சனி, 1 அக்டோபர், 2022

பொன்னியின் செல்வன் - பாகம் I - விமர்சனம்

வணக்கம்,

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - இந்த வரலாற்று-கற்பனை புதினத்திற்கு எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. கிட்டதட்ட 70 ஆண்டு கால சினிமா ஜாம்பவான்களின் கனவு  இது. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் படமாக முதலாம் பாகம் வெளிவந்துள்ளது. பொன்னியின் செல்வனை நாவலை படித்தவர்கள் ஒவ்வொருத்தரின் மனதிலும் அதன் கதாபாத்திரங்களும், உருவங்களும் நிழலாகவே உருவாக்கப்பட்டிருக்கும். அதையெல்லாம் திரைபாத்திரங்களில் மூலம் ஓரளவு சரியாக தேர்ந்தெடுத்துள்ளதாகவே பட போஸ்டர்கள் மூலம் அறியலாம். 

அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக திரிஷா, ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத் குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், ஆழ்வார்கடியானாக ஜெயராம், பார்த்திபேந்திரனாக விக்ரம் பிரபு, பூங்குழலியாக ஐஸ்வர்யா மேனன், பெரிய வேளானாக பிரபு என பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

டிரெய்லரே எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் தான் இருந்தது. கிராஃபிக்சில் சோழ நாடும், பழைய தஞ்சையும் கோட்டையும், இயற்கை வளங்களும், போர் கட்சிகளும் பிரமிக்க வைக்கின்ன்றன. Color tone பற்றி சிலர் குறை கூறினார்கள். எனக்கு அது அவ்வளவு பெரிய தவறாக தெரியவில்லை. திருநீறு பட்டை போடாமல் திலகம் இட்டுள்ளனர் என கூறினார்கள்; அதையும் கிராபிக்சில் சிறிய பட்டையை  போட்டு சமாளித்து விட்டனர்.

ஏ.ஆர். ரகுமானின்  இசையில் எல்லா பாடலும் துள்ளலாகவே இருக்கிறது. எப்போதும் போல பாடல்களில் ஏ.ஆர். ரகுமானின் குரல் முதலில் கேட்க ஒரு மாதிரியாக இருந்தது. பின்னர் கேட்க கேட்க அதுவே favourite லிஸ்டலில் வந்து விட்டது.  'பொன்னி நதி ' மற்றும் 'ராட்சச மாமனே' பாடல்களை திருப்பி திருப்பி கேட்டு கொண்டிருக்கிறேன்.  

ponniyin-selvan-review

நாவல் படிக்காதவருக்கும் கூட அரசல் புரசலாக கதை தெரிந்திருக்கும். கடந்த ஒரு மாத காலமாக எல்லா மீடியா களிலும் இதை பற்றிய ப்ரோமோஷன்தான் ஓடி கொண்டிருக்கிறது.  பொன்னியின் செல்வன் சிறு குறிப்பு வரைக என்று கேட்டால் கதை, கதை மாந்தர்கள், அவர்களின் வரலாறு, என எல்லாவற்றையும் 10 நிமிட விடீயோக்களில் புட்டு புட்டு வைக்கின்றனர். 

கல்கியின் கதையில் பல பாத்திர படைப்புகள் உண்டு, அவை எல்லாவற்றிற்கும் நல்ல அறிமுகமும், முன்கதையும் இருக்கும். ஆனால் இதில் பல கதாபாத்திரங்கள் திடீரென தோன்றி மறைகிறது.  பொன்னியின் செல்வன் என்று சொன்னாலே சில விஷயங்கள் நியாபகம் வரும். ஆடிப்பெருக்கு, வீரநாராயண ஏரி, அனுராதாபுரம், கோடியக்கரை, இன்னும் சில... இதில் ஏதுவுமே படத்தில் இல்லை. இடம் காட்டப்பட்டிருக்கலாம். ஆனால் முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை. எல்லாவற்றையும் சேர்க்க முடியாதுதான்; ஆனாலும் முழுமையாக ஏற்க முடியவில்லை. கதை படித்ததாலயோ என்னவோ?!?! 😬  

வால் நட்சத்திரம் தோன்றலில் உலகநாயகனின் வாயிஸ் ஓவரில் ஆரம்பிக்கிறது சோழ சாம்ராஜ்யத்தின்  கதை. எல்லா அரச கதைகளில் வருவது போலவே இதிலும் வீரம், வஞ்சனை, துரோகம், பாசம், நட்பு, விசுவாசம், காதல் என எல்லாம் இருக்கிறது. நாவலில் இருக்கும் கதையை சற்றே மாற்ற வேண்டிய இடங்களில் மாற்றி மெருகூட்டி எடுக்க முயற்சி செய்துள்ளனர். படம் முழுக்க வந்தியதேவன் முழுக்க வலம் வந்து கார்த்தி நன்றாகவே நடித்துள்ளார். கூடவே வரும் ஆழ்வார்க்கடியான் வந்து நம்மை அவ்வப்போது சிரிக்க செய்துவிட்டு போகிறார். ஆதித்த கரிகாலனாக விக்ரம் எப்போது வீரதாபத்தோடும், கோபத்தோடும் நடிப்பை வெளிப்படியிருக்கிறார். ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் பாத்திரத்துக்கு அழகும், தேஜஸும் உடைய வீரமான இளவரசராகவே தெரிகிறார். அழகு பதுமைகளாக திரிஷாவும் ஐஸ்வர்யா ராயும் படம் நெடுக ஆக்கிரமித்து செல்கின்றனர். வஞ்சமும், கோபமும் கண்ணிலேயே காட்டி கவர்கிறார் பழுவூர் ராணி. அப்பப்பா!!! எனக்கு என்னவோ பழூவூர் ராணியை விட இளைய பிராட்டி தான் அழகாக கவர்ந்து ஜொலிப்பதாக தெரிகிறார். சரத்குமாரும், பார்த்திபனும் பழுவேட்டரையர்கள் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதம். மற்ற பாத்திரங்கள் எல்லாம் செம்மையாக அவர்களுக்கு கொடுத்த வேலையை செவ்வனே செய்துள்ளனர். கல்கியின் கதை தெரியாமல் பார்ப்பவர்களுக்கும் கூட புரியும் அளவிற்கு படம் எடுக்கப்பட்டுள்ளது சிறப்பு. இறுதியில் அருள்மொழிவர்மன் கடல் கொண்டு போவதில் முடிகிறது முதல் பாகம். வேறு ஏதாவது இடத்தில முடித்திருக்கலாம் என தோன்றுகிறது. End credit ஆக ஊமை பெண்மணி யார் என காட்டி முடிக்கிறார்கள்!🙏

பொன்னியின் செல்வன் தீம் மியூசிக் ஏற்கனவே நன்கு அறிந்த/கேட்ட இசை போல எனக்கு இருந்தது. என்னவென தெரியவில்லை.  கிராஃபிக்ஸ் காட்சிகளில் நதிக்கரையும், தஞ்சை கோட்டையும், சுழக்காற்றில் கடலும் அலையும் கப்பல் சண்டைகளும் பார்ப்பதற்கு அருமையாக இருத்தது. இலங்கை தீவை மட்டும் வேற இடத்தில காட்டியிருக்கலாம். பார்த்த மாத்திரத்தில் எல்லாரும் சொல்லிவிட்டார்கள் அது புக்கெட் தீவு என்று! 😉  

கதை தெரிந்தவரும், தெரியாதவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். கண்களுக்கும், மனதுக்கும், விருந்தாகவும், நிறைவாகவும் இருப்பார் நமது பொன்னியின் செல்வன்.! 👌 

இக்காவேரி மைந்தனின் கதை, பல்லவ, பாண்டிய, சோழ நாடுகளை தவிர மற்ற நாடுகளான சேர நாடு, இராட்ஷக்கூடம், பாதாமி, வேங்கிநாடு, மராத்தியம் ஆகியவற்றில் தங்கு தடையின்றி ஓடி, பேசப்படுவது சற்றே சிரமம் என நினைக்கிறேன். என்னதான் இந்திய வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்தி என நாம் பெருமைப்பட்டு கொண்டாலும், அவர்களுடைய ஊரில் எடுபடும் என தோன்றவில்லை. அதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது கதையில் வரும் பெயர்கள், கதை நடக்கும் ஊர்கள் மற்றும் கலாச்சாரம். நாம் பெருமையாக பேசி கொள்ளலாம், அவர்களுக்கு புரியுமா/பிடிக்குமா என தெரியவில்லை. உதாரணம் சாயிரா நரசிம்ம ரெட்டி, ருத்ரமாதேவி, கௌதமி புத்ர சத்தகர்னி, பழசி ராஜா, மரைக்காயர், ஜோதா அக்பர் போன்ற படங்கள் அந்த அந்த மொழிகளில் நன்றாக ஓடியது அல்லது மக்களால் ஒத்துக்கொள்ளப்பட்டது; மற்ற மொழிகளில் பெரிதாக பேச படவில்லை. நம் பொன்னியின் செல்வன் விதி விலக்காக இருக்கிறாரா என இரண்டு மூன்று நாட்களில் தெரிந்துவிடும். பாகம் II வெளிவந்த பின் அருள்மொழிவர்மனின் பட்டாபிஷேகத்தை பார்த்து, பொன்னியின் செல்வனை முழுமையாய் உளமார கண்டு சிலாகித்து களிப்படைவோம்.  வெற்றிவேல்! வீரவேல் !! 😀      


நன்றி!!!

பி. விமல் ராஜ் 

2 Comments:

முத்துகிருஷ்ணன் சொன்னது…

நல்ல விமர்சனம். அனைத்தையும் தொட்டிருக்கிறாய். மேலும் உயர்வு பெற வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விமர்சனம் நன்று...