சனி, 22 மார்ச், 2014

சிறுகதை - நட்சத்திரம்

வணக்கம்,

இது எனது இரண்டாம் சிறுகதை. ஒரு நடுத்திர குடும்பத்தில் நடக்கும் சில அசாதாரண நிகழ்வுகளை பற்றியே இக்கதை எழுதப்பட்டுள்ளது. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...

சிறுகதை - நட்சத்திரம்
*******************************

"ரொம்ப சந்தோஷம், ஆண்ட்டி... உங்க பொண்ணு வள்ளி-க்கு முதல் பிரசவத்திலேயே பையன் பொறந்துட்டான். புள்ள நல்லா கொழு கொழுன்னு இருக்கான். முதல்ல போய் சுத்தி போடுங்க..."

"நிஜம் தான் சாந்தி.. பேரன் பிறந்தது சந்தோசம் தான் .. " என்றாள் பார்வதி.

"ஆங்..உங்க பேரனுக்கு பேரு வைச்சாச்சா ? என்ன நட்சத்திரம்? "

"ரோகிணி நட்சத்திரம்... பேரு விஜய் ஆனந்த் -னு வைச்சிருக்கோம்.."

"... ரோகிணியா ??? பகவான் கண்ணன் நட்சத்திரம்.. இவனுக்கு தான் இரண்டு மாமன்களாச்சே !..  "

"ஆம்மா...அந்த கூத்த ஏன் கேக்குற?  பிள்ளை பொறந்தவுடன், துணி சுத்தி, அப்புறம் எண்ணெயிலே என் இரண்டு புள்ளைங்க  ராமனையும், கிருஷ்ணனையும் முழிக்க வச்சு.. "

"சரி தான்.... "

"வேற வழி இல்ல.."

"உங்க கடைசி பொண்ணு லட்சுமி எப்படி படிக்கிறா?? "

"ம்ம்..நல்ல படிக்கிறா.. இந்த வருஷம் பிளஸ் 2.."

அப்ப சரி, நான் போய்ட்டு வரேன்... மறக்காம புள்ளைக்கு சுத்தி போடுங்க.. "

"சரி சாந்தி ... "

வள்ளிக்கு குழந்தை பிறந்து இரண்டு வாரங்கள் ஆகிறது. அந்த ரயில்வே காலனியில், சாந்தி உட்பட பலரும் வந்து வள்ளியையும் அவள் குழந்தையையும் பார்த்து சென்று விட்டனர்.

மறுநாள் காலையில் லட்சுமி வாசல் தெளிக்க வரும் போது, வீட்டு வாசலில் கற்கள் சிதறியிருப்பதை கண்டாள். "இதை யாரு இங்க வந்து போட்டது?" என யோசித்து கொண்டே கோலம் போட்டு விட்டு, வீட்டுக்குள் சென்று அம்மாவிடம் கேட்டாள்.

"ஆமாண்டி, நானும் நேத்து காலையில கோலம் போடும் போது பார்த்தேன். சுத்தம் செஞ்சிட்டு போனேன். ஆனா, சாயங்காலம் மறுபடியும் ஒரே கல்லா கிடக்கு....அதுவும் நம்ம வீட்டுலையும், பக்கத்தில கோமதி வீட்டிலும் மட்டுந்தான்..."  என்றாள் பார்வதி.

பார்வதியும், லட்சுமியும் வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னார்கள். அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. கற்கள் யார் மீதும் விழுவதில்லை.  'தொம்' -ன்று கீழே விழுந்து சிதறுகிறது. இது இப்படியே கொஞ்ச நாட்களாய் நடந்து கொண்டிருந்தது.

இரண்டு நாள் கழித்து, கொல்லையில் குழந்தையை குளிப்பாட்டி கொண்டு இருந்தாள் வள்ளி. திடீரென எங்கிருந்தோ வேகமாக ஒரு கல் பறந்து வந்து வள்ளியின் பக்கத்தில் விழுந்து சிதறியது. 'வீல்' என அலறியபடி குழந்தையை தூக்கி கொண்டு ஓடினாள் வள்ளி.

சத்தம் கேட்டு ஓடி வந்த பார்வதி, "என்னம்மா ? என்னாச்சு ?? எங்கிருந்தும்மா கல்லு வந்துச்சு ?? "என்றாள் பதறியபடி.

"தெரியலம்மா..திடீருன்னு பக்கத்துல வந்து விழுந்துடுச்சி .."

"நல்லவேளை! புள்ள மேல விழல.. நெல்லுகடை மாரியம்மா! காப்பாத்திட்ட..  பூவாடைக்காரி ஆத்தா ! ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியலையே... எம் புள்ளைங்களை நீதான்ப்பா காப்பாத்தணும் பெருமாளே!!

"இனிமே குழந்தைய கொல்லையிலே வச்சி குளிப்பாட்டாத வள்ளி .."

"ம்ம்..சரிம்மா..."

இருவருக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அடுத்தஅடுத்த நாட்களிலும் இப்படியே நடந்தது. எங்கிருந்தோ கற்கள் பறந்து வந்து அவர்கள் வீட்டிலும், பக்கத்து வீட்டிலும் விழுவதும், அவர்கள் பயத்துடன் இருப்பதுமாகவே இருந்தது.

வள்ளியின் அண்ணன்-தம்பிகள் கிருஷ்ணனும், ராமனும் அவர்களுடைய இளவட்ட நண்பன் முருகனுடன் சேர்ந்து  அவர்கள் வீட்டை சுற்றியுள்ள மாமரங்களிலும், அக்கம்பக்கத்து  கூரையிலும் ஏறி யார் கல்லெறிவது என்று உளவு வேலை பார்க்க ஆரம்பித்தனர். அவர்கள் பார்த்ததை அவர்களாலையே நம்ப முடியவில்லை. தெரு முனையிலிருக்கும் குப்பைத்தொட்டி பக்கத்தில் குவிந்து கிடந்த ரப்பீஸ் கற்கள் சடாரென்று தானே எழும்பி, கன நேரத்தில் அவர்கள் வீட்டு வாசலில் விழுந்து சிதறியது. ஒன்றல்ல..இரண்டல்ல.. குறிப்பிட்ட நிமிடத்திற்கு ஒருமுறை இப்படி தாமாகவே பறந்து வந்து விழுவதை கண்டார்கள். இதை பற்றி சொன்னவுடன் வீட்டில் எல்லோர்க்கும் பயம் அதிகமானது.

இரவு பொழுதெல்லாம் கூரையின் மீது கற்கள் விழும் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. அது மட்டுமல்லாமல் தெருநாய்கள் அவர்கள் வீட்டையே நோக்கி குரைப்பது போல எண்ணினார்கள்.

குழந்தை விஜய் இராகு காலத்தில் பிறந்துள்ளதால், அது வேறு எல்லோருக்கும் சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது . இது எதாவது பேய் பிசாசு வேலையா, அல்லது பிள்ளை பிறந்த நேரம் சரியில்லையா, என்னவென்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. வீட்டின் பின்புறத்தில் ஆந்தை அலறும் சத்தம் கொஞ்சம் அதிகமாக கேட்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

அவர்கள் வீட்டருகே உள்ள பள்ளிகூட திடலில் நடக்கும் சுவிசேஷ கூட்டத்தில் பார்வதி கலந்து கொண்டு, பாதிரியார் ஆசிர்வதித்த நீரை கொண்டு வந்து வீட்டில் தெளித்தாள். ரெங்கநாதருக்கு துளசிமாலை சாத்துவதாக வேண்டிக்கொண்டாள். 
 
அந்த பொன்மலைபட்டி ரயில்வே குவாட்டர்ஸ் முழுவதும், கல் விழும் சேதி காட்டுத் தீயன பரவியது. அந்த ஏரியா போஸ்ட் மேன் வந்து, "என்னக்கா, உங்க வீட்ல கல்லு விழுதாமே, அப்படியா????" என்று கேட்கும் அளவுக்கு பிரபலம் ஆகிவிட்டது.

நாளுக்கு நாள் எல்லோருக்கும் பயம் அதிகமாகி கொண்டிருந்தது. பார்வதிக்கு இருப்பு கொள்ளவில்லை. இது இப்படியே போனால் சரிவராது என முடிவு செய்து, வள்ளிக்கும், குழந்தைக்கும் பக்கத்தில் இருக்கும் நதிர்-ஷா தர்காவில் மந்திரித்து பாத்தியா ஓதிவிட்டு, அப்படியே வீட்டில் எல்லோருக்கும் மந்திரித்த தாயத்து வாங்கி வந்து கட்டிக்க சொன்னாள். எந்த சாமியானாலும் பரவாயில்லை, பிரச்னை சரியானால் தேவலை என்ற எண்ணமே அவள் மனதில் மேலோங்கி இருந்தது.

கல் விழுந்த கோமதி வீட்டிலும் தர்காவில் மந்திரித்த தாயத்து வாங்கி கட்டி கொண்டதாக கேள்விப்பட்டனர். 

இரண்டு மூன்று வாரங்கள் சென்றது. நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. கற்கள் விழுவது படிப்படியாக குறைவது போல தெரிந்தது. பார்வதி வீட்டில் பயம் லேசாக நீங்க தொடங்கியது.

ஓரிரு நாட்கள் கழித்து, கடைத்தெருவுக்கு போய் வரும் போது, பக்கத்துக்கு வீடு காலியாக இருப்பதை கண்டாள். கோமதி வீட்டில் இரவோடு இரவாக காலி செய்து விட்டு போய் விட்டனர்.

வரும் வழியில் சாந்தியை பார்த்தாள் பார்வதி . சாந்திக்கு கோமதியின் வீட்டில் நல்ல பழக்கம். சாந்தியிடம் விசாரித்ததில், "கோமதியின் கணவருக்கு, அவர் தம்பியே சூன்யம் வச்சிட்டார் போல....அதான் கல் விழுந்திருக்கிறது. கோமதியின் கணவர் கிருத்திகை நட்சத்திரமாம். அந்த நட்சத்திரத்திற்கு பக்கத்து  நட்சத்திரத்தில் உள்ளவர்களையும் அது பாதிக்குமாம்..  உங்க பேரன் தான் ரோகிணி நட்சத்திரமாச்சே....  அதான்  உங்க வீட்லயும் கல் விழுந்திருக்கு... அவங்க கோவில்ல, தர்காவில போய் ஏதோ பூஜை, மந்திரம்மெல்லாம் பண்ணிட்டு இப்போ ஊரை விட்டே போய்ட்டாங்க..."  என்று கூறி முடித்தாள்.

மனதிலே பாரம் சற்று இறங்கியவளாய் நெல்லுகடையாளையும், மற்ற தெய்வங்களையும் வேண்டிவிட்டு,  நிம்மதியுடன் வீட்டுக்கு சென்றாள் பார்வதி.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

6 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கல் - சூன்யம் - ரோகிணி - கிருத்திகை...

சடாரென்று தானே எழும்பி...

தெய்வமே...!

'பரிவை' சே.குமார் சொன்னது…

கதை அருமை...

கோமதி அரசு சொன்னது…

இப்படியும் நடக்குமா?
தெய்வம் துணை நின்றது மகிழ்ச்சி.

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே !!!

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி கோமதி அரசு அவர்களே ..!!! தொடர்ந்து வருகை தரவும் !!!

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி சே. குமார் அவர்களே ..!!! தொடர்ந்து வருகை தரவும் !!