புதன், 25 ஜனவரி, 2023

தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை !

வணக்கம்,

சங்ககால இலக்கிய பாடல்களில் காதல், வீரம், பாசம், அன்பு, கோபம், கருணை என பல சுவைகள் உள்ளது. அதில் நகைச்சுவை என்பது இன்றியமையாதது ஆகும். நமது தமிழ் இலக்கியங்களில் கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி என நகைச்சுவை கலந்து ஒரு செய்தியையோ, கருத்தையோ சொல்வது சர்வசாதாரண ஓன்று. அவற்றுள் சிலவற்றை படித்து ரசிக்கலாம்.


nagaichivai-tamil-illakiyam

நந்திக்கலம்பகம் என்னும் இலக்கியத்தில், தலைவன் (ஆண் - பொதுவாக கணவன்) ஒருவன் பரத்தையர் (வேசி) வீட்டுக்கு செல்கிறான். கூடவே பாணன் (அரசவையில் பாட்டு/இலக்கியம் பாடுபவர்) ஒருவனையும் அழைத்து செல்கிறான். தலைவன் பரத்தையுடன் மகிழ்வுற்று இருக்கும் போது, பாணன் இரவு முழுவதும் வீட்டுக்கு வெளியே நின்று பாடிக்கொண்டிருக்கிறான். மறுநாள் காலையில் தலைவியிடம் (பெண் - மனைவி) சேதி சொல்ல தலைவன் வீட்டுக்கு வரும் பாணன், தலைவிடம் நான் பாடியதை கேட்டீரா என கேட்கிறான். அதற்கு தலைவியும் மனதில் கோபமும் எரிச்சலும் கொண்டு, கிண்டலும் நையாண்டியுடனும் இப்பாடலை சொல்கிறாள்.


" ஈட்டுபுகழ் நந்தி பாண நீ எங்கையர் தம்
வீட்டிலிருந்து பாட விடிவளவும்கேட்டிருந்தோம்
பேயென்றாள் அன்னை பிறர் நரியென்றார் தோழி
நாயென்றாள் நீ என்றேன் நான்
".


பொருள் - புகழ் ஈட்டிய நந்திவர்மன் அரசவையில் பாடும் பாணனே! நீ என் தங்கையர் (பரத்தை ஆனாலும், கணவனுடன் இருப்பதால் தங்கை என சொல்கிறாள்) வீட்டில் இரவு முழுவதும் பாடியதை விடியும்வரை கேட்டோம். பேய் அலறுகிறது என்றால் என் அன்னை, மற்றவர்கள் நரி என்றார்கள், என் தோழி அது நாய் என்று சொல்ல; நான் நீ என்று சொன்னேன்! பாணன் பேசுவது பிடிக்காவிடிலும் அதை பாடலில் நயமாக கிண்டலும் கேலியுடனும் பாடியது இதன் சிறப்பாகும்.


திருக்குறள் நூலில் வள்ளுவர் கயவர் (தீயவர்), பேதையர் (முட்டாள்) ஆகியோரின் நட்பு, எண்ணம் பற்றி நயமாக சொல்லியுள்ளார்.


"தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்" (குறள்
: 1073)


பொருள் - தேவர்களும் கயவர்களும் ஒப்பானவர்கள். ஏனெனில் இருவரும் மனம்போன போக்கில் தாம் விரும்பியதை செய்வார்கள்கயவர்கள் எதையும் யோசிக்காமல், தாம் நினைத்த தீயதை செய்து கொள்வார்கள் என்று சொல்கிறார்.


"நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்" (குறள் 1072)


பொருள் - பேதையர்கள் (முட்டாள்கள்) நட்பு கொள்வது இனிமையானது தான். ஏனெனில் அவர்களை பிரிந்து செல்லும் போது பெரும் வருத்தமோ கஷ்டமோ இருக்காது என முட்டாள்களை கிண்டல் செய்து பாடியுள்ளார்.


கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். (குறள்: 403)


கல்லாதவரும் நல்லவர்களே! எப்போது வரை என கேட்டல் அவர்கள் கற்றறிந்தவர்கள் முன் ஏதும் பேசதவரை என்று அவர்களில் கல்லாமையை பற்றி கூறி நகைத்துள்ளார்.


சிலேடை என்னும் இலக்கிய பாடல்களில், கவி காளமேகபுலவர் தம்மை மதிக்காத திருமலைராயன் அரசவையில் உள்ள 64 புலவர்களை நகைத்து கவி
ப்பாடியுள்ளார். அந்த 64 புலவர்களும் தங்களை கவிராஜன் என சொல்லி கொண்டனர். 


வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே - சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால். 


பொருள் -  கவிகளின் அரசர் என்று சொல்லும் புலவர்களே! உங்களுடைய வால்  எங்கே ? நீண்ட வயிறு எங்கே? முன்னங்கால்கள் எங்கே? உள்ளோடிய கண்கள் எங்கே?  என கிண்டலும் கேலியுடனும் பாடியுள்ளார். கவிராஜன் என்னும் சொல்லுக்கு 'கவிகளின் அரசன்' மற்றும் 'குரங்கு' என இரு பொருள்படும். இவ்வாறு புலவர்களை குரங்குக்கு ஒப்பாக கேலி செய்துள்ளார்.


இன்னோரு சந்தர்ப்பத்தில், காளமேக புலவர் தாகத்திற்காக ஒரு பெண்மணியிடம் மோர் வாங்கி குடித்துள்ளார். மோரை குடித்துவிட்டு பின்வரும் பாடலை பாடியுள்ளார்.


கார் என்று பேர் படைத்தாய் ககனத்துரும்போது
நீர் என்று பேர் படைத்தாய் நெடுந்தரையில் வீழ்ந்ததன் பின்
வார் சடை மென்கூந்தல் பால் ஆய்சியர்கை வந்ததன் பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.


பொருள் - ஆகாயத்தில் இருக்கும் போது மேகம் என்னும் பெயர் பெற்றாய்; தரையில் மழையாய் வரும் போது நீர் என்று அழைக்கப்பட்டாய்; கச்சை யணிந்த இந்த ஆயர்குல ஆச்சியிடம் இருக்கும் போது மோர் என்று அழைக்கப்படுகிறாய் ; ஆகவே மூன்று பேர்களையும் நீ பெருகிறாய் என்ன கிண்டலுடன் பாடியுள்ளார். இதன் பொருள் வேறொன்றும் இல்லை. மோர் தண்ணீரை போல இருக்கிறதாம். அதைத்தான் இப்படி சொல்கிறார்.


புறநானூறு பாடல்களில் அதியமானின் போர் தூதாக வந்த அவ்வையாரை தொண்டைமான் மன்னன் அவருடைய படைக்கெட்டிலுக்கு அழைத்து சென்று காண்பித்தான். அவனுடைய ஆயுதசாலையில் உள்ள படைக்கலன்கள் எல்லாம் புத்தம் புதிதாக பளபளவென இருந்தது. நீண்ட கூரான வேலும், ஈட்டியும், வளைந்த வில்லும்கூரான அம்பும் குவிந்து வைக்கப்பட்டிருந்தன. தொண்டைமான் தன் ஆயுத கிடங்கில் ஆயுதங்கள் ஒழுங்காக அடுக்கி வைத்துள்ளதை பெருமைகளாய் சொல்லி வந்தான். அதை கண்டா அவ்வையார் கீழே வரும் பாடலை பாடினார்.     


இவ்வே , பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி செய் அணிந்து
கடியுடை வியன்நகர் அவ்வே , அவ்வே
பகைவர் குத்திக் கொடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில் !


பொருள் - இங்கே (தொண்டைமான் ஆயுத கிடங்கில்) உன் ஆயுதங்கள் மயில்தோகையால் அலங்கரிக்கப்பட்டு , பீலி மலர்கள் பூண்டு பளபளப்புடன் இருக்கின்றன. உன் ஆயுதசாலையை சுற்றி காவல் இருக்கிறது; உன் படைக்கலன்கள் ஒருமுறையேனும் போரை கண்டதாய் தெரியவில்லை.  மினுமினுப்புடன் அப்படியே இருக்கிறது. ஆனால் அங்கு (அதியமான் ஆயுத கிடங்கில்) ஆயுதங்கள் முனை மழுங்கி, கூரில்லாமல், உடைந்து செப்பமிட வேண்டியதாய் இருக்கிறது. அவனுக்கு ஆயுதங்களை உபயோகிக்கவே தெரியும், அழகு பார்க்க தெரியாது என்று கூறினார்.  
அதாவது நீ பளபளப்புடன் பத்திரமாய் வைத்துள்ளாய்; ஆனால் அவன் பல போர்களை கலந்து கொண்டு, வென்று ஆயுதங்கள் முனைமழுங்கி எப்போதும் போரிட தயாராய் இருக்கிறான் என அவ்வையார் சாமர்த்தியமாக பேசி போர் நடக்காமல் தடுக்கிறார். 


பாரதிதாசன் தம்முடைய இருண்ட வீடு என்னும் படைப்பில் வரும் ஒரு பாடல்:


பிட்டுக் காரி தட்டினாள் கதவையே

திட்டென்று கதவைத் திறந்தான் பெரியவன்

பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான்

பெட்டி மீதில் இட்டுட் கார்ந்தான்

ஆவலாய் அவற்றை அருந்தத் தொடங்கினான்

நாவில் இடுகையில், நடுவயிறு வலித்தது

வெளிக்குப் போக வேண்டுமென் றுணர்ந்தான்

வடையின் சுவையோ விடேன்விடேன் என்றது

கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான்.

மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்

வில்லம்பு போல மிக விரை வாக

நடுவிற் கிடந்த நாயை மிதித்துப்

படபட வென்று பானையைத் தள்ளிக்

கன்றின் கயிற்றால் கால்தடுக் குற்று

நின்ற பசுவின் நெற்றியில் மோதி

இரண்டு பற்கள் எங்கேயோ போட்டுப்

புரண்டெழுந் தோடிப் போனான் கொல்லைக்கு!


பொருள் - வடைக்கும் பிட்டுக்கும் ஆசைப்பட்ட ஒருவன், அதை தின்று வயறு கோளாறாகி கொல்லைக்கு ஓடிய செய்தியை நகைச்சுவையாய் கூறியுள்ளார்.


இது போல இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது. ஒருவருக்கு பாடம் புகட்டவோ அல்லது கிண்டலுடன் தம் கருத்தை சொல்லவோ நம் தமிழ் இலக்கியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குரியதாகும். வேறு ஏதேனும் நகைச்சுவை கலந்த பாடல் இலக்கியங்கள் உங்களுக்கு தெரியுமாயின், பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!


நன்றி!!!
பி. விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

2 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... திருக்குறளில் நகைச்சுவைக்கு என்றே 26 குறள்கள் உள்ளன...

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!