சனி, 22 ஆகஸ்ட், 2015

நம்ம சென்னை 377 !

எல்லாத்துக்கும் வணக்கம்பா,

இன்னைக்கி 'மெட்ராஸ் டே' வாம். இன்னையோட நம்ம சென்னை சிட்டிக்கு 377 ஆவது வருசம் ஆரம்பிக்குதாம். எவரோ சென்னப்ப நாயக்கராண்ட 1639 வருசத்தில ஆகஸ்ட் மாசம்  22 ஆம் தேதி, மூணு மைல் இடத்த வெள்ளைக்கார இங்கிலிஸ் துரைங்க வாங்கி, சென்னைபட்டணம்-ன்னு  பேரு வெச்சானாம்மா.

அதுகோசம் எல்லாருமே பேஸ்புக்ல, டுவிட்டர்ல வாய்த்து செய்தி போட்டுன்னுகிறாங்க.. அதே மேரி நானும் என் பங்குக்கு சலாம் போட்டுகிறேன்..

சென்னையை பத்தி என்னோட பழைய பேப்பர்-ல நிறைய தபா கிறுக்கிட்டேன். அதோட ரிப்பீட்டு தாமே இது. படிச்சு குஜாலா இருங்க..

பதிவு 1:
நமது சென்னையின் வரலாற்றை சுருங்க சொல்ல வேண்டுமானாலும் கூட குறைந்தபட்சம் முதலாம் நூற்றாண்டு வரையாவது போக வேண்டும்.
So கி.பி .1-ஆம். நூற்றாண்டு...

கி.பி. 1-ஆம். நூற்றாண்டில் (52-70), ஏசு கிறுஸ்துவின் சீடர்  செயின்ட் தாமஸ் (St. Thomas) மயிலாப்பூரில்  மத போதகம் செய்துள்ளார். கி.பி. 5-ஆம். நூற்றாண்டில், திருவள்ளுவர் பாண்டிய மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்தவர். கி.பி. 16-ஆம். நூற்றாண்டில் சோழ மற்றும் விஜயநகர மன்னர்களால் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விரிவாக்கப்பட்டது.

தர்மாலா சென்னப்ப நாயக்கரரிடமிருந்து ஆகஸ்ட் 22, 1639-ல் மூன்று மைல் நீள இடத்தை ஆங்கிலேயர் வாங்கி, சென்னை பட்டணம் என்று பெயரிட்டனர் . புனித ஜார்ஜ் கோட்டைக்கு (St. George Fort) அடித்தளம் போடப்பட்டது.

மேலும் சென்னையின் வரலாற்றை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

madras-day-377
நானே டிசைன் பண்ண நம்ம சென்னையின் அடையாளங்கள் 

பதிவு 2: 
எல்லாரும் சொல்றது சென்னையில பயங்கர ட்ராபிக், ரொம்ப தூசு/புகை, கடுமையான விலைவாசி, அதிக ஜனத்தொகை, வெயில் ஜாஸ்தி, என்னும் என்னனவோ... தெரியாம தான் கேக்றேன், அவ்ளோ கஷ்டப்பட்டுகிட்டு என்ன இ....துக்கு இங்க வரணும்?  உங்க ஊரிலேயே குப்பையை கொட்டிக்க வேண்டியது தானே. இவங்களால சென்னைக்கே வராதவங்க கூட, சென்னை இப்படி தான் இருக்குன்னு நினைச்சுகிறாங்க.

மத்தவங்க மாதிரி சென்னையிலே ஷாப்பிங் மால் இருக்கு, தீம் பார்க் இருக்கு, பெரிய ஸ்டார் ஓட்டல்கள் இருக்கு, பெரிய பீச் இருக்கு, மூர் மார்கெட் இருக்கு, இங்கு எல்லாமே கிடைக்கும்ன்னு சொல்லமாட்டேன். மக்களுக்கு தேவையான சாப்பாடு, வீடு, துணிமணி, வைத்தியம், வேலைக்கு ஏத்த சம்பளம்,  நிம்மதியான வாழ்க்கை  என சராசரி மனிதன் வாழ தேவையானது எல்லாம் இருக்கு.

மேலும் சென்னையின் சிறப்பை படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

பாத்தியா நைனா.. சென்னைக்கு எம்மாம் பெரிய ஹிஸ்டிரி, எவ்ளோ விசேஷம் கீதுன்னு. சோக்கா சொல்றியே சென்னை படா பேஜாருன்னு.. இங்க வந்து வாழ்ந்து பாத்தா தாமே தெரியும் எங்க ஊரு எப்படீன்னு... ஆட்டோ ஓட்டுறவன், மீன் புடிக்கிறவன், சாக்கடை அள்ளுறவன், பாங்க் வேலை பாக்கிரவன், கவர்மெண்ட் ஆபிசர், கம்ப்யூட்டர் கம்பெனி வேலைக்காரன், இப்படி எல்லாருமே இங்கே பொயப்புக்காக தான் இங்க அல்லாடுறான். சந்தோசமா புள்ள குட்டியோட கீறான். ஒன்னொரு தபா எவனாவது சென்னையில ஒண்ணும் இல்ல, கலீஜு, கப்பு தாங்கலன்னு பீலா வுட்டான் .. நான் செம காண்டா ஆயிடுவேன்..படவா..கீசிடுவேன் கீசி..  உஷாரா இருந்துக்கோ.. பி கேர்புல் !

அப்புறம் இன்னொரு முக்கியமான மேட்டரு. படிச்சிட்டு சும்மா போவாம, இத்த உன்னோட பேஸ்புக், டுவிட்டர்-ல ஷேர் பண்ணிட்டு, அப்டியே ஷேர் ஆட்டோல அப்பீட் ஆயிடு.. சர்தானா..வரேன்ப்பா ..


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

தடைகள் 800!

வணக்கம்,

நண்பர் ஒருவர் அலுவலகம் முடிந்து இரவு வீடு வந்த பின், அவர் லேப்டாப்பை எடுத்து, "இன்று ஏதாவது நல்ல 'பிட்டு ' வந்திருக்கிறதா??" என்று ஆராய ஆரம்பித்திருக்கிறார். வழக்கம் போல அவர் போகும் எல்லா இணையதளங்களுக்கும் சென்று பார்த்திருக்கிறார். எதுவுமே 'நடக்கவில்லை'. எல்லாவற்றிலும் access denied ; page cannot be displayed; அல்லது வெறும் வெள்ளை பக்கங்களாக தான் வந்துள்ளது. ஒரு மணிநேரம் அவர் புக்மார்க் லிஸ்டில் உள்ள  எல்லா தளங்களுக்கும் சென்று பார்த்திருப்பார். ஒன்று கூட சிக்க வில்லை. வெறுத்து போன நண்பர் கடைசியில், போர்வையை போர்த்தி கொண்டு படுத்து தூங்கியே விட்டார்.

இந்த வாரத்தில், இது போன்ற சம்பவம் இந்தியாவில் பலரது வீட்டில் நடந்திருக்க வாய்ப்புண்டு. ச்ச்சீசீசீய்ய்ய்.. நான் ஒன்றும் அப்படியெல்லாம் இல்லை என்று பொய்யாய் சினுங்குபவர்கள் இதற்கு மேல் படிக்காமல் வேறு பக்கத்துக்கு சென்று விடவும்.


இரண்டு நாட்களுக்கு முன் இந்தியாவில் 857 இணையதளங்கள் தடை செய்யப்பட்டன. Child pornography என்று சொல்லப்படும் சிறார் ஆபாச படங்களை தடுக்கும்  பொருட்டு, உச்சநீதி மன்றம் இந்த தடை உத்தரவை போட்டுள்ளது. எல்லா இணைய சேவை வழங்கிகளுக்கும் இந்த குறிப்பிட்ட இணைய தளங்களை முடக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவு போடப்பட்ட நாள் முதல் மக்கள் பலரும், மனித உரிமை ஆர்வலர்களும், சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்த தடையை எதிர்த்து கொண்டிருகின்றனர். எல்லோரும் சொல்வது, "ஆபாச படம் பார்ப்பது அவரரர் உரிமை, அதையெல்லாம் அரசு தடை செய்ய கூடாது. அப்படி தடை செய்வது இந்திய ஜனநாயகத்துக்கு எதிரானது", என்று போர்க்கொடி தூக்கி வருகின்றனர். லோக்சபாவிலும் இந்த பிரச்சனையை எதிர்த்து கூட்டத்தை நடக்க விடாமல் செய்து விட்டனர். இன்னும் நாடு முழுவதும் போராட்டம் தான் நடத்தவில்லை. மற்றபடி எல்லாம் நடந்தாயிற்று.

ஒரு சிலர் திருடனுக்கு தேள் கொட்டியது போல திருதிருவென முழித்து கொண்டிருகிறார்கள். யாரிடம் சொல்வது, என்ன சொல்வது, என்ன கேட்பது,
 எங்களுக்கு யாரை தெரியும் என்ற ரீதியில் விழி பிதுங்கியுள்ளனர். இன்னும் சிலரோ, "போங்கடா, எங்களுக்கு இருக்கிறது ப்ராக்சி வெப்சைட்டுகள் (proxy websites)", என்று ஆறுதல் சொல்லி கொள்கிறார்கள். இன்னும் சிலர், "அப்படா, நான் பார்க்கும் தளங்கள், அந்த 800-ல் இல்ல.. ஐ..ஜாலி!! " என்று பெருமிதம் கொள்கின்றனர்,

ஊடகங்கள் இந்த தடையை பற்றி கேட்டதற்கு, பல இளைஞர்/இளைஞிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மத்திய அரசே இதற்கு இத்தகைய எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருக்காது. ரேடியோ ஜாக்கி RJ பாலாஜி விடியோ ஒன்றில் இதை பற்றி தன் பாணியில் ராப் செய்துள்ளார்.


ஆபாச விடியோகளால் தான் எல்லோரும் கேட்டு போகிறார்கள்; குறிப்பாக பதின்பருவ பிள்ளைகள் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. ஒரு சில திரைப்படங்கள்,  திரைப்பட பாடல்கள், இரட்டை அர்த்த பட வசனங்கள், தொலைக்காட்சி தொடர்கள், ஆபாச போஸ்டர்கள், ஆபாசம் மிகுந்த அருவருப்பான விளம்பரங்கள் என தடை செய்ய எவ்வளவோ இருக்கிறது. அதேல்லாம் விட்டு விட்டு, எதோ நம்மாட்க்கள் பொழுதுபோக்கிற்காக கொஞ்சம் 'பிட்டை' புட்டு-புட்டு  பார்த்தால் கலாச்சாரம் சீர்குலையுமாம். என்னங்கடா இது அநியாயம் ??

உனக்கேன் இவ்வளவு அக்கறை? என்று நீங்கள் கேட்கலாம். ஆம்! அக்கறை தான். நானும் இந்நாட்டின் குடிமகன் தானே!

அரசின் ஓர் அறிக்கை படி, உலகில் 14.3 பில்லியன் ஆபாச இணையதளங்கள் இருக்கிறதாம். அதில் 40% இணைய போக்குவரத்து இந்தியாவில் தான் இருக்கிறது என்று சொல்கின்றனர். இதற்கு 'நம்மவர்கள் காய்ந்து போய் கிடப்பதே' முக்கிய காரணம். பதின்பருவ வயதில், சரியான பாலியல் கல்வி இல்லாததால் தான் இந்த வறட்சி. இந்த வறட்சியின் தாக்கம் தான் தில்லி நிர்பயா சம்பவம், குழந்தை பாலியல் வன்கொடுமை போன்றவையெல்லாம். வயது வரும் போதே, இதுதான் இது, இதெல்லாம் ஒன்றும் இல்லை.. எல்லோருக்கும் இருப்பது போல தான். வெறும் உடம்பு தான்.. என்று  இ(ணை)ளைய தலைமுறைக்கு புரிய வைப்பது தான் சமுதாயத்தின் கடமை. சமூகம் என்பது யார்? ஆசிரியர், பெற்றோர், சுற்றம், அரசாங்கம் எல்லோரும் தான். அதை விடுத்து ஆபாச தளங்களை தடை செய்தால் சரியாகி விடாது. தியரியில் பார்க்காவிட்டால், பிராக்ட்டிகலாக செய்து பார்க்க வழி தேட மாட்டார்களா???

இந்த பிரச்சனையை சீர் செய்ய சம்பந்தபட்டவர்கள் தான், சரியான முடிவை தேர்ந்தெடுக்க வேண்டும். வெறும் தற்காலிக தடை வழிமுறைக்கு ஒத்துவராது.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

செவ்வாய், 28 ஜூலை, 2015

அப்துல் கலாம் - இறுதி அஞ்சலி

வணக்கம்,

தமிழகத்தின் தென்கோடியில் ராமேஸ்வரத்தில் பிறந்து, பாரத தேசத்தில்  எல்லா மக்களின் மனதிலும் இடம் பிடித்தவர்  'பாரத் ரத்னா' Dr. APJ அப்துல் கலாம் அவர்கள்.

ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட்டு கொண்டிருந்த ஒளி விளக்கு அணைந்து விட்டது. கடலோரத்தில் பிறந்து, நிலங்கள் யாவும் சுற்றி, மக்கள் மனதை கவர்ந்து, அக்னி சிறகுகளால் பலருக்குள் இருந்த அக்னியை தூண்டிவிட்டு, மலை மேல் மறித்து, இன்று காற்றை போல நம்முள் நீக்கமற நிறைந்த ஓர் உன்னத தலைவர்.

அப்துல் கலாம் அவர்கள்  ஒரு பெரும் அணு விஞ்ஞானி, மக்கள் போற்றும் முன்னாள் ஜனாதிபதி, கிட்ட தட்ட இந்தியாவிலுள்ள எல்லா மாணவ /மாணவிகளின் முன் மாதிரி, எழுத்தாளர், பேராசிரியர் என பன்முகம் கொண்டவர் . இதையெல்லாம் விட சிறந்த எளிமையான மனிதர் என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமுமில்லை.

apj-abdul-kalam-died

இந்தியா 2020 -ல் வல்லரசாக மாறும் என்பதை நம் மனதில் விதைத்தவர். கனவு காணுங்கள் என்று சொன்னவர். அந்த கனவை மெய்பட வைக்க, நாம் அயராது உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தியவர்.

காந்தி இறந்துவிட்டார், காமராஜர் இறந்து விட்டார், அண்ணா இறந்து விட்டார் என நாட்டை நேசித்த , மக்களை கவர்ந்த பெரும் தேசதலைவர்களின் இழப்பை ஒரு வரலாற்று செய்தியாகதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இத்தலைமுறையில், இன்று தான் உண்மையில்  நாம் அனைவரும் விரும்பிய ஒரு நல்ல மனிதரின் இழப்பினை  நிகழ்காலத்தில் காண்கிறோம்.

கட்சி, சாதி/ மதம், மொழி, துறை பாகுபாடு என எதுவும் இல்லாமல் எல்லாராலும் மதிக்கப்படும் சிறந்த மனிதரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

அவரின் கனவை உண்மையாக்க முயற்சி செய்வோம்.

"அப்துல் கலாமை பார்த்து  நாம் பெருமைப்பட்டது போதும்... 
அப்துல் கலாம் நம்மை பார்த்து பெருமைபடட்டும்" 

என்ற எனது நண்பரின் கவிதை வரிகள் தான் தான் நினைவுக்கு வருகிறது.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 15 ஜூலை, 2015

ஆன்லைன் ஷாப்பிங் செய்ய போறீங்களா?

வணக்கம்,

இ-காமர்ஸ் என்று சொல்லப்படும் ஆன்லைன் ஷாப்பிங் தான் இன்றைய தலைமுறையின் லேட்டஸ்ட் டிரெண்ட். எலக்ட்ரானிக் பொருட்கள், துணிமணிகள் முதல், சோப்பு, சீப்பு, கண்ணாடி, உப்பு, புளி, மிளகாய் வரை எல்லாமே இப்போது இணைய வியாபாரிகளிடம் எளிதில் கிடைத்து விடுகிறது.

முதலில் சற்று வசதி படைத்தவர்கள் மட்டுமே ஆன்லைனில் வாங்கி கொண்டிருந்தனர். பின்னர் சாமான்ய மக்களும் கணினி மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்க ஆரம்பித்துவிட்டனர். இப்போது கணினி மூலம் வாங்குவதை விட, மொபைலில் ஆன்லைன் வர்த்தகம் செய்வது அல்லது பொருட்கள் வாங்குவது மக்களிடம் வாடிக்கையாகிவிட்டது.

இந்த ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களுக்கு, இவ்வளவு குறைந்த விலையில் கொடுத்தாலும் எப்படி கட்டுப்படி ஆகிறது என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. ஷோரூம் வைத்து பொருட்களை கடைவிரித்து, பொதுமக்களிடம் விளக்கி விற்பதை விட, ஆன்லைனில் விற்பது சுலபம் . சுலபத்தை காட்டிலும் லாபம் அதிகம். கடையின் வாடகை, கரண்ட் பில், வேலை செய்பவர்களுக்கு சம்பளம், பராமரிப்பு செலவு என நேரில் விற்பதுக்கு செலவு அதிகம். ஆனால் ஷாப்பிங் வெப்சைட்காரர்கள், வெறும் குடோனில் சரக்குகளை சேமித்து கொண்டு, நுகர்வோர்/வாடிக்கையாளர்களுக்கு கேட்டவாறு பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள்.


ஆன்லைன் ஷாப்பிங்க்கு ஏன் இவ்வளவு மவுசு?

1) 2005-ல் பிராட்பேண்ட் இணைய சேவை வந்த போது மெல்ல மெல்ல ஆரம்பித்தது ஆன்லைன் ஷாப்பிங் மோகம். போக்குவரத்து சிக்கலில் மாட்டாமல், கடைவீதியின் கூட்ட நெரிசலில் சிக்காமல், கடை கடையாய் ஏறி இறங்காமல், வீட்டில் இருந்தபடியே கணினி முன் அமர்ந்து வாங்குவது சுலபம்.

2) நேரில் வாங்குவதை விட ஆன்லைனில் பொருட்கள் மலிவாக இருப்பதால், மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

3) பொதுமக்களின் தேவையை அறிந்து கொண்டு, இணைய வியாபாரிகளிடையே போட்டி அதிகமாகி விட்டது. ஆளாளுக்கு பொருட்களை 'போத்திஸ் ஆடி தள்ளுபடி ஆஃபர்' போல கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

4) Credit Card, Debit Card மற்றும் Debit Card  மூலம் பண பரிவர்த்தனை செய்யபடுவதால், வாடிக்கையாளருக்கு ஆன்லைனில் வாங்குவது மிகவும் சுலபமாக இருக்கிறது.

5) மேலும் Cash On Delivery  மற்றும் Free Home Delivery வசதியும் பல இணைய வியாபாரிகள் கொடுப்பதால், 'கையில காசு வாயில தோசை' என்று நம்பிக்கையுடன் வாங்குகின்றனர். வீட்டிலேயே பொருள் வந்து ஓசியிலேயே இறங்கி விடுவதால், வாடிக்கையாளருக்கு கஷ்டமே இல்லை.

6) எல்லாவற்றக்கும் மேலாக, வாங்கிய பொருள் சேதபட்டிருந்தாலோ,  சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ,  30 நாட்களில் உங்கள் முழு பணமும் வாபஸ் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மக்களை பெரிதும் கவர்ந்து விட்டன.

online-shopping
click to enlarge image 

ஆன்லைன் ஷாப்பிங் தில்லு முல்லு:

மேலோட்டமாக பார்த்தால், இது ஒரு சுலபமான வர்த்தகமாக தான் தெரியும். ஆனால் இதிலுள்ளும் பல தில்லு முல்லுக்கள் நடப்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கிறது. அவற்றுள் சில:

1) ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு ஒரு பொருள் வர வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு,
  •  XL அளவு சட்டை கேட்டால், M அளவு சைஸ் சட்டை வரலாம். 
  • அதே போல, ஆர்டர் செய்த நீல நிற டி-ஷர்ட்டுக்கு பதிலாக அதே பிராண்டில் பச்சை நிற டி-ஷர்ட் வரலாம்.  
பேஸ்புக்கில் பகிரபடுவது போல, மொபைல் போன் ஆர்டர் செய்தால் சோப்பு டப்பாவோ,  ஐ-போட் பதிலாக செங்கலொ, வேறு பொருளுக்கு பதிலாக வெறும் காலி டப்பாவோ வர வாய்ப்பே இல்லை. அதெல்லாம் இணைய வியாபாரிகளின் எதிரி நிறுவனங்களின் வியாபார சூழ்ச்சியே ஆகும். 

2) ஆர்டர் செய்த பொருள் தாமதமாக வரலாம். 10 நாட்களில் வரவேண்டியது,  25 நாட்களில் வந்தடையும் போது வாடிக்கையாளருக்கு எரிச்சல்தான் வரும். ஆர்டர் செய்த பொருள் வராமல் கூட போகலாம். உங்கள் ஊரில் எளிதில் கிடைக்கும் தன்மை இல்லாததால், பொருள் தாமதமாகவோ அல்லது கிடைக்காமலே இருக்க கூட வாயுப்புண்டு.

3) சில இணைய வியாபாரிகள், போலியான ஆஃபர்களை காட்டி மக்களை எமாற்றிவிடுகின்றனர். 20,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை வெறும் 2000 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளுங்கள். குறுகிய கால ஆஃபர் மட்டுமே! முந்துபவர்களுக்கே முன்னுரிமை! என்று  கவர்ச்சி வார்த்தைகளில் வலை விரிக்கின்றனர். சில ஏமாளிகளும் வசமாக வலையில் சிக்கி கொள்கின்றனர். பொதுவாக இத்தகைய ஆஃபர்களை பயன்படுத்தும் போது, அவை தரமான, நம்பிக்கையான இணையதளம்தானா என்று பரிசோதித்து வாங்க வேண்டும்.

4) சில இணைய தளங்களில், போலியான பொருட்களை வாடிக்கையாளர் தலையில் கட்டி விடுகின்றனர், உதாரணத்திற்கு, சோனி (SONY) கம்பெனியின் ஒரு பொருளை ஆர்டர் செய்திருந்தால், சோனி (SONYY) என்ற போலியின் பொருளை அனுப்பி விடுகின்றன்ர்,

4) மிக முக்கயமானது இது. வாங்கும் சில பிராண்டட் பொருட்களுக்கு வாரண்டி இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். சில இணைய வியாபாரிகள் வாரண்டி இல்லாமலேயே பொருட்களை விற்று விடுகின்றனர். ஆஃபர்களை பெரிதாக காட்டிவிட்டு வாரண்டி இல்லை என்பதை சிறு எழுத்துகளில் வலைபக்கத்தின் கடைசியில் எழுதி வைக்கின்றனர்,

5) இன்னும் சில முன்னணி நிறுவனங்கள், இந்த இணைய வியாபாரிகள் எங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் இல்லை என்று அறிவித்து விடுகின்றனர்.

Flipkart, Snapdeal and Amazon not our authorized resellers - Lenovo 
http://goo.gl/7wA0yw

6) அசல் விலையை விட கூடுதலாக விலை போட்டு, வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிவிடுகின்றனர்.  சில நாட்களுக்கு முன், ப்ஃளிப்கார்ட்டில் 800 ரூபாய் மதிப்புள்ள செருப்பை 399 ரூபாய் என்று கூறி விற்பனைக்கு வைத்துள்ளனர். அந்த படத்தை ஜூம் செய்து பார்க்கும் போது, அந்த செருப்பிலேயே அதன் விலை 399 ரூபாய் தான் என்று போடப்பட்டுள்ளது. இதை விட பள்ளி சிறுவர்கள் எடுத்து செல்லும் ஒயர் கூடை 1,250 ரூபாய் என்று விற்கப்பட்டுள்ளது. இது போல பல பொருட்களின் விலையை மாற்றி போட்டு ஏமாற்றி விடுகின்றனர் ஆன்லைன் வர்த்தகர்கள்.

click to enlarge flipkart frauds
click to enlarge image 

8) மேலும், ஆன்லைனில் பழைய பொருட்களை வாங்கி விற்பவரும் ஏமாற்ற படுகின்றனர். பொருளை பார்க்காமல், சோதிக்காமல் பண பரிவர்த்தனை செய்து  ஏமாந்து விடுகிறார்கள்.

தொழில்நுட்பம் வளர வளர நம்மை சோம்பேறிகளாகவும், ஏமாளிகளாகவும் மாற்றி கொண்டிருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்னும் இது போல பல கோல்மால்கள் இணையத்தில் நடக்க வாய்ப்புண்டு. ஆன்லைனில் பொருட்களை வாங்குவோர், கொஞ்சம் உஷாராக தான் இருக்க வேண்டும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 4 ஜூலை, 2015

பாபநாசம் - விமர்சனம்

வணக்கம்,

ஏற்கனவே மலையாளத்தில் வெளியான 'திருஷ்யம்' படத்தைச் சமீபத்தில் தான் பார்த்துத் தொலைத்தேன். பாபநாசம் பட டிரைலரில் காட்சியும், வசனமும் பார்த்த போதே தெரிந்து விட்டது, தமிழில் கொஞ்சம் கூட மாற்றவில்லை என்று. ஹ்ம்ம்...எப்படியிருந்தால் நமக்கென்ன ? நமக்குத் தேவை உலக நாயகனின் நடிப்பு பசியை வெள்ளி திரையில் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.

சாதாரணக் குடும்பத்தில் ஓர் எதிர்பாராத அசம்பாவிதம் நடந்து விடுகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பதே திருஷ்யம் (மலையாளம், தெலுங்கு & வர போகும் ஹிந்தி ) மற்றும் பாபநாசம் படத்தின் கதை.


கமல்ஹாசனின் நடிப்புக்கு தான் வயசாகவில்லையே தவிர, அவர் முகத்தில் கொஞ்சம் வயது முதிர்வு தெரியதான் செய்கிறது. இருந்தாலும், கருப்புச் சட்டையில் வெள்ளை தோலுமாய்த் திராட்சை நிற கண்களை உருட்டி பார்க்கும் போது, அவர் கருவிழியில் இன்னும் ஆயிரம் கதாபாத்திரங்களை நடிக்கத் தயாராய் இருக்கிறார் என்பது நமக்குத் தெரிய வரும்.


சுயம்புலிங்கமாக நெல்லை தமிழ் பேசி அசத்தியுள்ளார் கமல். அசல் நெல்லைகாரனே தோற்றான் போங்க! ஒவ்வொரு சீனிலும் கமலின் நடிப்பு உச்சத்தைத் தொடுகிறது. பிணத்தைத் தோண்டி எடுத்த பின்பு, எல்லாரும் ஒரு முறை அதிர்ச்சியும் ஆச்சிர்யத்துடனும் கமலை திரும்பி பார்க்க, 'உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது போங்கடா' என்று ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்..ச்சே...சான்ஸே இல்ல. அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. அதெல்லாம் சரி, ஏன் இவ்வளவு 'அவுட்டேட்டடான' கெளதமி ஆண்ட்டியை ஹீரோயினாகத் தேர்வு செய்தார் கமல் என்று தான் புரியவில்லை. இருப்பினும் மலையாளத்தில் மீனா செய்த வேலையைத் தமிழில் நன்றாகச் செய்து இருக்கிறார்.

கமல் - கெளதமியின் மகள்களாக (படத்தில்!) நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அணில் இருவரும் அழகாக நடித்துக் கொடுத்திருகின்றனர். நிவேதா ஏன் இன்னும் நம் தமிழ் தயாரிப்பளர்கள் கண்ணில் படவில்லை என்பது வியப்பின் வியப்பு. மற்றபடி, எம்.எஸ்.பாஸ்கர், கலாபவன் மணி, போலிஸ் அதிகாரியாக வரும் பெண்மணி என எல்லோரும் சரியான அளவில் தங்களது பணியைக் குறையில்லாமல் செய்துள்ளனர்.

ஜிப்ரானை தன் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாற்றிவிட்டார் கமல். அதனால் தான் எல்லாப் படப் பாடல்களும் கமலின் பெயர் சொல்வது போல இருக்கிறது. இதிலும் 'கோட்டிக்காரா ' பாடல் பார்க்க, கேட்க ரம்மியமாக இருக்கிறது.

மற்ற மொழியில் திருஷ்யதை பார்க்காதவர்களுக்கும், கதையின் கிளைமேக்ஸ் சஸ்பென்ஸ் தெரியாதவர்களுக்கும் இந்தப் படம் கண்டிப்பாகச் சிறந்த பொழுதுபோக்காக அமையும். மற்றவர்கள் உலக நாயகனின் நடிப்பு ஆளுமையைப் பார்த்துப் புளங்காகிதம் அடைவார்கள்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 27 ஜூன், 2015

இன்று நேற்று நாளை - விமர்சனம்

வணக்கம்,

தமிழ் படங்களில் சயின்ஸ் பிக்க்ஷன் ஒரு புதுக் கதைக்களம். டைம் மெஷின் என்று சொல்லப்படும் காலயந்திரம் ரொம்ப புதுசுதான். படத்தின் முதல் போஸ்டரும், ட்ரைலரும் பார்த்த போது, "அடடே ! இந்தப் படம் நல்லா இருக்கும் போலருக்கே!" என்று அனைவரையும் யோசிக்க வைத்தது. குருட்டாம் போக்கில் சினியுலகம் வைத்த ஒரு போட்டியில் கலந்து கொண்ட நான், ஒரு இலவச டிக்கெட் கிடைக்க, எஸ்கேப்பில் பார்க்க தயாரானேன்.

இதற்கு முன்னால் பாலகிருஷ்ணா நடித்த அதித்யா 369 (அபூர்வ சக்தி 369) என்ற தெலுங்கு டப்பிங் படத்தில் டைம் மெஷின் பற்றிப் பார்த்ததாக ஞாபகம். அதற்குப் பின் தென்னகத்தில் இந்தப் படம்தான். சில ஹாலிவுட் படங்களில் டைம் மெஷின் பற்றிப் படம் பார்த்துள்ளேன்.

கதை இதுதான். கி.பி. 2065-ல் கண்டுப்பிடிக்கபட்ட ஒரு டைம் மெஷின், சோதனையோட்டதிற்க்காக 50 வருடங்களுக்கு முன்னால், அதாவது நடப்பு ஆண்டுக்கு (2015) வருகிறது. அது இப்போதுள்ளவர்கள் கையில் கிடைத்தால் என்னனெனச் செய்வார்கள், என்ன செய்தார்கள் என்பதே கதை.


கதாநாயகனாக விஷ்ணு நடித்துள்ளார். படத்தில் தன் நடிப்பு பணியைச் செவ்வனே செய்துள்ளார். மியா ஜார்ஜ் நாயகியாம். பதுமையாக அவ்வபோது வந்து சென்றுள்ளார். படத்தின் பலம் கருணாகரன் தான். ஹீரோ கூடவே இருந்து படம் முழுவதிலும், டைம் மெஷினுடனும் பயணப்படுகிறார். படத்தில் காமெடி ஆங்காங்கே தூவபட்டுள்ளது. படம் முழுக்கக் காமெடி இருந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். வில்லன் கதாபாத்திரமாக வரும்வரும் சாய் ரவியும், விஞ்ஞானியும் மெக்கானிக்குமாக நடித்திருக்கும் டி.எம் .கார்த்திக்கும் ('நண்பன்' படப் புகழ் price tag ) கதையைக் கொஞ்சம் நகர்த்த உதவி செய்துள்ளார்கள். அதுவும் சரியாகச் செய்துள்ளார்கள். கௌரவப் பாத்திரமாக ஆர்யா விஞ்ஞானியாக நடித்துள்ளார்.

டைம் மெஷினை வைத்துக் கொண்டு ராஜாக்கள் வாழந்த காலம் போவார்கள், 100 வருடம் முன்னோக்கி போவார்கள் என்று எண்ணி கொண்டிருக்கும் ரசிகர்களின் மனஓட்டத்தை மாற்றி, தங்கள் வாழ்வில் நடந்தையே மாற்றி அமைக்கக் காலயந்திரத்தில் பயணிக்கிறார்கள். இரண்டு மணி நேரம் படத்தைப் போரடிக்காமல் காட்டியுள்ளனர். அதைவிட இறந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் சரியாக லிங்க் கொடுத்திருக்கார்கள். அதுவே படத்தின் மிகப் பெரிய ப்ளஸ். டைம் மெஷின் கிராபிக்ஸ் நன்றாகவே வந்திருகிறது. இன்னும் கொஞ்சம் சி.ஜியில் ஜிகினா வேலை காட்டியிருக்கலாம். பாடல் வரிகளிலும், இசையிலும் அவ்வளவாக ஹிப்-ஹாப் இல்லை.

அரைத்த மாவையே அரைக்கும் படங்களுக்கு மத்தியில், புதுசாய் ஒரு கதைக்கருவை நமக்கு அளித்த இயக்குனர் ரவிகுமாருக்கு எனது  பாராட்டுக்கள். ஆக மொத்தத்தில், கண்டிப்பாகத் திரையில் சென்று பார்க்க வேண்டிய ஒரு படம் தான் இது.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 17 ஜூன், 2015

காப்பியடிக்கப்பட்ட கதை !

வணக்கம்,

தமிழ் திரையுலகில் பெரும் பிரச்சனையாக பேசப்படுவதில் ஒன்று, கதை திருட்டு. இதை பற்றி அடிக்கடி நாம் வலையுலகத்திலும், செய்திகளிலும் கேள்விப்பட்டு வருகிறோம். சமீபமாக மட்டுமல்ல, பல வருடங்களாக இந்த பிரச்சனை ஓயாமல் தொடர்ந்து கொண்டே வருகிறது.

படம் எடுக்கும் போதோ அல்லது முடியும் தருவாயிலோ, "இது என்னுடைய கதை", என்று சிலர் ஆர்பாட்டம் செய்து வெளிவரும் படத்தை தடுத்து நிறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு போடுவார்கள். சிலர் தயாரிப்பாளரிடம் பணம் பறிக்கவும், இந்த உத்தியை பயன்படுத்துகின்றனர் என்று சொல்லுகின்றனர்.  ஊடகங்களும், சமூக வலைதளங்களும், இவையெல்லாம் பெரும்பாலும் படத்தை ஓட்ட படக்குழுவினரின் விளம்பர உத்தியே என்று சாடுகின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, படம் வெளிவந்து முதல் நாள் முதல் காட்சி முடிவதுக்குள்ளேயே, இப்படம் "சின்கியா மின்கியா " என்ற கொரிய படத்தின் தழுவல் அல்லது அப்பட்ட காப்பி என்று சொல்லி இயக்குனரின் முகச்சாயலை டர்ரென்று கிழித்து விடுகின்றனர் நமது வலை மன்னர்கள்.

சில படங்கள் வெளியிடுவதற்கு முன்பே, இது ஒரு ரீமேக் என்று சொல்லிவிடுவார்கள். மீதம் உள்ள படங்கள் பெரும்பாலும் மற்ற மொழி படங்களின் தழுவல் தான். படத்தின் முதல் போஸ்டர் லுக், ட்ரைலர் வெளியிட்ட சில மணி நேரங்களில் இது எந்த மொழி படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று சொல்லிவிடுகின்றனர்.


ஒரு கதை காப்பியடிக்க படுவதுக்கும், தழுவலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நாவலையோ அல்லது வேறு மொழி படத்தையோ அப்படியே காட்சிக்கு காட்சி அதிலிருந்து திருடி, திரைக்கதை மாறாமல் அப்படியே எடுப்பது தான் காப்பி. இதுவே மற்ற மொழி படங்களிருந்து ஒரு சில காட்சிகளையோ அல்லது கதையின் கருவை மட்டுமே ஒரு தூண்டுகோலாக வைத்து கொண்டு, ரசிகர்களுக்கு ஏற்றவாறு படம் கொடுப்பது தழுவல்.

ஒரிரு காட்சியை வேறு ஒரு மொழி படத்திலிருந்து சுடுவதினால், யாருக்கும் எந்த ஒரு கஷ்டமோ, நஷ்டமோ ஏற்பட போவதில்லை.  ஒரு கொரிய அல்லது ஆங்கில மொழி படத்திலிருந்து ஒரு வங்கி கொள்ளை காட்சியோ, சண்டை காட்சியோ எடுத்து  நம் தமிழ் படங்களில் சேர்க்கபடுவதினால், அந்த வேற்று மொழி பட தயாரிப்பாளருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் வந்து சண்டை போட போவதும் இல்லை. நம் ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையை மாற்றி, திரையில் விருந்து படைக்கும் போது ஏன் பலரும் இது காப்பியடிக்கபட்டது என்று சொல்கிறனர் என்று புரியவில்லை.

கஜினி, அவ்வை சண்முகி, அருணாச்சலம், வெற்றி விழா போன்ற படங்கள் ஆங்கில படங்களின் கதை கருவை மட்டுமே கொண்டு தமிழில் வெற்றி நடைபோட்டவை. ஆனால் இது போன்ற படங்களை  'காப்பியடிக்கபட்ட படங்கள் ' என்று சொல்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை.


கதையை அப்படியே வரிக்கு வரி காப்பியடித்து படத்தில் காட்டுவது தான் தவறு. இது போன்ற அறிவு (கதை) திருட்டுக்கள் தான் திரையுலகில் நடந்தேறி வருகிறது. இன்னொரு புறம் யோசிக்கும் போது, இது போன்ற காப்பியடிக்கப்படும் படங்களில், ஒரிஜினல் கதாசிரியர் பெயரை போட்டு நன்றி தெரிவித்து கொண்டால், அதில் பெரும் தவறு இருப்பதில்லை. ஆனால் அப்படி செய்ய யாரும் உடன்படுவதில்லை.

திரை செய்திகளை தரும் தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் படம் வெளிவருவதற்குள், இந்த காட்சி இப்படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று போட்டோவுடன்  போட்டு காட்டி விடுவார்கள். மேலும் அந்த இயக்குநரை 'காப்பி மன்னன்' என்று திட்டியும் தீர்ப்பார்கள். இவர்களெல்லாம் ஒரிஜினல் கதையம்சம் கொண்ட படம் வந்தால், அதை வெள்ளி திரையில் மட்டுமே கண்டு ஓட வைப்பது போல, இது போன்ற தழுவல் திரைபடங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

சினிமா என்பது மக்கள் பார்த்து ரசிக்க மட்டுமே. ஒரிஜினல் கதையோ, காப்பியடிக்கப்பட்ட கதையோ எதுவாயினும் நம்மை இரண்டு மணி நேரம் ரசிக்க வைத்தாலே போதும். அதன் ரிஷி மூலம், நதி மூலம் ஆராய தேவையில்லை; அதற்கு அவசியமும் இல்லை என்பது என் கருத்து. உங்கள் எண்ணங்களை தாராளமாக பின்னூட்டத்தில் தெரியபடுத்தலாம்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

செவ்வாய், 9 ஜூன், 2015

எங்க ஊரு மெட்ராஸு.. சான்ஸே இல்லப்பா ...

வணக்கம்,

"நம்மளை வாழ வைக்கிற ஊரை விட, தலைசிறந்த இடம் ஏதுவும் இல்லை" ன்னு படத்தில தலைவர் சொல்லியிருக்கார். அதை நிறைய பேர் மறந்துட்டாங்க. இப்பெல்லாம் ஆ..உ.. ன்னா எல்லாரும் சென்னையை பத்தி குறை சொல்ல கிளம்பிடுராங்க. வேற மாவட்டங்களிருந்து சென்னைக்கு வந்தவங்க பல பேரு, சென்னையிலே ஒண்ணும் இல்ல... எங்க ஊரு சொர்க்கம், அங்க அது இருக்கு, இது இருக்கு, புல்லுக்கட்டு, புண்ணாக்கு, வெளக்கமாறுன்னு, பிகிலேடுத்து ஊத ஆரம்பிச்சுடராங்க... கேக்கவே செம காண்டா இருக்கு.

எல்லாரும் சொல்றது சென்னையில பயங்கர ட்ராபிக், ரொம்ப தூசு/புகை, கடுமையான விலைவாசி, அதிக ஜனத்தொகை, வெயில் ஜாஸ்தி, என்னும் என்னனவோ... தெரியாம தான் கேக்றேன், அவ்ளோ கஷ்டப்பட்டுகிட்டு என்ன இ....துக்கு இங்க வரணும்?  உங்க ஊரிலேயே குப்பையை கொட்டிக்க வேண்டியது தானே. இவங்களால சென்னைக்கே வராதவங்க கூட, சென்னை இப்படி தான் இருக்குன்னு நினைச்சுகிறாங்க.


தமிழ்நாட்டை பொறுத்தவரை பிறக்க ஒரு ஊர்; பிழைக்க ஒரு ஊர் என்ற நிலைமையில் தான் பலரும் வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். வெளி மாவட்டங்களிலிருந்து சென்னை வந்து படிப்பவர்கள், பிழைப்பு நடத்துபவர்கள் எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியுமா ???

சென்னை வாழ்க்கை நிம்மதியான, அமைதியான வாழ்க்கை இல்லைன்னு நிறைய பேர் சொல்றாங்க. அதுமட்டுமல்ல, சென்னை வாழ்க்கை மெஷின் வாழ்க்கைன்னும் சொல்றாங்க. அடப்பாவிகளா! நிம்மதியில்லாம இருக்க, நீங்க என்ன பாகிஸ்தான் எல்லையிலா குடியிருக்கீங்க? உங்க ஊர்ல எப்படி காலையில எழுந்து வேலைக்கு/ கல்லூரிக்கு போய், இரவு வீட்டுக்கு வந்து குடும்பத்தை பாக்குரீங்களோ, அப்படி தான் இங்கேயும். இதுலே என்ன இயந்திர வாழ்க்கை சென்னையில மட்டும்? ரொம்ப ஓவரா இருக்கே!

வெளியூர்களில் நல்ல வேலையாக  இருந்தாலும், கூலி வேலையாக இருந்தாலும், சென்னையில் கிடைப்பதை விட அங்கு ஊதியம் கம்மியாய்தான் கிடைக்கிறது. நல்ல படிப்பு, மருத்துவம், வேலை, கை நிறைய சம்பளம் என சகலமும் இங்கு உண்டு. அதுக்கு தானே எல்லாரும் பாடுபடுறோம்.

நம்ம நாட்ல எங்கிருந்தெல்லாமோ படிக்கவும், வேலை தேடியும் சென்னைக்கு வராங்க. வந்து படிச்சு முடிச்சு, வேலை கிடைச்சு, கல்யாணம் பண்ணி குழந்தை குட்டின்னு இங்கயே செட்டில் ஆயிடுராங்க. அப்புறம் ஜனத்தொகை எப்படி அதிகமாகாமல் இருக்கும். இருபது வருஷத்திற்கு முன், 250 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட மெட்ராசை, இப்போ 420 சதுர கி.மீ ஆக்கிடாங்க. இன்னும் 50 வருஷத்தில 1000 சதுர கி.மீ ஆனாலும் ஆச்சிரிய படுவதற்கில்லை. இப்போதைய சென்னையின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 50 லட்சம்! அப்புறம் எப்படி எல்லாருக்கும் இடம் பத்தும் ? இவங்களே வருவாங்கலாம்; சென்னை ரொம்ப பேஜாருனு சொல்வாங்களாம். தோடா..யாருகிட்ட..

இங்க வந்து செட்டிலான மக்கள் எல்லோரும் டூ-வீலர், கார்ன்னு வாங்குறாங்க. அவங்களோட போக்குவரத்து எல்லாம் சேர்த்து இன்னும் சென்னையை தூசியும், புகையுமா மாறிடுச்சி. வெள்ளி, சனிகளில் சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் கூட்டத்தை பாருங்க. எவ்வளவு வண்டி, எவ்வளவு புகை.. அப்புறம் என் சென்னை போக்குவரத்து மிகுந்த, கலீஜான ஊராக மாறாது?


அப்புறம் விலைவாசி. கொஞ்சம் அதிகம் தான். ஒத்துகிறேன். அதுக்கு சென்னை என்ன செய்யும்? அரசு எல்லோருக்கும் ஒரே விலையை தான் நிர்ணயம் செய்கிறது. மற்ற மாவட்டங்களில் விவசாயம் ஒரு முக்கிய தொழிலாக இருக்கிறது. ஆனால் 'சென்னை', 'சென்னைபட்டினமாக' இருந்த காலம் முதல் இங்கு பெரிதாக விவசாயம் செய்வதில்லை. காய்கறி/ பழங்கள் மற்றும் உணவு பண்டங்கள் வெளியூரிலிருந்து இறக்குமதி செய்து தான் விற்கபடுகிறது. அதனால் தான் இங்கு பண்டங்களின் விலை கொஞ்சம் அதிகம். வீட்டு வாடகையும் ஜாஸ்தி தான். முக்கிய சாலையை விட்டு கொஞ்சம் தள்ளி வீடு பார்தீர்களேன்றால் குறைந்த வாடகையில் வீடு கிடைக்கும். சிட்டி சென்டரில் வீடு, பக்கத்திலேயே பள்ளி, கடைவீதி, பஸ் ஸ்டான்ட் எல்லாம் இருக்க வேண்டும் என்றால் வாடகை அதிகமாக தான் இருக்கும். இது எல்லா ஊருக்கும் பொருந்தும்.

ரொம்ப வெயில், மழை-  ஹ்ம்ம்.. இதெல்லாம் சென்னையின் சீதோஷ்ண நிலை. அதையெல்லாம் யாராலும் மாத்தமுடியாது. வெயில் காலத்தில் வெயில் அடிப்பதும், மழை காலத்தில் மழை கொட்டுவதும், குளிர்காலத்தில் குளிருவதும் எல்லா ஊரிலும் நடப்பது தானே. இதையெல்லாம் ஒரு குறையாக சொல்லலாமா? ரொம்ப போங்கா இருக்கே!

உங்க ஊரில் என்னன்ன இருக்கிறதோ, அது எல்லாமே எங்க ஊரிலும் இருக்கிறது. என்ன இங்கே வயல்வெளி, சோலைகள் கிடையாது. எல்லாம் கான்கிரீட் மயம். கூவம், அடையாறு என இரண்டு ஆறுகள் சென்னையின் மத்தியில் ஓடி கொண்டிருகிறது. மக்களின் அறியாமை, அரசின் மெத்தனத்தால் ஆறு சாக்ககடையாகி விட்டது. ஆனால் சென்னைக்கு தண்ணீர் தர ஏரிகளும், லாரிகளும் இருக்கிறது.

மத்தவங்க மாதிரி சென்னையிலே ஷாப்பிங் மால் இருக்கு, தீம் பார்க் இருக்கு, பெரிய ஸ்டார் ஓட்டல்கள் இருக்கு, பெரிய பீச் இருக்கு, மூர் மார்கெட் இருக்கு, இங்கு எல்லாமே கிடைக்கும்ன்னு சொல்லமாட்டேன். மக்களுக்கு தேவையான சாப்பாடு, வீடு, துணிமணி, வைத்தியம், வேலைக்கு ஏத்த சம்பளம்,  நிம்மதியான வாழ்க்கை  என சராசரி மனிதன் வாழ தேவையானது எல்லாம் இருக்கு.

சில நாட்களாக இணையத்தில் வலம் வரும், சென்னை பற்றிய ஒரு ஆடியோ செய்தி.  http://goo.gl/KE1MPh

இந்த பதிவின் மூலம் வெளியூர் மக்கள் யாரும் சென்னைக்கு வர கூடாது என்றோ, உங்களால் மட்டுமே சென்னை கெட்டுவிட்டது என்றோ சொல்லவில்லை. "மெட்ராஸ் ரொம்ப போர்பா.. சிம்ப்லி வேஸ்ட்! " ன்னு சொல்ற டூபாகூர் டகால்டிகளுக்கு தான் இது. சென்னை பலருக்கு வேலையும், நல்ல வாழ்க்கையும் கொடுத்து கொண்டிருக்கிறது. தேவையில்லாம சென்னையின் பெயரை கெடுக்காதிங்க. உங்க ஊரு உங்களுக்கு சொர்க்கம்னா, எங்க சென்னை எங்களுக்கு சொர்க்கம்தான். இங்கேயும் சில மனுச பசங்க இருக்கோம்ன்னு தயவு செஞ்சு தெரிஞ்சுகொங்கபா...


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 30 மே, 2015

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

வணக்கம்,

வெங்கட் பிரபுவுடன் சூர்யா இணைந்துள்ள முதல் படம். இயக்குனருக்கு முந்தைய படமான 'பிரியாணியில்' காரம் இல்லாததாலும், சூர்யாவின் 'அஞ்சானை' கண்டு மக்களே அஞ்சியதாலும் இந்த படம் மாஸாக வரும் என்று அனைவரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளார்கள். சென்சாரில் 'யு' சான்றிதழ் கிடைத்த பின், வரிவிலக்குக்காக பெயர் மாற்றி வந்துள்ளான் இந்த 'மாசு என்கிற மாசிலாமணி'.

தமிழ் சினிமாவில் பேய் படங்களின் டிரெண்ட் தான் இப்போது டாப் வரிசையில் நிற்கிறது. இப்படம் 'சூப்பர் நேச்சுரல் காமெடி திரில்லர்' வகையறாவை சேர்ந்தது என்று சொல்லும் போதே தெரிந்து விட்டது, இதுவும் ஒரு மொக்கையான பேய் படமாக தான் இருக்கும் என்று. நான் நினைத்ததும் பொய்க்கவில்லை. இருந்தாலும் வெங்கட் பிரபு மீதுள்ள சிறு நம்பிக்கை, சூர்யாவின் நடிப்பு - இவை இரண்டிற்காகவாவது படத்தை பார்க்கலாம் என்று எண்ணி போன என்னை தமிழ்திரை ரசிகர்களுக்கு, வழக்கம் போல ப்பூ...பூ...பூச்சாண்டி காட்டியுள்ளான் இந்த மாசு.


கதையின் படி சூர்யாவுக்கு ஒரு விபத்தினால் ஆவிகளை, பேய்களை பார்க்கும் மற்றும் பேசும் சக்தி கிடைக்கிறது. முதலில் பயந்துவிட்டு, பின்னர் அவைகளுக்கு உதவுகிறார். உதவி கேட்டு வரும் பேய்களில் ஒரு பேய், இன்னொரு சூர்யா. அந்த பேய்க்கு இந்த சூர்யா உதவினாரா இல்லையா என்பது தான் மிச்ச சொச்ச கதை. கதையின் கரு புதிது என்று நினைக்கும் போது, அதே பழைய பழி வாங்கும் கதையை பேய் படம்  என்ற போர்வையில் சொல்லியிருக்கிறார்கள். முதல் பாதியில் மொக்கை போட்டுவிட்டு, இரண்டாம் பாதியில் கொஞ்சம் மாஸ் காட்டியிருக்கிறார்கள். 

இரண்டு சூர்யாகளின் இன்ட்ரோ சீன்களை மட்டும் மாஸாக காட்டிவிட்டு, போக போக தூசாகி போகிறார். இருவரில் இரண்டாம் சூர்யா கொஞ்சம் மாஸ் காட்டுகிறார். அவருடைய வசன உச்சரிப்பை பார்த்தால், ஈழ தமிழில் கதைப்பது போல இல்லை. மேலும் இவரின் ஹேர் ஸ்டைல், ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி போட்டது போல இருக்கிறது. எந்த படமென்று தான் யோசித்து கொண்டிருக்கிறேன்.
 
படத்துக்கு நயன்தாராவை கதாநாயகியாக போட்டதே வீண். நாலு சீன்களுக்கு வந்து போய்விடுகிறார். இயக்குனரின் முந்தைய படங்களை போல, இப்படத்திலும் சில கதாபாத்திரங்களில் 'சென்னை-28 கேங்' ஒரு காட்சிக்கு வந்து போகின்றனர். அதில் எனக்கு பிடித்த சீன், ஜெய்க்கு வரும் ஃப்ளாஷ்பேக் தான். நன்றாக லிங்க் பண்ணியிருக்கிறார் வெங்கட். காமெடிக்கு வழக்கம் போல அவர் தம்பி பிரேம்ஜி தான். இதிலும் படம் முழுக்க சூர்யாவுடன் வருகிறார். சூர்யா - நயன்தாரா காட்சிகளை விட சூர்யா - பிரேம்ஜி காட்சிகள் தான் அதிகம். பார்த்திபன் போன்ற மிக சிறந்த நடிகரை ஏன் இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை என தெரியவில்லை.

பாடல்களும் கூட அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. ஹாலிவுட் படமான தி சிக்ஸ்த் சென்ஸ் (The Sixth Sense) போன்ற நல்ல கதை கரு இருந்தும், இக்கதையில் திகிலோ, த்ரில்லோ ஒன்றும் இல்லை. அப்படி இருந்திருந்தால், படம் தாறுமாறாக மாஸாக இருந்திருக்கும். இயக்குனர் சூர்யாவை வைத்து ஜனரஞ்சக படமும் இல்லாமல், பேய் படமும் இல்லாமல் ஒரு மாதிரி வீணடித்து விட்டார்.

வெங்கட் பிரபு சிக்ஸர் அடிக்கிறேன் என்று சொல்லி, டொக் வைத்து டபுள்ஸ் எடுத்து இருக்கிறார். நல்ல வேலை தூக்கியடித்து அவுட்டாக வில்லை. மொத்தமாக படத்தில் கதை, திரைக்கதை, நாயகன், ஒலி, ஒளி என எதிலும் மாஸ் இல்லை.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 21 மே, 2015

அ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு !

வணக்கம்,

பேய், ஆவி என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பேய் பற்றிய பயமும், பேய் கதைகளை பற்றியும், நாம் பல இடங்களில் கேட்டு கொண்டிருக்கிறோம். ஏற்கனவே என் முந்தைய பதிவில் (பேய் பயம்) இதை பற்றி எழுதியுள்ளேன். இப்பதிவில் பேய் இருக்கும் இடங்கள் அல்லது பேய் இருப்பதாக நம்பபடும் இடங்களை பற்றி பார்க்கலாம்.

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பது போல ஆள் அரவமில்லா இடத்திலோ, சுடுகாடு பக்கத்திலோ, பாழடைந்த வீட்டிலோ ஏதாவது ஒரு உருவத்தை எவனாவது ஒருவன் குருட்டாம் போக்கில் பார்த்து விட்டு பேய் இருக்கிறது என்று கதை கட்டி, புரளியை கிளப்பி விடும் சம்பவங்களும் உண்டு.

இணையத்தில் சென்னையில் உள்ள பேய் இருக்கும் இடங்கள் (haunted places) என்று தேடிய போது, எனக்கு கிடைத்த தகவல்கள் இதோ.

1. வால்மீகி நகர், திருமான்மியூர் :

சென்னையில் பேய் உலவும் இடம் என்று தேடினால் முதலில் வருவது இந்த இடம் தான். எண். F -2 ,#3, செர்வார்ட் சாலை,வால்மீகி நகர், திருவான்மியூர். இந்த விலாசத்தில் உள்ள வீட்டில் தான் பேய் இருக்கிறதாம். சுமார் 10 வருடங்களுக்குமுன், வீட்டு உரிமையாளரின் மகள் தூக்கு போட்டு இறந்து விட்டதாகவும், அதிலிருந்து வீடு பூட்டியே இருக்கிறது என்றும், அந்த வீட்டில் அப்பெண்ணின் ஆவி உலாவுகிறது என்றும் சொல்கின்றனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு அவ்வபோது நடுநிசியில் பெண் அழுவது போலவும், அலறுவது போலவும் குரல் கேட்கிறதாம். அந்த வீட்டை கடந்து செல்லும் போது, இரும்பு கதவு தானாகவே திறந்து கொண்டு நம்மை வரவேற்கிறதாம். இதை எல்லாம் தெரிந்த பின்னும், 2008-ல் ஐந்து இளைஞர்கள் அந்த வீட்டில் குடியேறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட சில அசாதாரண நிகழ்வுகளால், வீட்டை விட்டு வெளியேறி  விட்டார்கள். இன்றும் அந்த வீடும், அதிலுள்ள மர்மமும் பூட்டியே இருக்கிறது.


2. டி' மாண்டி காலனி, ஆழ்வார்பேட்டை :

ஜான் டி' மாண்டி என்ற 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த போர்த்துகீசிய தொழிலதிபர் உருவாகிய காலனி  இது. அவரும் அங்கேயே தங்கி இருந்தாராம். இந்த காலனியில் இப்போது பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பூட்டியே இருக்கின்றனவாம். பல நிறுவனங்கள் அந்த வீடுகளை லீசுக்கு எடுத்து கொண்டதாகவும் சொல்கின்றனர். இரவில் அந்த வழியாக நடந்து யாராவது சென்றால், அவர்கள் பெயரை சொல்லி யாரோ அழைப்பது போலவும், சிரிப்பு சத்தமும் கேட்கிறதாம். இரவில் சாலையை  ஜான் டி'மாண்டி கடந்து செல்வதை அப்பகுதிவாசிகள்  சிலர் பார்த்துள்ளார்கள்.  பூட்டிய வீட்டில் இவருடைய ஆவி கதவை திறக்காமலே உள்ளே சென்றதையும் சிலர் பார்த்திருகிறார்கள். ஆள் அரவமற்ற தெருவும், விளக்கில்லாத சாலையும் பார்க்கும் போதே திகிலூட்டுகிறது. இந்த பேரை கொண்டு தமிழில் ஒரு திரைப்படமும் வரப்போகிறது


3. கரிக்காட்டு குப்பம், முட்டுக்காடு  :

கிழக்கு கடற்கரை சாலையில் 2004-ல் ஏற்பட்ட சுனாமியால் இந்த கரிக்காட்டு குப்பம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. அதில் வாழ்ந்த பலரும் இறந்து விட்டனர். மீதம் இருந்த சிலர், ஊரை விட்டே போய்விட்டனர். அந்த சம்பவத்தில் இறந்த ஒரு கிழவனும், இரண்டு குழந்தைகளும் இங்கு ஆவியாய் அலைகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். அங்கு கோவில், பள்ளிக்கூடம், வீடுகள் என்று எல்லாம் இருந்தாலும் மக்கள் யாரும் இல்லாமல் ஒரு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது . அடிக்கடி கிழவனின் ஆவி நிழலாய் தெரிகிறது என அதை பார்த்த சிலர் சொல்கிறார்கள்.


4. பெசன்ட் அவன்யு சாலை, பெசன்ட் நகர் :

பெசன்ட் நகர் தியோசபிகல் அமைப்பு அமைந்துள்ள சாலையை ஒட்டி உள்ள தெரு தான் பெசன்ட் அவன்யு. பகலில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த சாலை, இரவில் பேய்கள் அலைகிறது என்று கூறுகிறார்கள். ஒரு கண்ணுக்கு தெரியாத உருவம், தனியாக வருபவர்களையெல்லாம் பளார் என்று அரைகிறதாம். இருட்டில் யாரும் அந்த பக்கம் போக வேண்டாம் என்று அப்பகுதி மக்கள் எச்சரிகிறார்கள்.


5. உடைந்த பாலம், அடையார் :

அடையாரில் கூவம் ஆற்றின் மீது கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட இந்த உடைந்த பாலத்தில் (ப்ரோக்கன் ப்ரிட்ஜ்) இரவு நேரங்களில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக சொல்கிறார்கள். பாலம் அருகே உள்ள ஆள்காட் குப்பத்தில் ஒரு பெண் அலறும் சத்தம் தினமும் கேட்பதாக சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன், ஒரு பெண் அப்பகுதியில் கொலை செய்யப்பட்டு இறந்து போனதாகவும், அவள் தான் தினமும் அலறுவதாகவும் கூறுகின்றனர்,


 6. சென்னை கிறுஸ்தவ கல்லூரி, கிழக்கு தாம்பரம் :

மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த கல்லூரியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் (chemsitry lab) எதோ வித்தியாசமான சப்தங்கள் கேட்பதாக மாணவர்கள் சொல்கிறார்கள். அந்த பாதை வழியாக போகும் போது பூட்டியிருக்கும் ஆய்வகத்தில் யாரோ பேசுவது போலவும், யாரோ புத்தகத்தை படித்து பாடம் நடத்துவது போலெல்லாம் சத்தம் வருகிறதாம். இது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக அக்கல்லூரியில் நம்பப்படும் ஒரு அமானுஷ்ய விஷயமாகும்.


7. சென்னை - புதுச்சேரி சாலை:

சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மர்மமான சில சம்பவங்கள் நடப்பதாக நம்பப்படுகிறது. காரிலோ, டூ-வீலரிலோ வந்து கொண்டிருக்கும் போதும், திடீரென ஒரு வெள்ளை உருவம் கடப்பதாகவும், வேகமாக எதிர்பக்கத்தில் வரும் வாகனம் திடீரென காணாமல் போவதும் மக்களை மேலும் திகிலூட்டுகிறது.


சென்னை மட்டுமல்ல. தமிழ் நாட்டில் பிற இடங்களிலும் இது போன்ற பேய் உலவும் இடங்கள் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.

கொல்லிமலை, திருச்சி -  அடர் காட்டில் உள்ள அருவியும், மூலிகை வனமும் கொல்லிமலைக்கு பிரபலம். ஆனால் இந்த வனப்பகுதியில் பேய்கள் மற்றும் ரத்த காட்டேரிகளின் நடமாட்டமும் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் சொல்கிறனர். காட்டில் நடைபயணம் செய்பவர்கள் , அமானுஷ்ய உருவங்களை பார்த்துள்ளதாகவும் சொல்கின்றனர்.

சத்தியமங்கலம் வனப்பகுதி, சேலம் - புலிகள் மற்றும் யானைகளின் காப்பகமாக திகழ்கிறது சத்தியமங்கலம் வனப்பகுதி. 2004-ல் வீரப்பன் மறைவுக்கு பின், அந்த அந்த காட்டில் வித்தியாசமான அலறல் குரல்கள் கேட்கிறது என்று அப்பகுதி மலைவாழ் மக்கள் சொல்கிறார்கள். இரவில் இந்த அடர்ந்த காட்டில், ஆளில்லா லாந்தர் விளக்குகள் காற்றில் மிதந்து வருவதாகவும் சொல்கின்றனர்.

பெர்ன் ஹில்ஸ் விடுதி (Fern Hills Hotel) , ஊட்டி - சில காலங்களுக்கு முன் அந்த ஓட்டலில், சில அறைகளில் அமானுஷ்ய விஷயங்கள் நடந்தாக சொல்கிறார்கள். இரவில் அறையின் கதவுகள் தானாகவே திறந்து, மீண்டும் படார் என சத்தத்துடன் மூடிக்கொள்கிறதாம். ஒருமுறை ஊட்டியில் இந்தி சினிமா ஷூட்டிங்க்கு வந்த கதாநாயகி (பிபாஷா பாசு) தங்கிய அறையின் மேல் யாரோ கட்டில், மற்றும் நாற்காலிகளை நகர்த்தி கொண்டே இருப்பது போல சத்தம் கேட்டது. விடிந்த பின் ரிசப்ஷனில் கேட்டபோது, அந்த அறையின் மேல் எந்த ஒரு அறையும் கிடையாது என்று பதில் வந்துள்ளது. அதன் பின்னர் அவர்களும் அறையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர். இப்போது அந்த ஓட்டல் மூடி கிடக்கிறது. 


இது போன்ற பல இடங்கள் இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் இருக்கிறது. பேயை நம்புபவர்கள் பயந்து கொண்டே இருக்கிறார்கள். பேய் கதைகளும் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது. இதை படிக்க படிக்க உங்களுக்கு பயம் ஏற்படுகிறதோ இல்லையோ, இரவு நேரத்தில் இணையத்தை தேடி படித்து எழுதும் போது எனக்கு திகில் ஏறிக் கொண்டே போகிறது.

தகவல்கள், படங்கள்  - கூகிள், கோரா 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்