புதன், 21 ஆகஸ்ட், 2013

சென்னையின் வயது 374 !

வணக்கம்,

ஆகஸ்ட் 22, 2013 - சென்னையின் வயது 374 (மெட்ராஸ் டே - Madras Day).

சிங்கார சென்னை - தமிழ் நாட்டின் தலைநகரம், தென்னிந்தியாவில் வர்த்தக, கலாச்சார, பொருளாதார மற்றும் கல்வி மையமான ஒரு பெருநகரம். தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை சேவைகளில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நகரம். இன்னும் பல சிறப்புகளை சொல்லி கொண்டே போகலாம். நம் சிங்கார சென்னை நாளை (22 ஆகஸ்ட்) 375 ஆம் ஆண்டில் அடியேடுத்து வைக்கிறது. இப்பேர்பட்ட சென்னையின் சில வரலாற்று சம்பவங்களையும், காலச்சுவடுகளையும், நான் இணையத்தில் படித்து வியந்த சில வரலாற்று சரித்திர குறிப்புகளை உங்களிடம் பகிர்கிறேன்.

நமது சென்னையின் வரலாற்றை சுருங்க சொல்ல வேண்டுமானாலும் கூட குறைந்தபட்சம் முதலாம் நூற்றாண்டு வரையாவது போக வேண்டும்.
So கி.பி .1-ஆம். நூற்றாண்டு...


கி.பி. 1-ஆம். நூற்றாண்டு (52-70) :
ஏசு கிறுஸ்துவின் சீடர்  செயின்ட் தாமஸ் (St. Thomas) மயிலாப்பூரில்  மத போதகம் செய்துள்ளார்.

கி.பி. 2-ஆம். நூற்றாண்டு  :
தொண்டைமண்டலம் (இன்றைய சென்னை ), தொண்டைமான் இளம்திரையன் என்ற பல்லவ அரசனால் ஆளப்பட்டது.

கி.மு 5-ஆம். நூற்றாண்டு - :
திருவள்ளுவர் பாண்டிய மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்தவர். (~ கி.மு. 2 - கி.பி. 5 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்.)

கி.பி. 7-ஆம். நூற்றாண்டு  :
மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது.
 
கி.பி. 8-ஆம். நூற்றாண்டு  :
திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவில் பல்லவ மன்னன் நரசிமவர்மனால் முதலில் கட்டப்பட்டது.

கி.பி. 16-ஆம். நூற்றாண்டு  :
சோழ மற்றும் விஜயநகர மன்னர்களால் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விரிவாக்கப்பட்டது.

1522-ல் போர்த்துகீசியர்கள் (Portuguese) இந்தியாவிற்கு வந்து சென்னை மயிலாப்பூர் அருகே சாந்தோம் (São Tomé) என்ற துறைமுகத்தை கட்டினர்.

1523-ல் சாந்தோம் சர்ச் (San Thome Church) கட்டப்பட்டது. 

கி.பி. 17-ஆம். நூற்றாண்டு  :
1612-ல் டச்சுகாரர்கள் (Dutch) இந்தியாவிற்கு வந்து முதலில் பழவேற்காடு (Pulicat) பகுதியை ஆக்கிரமிப்பு செய்தார்கள்.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, (British East India Company) 1626-ல் பழவேற்காட்டில் இருந்து 35 மைல் தூரமுள்ள துர்காபுரம் என்ற கிராமத்தில் தொழிற்சாலை கட்ட எண்ணினர்.

தர்மாலா சென்னப்ப நாயக்கரரிடமிருந்து ஆகஸ்ட் 22, 1639-ல் மூன்று மைல் நீள இடத்தை ஆங்கிலேயர் வாங்கி, சென்னை பட்டணம் என்று பெயரிட்டனர் . புனித ஜார்ஜ் கோட்டைக்கு (St. George Fort) அடித்தளம் போடப்பட்டது.

23 ஏப்ரல், 1640-ல்  புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.


நாட்டின் முதல் பிரிட்டிஷ் மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில்
16 நவம்பர் தொடங்கப்பட்டது ; பின்னர் அது அரசு பொது மருத்துவமனை ஆக்கப்பட்டது.

1668-ல்  திருவல்லிக்கேணி கிராமம் சென்னையுடன் இணைக்கப்பட்டது.

1672-ல் கிண்டி லாட்ஜ் (Guindy Lodge) கவர்னர் வில்லியம் லங்க்ஹோர்னே -ஆல் (Governor William Langhorne ) கட்டப்பட்டது.

1678-ல் காளிகாம்பாள் கோவில் கட்டி முடிக்கபட்டது.

1688-ல்  சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் (Municipal Corporation) தொடங்கப்பட்டது.

1693-ல் எழும்பூர், புரசைவாக்கம் மற்றும் தண்டையார்பேட்டை  ஆகிய கிராமங்கள் சென்னையுடன் இணைக்கப்பட்டது.

கி.பி. 18-ஆம். நூற்றாண்டு:

1701-ல்  பேரரசர் அவுரங்கசீப்பின் ஜெனரல் தாவுத் கான் (General Duad Khan) புனித ஜார்ஜ் கோட்டையை தாக்கினான். எனினும், ஆங்கிலேய அரசு கோட்டையை தக்க வைத்து கொண்டது.

திருவெற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, கொட்டிவாக்கம், சாத்தன்காடு   ஆகிய கிராமங்கள் சென்னையுடன் இணைக்கப்பட்டது.

1735-ல் சின்னதறிபேட்டை (சிந்தாதரிபேட்டை) உருவாக்கபட்டது.

வேப்பேரி, பெரியமேடு , பெரம்பூர், புதுப்பாக்கம் ஆகிய கிராமங்கள்  சென்னையுடன் இணைக்கப்பட்டது.

1746-ல்  பிரஞ்சு  தளபதி லா போர்டோநாய்ஸ்  (La Bourdonnais) புனித ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றினான்.

1749-ல் சாந்தோம் மற்றும் மயிலாப்பூர் சென்னையுடன் இணைக்கப்பட்டது.

1759-ல் பிரஞ்சு முற்றுகை முடிந்தது.

1767: ஹைதர் அலி முதல் முறையாக சென்னை நகரத்தை நோக்கி படையேடுத்தான்.

1768 ஆம் ஆண்டு சேப்பாக்கம் அரண்மனை ஆற்காடு நவாப் மூலம் கட்டப்பட்டது.

1772-ல் புனித ஜார்ஜ் கோட்டையில்  உள்ள பொது மருத்துவமனை அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.

1777-ல்  வீரப்பிள்ளை முதல் கொத்தவாலாக நியமிக்கபட்டார். அவர் பெயரை ஒட்டி 'கொத்தவால் சாவடி' பெயர் வந்தது.

1784-ல் முதல் செய்தித்தாள், மெட்ராஸ் கூரியர் (Madras Courier),  நிறுவப்பட்டது.

1785-ல்  சென்னையில் முதல் தபால் அலுவலக செயல்பாட்டை தொடங்கப்பட்டது.

1788-ல் தாமஸ் பாரி (Thomas Parry) என்ற ஆங்கிலேய வியாபாரி, சென்னையில் தொழிற்முறை வணிகம் ஆரம்பித்தார். அவர் பெயராலேயே இன்றைய பாரிஸ் (Parrys) உருவானது.

1794-ல் ஐரோப்பா வெளியே செயல்பட்டும் பழமையான அரசு சர்வே பள்ளி
(Government Survey School ) புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கப்பட்டது (தற்போதைய அண்ணா பல்கலைகழகம் ).

நவம்பர் 24, 1794-ல் அமெரிக்க தூதரகம் சென்னையில் திறக்கப்பட்டது.

1798-ல் ராயபேட்டையில் அமீர் மஹால் ஆற்காடு நாவப்-ஆல் கட்டப்பட்டது. 

1795-ல் திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி கட்டப்பட்டது.

கி.பி. 19-ஆம். நூற்றாண்டு:

1817-ல் சென்னை இலக்கிய சங்கம் (Madras Literature Society) நிறுவப்பட்டது.

1820-ல் ஆளுநர் தாமஸ் மன்ரோ (Thomas Munro) கிண்டி லாட்ஜ் கட்டடத்தை
ராஜ் பவனாக (Raj Bhavan)  ஆளுநர் மாளிகையாக மாற்றினார்.

1831-ல் முதல் வணிக வங்கி, மெட்ராஸ் பேங்க் (Madras Bank) நிறுவப்பட்டது.

1837-ல் சென்னை கிறிஸ்துவ கல்லூரி (Madras Christian College) தொடங்கப்பட்டது.

1841-ல்  ஐஸ் ஹவுஸ் (Ice House) கட்டப்பட்டது. ஐஸ் (Ice) கப்பல்கள் மூலம் அமெரிக்காவிலிருந்து  இருந்து கொண்டு வரப்பட்டு சேமிக்கப்பட்டது.
பின்னர் விவேகானந்தர் இல்லம் என பெயர் மாற்றம் பெற்றது.

1842-ல் முதல் கலங்கரை விளக்கம்  கட்டப்பட்டது.

1846-ல்  பச்சையப்பன் பள்ளி நிறுவப்பட்டது; பின்னர் பச்சையப்பன் கல்லூரியாக மாறியது.

1851-ல்  சென்னை அருங்காட்சியகம் கட்டப்பட்டது.

1853-ல் பார்க் டவுனில் (Park Town) உயிரியல் பூங்கா கட்டப்பட்டது.

1856-ல்  ராயபுரம் முதல் ஆற்காடு வரை ரயில்வே லைன்  (Railway line) கட்டப்பட்டது. முதல் ரயில் நிலையம் கட்டப்பட்டது.

1857-ல்  சென்னை பல்கலைக்கழகம் (Madras University) நிறுவப்பட்டது.

1862-ல்  மதராஸ் உயர்நீதி மன்றம் ( Madras High Court)  கட்ட ஆணை பிறப்பிக்கபட்டது.

1863-1864 ல் ஸ்பென்சர் பிளாசா  (Spencer Plaza) மதராஸ் மாகாணத்தில், மவுண்ட் ரோடு  சார்லஸ் டூரன்ட் ( Charles Durant ) மற்றும் ஜே ஸ்பென்சர் (J. W. Spencer), ஆகியோர்களால் நிறுவப்பட்டது.

1864-65-ல்  பிரெசிடென்சி கல்லூரி (Presidency College) நிறுவப்பட்டது.

1869-ல் நேபியர் பாலம் (Napier Bridge), அப்போதைய மெட்ராஸ் கவர்னர் பிரான்சிஸ் நேபியர் (Napier Francis) என்பவரால் கட்டப்பட்டது.

1873-ல் சென்னை சென்ட்ரல்(Chennai Central) ரயில் நிலையம் பார்க் டவுன்
(Park Town) நகரில் கட்டப்பட்டது.


1876-1878-ல் பக்கிங்காம் கால்வாய் (Buckingham Canal) தோண்டப்பட்டது.

1876-78 -ல் சென்னையில் பெரும் பஞ்சம் ஏற்ப்பட்டது.

1878-ல்  'தி இந்து' (The Hindu) செய்தித்தாள் நிறுவப்பட்டது.

1881-ல்  சென்னை துறைமுகம்  உருவாகியது.

1884-ல் அப்போதைய கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட்எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப்  (Mountstuart Elphinstone Grant Duff) என்பவர்  சீர்ப்படுத்தி மெரினா (Marina) என்று பெயரிட்டார்.

1886-ல் கன்னிமரா பொது நூலகம் (Connemara Public Library) நிறுவப்பட்டது.

1889-ல்  உயர் நீதிமன்ற கட்டிட அடித்தளம் போடப்பட்டது.

1892-ல்  மதராஸ் உயர்நீதி மன்றம் ( Madras High Court) நிறுவப்பட்டது.

1895-ல்  முதல் டிராம் வண்டி (Tram Service) சேவை தொடங்கி உள்ளது.

1899-ல் முதல் தமிழ் நாளிதழ் சுதேசிமித்திரன்  நிறுவப்பட்டது.

கி.பி. 20-ஆம். நூற்றாண்டு:
 
1906-ல்  இந்தியன் வங்கி (Indian Bank) நிறுவப்பட்டது.

1908-ல் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் (Chennai Egmore) கட்டப்பட்டது.

1914, செப்டம்பர் 22-ல் எம்டன் (Emden), ஜெர்மானிய போர்க்கப்பல் சென்னை துறைமுகத்தை தாக்கியது.

1916-ல் சென்னை கிரிக்கெட் கிளப் மைதானம் (Madras Cricket Club Ground) நிறுவப்பட்டது.( தற்போதைய M.A .Chidamdram Stadium )

1917-ல்  முதல் விமானம் சேவை ஆரம்பம்.

1925-ல்  லயோலா கல்லூரி (Loyala College) நிறுவப்பட்டது.
சென்னையில் முதல் பேருந்து சேவை தொடக்கம்.

1930-ல் கடலில் முழ்கி கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றிய டச்சு (Dutch) கப்பலோட்டிக்கு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கார்ல் ஷ்மிட் மெமோரியல் (Karl Schmidt Memorial)  கட்டப்பட்டது.

1931-ல்  புறநகர் மின்சார ரயில் சேவைகள் (சென்னை கடற்கரை- தாம்பரம்) தொடங்கியது.

1934-ல்  ராஜா சர் முத்தையா செட்டியார்  முதல் நகர மேயராக  (Mayor) நியமிக்கப்பட்டார்.

1938-ல்  ஆல் இந்தியா ரேடியோ (All India Radio) நிறுவப்பட்டது.

1946-ல் மாம்பலம், சைதாப்பேட்டை, அரசு பண்ணை, புலியூர் , கோடம்பாக்கம், சாலிக்கிராமம் , அடையார்,ஆலந்தூர் மற்றும் சைதாப்பேட்டை சென்னை நகருடன் இணைக்கப்பட்டது.

செம்பியம், சிறுவல்லூர், பெருவல்லூர், செம்பரம்பாக்கம், அயனாவரம், அமைந்தகரை, மடுவங்கரை, வேளச்சேரி ஆகியவை   சென்னையுடன் சேர்க்கபட்டது.

1947-ல் இந்திய தேசிய கொடி புனித ஜார்ஜ் கோட்டை மீது பறக்க விடப்பட்டது.
சென்னை நகரம், சென்னை மாநில தலைநகராக தேர்வு செய்யப்பட்டது.

1952-ல்  நேரு உள் விளையாட்டரங்கம் (Nehru Indoor Stadium) கட்டப்பட்டது.

1955-ல் பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) தொடங்கப்பட்டது.

1959-ல்  எல்.ஐ.சி (LIC) கட்டிடம் கட்டப்பட்டது.
சென்னை ஐ.ஐ.டி தொடங்கப்பட்டது.

1969-ல் சென்னை (Madras City),  தமிழ்நாட்டின் தலைநகரானது.

1974-ல் சென்னை தொலைக்காட்சி நிலையம் நிறுவப்பட்டது.

1975-ல் வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது.

1976-ல் தற்போதுள்ள புதிய கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.

1977-ல் கிண்டி தேசிய பூங்கா திறக்கப்பட்டது.

1983-ல்  உயிரியல் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது.

1988-ல்  பிர்லா அறிவியல் கோளரங்கம் கட்டப்பட்டது.

1996-ல்  மதராஸ், சென்னை (Chennai) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கி.பி. 21-ஆம். நூற்றாண்டு:

2000-ல் சென்னையில் தகவல் தொழில்நுட்பம் நிறுவனங்கள் கால் பத்திக்க தொடங்கின.
தரமணியில் டைடல் பார்க் (Tidel Park) திறக்கப்பட்டது.

2002-ல் சென்னை கோயம்பேட்டில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் (CMBT) திறக்கப்பட்டது.

2004, டிசம்பர் 26-ல் சுனாமி பேரலையால் சென்னை மற்றும் கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டது.

2010, ஜனவரி 11-ல் ஓமந்துரார் அரசினர் தோட்டம் (அ ) தமிழ் நாடு தலைமை செயலகம் மற்றும் சட்டமன்றம் வளாகம் திறக்கப்பட்டது.

2011, ஆகஸ்ட் 19-ல் ஓமந்துரார் அரசினர் தோட்டம் பல்சேவை  மருத்துவமணையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

(தகவல்: விக்கிபீடியா / கூகுள் )
மேலும் பழைய சென்னை படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

கொஞ்சம் சினிமாவைப் பற்றி ...

வணக்கம்,

என் வலைப்பூவில் (சினிமா ) திரைப்படம்  பற்றிய முதல் பதிவு. ஏற்கனவே பல பதிவர்கள் இதையே பற்றியே பதிவு செய்திருப்பதாலும் , திரை விமர்சனகளையோ, திரைக்கு பின்னால் நடப்பதையோ, வெள்ளித்திரை பற்றியோ பதிவு போடக்கூடாது என நினைத்திருந்தேன். அது மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தை அக்குவேறாக, ஆணிவேறாக  பிரித்து மேயும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய அப்பாடக்கர்  இல்லை. ஆனாலும் எனக்கு சினிமா பார்ப்பது தான் பொழுதுபோக்கு, ஆர்வம், பலம், பலவீனம், எல்லாமே...

சமூக வலைத்தளமான யூ-ட்யுபில் (YouTube ) இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது சில காணொளிகளை பார்க்க நேரிட்டது. அதை பற்றி எதோ எனக்கு தெரிந்ததை பதியலாம் என ஆரம்பிக்கிறேன்.

தமிழ் தவிர வேறு எந்த பிராந்திய மொழியும் தெரியாததால், மற்ற மொழி படங்களை பார்க்க ஆசையிருந்தும், வேற்றுமொழி படங்களையும், அந்த கதாநாயக(கி) களையும், கதை-வசனங்களையும் ரசிக்க முடிவதில்லை. தமிழில் பழசு முதல் புதுசு வரை எல்லா படங்களையும் பார்த்து ரசிப்பேன். (எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே !)

காணொளி 1:


முதலில் யூ-ட்யுபில் கண்டது, வெள்ளி திரையில் வெகு விரைவில் வரவிருக்கும் ஹிந்தி படமான "சென்னை எக்ஸ்பிரஸ்" படத்தின் "லுங்கி டான்ஸ் ப்ரோமோ" பாடல் தான். அந்த பாடல் சூப்பர் ஸ்டார்
ரஜினி காந்த்-க்காக காணிக்கை (TRIBUTE TO THALAIVA) என கூறி விட்டு, தலைவரை வெறும் ஒப்புக்கு சப்பாக உபயோகபடுத்தியுள்ளார், பாலிவூட் பாட்ஷா. படத்தில் சென்னை என்ற பெயர் வருவதாலும், காட்சிகளில் தமிழ் மக்களை லுங்கி அணிந்து அரிவாளோடு காட்டுவதாலும் ஒரு முன் ஜாக்கிரதைக்காக தான் ரஜினிக்கு இந்த ச்சிங் ..ச்சாக்...



ஷாருக்கானுக்கு உண்மையிலேயே தலைவர் மீது மரியாதை என்றால் மும்பையிலேயே  எடுக்கப்படும் ஒரு படத்தில் இந்த பாட்டு வைத்து இருக்காலம். இதே காரணத்திற்காக தான் ஷாருக்கானின் முந்தைய படமான ரா.ஒன்  படத்திலும் ரஜினியை ஒரு காட்சியில் சும்மாச்சிக்கும் காட்டி படத்தை தென்னிந்தியாவில் விளம்பரபடுத்தினர். தலைவரும் பெருந்தன்மையோடு ஒத்து கொண்டு நடித்தார். பொதுவாக படத்திற்காக தான் ட்ரெயிலர் போடுவார்கள்..ஆனால் கான்,  ட்ரெயிலருகே  ட்ரெயிலர் போடுவார் போலிருக்கே!!!

நான் பிறமொழி படத்திற்கோ, அல்லது பிறமொழி நாயகர்களுகோ எதிரானவன் இல்லை. தலைவரின் பெருமையை வெறும் விளம்பரத்திற்க்காக உபயோகிகிறார்களே என்ற கடுப்புதான்.

காணொளி 2:


அடுத்து இன்று வெளிவந்த செல்வ ராகவானின் "இரண்டாம் உலகம்" படத்தின்  ட்ரெயிலர் . இந்தா, அந்தா என போக்கு காட்டி, இன்று இசையும்  ட்ரெயிலரையும் வெளியிட்டுள்ளது தயாரிப்பு தரப்பு. ஆயிரத்தில் ஒருவன் போலவே இதிலும் ஒரு பெரிய தொகை கிராபிக்ஸ் தொழில்நுட்பதிற்க்காக போடப்பட்டுள்ளது தெரியவருகிது. இதில் காதலுக்காக ஒருவன் (நாயகன் தான்) எவ்வளவு தூரம் தான் போவான் என்று ஆரம்பிக்கிறார்கள். தற்காலத்தில் நடப்பது போலவும், கனவுலகத்தில் நடப்பது போலவும் போலவும் காட்டப்படுகிறது. கனவுலகத்தில்,வித்தியாசமான ஜந்துகளும், வித்தியாசமான நிலப்பரப்பையும் காட்டியுள்ளனர். ஆக,ஆயிரத்தில் ஒருவன் போல கண்களுக்கு விருந்து நிச்சயம் உண்டு என நினைக்கிறேன்.  

காணொளி 3:


சில நாட்களுக்கு முன் வெளிவந்த விஜய் & விஜய் -ன்  "தலைவா"  படத்தின்
ட்ரெயிலர். ஏற்கனவே எல்லோரும் பார்த்து, கருத்து வெளியிட்டு பல நாட்கள் ஆகிவிட்ட போதிலும், படம் இந்த வாரகடைசியில் வெளிவருவதால், படம் எப்படி இருக்குமோ என எதிர்பார்ப்புதான் எனக்கு. 
 
முதலில் இது அரசியல் பற்றிய படம் என்று சொன்னார்கள், பிறகு, எல்லா தாதாயிச படங்களிலும் வருவது போல ஒரு சாதாரண மனிதன்  (common man) எப்படி மக்களின் தாதாவாக மாறி வில்லன்களுக்கு சுளுக்கு எடுக்கிறான் என்பதே கதை போல. (என் கணிப்பு தான்!) ஊறுகாயாக சந்தானமும், பேருக்காக அமலா பாலும் இருப்பதாக தெரிகிறது. அதனால் படம் நன்றாக இருக்காது  என சொல்லவில்லை; இருந்தால் தேவலை என்று தான் சொல்லுகிறேன்.

மீண்டும் வேறு சினிமா பதிவில் பார்க்கலாம்...

பதிவை படிப்பவர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!!!

நன்றி !!!    

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

இதுதாங்க நம்ம ஊரு அரசியல் !!!

வணக்கம்,

ஒரு நாட்டின் அரசியல் வரலாறு என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. நம் தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றை சற்று திருப்பி பார்த்தால் என்ன என்று எனக்கு தோன்றியது. அதை பற்றி இணையத்தில் தேடி படித்து, உங்களிடம் பகிர்கிறேன்.(தகவல்: விக்கிபீடியா )

இன்றைய தமிழ்நாடு, சென்னை மாகாணம் (Madras Presidency) மற்றும் சென்னை மாநிலம் (Madras State) என அதன் வரலாற்றில் வெவ்வேறு பிராந்திய கட்டமைப்புகளில் இருந்தது.

1799 முதல் 1852 வரை கிழக்கிந்திய கம்பெனி சென்னை மாகாணத்தில் (சென்னை மட்டுமல்ல, பாரதம் முழுவதும்), ஜமீன்தார்ககளை குறுநில மன்னர்களை போல வரிவசூலிக்கவும், மக்களை ஆளவும் நியமித்திருந்தது.

பின்னர் 1920-ல் சென்னை மாகாணம் நிறுவிய பிறகு, சென்னை சட்டசபை தேர்தல் (Madras Legislative Assembly) மூலம் முதல்வர்களை தேர்ந்தெடுத்தனர். அக்காலத்தில் சென்னை சட்டசபை தேர்தலில் முதல்வர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகள் மட்டும் தான். 1920 முதல் தமிழ்நாட்டை ஆண்ட முதல்வர்களின் பட்டியல் கீழ்வருமாறு:

சென்னை மாகாண முதல்வர்கள் (1920-1950)
சென்னை மாநில முதல்வர்கள்  (1950-1969)
தமிழ்நாடு மாநில முதல்வர்கள் (1969 முதல்)

பெயர் வருடம் கட்சி
A.சுப்பராயலு ரெட்டியார்  1920-1921 நீதிக்கட்சி
சர் பனங்கட்டி ராமராயங்கார்(அ)
பனங்கல் ராஜா
1921-1923 நீதிக்கட்சி
சர் பனங்கட்டி ராமராயங்கார்(அ)
பனங்கல் ராஜா
1923-1926 நீதிக்கட்சி
P.சுப்பராயன் 1926-1930 நீதிக்கட்சி
B.முனுசாமி நாயுடு  1930-1930 நீதிக்கட்சி
ராமகிருஷ்ண ரங்காராவ்  1932-1934 நீதிக்கட்சி
ராமகிருஷ்ண ரங்காராவ் 1934-1936 நீதிக்கட்சி
P.T.ராஜன்  1936
(4 மாதம்)
நீதிக்கட்சி
ராமகிருஷ்ண ரங்காராவ் 1936-1937
(8 மாதம்)
நீதிக்கட்சி
குர்மா வெங்கடரெட்டி நாயுடு 1937
(3 மாதம்)
நீதிக்கட்சி
C.ராஜகோபலாச்சாரி 1937-1939 இந்திய தேசிய காங்கிரஸ்
கவர்னர் ஆட்சி 1939-1946 ---
தங்குட்ரி பிரகாசம் 1946-1947 இந்திய தேசிய காங்கிரஸ்
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1947-1949 இந்திய தேசிய காங்கிரஸ்
P.S.குமாரசுவாமி ராஜா 1949-1950 இந்திய தேசிய காங்கிரஸ்
C.ராஜகோபலாச்சாரி 1950-1952 இந்திய தேசிய காங்கிரஸ்
K.காமராஜ் 1954-1963 இந்திய தேசிய காங்கிரஸ்
M.பக்தவத்சலம் 1963-1967 இந்திய தேசிய காங்கிரஸ்
C.N.அண்ணாதுரை 1967-1969  திமுக
C.N.அண்ணாதுரை 1969
(1 மாதம்)
 திமுக
V.R.நெடுஞ்செழியன் 1969
(10 நாள் )
 திமுக
M.K.கருணாநிதி 1969-1971  திமுக
M.K.கருணாநிதி 1971-1976 திமுக
ஜனாதிபதி ஆட்சி 1976-1977
(5 மாதம்)
---
M.G.ராமசந்திரன்  1977-1980 அஇதிமுக
ஜனாதிபதி ஆட்சி 1980
(4 மாதம்)
---
M.G.ராமசந்திரன் 1980-1984 அஇதிமுக
M.G.ராமசந்திரன் 1984-1987 அஇதிமுக
V.R.நெடுஞ்செழியன் 1987-1988
(14 நாள்)
அஇதிமுக
ஜானகி ராமசந்திரன் 1988
(23 நாள்)
அஇதிமுக
ஜனாதிபதி ஆட்சி 1988-1989 ---
M.K.கருணாநிதி 1989-1991 திமுக
ஜனாதிபதி ஆட்சி 1991
(5 மாதம்)
---
J.ஜெயலலிதா 1991-1996 அஇதிமுக
M.K.கருணாநிதி 1996-2001 திமுக
J.ஜெயலலிதா 2001
(4 மாதம்)
அஇதிமுக
O.பன்னீர்செல்வம்   2001-2002
(6 மாதம்)
அஇதிமுக
J.ஜெயலலிதா 2002-2006 அஇதிமுக
M.K.கருணாநிதி 2006-2011 திமுக
J.ஜெயலலிதா 2011 முதல்  அஇதிமுக

இந்திய சுதந்திரதிற்கு முன்பும் பின்பும் சென்னை மாகணத்தில் மேல் குடியினாராம் உயர்ந்த சாதி மக்களே அதிகாரத்திலும் பொறுப்பிலும் இருந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜனரலாக பொறுப்பாற்றியவர், சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி. இவர் எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர்.


கல்வியில் பின்தங்கியிருந்த தமிழ்நாட்டில்,1960-ல் காமராஜர் பள்ளியில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி, கல்விக்கு கண் கொடுத்தார். இன்னும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். பிரதமர் பதவியே கிடைத்த போதிலும் வேண்டாம் என உதறிவிட்டு, மக்களுக்காகவே வாழ்ந்தவர். அப்பேர்ப்பட்ட காமராஜரையே தோற்கடிக்க வைத்த பெருமை நம் தமிழ் மக்களுக்கு உண்டு. (அவர்கள் மட்டுமே காரணமல்ல)

தந்தை பெரியார் ஈ.வெ .ராமசாமி அவர்கள், திராவிடர் கழகம் ஆரம்பித்து அதன் மூலம் சுய மரியாதை இயக்கம், தீண்டாம்மை ஒழிப்பு, தமிழ் தேசியவாதம், என்று இன்றைய தமிழ் திராவிடம் உருவாக காரணமாக இருந்தவர். இவர் இன்றைய தமிழக அரசியல்வாதிகளின், அரசியல் கட்சிகளின் தந்தையாக இருப்பவர்.

அறிஞர் C.N.அண்ணாதுரை ஆரம்பத்தில் திராவிடர் கழகத்தில் இருந்து, பின்னர்  பெரியாருடன் கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து, திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகளே அவர் முதலமைச்சராக இருந்த போதிலும், தமிழ் பேச்சாற்றலாலும், மக்களுக்கு செய்த நல்ல பணிக்காகவும், அவர் இன்னும் மக்களால் பேசப்படும் ஒரு உன்னத தலைவர். 
  
தமிழ் சினிமாவின் மூலமாக, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவர், M.G.ராமசந்திரன். ஆரம்பத்தில் அண்ணாவின் பேச்சாற்றலாலும், கொள்கையினாலும் ஈர்க்கப்பட்டு,  திராவிட முன்னேற்ற கழகதில் இருந்தவர், கலைஞர் M.கருணாநிதியுடன் ஏற்பட்ட 'கருத்து வேறுப்பாடு' காரணமாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து சாகும் வரை முதலமைச்சராய் இருந்தவர்.

எம்.ஜி.ஆர் இறந்த பின், அவரை தொடர்ந்து  பல சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தும், கட்சியில் சேர்ந்தும் ஆட்சியை பிடிக்க நினைத்தார்கள். ஒரு சிலரை தவிர யாராலும் அவரைப் போல வெற்றி பெற முடியவில்லை. 

இப்போது கட்சி ஆரம்பிப்பவர்கள் பெரியார், காமராஜர், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் படங்களை போட்டு கொண்டும், 'திராவிட' மற்றும் 'கழகம்' என்ற வார்த்தையை கட்சி பெயரில் சேர்த்து கொண்டும் தான் கட்சி ஆரம்பிகின்றனர்.

இன்னும் அச்சில் ஏறாத அரசியல் பதிவுகள் நிறைய உள்ளது. அதை எல்லோராலும் வெளிப்படையாய் சொல்லிவிட முடியாது. மக்களாட்சி நடக்கிறதோ இல்லையோ, 1967- க்கு பிறகு தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சித்தான் மாறி மாறி தமிழகத்தில் நடக்கிறது. இதுதாங்க நம்ம ஊரு அரசியல் வரலாறு. இவ்வளவு தூரம் அலசிவிட்டு, முக்கிய விஷயங்களை பதிவு செய்யவில்லையே என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இதற்கு பிறகு நடந்த, நடக்கின்ற கதை கூத்து  தான் எல்லோருக்கும் தெரியுமே!! அதை நான் வேற தனியாக சொல்ல வேண்டுமா???



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 14 ஜூலை, 2013

ஏட்டில்லாத விதிகள் !!!

வணக்கம்,

இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர், முகநூலில் (பேஸ்புக்கில்) தற்போது கல்லூரிகளால் கட்டாயமாக்கப்படும் ஒரு புதிய வழக்கத்தை பற்றி பகிர்ந்திருந்தார். கல்லூரிகளில் மாணவ/மாணவியர் எதிர் பாலினத்தவரோடு பேச / பழக கூடாது என்பதுதான். இதைப்பற்றியே பதிவு போடலாமே என எண்ணி இங்கு பகிர்கிறேன்.

ஒரு மாணவனோ /மாணவியோ ஒரு கல்லூரியில் சேரும் போது, அவர்களுக்கு போடப்படும் முதல் விதி, ஆண்/ பெண் இருவரும் எக்காரணதிற் கொண்டும் பேசி கொள்ள கூடாது. பள்ளி, கல்லூரிகளில் தான் மாணவர்கள் நல்ல ஒழுக்கத்தையும், ஆண்/ பெண் நட்பையும், கருத்துரையாடல் திறமையும் வளர்த்து கொள்ள முடியும். ஆனால் இப்போது கல்லூரிகள் மாணவியர் எந்த ஒரு சக மாணவரோடும், மாணவர் சக மாணவியோடும் பேச கூடாது என்ற 'உயர்ந்த சமூக கொள்கையை' (?!?!?) கடைப்பிடித்து வருகிறது . இதை பற்றி பல சமூக ஆர்வலர்களும், மனிதவள மேம்பாட்டு துறையினரும் எதிர்ப்பு குரல் கொடுத்து கொண்டிருந்தாலும், கல்லூரிகள் அவர்கள் நினைத்ததை நடத்தி கொண்டு தான் இருக்கின்றனர். இவை பெரும்பாலும் தொழில்முறை கல்லூரிகளில் தான், இந்த ஏட்டில்லா சட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. ஒரு சில பள்ளிகளிலும் இது அமலில் இருப்பது  வருந்ததக்கது.


ஒரு சில கல்லூரிகளில், இவ்விதியை உணவகங்களிலும் (Canteen) மற்றும் பேருந்துகளிலும் செயல்படுத்துகின்றனர்.  சில கல்லூரி பேருந்துகளில் வலது மற்றும் இடது  (முன்/பின்) என தனியாக கயிறுகள் அல்லது க்ரில்கள் மூலம் பிரித்து மாணவ / மாணவிகளை உட்கார செய்வர். சில நேரங்களில் ஓட்டுனர்கள் ஒற்றர்களாகவும் இருப்பர். ஆண்/பெண் பேசுவதை பழகுவதை கண்டுபிடித்து தண்டிக்கவே ஒரு தனிப்படையே (அவர்கள் தான் SQUAD !)  செயல்படும். சாதாரணமாக படிப்பு பற்றி பேசினாலே, என்ன ஏது  என விசாரித்தும், ஐ.டி கார்டை பிடுங்கி கொண்டும் அபராதம் கட்ட சொல்வார்கள். சில நேரங்களில் "ஆபிஸ் -ரூம்  ட்ரீட்மென்ட்களும்" நடைபெறும். (நான் படித்த கல்லூரியிலும் இதே நிலை தான் !!!)
 
படிக்கிற வயதில் மாணவர்கள் தவறான வழியில் போக கூடாது  என்பதற்காக கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் இத்தகைய கண்டிப்பு மாணவர்களில் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடும்.

இன்றைய நவீன உலகில், பல பழமைவாத விஷயங்களை தகர்த்து வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறோம். ஆனாலும் சில பொறியியல் கல்லூரிகளில் ஒழுக்கம் என்ற பெயரில் (மாணவ/மாணவியர்) பெண்களுடன் ஆண்களும், ஆண்களுடன் பெண்களும் பேச கூடாது என்ற விதியை போட்டுள்ளனர். காரணம் என்னவென்று கேட்டால், இதனால் தனி மனித ஒழுக்கம் மேம்படும் என்றும், கல்லூரி காதல் போன்ற கசமுசாக்களுக்கு முடிவு கட்டும் என்றும் சொல்லி பெருமைப்படுகின்றனர்.

இத்தகைய 'பலத்த சட்டங்கள் ' மூலம் பெற்றோர்கள் புன்முறுவல் பூக்கின்றனர் என்பதாலும், அவர்தம் பிள்ளைகள் தவறான வழிக்கு போகமாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும், இவை இன்னும் நடைமுறையிலேயே இருக்கிறது. ஆனால் இதன் மூலம் இளைய சமூகத்தினரிடம், சமூக திறன்கள் குறைந்து வருகின்றது என்பதே நிதர்சன உண்மை. 

இன்றைய 'கார்ப்பரேட்' உலகத்தில், அலுவலகங்களில் உடன் வேலை செய்யும்  எதிர் பாலினத்தவரோடு பேசி, பழகி வேலை செய்யும் நிலையில் தானுள்ளது. இதில் சில ஆண்கள் / பெண்கள்  எதிர் பாலினத்தவரோடு சகஜமாக பேச முடிவதில்லை. இந்த பிரச்சனை எல்லாருக்கும் ஏற்படுவது இல்லை. ஆனால் பலர், கல்லூரிகளில் போடப்பட்டுள்ள இத்தகைய விதியினால் அலுவலகங்களில் பாதிக்கபடுகின்றனர். உளவியலாளர்கள் இது தொழில்முறை மற்றும் சமூக திறன்ககளை பாதிக்கிறது என கூறுகின்றனர். மனிதவள மேலாளர்களும், பொறியியல் கல்லூரியில்  நன்றாக படித்து கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து, அலுவலகங்களில் சேரும்  போது, மற்றவரிடம் பேச/பழக கூச்சபடுகின்றனர். இதனால் அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கை பெரிதும் பாதிக்கபடுகிறது.

இன்னும் சிலரோ,மாணவர்கள் பள்ளியிலும்,கல்லூரியிலும் எதிர் பாலினத்தவரோடு பேசாமல் இருந்து விட்டு, அலுவலகங்களில் சேரும் போது இரு பாலினத்தவரும் 'காய்ந்த மாடு கம்பில் பாய்வது போல'  பேசி, பழகி, இணைந்து காதலா அல்லது வெறும் ஈர்ப்பா எனத் தெரியாமல் தடுமாறுகின்றனர். பெண்கள் பள்ளியில்/கல்லூரியில் படித்த பெரும்பாலான (எல்லோரும் அல்ல !) பெண்களுக்கு ஆண் நண்பர்கள் (பாய் பிரண்டு ) இருப்பதற்கும் காரணம் இதுதான்.

எதிர் பாலினத்தவரோடு நல்ல ஆரோக்கியமான உறவு இல்லாத போது, அவர்களிடம் பேசும் போது குற்ற உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான சமூகத்துக்கு அடித்தளம் இல்லை என பலரும் தெரிவிக்கின்றனர். இது எப்போது கல்வியாளர்களுக்கு புரியுமோ என்பது தான் தெரியவில்லை.  

நன்றி !!!

-பி .விமல் ராஜ் 

ஞாயிறு, 30 ஜூன், 2013

இன்றைய சமூகத்தில் ஊடகங்களின் பங்கு

வணக்கம்,

தமிழில் '..பேனை பெருமாளாக மாற்றுபவன்.. ' என்று ஒரு பழமொழி உண்டு. ஒன்றுமே இல்லாத விஷயத்தை பெரியதாக்கி ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக்கி விடுபவர்களை தான் அப்படி சொல்லுவார்கள். அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இன்றைய ஊடகங்களுக்கு மிக சரியாக பொருந்தும். எந்த செய்தியை ஒளிப்பரப்ப வேண்டுமோ, அதை செய்யாமல் தேவையில்லாததை எல்லாம் ஒளிப்பரப்புகின்றனர். இதை பற்றி ஏற்கனவே தொலைக்காட்சி பற்றிய முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்.

இப்போதெல்லாம் யாருக்காவது சரியான தீர்ப்போ, நீதியோ கிடைக்கவில்லை என்றால், அவர்களுடைய சாதியை வைத்து கொண்டு அரசியலாக்குவதும், ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துவதும் தான் சமீபத்திய பேஷன். அதுவே தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தால், அவ்வளவுதான்.  தாழ்த்தப்பட்டவருக்கு அநீதி நடந்துவிட்டது!  நியாயம் தவறிவிட்டது! என கூறி ஒரு வாரத்திற்கு  ஊடகங்களில் செய்திகளை  போட்டு கிழித்து விடுவார்கள். இதன் மூலம் சில பல வன்முறைகளும் நடைபெறும். உதரணத்திற்கு, சமீபத்திய தர்மபுரி சம்பவம். அந்த பெண்ணிற்கு எதுவும் சாதகமாக நடக்கவில்லை என்பதற்காக, அது தாழ்த்தபட்டவருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி என்று ஊடகங்கள் செய்திகளை ஒளிப்பரப்பின. அநீதி மேல்தட்டு மக்களுக்கு நடந்தால் அவர்களுக்கு பரவாயில்லை. அப்போது அது ஒரு பெரிய செய்தியாக வெளிவராது. சட்டமும், நியாயமும் எல்லாருக்கும் சமம். ஒரு நடுநிலையான செய்தியைத்தான் ஊடகங்கள் வெளியிட வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்வதில்லை.

இதேபோல் சில வருடங்களுக்கு முன், வட இந்தியாவில், ஒரு நடுத்தர வயது பெண்ணை நடு தெருவில் நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளனர். அதை Youtube போன்ற சமூக வலைதளங்கள்  மூலமாகவும், தொலைக்காட்சி  மூலமாகவும், அந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை ஒளிபரப்பி செய்திகளை வழங்கினர் .இதனால்  குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைத்தது. ஆனால் அவர்கள் தொகுத்து வழங்கிய விதம் தான் சரியில்லை. ஒரு பெண்ணிற்கு ஏற்பட்டதை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்காக, அது தாழ்த்தப்பட்ட தலித் பெண்ணிற்கு ஏற்பட்ட கொடூரம் என அதற்கு சாதி சாயம் பூசி மேலும் எரிகிற கொள்ளியில் எண்ணெயை  ஊற்றுவது போல செய்கிறார்கள்.



என்னை பொறுத்த வரையில் எந்த ஒரு குற்றத்திற்கும் சாதி  சாயம் பூசாமல், வெறும் குற்றத்தின் பின்னணியும், அதில் பாதிக்கபட்டவருக்கு நியாயமும் கிடைக்க செய்தாலே போதும்.

என்னால் என்னொரு உதாரணமும்  சொல்ல முடியும். சமீபத்தில் உத்தர்காண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால், பல மாநிலத்து மக்கள் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு  தவித்தனர் . ஒவ்வொரு மாநில முதலமைச்சரும், அவர்தம் மாநில மக்களை காப்பாற்ற முயற்சிகளை எடுத்து கொண்டிருந்தனர். நரேந்திர மோடியும் (குஜராத்) தம் மாநில மக்களை காப்பாற்றினார். ஆனால், செய்தி ஊடகங்கள் அவர் பிரதமர் வேட்பாளர் என்பதால், அவருடைய செயலை பெரியதாக காட்ட, நரேந்திர மோடியும் தம் மாநில மக்களை காப்பாற்ற 800 இன்னோவா கார்கள், 25 சொகுசு பேருந்துகள் என படையோடு சென்று படையை அனுப்பி 15,000 குஜராத் மக்களை 5 மணி நேரத்தில் காப்பாற்றினார் என செய்தி ஒளிபரப்பின. ஒளிபரப்பியதொடு இல்லாமல் அவர் இயற்கை பேரிழப்பை அரசியலாக்குகிறார் என் அவர் மீதே பழி போடுகின்றனர். அவர் செய்தது சரியா? தவறா? என்ற விவாதம் ஒரு புறம் இருந்தாலும், அவர் கட்சியினரே விளம்பரப்படுத்த சொன்னாலும்,  இவர்களை (ஊடகங்கள்) யார் இப்படி விளம்பர படுத்த சொன்னது ??? வெறும் அவர்களுடைய விளம்பரத்திற்காகவும், (T.R.P rating) டி .ஆர். பி ரேடிங் -காகவும் வடக்கில் உள்ள எல்லா பத்திரிக்கைகளும், செய்தி தொலைக்காட்சி ஊடகங்களும், மோடியை  புகழ்ந்து தள்ளி விட்டு, பின்னர் அவர் அரசியல் ஆதாயம் பார்க்கிறார் என்று குற்றம் சாட்டுகின்றனர்.  என்ன நியாயமடா இது ?

அரசியலில்  மட்டுமல்ல, திரைப்பட உலகில் உச்சபட்ச கதாநாயகன்  ஒரு சிறு விஷயம் செய்தாலே அது ஒரு இமாலய செயல் போல முதல் பக்கத்தில் போடுவார்கள். ஒரு நாயகன்/ நாயகியின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சித்தும், அதை ஒரு கவர் ஸ்டோரி யாக போட்டும், விளம்பரம் தேடி கொள்கின்றனர்.
 
மக்கள் உபயோகிக்கும் எந்த ஒரு பொருளோ, அல்லது அந்த நிறுவனத்தின் அடையாளமாக இருப்பது, அதனுடைய தரம்  தான். அந்த தரமும் மக்களிடம் போய் சேர்ப்பதும் ஊடகங்களின் விளம்பரம் தான். எந்த ஒரு அரசியல் கட்சியாகட்டும், தேசிய/ மாநில தலைவர்களாகட்டும், விளையாட்டு, விளையாட்டு வீரர்கள் , கலை மற்றும் கலைஞர்கள் , திரைப்படம்,  நடிகர் , நடிகை உட்பட அனைத்துமே  ஊடகங்கள்  மூலமாக தான் மக்களுக்கு சென்றடையும். அப்படி சென்றடையும் போது, சரியான விளம்பரங்களை, செய்திகளை  நடுநிலையோடு தர வேண்டும் என்பது எனது வாதம். இந்த சமூதாயத்தில் ஊடகங்களின் பங்கு மிக பெரியது. அதை அவர்கள் செம்மையாக செய்தாலே நாட்டில் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.  
   


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 15 மே, 2013

தன்னம்பிக்கையையும், தைரியமும் தான் தேவை !

வணக்கம்,

எல்லா வருடமும் மே மாதத்தில் வரும் முக்கியமான செய்திகளில் ஒன்று, பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தான். கடந்த வாரத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல இந்த வருடமும், மாணவிகளே அதிகமாக தேர்ச்சி  பெற்றுள்ளனர். ஆனாலும் இம்முறை ஜெய சூர்யா என்ற மாணவர் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். அதே போல தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மறு நாள் செய்திதாள்களில் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சிப்பட்டியலைப் பற்றி  போட்டிருந்தனர். அதை படித்து கொண்டிருக்கும் போதே என் கண்ணில் பட்ட ஒரு செய்தித் தலைப்பு, "மாணவி தற்கொலை!"

செய்தியை  விரிவாக வாசித்தப் பின் எனக்கு பகீரென்றது. அந்த மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொள்ளவில்லை. பொதுத் தேர்வில் 1200 -க்கு 1000 த்துக்கும் மேல் மதிப்பெண் வாங்கியுள்ளாள். மருத்துவ படிப்புக்கு அந்த மதிப்பெண் போதாது என்பதால் அவளது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். அதே போல இன்னொரு மாணவனும் 900 த்துக்கும் மேல் மதிப்பெண் வாங்கியும், பொறியியல் படிப்பில் சேர மதிப்பெண் போதாது என்பதால் தற்கொலை செய்துள்ளான்.

தேர்வில் தோல்வி அடைந்தாலே தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனம் என்று சொல்லும் போது,  இவர்கள் ஏன் இப்படி செய்தார்கள்  என எனக்கு தெரியவில்லை.


இந்த தவறுகளுக்கு எல்லாம் காரணம்  என்ன என்று யோசித்து பார்க்கும் பார்க்கும் போது, ஆள்க்காட்டி விரல் சமூகத்தையே காட்டுகிறது. படிப்பும் , மதிப்பெண்ணும் தான் வாழ்க்கை என்று இன்றைய தலைமுறையினருக்கு, குறிப்பாக மாணவருக்கு காட்டியுள்ளது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை  நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து, படிப்பை (அதிக மதிப்பெண்) பெறுவது மட்டுமே, குறிக்கோளாக எண்ணுகின்றனர். +2 பொது தேர்வில் 90%  மேல் வாங்கி விட்டால், நல்ல  பொறியியல் கல்லூரியிலோ, மருத்துவ கல்லூரியிலோ இடம் கிடைத்து விடும். இதனால் இவர்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்று நினைத்து விடுகின்றனர்.

பெற்றோர்கள் நினைப்பதில் தவறேதும் இல்லை என்றாலும், பொது தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவதற்காக மாணவர்களை பிழிந்து, வாட்டி எடுத்து, பரீட்சை முடிவதற்குள் ஒரு வழியாக ஆக்கிவிடுகிறனர்.
இதில் பள்ளிக்கூடங்களும் சேர்ந்து கொண்டு, மாலை நேர வகுப்பு, இரவு நேர வகுப்பு, என பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை பெண்டு நிமிர்த்தி விடுகின்றனர். இவர்கள் இப்படி மன அழுத்ததுடன் படித்து, எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்றால், அவர்கள் தவறான முடிவுக்கு தான் போவார்கள்.  

இந்த பிரச்சனைகள் தீர, மாணவருக்கு சரியான கலந்தாய்வு உரையாடல் தேவை. கலந்தாய்வில், "பரீட்சை முடியும் வரை தொலைக்காட்சி பார்க்காதே!,  ஒரு நிமிடம்  கூட வீணாக்காதே! காலை முதல் மாலை வரை படிப்பு ! படிப்பு ! படிப்பு ! என வழக்கப்படுத்திக் கொள்." அது மட்டுமல்லாமல் எந்த கேள்விக்கு எவ்வளவு நேரம் எடுத்து கொள்ள வேண்டும் என்ற பழைய  பாட்டையே அவர்களுக்கு சொல்லாமல், அவர்களுக்கு பரீட்சைக்கு பயமில்லாமல் எழுதுவது பற்றியும், தன்னம்பிக்கையையும் வளர்க்க வேண்டும்.

பொறியியலும், மருத்துவமும் மட்டுமே படிப்பல்ல. அதை தவிர வேறு என்னஎன்ன படிப்புகள் இருக்கிறது என்று சொல்லித்தர வேண்டும்.
ஒருவேளை பரீட்சையில் தோல்வியடைந்தாலோ, மதிப்பெண் குறைவாக இருந்தாலோ, மனம் தளராமல், தைரியத்துடனும், மனோபலத்துடனும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும் என்பதை மாணவர்களுக்கு சொல்லி தர வேண்டும்.

வெறும் படிப்பையும் மதிப்பெண்ணையும் மட்டுமே குறிவைத்து மாணவர்களுக்கு போதிக்க கூடாது. இவ்வாறு செய்யாமல், அவர்களுக்கு தனி மனித ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் போதித்தால், எதிர்காலத்தில் இது போன்ற மாணவர்களின் தேவையில்லா உயிர்பலிகள் குறையும்.      


நன்றி !!!

-பி .விமல் ராஜ் 

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

போதை ஏறும் முன் ஒரு நிமிடம் யோசிக்கவும்...

வணக்கம்,

கடந்த வியாழனன்று (ஏப்ரல் 25) அலுவலகம் முடிந்து வீட்டுக்கு கிளம்ப தயாராகி கொண்டிருந்தேன். நண்பர்கள் சிலர் அலுவலகம் அருகில் உள்ள நாவலூர் பாரில் தண்ணி அடிக்க கிளம்பி கொண்டிருந்தனர். அதற்கு முந்தைய நாளும் சரக்கடிக்க கிளம்பி, எல்லா மது கடைகளும் மூடி இருந்ததால் (மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு) மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தனர். அதனால் இன்று கண்டிப்பாக மலையேறி விட வேண்டும் என்ற முடிவில் இருந்தனர். ஆனால் மீண்டும் அவர்களுக்கு எமாற்றமே மிஞ்சியது. மாமல்லபுரத்தில் ஒரு கட்சி பொதுகூட்டம். அங்கே சாதியை பற்றி வாய் கிழிய பேச போவதால், சுற்று வட்டாரத்தில் ஓ.எம்.ஆர் சாலையில் கிட்ட தட்ட 20 கி.மீ  தொலைவுக்கு எல்லா மது கடைகளையும் மூட சொல்லி உத்தரவு. ஆனாலும் தங்களது முயற்சியில் சற்றும் மனம் தளராத என் நண்பர்கள், நேரே கிண்டி வரை சென்று சரக்கு அடிக்கலாம் என்று முடிவு செய்து சென்றுவிட்டனர்.

இவர்களை நினைத்தபடியே நான் பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன். இந்த பதிவும் இவர்களை போலவர்களை பற்றிதான்.  மரியாதை  நிமித்தமாக நம்மவர்களுக்கு புனைப்பெயர்களை வைத்துள்ளேன். என் அலுவலக நண்பர்களான சேலம் கைப்புள்ள, திருச்செந்தூர் சாமி,  தூத்துக்குடி 'உத்தம' சீலர்,  பரமக்குடி தண்ணிவண்டி மற்றும் எல்லோரையும் வழிநடத்தி கொண்டு செல்லும் (சரக்கடிக்க தான் ) 'கருப்பு தங்கம்' கோவில்பட்டி பூலோக வாசி.

இவர்களும் எல்லா கார்ப்பரேட் கம்பனியிலும் வேலை செய்யும் பொறியாளர்கள் போலத்தான். பிறந்தது வேறு இடமானாலும், சென்னையை நோக்கி வேலைக்காக வந்தவர்கள். சம்பளம்  வாங்கிய முதல் நாளில், முதல் வாரத்தில் ,"ஐயோ!!! இப்போ நான் எதையாவது வாங்கியே தீர வேண்டுமே .. இந்த தெருவையாவது வாங்க வேண்டுமே!!! " என்று துடிப்பவர்கள். சம்பளத்தில் பாதி பணம்  தண்ணியடிக்கவே செலவாகிவிடும். பரமக்குடி தண்ணிவண்டியும், கோவில்பட்டி பூலோக வாசியும் காசு இருந்தால் வாரம் 7 நாளும், எட்டு முறையாவது சரக்கடிப்பவர்கள். திருச்செந்தூர் சாமி, எப்போவாவது ஒரு முறை. தூத்துக்குடி சீலர் உண்மையிலேயே உத்தமர் தான். ஒவ்வொருமுறை நண்பர்களுடன் பாருக்கு சென்றாலும், வெறும் சைடு டிஷும், மிரிண்டாவின் தங்கை மாசாவையும் மட்டுமே சுவைப்பவர். ( அட ! கூல் ட்ரிங்க்ஸ் தாங்க..)

சேலம் கைப்புள்ள, எல்லோரையும்  விட இளையவர் .வேலையில் இருந்தபடியே பகுதி நேரமாக பொறியியல் படிப்பவர். ஆரம்பத்தில் கட்டுப்பாடுடன் இருந்தாலும், சேர்க்கை சரியில்லாததால், வாரம் ஓரிரு முறை மட்டும் போதையுடன் காணப்படுவார்.  இவர்களிடம் காசு கொஞ்சம் கரைப்புரண்டால் உடனே சொல்வது," Join the Party with Bacardi"  (உயர் ரக ரம்மாம்!!! ).

பகலில் வேலை நேரத்தில் கைப்புள்ள, செமஸ்டர் பரீட்சைக்கு படிக்க வேண்டிய பாடங்களை பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பார். நானும் இந்த ஒரு மாதம் மட்டும் தண்ணியடிக்காமல் இரு. ரூமிற்கு சென்று 2 மணி நேரமாவது படி. மற்றதை பிறகு பார்த்து கொள்ளலாம் என கூறும் பொது, சரி..சரி..  என மண்டையை ஆட்டிவிட்டு, மாலையில்  "மச்சி..போலாமாடா??" என்று சக குடிமகன்கள் கேட்டவுடன், பேட்-மென் படத்தில் வருவது போல கண் மூடி திறப்பதற்குள் காணாமல் போய் விடுவார். நானும் வேறு வழி இல்லாமல், என் தலையில் அடித்து கொண்டு சென்று விடுவேன்.


நான் இவர்களை, இங்கு அசிங்கபடுத்தவோ, அவமானபடுத்தவோ இந்த பதிவை  போடவில்லை. இந்த பாழாய் போன குடியினால்  இப்படி சீரழியிரார்களே என்ற வேதனை தான் எனக்கு. இவர்கள் மட்டுமல்ல, நம் நாட்டில் பல குடிமகன்களும், இந்த குடியால் அவர்களுடைய வேலைகளை சரியாக செய்ய முடியாமல் தவிக்கின்றனர். பணமும், உடலும் வீணாய் போகிறதே என்று  பலருக்கு புரியவில்லை. வெறும் சொற்ப போதைக்காகவா , நண்பர்களுடைய பலவந்தத்தாலையோ, அல்லது வேறு ஏதும் சொந்த பிரச்சனைக்காகவோ,  இல்லையென்றால்  வெறும் பகட்டுகாகவோ தான் இந்த குடிப்பழக்கம். ஹ்ம்ம்... படிப்பறிவில்லாதவருக்கு புத்திமதி சொல்லி புரிய வைக்கல்லாம். படித்தவருக்கு???

முன்பெல்லாம் குடிகாரர்களை ஒரு கேவலமாக பார்ப்பார்கள். ஆனால் இன்று, நான் குடிக்க/புகைக்க மாட்டேன் என்று சொன்னாலே, ஏதோ ஒரு வித்தியாசமான ஜந்துவை பார்ப்பது போல பார்க்கிறனர். இந்த பழக்கங்கள் இல்லாதவர்களிடம், " நீயெல்லாம் என்னத்துக்கு உயிரோட இருக்கே??? " என்று என்னிடம் கேட்டவர்களும் உண்டு.  

"குடி குடியைக் கெடுக்கும். குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது... " என்பதை வக்கணையாக படித்து விட்டு பாரில் உட்கார்ந்து கொண்டு 'ஒன்மொர்  லார்ஜ் 'கேட்கும் படித்த குடிமக்களுக்கு என்ன சொல்ல ????

இவர்களுக்கெல்லாம் எத்தனை தடவை முகேஷ்-க்கு நடந்ததை போட்டு காட்டினாலும் திருந்த மாட்டார்கள். முகேஷ் பற்றி தெரியாதவர்கள், அருகில் உள்ள திரையரங்கிற்கு சென்று படம் ஆரம்பிக்கும் முன்னால் போடப்படும் "புகை மற்றும் போதையினால்  உண்டாகும் தீங்கு" பற்றிய செய்தி சுருளை பாருங்கள், புரியும்.

"உன்னால் செய்ய முடிந்தை எல்லாம் நானும் செய்வேன். என் திருப்திக்காக/ சந்தோஷத்திற்காக தண்ணியடிக்கிறேன், உனக்கு என்னடா வந்தது????" என்று வரிந்து கட்டுபவர்களுக்கு என்னுடைய ஒரே பதில். என்னால் செய்ய முடிந்த ஒன்று, அது உங்களால் கண்டிப்பாக செய்ய முடியாது. இரத்தம் மற்றும் உடலுருப்பு தானம் செய்வது தான். ஊர் பேர் தெரியாதவனுக்கு நீங்கள் கொடுக்க வேண்டாம்.  மிகவும் வேண்டியவருக்கு கொடுக்க முடியாமல் போகும் போது தான் அதன் அருமை உங்களுக்கு புரியும். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் கண்ணும்,உடலுருப்பும்  வீணாக மண்ணுக்கோஅல்லது தீயிற்கோ தான் இரையாக போகிறது...

குடிபழக்கத்தினால் இறந்து விடுவார்கள், நோய் வாய்ப்பட்டு கிடப்பார்கள், குடும்பம் சீரழியும் என்றுதான் எல்லோரும் சொல்லுவார்கள் .எனக்கு தெரிந்தவரை இந்த மேலான கருத்தை எந்த திரைபடங்களிலும் சொன்னதாக தெரியவில்லை. யாரவது எழுத்தாளர்கள் வேண்டுமானால் பதிவு செய்து இருக்கலாம்.

இந்த பதிவைப் படித்த பின் நீங்கள் சத்தியமாக திருந்தி விட மாட்டீர்கள்  என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனாலும், என் மன நிம்மதிக்காகவும், யாரவது ஒருவர் இதை படித்து ஒரு நிமிடம் யோசித்துவிட்டு ,"ச்சே.. ஆமாம். நம்முடைய உடலுருப்பு யாருக்கும் கொடுக்க முடியாது இல்ல..." என நினைத்தாலே எனக்கு போதுமானது.

இதையெல்லாம் படித்து விட்டு என்னை கெட்ட வார்த்தையில் திட்டினாலும், சண்டையிட்டாலும் பரவில்லை. என் பயமெல்லாம்,  நம்மை பற்றி வலைப் பதிவில் வந்து விட்டது என்று கூறி சரக்கடிக்க என்னிடமே, Join the Party with Bacardi  என ட்ரீட் கேட்டால் என்ன செய்வது என்றுதான் யோசித்து கொண்டிருக்கிறேன்...


நன்றி !!!

-பி .விமல் ராஜ் 

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

தொலைக்காட்சி சேனல்கள் என்ன காட்டுகிறது ?

வணக்கம்,

நம்மில் பலருக்கு பொழுதுபோக்கு, தொலைக்காட்சி பார்ப்பது தான். அந்த தொலைக்காட்சி சேனல்களில் என்னென்ன காட்டுகிறார்கள் என்பதை பற்றி இங்கு பகிர்கிறேன். தொலைக்காட்சியில் நாம் பார்ப்பது செய்திகள், நெடுந்தொடர்கள், விளையாட்டு போட்டிகள், திரைப்படங்கள், நகைச்சுவை காட்சிகள் என பட்டியல் அவரவர் விருப்பதிற்கேற்ப நீள்கிறது. அதை பற்றி ஒவ்வொன்றாக இங்கு காண்போம். புதிதாக சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், என்னுடைய எண்ணங்களை உங்களிடம் கொட்டித் தீர்ப்பதற்க்காகவே பதிவு செய்கிறேன்.

தொலைக்காட்சி சேனல்கள் 90-களின் ஆரம்பம் வரை, அரசாங்கத்தையே நம்பியே இருந்தது. அதில் மக்களுக்கு பயன்படும் வகையில் அறிவியல் நிகழ்ச்சி , குழந்தைகளுக்கான நிகழ்ச்சி, மாணவருக்கான நிகழ்ச்சி என்று  ஒளிப்பரப்பினர். பின்னர் தான் தனியார் தொலைக்காட்சி சேனல்களின் வரவால் அவை ஒதுக்கப்பட்டன. இன்று பல தனியார் தொலைக்காட்சி சேனல்கள் , பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில், கண்டபடி நிகழ்சிகளை ஒளிப்பரப்புகின்றனர்.

முதலில் செய்திகள். நாட்டுநடப்பை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு தான் செய்திகள். ஒவ்வொரு சேனலிலும்  ஒவ்வொரு விதமாக செய்திகள் வாசிக்கும் போது எது உண்மை, எது பொய் என்று மக்களுக்கு தெரியவில்லை. இப்போதுதான் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி சேனல் இருக்கிறதே! ஒவ்வொன்றிலும் அவர்கள்கொள்கைக்கு தகுந்த படி செய்திகளை மாற்றி மாற்றி சொல்கின்றனர். ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது அந்த கட்சி தலைவர்/தலைவியின் புராணம் பாடும் செய்திகளும், அதுவே அவர்கள் எதிர்கட்சியாக இருந்தால், ஆளும்கட்சிக்கு அறிக்கை விடும் செய்திகள் தான் சொல்கின்றனர். இதை தான் எல்லா கட்சி சேனல்களும் செய்கிறது.

எந்த செய்தியை காட்ட வேண்டுமோ அதை காட்டாமல், தேவையில்லா குப்பை செய்திகளையும், விளம்பரங்களையும் காட்டி அவர்கள் மதிப்பை அவர்களே குறைத்து கொள்கின்றனர். போலிச்சாமியாரின் சில்மிஷங்களை ரகசிய கேமராவில் பதிந்து, நொடிக்கு ஒரு முறை காட்டியும், அவர்கள் வாங்கி வெளியிட்டுள்ள திரைப்படம் திரையரங்கை விட்டே ஓடினாலும், 'வெற்றி நடைபோடுகிறது ' என்று விளம்பரம் செய்து அவர்களது  டி .ஆர்.பி. ரேட்டிங் -ஐ (T.R.P Rating) ஏற்றி கொள்கின்றனர்.  

நாட்டில் விண்கலம் புதிதாக விண்ணில் செலுத்தப்படும் போதும், நம் மாநிலத்தில் ஒருவர் உலக அளவில் விருது வாங்கினர் என்றோ, அறிய அறிவியல் கண்டுப்பிடிப்பை பற்றியோ அடிக்கடி போட்டுக்காட்டுவதில்லை.

அடுத்து தொலைக்காட்சி நெடுந்தொடர்ககளை  எடுத்து கொண்டால், அதற்கு திரைப்படங்களே பரவாயில்லை என்று கூறலாம். எல்லா தொடரிலும் நாயகனுக்கோ, நாயகிக்கோ ஒன்றுக்கும் மேற்பட்ட தாரங்கள் இருக்கும். அல்லது பெண்களே,பெண்களைப்பற்றி  தவறாக வஞ்சிப்பதும், சூழ்ச்சி செய்து குடும்பத்தை  குலைப்பதும் தான் நடக்கிறது. பக்தி தொடர்கள், மேன்மேலும் மக்களின் காதுகளில் பூ சுற்றி கொண்டே போகின்றனர். அந்த அளவுக்கு மூடநம்பிக்கைகளை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விதைக்கின்றனர்.

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சில விஞ்ஞான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பலாம். அது மாணவருக்கும், மற்றவருக்கும் பயன்படுமாறும் செய்யலாம். மொழியின் சிறப்பை அறியும் வகையில் புதிதாக விளையாட்டு போட்டிகளை நடத்தி ஒளிப்பரப்பலாம். சிறுவர் சிறுமியருக்காக இதிகாச புராணங்களையும்,சில நீதி கதைகளையும் பற்றி பொம்மை (கார்ட்டூன்) படம் போட்டு காட்டலாம். 

அடுத்து, சில நாட்களாக எல்லா சேனல்களிலும் பிரபலமாகி வரும், 'ரியாலிட்டி ஷோக்கள் ' (Reality Show).  சூப்பர் சிங்கர் , சூப்பர்  டான்சர் , சூப்பர் டைரக்டர் , சூப்பர் காமெடியன்  என  பல நிகழ்ச்சிகள் உள்ளது. இவை மக்களின் திறமைகளை வெளி கொண்டுவருவதை விட, சேனல்களுக்கு பணம் ஈட்டித்தான் தருகிறது. மக்களுக்கு பண மோகம் அதிகமாக இருப்பதை அறிந்து, முன்பெல்லாம் விளையாட்டு போட்டிகளில் ஆயிரக்கணக்கில் பரிசு தந்தவர்கள், இப்போது  லட்சங்களிலும் கோடிகளிலும் தான் புரள்கிறார்கள். பொதுமக்களை அழைத்து விளையாடாமல், பிரபலங்களை அழைத்து பரிசு பணத்தை வாரியிரைத்து ,விளம்பரம் செய்து வருவாயை பெருக்கி கொள்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் விட என்னை மிகவும் வெறுப்பெற்றுவது,
"குற்றங்களும் அதன் பின்னணியும், நடந்தது என்ன? " என்று உப்பு சப்பில்லாத விஷயத்தை பெரும் பீடிகையுடன் சொல்வது தான். கடைசி வரை சொல்ல வந்ததை சொல்லவே மாட்டார்கள். அதை விட,"உண்மையை சொல்லும் " ஓர் உன்னத (?!?) நிகழ்ச்சியில், குடும்ப பிரச்சனைகளை  இரு பிரிவினரும் பேசி, திட்டி, சண்டையிட்டு நம்மையும்  கடுப்பாக்கி வைப்பார்கள். அதில், பஞ்சாயத்தை தீர்க்க வரும் 'பெண் நாட்டமை', "அவன் உன் மனைவியை தள்ளிக்கொண்டு போய்விட்டானா??? பரவாயில்லை. நீ அவன் மனைவியுடன் இரு...   " என்ற தோணியில் மத்யத்சம் பேசுவது கொடுமையின் உச்சம். சில சமயங்களில் தாலியை (நிகழ்ச்சியிலேயே )கழட்டி தூக்கியெரிந்து விட்டு  சென்றும் உள்ளனர். பணம் படைத்தவர்களிடம்  இந்த மாதிரி பிரச்சனையே இல்லாதது போல, பெரும்பாலும் அடித்தட்டு மக்களை குறிவைத்தே இந்த நிகழ்ச்சிகள் நடத்தபடுகிறது.

அடுத்து 'கருத்து விவாதம்' நடக்கும் மேடை. முக்கிய பிரச்சனைகளை விட்டுவிட்டு ,நடிகை வீட்டை விட்டிவிட்டு ஓடியதையும், அழகிய பெண்களையும்,ஆண்களையும் வைத்து ஒப்பிடுவதும் தான் முக்கிய விவாதங்களா?  சில நேரங்களில், நல்ல தலைப்புகளையும் அவர்கள் தேர்ந்தெடுத்து கையாள்வதும் கட்டாயம் இங்கு பதிய வேண்டியது தான். 
     
திரைப்படங்களும், அடிக்கடி போடப்படும் நகைச்சுவை காட்சிகளும் தான் சிறிது நேரம் தொலைக்கட்சியில் பார்க்க முடிகிறது. சில போராட்டங்களுக்கு பின், தொலைகாட்சியில் போடப்படும் படங்களில் ஆபாச காட்சிக்களும், வன்முறை காட்சிகளும் , மது அருந்தும் காட்சிகளும் நீக்கபட்டு காண்பிக்கபடுகின்றன. பண்டிகை நாட்களில் ஒவ்வொரு சேனலிலும் 'இந்திய தொலைக்கட்சிகளில் முதன்முறையாக ' என்று போடும் போது நமக்கு தான் எதை பார்ப்பது என்று திணறல். இங்கே கூத்தாடிகள் இரண்டுபட்டால் மக்களுக்கு தான் கொண்டாட்டம். 

'தமிழை வளர்கிறோம் பேர்வழி'  என்ற பெயரில் உள்ள சேனல் , முழுக்க முழுக்க  தமிழ் கலாச்சாரத்துடனும், மக்களுக்கு பயனுறும் வகையிலும் நிகழ்சிகளை தமிழிலேயே  பேசி ஒளிப்பரப்புகிறது. இவர்களும் செய்திகளை அவர்கள் கட்சிக்கு சாதிக்கு ஆதரவாகவே ஒளிப்பரப்புகிறார்கள். இவர்களுடைய 'தலைவர் அய்யா' பேசும் பொது கூட்டங்களை ஒளிப்பரப்பும் நிகழ்ச்சியை பார்த்தாலே நாட்டில் சாதி வெறி சண்டைகள் வந்துவிடும்.


அரசாங்கம் நடத்தும் பொது வேலைநிறுத்ததின் போது, எல்லா வணிக நிறுவனமும், தனியார்/ அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் சேனல்களுக்கு மட்டும் அன்று விடுப்பு இல்லை. வழக்கமாக போடும் பழைய படங்களை போடாமல் 'விடுமுறை தின கொண்டாட்டம்' என்று நட்சத்திரங்களின் திரைபடங்களை போட்டு வருவாய் தேடி கொள்வார்கள். மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம், அவர்களுக்கு மட்டும் இல்லையா?!?!?!

விளையாட்டு - எவனோ ஒருவன் விளையாடி சம்பாதிப்பதை , தேசத்திற்காக என கூறி விளையாட்டே கதி என்று உள்ளவர்களும் உண்டு. கிரிக்கெட் மட்டும் என்ன இந்தியவின் பண்டைய காலத்து விளையாட்டா?? அதை பெரிதாக காட்டி, விளம்பரம் செய்து கோடிகளில் புரளும் வியாபாரமாக மாற்றியது தொலைகாட்சிகள் தான். தேசிய விளையாட்டை நேரடியாக ஒளிப்பரப்பமல், விளம்பரம் செய்யாமல், அந்நிய தேசத்து மட்டை விளையாட்டை மட்டும் காட்டுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. இதனால் கிரிக்கெட்    பார்ப்பது/ ஊக்குவிப்பதோ தப்பு என்று  சொல்லவில்லை. அதை போல எல்லா விளையாட்டையும்  ஊக்குவித்தால் நல்லது என்பது என் கருத்து.    

இவ்வளவு சொத்தை சொல்கிறேனே என்பதற்காக,  இந்த தனியார் தொலைக்காட்சி சேனல்களையெல்லாம் வணிக ரதியாக பணமே சம்பாதிக்க கூடாது என்று சொல்லவில்லை. அவர்களும் வியாபாரிகள் தானே! மக்களுக்கு உதவுவது போலவும், மொழியை வளர்ப்பது போலவும் , சில பல நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பினால்  நன்றாக இருக்கும் என்பதே என் வாதம்.     

நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பொறியியல் படித்து என்ன பிரயோஜனம் ???

வணக்கம்,

நாள் : ஏப்ரல் 5. காலை 8:30 மணி. அலுவலக பேருந்தில் எப்போதும் போல தூங்கி கொண்டே பயணித்து கொண்டிருந்தேன். தீடீரென முழிப்பு வர, தனியார் பண்பலை வரிசையில் (FM) ஒரு முக்கிய தலைப்பை பற்றி பேசி கொண்டிருந்ததை கேட்டேன். தலைப்பு என்னவென்று பார்த்தால், நாட்டில் பல தரமில்லாத பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது பற்றி தான். அட ! இதை கேட்டவுடன் இதை பற்றியே ஒரு பதிவு போடலாமே என்று எண்ணம் தோன்றியது. பாதி தூக்கத்தில், தொகுப்பாளர் ' அஜய் விக்னேஷ்' பேசியதையும், என்னுடைய சில கருத்துகளையும் உங்களிடம் பகிர்கிறேன்.

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வெறும் 231 சுயநிதி கல்லூரிகள் தான் இருந்தது. ஆனால் இன்றோ, 570 சுயநிதி கல்லூரிகளும் 37 பல்கலைகழங்களும் இருக்கின்றது. இந்த ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட  தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நூறுக்கும்  மேற்பட்ட கல்லூரிகள் அனுமதி கோரிக் காத்துள்ளன. பொறியியல் கல்லூரி மட்டுமல்லாமல் புதிதாய் முளைக்கும் சில கலைக்கல்லூரிகளும் இதே நிலைமையில் தான் உள்ளது.

இதில் பெரும்பாலான கல்லூரிகள் தரமானதாக இருப்பதில்லை. போதிய வசதிகள் கிடையாது. திறமையான விரியுரையாளர்கள் கிடையாது. வசதியுள்ள ஆய்வகங்கள் இருப்பதில்லை. இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் கல்லூரிக்கு அருகில் உள்ள சுற்றுவட்டாரத்திலிருந்து வருகின்றனர். சிலர் பல்கலைகழக ஆலோசனைப்படி வந்து சேர்கின்றனர். அவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் பெயரளவில் மட்டும் பொறியியல் படித்தவர்களாக இருகின்றனர். 15/ 20 ஆண்டுகளுக்கு முன்னால் பொறியியல் மாணவர் என்றாலோ, அல்லது அரசு/தனியார் நிறுவனத்தில் பொறியியலாளர்  என்றாலோ தனி மதிப்பு தான். என் மகள்/மகன் பி.ஈ (B.E)  படிக்கிறாள்(ன்) என பெற்றோர்கள் பெருமையுடன் சொல்வார்கள்.

ஆனால் இப்போது ஊருக்கு 10 சுயநிதி கல்லூரிகளை திறந்து வைத்து, அதுவும் ஓர் கலைகல்லூரி படிப்பை போல ஆக்கிவிட்டனர். இந்த கல்லூரிகளில் படித்து விட்டு வருடந்தோறும் 10 லட்சம் பேருக்கும் அதிகமானோர் வருகின்றனர். அதில் ஒரு சிலர் மட்டும் வேலை வாய்ப்பு பெற்று தப்பிவிடுகின்றனர். முக்கால்வாசி பேர் தரமான பொறியியல் கல்வி  இல்லாததாலும், சரியான உரையாடல் திறன் இல்லதாதலும் (BPO) பி.பி.ஒ-விலும் மற்ற சிறிய நிறுவனங்களிலும் தங்கள் படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலையில் போய் சேர்கின்றனர். ( ஹ்ம்ம்! ஒரு சிலர் நல்ல கல்லூரியில் சேர்ந்தும், சரியாக படிக்கத்தால் சரியான வேலையின்றி இருக்கின்றனர் !!!)

அதுமட்டுமல்லாமல் இப்போதெல்லாம் எந்த வேலைக்கும் எந்த கல்வித்தகுதியும் (பட்டப்படிப்பும்) பரவாயில்லை என்ற  நிலை வந்துவிட்டது.


எனக்கு தெரிந்த வரை மருத்துவ மாணவர்கள் மட்டும் தான் படிப்புக்கு பிறகு, அவர்தம் துறையில் போய் வேலை செய்கின்றனர். பொறியியல் படித்த மாணவரும், கலைகல்லூரி மாணவரும் சேர்ந்தே எல்லா வேலைவாய்ப்புக்கும் வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரே  அளவு சம்பளமும் சிலர் வாங்குகின்றனர். அதில் பெரிதாக  தப்பு ஏதும் இல்லை என எல்லோருக்கும் தெரியும் . ஒரு வளமான சமுதாயம் வளர இந்த நிலை தேவைதான். எல்லா பொறியியல் மாணவருக்குமுள்ள வாதம் என்னவென்றால், எல்லா வித பட்டதாரிகளும்  ஒன்றாக வேலை செய்து சம்பளமும் வாங்க, நாம் மட்டும் ஏன் கஷ்டப்பட்டு கடன் வாங்கி,  நான்கு வருடம் படிக்க வேண்டும்? நாம் மட்டும் ஏன் அதிகமாக கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும்? பேசாமல், நாமும் இளங்கலையோ (B.A), அறிவியல் இளங்கலையோ(B.Sc)  படித்து விட்டு தபால் முலமாக ஒரு முதுகலை படிப்பை படித்து இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. என் வீட்டில் "நீயெல்லாம் இன்ஜினியரிங் படித்து என்ன பிரயோஜனம் ??? " என்று திட்டுவது ஞாபகம் வருகிறது.

திருமண பத்திரிக்கையில் மணமகன்(ள்) பெயருடன் பி.ஈ /பி.டெக் என்று போட்டு கொள்ளவும், வரதட்சணையாக 50 பவுன் நகைக்காகவும் ,மாமனார் வீட்டில் கார் வாங்கி தர சொல்லவும் தான் பொறியியல் படிப்பு உபயோகமாக இருக்கிறது.

நாம் எவ்வளவோ பொருமினாலும் சில பொறியியல் படித்த மாணவர்கள், உயர்ந்த நிறுவனத்தில் லகரங்களில் சம்பளம் வாங்குவதை யாராலும் ஓப்பு கொள்ளாமல் இருக்க முடியாது. 

இதையெல்லாம் பண்பலையில் கேட்டு கொண்திருந்த நண்பர் ,
"போதும் பா!, -(FM) எஃப். எம் - ஐ  நிறுத்த சொல்லுங்க. காலங்காத்தாலேயே வெறுப்பபேத்துறது போல இருக்கு .. " என்று நொந்து கொண்டார் .

தலைப்பு முழுசாக முடியும் முன், அலுவலகம் வந்ததால், பேருந்தில் உள்ள அனைவருக்கும் நமூட்டு சிரிப்புடன் இறங்கி சென்றோம். 
      

நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 


ஞாயிறு, 31 மார்ச், 2013

இடஒதுக்கீடுக்கு இடம் இல்லை !!!

வணக்கம்,

"சாதிகள் இல்லையடி பாப்பா! " 
- பாரதி 

" சாதி இரண்டொழிய வேறில்லைசாற்றுங்கால் 
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி"    
ஒளவையார்

இவையெல்லாம் நாம் பள்ளிக்கூட வகுப்புக்களில் படித்ததோடு சரி.

சுதந்திர காற்று நம் நாட்டில் வீச தொடங்கிய நாள் முதல் இருப்பது இந்த சாதி/ மத பிரச்சனையும், சாதிவாரியிலான இடஒதுக்கீடும் தான். ஆரம்ப காலத்தில் இந்தியாவில் ஏற்றதாழ்வு அதிகமாக இருந்து வந்தது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த வித சலுகைகளும், அடிப்படை வசதி வாய்ப்பும் கூட கிடைக்கவில்லை.எல்லா வகையிலும் உயர்ந்த சாதி மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது. நம் நாடு விடுதலை பெற்ற பின்னரும் இதே நிலைமை தான் நீடித்தது.

இதனால் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் உட்பட பல தலைவர்கள்  பிற்படுத்தபட்டோருக்குக்காக போராடினர். இதன் முலம் எல்லார்க்கும்  எல்லா சலுகைகளும்,வாய்ப்பும் கிடைக்கும் என எண்ணி, 'சாதிவாரியிலான இடஒதுக்கீடு ' என்ற சட்ட முறையை கொண்டு வந்தனர். அன்று முதல் இன்று வரை, கல்விப்படிப்பு, வேலைவாய்ப்பு, விளையாட்டு, அரசியல் என எல்லா துறைகளிலும் இடஒதுக்கீட்டில் எல்லா வாய்ப்புகளுமே உரிமைகளும் அளிக்கப்படுகிறது.

அன்றைய காலகட்டத்தில் பிற்படுத்தபட்டவருக்கு அங்கீகாரம் கிடைக்க இடஒதுக்கீடு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது.இன்றோ,நிலையே தலைகீழ். கிட்டத்தட்ட 50/60 ஆண்டுகளாக இந்த சட்ட முறையினால் பல நலிந்த பிரிவினரும், சாதியால் பிற்படுத்தபட்டவரும், நிறைய சலுகைகளும், வாய்ப்புகளும் பெற்றுள்ளனர். ஆனால் இப்போதும் இடஒதுக்கீடு  தேவையா என்ற கேள்வியே என் மனதில் எழுந்துள்ளது. மற்ற சாதியினருக்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்பை  பிற்படுத்தபட்ட சாதியினரே பறித்து கொள்ளும் நிலை வந்துவிட்டது. திறமையை பார்க்காமல் சாதிப்பிரிவை  பார்த்து வாய்ப்பு தருவது என்பது எந்த வகையில் நியாயம்?

இது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். உதாரணமாக கல்வித்துறையை எடுத்து கொண்டால், உயர்ந்த சாதியை  சேர்ந்த மாணவர் ஒருவர் பள்ளி படிப்பில் 90 விழுக்காடு எடுத்தபோதிலும், 80 விழுக்காடு எடுத்த பிற்படுத்தபட்ட சாதியை  சேர்ந்த மாணவருக்கே கல்லூரியில் முன்னுரிமை என்ற நிலை வந்து விட்டது.

அரசாங்க வேலைவாய்ப்புகளிலும்  இப்படி தான் நடக்கிறது. ஒரு அரசு நிறுவனத்திற்கு நூறு பேர் தேவை என்றால், ஒவ்வொரு சாதி பிரிவினருக்கும் தனித்தனி சதவிகிதத்தில் ஆட்கள் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். அரசியலிலும் இதே கதை தான்.

இந்த சாதிவாரியிலான இடஒதுக்கீடு ஏன் என்று கேட்டால், எல்லா சாதியினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்தையே முன்வைக்கிறார்கள். இந்த சாதி ரீதியிலான அரசியலையே காட்டுகிறது. தகுதியானவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் சாதியை பார்த்து  இடஒதுக்கீடு என்பது தேவையில்லாதது.

சாதி இடஒதுக்கீடுப்பற்றி  பல கிண்டல்,நையாண்டிகளும் இணையதளதிலும், சமூக வலைத்தளங்களிலும் உலா வருகின்றன . இந்நிலை நீடிக்குமாயின், கிழே படத்தில் உள்ளது போல் நம் நாட்டில் எதிர்காலத்தில் வந்தாலும் ஆச்சிர்யபடுவதற்க்கில்லை .



நாம் நாட்டில் இன்றைய சூழலில் அனைத்து தரப்பினரும் கல்விபயின்று நல்ல வேலைக்கு சென்ற  போதிலும், ஒரு சில கிராமங்களில் இன்றும்  பிற்படுத்தபட்ட சாதியை சேர்ந்தவருக்கு சமமான /சரியான வசதியும், வாய்ப்பும், உரிமையும் கிடைப்பதில்லை என்பது மறைக்க முடியாத உண்மை.  இன்றளவிலும் சாதியை காட்டி கல்வியறிவு கூட கிட்டாத நிலையில் தான் நம் நாடு உள்ளது. இந்த சாதி கொடுமைகளை களைந்து, அவற்றை சீர் செய்ய சட்டங்களை கொண்டு வந்தாலே போதும், இடஒதுக்கீடு பற்றி பேசவே தேவை இல்லை. அரசு எல்லாருக்கும் எல்லா வசதியும், உ ரிமையும் திறமைக்கு ஏற்ப வாய்ப்பும் கிடைக்க வழி செய்து  கொடுத்தாலே தரமான, வளமான சமுதயம் அமையும்.




நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 

பி.கு : பதிவை படித்த பின் தங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டம் (comment) இடுமாறு கேட்டு கொள்கிறேன்.