வணக்கம்,
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுவது இந்தியாவில் உள்ள முகலாய காலத்து மசூதிகள், கோவில்களை இடித்து கட்டப்பட்டதா? என்ற பெரும் சர்ச்சை தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே 1992ஆம் ஆண்டு, அயோத்தியில் உள்ள பாபர் மசூதி (Babar Masjid) ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இடிக்கப்பட்டது. இதன் காரணமாக பல மத கலவரங்கள் நடந்து பலரின் உயிரும், உடமைகளும் பறிபோனது. இந்த வழக்கு 27 ஆண்டுகளுக்கு பிறகு 2019-ல் தீர்ப்பானது. இங்கு இடிக்கப்பட்ட மசூதிக்கு கீழே எந்த இந்து கோவில்களுக்கான கட்டிட அமைப்பும் இல்லை என்றும், சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் இடத்தில ராமர் கோவிலும், அதனருகே சற்று தள்ளி 5 ஏக்கர் இடத்தில் மசூதியும் கட்டி கொள்ளலாம் என கூறியுள்ளது.
இப்போது அடுத்ததாக சில மசூதிகளையம்/முகலாய கட்டிடங்களையும் சிலர் குறி வைத்துள்ளனர்.
மதுராவில் உள்ள ஷாஹி இடிகா மசூதி ( Shahi Idigah Mosque) அவுரங்கசீப் காலத்தில் கட்டப்பட்டது. இது கிருஷ்ண ஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ளதக சொல்கிறார்கள். கிருஷ்ணரின் கொள்ளு பேரன் வஜ்ரநாப் என்பவர் கிருஷ்ணருக்கு இங்கு கேசவ் தேவ் கோவிலை கட்டியுள்ளார். பின்னர் குப்த மன்னரிகளின் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டில் இக்கோவில் இடிக்கப்பட்டு ஷாஹி இடிகா மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் 20ஆம் நூற்றாண்டில் பலரின் உதவியால், கேசவ் தேவ் கோவில் புதுப்பித்து மசூதியருகே கட்டப்பட்டு உள்ளது. புராண கதைகளின்படி கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா சிறைச்சாலை, சிறுவயதில் வாழ்ந்து விளையாடிய கோகுலம், பிருந்தாவனம் ஆகிய இடங்ககள் என 13.7 ஏக்கர் இடம் சர்ச்சையில் உள்ளது. வழக்கு அலகாபாத் நீதிமன்றத்தில் உள்ளது.
மத்தியபிரதேசத்தில் தர் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா - கமால் மௌலா மசூதி (Bhojsala -Kamal Maula Mosque). 2003 வரை இந்துக்கள், வசந்த் பஞ்சமியன்று இசுலாமியர்கள் நமாஸ் படித்த பின்னர் உள்ளே சென்று வழிபட அனுமதிக்க பட்டுள்ளனர். இப்போது இரு தரப்பினரும் இந்த இடத்தை சொந்தம் கொண்டாடுகிறார்கள். 10ஆம் நூற்றாண்டில் பாராமரா வம்சத்தை சேர்ந்த போஜ் மகாராஜா கட்டிய வாகதேவி (சரஸ்வதி கோவில்) என்றும், இது பாடசாலையாக இருந்துள்ளது என்றும் சொல்கின்றனர். பின்னர் டேளவார் கான் கோரி என்னும் முகலாய அரசன் மசூதியாக மாற்றி காட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கும் மத்திய பிரதேச நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளது.
அதோடு இல்லை, தில்லியில் உள்ள குதுப் மினார் (Qutub Minar) பல ஜெயின் மற்றும் இந்து கோவில்களை இடித்து முகலாய மன்னர் குதுப்புதின் ஐபக் கட்டியுள்ளார் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று (மே 24, 2022) தில்லி நீதிமன்றம் குதுப் மினார் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடமே என்றும், வழிபாடும் இடம் அல்ல என்றும், மீண்டும் இடித்து புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பை வழங்கியுள்ளது.
உலக அதிசயமான தாஜ் மகாலையும் (Taj Mahal) விட்டு வைக்கவில்லை. அது தேஜோ மஹாளயா என்னும் சிவன் கோவில் என்றும், அதனை மாற்றி தான் மும்தாஜ் சமாதியை ஷாஜஹான் காட்டியுள்ளார் என்றும், தாஜ்மாகாலுக்கு அடியில் சிவன் கோவில் உள்ளது என்றும் சொல்கின்றனர். அடித்தளத்தில் உள்ள 22 அறைகள் இருப்பதாகவும், அதில் இந்து கோவிலுக்கான ஆதாரங்கள் இருக்கின்றது என சொல்லி வருகின்றனர். அதுபோக ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசுகளின் ஒருவரான தியாகுமாரி, தங்களின் அரச குடும்பத்துக்கு சொந்தமான இடத்தில் ஷாஜஹான் அபகரித்து தாஜ் மகால் கட்டியுள்ளார் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்
இன்னும் நிறைய இருக்கிறது, சென்னை மயிலையில் கபாலீசுவரர் கோவில் முன்னர் இருந்த இடத்தில் இருந்து இடிக்கபட்டு இப்போதுள்ள சாந்தோம் சர்ச் கட்டப்பட்டுள்ளது என்று சொல்கின்றனர். பிற்காலத்தில் இப்போதுள்ள இடத்தில கோவில் மாற்றி கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் இதே போல பல தேவாலயங்களும், பல மசூதிகளும் கட்டப்பட்டுள்ள இடங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அனைவருக்கும் தெரிந்தது போலவே முகலாய/ஐரோப்பிய படையெடுப்புகள் மூலம் பல செல்வங்கள், வளங்கள், புராதன கோவில்கள், கட்டிடங்கள் என பலவற்றை இழந்துள்ளோம். படையெடுப்பின் போது அழிக்கப்பட்ட/கட்டப்பட்ட கட்டிடங்கள், வழிபாட்டு இடங்கள், அரண்மனைகள் என எல்லாமே சரித்திர நிகழ்வு (பிழை) தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 500 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு வரலாற்று சம்பவத்தினால் மாறிய விஷயங்கள் பல இருக்கிறது. இதை அப்படியே விட்டு விடுவதே சால சிறந்தது. அதை மனதில் கொண்டு, இப்போதுள்ள மக்கள் வழிபடும் இடத்தில் உரிமை கோருவது சிலரின் அறிவிலிதண்மையை காட்டுகின்றது. இது முழுக்க முழுக்க அரசியல் விளையாட்டு என்பதில் எள்ளவும் சந்தேகமில்லாமல் தெரிகிறது.
1991 ஆம் ஆண்டில் இயற்றிய சட்டத்தின்படி Places of Worship Act, 1991 (வழிபாட்டு தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991) பாபர் மசூதி நிலப்பிரச்சினை தவிர்த்து, 15 ஆகஸ்டு 1947 முன்னர் வழிப்பாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும், 15 ஆகஸ்டு 1947 நாளுக்கு முன்னர் வழிப்பாட்டு தலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து வழக்காட முடியாது என்றும் கூறுகிறது.
ஏற்கனவே அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என கூறி 450 ஆண்டு கால வரலாற்றை சிறப்பு மிக்க பாபர் மசூதியை இடித்தன் மூலம் இன்றும் மத கலவரங்களும் சர்ச்சைகளும் ஓடி கொண்டே இருக்கின்றது. மீண்டும் இதை தொடர்வோமாயின் இந்தியாவின் பன்முகத்தன்மையும், ஒற்றுமையும், எதிர்கால வளர்ச்சியும் கேள்விக்குறி ஆகிவிடும்.
நன்றி!!!
பி. விமல் ராஜ்
1 Comments:
விரைவில் நாடு சீரழியும்...
கருத்துரையிடுக