ஞாயிறு, 30 நவம்பர், 2014

ஆ... விமர்சனம்

வணக்கம்,

ஆ.... அம்புலி இயக்குனரின் அடுத்த படைப்பு. படத்தின் முதல் மோஷன் போஸ்டர் பார்த்தவுடன், இந்த படத்தை பார்த்ததே தீர வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். நேற்று திரையரங்கில் ஐம்பதுக்கும் குறைவான கூட்டத்தில் பார்க்க வேண்டிய நிலை. பெரிய நடிகர்கள் யாரும் இல்லாததால் படம் மக்களிடம் போய் சேரவில்லை என நினைக்கிறேன்.

தமிழின் முதல் ஹாரர் அந்தாலஜி (Horror Anthology) படம் இது. அந்தாலஜி என்பதற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட கதைகளின் தொகுப்பு என்று பொருளாம். அது போல ஐந்து வேறு வேறு கதைகளை படத்தில் நமக்கு தொகுத்து சொல்லியிருக்கிறார்கள்.

படம் ஆரம்பிக்கும் போது வரும் பாடலை பார்த்தால், இது திகில் படம்தானா  என்று நமக்கு சந்தேகம் வருகிறது. ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் திரைக்கதைக்குள் வந்து விடுகின்றனர். பேயை தேடி நண்பர்கள் மூவர் (கோகுல், மேக்னா, பால சரவணன் ) அலைவது தான் கதை. வங்காள விரிகுடாவில் நடுவில் ஒரு இடம், ஜப்பானில் ஒரு மருத்துவமனை அறை,  துபாய் பாலைவனத்தில் ஒரு பெரிய மாளிகை, தமிழ்நாட்டில் ஊருக்கு வெளியே ஒரு ஏ.டி.எம். செண்டர் மற்றும் ஒரு நெடுஞ்சாலை பாதை என பேய் இருப்பதை கண்டுபிடிக்க பேயாய் அலைகின்றனர்.


ஐந்து பேய் கதைகளையும் திகிலுடன் கொடுக்க முயன்றிருக்கின்றனர் படகுழுவினர். கடலுக்கு நடுவிலும், மருத்துவமனையிலும் நடப்பதை திகிலுடன் சொல்லும் போது, நம்மை சில நிமிடம் நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். மற்றபடி, படத்தின் முதல் பாதி லேசான திகிலுடன்தான் இருகிறது. ஆனால் பிற்பாதியில் அவ்வளவாக பயமுறுத்த மறந்து விட்டார்கள்.

நாயகன் கோகுல் நன்றாக மைமிங் மற்றும் டான்ஸ் ஆடுவார் என்று எல்லாருக்கும் தெரியும். படத்தில் அவருக்கு இன்னும் கொஞ்சம் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கலாம். உடன் வரும் மேக்னா படம் முழுக்க வந்து போகிறார். பால சரவணனின் வசன உச்சரிப்பு, நடிப்பை பார்க்கும் போது, பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க வாய்ப்பு உண்டு என தோன்றுகிறது. பாபி சிம்ஹா இதிலும் கொஞ்சம் வித்தியாசமான பாத்திரத்திலேயே நடித்துள்ளார். அடுத்து இசை. படத்தின் இசை பெரிதாக இல்லை என்றாலும், திகில் படங்களுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது நல்லது.

தமிழ் படங்களில் பேயை தேடி போவது, அதுவும் நாடு நாடாய் போவார்களா என்றெல்லாம் யோசிக்க/கேட்க கூடாது. ஹாலிவுட்டில் இப்படி படம் எடுத்தால், வாயை ஆ.. என்று பிளந்து கொண்டு பார்ப்பார்கள். 'பீட்சா' படம் வந்த பின்னர், நாம் எல்லா திகில் படங்களையும் அதனுடையே ஓப்பிட்டு பார்க்கிறோம். "ச்சே..பீட்சா மாதிரி இல்லப்பா.." என்று சொல்லி கொள்கிறோம். ஆனால் எல்லா படமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

தமிழில், அதுவும் திகில் படங்களில், இது போல மற்றுமொரு வித்தியாசமான முயற்சியை செய்துள்ள இயக்குனர் ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயண் அவர்களுக்கு ஒரு சிறப்பு பாராட்டுக்கள்.

'ஆ'  நம்மை மிரட்டி, அலறவைக்கவில்லை, இருப்பினும் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

2 Comments:

Parathan Thiyagalingam சொன்னது…

விமர்சனம் அருமை... பதிவுக்கு நன்றி...

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி Parathan Thiyagalingam !