ஞாயிறு, 15 மே, 2022

சென்னை பகுதிகளின் பெயர் காரணம்!

வணக்கம்,

தமிழ்நாட்டின் வரலாறு மிக தொன்மையானது. தமிழின் வரலாற்றை சொல்லும் போது தஞ்சை, காஞ்சி, திருச்சி, மதுரை, மாமல்லபுரம், நெல்லை என மற்ற மாவட்டங்களை பற்றி பலரும் பேசுவார்கள். ஆனால் சென்னையை பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சென்னை மாநகரம் ஒரு வேகமாக வளரும் நவீன தலைநகரம் என்று வைத்து கொண்டாலும், இதன் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. 

பல்லாவரம் அருகே மலைகளில் கற்கால சான்றுகள் இருக்கின்றன. சென்னையில் உள்ள பல கோவில்கள் 1000-1500 ஆண்டுகள் பழமையானது. அச்சமயத்தில் இந்த இடத்திற்கு சென்னை என பெயர் இருந்திருக்கவில்லை. சோழர் காலத்தில் புலியூர் கோட்டம் என்றும், தொண்டை மண்டலம் என்று அழைக்க பட்டுள்ளது. தர்மாலா சென்னப்ப நாயக்கரிடமிருந்து ஆகஸ்ட் 22, 1639-ல் மூன்று மைல் நீள இடத்தை ஆங்கிலேயர் வாங்கி, சென்னை பட்டணம் என்று பெயரிட்டனர். அதுவே பிற்காலத்தில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு பின்னர் சென்னை ஆனது.  

ஏற்கனவே தமிழக ஊர்களின் பெயர் காரணம் என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதில் சென்னையிலுள்ள இடங்களின் பெயர் காரணத்தை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். சென்னையில் உள்ள பல இடங்கள் (ஏரியாக்கள்), பாக்கம், ஊர், சாவடி, கரை, சேரி, என முடிவது  போல இருக்கிறது.

பாக்கம் என முடியும் பல ஊர்கள், நீர்நிலை (குளம்/ஏரி) அருகே உள்ள ஊராகவோ/இடமாகவோ இருக்கும். சாவடி என முடியும் இடங்கள், சுங்க சாவடி இருந்த இடமாக இருக்கும். கரை என முடியும் ஊர்கள், ஆற்றுக்கு அருகே உள்ள ஊரின் பெயராக இருக்க கூடும். பெரும்பாலான இடங்கள் கோவில் மற்றும் இந்து புராண பின்னணியில் உள்ள பெயராக இருந்திருக்கிறது. சில ஊர்களின் பெயர்கள் 18, 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் உருவாக்கபட்டு பெயர் பெற்றுள்ளது. அவற்றுள் சிலவற்றை பகிர்கிறேன்.

ஆவடி (Avadi)- 'ஆ 'என்றால் பசு, குடி என்றால் வீடு/இடம் என்பதாகும். பசுக்கள் அதிகம் உள்ள இடம் என்பதால், ஆயக்குடி அல்லது ஆவக்குடி என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் ஆவடி என அழைக்கபட்டிருக்கலாம்.

அம்பத்தூர் (Ambattur) - சக்தி பீட கோவில்களில் ஐம்பத்தி ஓராம் (51) ஊர் என்பதற்காக இப்பெயர் பெற்றது.

வில்லிவாக்கம் (Villivakkam) - வில்வ மரங்கள் அதிகம் என்பதால் இவ்விடம் வில்லிவாக்கம் ஆனது.

நடுவான்கரை (Naduvankarai) - கூவம் ஆற்று படுகை அருகே உள்ள கரை என்பதால் இது நடுவான்கரை என பெயர் பெற்றது. இப்போதைய அண்ணா நகர்.

திருவான்மியூர் (Thiruvanmiyur) - வால்மீகி முனிவருக்கு இங்கு கோவில் இருந்தது என்பதற்காக திருவால்மீகியூர் என அழைக்கப்பட்டு, பின்னர் திருவான்மியூர் ஆனது.

மந்தவெளி (Mandaveli) - கூவம் ஆறு அருகே ஆடுமாடுகள் மேயும் மந்தைகள் மிகுந்த பகுதி என்பதால் மந்தைவெளி எனஆனது.

அமைந்தகரை (Amjikarai) - கூவம் ஆற்றின் அருகே இருப்பதால் இது அமைந்தகரை.

அடையாறு (Adyar) - சென்னையில் ஓடும் இரண்டு ஆறுகளில் ஓன்று அடையாறு. அதன் பெயராலேயே இப்பெயர் வந்தது.

பட்டினபாக்கம் (Pattinapakkam) - 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் இங்கு வந்து தியாகராஜ கோவிலில் வழிபட்டு முக்தி அடைந்ததாலேயே பட்டினம்பாக்கம் என பெயர் பெற்றது.

திருவொற்றியூர் (Thiruvotriyur) - 'ஒற்றி ஊர்' என்பதற்கு அடமான இடம் என்று அர்த்தம். பல்லவ மன்னர்கள் காலத்தில் இந்த இடம் அடமானத்தில் இருந்தது என சொல்லப்படுகிறது. அப்பெயர் பின்னாளில் திருவொற்றியூர் ஆனது.

புராண கதையின் படி, பிரளய  காலத்தில்  இந்த உலகை  அழியாமல் காக்கும் பொருட்டு சிவபெருமானிடம் எல்லோரும் வேண்டிக் கலங்கினர்அப்போது தன் நெற்றிக் கண்ணிலிருந்து வெப்பத்தை உண்டாக்கினார்அந்த வெப்பத்தைக் கொண்டு சூழ்ந்திருந்த தண்ணீரை ஒற்றி ஒற்றி எடுத்தார் என்றும் அதனால் இந்த ஊருக்கு 'திரு ஒற்றியூர்'  என்றும் பின்னர் அதுவே திருவொற்றியூர் 
என மருவியதாகவும் சொல்லப்படுகிறது.

வியாசர்பாடி (Vyasarpadi) - வியாச முனிவரின் பெயரால் இப்பெயர் வந்தது என சொல்லப்படுகிறது.

பார்க் டவுன் (Park Town ) - சென்னை சென்ட்ரல் அருகே 1970 முன் வன உயிரியல் பூங்கா ஒன்று இருந்தது. பின்னாளில் இடப்பற்றாக்குறை காரணமாக அது வண்டலூருக்கு மாற்றியமைக்கபட்டது.

கொசபேட்டை(Kosapet) - மண் பபாண்டங்கள் செய்யும் குயவர்கள் பேட்டை என்ற பெயரே கொசப்பேட்டை ஆனது.

தண்டையார்பேட்டை(Tondaiyarpet) - 18ஆம் நூற்றாண்டில் ராமநாதபுரம் மாவட்டதில் தொண்டி என்ற ஊரில் பிறந்த குணங்குடி மஸ்தான் சாஹிப் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்தார். அதனால் இது தொண்டியார் பேட்டை என அழைக்கப்பட்டு பின்னர் தண்டையார்பேட்டை ஆனது.

வண்ணாரப்பேட்டை (Washermanpet/Vannarapet) - பக்கிங்ஹாம் கால்வாய் அருகே துணி வெளுக்கும் தொழிலாளர்கள் வசித்த இடம் என்பதாலேயே இது வண்ணாரப்பேட்டை என்றானது
சிந்தாதரிப்பேட்டை (Chindadaripet) - துணி நெசவு செய்யும் தொழிலாளர்கள் இருக்கும் இடம். 'சின்ன தறி பேட்டை' என்பதே சிந்தாதரிப்பேட்டை ஆனது.

மயிலாப்பூர் (Mylapore)- மயில் ஆடும் ஊர். மயில் ரூபத்தில் பார்வதி சிவனை வணங்கிய இடம் என்பதால் இது மயிலாப்பூர்.

திருவல்லிக்கேணி (Triplicane) - 'திரு அல்லி கேணி'. அல்லி மலர்கள் அதிகம் பூக்கும் இடம் ஆதலால் இது இப்பெயர் பெற்றது.

எழும்பூர் (Egmore) - சூரியன் முதலில் படும் ஊர் என்பதால் எழுமியூர் என பெயர். பின்னாளில் எழும்பூர் ஆனது.

ராயப்பேட்டை(Royapettah) - தெலுங்கு பேசும் நாயக்க மன்னர்களின் தளபதிகளான ராயர்கள் இருந்த இடம் என்பதால் ராயர் பேட்டை என்று அழைக்கப்பட்டு பின்னர் ராயப்பேட்டை ஆனது.

கொத்தவால் சாவடி (Kotawal Chavadi) - 'கொத்தவால்' என்பதற்கு வரி வசூலிப்பவர் என்று பொருள். வரி வசூல் செய்யும் சாவடி இருந்திருப்பதால் இப்பெயர் வந்தது.

பூந்தமல்லி (Ponnamallee/Poondhamalli) - பூவிருந்த அல்லி - அல்லி மலர்கள் அதிகம் பூத்து குலுங்கும் இடம் அதலால் இப்பெயர் வந்தது.

சேப்பாக்கம் (Chepauk) - Che Bagh. Che -ஆறு ; Bagh - garden (தோட்டம்). ஆறு தோட்டங்கள் உள்ள இடம் என்று பொருள்.

கோடம்பாக்கம் (Kodambakkam) - Ghoda Bagh. Ghoda- குதிரை; Bagh- garden (தோட்டம்). குதிரைகளை கட்டி வைக்கப்பட்ட இடம் என போறும். அதுவே கோடம்பாக்கம் ஆனது.

சேத்துப்பட்டு (Chetpet) - 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, சென்னையில் பல கட்டிடங்களை கட்டியவர் நம்பெருமாள் செட்டியார். அவர் பெயராலேயே இது செட்டியார் பேட்டை என அழைக்கப்பட்டது. பின்னாளில் சேத்துப்பட்டு என்றானது.

அண்ணா சாலை (Anna Salai/ Mount Road) - செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செயின்ட் தாமஸ் மலைக்கு செல்லும் பாதை என்பதால் அது மவுண்ட் ரோடு என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. பின்னர் அது அண்ணா சாலை ஆனது.

மாம்பலம் (Mambalam) - மஹா வில்வ அம்பலம் என்ற பெயர் கொண்ட இப்பகுதி, நிறைய வில்வ மரங்களை கொண்டது. அதுவே பின்னர் மாம்பலம் ஆனது.

தேனாம்பேட்டை (Tennampet) - தென்னம் பேட்டை. தென்னை மரங்கள் அதன் இருக்கும் பகுதியாக இருந்ததால் தென்னம் பேட்டை. அதுவே தேனாம்பேட்டை ஆனது.

நந்தனம் (Nandanam) - பூத்து குலுங்கும் நந்தவனம் இருந்த பகுதி பின்னாளில் நந்தனம் ஆனது.

சைதாப்பேட்டை (Saidapet) - ஆற்காடு நவாபின் தளபதி சையது ஷாவின் பெயரால் இது சையது ஷா பேட்டை என அழைக்கப்பட்டு, பின்னர் சைதாப்பேட்டை ஆனது.

பரங்கிமலை (St. Thomas Mount) - கிருத்துவத்தை பரப்ப வந்த பரங்கியர் வாழ்ந்த /இருந்த மலை என்பதாலேயே இது பரங்கிமலை என அழைக்கப்பட்டது. இன்னொரு சிலர், பிருங்கி முனிவர் செய்த இடம் என்பதாலேயே பிருங்கி மலை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் பரங்கி மலை ஆனது.

கிண்டி (Guindy) - பிருங்கி முனிவர் தவம் செய்து அவரின் கிண்டி (கமண்டலம்) இருந்த இடம் என்பதால் இது கிண்டி என பெயர் பெற்றது.

நங்கநல்லூர் (Nanganallur) - நங்கை நல்லூர். நங்கை என்பது திருமணம் ஆகாத கன்னி பெண்ணை குறிக்கும். இங்கு நங்கையாக இருக்கும் ராஜராஜகேஸ்வரி அம்மன் பெயராலேயே இப்பெயர் வந்தது.

மீனம்பாக்கம் (Meenambakkam) - இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் மீன்வளம் அதிகமாக இருந்துள்ளதால் மீனம்பாக்கம் என பெயர் வந்தது.

திரிசூலம் (Thirusoolam) - இங்குள்ள திரிசூலநாதர் கோவில் பெயராலேயே இப்பெயர் வந்தது.

பல்லாவரம் (Pallavaram) - பல்லவர்கள் இருந்த இடம் என்பதால் பல்லவபுரம் என்று குழிக்கஅழைக்கப்பட்டு பின்னர் பல்லாவாம் ஆனது,

கிரோம்பேட்டை (Chromepet) -  தோல் தொழிற்சாலை இருந்த இடம் என்பதால் இது (கிராம் லெதர்) கிரோம்பேட்டை ஆனது.

தாம்பரம் (Tambaram) -  தாமாபுரம் என்ற பெயர் செங்கல்பட்டு திருகச்சூர் சிவன் கோவிலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதுவே தாம்பரம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.  தாம்பு என்பது கயிரு என்று பொருளை குறிக்கும். இங்கு கயிறு திரிக்கும் தொழிற்சாலைகள் இருந்திருப்பதால் தாம்பரம் என பெயர் வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

மாடம்பாக்கம் (Madambakkam) - திருப்புகழ் நூலில் இந்த இடத்தை பெயரை மாடையாம்பதி என்று அழைக்கப்பட்டுள்ளது. அதுவே பின்னாளில் மாடம்பாக்கம் ஆகியுள்ளது.

ராஜகீழ்ப்பக்கம் (Rajakilpakkam) - சோழ காலத்தில் மன்னர்கள் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் பள்ளத்தில் இறங்கி மக்களை பார்த்த இடம் ராஜகீழ்ப்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது. 

பெருங்களத்தூர் (Perungalathur) - ஒரு காலத்தில் நிறைய குளங்கள் இருந்திருக்க வேண்டும். அதனாலேயே இப்பெயர் வந்தது.

இன்னும் சில இடங்களின் பெயர்கள் சமீப காலத்தில் சேர்க்கபட்டதால் காரண பெயர்கள் சரிவர தெரியவில்லை. மேலும் சில இடங்கள் வாய்மொழியின் அழைக்கப்படும் காரணமாக மட்டும் இருப்பதால் சரியான தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை.


நன்றி!!!
பி. விமல் ராஜ் 


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

5 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கங்கள் அருமை...

KILLERGEE Devakottai சொன்னது…

பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே
-கில்லர்ஜி

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி கில்லர்ஜி!

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன் !

RESOLUTIONPLAN.com சொன்னது…

நல்ல தகவல்