். வங்க கரையோரம் மூன்று இடங்களில் (சின்ன மலை, புனித தோமையர் மலை மற்றும் & மைலாப்பூர் ) தங்கி மத போதகம் செய்துள்ளார். கடைசியாக கி.பி.72-ல் இங்கு (இன்றைய பரங்கிமலை) உயிர் நீத்தாக சொல்லபடுகிறது. அவர் இறந்தவுடன் பூதவுடல்  மைலாப்பூருக்கு (சாந்தோம்) கொண்டு செல்லப்பட்டது. பின்னர், 1547-ல் காஸ்பர் கோல்ஹோ என்ற பாதிரியார் பரங்கிமலையில் இப்போதுள்ள தேவாலயத்தை கட்டியுள்ளார்.


மலையில் உள்ள பெரிய சிலுவை
தென்-சென்னையின் தோற்றம்-சென்னை ஏர்போர்ட்

தோமையரின் ரத்த கரையுள்ள சிலுவை

தோமையரின் RELIC


கி.பி.50-ல் வரையபட்ட ஓவியம்
 இத்தேவாலயத்தின் சிறப்பம்சமாக மலை மீது பெரிய Calvary (ஆணி கொண்டு அறையப்பட்ட இயேசுவின் உருவம் நடுவிலும் திருடர்கள் உடல் பக்கவாட்டிலும் கொண்ட சிலுவை) அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் மலையின் மேல் மேரி மாதாவின் தேவாலயம் உள்ளது. அதில் முக்கியமாக, புனிதர் தோமையரின் இரத்த கரையுள்ள சிலுவை இருக்கிறது. இச்சிலுவை  இறக்கும் முன் அவரே செய்ததாம். ஒரு குறிப்பிட்ட நாளில் தானாகவே இரத்தம் கசியும் என்று சொல்கிறார்கள். சிலுவை அருகே கி.பி. 50-ல் புனிதர் லூக் -ஆல் (Saint Luke ) வரையப்பட்ட குழந்தை ஏசு மற்றும் மேரி மாதாவின் படமும் உள்ளது. ஏசு கிறுஸ்துவின்  பழங்கால ஓவியங்கள் தேவாலய சுவர்களை அலங்கரிகின்றன. தேவாலயம் அருகே ஒரு சிறிய தியான மண்டபமும் இருக்கிறது. அதில் புனிதர் தோமையாரின் RELIC-ல் (எலும்பு துண்டின் ஒரு சிறு பகுதி ) செய்யப்பட்ட சிலுவையும் உள்ளது.

இந்த திருகோவிலின் விசேஷங்களை எனக்கு விவரித்து கொண்டே இருந்தார் மதன். சில விஷயங்கள் எனக்கு புரியவில்லை என்றாலும், கூகிளாண்டவர் இருப்பதால் தலையை மட்டும் ஆட்டி கொண்டேன்.

எல்லாவற்றையும் சுற்றி பார்த்துவிட்டு கீழே இறங்கினோம். தேவாலயத்துக்கு சென்றதில் மன திருப்தி கிடைத்ததோ இல்லையோ, ஓரு  நல்ல வரலாற்று பொக்கிஷமான இடத்தை பற்றி தெரிந்து கொண்ட சந்தோஷம் எனக்குள் இருந்தது.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

சிறுகதை - கனவு கலைந்தது

வணக்கம்,

இன்றைய நவநாகரீக உலகில், ஒரு சில திருமண கனவுகள் எப்படி கலைகின்றன என்பதை என் கற்பனையில் கண்டுள்ளேன். உங்கள் விமர்சனங்களை பகிரலாம்...

சிறுகதை - கனவு கலைந்தது
***************************************
காலை ஆறு மணி. அலாரம் அடித்தவுடன் அஜயின்  தூக்கம் லேசாக கலைந்தது. வீட்டு கூடத்தில் அவன் அம்மாவும், அப்பாவும் எதோ பேசி கொண்டிருப்பது அவன் காதில் விழுந்தது.

"தஞ்சாவூரிலிருந்து வந்த ஜாதகம் நம்ம அஜய்க்கு பொருந்தியிருக்கு. பொண்ணு  படிச்சிருக்கு, நல்ல வேலை. எங்க அண்ணனும் நேர்ல போய் பேசிட்டு வந்துட்டார். பொண்ணு  வீட்ல சரின்னா அடுத்தடுத்த மாசத்திலேயே கல்யாணத்த வச்சிடலாம்." - அவன் அப்பா.

"ஹ்ம்ம்... நல்ல படியா முடிஞ்சா சரிதான்.. ", அம்மா.

அரை தூக்கத்தில் இதை கேட்டதும், விருட்டென எழுந்து உட்கார்ந்தான். புன்முறுவலோடு தலைமுடியை கோதி, எதிரே இருந்த கண்ணாடியை பார்த்து சிரித்து கொண்டான். காலை வேளையில் இந்த மாதிரி ஒரு நல்ல சேதியை கேட்டால் யாராக இருந்தாலும் சந்தோஷம் பொங்கி வருவது இயல்புதானே!

ஏதும் கேட்காதவன் போல், அறையை விட்டு வெளியே வந்தான். அவனை பார்த்ததும் அம்மாவும், அப்பாவும் பேச்சை சட்டென நிறுத்திக்கொண்டனர்.

"ஹ்ம்ம்... பத்து வயசு, பதினஞ்சு வயசெல்லாம் காதல், கல்யாணத்தை பத்தி பேசுது....ஏழு கடா வயசு எனக்கு.. என் கல்யாணத்தை பத்தி, என் முன்னாடி பேச இவங்களுக்கு என்ன வெட்கமோ தெரியல..." என்று முனகியபடியே பல் துலக்கி விட்டு வெளியே வாக்கிங்க்கு போனான். வழக்கம் போல இல்லாமல், இன்று அதிகமான புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்ந்தான்.

அதே புத்துணர்ச்சியுடன் , காலை உணவிற்காக வந்து டைனிங் டேபிளில் உட்கார்ந்தான். "என்னம்மா.. இன்னைக்கும் இட்லியா???? ஒரு சப்பாத்தி , பூரி பண்ண கூடாதா?? " என்று நொந்து கொண்டான். அம்மா ஏதும் பேசவில்லை. தினமும் இதே கேள்வியை இவன் கேட்பதால், அவள் பதில் ஏதும் சொல்லவில்லை.

"அஜய் , அப்பா ஏதும் சொன்னாரா??? "

"இல்லையே ... என்ன???", தெரிந்தும் தெரியாதது போல கேட்டான்.

அம்மா விஷயத்தை சொன்னாள்.

மனதிற்குள் மத்தாப்பூ பூத்தது போல இருந்தாலும் , முகத்தை சாதாரணமாகவே வைத்து கொண்டான்..

"இன்னைக்கு மதியத்துக்குள்ள பொண்ணு வீட்ல முடிவை சொல்லிடுவாங்க.. அப்புறம் கல்யாணந்தான்...  "

மீண்டும் உதட்டில் லேசான புன்னகையை மட்டும் பூத்தான்.

பிடிக்காவிட்டாலும் எட்டு , பத்து  இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு, அலுவலகத்துக்கு கிளம்பினான்.


வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த வண்டியை லேசாக துடைத்து விட்டு, இரு கண்ணாடிகளில் தலையை கோதிவிட்டு, தாடியை தடவி சரி செய்துவிட்டு கிளம்பினான். ஆளில்லா ஓ .எம்.ஆர்  சாலையில்,  யமஹா R15-ஐ  காற்றில் பறக்க விட்டான்.

அலுவலகத்தில் அவனுக்கு கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் சரியாய் செய்து முடித்து மேலிடத்துக்கு அனுப்பி வைத்தான். என்றும் இல்லாத அதிசயமாய், பக்கத்து சீட்டில் உள்ள கேரள பேரழகி மோனா-வின் சிரிப்பும், பார்வையும்  இன்று அவன் மேல் விழுந்தது. ஊரிலிருந்து வந்த தின்பண்டங்களை அவனுக்கு கொடுத்தாள். அஜயின் மனம் ஆனந்த பெருக்கில் ஊறி திளைத்தது.

அலுவலகத்தில் நெருங்கிய நண்பன் ஒருவனிடமும், பள்ளிக்கூட  நண்பன் ஒருவனிடமும்  மட்டும் போன் செய்து கல்யாண விஷயத்தை சொன்னான். தற்காலிக விடுப்பு, சலுகை விடுப்பு எத்தனை நாட்கள் இருக்கிறது என்று சரி பார்த்து கொண்டான். அலுவலகத்தில் அவன் உத்தியோக பதவிக்கு எவ்வளவு பணம் கடனாய் கிடைக்கும் என்று மனிதவள மேலாளரை கேட்டு தெரிந்து கொண்டான். தேனிலவு சுற்றுலா செல்ல, செலவு எவ்வளவு  ஆகும் என்று வலைத் தளங்களில் தேடி பார்த்து கொண்டிருந்தான். மேலும் 'மேனகா'-வில் சமீபத்திய மாதிரி அட்டைகளைகளையும் வலைத்தளத்தில் நோட்டம் விட்டு கொண்டிருந்தான். நேரம் இனிமையாய் கடந்தது.

மதியத்துக்கு மேலாகியும் வீ ட்டிலிருந்து செய்தி எதுவும் வராததால், பொறுமையிழந்து  அவனே அம்மாவுக்கு போன் செய்தான்.

 "ஹலோ அம்மா ! "

 "ஹலோ !! சொல்லு அஜய் ...என்ன விஷயம் ? "

"ஒண்ணுமில்லை.. எ.....னக்கு கூரியர் ஏதாவது வந்துச்சா..?? "

"இல்லையே.."

"வரலையா???... ஹ்ம்ம்... அதான் கேட்டேன்...சரி... வைச்சுடுறேன்..."

"ஒரு நிமிஷம்ப்பா .. "

"ம்ம்.. என்னம்மா...??" - நாற்காலியில் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.

"அது... பொண்ணு வீட்ல ஜாதகம் சரியில்லை சொல்லி வேண்டாம்ன்னு சொல்லிடாங்கப்பா.."

அவன் ஆசையில் இடி விழுந்தது போல இருந்தது...

"..........."

"அஜய்... லைன்-ல இருக்கியா??? "

"ம்... பரவாயில்லை...சரி விடும்மா....  அப்புறம் பேசுறேன்..."

அவன் கட்டிய மனக்கோட்டையேல்லாம் தூள்தூளாக உடைந்து போயிருந்தது. எரிச்சலும், சோகத்துடனும் இரவு ஒன்பது மணி வரை கடமைக்கு அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு, வீட்டுக்கு புறப்பட்டான். வண்டியின் பின் டயர் பஞ்சர். வண்டியை அரை கி.மீ  தள்ளி கொண்டு போய் பஞ்சர் போட்டுவிட்டு வீட்டுக்கு போனான். கடைசியாக வீடு வந்து சேரும் போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.

"என்னப்பா, இன்னைக்கு ஏன் இவ்வளவு லேட்டு ??  "

"கொஞ்சம் வேலை அதிகம்..."

 "சரி.. கை கால் கழுவிட்டு வந்து சாப்பிடு .."

"இல்ல.. வயிறு சரியில்ல....சாப்பாடு வேண்டாம்... " என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டான். வெளியில் பெற்றோர்கள் இருவரும் பேசுவது இவனுக்கு லேசாக கேட்டது.

" நமக்கு என்னங்க குறைச்சல்...? நம்ம என்ன நகை நட்டா கேட்டோம்?? சொந்த வீடிருக்கு...  ஒரே பையன்....நல்லா படிச்சிருக்கான்... நல்ல வேலை... மாசம் இருபத்தஞ்சாயிரம் சம்பாதிக்கிறான்...கெட்ட பழக்கம் ஒண்ணும் இல்ல... இன்னும் என்ன வேண்டி கிடக்கு இவள்களுக்கு....  சம்பளம் பத்தல.....ஃபாரின் போகல.... கார் இல்ல....கலர் கம்மின்னு 1008 கண்டிஷன்... ஒருத்தி கூட இவனை பிடிச்சிருக்குன்னு ஒத்துக்க மாட்டேன்கிறா.. ஹ்ம்ம்... எம் புள்ளைய பாத்தா பாவமா இருக்கு..."   என்றாள் அம்மா.

 "...ம்ச்ச்... ஆறு வருஷமா பொண்ணு பாக்குறோம்... முப்பத்தி இரண்டு வயாசாகியும், நம்ம சாதி சனத்தில இவனுக்கு ஒரு பொண்ணு  கூட அமையலையே...." என்றார் அப்பா வருத்ததுடன்.

இம்முறையும் தான் கண்ட கனவு கலைந்தது பற்றி எண்ணி கொண்டே துயில கண் மூடினான் அஜய்.


 நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

நச்சுன்னு சில ட்வீட்ஸ் !

வணக்கம்,

சிறு சிறு துணுக்குகள், பொம்மை பட ஜோக்குகள் என்று வந்த காலமெல்லாம் மலை ஏறி போச்சு. ஒன்று, இரண்டு என வார இதழ்களில் மட்டும் வலம் வருகிறது. டுவிட்டரில் போடும் இரண்டு வரி கவிதை, ஹைக்கூ,  நச்சுன்னு ஒரு பன்ச்சு லைன்.. இது தான் இப்போ ஃபேமஸ். இணையத்திலும், அலுவல நண்பர் ஜெகதீசனின் தொகுப்புகளிலிருந்தும், என்னை கவர்ந்த சில "நச் பன்ச்சுகளை" இங்கு பகிர்கிறேன்.


  • அவசரமாக ஒரு வெற்றி தேவை. ஒரு பத்து பேருக்கு அட்வைஸ் பண்ற மாதிரி சின்ன வெற்றியாக இருந்தாலும் பரவாயில்லை!
  • திங்கள் - ள்கங்தி - ங்கள்தி - திள்கங் - ங்திள்க - கள்திங் - திள்ங்த்...
    லிஸ்ட்டுல இதையும் சேத்துக்கனும்! #கருட புராணம்
  • காபி மெஷின்ல நிஜமாவே காபி தான் வருதா??  இல்ல காபி மெஷின கழுவுன தண்ணி வருதா??
  • இட்டு அவி....இட்டவி...இட்டலி...இட்லி..?!
  • மிகச்சிறிய 'மா'வட்டம் தோசைதான்!
  • உடல் நிலை சரியில்லை என்றால் பணக்காரர்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கும், ஏழைகள் பெரியாஸ்பத்திரிக்கும் போவார்கள்...!
  • பையனா ? பொண்ணா ? எனக் கேட்டறிந்த பிரசவத்தை, நார்மலா? சிசேரியானா எனக் கேட்கும்படி மாற்றியமைத்தது நவீன மருத்துவம் !
  • முன்னாடி மொபைல் இருந்தா ஆச்சரியப்பட்டாங்க.. அப்புறம் ஃபேஸ்புக்ல அக்கௌண்ட்டான்னு ஆச்சரியப்பட்டாங்க..
    இப்ப மொபைல் இல்லையான்னு ஆச்சரியப்படறாங்க.. இனிமே ஃபேஸ்புக்குல அக்கௌண்ட் இல்லையான்னு ஆச்சரியப்படுவாங்க...
    #முக்கோண வாழ்க்கை 
  • பிள்ளையார் அம்மா அப்பாவை சுத்தி வந்த மாதிரி, நாம ஃபேஸ்புக், ட்விட்டரை சுத்தி வந்தாலே உலகத்தைப் புரிஞ்சிக்கலாம் போல!
  • இக்கரைக்கு அக்கரை பச்சை இல்ல.. வெறும் கான்கிரீட்!
  • எத்தனை சிரமப்பட்டோம் என்பதை வெற்றி பெற்ற பின் சொன்னால் தான் காது கொடுத்துக் கேட்பார்கள்.
  • அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்
  • எதிர் எதிரே கடந்து செல்லும் போது சிறு ஹாரனில் பரிமாறி கொள்ளும் டிரைவர்களின் நட்பும் அழகானதே. கண்டுகொள்ளப்படாமல் இருப்பதும் வரம் தான்!
  • கல்ல தூக்குறது, காளைய அடக்குறது , இந்த வரிசைல தட்கல் டிக்கெட் போடுறதையும் சேத்திடலாம்.. #சர்வர் டௌன் 
  • தாத்தாவுக்கு செல்போன் தெரியாது, பேரனுக்கு சிட்டு குருவி தெரியாது. ஒன்றை தந்துவிட்டு இன்னொன்றை விலையாய் பெறுவதுதான் காலத்தின் கடமை.
  • 'பொதிகை' மட்டுமே இருந்தப்போ ரிமோட்டுக்கு அவசியம் இல்ல, 'ரிமோட்' வந்த பிறகு பொதிகைக்கு வேலையே இல்ல...
  • பேருந்து காதல் கதைகளில், ஹீரோக்கள் ஃபுட்போர்டிலும், ஹீரோயின்கள் ஜன்னல் ஓரத்திலும் உருவாகிறார்கள்! 
  • பையனையோ, பெண்ணையோ பெத்து விஜய் டிவியில் கொடுத்தரனும்; அவனுங்களே பாட்டு, டான்ஸ் சொல்லி தந்து ஹீரோ/ஹீரோயின் ஆக்கி கல்யாணமும் பண்ணிவெச்சுடுவானுங்க..  
  • ஐஸ்கட்டில சட்டை இல்லாம கேப்டன படுக்க வச்சிருப்பானுக, அடுத்தது என்ன நெருப்பான்னு கேப்பாரு பாரு அப்போ துபாய் போனவன் தான் தாவுத்.#நரசிம்மா 
  • ஒரு காலத்துல 'அடை மழை' ன்னு இருந்தது, அப்புறம் 'அட மழை' ன்னு ஆச்சு, இப்போ 'அடடே மழை' ன்னு ஆகிடும் போல!!!
  • பறவை கூண்டு வாங்கி அடைக்காதீங்க,அதுங்க நல்லாவே கூடு கட்டும். அந்த காசுல ஒரு மரம் நடுங்க அதுகளுக்கும் சேர்த்து பயன்படும்.
  • காம்பளான், ஹார்லிக்ஸ், பூஸ்ட், எனர்ஜியான் குடிக்கலானா கூட குழந்தைகள் வளர்ந்துவிடும். ஆனா குழந்தைகள் குடிக்கலானா இந்த கம்பெனிகள் தான் வளர முடியாது...
  • பெங்களூர்ல நான் பாத்ததுலேயே இதான் பெஸ்ட் பிகருங்குற நினைப்பு, ஒவ்வொரு அரைமணிநேரத்துக்கும் மாறுவதுதான் பெங்களூரின் சுவாரஸ்யம். #புதுசாய் குடிபோன ஐ.டி. வாசி. 
  • நதிக்கரைகளில் நாகரீகம் பிறந்தது. நாகரீகத்தினால் நதிகள் இறந்தது.
  • நனைந்து போகும் சிறுமியிடம், "குடைக்குள் வருகிறாயா?" என்றேன். "மழைக்குள் வருகிறீர்களா?", என்றாள்.
  • ஐபோன விட அதிக டெக்னாலஜி டேபிள் மேட்-ல தான்!! டொக்..டொக்..  ஐந்து வித உயரங்கள் , ஆறு வித ஏங்கிள்கள்...அப்பாப்பா....
  • இளையராஜாவின் பாடல்களை இசைக்கும் அனைத்துப் பேருந்துகளுமே சொகுசுப் பேருந்துதான்..
  • சரியாதான் பேரு வச்சிருக்கானுங்க "வலை"தளம்ன்னு.. சிக்குனா வெளியே வரவே முடியாது...
  • உலகிலேயே அதிகமுறை நடித்துக் காட்டப்பட்ட நாடகம் -வயித்து வலி #பள்ளி குழந்தைகள்
  • அடுக்கிவைத்த ஹோம்வொர்க்  நோட்டை ஆசிரியர் திருத்தும்போது, நம்ம நோட் வர்றதுக்குள்ள பீரியட் பெல் அடிச்சிடனும்னு வேண்டிய நாட்கள் இனிமையானவை...  #பள்ளிக்கூடம்
  • ஆட்டோகாரங்களுக்கு பக்கம் கூட தூரம் தான்... ரியல் எஸ்டேட்காரங்களுக்கு தூரம் கூட பக்கம் தான். #பிஸ்னஸ்
  • டாஸ்மாக்ல ஆண்களும், ஜவுளிக்கடைல பெண்களும் ஈசியா ஃப்ரெண்ட் ஆகிடுறாங்க..
  • இன்னிக்கு என்ன சமைக்கலாம் என்ற ஓயாத சிந்தனையில் உருவான வார்த்தைதான் 'குழம்பு'! #தமிழ் மொழி 
  • ஒரு மந்தையில் தொலைந்த இரண்டு ஆடுகள், நேருக்குநேர் சந்திக்கும் போது பேச முடியவில்லையே!! # மட்டன் பிரியாணி
  • வாழ்த்தலும், பாராட்டும் ஒரு வகை ENERGY TRANSFER தான் !
  • எனக்கு என்ன வாங்கி தருவே? - காதலி.
    எனக்கு என்ன வாங்கி தந்துருக்கீங்க? - மனைவி.
    எனக்கு எதுக்கு வாங்கினே? - அம்மா
  • ஏதோ ஒரு புரியாத தேவமொழியில் என்னிடம் பேசிக்கொண்டிருந்தது குழந்தை..வளர்ந்து தொலைத்த வருத்தத்தோடு கேட்டுகொண்டிருந்தேன்.
  • சினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்? #வலைபதிவர்கள் #நான்
  • சிக்னலில் தன் தாய்க்கு பிச்சை இடாதவனையும் பார்த்து கையசைத்து சிரித்து டாட்டா காட்டும் அந்த குழந்தைக்கு முன் மொத்த மனிதமும் வீழ்ந்து விடுகிறது.!
  • ஒரு பஸ். ஒவ்வொரு சீட்டிலும் ஸ்டீரிங் இருக்கும்.  ஒவ்வொரு பாசஞ்சரும் தங்கள் விருப்பம் போல வண்டியை ஓட்டலாம். இப்படி இருந்தால் வண்டி எப்படி நல்லா ஓடும்???  #பார்லிமென்ட் 
  • "யானை" என்ற வார்த்தையில் "னை" யானையின் உருவத்தை ஒத்திருப்பது தமிழ் மொழியின் அழகு.
  • ஆண்மை என்று சொல்லும் போதே கம்பீரமாக இருப்பதும் ; பெண்மை என்று சொல்லும் போதே மென்மையாக இருப்பதும் நம் மொழியின் அருமை #தமிழ்
  • குழந்தையா இருந்தப்ப தட்டி தட்டி தூங்கவெக்க ரொம்ப கஷ்டப்படறோம்...வளர்ந்தப்புறம் தட்டி தட்டி இவங்கள எழுப்பறதுக்குள்ள...உஸ்ஸ்...அப்பாடா....முடியல !!!#அம்மா-அப்பா 
  • அம்மா! நான் பிறந்தப்புறம் அது நான்தான்னு எப்படி கண்டுபிடிச்ச...?? #குட்டி பையன்  
  • (நேற்று) குடிபோதையில் கொட்டும் மழையில் இரு வாலிபர்கள்:  என்னடா அது வெளிச்சம் ??
    "மாப்ளே ! மழையிலே நம்மளை யாரோ போட்டோ எடுக்குறாங்கடா !!!

    (இன்று)  குடிபோதையில் கொட்டும் மழையில் இரு வாலிபர்கள்: என்னடா அது வெளிச்சம் ??
    "மாப்ளே ! கூகிள் எர்த், கூகிள் மேப்ஸ் -க்கு போட்டோ புடிக்கிறாங்க போல !!!
  • சிறுவயதில் தாயிடம் நான் உணர்ந்த பாதுகாப்பை, முதுமையில் அவளுக்கு உணர்த்திவிட்டால் போதும், என் மரணம் மகிழ்ச்சியானதாய் இருக்கும்!
  • குழந்தை (வெகுளித்தனமாக) : அம்மா, நம் வீட்டு வேலைக்காரியிடம் உன்னுடைய பர்ஸையும், நகைகளையும் கொஞ்ச நேரம் குடுத்து பார்த்துக்கொள்ள சொல்லுவியா ?
    அம்மா : அதெப்படி முடியும்…அவளை நான் நம்பவில்லை.
    குழந்தை : அப்பறம் ஏன் என்னை மட்டும் அவளிடம் விட்டுட்டு  போற???!!!

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

இந்தியாவின் பணக்கார கடவுள்கள் !

வணக்கம்,

பணம் இருந்தால் தான் மதிப்பு என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; கடவுளுக்கும் சேர்த்து தான் போல.

இந்தியாவின் பணக்கார மனிதர்களை பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். வளர்ந்து வரும் நம் நாட்டின் சில பணக்கார கோவில்கள், கடவுள்களை பற்றி இங்கு பார்க்க போகிறீர்கள். கோவில்களுக்கு வரும் நன்கொடை, சேமிப்பு, நகைகள்/ஆபரணங்கள் போன்றவற்றை வைத்து கோவில்களின் வளம் கணக்கிடப்படுகிறது. நான் இணையத்தில் தேடி பிடித்ததை உங்களிடம் பகிர்கிறேன்.

பத்மநாபசாமி கோவில், திருவனந்தபுரம், கேரளா

16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விஷ்ணு கோவில்.400/500 ஆண்டுகளாக திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் கட்டுபாட்டில் இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக ரசசியமாய் இருந்த இக்கோவிலின் பொக்கிஷம், கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிவந்துள்ளது. கோவிலிலுள்ளே ஆறு பெட்டகத்தில், நான்கு அவ்வபோது திறக்கப்பட்டு, உபயோக படுத்தப்பட்டு வந்தது. திறக்க படாத இரண்டு பெட்டகத்தில் ஒன்று, உச்சநீதி மன்ற ஆணையின் கீழ் திறக்கப்பட்ட போது, அதில்  பல கோடி மதிப்புள்ள தங்க, வைர பொக்கிஷங்கள் இருப்பது தெரிய வந்தது.

மூன்றரை அடி நீளத்தில், ரத்தினம், வைடூரியம் பதிக்கப்பட்ட, தங்கத்தாலான மகாவிஷ்ணு சிலை, 18-ஆம் நூற்றாண்டு பொற்காசு குவியல்கள், ஒன்பது அடி நீளமும், இரண்டரை கிலோ அளவுள்ள தங்க அட்டிகை,  ஒரு டன் எடையுள்ள அரிசி ஆபரணங்கள், மூட்டை மூட்டையாய் தங்க/வைர பொருட்கள் என மொத்த பொக்கிஷத்தின் மதிப்பு ($22 பில்லியன்) ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் திறக்க படாமலுள்ள ஒரு பெட்டகத்தில், இதை விட மதிப்புள்ள பொக்கிஷம் இருப்பதாக சொல்லபடுகிறது. இந்த தங்க புதையலின் கண்டுபிடிப்பின் மூலம், பத்மநாபசாமி கோவில் உலகின் மிக பணக்கார கோவில்களின் வரிசையில் முதலில் இருக்கிறது.



திருமலை வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவில், திருப்பதி, ஆந்திரா  

திருமலை திருக்கோவில் 10-ஆம்  நூற்றாண்டில் கட்டப்பட்டது. 16-ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசால் விரிவாக்கபட்டது. நாள் ஒன்றுக்கு 60,000 முதல் லட்சம் பக்தர்கள் வரை வந்து செல்லும் புனித ஸ்தலமாக  விளங்குகிறது.
    

பத்மநாபசாமி கோவிலுக்கு பிறகு, இந்தியாவின் இரண்டாம் பணக்கார கடவுளாக திருப்பதி பாலாஜி திகழ்கிறார். விக்ரகங்களுக்கு அணிவிக்கும் தங்க, வைர,வைடூரிய ஆபரணங்களின் மதிப்பே ரூ. 2000 -5000 கோடிகள்  இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எட்டு அடி உயரமுள்ள பெருமாள் சிலைக்கு 70-150 கிலோ அளவுள்ள அணிகலன்கள் அணிவிக்கப்படுகிறது. கோவிலின் உள்ள விமானம் சொக்க தங்கத்தால் ஆனது. ஒரு நாளைக்கு சராசரியாக 2.5 கோடி பணம்/ பொருள் உண்டியலில் காணிக்கையாகிறது . கோவிலின் மொத்த சொத்தும் கிட்டதட்ட ரூ. 33,000 கோடிக்கு சமமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

சாய் பாபா திருக்கோவில் , சீ ரடி, மகாராஷ்டிரா


சாய்பாபா கோவில் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம்  நூற்றாண்டின்ஆரம்பத்திலும் வாழ்ந்த மகானின் சமாதிதான் கோவிலாக கட்டப்பட்டுள்ளது. இந்துக்கள், இஸ்லாமியர்கள் என நாள் ஒன்றுக்கு 60,000 பக்தர்கள் வரை வருகின்றனர். விசேஷ நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் வரை வருகிறார்கள் என்று சொல்லபடுகிறது. தங்க /வைர ஆபரணங்களின் மதிப்பு ரூ.32 கோடி இருக்கும். ஓர் ஆண்டுக்கு ரூ.160 கோடிகள் வரை வருமானம் வருகிறதாம். மொத்த மதிப்பு ரூ. 3000-5000 கோடிகள் என்று சொல்லபடுகிறது.

சித்தி விநாயகர் திருக்கோவில், மும்பை, மகாராஷ்டிரா  

 
லக்ஷ்மன் வித்து மற்றும் தேவ்பாய் படேல் ஆகியோரால் நவம்பர் 19, 1801 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கோவிலிலுள்ள மேற் கூரை 3.7 கிலோ தங்கத்தால் ஆனது. வருடத்திற்கு 12-15 கோடிகள் வரை வருமானம் வருகிறது. மேலும் 144 கோடிகள் வங்கி கணக்கில் இருப்பதாகவும்,  110 கிலோ எடையுள்ள தங்கம்/வெள்ளி பொருட்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். மொத்த மதிப்பு ரூ. 1000 கோடி என சொல்லபடுகிறது.

ஹர்மந்திர் பொற்கோவில், அமிர்தசரசு, பஞ்சாப்


சீக்கியர்களின் நான்காம் குரு என்று சொல்லப்படும் குரு ராமதாஸ் சாஹிப் என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்கதர்கள் வந்து வணங்கும் இடமாக இருக்கிறது. தடாகத்தின் நடுவே உள்ள இந்த பொற்கோவில் முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டப்பட்டது. கோவிலுள்ளே உள்ள  'அதி கிராந்த்' என்னும் புனித நூல் வைக்கபட்டுள்ள இடம் , விலையுயாரந்த கற்களால் பதிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 500 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. மொத்த மதிப்பு ரூ. 1000 கோடிகளுக்கு மேல் என்று சொல்லபடுகிறது. 

வைஷ்ணவோ தேவி ஆலயம் , திரிகூட மலை, ஜம்மு & காஷ்மீர் 

108 திவதேசங்களில் ஒன்றான வைஷ்ணவோ தேவி கோவில் வட மாநிலங்களில் மிகவும் பிரச்சியத்தம். நாள் ஒன்றுக்கு 50,000 பக்தர்களுக்கு மேல் வருகிறார்கள். திருவிழா காலங்களில் 5 லட்சத்திற்கும் மேலான மக்கள் வருவதாக சொல்கிறார்கள். ஒரு நாளைக்கு 40 கோடி ரூபாய் வருமானமும், வருடத்திற்கு ரூ.500 கோடி ரூபாய் வரை வருமானம் வருவதாக சொல்லபடுகிறது.
 

ஜகன்நாதர் திருக்கோவில், பூரி, ஒடிசா

10-ஆம் நூற்றாண்டில், அனங்க பீம தேவா என்னும் ஒரிய அரசனால் சிவ பெருமானுக்கு கட்டப்பட்டது. ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து லட்ச கணக்கானோர் வந்து செல்கின்றனர். தங்கம் மற்றும் வெள்ளியிலான ஆபரணங்கள் மட்டும் கோடிக்கணக்கில் இருக்கிறது. மேலும் கோவிலுக்கு சொந்தமான விளை நிலங்கள் மற்றும் மனைகள் மட்டுமே 57,000 ஏக்கர்கள் இருக்கிறதாம். இதன் மூலம் கோவிலுக்கு ஒன்று முதல் ஐந்து கோடி வரை ஆண்டுக்கு வருமானம் வருகிறது. நாள் ஒன்றுக்கு 15 கோடி வரை வருமானம் வருகிறது. ஆண்டுக்கு 300 கோடி வரை வருமானம் வருவதாக சொல்கிறார்கள்.


குருவாயூரப்பன் ஸ்ரீ  கிருஷ்ணா திருக்கோவில் , குருவாயூர், கேரளா

குருவாயூரப்பன் கோவில் கி.மு.3000 ஆண்டில் கட்டப்பட்டது என வரலாற்று குறிப்புகள் சொல்கிறது. நாள் ஒன்றுக்கு 50,000 - 1,00,000 பக்தர்கள் வருகிறார்கள். இக்கோவிலுக்கு சொந்தமான 600 கிலோ மதிப்புள்ள தங்க கட்டிகள், வங்கி கணக்கில் வைத்துள்ளதாக சொல்கிறார்கள். மேலும் 500 கிலோ தங்கம் கோவிலில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லபடுகிறது. சேமிப்பு கணக்கில் 600 கோடி ரூபாய் வைத்துள்ளதாகவும், ஆண்டுக்கு 200 கோடி வருமானம் வருகிறதாகவும் சொல்லபடுகிறது. கோவிலின் மொத்த மதிப்பு  ரூ. 3000 கோடிகள் இருக்கும் என சொல்கின்றனர்.


 ஐயப்பன் திருக்கோவில், சபரிமலை, கேரளா 

17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் தென்னிந்தியாவில் மிக பிரபலம். 100 கோடி மதிப்புள்ள நிலங்கள் கோவிலுக்கு சொந்தமாக இருப்பதாக சொல்கிறார்கள். பல கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள், வங்கியில் சேமித்து வைக்கபடுகிறது. ஆண்டுக்கு ரூ.200 கோடி வருமானம் வருகிறதாகவும் சொல்லபடுகிறது.


மேலும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், காஷ்மீர் அமர்நாத் கோவில் என இந்தியாவில் பல பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு நன்கொடையும், வருடாந்திர சேமிப்பும் மட்டுமே பல ஆயிரம் கோடிகளை தாண்டும்.


இந்தியாவின் பணக்கார கோவில்கள் / கடவுள்கள் என்று இணையத்தில் தேடி பார்த்ததில், இந்த சில (இந்து) கோவில்கள் மட்டுமே கிடைத்தது. ஏனோ கிறுஸ்துவ தேவாலயங்களும், இஸ்லாமிய மசூதிகளும் தேடலில் இடம் பெறவில்லை. தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் இது போன்ற கணக்கிலடங்கா சொத்துக்கள் பல உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.  

பாரத ரிசர்வ் வங்கியின் கூற்றுபடி, இந்தியாவில் கோவில்களுக்கு சொந்தமான தங்கதின் சேமிப்பு அளவு மட்டும் 30,000 டன்! இந்த கோவில்களில் உள்ள விக்ரகங்கள், கோபுரங்கள், கலசங்கள், மேற்கூரைகள் என பெரும்பாலும், சொக்கத்தங்கத்தால் ஆனவை. கடவுள் சிலைகளுக்கு போடப்படும் நகைகளும், பட்டு பீதாம்பரமும், நவரத்தினங்களால் பதிக்கப்பட்டவை.  

இவையெல்லாம் யாருக்காக? டன் டன்னாக தங்கமும், கோடி கோடியாக பணமும் யாருக்காக சேர்த்து வைக்கிறார்கள் என புரியவில்லை. கோவிலுக்கு சொந்தமான அறக்கட்டளைகள் மூலமாக மக்களுக்கு உதவுகின்றனர் அல்லது பணத்தை செலவு செய்கின்றனர் என்றே வைத்து கொண்டாலும், மீதம் உள்ள பல ஆயிரம் கோடிகள் எல்லாம் கடவுளின் பெயரில் 'கோவில் சொத்து ' என்றும் பொக்கிஷம் என்றும் சேமித்துதான் வைக்கப்படுகிறது.

இந்த கோவில் சொத்துகளெல்லாம், சுவிஸ் வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் போலதான். ஒரே ஒரு வித்தியாசம். சுவிஸ் வங்கிகளில் சேர்க்கப்பட்டதுக்கு கணக்கு கிடையாது; இதற்கு உண்டு. இரண்டும் நம் நாட்டுக்கு செலவு செய்ய வேண்டியவை தான். ஆனால் செலவு செய்ய முடியாது!

இந்த பணத்தை/ பொக்கிஷங்களை நல்வழியில் நாட்டு மக்களுக்கும் / சமூக வளர்ச்சிக்கும் உபயோகபடுத்தினால் நாடு வளம் பெரும். நம்மூர் அரசியல்வாதிகள் நல்லதொரு திட்டம் தீட்டி, இந்த பொக்கிஷங்களை உபயோகப்படுத்தினாலே போதும், பல ஆண்டுகளாக நாட்டில் உள்ள பற்றாகுறைகளெல்லாம் இதன் மூலம் பறந்து விடும். இவையெல்லாம் எப்போது நம் அரசுக்கும், கோவில் தேவஸ்தானங்களுக்கும் உணர்ந்து செயல்படுமோ, அன்று தான் நம் பாரதத்தின் முன்னேற்றம் ஆரம்பம் ஆகும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 23 ஜூன், 2014

தமிழ் திணிப்பு செய்வோம்!

வணக்கம்,

தலைப்பை பார்த்தவுடன் இந்த பதிவு எதை பற்றியது என்று தெரிந்திருக்கும். உடனே இவன் தமிழ் மொழியை தூற்றுகிறான்; அவமதிக்கிறான் என்று கண்டனம் தெரிவிக்காமல், தொடந்து படிக்கவும்.

"தற்போது சமூக வலைதளங்களில் அரசு தகவல்களில் பயன்படுத்தப்படும் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அல்லது  இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டையும் பயன்படுத்தலாம் என்றும், அவ்வாறு இரு மொழிகளைப் பயன்படுத்தும்போது முதலில்  இந்தியையும் அதன் பிறகே ஆங்கிலத்தையும் பயன்படுத்த வேண்டும்",  என்று சமீபத்தில் மத்திய அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தி மொழியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும், ஆங்கிலத்தை விருப்பப்பட்டால் பயன்படுத்தலாம் என்றும் இந்த உத்தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் இந்தத் திடீர் ஆணையால் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டிருகின்றனர்.

முதன் முதலில் 1937-ல் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் ஆணை பிறப்பிக்கபட்ட போது, இந்தி எதிர்ப்புப் போராட்டம், தந்தை பெரியாரால் ஆரம்பிக்கபட்டது. பல்வேறு எதிர்ப்பால் 1940-ல் அச்சட்டம் கைவிடப்பட்டது. பின்னர் 1965-ல் மத்திய அரசு ஒரு சில காரணங்களுக்காக இந்தி மொழியைக் கட்டாயம் ஆக்க முனைந்தது. மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. அறிஞர் அண்ணாதுரை, மு.கருணாநிதி மற்றும் பல கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை காட்டினர்.

இப்போது புதிய அரசு ஆட்சிக்கு வந்த ஓர் மாதத்திற்குள், மீண்டும் இது போன்ற ஒரு அரசாணையைப் பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும், பல தொடர் கண்டனத்தால் இந்தி பேசாத மாநிலங்களுக்கு இச்சட்டம் கிடையாது என்று மத்தியில் கூறியுள்ளனர்.

தமிழை முன்னிலை படுத்தவும், நம் தாய்மொழியைக் காக்கவும் பலர் போராடி வருகின்றனர். இவர்கள் முதலில் சொல்வது மொழி வாரியான, பிராந்திய மாநிலங்களில் இந்தி திணிப்புக் கூடாது என்பது தான். அப்படி நடந்தால் நம் தாய்மொழி அழியும் காலம் வெகு விரைவில் வரும் என்று எண்ணுகின்றனர்.

 

இவர்கள் இப்படி மற்ற மொழியை எதிர்ப்பதாலும், தொடர் கண்டனங்கள், போராட்டங்களாலும் மட்டுமே தமிழ் மொழி வளராது. வளர்க்கவும் முடியாது. தமிழை வளர்க்க ஆதியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதாவது, பள்ளி கூடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். தமிழ் நாட்டில் பள்ளி பயிலும் எல்லா மாணவ/மாணவியரும் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும். மெட்ரிக், சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ என எல்லாப் பள்ளி பிள்ளைகளும், குறைந்தது எட்டாம் வகுப்பு வரை தமிழ் பாடம் கட்டாயம் எடுத்துப் படித்திருக்க வேண்டும். தமிழகத்தில் மற்ற மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள பிள்ளைகளின் பெற்றோர்கள், தமிழைச் சொல்லி தர முடியாது அல்லது தமிழைக் கற்க சொல்லி அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று சாக்கு போக்கு சொல்லி கொண்டிருந்தால், இன்று தமிழ் எந்த நிலையில் இருக்கிறதோ, அதை விட மோசமாக இன்னும் 50/60 வருடங்களுக்குப் பிறகு இருக்கும்.

இன்று சென்னை மாநகரில் உள்ள பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் ஒரு சில பள்ளியில் தமழ் வகுப்பையே ஆங்கிலத்தில் தான் எடுக்கின்றனர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

(உதாரணம்)

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. "

தமிழில் விளக்கம் கொடுக்கப் பட வேண்டிய இந்தக் குறளுக்கு,
கீழ்கண்டவாறு பள்ளியில் ஆங்கிலத்தில் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

As the letter A is the first of all letters, so the eternal God is first in the world .

தமிழில் விளக்கம்-
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

மேலும் தமிழில் தப்பும் தவறுமாக எழுதினால் (துணைக்கால் போடுவது, ஒற்றைக் கொம்பு, இரண்டு சுழி... ), அதைப் பெரிதாகக் கவனிக்காமல் (tick ) டிக் போட்டுவிடுவார்களாம். ஆங்கிலப் புலமை தான் அவர்களுக்குப் பெரிதாம். அதுதான் முக்கியமாம். சும்மா பேருக்கு எழுதவில்லை... இதைச் சொன்னது, அப்பள்ளியில் படித்த ஓர் முன்னாள் மாணவி தான்.

பல மேல்நிலை பள்ளிகளில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். தமிழில் பேசினால் தண்டனை என்று விதியெல்லாம் உண்டு என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. இன்றுள்ள பல கான்வென்ட் பிள்ளைகளுக்குத் தமிழில் பேச எழுத தெரிவதில்லை.இப்படி இருந்தால் எப்படித் தமிழ் வளரும்? வெறும் சமச்சீர் கல்வியும், பிரம்மாண்டமான தமிழ் மாநாடும் தமிழை வளர்க்காது.

இது போன்ற பள்ளிகளில் முதலில் தமிழைத் திணிப்போம்; பிறகு நாட்டில் இந்தி திணிப்பை எதிர்போம் !

இன்று நம் மக்களுக்கு, பணி காரணமாக ஆங்கிலம் ஒரு அத்தியாவசியமான மொழியாக மாறிவிட்டது. கற்றுகொள்ளத் தான் வேண்டும். மேலும், இந்தி படித்தால், வட இந்தியாவில் வேலை கிடைத்தாலும் போய்ச் சமாளிக்கலாம். மேற்கண்ட இக்காரணத்திற்காக தமிழை மறக்க / ஒதுக்கக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 8 ஜூன், 2014

சிறுகதை - கடற்கரை கோவில்

வணக்கம்,

நாளை இப்படியும் நடக்கலாம் என்பதை வைத்து தான் இந்த சிறுகதை
எழுதப்பட்டுள்ளது. விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன.

சிறுகதை - கடற்கரை கோவில்
*******************************************
"பசங்களா! ரெண்டு பெரும் ரெடியா? கிளம்பலாமா?" என்று கேட்டார் தாத்தா.

"நாங்க ரெடி ! அப்பவே கிளம்பிட்டோம்.. "

"வாங்க போகலாம்.. "

"ரவி, ராஜு... ரெண்டு பேரும் இங்க பாருங்க.. தாத்தா கிட்ட சாப்பிட அது வேணும் , இது வேணும்னு அடம் பிடிக்கக் கூடாது.. இங்கே வீட்ல நிறைய ஸ்நாக்ஸ் இருக்கு... சமத்தா போயிட்டு, சமத்தா வரணும்.. சரியா ??"- அம்மா.

"ஒ.கே. மம்மி !! ...."

"சரிப்பா..போயிட்டு இருட்டுறதுகுள்ள சீக்கிரம் வந்துடுங்க "

"சரிம்மா.. நான் பத்திரமா பாத்துகிறேன்..." என்று கூறிவிட்டுக் கைகடிகாரத்தைப் பார்த்தார். அதுவரை கரும் திரையாக இருந்த கடிகாரம், அவர் பார்த்தவுடன், "TIME : 04:35 PM ; DATE: 14TH MAY ; WEATHER: 49 °C;...." என்று ரேடியத்தில் மாறி மாறி காட்டியது. மூவரும் பொடி நடையாக மெயின் ரோட்டுக்கு நடந்தனர்.

கோடை விடுமுறையோட்டி, அன்று காலைதான் ரவியும், ராஜுயும் அவர்கள் தாத்தா வீட்டிற்கு வந்திருந்தனர் . தாத்தாவுடன் வெளியில் செல்வது என்றால் அவர்களுக்கு அலாதி பிரியம்.

"தாத்தா! இப்போ நம்ம எங்க போறோம்? " என்று ஆவலுடன் வினவினான் ராஜூ.

"கடற்கரை கோவிலுக்கு.. "

"கடற்கரை கோவிலா?? அது எங்க இருக்கு? " - ரவி.

"இங்க தான்..கொஞ்ச தூரத்திலே.... ஆட்டோல போகணும் . "

மெயின் ரோடு வந்ததும், ஆட்டோவில் ஏறி கடற்கரைக்குச் சென்றனர். ஒரு பத்து நிமிடம் இருக்கும்; கடற்கரை வந்தாயிற்று. வரும் வழியில், ஒரு கீ.மீ தொலைவிலிருந்தே அலை ஆர்ப்பரிக்கும் சத்தம் கேட்டது. பிள்ளைகளுக்குக் கடலை பார்த்ததும் ஆனந்தம் தாங்க வில்லை. ரவியும், ராஜுவும் கடல் நீரை நோக்கி ஓடினர்.

"பாத்து..பாத்து.. ஓடாதீங்க.. " எனப் பதறினார் தாத்தா.

கடற்கரைக்கு மிக அருகில் இருந்தது ஒரு பெரிய பழமையான பெருமாள் கோவில். கடல் காற்றால் சுவரெல்லாம் உப்பு படிந்து கிடந்தது. மேலும் கடல் நீர் அரிக்காமல் இருக்கப் பெரிய கற்கள் கடற்கரையில் போடப்படிருந்தது.

அன்று மக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருக்கவே, இருவர் கையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தாத்தா கோவிலுக்குள் சென்றார்.

"இது தான் இங்க இருக்கிற கடற்கரை கோவில் .. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி கட்டினது.. "

"எந்த வருஷம் ??"

"ம்ம்ம்... 8-ஆம் நூற்றாண்டில்.. "

"ஏன் இப்படிப் பாதிக்கு மேல இடிஞ்சி போயிருக்கு ?"

"கடல் தண்ணி வந்து அடிச்சி இப்படி ஆயிடிச்சு.."

"............"

எல்லோரும் உள்ளே சென்று பெருமாளை சேவித்தனர். பிரகாரம் சுற்றி வந்தனர்.

"இந்தப் பெரிய மண்டபம் எதுக்குத் தாத்தா ? " என்று ராஜு கேட்டான்.

"வெள்ளைக்காரன் காலத்தில இங்க தான் அரிசி மூட்டையெல்லாம் சேமிச்சு வெச்சாங்களாம்.. அப்புறம் இங்கே தான் சாமிக்கு அலங்காரம், திருகல்யாணமெல்லாம் நடக்கும்... "

"ஓஹோ!! அப்படியா!! "

மேலும் அந்தக் கோவிலின் சிறப்பை பற்றிச் சொல்லி கொண்டிருந்தார் தாத்தா.

சிறிது நேரம் கலை நயம் மிக்க அந்தக் கோவிலை சுற்றி பார்த்துவிட்டு வெளியே கடலுக்கு வந்தனர். நடுகடலில் ஆறடி அலையாக ஆரம்பித்த அலைகள், கரையைத் தொடும் போது ரவி, ராஜுவின் காலடிகளை மட்டும் கழுவி விட்டுச் சென்றது.

"என்ன தாத்தா, கடலையே பாத்துகிட்டு இருக்கீங்க? "

"ஹ்ம்ம்.. ஒண்ணும் இல்ல..ரவி, அங்க பாரு.. "

"எங்க ???"

"இரண்டு பறவை நடுக் கடல்ல பறக்குறது தெரியுதா ?? "

"ஆமா.. தெரியுது.."- ரவி

"ஆமா ..எனக்கும் தெரியுது.."என்றான் ராஜு

"அங்க தான் நன் சின்ன வயசில விளையாடிகிட்டு இருந்தேன். "

"கடல்லையா ??? பொய் !!! பொய் !!! பொய் சொல்றீங்க!" என்று கூறி சிரித்தான் ரவி.

"உண்மைதான் ரவி... அப்போ அதுதான் கடற்கரையா இருந்துச்சு.. "

"நிஜமா தாத்தா??? " என்று புருவம் விரிய ஆர்வத்துடன் கேட்டான் ராஜு.

"ம்ம்.. அது தான் மெரினா கடற்கரை... நான், என் பிரண்ட்ஸ் எல்லாம் அங்க தான் விளையாடுவோம்... இந்தப் பக்கம் பாரு.. தூரத்துல ஒரு போட் தெரியுதா??"

"ஆங்.. தெரியுது .."

"அதையும் தாண்டி, அங்க ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் இருந்துச்சு.. "

"இப்போ பல்லாவரம் மாமா வீட்டுகிட்ட இருக்குல்ல ..அதை விடவா..."

"இல்ல..இல்லை..அது 10 வருஷம் முன்னாடி தான் கட்டினது.. இது அதை விடப் பெரிசு.. "

"வேற என்னலெல்லாம் இருந்துச்சு தாத்தா?? "

"பீச்சோரமா தலைவர்கள் சிலை , சமாதிகள் , ஒரு நீச்சல் குளம், இரண்டு பெரிய காலேஜ், ஒரு யுனிவர்சிடி, மீன் பிடிக்கிற ஜனங்க வாழ்ற கிராமம் .... இன்னும் நிறைய.."

"இப்போ அதெல்லாம் எங்க தாத்தா??? "

"கடல் ஆக்கிரமிச்சிடிச்சி..."

"எப்போ ..??"

"ஹ்ம்ம்...எல்லாம் 40 வருஷதுக்கு முன்னால சுனாமி வந்து அடிச்சிகிட்டு போச்சு.. கடல் ஆக்கிரமிச்ச இடமெல்லாம், எல்லாக் கட்டிடங்களும் இடிஞ்சி தரமட்டமாச்சி.. நிறையப் பேர் செத்து போய்டாங்க.."

"ஏன் கடல் ஊருக்குள்ள வந்துச்சு தாத்தா ??? "

" இந்தப் பூமி சூடாகும் போது கடல் தண்ணி இப்படி ஊருக்குள்ள வருமுன்னு சொல்வாங்க "..

"அப்போ  மறுபடியும் கடல் ஊருக்குள்ள வருமா தாத்தா?? " என்று பயத்துடன் கேட்டான் ரவி.

"வரலாம்... ஆனா அதுக்கு இன்னும் கொஞ்சம் வருஷம் ஆகும்.." என்று சமாதனப்படுத்தினார் தாத்தா.

தாத்தா சொன்னது முழுவதும் புரியவில்லை என்றாலும், புரிந்தது போல ரவியும், ராஜுவும் தலையாட்டினர்கள் .

வானம் இருட்ட ஆரம்பித்தது. மூவரும் கடற்கரையை விட்டு, வீட்டுக்கு செல்ல ஆயத்தம் ஆனார்கள். தூரத்தில் சீறி வரும் ஆட்டோவை கைகாட்டி மறித்தார் தாத்தா.

"எங்க சார் போகணும்.?"

" அப்துல்லா தெரு, கான்வென்ட் ஸ்கூல் .. "

"போலாம் சார்.. "

"கேஷ் தான்... TRANSCARD-ல பணம் இல்ல. டாப் அப் பண்ணனும்... "

"அப்ப ஐநூறு ரூபா ஆகும்..."

"ஐநூறு ரூபாயா??? TRANSCARD யூஸ் பண்ணாலே 300 ரூபா தான் வரும்.. நீ 500 ரூபா கேக்குறியே???? திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிருந்து எக்மோர் கான்வென்ட் போக ஐநூறு ரூபாயா ?? நல்ல கதையா இருக்கே... "

"என்ன சார் பண்றது... பெட்ரோலே ஒரு லிட்டர் எண்ணூற்றி அம்பது ரூபாய்க்கு விக்குது, குவாட்டரே  தொள்ளாயிரத்தி  ... "

"சரி ..சரி.. விடு ...போலாம்.... ரவி, ராஜூ ரெண்டு பெரும் ஏறுங்க.."

ஆட்டோ எக்மோர் அப்துல்லா தெருவை நோக்கி சென்றது.


-----

குறிப்பு :

தற்போது, சென்னை மெரினா கடற்கரையிலிருந்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் 1 கி.மீ தொலைவில் உள்ளது. கதையின் படி, கடல் ஒரு கி.மீ தூரம் கரையை ஆக்கிரமித்துள்ளது.

TRANSCARD என்பது மல்டி யுசபில் (multi usable) ஸ்மார்ட் கார்டு தான். பணம் டாப் அப் செய்து கொண்டு, ஆட்டோ, டாக்ஸி, புறநகர் ரயில்/பேருந்துகளில் பயணப் படும்போது கிரெடிட் கார்டு போல swipe செய்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 25 மே, 2014

மக்களின் மனம் கவர்ந்த கோச்சடையான் !

வணக்கம்,

There are Heroes, There are Superheroes, But There is Only One Rajnikanth.

இங்கு ஹீரோக்கள் இருக்கிறார்கள்; சூப்பர் ஹீரோக்களும் இருக்கிறார்கள்; ஆனால் ரஜினிகாந்த், ஒரே ஒருவர் மட்டுமே.

இது தலைவருக்காக சொல்லபட்டதானாலும், அது தான் உண்மை. கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ஒரே உச்சபட்ச நடிகர். இவரை பல்வேறு பாத்திரங்களில், பல்வேறு நடிப்பில், பல்வேறு கோணங்களில் பார்த்துள்ளோம். கருப்பு-வெள்ளை, ஈஸ்ட் மென் கலர், 3D என திரையில் பல வடிவங்களில் ரசித்துள்ளோம். இப்போது மோஷன் கேப்சர் (motion capture) என்னும் புதிய தொழில் நுட்பத்தில், புதிய பரிமாணத்தில் தமிழ் சினிமாவை அடுத்த படிக்கு கொண்டு போக, முதல் அடி எடுத்து  வைத்து நம்மை ஆள வருகிறார் கோச்சடையான்.     

படத்தின் ட்ரெயிலர் வந்த நாள் முதல், படத்தில் அனிமேஷன் சரியில்லை; கார்ட்டூன் படம் போல இருக்கிறது ; கம்ப்யூட்டர் வீடியோ கேம் போல ஆட்கள் இருக்கிறார்கள் என்று குறை கூறப்பட்டது . சொல்லப்போனால் உண்மையும் அது தான். டிரைலரில் ரஜினியின் தாண்டவம், நடந்து வருவது, எல்லாம் பார்த்து ஒரு கார்ட்டூன் படம் என்றே கேலி பேச ஆரம்பித்து விட்டார்கள்.  சூப்பர் ஸ்டார் ஒரு சீனில் நடித்தாலும் படம் ஓடிவிடும் என்று நம்பி கொண்டிருந்தவர்கள், இந்த படம் ஓடாது என்று பகிரங்கமாகவே சொன்னார்கள்; "கோச்சடையான்  பிளாப் ஆக 10 காரணங்கள் " என்று சில இணைய தள ஊடகங்கள் செய்திகளை பரப்பவும் ஆரம்பித்தன.

இதையேல்லாம் பார்த்து கொஞ்சம் யோசித்த தலைவர், கோச்சடையான் படம் வருவதற்கு முன் "லிங்கா"-வை ஆரம்பித்து விட்டார். பொதுவாக ரஜினியின் படம் வந்து சில நாட்களுக்கு பிறகு தான் அடுத்த படத்தின் பேச்சு அடிப்படும். லிங்காவின் இந்த அவசர ஆரம்பத்திற்கு காரணம் இதுவாக கூட இருக்கலாம்.

ஆனால், இந்த கேலிகூத்தை அடித்து, துவைத்து தன் வழக்கமான பாணியில் ரசிகர்களையும் , மக்களையும் கவர்ந்திழுத்து விட்டார் ரஜினி.
இப்படம் ஆஹா !! ஓஹோ!!!,  இந்தியா சினிமாவில் இது போன்ற கதையே வரவில்லை என்றெல்லாம் நான் சொல்லவில்லை. நாம் ஏற்கனவே கருப்பு வெள்ளை படங்களில் பார்த்த  ஒரு சாதாரண கதை தான். அதைதான்  தொழில் நுட்பத்துடன் சேர்த்து, இரண்டு மணி நேரம் நம்மை உட்காரவைத்து, போரடிக்காமல் காட்டுகின்றனர். இரண்டு மணி நேர படத்தில், 6 பாடல்கள்  தான் கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது. ஆக மொத்தத்தில்,  குடும்பத்துடன் பார்க்கும் ஓர் நல்ல பொழுது போக்கிற்கான படம் என்று சொல்லலாம்.


படத்தின் background animation நன்றாக உள்ளது. 3டி -யில் பார்பதற்கும், 2டி யில் பார்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்களின் முக அமைப்புதான் சற்று தடுமாற வைக்கிறது... "இவரா அவர் ???? "; "அந்த பெண்ணா அது??? " என்று நம்மையே குழப்பம் அடைய செய்கிறார்கள். அது மட்டும் தான் எனக்கு குறையாக தெரிகிறது. சற்றே பழைய ராஜா காலத்து பழி வாங்கும் கதை என்றாலும், அனிமேஷனுக்காக குழந்தைகளும், ரஜினிக்காக ரசிகர்களும் , பொழுது போக்கிற்காக மற்றவரும் இந்த படத்தை ஒரு முறை தாராளம் பார்க்கலாம்.! 

அவதார், டின்-டின் போன்ற ஆங்கில படங்களோடு ஒப்பிடுபவர்களுக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். ஹாலிவுட் திரைப்படங்களெல்லாம் 2000 கோடி/ 4000 கோடியில், 5 அல்லது 6 ஆண்டுகளில் தயாரகிறது. இந்தியாவில் 200 கோடியில் அதே அளவில் ரிசல்ட்டை எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. நம் மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக அவதார், டின்-டின் போன்ற படங்களை எடுத்த அதே தொழில்நுட்பம் உபயோகிக்கப்படுக்கிறது என்று பட இயக்குனர் சொல்லியிருக்கலாம்.

இந்த 100 வருட இந்திய திரைப்பட வரலாற்றில்,


ராஜா ஹரிசந்திரா (1913) -இந்திய சினிமாவின் முதல் ஊமை படம்.

கீசக வதம் (1918) - தென் இந்திய சினிமாவின் முதல் ஊமை படம்.

ஆலம் ஆரா (1931)  - இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்.
 
கிசான் கன்யா (1937) - இந்திய சினிமாவின் முதல் கலர் படம்.

அலிபாபாவும் 40 திருடர்களும் (1956) - இந்திய சினிமாவின் முதல் கேவா கலர் படம்.

பானியன் டீர்  (1957) - இந்திய சினிமாவின் முதல் அனிமேஷன் படம்.

ராஜாராஜ சோழன் (1973) - தென் இந்திய சினிமாவின் முதல் சினிமா ஸ்கோப் படம்.

மை டியர் குட்டி சாத்தான் (1984) - இந்திய சினிமாவின் முதல் 3டி படம்.

ராஜா சின்ன ரோஜா (1989) - இந்திய சினிமாவில் முதல் முதலில் அனிமேஷன் கதாபாத்திரங்கள், நடிகர்களுடன் நடித்த படம்.

கோச்சடையான் (2014) - இந்திய சினிமாவின் முதல் மோஷன் கேப்சர் படம்.

அந்த வரிசையில் இந்திய சினிமாவின் முதல் மோஷன் கேப்சர் திரைப்படம் கோச்சடையான் என்று  பெருமையாக சொல்லி கொள்ளாமல் இருக்க முடியாது.

இது ஒரு டை-ஹர்ட் ரஜினி ரசிகனின் விமர்சனம் என்று ஏளனம் செய்தாலும் சரி , அல்லது பொதுவாக ஓர் சினிமா ரசிகனின் பார்வை என்று நினைத்தாலும் சரி. என்னை பொருத்தவரை, கோச்சடையான் - இந்திய சினிமாவின் ஓர் மைல்கல் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்
  

வெள்ளி, 23 மே, 2014

எவன் அப்பன் வீட்டு சொத்து ?

வணக்கம் ,

நாம் அனைவரும் வருடம் முழுக்க உழைத்து சேர்க்கும் பணத்தில், மூன்றில் ஒரு பகுதியை அரசுக்கு வரிப்பணமாகக் கட்டுகிறோம். அந்த வரியெல்லாம் சரியான வழியில் செலவு செய்யப்படுகிறதா என்று நாம் எண்ணி பார்ப்பதில்லை. நாம் கட்டும் வரிப்பணம் அரசாங்க ஊழியருக்குச் சம்பளமாக, நாட்டு முன்னேற்றதிற்காக, நல திட்டங்களுக்காக, கல்வி/தொழில் வளர்சிக்காகச் செலவு செய்யபட வேண்டும். பெரும்பாலான மக்களின் வரிப்பணம் எங்கெங்கோ, எப்படியெல்லாமோ வீணாகி கொண்டிருக்கறது.

அரசியல் கடலில் போட்ட பெருங்காயம்-

அரசியல்வாதிகள் சிலர் அவர்களின் சொந்த உபயோகத்திற்காகவும், கட்சி பணிக்காகவும் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர். முதல்வர் வேட்பாளரும், பிரதமர் வேட்பாளரும் பிரசாரம் செய்யத் தனி விமானம் தேவையா ? இவை கட்சி பணத்திலிருந்து கொடுக்கபடுகிறதா அல்லது அவர்களின் சொந்த பணமா? அல்லது மக்களின் வரிப்பணமா என்று புரியாத புதிராக உள்ளது. அது மட்டுமல்லாமல் ஆட்சியாளர்கள் சிலர், அரசியல் லாபத்திற்காகப் பத்திரிக்கையிலும், ஊடகங்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் தருகின்றனர். மேலும் பாராட்டு விழாக்கள், கட்சி பெருவிழாக்கள் மற்றும் அனாவசிய ஆடம்பரங்கள் எல்லாமே நம்முடைய வரிப்பணத்தில் தான் செலவு செய்யபடுகிறது. நமக்குத் தரவேண்டிய இலவச/மானிய மின்சாரத்தையும் வெளிநாட்டுக் கார்ப்பரேட் கம்பனிகளுக்குத் தாரை வார்த்துத் தரப்படுகிறது.

இவை மட்டுமா??

 நாம் ஏதாவது ஒரு பொதுத் துறை வங்கியில் கடன் வாங்கிவிட்டுக் கொடுக்காமல் விட்டால், நம்மைச் சும்மா விட மாட்டார்கள். கடனாளியிடம் பணம் இல்லை என்று தெரிந்தாலும், ஃபைன் , ஜப்தி, சிறை என அலைகழிப்பார்கள். வங்கியிலிருந்து (அடி)ஆள் அனுப்பி வைத்து கடனாளியை அசிங்க படுத்துவார்கள். இந்த மாதிரி சட்டமெல்லாம் எல்லோருக்கும் பொது என்று நாம் நம்பி கொண்டிருக்கிறோம், ஆனால் அது அப்படியல்ல. நாடு முழுக்கப் பொதுத் துறை வங்கிகளிடம் கோடான கோடி பணத்தைக் கடனாக வாங்கிவிட்டு, ஏமாற்றும் பெரும் செல்வந்தர்களும், அரசியல் புள்ளிகளும் இருக்கதான் செய்கின்றனர்.


நாடு முழுக்க 24 பொதுத் துறை வங்கிகளில் 3 லட்சம் கோடிகளுக்கு மேல் கடன் வாங்கித் திருப்பித் தராமல் பட்டை நாமம் போட்ட பெரிய நிறுவனங்கள் , தொழிலதிபர்கள் பலர் உள்ளனர். கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையாவின் பெயர் மட்டும் வெளியே வந்திருகிறது. இது போன்ற இந்தியாவிலுள்ள பல பெரிய நிறுவனங்கள், வங்கிகளில் பல லட்சம் கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. அவ்வளவு ஏன் ? பெயரே பிரபலமாகத் தெரியாத 10 நிறுவனங்கள் மட்டுமே 16 ஆயிரத்து 200 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பிக் கட்டாமல் ஏமாற்றுகின்றனர். கடந்த ஆறு மாதங்களில் மற்று 400 பெயர்களில் 70 ஆயிரத்து 600 கோடி கடன் வழங்க பட்டு, இதுவரை ஒரு தவணை கூடத் திருப்பிக் கட்ட வில்லையாம். இது கிட்டத்தட்ட வங்கி புகுந்து கொள்ளை அடிப்பது போலதான் இருக்கறது.

'வராக்கடன்' என்று வங்கி குறிப்பிடும் இந்தக் கடன்கள் எல்லாம் திரும்பி வராது என்று தெரிந்தே வங்கிகளால் கொடுக்கப்பட்டுள்ளன. வங்கியின் உயர் அதிகாரிகளின் சுய லாபத்திற்காகவும், அரசியல் நிர்பந்ததிற்காகவும் போதுமான ஜாமீன் இல்லாமல் பணத்தை அள்ளி கொடுகின்றனர். கடந்த 14 ஆண்டுகளில் அவ்வாறு வராக்கடன்கள் தள்ளுபடி செய்தது மட்டும் 2 லட்சத்து 4,000 கோடி!

சில ஆட்சியாளர்கள், அரசியல் ஆதாயத்திற்காக விவசாயக் கடனை, கூட்டுறவு கடனை வட்டியின்றி அறவே தள்ளுபடி செய்துவிடுகின்றனர். இதில் 60% ஏழை விவசாயிகள் பலன் பெறுகிறார்கள் என்று வைத்து கொண்டாலும் , மீதம் 40%, விவசாயக் கடன் என்ற பெயரில் மற்ற தொழிலில் பணம் போட்ட பண்ணையார்களும், வசதி படைத்தவர்களும் அதிகம் பலன் பெறுகிறார்கள்.

இதெல்லாம் எவன் அப்பன் வீட்டுப் பணம் ? எல்லாமே நம்முடைய வரிப்பணம் தான். வங்கிகள் நாட்டுடைமையாக்கியது மக்களின் நலனுக்காக என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த வங்கிகளால் பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் தான் நலனை சொகுசாய் அனுபவித்துக் கொண்டிருகின்றனர். வராக்கடன்களைத் திருப்பி வாங்குவதைப் பற்றி அரசு ஓர் நல்ல முடிவு எடுக்காத பட்சத்தில், நம் பொதுத் துறை வங்கிகள் திவாலாகி போக வாய்ப்புகள் உண்டு. வங்கியில் நாம் சேர்த்து வைத்த பணமும் சேர்ந்து திவாலாகி போகவும் வாய்ப்பு உண்டு என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு வங்கிகளில் தான் நம்மூர் பணக்காரர்களின் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவில் சில பொதுத் துறை வங்கிகளே இப்படிச் சுவிஸ் வங்கி போலச் செயல்படுவது எங்குப் போய் முடியும் என்று தான் புரியவில்லை. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், பொதுத் துறை வங்கி நிறுவனமும் தான் இந்த வராக்கடன்கள் பற்றியும், உத்திரவாதம் இல்லாமல் கடன் கொடுப்பது பற்றியும் நல்ல முடிவெடுக்க வேண்டும். நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும் !

வங்கிகள் பற்றிய தகவல் - குமுதம் ரிப்போர்ட்டர் -18.5.2014


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 4 மே, 2014

அழகற்ற குரூபி ஆகிறாள் !

வணக்கம்,

பிள்ளைகளுக்கு பரீட்சை முடிஞ்சாச்சு. வெயிலுக்கும், கோடை விடுமுறைக்கும் சேர்த்து நம்மவர்கள் எதாவது மலை பிரதேசமாக போகலாம் என்று எண்ணினால், நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ஊட்டியும், கொடைக்கானலும் தான். இப்பதிவில் பார்க்க இருப்பதும் மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலை பற்றிதான்.

இயற்கை அன்னை நமக்கு பல செல்வங்களை அள்ளிதந்து கொண்டிருக்கிறாள். கனிம வளங்களாக, நீராக, வன உயிரினங்களாக, மரம், செடி கொடிகள் என பல விலைமதிப்பில்லா செல்வங்களை அளித்து கொண்டிருகிறாள். நம் மக்களோ அறிவியலின் முன்னேற்றம் காரணமாக அந்த செல்வங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டிருக்கிறார்கள்.

கோடை காலத்தில் மக்கள் விரும்பி போகும் சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். கோடை வெயிலுக்கு இதமாக கானல் (குளிர்ந்த வனமும், வனம் சார்ந்த இடமும்) இருப்பதால், மக்கள் கோடை விடுமுறைக்கு இங்கு வந்து விடுகின்றனர்.

பெயருக்கு ஏற்றார் போல பார்க்கும் இடமெல்லாம் மலைகளும், பச்சை பசெலன மரங்களும், காடுகளும், நீருற்றுகளும் இருக்கின்றது. மலைக்கு இடையில் போகும் போது, ஆங்கிலேயர் காலத்தில் விதைத்து வைக்கபட்டு, 100 அடிக்கு மேல் வளர்ந்து நிற்கும் யூகலிப்டஸ் மரங்களும், சவுக்கு மரங்களும் நம்மை வரவேற்று நிற்கின்றது.

சில இடங்களில் மக்களின் சுவடே தெரியாத வண்ணம் இருந்த கொடைக்கானல் மலை காடுகள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாசு படிய ஆரம்பித்திருகிறது. மக்களின் அன்றாட வாழ்வில் உபயோகப்படும் பிளாஸ்டிக்  பொருட்கள், குப்பைகள், பிளாஸ்டிக் பேப்பர்கள்/ பைகள் சுற்று சூழலை மாசுபடுத்தி வருகிறது. இந்த குப்பைகள் மக்கி மண்ணில் புதையும் போது, நிலத்தடி நீர் வளம் குறைகிறது. நீர்நிலை வறண்டு போகிறது. மழையும் பொய்க்கிறது. விவசாயம் பாதிப்படைகின்றது. மரங்களுக்கு தண்ணீர் இல்லாததால் காட்டில் சில நூற்றாண்டை கடந்த மரங்கள், கோடையில் சில மாதங்களை  கூட கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும், காட்டில் மலையேற்ற நடைபயணம் செய்பவர்களும், சுற்றுலா வருபவர்களும், குப்பைகளையும், பிளாஸ்டிக் குடுவைகளையும் வனத்தில் வீசி விடுகின்றனர். ஒவ்வொரு தெருமுனையிலும் "பிளாஸ்டிக் குப்பைகளை போடாதீர் ! வனத்தின் தூய்மை காப்பீர் !" என்ற அறிவிப்பு பலகைகள் இருந்தாலும், மக்கள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. குப்பைகளை  உட்கொள்ளும் வன விலங்குகள் உயிரிழக்க நேரிடுகிறது. மேலும் அடர்ந்த வனத்தில் கட்டப்படும் தங்கும் மாற்றும் உணவு விடுதிகளாலும், வன மிருகங்கள் சுதந்திரமாய் வாழ இடையூறாக இருக்கிறது.  கொடை நகராட்சியும் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை அழிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதைவிட என்னொமொரு கண்ணனுக்கு தெரியாத பேராபத்தையும் கொடைக்கானல் நகரமும்,காடுகளும் எதிர் நோக்கி கொண்டிருக்கிறது. கொடைக்கானல் காடுகள், பாதரச நச்சு பொருட்களால் மாசுபட்டு கொண்டு இருக்கிறது. இங்குள்ள ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தில் நம்முடைய உடம்பின் வெப்பத்தை கூறும் தெர்மோமீட்டரை உற்பத்தி செய்கின்றனர். இதிலிருந்து வெளியேறும் நச்சு மிகுந்த பாதரசத்தால் சுற்றுசூழலும், வனமும் அழியும் நிலை ஆரம்பித்திருக்கிறது. இந்த தொழிற்சாலையில், உடைந்து போன அல்லது உபயோகமில்லாத தெர்மாமீட்டரை சரியான சுத்திகரிப்பு முறையில் இவர்கள் அகற்றுவதில்லை. பாதரசமிகுந்த தெர்மா மீட்டர் கண்ணாடிகளை குப்பை கூளத்திலோ, அல்லது காட்டிலுள்ள கிடங்கிளோ போட்டுவிடுகின்றனர். இதன் மூலம் பாதரசம் காற்றில் பரவி, காடுகளை மாசிபடுத்தி விடுகிறது. இதில் வேலை செய்பவர்களும், நோய் வாய்ப்பட்டு போவதாகவும், இறப்பதாகவும் சொல்கின்றனர். சமூக ஆர்வலர்கள் போராட்டத்தின் பெயரில் 2001-ஆண்டு அரசு இந்நிறுவனத்தை மூட உத்திரவிட்டுள்ளது.


அதுமட்டுமல்ல, மலைகளின் இராணி என்று சொல்லப்படும் ஊட்டியும் இது போன்ற சுற்றுசூழல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. சொல்ல போனால், கொடைக்கானலை விட  ஊட்டி மிகவும் மாசுபட்டுள்ளது என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். வண்டியிலிருந்து வெளிப்படும் CO2 வாயு, தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றபடும் நச்சு காற்று ,கழிவு நீர் போன்றவை ஊட்டியை மேலும் மாசுபடுத்துகிறது. இங்கும், பிளாஸ்டிக்கும், குடுவைகளும் இயற்கை மாசடைய பெரும்பங்கு வகிக்கிறது. இதன் மூலம், ஊட்டி ஏரி மாசடைந்து காணப்படுகிறது. மீன்களும், பிற உயிரினங்களும் அழியும் நிலையில் உள்ளது. உலக புகழ் ரோஜா தோட்டமும் ஊட்டியில் தான் இருக்கிறது. நிலம்,காற்று மாசடைவதால் தாவரங்களும் அழியும் நிலையில் இருக்கிறது.

இது ஊட்டி ,கொடைக்கானலில் மட்டுமல்ல.. நம் நாடெங்கும் இது போன்ற சுற்றுசூழல் கேடுகள் இருக்கிறது. அவைகளை வளரவிட்டால், நம் நாடு பல செல்வங்களை இழக்க வேண்டி வரும்.
 
வருடந்தோறும் சுற்றுலாவிற்காக கொடைக்கானலுக்கும், ஊட்டிக்கும் பலர் வருகின்றனர். அரசுக்கு வருமானமும் பெருகுகிறது. அதை வைத்தது கொண்டு நம் சுற்று சூழலையும், இயற்கையின் பேரழகையும் காப்பது நம் அரசின் கடமையாகும். அரசின் கடமை மட்டுமல்ல;  ஒவ்வொரு மக்களின் கடமையும் தான். இதை இப்படியே விட்டுவிட்டால், வரும் காலங்களில் நம் இயற்கை அன்னை அழகற்ற குரூபி ஆனாலும் ஆச்சிரியபடுவதற்கில்லை.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்