வெள்ளி, 17 ஏப்ரல், 2015

பெரியாரும் பார்ப்பனரும் !

வணக்கம்,

பெரியார் என்று சொல்லும் போதே பலர் மனதில் தோன்றுவது கடவுள் மறுப்பு கொள்கையும், மூட நம்பிக்கை எதிர்ப்பும் தான். ஆனால் அவர் செய்த பல சமூக மாற்றங்களை நாம் மறந்து விட்டோம். இப்போதெல்லாம் பெரியார் அரசியல் கூட்ட பேனரில் மட்டுமே தேவைப்படுகிறார். அவ்வபோது அவரது கொள்கைகளை சிலர் பேச்சளவில் மட்டும் உபயோகப்படுத்தி கொள்கின்றனர்.

பெரியார் தோற்றுவித்தது கடவுள் மறுப்பு கொள்கை மட்டுமல்ல. தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் சுதந்திரம், சாதி வேற்றுமை ஒழிப்பு, சுயமரியாதை கொள்கை என பல சமூக தொண்றாற்றியுள்ளார். 1930-ல் நம் நாட்டில் ஏற்றத்தாழ்வு அதிகமாக இருந்து வந்தது. மேல் சாதியினர் என்று சொல்லப்படும் பார்ப்பன (ஐயர்/ஐயங்கார்) சமூகத்தினருக்கு மட்டுமே கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் முன்னுரிமை அளிக்கபட்டன. சமூகத்தில் அவர்களுக்கு மட்டுமே மரியாதையும், கௌரவமும் தரப்பட்டது. கீழ் சாதியினர் என்று சொல்லப்படும் மக்களுக்கு எந்தவித முன்னுரிமையோ, வாய்போ தரபடவில்லை. இதை கண்டு பொங்கிய பெரியார், ஐயர்/ ஐயங்கார் இல்லாத தலீத் மற்றும் மற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை கிடைக்கவும், சாதி வேற்றுமை ஒழியவும் போராடினார்.

இதன் காரணமாக பெரியார் பார்ப்பன சமூகத்தினரை எதிர்த்து குரல் கொடுக்கலானார். ஒவ்வொரு பொதுகூட்ட மேடையிலும் பார்ப்பனர்களை திட்டி தீர்த்தார். சுதந்திரத்திற்கு பிறகு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பல சட்டங்கள் ஏற்றப்பட்டது. இன்று கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அவர்களுக்கே முதலுரிமை வழங்கபடுகிறது.


ஆனால் இன்றும் மேடைக்கு மேடை தி.க. இயக்கத்தை சேர்ந்தவர்கள், பார்ப்பன சமூகத்தை கிழி கிழியென கிழிக்கிறார்கள். அதன் காரணம், பார்ப்பனர்கள் தான் சாதியை /மூட நம்பிக்கையை வளர்க்கிறார்களாம். அவர்களை ஒழித்து விட்டால், நாடு சுத்தமாகி வீடு விட்டு விளங்கிவிடுமாம்.

நீங்கள் ஏதாவது ஒரு சீர்திருத்த திருமணத்திற்கு சென்று பார்த்தீர்களானால் உங்களுக்கே புரியும். நான் பார்த்த திருமணங்களில் நடந்தது இதுதான். திருமண விழாவிற்கு முன் மேடையில், தலைமை தாங்க வந்திருக்கும் ஒரு திராவிட கழக பிரமுகர், பிராமணர்களை பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக பேச வேண்டுமோ, அவ்வளவு தூரம் பேசுகிறார் தூற்றுகிறார். பின்னர் கடவுள் இல்லை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவன்றை பேசிவிட்டு, திருக்குறள் படித்து முடித்து , பிறகு தான் மணமக்களுக்கு நல்வார்த்தை கூறிவிட்டு (தாலியில்லாமல்) மாலை மாற்றி கொள்ள சொல்கிறார். கூட்டத்தில் யாராவது ஆத்திகரோ, பிராமணரோ இருந்தால் இதயம் எரிமலை போல கொப்பளித்து கொண்டிருக்கும். சீர்திருத்த திருமணம் என்றால் மணமக்கள் மாலையை மாற்றி கொண்டு "நல்ல இருங்கப்பா " என்று கூறி "மணமக்கள் வாழ்க! மணமக்கள் வாழ்க! " என்று வாழ்த்திவிட்டு போகவேண்டியது தானே! அதை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாமல் பிராமணரை பற்றி இழுத்து, ஏன் கேவலபடுத்த வேண்டும். எனக்கு புரியவில்லை. நான் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவன் இல்லை என்றாலும், என்னால் அதை ஒப்பு கொள்ள முடியவில்லை.

மூட நம்பிக்கை, சாதி வேற்றுமை, பெண்ணடிமை, தீண்டாமை போன்றவற்றிக்காக எதிராக குரல் கொடுக்கும் தி.க விற்க்காக நானும் குடைபிடிபவன் தான்.  பெரியார் பிராமணர்களை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களும் ஏசுவது என்ன நியாயம் என தெரியவில்லை.

"கீழ் சாதி என்று சொல்லப்படும் பிற்படுத்தபட்டோர்/தலீத் இன மக்கள் தான் இப்போது கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், சமூக எல்லா உரிமைகளையும் முதன்மையாக பெற்று முன்னேறி வருகின்றனரே! இன்னுமும் ஏன் பார்ப்பனரை எதிர்கிறீர்கள்? " என ஓர் தீவிர தி.க. நண்பரிடம் கேட்டபோது அவர் அளித்த பதில். "இப்போது அவர்கள் பெற்றுருப்பது பொருளாதார முன்னேற்றம் தான்; ஆனால் இன்னும் அவர்கள் சமூக முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். பிராமணர்கள் இருக்கும் வரை அது நடக்காது. சமூக அந்தஸ்து கிடைக்கும் வரை இப்படி தான் எதிர்ப்பு இருக்கும்" என்று கூறினார்.

இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 28 மார்ச், 2015

அறியப்படாத உரிமைகள் !

வணக்கம்,

நம் மக்களுக்கு நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டும். மாநில/மத்திய அரசாவது அவர்களுக்கு அடிப்படை சட்டங்களை புகட்டியிருக்க வேண்டும். ஆனால் நடப்பதை பார்த்தால் அப்படி தெரியவில்லை. 

இரு நாட்களுக்கு சமூக வலைத்தளத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது ஒரு முக்கிய செய்தியை படிக்க நேரிட்டது. எல்.பி.ஜி (L.P.G) என்று சொல்லப்படும் சமையல் எரிவாயுவை உபயோகபடுத்தும் நுகர்வோர் அனைவருக்கும் 40 லட்சம் வரை காப்பீடு இருப்பதாக அந்த பதிவில் உள்ளது. இது சமூக தளங்களில் வருவது போல எதாவது ஒரு வதந்தியாக இருக்குமோ என்று முதலில் நினைத்து, கூகிளை துணைக்கு அழைத்தேன். அட! அந்த செய்தி உண்மைதான்!

தீர ஆராய்ந்ததில், நாம் எல்.பி.ஜி இணைப்பு வாங்கும் போதே அந்தந்த கேஸ் ஏஜன்சி நிறுவனங்கள், நுகர்வோர் கணக்கில் 40 லட்சம் வரை காப்பீடு செய்வதாக சொல்கின்றனர்.


சமையல் எரிவாயுவின் செயற்பிழையால் கேஸ் வெடிப்பது, உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டால், உடனடியாக கேஸ் ஏஜன்சியிடம் தெரிவிக்க வேண்டும். உடனே அவர்கள் ஒரு குழுவை அனுப்பி, சரிபார்த்து விட்டு அதற்கான காப்பீட்டு தொகையை நுகர்வோரிடம் கொடுபார்கள். அக்குழு நுகர்வோர் பயன்படுத்தும் எரிவாயு சாதனங்களான, கேஸ் ட்யூப், லைட்டர், கேஸ் கட் போன்றவை ஐ.எஸ்.ஐ. (ISI) சான்றிதழ் பெற்ற பொருள்களாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

lpg-gas-insurance

சில போலி விபத்து முறைகேட்டை தடுக்கவும் குழுக்கள் உள்ளதாம். கடந்த 25 ஆண்டுகளில் யாருமே இந்த காப்பீட்டு உரிமையை கோரவில்லை என்று தெரிவிக்கிறது ஒரு ஆய்வு.

எல்லோருமே கேஸ் வெடித்தவுடன், பதறி போய் மருத்துவமனைக்கு தான் செல்வார்கள். யார் ஏஜன்சியிடம் போவார்கள் ? என்ற கேள்விகளுக்கு பதில் கிடையாது. காப்பீடு தொகை வேண்டுமென்றால் அவர்கள் தொடர்பு கொண்டு தான் ஆக வேண்டும்.  

நம் நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் வருடத்திற்கு நூற்றுகணக்கான கேஸ் வெடிப்புக்கள் நடந்தேறி வருகிறது. இந்த சட்டத்தை/உரிமையை  பற்றி மக்களுக்கு தெரியபடுத்தி அறிவுறுத்த வேண்டிய மத்திய/மாநிலஅரசுகளும், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களும் முன் வருவதில்லை.

சுதந்திர இந்தியாவில் இது போல ஒரு அடிப்படை காப்பீட்டு சட்டம் இருப்பது நம்மில் பலருக்கு தெரியாது. இன்னும் எத்தனை உரிமைகள், சட்டங்கள்  நமக்கு தெரியாமல் இருக்கிறதோ எனத் தெரியவில்லை.

தகவல்: businesstoday 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 19 மார்ச், 2015

அர்த்தமில்லாத வார்த்தைகள் !

வணக்கம்,

இப்பதிவில் புதிதாய் ஒன்றும் சொல்ல போவதில்லை. திடீரென எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் விளைவு தான் இக்கட்டுரை. தமிழில் சில வார்த்தைகளுக்கு நேரடி அர்த்தம் கிடையாது. ஆனாலும் அவை நம் பேச்சு வழக்கில் இருக்கிறது. அந்த அர்த்தமில்லா வார்த்தைகள் எப்போதிலிருந்து வழக்கத்திற்கு வந்தது? யார் அதை முதலில் பேச ஆரம்பித்தது? என்றெல்லாம் எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அர்த்தமில்லாத வார்த்தைகள் பல இருக்கிறது. அவற்றுள் சில:

'கடகட' வென தேர்வு எழுதினான்.
'பளார்' என்று அரை விட்டான்.
'வீல்' என்று அலறினாள்.
'கமகம' வென வாசம் வந்தது.
'கொல்' என்று சிரித்தனர்.
'டர்' என்று துணி கிழிந்தது.
'டமால்' என்று போட்டு உடைத்தான்.
'டுமீல்' என்று சுட்டான்.
'டக்' என்று காணாமல் போனான்.
'கலகல' என்று சிரித்தான்.
'தொம்' என்று விழுந்தான்.
'பளீச்' என்று தரை இருந்தது.
'பளீர்' என்று வெளிச்சம் அடித்தது.
'துருதுரு' வென இருந்தான் பையன்.
'கும்' இருட்டாக இருந்தது அந்த அறை.
'விறுவிறு' என்று மலை மேல் நடந்தான்.
'படபட' வென இதயம் துடித்தது.
'ஓ' வென அழுதது குழந்தை.
'குறுகுறு' வென்று அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
'ஜம்' மென்று இருந்தார் மாப்பிள்ளை.


இந்த ஒலி சார்ந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? எனக்கு யாரவது புரிய வையுங்கள்.

உங்களுக்கு தெரிந்த வேறு சில 'ஒலி' மயமான வார்த்தைகள் இருந்தால், அதையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

லைக் போட்டால் குண்டாஸ் பாயுமா?

வணக்கம்,

கருத்து சுதந்திரம் என்பது நம் உரிமை. நம்முடைய கருத்தை நாம் எங்கு வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம். ஆனால் அது ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர், ப்ளாக் போன்றவற்றில் நம் கருத்துரிமையை நேர்பட பதிவு செய்வது என்பது கொஞ்சம் கடினமாகி வருகிறது. மற்றவரின் மனதையோ / நம்பிக்கையையோ/உணர்வையோ புண்படுத்தாமல் நம் கருத்தை பகிரலாம். சில அரசியல் பதிவுகள், மதம் சார்ந்த பதிவுகளை எழுதும் போது பெற்றோரும், உறவினர்களும் படிக்கும் போது பெரிய முட்டு கட்டைகளை போடுகின்றனர்.

"இது மாதிரி அரசியல் பத்தியெல்லாம் எழுதாதே! பின்னால ஏதாவது  நமக்கு பிரச்சனை ஆகிடும். நமக்கு இதெல்லாம் வேண்டாம்பா.. " என குறுக்கே நிற்கிறார்கள். என்னதான் நாம் பல சமாதானங்கள் சொன்னாலும், அவர்கள் ஒப்பு கொள்வதாய் இல்லை.

எனக்கு மட்டுமல்ல. கண்டிப்பாக பல பதிவர்களுக்கும், இதே போன்ற முட்டு கட்டைகளை சந்தித்திருக்ககூடும் . எல்லோரும் நமக்கு ஏதும் பிரச்சனை வந்து விட கூடாது என்று தான் சொல்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால் நாம் ஒண்ணும் இல்லாதது, பொல்லாதது  எல்லாம் எழுத போவதில்லையே!!! நம் கண்முன்னே பார்த்தது, செய்திதாள்களில் படித்ததை மட்டுமே தான் ஃபேஸ்புக் மற்றும் வலைப்பதிவுகளில் நினைவு கூர்ந்துள்ளோம். சில சமயம், அப்போதைய நாட்டு நடப்புகளையும், சில சம்பவங்களையும் தொகுத்து எழுதுகிறோம். இதில் தப்பேதும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.

எல்லாரும் சமூக வலைதளங்களில் அரசியல் வேண்டாம் என்று மறுக்க ஒரே காரணத்தை தான் சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன், மகாராஷ்டிரத்தில், சிவசேனாவின் தலைவர் பால் தாக்ரேவின் இறுதி சடங்கின் போது இரு மும்பை பெண்கள் கைது செய்யப்பட்டதை மனதில் கொண்டு தான் அஞ்சுகிறார்கள். "இந்த பந்த்/ கடையடைபெல்லாம் பயத்துக்காக தானே தவிர மரியாதைகல்ல.. " என்ற ரீதியில் போட்ட ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸே கைதுக்கு காரணமாம். கொசுறாக இதை லைக் பண்ண ஒரு மற்றொரு பெண்ணும் சேர்ந்து கைது செய்யப்பட்டாள்.


அன்று முதல் அரசியல் சம்பந்தமுள்ள எந்த ஒரு பதிவும் எவராலும் தைரியமாக போட முடியவில்லை. இருந்தாலும் நம் பதிவர்கள் விடுவதாய் இல்லை. பதிவை படிப்பவர்களுக்கு, இப்படியெல்லாம் அரசியலை பற்றி எழுதியிருக்கிறாரே என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.

மும்பை கைதை முன்வைப்பவர்களுக்கு ஒரு சில சேதிகள்-

1.) அந்த பெண் ஸ்டேடஸ் போட்டது, ஃபேஸ்புக்கில். அவளுடைய நண்பர்கள் மட்டுமே அதை பார்க்க முடியும். மற்றும் அவள் பதிவை லைக் செய்த பெண்ணின் நண்பர்கள் பார்க்க முடியும். இப்படியிருக்க இது எப்படி சிவசேனா தொண்டர்களுக்கு செய்தி போய் சேர்ந்தது என தெரியவில்லை.

2.) சிவசேனா தொண்டர்களுக்கு சிலர் அப்பெண்ணின் உறவினர் ஒருவரின் மருத்துவமனையை அடித்து உடைத்துள்ளனர். ஏன் பெண்ணின் வீட்டுக்கு செல்லாமல், உறவினர்  மருத்துவமனைக்கு சென்றார்கள் என தெரியவில்லை.

3.) போலிஸே நேரடியாக வந்து கைது செய்தது என்றாலும், சைபர் கிரைம் மூலம் இருவரையும் கண்டுபிடிக்கும் அளவுக்கு பால் தாக்ரே ஒன்றும் முதலமைச்சரோ, மந்திரியோ கிடையாது. மராட்டியத்தில் அவர் ஓர்  பெரிய அரசியல் தலைவர் என்றே ஒப்பு கொண்டாலும், சைபர் கிரைம் வைத்து உடனே கைது செய்யும் அளவுக்கு அந்த பெண்களும் தீவிரவாதிகள் இல்லை; இவரும் மகாத்மா இல்லை.

4.) அந்த இரு பெண்கள் கைதாகி பின் விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவர்களை கைது செய்த போலிஸ் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கபட்டதாம். அப்படியென்றால் அவர்கள் யார் சொல்லி அப்பெண்களை கைது செய்தனர்? இதன் பின்னால் இருக்கும் அரசியல் பின்னணி என்ன? அந்த பெண்களும் இதற்கு உடந்தையா??  என பல கேள்விகள் நமக்குள் எழுந்து கொண்டே போகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, சில நாட்களுக்கு பின் தமிழத்தில், சைபர் கிரைம் வகையான குற்றங்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்தார் நம் (மக்களின்) முதலமைச்சர். அவ்வளவுதான் ! உடனே ஊடகங்கள் சில, மும்பை பெண்கள் லைக் போட்ட சம்பவத்தையும், முதல்வரின் புது சட்டத்தையும் ஒன்றாய் சேர்த்து , இனிமேல் அரசுக்கு எதிராக ஃபேஸ்புக் பதிவு போட்டாலோ, லைக் போட்டாலோ குண்டாஸ் பாய்ந்து விடும் என்று எழுதி விட்டனர். இதை படித்த பின்னர் எந்த பெற்றோர்/உறவினர்/நண்பராவது நம்மை அரசியல் பதிவு போட விடுவார்களா?  

முன்பே சொன்னது போல, எந்த ஒரு கருத்தும் மற்றவரை புன்படுத்தாதவரை தவறில்லை. அரசியலை பற்றி பதிவு போட்டால் உடனே கைது செய்து விடுவார்கள் என்ற எண்ணம் தவறு. அதற்காக எதையும் எழுதலாம் என்றும் அர்த்தமில்லை.

சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் எல்லாவற்றையும் அரசாங்கத்தால் கண்காணித்து கொண்டிருக்க  முடியாது. அது சாத்தியமானதும் இல்லை. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானோர் ஸ்டேடஸ்களும், ஆயிரக்கணக்கானோர் லைக் மற்றும் கமென்ட்டுகளும் போடுகிறார்கள். இதில் யார் ஸ்டேடஸ் போடுவது, யார் லைக் போடுவது என்றெல்லாம் தினமும் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்த பக்கம் நின்றால் தவறில்லை. கோட்டை லேசாக தாண்டினால் .. தண்டனை தான்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

ஃபேஸ்புக் அபத்தங்கள் !

வணக்கம், 

நம்மை சிறு வயது முதல், நல்ல விஷயங்களை, சுக-துக்கங்களை நமக்கு நெருக்கமானவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வீட்டில் சொல்லி கொடுத்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில் மனதார பகிர்கிரோமோ இல்லையோ, சமூக வலைதளங்களில் தான் நிறையவே பகிர்கிறோம்.

சமூக வலைதளங்கள் (ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் ) எல்லாமே ஒரு பொழுது போக்குக்காகவும், நமக்கு தெரிந்ததை பகிரவும் தான் உபயோகப்படுத்தபடுகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் பகிரப்படும் முக்கால்வாசி செய்திகள், போலியான அல்லது தேவையில்லாத அபத்த செய்திகளாக தான் இருக்கிறது.

சில ஆர்வகோளாறு மக்கள், தங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப்-ல் அவர்களுக்கு என்ன போஸ்ட் வந்தாலும் அதை அப்படியே forward செய்து விடுகிறார்கள். அது உண்மையா ? பொய்யா? என்று விசாரிக்க வேண்டாம். சரி, யோசிக்கவாவது வேண்டாம். நல்லது செய்கிறேன் பேர்வழி என கண்டதை பகிர்கிறார்கள். ஏற்கனவே பதிவர் ராம்குமார் இதை பற்றி சில வாரங்களுக்கு முன் எழுதி விட்டார். நானும் பேஸ்புக்கில் பார்த்து வெறுப்பான சிலவற்றை பற்றி இங்கே உங்களுக்கு பகிர்கிறேன்.

1.)  ஏழு நிமிடத்தில் லைக்/ ஷேர் செய்தால் நல்லது நடக்கும்.

இது அடிக்கடி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக்  பதிவு. மத வேறுபாடில்லாமல் விநாயகர், சாய்பாபா, திருப்பதி பாலாஜி, ஏசு கிறிஸ்து, மேரி மாதா, நபிகள் நாயகம் என பலரும் பகிர்ந்து பக்தியை வெளிப்படுத்துவர். ஃபேஸ்புக்கில் லைக் செய்து ஷேர் செய்தால், எப்படி கடவுள் அருள் பாலிப்பார்? எப்படி நமக்கு நல்லது நடக்கும்? மதம்/கடவுள் என எல்லாமே நம் நம்பிக்கையில் தான் இருக்கிறது என்றாலும், இது போன்ற மூட பழக்கத்திற்கு துணை போக யார் சொல்லி கொடுத்தது? இப்பதிவையும் ஆயிரம் முட்டாள்கள் லைக் செய்வார்கள், நூற்று கணக்காணோர் ஷேர் செய்திருப்பார்கள்.


2.)  லைக் / ஷேர் செய்தால் பணம் நன்கொடையாக கிடைக்கும்.

சின்ன பையனுக்கு அல்லது பொண்ணுக்கு உடல் நலமில்லை, தாய் தந்தையருக்கு உயிர்கொல்லி நோய். ஃபேஸ்புக்கும், வாட்ஸ் -அப்பும் கலந்து பேசி, ஒரு லைக், ஷேருக்கு 50 பைசா தருவதாக சொல்லியுள்ளார்கள். ஆகவே இதை ஷேர் செய்து லைக் செய்யுங்கள் என்று மன்றாடி பதிவை போடுவார்கள். எந்த ஒரு காலத்திலும், இது போன்ற செயல்களுக்கு எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியோ அல்லது தொண்டு நிறுவனமோ பணம் நன்கொடையாக  தருவதில்லை,         

3.) குழந்தையை காணவில்லை-கண்டுபிடிக்க உதவுங்கள் !

குழந்தையை காணவில்லை- கண்டுபிடிக்க உதவுங்கள். பெயர்: ரஹீம். வயது:8. ஊர்: பெங்களூரு, மசூதி தெரு, தகப்பனார் பெயர்: அப்துல்லா. இச்சிறுவன் சென்னை சென்ட்ரல் C 2 காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருக்கிறான். தயவு செய்து அதிக ஷேர் செய்து அவன் தாய் தந்தையரிடம் கொண்டுபோய் சேர்க்க உதவுங்கள்.  இது போன்ற அபத்தமான  பதிவை பலரும் பார்த்திருக்ககூடும். சிறுவனே காவல் நிலையத்தில் தான் இருக்கிறான். அவர்களே 15 நிமிடத்தில் பெங்களூரு போலீசிடம் பேசி அனுப்பி வைத்து விடுவார்கள். அதை ஏன் நாம் ஷேர் செய்ய வேண்டும்? அதாவது அவர்கள் கூற்று படி ஐநூறு/ஆயிரம் பேர் ஷேர் செய்வதன் மூலம், ஃபேஸ்புக் வழியாக அப்பதிவு அச்சிறுவனின் தாய் தந்தையரிடம் போய் சேரலாம் என்று எண்ணுகின்றனர். #வாட் எ டிசைன்

4.) ஷேர் செய்து அரிய பரிசை பெறுங்கள்.

பெரும்பாலும் பெரிய வணிக நிறுவனங்கள் இது போன்ற சலுகைகளை கொடுப்பதில்லை. சீல் சரியாக வைக்கபடாத 200 ஐ-பேட் களை, இந்த ஃபேஸ்புக் பக்கத்தை லைக் மற்றும் ஷேர் செய்பவர்களுக்கு இலவசமாக தருகிறது ஆப்பிள் நிறுவனம் என்று புரளி பரப்புகின்றனர். நிஜத்தில் அப்படி சீல் வைக்க படாத பெட்டிகளுக்கு மீண்டும் சீல் வைத்து மார்கெட்டுக்கு அனுப்பு வைத்து விடுவார்களே தவிர, இப்படி இலவச சலுகைகளை தர மாட்டார்கள்.

5.) UNESCO விருதை வென்ற "ஜன ஜன மன .."

நம் தேசிய கீதமான "ஜன ஜன மன" UNESCO வின்  உலகில் சிறந்த தேசிய கீதம்  விருதை பெற்றுள்ளது. ஒவ்வொரு இந்தியனும் இதனால் பெருமை படுவோம் என்று ஷேர் செய்திருப்பார்கள். நாமும் நம் நாட்டு பற்றை விட்டுகொடுக்காமல் லைக் போட்டு போயிருப்போம் (நானும் பண்ணி தொலைச்சேன்). ஆனால் அதுவும் பெரும் பொய்யே! நாங்கள் எந்த ஒரு விருதையும் யாருக்கும் அறிவிக்கவில்லை என்று சொல்கிறது UNESCO.


6.) பெண்களே உஷார் - எச்சரிக்கை !

சில பெண்கள் நலம் விரும்பிகள், பெண்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன் என்று கண்டதையும் ஷேர் செய்வார்கள். உங்கள் பேஸ்புக் ப்ரோபைல் போட்டோ சில சமூக காமுகர்களால் காப்பி செய்யப்பட்டு அதை தவறான இணையதளங்களிலும், போலி பேஸ்புக் அக்கௌன்ட்களிலும் உபயோகப்படுத்துகின்றனர். உஷார் ! ஆகவே உங்கள் படங்களை யாரும் சமூக இணைய தளங்களில் போடாதீர்கள் என்று எச்சரிக்கை
செய்து மிரட்டுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் இணையத்தில் ஒன்றிரண்டு நடந்திருப்பதை மறுக்க முடியாது என்பதை நானும் ஒப்பு கொள்கிறேன். பெண்களை உன் பேஸ்புக் பக்கத்தில்/ டைம் லைனில் கண்டவர்களின் friends request-ஐ ஏற்று கொள்ள கூடாது; தாங்கள் பகிர்வதை இன்னார் மட்டுமே பார்க்க வேண்டும் என்று settings-ஐ  மாற்றி கொள்ள வேண்டும என்று சொல்வதை  விட்டுவிட்டு அவர்கள் சுதந்திரத்திற்கு இடையில் நிற்பது அபத்தமே.

7.) மகாத்மாவின் நடவடிக்கை

இது தான் கொடுமையிலும் கொடுமை. ஒரு தேசபிதாவை அந்த நாட்டினரே அவமதிப்பது மகா கேவலம். மகாத்மா காந்தி எப்பொதும் பெண்களுடன்தான் இருப்பார். அதுவும் சிறு வயது பெண்களுடன். உதவிக்கு ஆண்களை வைத்து கொள்ளாமல்; சிறு பெண்களை வைத்து கொண்டு கூத்தடித்தார் என்று புகைப்படத்துடன் போடுவர்கள். இதை எந்த மூடன் ஆரம்பித்தான் என்று தெரியாவிட்டாலும், இது போன்ற ஆதாரமில்லா செய்திகளை சமூக வலைத்தளங்கள் பரப்பி கொண்டு தான் இருக்கிறது.

8.) டூத் பேஸ்டில் உள்ள கலர் சதுர குறியீடு

நான் சொல்ல வேண்டாம். படத்தை பார்த்தாலே உங்களுக்கே புரிந்திருக்கும். டூத் பேஸ்ட் ட்யுபில்  உள்ள கலர் சதுர குறியீடு அதன் செயல் கலவை  தன்மையை குறிக்கும் என்று பரப்பினார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. அது வெறும் கம்பெனியின் பேக்கிங் வசதிக்காக வைக்கப்பட்ட சீல் என்று விளக்கம் வந்துள்ளது.


9.) ஷாப்பிங் மாலில் ட்ரையல் ரூம்மில் ரகசிய கேமிரா

ஷாப்பிங் மாலில் பெண்கள் ட்ரையல் ரூம்மில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருக்கும். அதை அவர்கள் இணையதளங்களில் விற்றுவிடுவார்கள் என்று பீதியை கிளப்பினார்கள். மேலும் அந்த கண்ணாடி அறையிலிருந்து பார்த்தால், நீங்கள் நிற்பது மறுபக்கத்தில் தெரியும் என்றும் சொன்னார்கள். ஆனால் அது உண்மையல்ல. உள்ளே நீங்கள் நிற்கும் போது உங்கள் செல்போனிலிருந்து கால் செய்து போகவில்லை என்றால், அங்கு ஓர் ரகசிய காமிரா உள்ளது என்று அர்த்தமாம். ஹ்ம்ம்... உண்மையில் காமிரா இருந்தால், கால் போகாது என்பது ஒரு அறிவியல் பூர்வமான பொய்யான தகவல். மேலும் இரு பக்க கண்ணாடியை கண்டுபிடிக்க உங்கள் ஆள்காட்டி விரலை வைத்து சோதிக்க சொல்லியிருப்பார்கள். அதுவும் ஒரு கேவலமான பொய்யே !


10.) வாட்ஸ்-அப் ஃபார்வோர்ட்கள் -

சில நாட்களுக்கு முன் ஒரு அழகிய பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பி, கூடவே ஒரு ஆடியோ பைலையும் சேர்த்து பரப்பியுள்ளனர். அதில் அந்த பெண் ஒரு ஜெகஜால திருடி என்றும், ஆண்கள் இல்லாத நேரத்தில், வீடு வீடாக சென்று கேஸ் கனெக்ஷன் சரி பார்க்க வந்துள்ளதாக சொல்லி நகை மற்றும் பணத்தை திருடி விடுவாள், உஷாராக இருக்கவும் மக்களே என்று ஒரு மேதாவி பேசியுள்ளார். அந்த பெண்ணின் போட்டாவில்  அழகாக ஐ.டி. கார்டு டேக் போட்டு கொண்டு சோபாவில் உட்கார்ந்து போஸ் கொடுக்க பட்டிருக்கும். திருடி என்றால் இப்படியா போஸ் கொடுத்து போயிருப்பாள். அதை கூட யோசிக்காமல், பல ஆர்வ கோளாறுகள் ஷேர்/ forward  செய்துவிட்டனர். இதை ஒரு தினசரி நாளிதழ், உண்மையா? பொய்யா? என்று கூட விசாரிக்காமல் தங்கள் பத்திரிகையில் போட்டு விட்டனர். பின்னர் அது பொய் என்று ஒரிரு வாரம் கழித்து தான் தெரிந்தது.


இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு forward மெசேஜ். சென்னையின் போலீஸ் கமிஷனர் ராஜேஷ் மாரியா, பெண்களின் பாதுகாப்புகாக ஒரு புது திட்டத்தை தொடங்கியுள்ளார். அதாவது  பெண்கள் டாக்ஸி/ஆட்டோ ஏறும் முன் அந்த வண்டியின் என்னை 9969777888 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், அதை அவர்கள் ஜி.பி.எஸ் மூலம் டிராக் செய்து கொள்வார்களாம். உங்கள் அக்கா/தங்கை/நண்பிகளுக்காக ஷேர் செய்யுங்கள் என்று வந்தது. அடப்பாவிகளா !!! ராஜேஷ் மாரியா மும்பையின் போலீஸ் கமிஷனர். இந்த திட்டமும் மும்பையில்தான் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இப்போது சென்னையின் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ். இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் சிலர் பகிர்கின்றனர்.



ஏ.டி.எம்-ல் பின்-நம்பரை தலைகீழாய் போடுவது, டெலிகிராம் ஆப் ஓர் இந்திய தயாரிப்பு நிறுவனம், ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்,  இவை எல்லாம் போலியான செய்திகளே! இன்னும் இது போன்ற அபத்தங்கள் பல இணையத்தில் உலவுகின்றன. கூகுளில் சென்று social media hoax என்று தேடி பாருங்கள். இன்னும் பல கதைகளை காணலாம். நான் இங்கே பகிர்வதும்  இணையத்தில் தேடி படித்தது தான். இணையத்திலும், சமூக வலைமனைகளிலும் பகிரப்படுவது பெரும்பாலும் போலியான அல்லது அபத்தமான செய்தி பதிவுகளே ! இதனால் பெரும் பாதிப்புகள் வராது என்று வைத்து கொண்டாலும், முடிந்த வரை சரியான தகவல்களை பகிருவோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 13 டிசம்பர், 2014

லிங்கா - விமர்சனம்

வணக்கம்,

கிட்ட தட்ட ஒன்றரை மாதங்களாக அடித்து பிடித்து தலைவரின் தரிசனத்திற்காக காத்துக்கொண்டிருந்த கோடான கோடி தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன்.

போன மாசம் வெளியான லிங்கா பாடல்களில், ஒன்று கூட
ஏ.ஆர். ரகுமானின் இசை என்று சொல்லி கொள்ளும்படி இல்லை.
'மோனா மோனா ' பாடல் மட்டும் நன்றாக இருக்கிறது என யாரோ சிலர் சொன்னதால், அதையும் கேட்டு ஏமாந்து போயிருந்தேன். சரி... மோனா போனா போகட்டும்ன்னு விட்டுவிட்டு, நமக்கு படம் தானே முக்கியம் என்று ஆவலாய் இருந்தேன்.

பெரும்பாலும் சூப்பர் ஸ்டாருக்கு ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால், அடுத்த படம் கண்டிப்பாக மெகாஹிட்தான். கோச்சடையான் சரியாக போகவில்லை என்பதால், எப்படியும் இந்த படம் நன்றாகதான் இருக்கும் என்று தலைவர் மீதும், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் மீதும் அளவற்ற நம்பிக்கை வைத்து இன்று ஏ.ஜி.எஸ். திரையரங்கில் சென்று படம் பார்த்து விட்டு........ சற்றே கனத்த மனதுடன் தான் வீடு திரும்பினேன்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தலைவர் தான் திரையில் மின்னுகிறார். ஆரம்ப பாடலில் வருவதிலிருந்து டூயட் வரை தலைவரின் நடை, பேச்சு, பன்ச்சு, ஸ்டைல் இன்னும் எதுவுமே குறையவில்லை. ப்ப்பா..தலைவா!!! 63 வயசென்ன; 75 வயசிலும் நீ நடித்தால் இதே போன்று, ஏன் இதை விட அதிகமாக கூட்டம் கூடும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

படத்தில் இரண்டு ரஜினி. ஒருவர் பேரன், இன்னொருவர் தாத்தா. முதல் ரஜினி யூத் கெட்-அப்பில் அசத்துகிறார் என்றால், பிளாஷ் பாக்கில் வருபவர் பிரிட்டிஷ் கலெட்டராகவும், ராஜா லிங்கேஷ்வரனாகவும் கம்பீரமாய் வாழ்ந்திருக்கிறார்.
 

முதல் ரஜினியை இளமையாக காட்ட ரொம்ப முயற்சி செய்துள்ளனர்- உடையிலும், வசனத்திலும் (உதாரணம். நண்பேன்டா, திருட்டுப் பய... )
பொதுவாக சந்தானத்தின் காமெடி ஒன் லைனர்கள் பெரிய நடிகர்களின் முன் எடுபட வாய்ப்பில்லை. இதிலும் தான்.

கதை ட்ரைலரிலேயே எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஊருக்காக தான் சொந்த செலவில் அணை கட்டி கொடுக்கிறார், ராஜா லிங்கேஷ்வரன். அணை கட்டும் போது அதில் வரும் பிரச்சனைகள், அணை கட்டி முடித்த பிறகு வரும் பிரச்சனைகளும் தான் படத்தின் மீதி கதையோட்டம். ராஜாவின் அரண்மனை, கட்டிகொண்டிருக்கும் அணை, என படத்தில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேல். ராஜா லிங்கேஷ்வரனின் பாத்திரத்தில் சில வசனங்களை அசால்டாக பேசியுள்ளார் ரஜினி. வெள்ளையனுக்கு எதிராக பேசும் இடங்களில் மட்டும் இன்னும் கொஞ்சம் பன்ச்சு வைத்திருக்கலாம்.

சூப்பர் ஸ்டார் நகை திருடும் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளை மட்டும் தவிர்த்திருக்கலாம். ஆனால் பாலத்திலிருந்து ஓடோடி வந்து ரயிலில் பா.....ய்ந்து ஏறுவது; தரையில் ஓடிவந்து, விண்ணில் பறக்கும் ஹெலிகாப்டரை விரட்டி பிடிப்பது; பத்தாவது மாடியிலிருந்து கயிற்றை படித்து கொண்டு விறுவிறுவென இறங்குவது என பல ஆக்க்ஷன் காட்சிகளை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பார்த்து பூரித்துள்ளதால், இதை அவ்வளவு பெரிய குறையாக நம்மாட்கள் எடுத்து கொள்ள மாட்டார்கள்.

படத்தில் இரு நாயகிகள். அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி சின்ஹா. இருவரும் தலா ஒரு பாடலுக்கு டூயட் பாடி செல்கிறார்கள். இருவருக்குமே நடிக்க சமமான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சோனாக்ஷிக்கு தமிழ் பெண்ணின் முக சாயலே வராததால், அனுஷ்காவே முன்னணியில் ஜொலிக்கிறார்.

கதையின் கரு புதுசுதான். காப்பியடிக்கபட்டது/ திருடப்பட்டது என்பதையெல்லாம் கூட ஓரம் கட்டி வைத்து விடுவோம். தலைவர் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பது ஊரறிந்த ஒன்று தான். கொஞ்சம் வித்தியாசமான கதைக்காகதான் இப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருப்பார் தலைவர். அவரை ரசிக்க வந்தவர்கள், அவரை மட்டுமே படம் முழுக்கவும் காண முடியும். இது ஒரு சாதாரண கமர்ஷியல் ரஜினி படம். மத்தபடி ஏதுமில்லை.

சூப்பர் ஸ்டார் என்னும் மாய பிம்பத்திற்காக உருவாக்கப்பட்ட கதை என்று இயக்குனரும், கதையாசிரியரும் ஆடியோ ரிலீஸில் சொன்னார்கள். ஹ்ம்ம்.. படம் சுத்த மோசம் என்று சொல்விட முடியாது. நீங்கள் ரஜினி ரசிகரா? அப்போ கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். திரைக்கதையை மட்டும் கொஞ்சம் சரியாக கவனித்திருந்தால், ராஜா லிங்கேஷ்வரன் ரசிகர்களை மட்டுமல்ல, எல்லார் மனதிலும் அணை கட்டி கவர்ந்திருப்பார்.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

சாதிகள் இருக்குதடி பாப்பா!

வணக்கம்,

சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லிவிட்டு போய்விட்டார் பாரதி.  ஹ்ம்ம்.. ஆனால் எங்கு சாதி இல்லை? பிறப்பு முதல், படிப்பு, வேலை, திருமணம், இறப்பு என எல்லா இடங்களிலும் சாதிதான் வாழ்கிறது. வெகு சிலரே சாதியின் அடையாளத்தை சொல்லாமல் சமூகத்தில் வாழ முடிகிறது. மற்றவர்கள் ஏதாவது ஒரு இடத்திலாவது சாதியை உபயோகிக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ் நாட்டில் மட்டும் இல்லை; நம் பாரதம் முழுவதும் சாதிபற்று வெறி பரந்து விரிந்து கிடக்கிறது.

நம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதில் முக்கிய பங்கு சாதி மதத்துக்கு உண்டு. சாதியை ஒழிப்போம் என்று கூறியவர்கள் யாரும் அதை ஒழிக்க முயன்றதாய் தெரியவில்லை. எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றும் சாதி அரசியல் தான் நடக்கிறது. கிராம தேநீர் கடைகளில் பித்தளை குவளையில் ஆரம்பிக்கும் சாதி வேற்றுமை, இறந்த பின் புதைக்கும் இடுகாடு வரை நீள்கிறது. சாதியினால் ஏற்படும் வன்கொடுமைகளும், கலவரங்களும், இடஒதுக்கீடுகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தமிழ் நாட்டில் இரு தலைமுறைகளுக்கு முன்னால், பெயர்களுக்கு பின் தங்கள் சாதியின் பெயரை போட்டு கொள்ளும் வழக்கம் இருந்தது. அவர்களின் சாதி என்னவென்று அவர்களது பெயரிலேயே தெரிந்துவிடும். ஆனால் இப்போது அந்த வழக்கம் இல்லை. இருந்தாலும், முழுவதுமாக மறைந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது.


இந்த 68 வருட சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டில் நம் திராவிட கட்சிகள் செய்த சில நல்ல விஷயங்கள்- சுயமரியாதை, பெண்ணுரிமை மற்றும் மக்களின் பெயரில் உள்ள சாதியின் அடையாளத்தை நீக்கியது தான். அதை பெயரளவில் மட்டுமே நீக்கியதுதான் வேதனை.

தமிழக எல்லையை தாண்டி கொஞ்சம் போனாலே, மக்கள் அவர்கள் பெயர்களுக்கு பின்னால் அவர்தம் சாதி /சமூக பெயர்களை போட்டு கொள்வது இன்னும் வழக்கத்தில் உள்ளது. அது அவர்களுக்கு தவறாக தெரியவில்லை. தவறு என்று நானும் சொல்லவில்லை. சாதியை ஓழிப்போம் என்று கூறிவிட்டு பெயரளவில் மட்டுமே சாதியை பிரித்த நாமும் சரி, சாதியின் பெயரை போட்டு கொள்ளும் மற்ற மாநிலத்தவரும் சரி, சாதியென்னும் சாக்கடையில்தான் இன்னும் வாசம் செய்து கொண்டிருக்கிறோம்.

தற்போது தமிழ் பேசும் மக்களிடையேயும் இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது வருந்தத்தக்கது. சமூக வலைதளங்களில் தங்கள் பெயருக்கு பின்னால் சாதியின் பெயரை போட்டு கொண்டும், சாதியின் அடையாளமாக விளங்கும் தலைவர்கள், சின்னங்களை படங்களாக போட்டு கொண்டும் திரிகின்றனர்.

அவ்வபோது அவர்கள் போடும் நிலைபாட்டில் தங்கள் சாதியின் பெருமைகளை தம்பட்டம் அடித்து கொண்டும், மாற்று சமூகத்தினரை தரம்கெட்டு ஏசியும் தங்கள் சாதி பசியினை தீர்த்து கொள்கின்றனர். ஒரு சில திரைப்பட/ஊடக பிரபலங்களும் இதில் பசியாறி கொள்கின்றனர். இதையெல்லாம் பெரும்பாலும் செய்வது அந்தந்த சமூகத்தின் இளைய சிங்கங்களே! சில சாதி அமைப்புகளின் உறுப்பினர்களும் இந்த செயற்கரிய செயல்களை செய்து வருகின்றனர். நான் இந்த சாதியை/ சமூகத்தை  சேர்ந்தவன் என்று சொல்வதில் கேவலமோ, வெட்கமோ தேவையில்லை. பெயரின் பின்னால் சாதியை குறிப்பிடுவது இக்காலகட்டத்தில் தேவையில்லாதது. சாதியின் போர்வையில் மற்றவர்களை திட்டி மனதை புண்படுத்துவதும், வீண் பெருமையும் தேவையற்றது.

இது இப்படியே போனால், நாளை எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சாதியம் தலைவிரித்து ஆட ஆரம்பித்துவிடும். சாதி என்ற வேற்றுமை எல்லார் மனதிலும் பதிந்துவிடும்.

"ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே; ஆனந்த சுதந்திரம் 
அடைந்துவிட் டோமென்று .." என்று பாரதி பாடிய பாடல் நினைவாகி போனது போல, "சாதிகள் இல்லையடி பாப்பா.." என்று பாடியது என்று உண்மையாகுமோ  எனத் தெரியவில்லை.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 30 நவம்பர், 2014

ஆ... விமர்சனம்

வணக்கம்,

ஆ.... அம்புலி இயக்குனரின் அடுத்த படைப்பு. படத்தின் முதல் மோஷன் போஸ்டர் பார்த்தவுடன், இந்த படத்தை பார்த்ததே தீர வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். நேற்று திரையரங்கில் ஐம்பதுக்கும் குறைவான கூட்டத்தில் பார்க்க வேண்டிய நிலை. பெரிய நடிகர்கள் யாரும் இல்லாததால் படம் மக்களிடம் போய் சேரவில்லை என நினைக்கிறேன்.

தமிழின் முதல் ஹாரர் அந்தாலஜி (Horror Anthology) படம் இது. அந்தாலஜி என்பதற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட கதைகளின் தொகுப்பு என்று பொருளாம். அது போல ஐந்து வேறு வேறு கதைகளை படத்தில் நமக்கு தொகுத்து சொல்லியிருக்கிறார்கள்.

படம் ஆரம்பிக்கும் போது வரும் பாடலை பார்த்தால், இது திகில் படம்தானா  என்று நமக்கு சந்தேகம் வருகிறது. ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் திரைக்கதைக்குள் வந்து விடுகின்றனர். பேயை தேடி நண்பர்கள் மூவர் (கோகுல், மேக்னா, பால சரவணன் ) அலைவது தான் கதை. வங்காள விரிகுடாவில் நடுவில் ஒரு இடம், ஜப்பானில் ஒரு மருத்துவமனை அறை,  துபாய் பாலைவனத்தில் ஒரு பெரிய மாளிகை, தமிழ்நாட்டில் ஊருக்கு வெளியே ஒரு ஏ.டி.எம். செண்டர் மற்றும் ஒரு நெடுஞ்சாலை பாதை என பேய் இருப்பதை கண்டுபிடிக்க பேயாய் அலைகின்றனர்.


ஐந்து பேய் கதைகளையும் திகிலுடன் கொடுக்க முயன்றிருக்கின்றனர் படகுழுவினர். கடலுக்கு நடுவிலும், மருத்துவமனையிலும் நடப்பதை திகிலுடன் சொல்லும் போது, நம்மை சில நிமிடம் நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். மற்றபடி, படத்தின் முதல் பாதி லேசான திகிலுடன்தான் இருகிறது. ஆனால் பிற்பாதியில் அவ்வளவாக பயமுறுத்த மறந்து விட்டார்கள்.

நாயகன் கோகுல் நன்றாக மைமிங் மற்றும் டான்ஸ் ஆடுவார் என்று எல்லாருக்கும் தெரியும். படத்தில் அவருக்கு இன்னும் கொஞ்சம் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கலாம். உடன் வரும் மேக்னா படம் முழுக்க வந்து போகிறார். பால சரவணனின் வசன உச்சரிப்பு, நடிப்பை பார்க்கும் போது, பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க வாய்ப்பு உண்டு என தோன்றுகிறது. பாபி சிம்ஹா இதிலும் கொஞ்சம் வித்தியாசமான பாத்திரத்திலேயே நடித்துள்ளார். அடுத்து இசை. படத்தின் இசை பெரிதாக இல்லை என்றாலும், திகில் படங்களுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது நல்லது.

தமிழ் படங்களில் பேயை தேடி போவது, அதுவும் நாடு நாடாய் போவார்களா என்றெல்லாம் யோசிக்க/கேட்க கூடாது. ஹாலிவுட்டில் இப்படி படம் எடுத்தால், வாயை ஆ.. என்று பிளந்து கொண்டு பார்ப்பார்கள். 'பீட்சா' படம் வந்த பின்னர், நாம் எல்லா திகில் படங்களையும் அதனுடையே ஓப்பிட்டு பார்க்கிறோம். "ச்சே..பீட்சா மாதிரி இல்லப்பா.." என்று சொல்லி கொள்கிறோம். ஆனால் எல்லா படமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

தமிழில், அதுவும் திகில் படங்களில், இது போல மற்றுமொரு வித்தியாசமான முயற்சியை செய்துள்ள இயக்குனர் ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயண் அவர்களுக்கு ஒரு சிறப்பு பாராட்டுக்கள்.

'ஆ'  நம்மை மிரட்டி, அலறவைக்கவில்லை, இருப்பினும் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 24 நவம்பர், 2014

பிரியாணி பிறந்த கதை

வணக்கம், 

நம்மில் பலருக்கு பிரியாணி பிடிக்கும். பிடிக்கும் என்பதை விட அலாதி பிரியம். சுட சுட, மண மணக்க மசாலா வகைகளை போட்டு, சில பல பீசுகளோடு, பாஸ்மதி அரிசியில் பிரியாணி என்றால் பலர் உயிரையே விட்டு விடுவார்கள். அது அப்படி பிரியாணி எல்லோருக்கும் பிடித்த ஒரு தேசிய உணவாகவே மாறி போனது என்று தான் விளங்கவில்லை. அந்நிய உணவான பிரியாணி எப்படி இந்தியாவிற்குள் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?

பெயர் காரணம்: பிரியாணி பிறந்த இடம் பெர்சியா (இப்போதைய ஈரான்). 14-ஆம் மற்றும் 15-ஆம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பின் போது மன்னர்களுக்காக சமைக்கப்பட்ட உணவு என்று சொல்லபடுகிறது. எனினும் பிரியாணி பிறந்த இடம் பெர்சியாவா அல்லது அரேபியாவா என்று இன்னும் சரியாக தெரியவில்லை.பிரியாணி என்ற சொல்லுக்கு பார்ஸி மொழியில் 'வறுத்த /வறுக்கப்பட்ட உணவு ' என்று பொருள்.

ஹைதிராபாதி பிரியாணி

ஆரம்பகாலத்தில் பிரியாணிக்கு, நெய்யில் அரிசியை (கழுவாமல்) வறுத்து எடுப்பார்கள். இதன் மூலம், அரிசி நன்றாக வறுக்கப்பட்டு , மசாலா கலவையெல்லாம் சரியாக கலந்து, கறிவகைகளை அரிசிக்கு இடையில் வைத்து வெந்தவுடன், ஓர் நல்ல சுவையை தரும். இதை தான் தம் பிரியாணி என்று சொல்கின்றனர்.

மேலும், 1593-1631 -ல் ஷாஜகான் தன் ஆசை மனைவி மும்தாஜுன் அன்பு கட்டளையின் பெயரில் தம் போர் வீரர்களின் சீரான ஊட்டசத்துக்காக  சமைக்கப்பட்ட / உருவாக்கபட்ட  உணவு தான் பிரியாணி என்றும் சிலர் சொல்வதுண்டு.

வடக்கில், அவாத்தை (இன்றைய லக்னோ) முகலாயர்கள் சில காலம் ஆண்டனர். அங்கிருந்து அவாதி பிரியாணி என இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது. பின்னர் தில்லியிலிருந்து முகல் பிரியாணி என்றும் பரவியது.

பின்னர் 1856-ல் கல்கத்தாவை ஆண்ட நவாப் வாஜித் அலி ஷா மூலம் கல்கத்தா பிரியாணி உருவாகி பரவியது.

தென்னிந்தியாவில், மைசூர் திப்பி சுல்தானின் கோட்டையில் பல சைவ இந்து சமையல்காரர்களின் மூலம் , வெறும் காய்கறிகளின் வைத்து, தாகிரி பிரியாணி சமைத்து பரப்பினார்கள்.

அதே காலகட்டத்தில் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம்கள்  மூலம் ஹைதிராபாதி பிரியாணி  என்றும் ஆற்காட்டை ஆண்ட நவாப்கள் (வாணியம்பாடி/ஆம்பூர்)  ஆற்காடு பிரியாணி  என இந்தியா முழுவதும் பரவவிட்டனர்.

கேரளத்தில், கோழிகோடு தலச்சேரி வழியாக படையெடுத்து வந்த நவாப்கள், அந்த பகுதிகளை சில காலம் ஆண்டனர். அங்கிருந்து தலச்சேரி பிரியாணி என ஊரெங்கும் என்று பரப்பினர்.

இன்னும் இதை தவிர கடலோர கர்நாடகாவில் பத்களி பிரியாணி,   மகாராஷ்டிராவில் பம்பாய் பிரியாணி, ஜம்முவில் காஷ்மீர் பிரியாணி, குஜராத்தில் மிமோனி பிரியாணி,  தமிழ் நாட்டில் திண்டுக்கல் பிரியாணி என பிரியாணி வகையாறாக்கள் இந்தியா முழுவது பறந்து விரிந்து பரவியுள்ளது.

இந்தியா தவிர சிலோன் பிரியாணி, பாகிஸ்தான் சிந்தி பிரியாணி , மலேசியன் பிரியாணி என கடல் கடந்தும் பிரியாணிகள் மக்களை ஆட்கொண்டுள்ளது.

ஒரு சில பிரியாணி வகைகள் அந்தந்த ஊர்களில் உள்ள கடைகளின் மூலம் தனி ருசி ஏற்படுத்தப்பட்டு பிரபலமானவை. 

இப்படிதான் இந்தியா முழுவது பிரியாணி பரவி நம் அனைவரின் மனதை கொள்ளையடித்தது. இதுவரை நான் பிரியாணி என்றாலே ஹைதிராபாதி அல்லது ஆம்பூர் பிரியாணி தான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் இத்தனை ஊரில் இத்தனை வகைகளா என நினைக்கும் போது நாக்கில் நீர் ஊறுகிறது.

இணையத்தில் நான் பார்த்த, படித்த பிரியாணி வகைகளை உங்களிடம் இங்கு பரிமாறியுள்ளேன். இதில் உங்களுக்கு தெரிந்த ஏதேனும் பிரியாணி வகை விடுபட்டிருந்தால் எனக்கு பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

தகவல்கள்  - கூகிள் 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 10 நவம்பர், 2014

மூக்கை மூடிட்டு படிங்க !

வணக்கம்,

இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. கடந்த ஒன்றரை வருடங்களில், 50 பதிவுகளை எழுதிவிட்டேன் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. என் வலைப்பூவிற்கு வருகை தந்து, பின்னூட்டம் எழுதி, என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் பல!

50th-article

சரி... பதிவுக்குள்ளே வருவோம். நீங்க எல்லோரும் காலையில் எழுந்தவுடன், பல் துலக்கிவிட்டு என்ன செய்வீங்க? அடச்சீசீசீய்ய்ய் !!! இவன் என்ன விவஸ்தை இல்லாம கேள்வி கேக்குறானேன்னு தப்பா நினைக்காதிங்க. இந்த பதிவும் அதை பற்றியது தான். நீங்க ரொம்ப சுத்த பத்தம்-ன்னா கொஞ்சம் மூக்கை மூடிட்டு படிங்க.

இது ஒரு சாதாரண விஷயம் தானே. இதில் என்ன புதுசாய் சொல்ல போகிறான் என்று யோசிக்கிறீர்களா ? சொல்கிறேன் படியுங்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக கழிவறை தினம் (World Toilet Day) என்று ஒன்றை புதிதாய் கடந்த வருடம் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் 3 மில்லியன் மக்களுக்கு சுகாதாரமான கழிவறைகளை கட்டி தந்துள்ளது. மற்ற பணக்கார நாடுகளுக்கெல்லாம் உலக கழிவறை தினம் என்பது ஒரு கேலி கூத்தான செய்தி. ஆனால் ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கும், அங்குள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும் இது சாதாரண செய்தியாக இருப்பது இல்லை.


சில நாட்களுக்கு முன், ஓர் தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையை  படித்து அதிர்ச்சிக்குள்ளாகி விட்டேன்.

1.)  உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு பாதுகாப்பான, சுகாதாரமான தனி கழிப்பறை கிடையாது.

2.)  சுமார் 500,000 குழந்தைகள் பாதுகாப்பற்ற நீர் மற்றும் மோசமான
சுகாதாரமில்லாத கழிவறையால் வயிற்றுப்போக்கு, தொற்று வியாதி ஏற்பட்டு இறக்கின்றனர்.

3.)  உலகில் கழிப்பறைகளை விட மக்களிடையே செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இந்த அதிர்ச்சியூட்டும் விஷயங்களெல்லாம் பெரும்பாலும் நம் நாட்டிலும் நடக்கிறது. இந்தியாவில் ஏறத்தாழ 13% மக்கள் திறந்த வெளியில்தான் மலம் /சிறுநீர் கழிக்கிறார்கள். புறநகர் மற்றும் கிராம புறங்களில் உள்ள பல கழிவறைகள், சுத்தமில்லாததாகவும், வேலை செய்யாமல் செயலிழந்தும் இருப்பது வேதனைக்குரியது.  

உலக சுகாதார அமைப்பின் (World Health Organization ) கூற்றுபடி, இந்தியாவில் 636 மில்லியன் மக்கள் கழிப்பீடமின்றி வாழ்கிறார்கள். பெண்களுக்கு போதுமான அளவு கழிப்பறை வசதி இல்லாததால், சராசரியாக  13 மணிநேரம் தங்கள் இயற்கையின் உந்துதலை (அவசரத்தை) அடக்கி வைக்கின்றனர். இதன் மூலம் சிறுநீரக பாதிப்பு, சிறுநீர் தொற்று வியாதி என அவதிபடுகிறார்கள்.

இந்த கழிப்பீட வசதிகள் பெருநகரங்களிலும் பெரும்பாலும் இருப்பதில்லை. கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை கவலைக்கிடமாக தான் இருக்கிறது. அவரசத்திற்காக ஆண்கள் "திறந்தவெளி புல்வெளி கழகத்தில்" முடித்து கொள்கிறார்கள். பெண்கள் ??? 

சரியான கழிப்பீடங்கள் வீட்டில் இருந்திருந்தால், கடந்த ஓர் ஆண்டில் 11,000 பெண்கள் பலாத்காரத்திலிருந்து தப்பித்திருப்பார்கள் என பி.பி.சியின் ஒரு கருத்தாய்வு கூறுகிறது.

இப்படிப்பட்ட ஒரு சுகாதாரமில்லாத , அடிப்படை வசதி கூட கிடைக்காத மக்கள் இருக்கும் நம் நாட்டில் தான் "மங்கல்யான் " வெற்றியையும், மற்ற தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றியும் பெருமை பேசி கொண்டிருக்கிறோம்.

தூய்மை இந்தியா திட்டம் (Clean India) மூலம் நம் தேசத்தை சுத்தமாக்குவோம் என்று நம் பாரத பிரதமர் சொல்லி கொண்டிருக்கிறார். அந்த திட்டத்தின் கீழ், தெருவுக்கு இரண்டு கழிப்பறைகளாவது கட்டி தந்தால் நாம் அனைவரும் சுகாதார காற்றை சுவாசிக்கலாம். நம் எதிர்கால தலைமுறைக்கு சுத்தத்தின் முக்கியத்துவத்தையும், சுகாதாரத்தின் அவசியத்தையும் சொல்லி கொடுப்போம்.

தகவல்கள்  - கூகிள் , World Toilet Day


நன்றி !!!

-பி .விமல் ராஜ்