செவ்வாய், 28 ஜூலை, 2015

அப்துல் கலாம் - இறுதி அஞ்சலி

வணக்கம்,

தமிழகத்தின் தென்கோடியில் ராமேஸ்வரத்தில் பிறந்து, பாரத தேசத்தில்  எல்லா மக்களின் மனதிலும் இடம் பிடித்தவர்  'பாரத் ரத்னா' Dr. APJ அப்துல் கலாம் அவர்கள்.

ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட்டு கொண்டிருந்த ஒளி விளக்கு அணைந்து விட்டது. கடலோரத்தில் பிறந்து, நிலங்கள் யாவும் சுற்றி, மக்கள் மனதை கவர்ந்து, அக்னி சிறகுகளால் பலருக்குள் இருந்த அக்னியை தூண்டிவிட்டு, மலை மேல் மறித்து, இன்று காற்றை போல நம்முள் நீக்கமற நிறைந்த ஓர் உன்னத தலைவர்.

அப்துல் கலாம் அவர்கள்  ஒரு பெரும் அணு விஞ்ஞானி, மக்கள் போற்றும் முன்னாள் ஜனாதிபதி, கிட்ட தட்ட இந்தியாவிலுள்ள எல்லா மாணவ /மாணவிகளின் முன் மாதிரி, எழுத்தாளர், பேராசிரியர் என பன்முகம் கொண்டவர் . இதையெல்லாம் விட சிறந்த எளிமையான மனிதர் என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமுமில்லை.

apj-abdul-kalam-died

இந்தியா 2020 -ல் வல்லரசாக மாறும் என்பதை நம் மனதில் விதைத்தவர். கனவு காணுங்கள் என்று சொன்னவர். அந்த கனவை மெய்பட வைக்க, நாம் அயராது உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தியவர்.

காந்தி இறந்துவிட்டார், காமராஜர் இறந்து விட்டார், அண்ணா இறந்து விட்டார் என நாட்டை நேசித்த , மக்களை கவர்ந்த பெரும் தேசதலைவர்களின் இழப்பை ஒரு வரலாற்று செய்தியாகதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இத்தலைமுறையில், இன்று தான் உண்மையில்  நாம் அனைவரும் விரும்பிய ஒரு நல்ல மனிதரின் இழப்பினை  நிகழ்காலத்தில் காண்கிறோம்.

கட்சி, சாதி/ மதம், மொழி, துறை பாகுபாடு என எதுவும் இல்லாமல் எல்லாராலும் மதிக்கப்படும் சிறந்த மனிதரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

அவரின் கனவை உண்மையாக்க முயற்சி செய்வோம்.

"அப்துல் கலாமை பார்த்து  நாம் பெருமைப்பட்டது போதும்... 
அப்துல் கலாம் நம்மை பார்த்து பெருமைபடட்டும்" 

என்ற எனது நண்பரின் கவிதை வரிகள் தான் தான் நினைவுக்கு வருகிறது.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 15 ஜூலை, 2015

ஆன்லைன் ஷாப்பிங் செய்ய போறீங்களா?

வணக்கம்,

இ-காமர்ஸ் என்று சொல்லப்படும் ஆன்லைன் ஷாப்பிங் தான் இன்றைய தலைமுறையின் லேட்டஸ்ட் டிரெண்ட். எலக்ட்ரானிக் பொருட்கள், துணிமணிகள் முதல், சோப்பு, சீப்பு, கண்ணாடி, உப்பு, புளி, மிளகாய் வரை எல்லாமே இப்போது இணைய வியாபாரிகளிடம் எளிதில் கிடைத்து விடுகிறது.

முதலில் சற்று வசதி படைத்தவர்கள் மட்டுமே ஆன்லைனில் வாங்கி கொண்டிருந்தனர். பின்னர் சாமான்ய மக்களும் கணினி மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்க ஆரம்பித்துவிட்டனர். இப்போது கணினி மூலம் வாங்குவதை விட, மொபைலில் ஆன்லைன் வர்த்தகம் செய்வது அல்லது பொருட்கள் வாங்குவது மக்களிடம் வாடிக்கையாகிவிட்டது.

இந்த ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களுக்கு, இவ்வளவு குறைந்த விலையில் கொடுத்தாலும் எப்படி கட்டுப்படி ஆகிறது என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. ஷோரூம் வைத்து பொருட்களை கடைவிரித்து, பொதுமக்களிடம் விளக்கி விற்பதை விட, ஆன்லைனில் விற்பது சுலபம் . சுலபத்தை காட்டிலும் லாபம் அதிகம். கடையின் வாடகை, கரண்ட் பில், வேலை செய்பவர்களுக்கு சம்பளம், பராமரிப்பு செலவு என நேரில் விற்பதுக்கு செலவு அதிகம். ஆனால் ஷாப்பிங் வெப்சைட்காரர்கள், வெறும் குடோனில் சரக்குகளை சேமித்து கொண்டு, நுகர்வோர்/வாடிக்கையாளர்களுக்கு கேட்டவாறு பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள்.


ஆன்லைன் ஷாப்பிங்க்கு ஏன் இவ்வளவு மவுசு?

1) 2005-ல் பிராட்பேண்ட் இணைய சேவை வந்த போது மெல்ல மெல்ல ஆரம்பித்தது ஆன்லைன் ஷாப்பிங் மோகம். போக்குவரத்து சிக்கலில் மாட்டாமல், கடைவீதியின் கூட்ட நெரிசலில் சிக்காமல், கடை கடையாய் ஏறி இறங்காமல், வீட்டில் இருந்தபடியே கணினி முன் அமர்ந்து வாங்குவது சுலபம்.

2) நேரில் வாங்குவதை விட ஆன்லைனில் பொருட்கள் மலிவாக இருப்பதால், மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

3) பொதுமக்களின் தேவையை அறிந்து கொண்டு, இணைய வியாபாரிகளிடையே போட்டி அதிகமாகி விட்டது. ஆளாளுக்கு பொருட்களை 'போத்திஸ் ஆடி தள்ளுபடி ஆஃபர்' போல கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

4) Credit Card, Debit Card மற்றும் Debit Card  மூலம் பண பரிவர்த்தனை செய்யபடுவதால், வாடிக்கையாளருக்கு ஆன்லைனில் வாங்குவது மிகவும் சுலபமாக இருக்கிறது.

5) மேலும் Cash On Delivery  மற்றும் Free Home Delivery வசதியும் பல இணைய வியாபாரிகள் கொடுப்பதால், 'கையில காசு வாயில தோசை' என்று நம்பிக்கையுடன் வாங்குகின்றனர். வீட்டிலேயே பொருள் வந்து ஓசியிலேயே இறங்கி விடுவதால், வாடிக்கையாளருக்கு கஷ்டமே இல்லை.

6) எல்லாவற்றக்கும் மேலாக, வாங்கிய பொருள் சேதபட்டிருந்தாலோ,  சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ,  30 நாட்களில் உங்கள் முழு பணமும் வாபஸ் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மக்களை பெரிதும் கவர்ந்து விட்டன.

online-shopping
click to enlarge image 

ஆன்லைன் ஷாப்பிங் தில்லு முல்லு:

மேலோட்டமாக பார்த்தால், இது ஒரு சுலபமான வர்த்தகமாக தான் தெரியும். ஆனால் இதிலுள்ளும் பல தில்லு முல்லுக்கள் நடப்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கிறது. அவற்றுள் சில:

1) ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு ஒரு பொருள் வர வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு,
  •  XL அளவு சட்டை கேட்டால், M அளவு சைஸ் சட்டை வரலாம். 
  • அதே போல, ஆர்டர் செய்த நீல நிற டி-ஷர்ட்டுக்கு பதிலாக அதே பிராண்டில் பச்சை நிற டி-ஷர்ட் வரலாம்.  
பேஸ்புக்கில் பகிரபடுவது போல, மொபைல் போன் ஆர்டர் செய்தால் சோப்பு டப்பாவோ,  ஐ-போட் பதிலாக செங்கலொ, வேறு பொருளுக்கு பதிலாக வெறும் காலி டப்பாவோ வர வாய்ப்பே இல்லை. அதெல்லாம் இணைய வியாபாரிகளின் எதிரி நிறுவனங்களின் வியாபார சூழ்ச்சியே ஆகும். 

2) ஆர்டர் செய்த பொருள் தாமதமாக வரலாம். 10 நாட்களில் வரவேண்டியது,  25 நாட்களில் வந்தடையும் போது வாடிக்கையாளருக்கு எரிச்சல்தான் வரும். ஆர்டர் செய்த பொருள் வராமல் கூட போகலாம். உங்கள் ஊரில் எளிதில் கிடைக்கும் தன்மை இல்லாததால், பொருள் தாமதமாகவோ அல்லது கிடைக்காமலே இருக்க கூட வாயுப்புண்டு.

3) சில இணைய வியாபாரிகள், போலியான ஆஃபர்களை காட்டி மக்களை எமாற்றிவிடுகின்றனர். 20,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை வெறும் 2000 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளுங்கள். குறுகிய கால ஆஃபர் மட்டுமே! முந்துபவர்களுக்கே முன்னுரிமை! என்று  கவர்ச்சி வார்த்தைகளில் வலை விரிக்கின்றனர். சில ஏமாளிகளும் வசமாக வலையில் சிக்கி கொள்கின்றனர். பொதுவாக இத்தகைய ஆஃபர்களை பயன்படுத்தும் போது, அவை தரமான, நம்பிக்கையான இணையதளம்தானா என்று பரிசோதித்து வாங்க வேண்டும்.

4) சில இணைய தளங்களில், போலியான பொருட்களை வாடிக்கையாளர் தலையில் கட்டி விடுகின்றனர், உதாரணத்திற்கு, சோனி (SONY) கம்பெனியின் ஒரு பொருளை ஆர்டர் செய்திருந்தால், சோனி (SONYY) என்ற போலியின் பொருளை அனுப்பி விடுகின்றன்ர்,

4) மிக முக்கயமானது இது. வாங்கும் சில பிராண்டட் பொருட்களுக்கு வாரண்டி இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். சில இணைய வியாபாரிகள் வாரண்டி இல்லாமலேயே பொருட்களை விற்று விடுகின்றனர். ஆஃபர்களை பெரிதாக காட்டிவிட்டு வாரண்டி இல்லை என்பதை சிறு எழுத்துகளில் வலைபக்கத்தின் கடைசியில் எழுதி வைக்கின்றனர்,

5) இன்னும் சில முன்னணி நிறுவனங்கள், இந்த இணைய வியாபாரிகள் எங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் இல்லை என்று அறிவித்து விடுகின்றனர்.

Flipkart, Snapdeal and Amazon not our authorized resellers - Lenovo 
http://goo.gl/7wA0yw

6) அசல் விலையை விட கூடுதலாக விலை போட்டு, வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிவிடுகின்றனர்.  சில நாட்களுக்கு முன், ப்ஃளிப்கார்ட்டில் 800 ரூபாய் மதிப்புள்ள செருப்பை 399 ரூபாய் என்று கூறி விற்பனைக்கு வைத்துள்ளனர். அந்த படத்தை ஜூம் செய்து பார்க்கும் போது, அந்த செருப்பிலேயே அதன் விலை 399 ரூபாய் தான் என்று போடப்பட்டுள்ளது. இதை விட பள்ளி சிறுவர்கள் எடுத்து செல்லும் ஒயர் கூடை 1,250 ரூபாய் என்று விற்கப்பட்டுள்ளது. இது போல பல பொருட்களின் விலையை மாற்றி போட்டு ஏமாற்றி விடுகின்றனர் ஆன்லைன் வர்த்தகர்கள்.

click to enlarge flipkart frauds
click to enlarge image 

8) மேலும், ஆன்லைனில் பழைய பொருட்களை வாங்கி விற்பவரும் ஏமாற்ற படுகின்றனர். பொருளை பார்க்காமல், சோதிக்காமல் பண பரிவர்த்தனை செய்து  ஏமாந்து விடுகிறார்கள்.

தொழில்நுட்பம் வளர வளர நம்மை சோம்பேறிகளாகவும், ஏமாளிகளாகவும் மாற்றி கொண்டிருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்னும் இது போல பல கோல்மால்கள் இணையத்தில் நடக்க வாய்ப்புண்டு. ஆன்லைனில் பொருட்களை வாங்குவோர், கொஞ்சம் உஷாராக தான் இருக்க வேண்டும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 4 ஜூலை, 2015

பாபநாசம் - விமர்சனம்

வணக்கம்,

ஏற்கனவே மலையாளத்தில் வெளியான 'திருஷ்யம்' படத்தைச் சமீபத்தில் தான் பார்த்துத் தொலைத்தேன். பாபநாசம் பட டிரைலரில் காட்சியும், வசனமும் பார்த்த போதே தெரிந்து விட்டது, தமிழில் கொஞ்சம் கூட மாற்றவில்லை என்று. ஹ்ம்ம்...எப்படியிருந்தால் நமக்கென்ன ? நமக்குத் தேவை உலக நாயகனின் நடிப்பு பசியை வெள்ளி திரையில் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.

சாதாரணக் குடும்பத்தில் ஓர் எதிர்பாராத அசம்பாவிதம் நடந்து விடுகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பதே திருஷ்யம் (மலையாளம், தெலுங்கு & வர போகும் ஹிந்தி ) மற்றும் பாபநாசம் படத்தின் கதை.


கமல்ஹாசனின் நடிப்புக்கு தான் வயசாகவில்லையே தவிர, அவர் முகத்தில் கொஞ்சம் வயது முதிர்வு தெரியதான் செய்கிறது. இருந்தாலும், கருப்புச் சட்டையில் வெள்ளை தோலுமாய்த் திராட்சை நிற கண்களை உருட்டி பார்க்கும் போது, அவர் கருவிழியில் இன்னும் ஆயிரம் கதாபாத்திரங்களை நடிக்கத் தயாராய் இருக்கிறார் என்பது நமக்குத் தெரிய வரும்.


சுயம்புலிங்கமாக நெல்லை தமிழ் பேசி அசத்தியுள்ளார் கமல். அசல் நெல்லைகாரனே தோற்றான் போங்க! ஒவ்வொரு சீனிலும் கமலின் நடிப்பு உச்சத்தைத் தொடுகிறது. பிணத்தைத் தோண்டி எடுத்த பின்பு, எல்லாரும் ஒரு முறை அதிர்ச்சியும் ஆச்சிர்யத்துடனும் கமலை திரும்பி பார்க்க, 'உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது போங்கடா' என்று ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்..ச்சே...சான்ஸே இல்ல. அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. அதெல்லாம் சரி, ஏன் இவ்வளவு 'அவுட்டேட்டடான' கெளதமி ஆண்ட்டியை ஹீரோயினாகத் தேர்வு செய்தார் கமல் என்று தான் புரியவில்லை. இருப்பினும் மலையாளத்தில் மீனா செய்த வேலையைத் தமிழில் நன்றாகச் செய்து இருக்கிறார்.

கமல் - கெளதமியின் மகள்களாக (படத்தில்!) நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அணில் இருவரும் அழகாக நடித்துக் கொடுத்திருகின்றனர். நிவேதா ஏன் இன்னும் நம் தமிழ் தயாரிப்பளர்கள் கண்ணில் படவில்லை என்பது வியப்பின் வியப்பு. மற்றபடி, எம்.எஸ்.பாஸ்கர், கலாபவன் மணி, போலிஸ் அதிகாரியாக வரும் பெண்மணி என எல்லோரும் சரியான அளவில் தங்களது பணியைக் குறையில்லாமல் செய்துள்ளனர்.

ஜிப்ரானை தன் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாற்றிவிட்டார் கமல். அதனால் தான் எல்லாப் படப் பாடல்களும் கமலின் பெயர் சொல்வது போல இருக்கிறது. இதிலும் 'கோட்டிக்காரா ' பாடல் பார்க்க, கேட்க ரம்மியமாக இருக்கிறது.

மற்ற மொழியில் திருஷ்யதை பார்க்காதவர்களுக்கும், கதையின் கிளைமேக்ஸ் சஸ்பென்ஸ் தெரியாதவர்களுக்கும் இந்தப் படம் கண்டிப்பாகச் சிறந்த பொழுதுபோக்காக அமையும். மற்றவர்கள் உலக நாயகனின் நடிப்பு ஆளுமையைப் பார்த்துப் புளங்காகிதம் அடைவார்கள்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்