வியாழன், 21 செப்டம்பர், 2023

கனவுகள் ஆயிரம்!

வணக்கம்,

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவு வரும். ஆசைப்பட்ட பொருள் கிடைக்க வேண்டும், நன்றாய் படித்து நல்ல மார்க் எடுக்க வேண்டும், நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்க வேண்டும், காதலிக்க அழகிய பெண் வேண்டும், திருமணம் செய்ய குணமான பெண் வேண்டும், திட்டாத மனைவி வேண்டும் (ஹ்ம்ம்...), டார்ச்சர் செய்யாத மேனேஜர் வேண்டும் (ஹ்ம்ம்க்கும்..), மற்றவர் முன் நல்ல வசதி வாய்ப்புடன் இருக்க வேண்டும் என ஒவ்வொருவரின் கனவும் அவர்களின் சிந்தனைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றது போல இருக்கும். 
"கனவு என்பது தூங்கும் போது பார்ப்பது அல்ல, தூங்க விடாத ஒன்று. மேலும் அந்த எண்ணங்களால் எண்ணற்ற செயல்கள் நடக்கின்றன." - பாரத் ரத்னா APJ அப்துல் கலாம். 
நம் தூக்கத்தில் வரும் கனவும், தூங்க விடாமல் நாம் துரத்தும் கனவும் ஒன்றல்ல.  இக்கனவுகளின் அர்த்தம் என்ன? இந்த கனவுகள் எதனால் வருகிறது ? ஏன் வருகிறது? என்பதை நான் படித்ததை கொண்டு சொல்கிறேன், படியுங்கள்! 

எனக்கும் ஒரு கனவு இருந்தது. ஒரு மாதத்திற்கு நான்கு பதிவு போட வேண்டும்; நிறைய எழுத வேண்டும்; அதை நிறைய பேர் அதை படிக்க வேண்டும் என ஒரு சராசரி பதிவரின் கனவு தான். முழுமையாக இல்லை என்றாலும் ஏதோ என்னால் முடிந்தவரை எனக்கு தெரிந்ததை கொண்டு எழுதி வருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக  இப்போது தான் 150ஆவது பதிவை எட்டியுள்ளேன்.😀 இதுவரையில் என் வலைப்பூவின் பதிவுகளை படித்து, எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்! 🙏


நாம் தூங்கும் போது மூளையில் முழுமையாக நிகழும் ஒரு அற்புதமான விஷயம் கனவு. இன்றளவும் மனித அனுபவத்தில் பலரால் விவரிக்க முடியாத ஒன்று. ஒரு கனவு என்பது தூக்கத்தின் போது ஏற்படும் காட்சிகள்
, எண்ண ஓட்டங்கள் மற்றும் உணர்ச்சிகளின் தொடர்ச்சியே ஆகும். பொதுவாக கனவுகள் தூக்கத்தின் சில கட்டங்களில் விருப்பமின்றி நடக்கும். மக்கள் ஒவ்வொரு இரவும் சுமார் இரண்டு மணிநேரம் கனவு காண்கிறார்கள். ஒவ்வொரு கனவும் சுமார் 5 முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும். இருப்பினும், கனவு காண்பவர் கனவில் நிகழ்ந்ததை விட காட்சிகள் நீளமாக இருப்பதாய் உணரலாம். மேலும் கனவுகள் என்பது உறக்கத்தின் போது உணர்ச்சி, அறிவாற்றல் மற்றும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளால் வகைப்படுத்தப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கனவுகளில் என்னவெல்லாம் வரும்? எதெல்லாம் வரும்? 

*) பொருள்/உருவம்/நபர்.
*) விழித்திருக்கும் போது ஒரு நபருக்கு ஏற்படும் ஒரு சம்பந்தமில்லாத/விருப்பமில்லாத பார்வை (vision). ஏற்கனவே நடந்திருக்கும்/ நடக்கப்போகும் ஒரு செயலோ/ நிகழ்வோ/விஷயமோ நம் கண் முன்னே படமாய் ஓடும்.
*) விழித்திருக்கும் போது ஒரு நபர் விரும்பிய ஒரு விஷயம்/ கற்பனையில் உள்ள ஒரு நிகழ்வோ, செயலோ vision னாக முன்வந்து மறையும். வண்டி ஓட்டும் போதோ, வீட்டில்/அலுவலகத்தில் வெட்டியாய் உட்கார்ந்திருக்கும் போதோ, பள்ளி, கல்லூரி வகுப்பில் அமர்ந்த்திருக்கும் போதோ ஏற்படும் ஓர் காட்சியின் திடீர் பார்வை.  
*) ஒரு லட்சியம், இலக்கு அல்லது குறிக்கோள் (இதை பற்றித்தான் தான் அப்துல் கலாம் சொல்லியிருந்தார்).

Why dreams coming in sleep

கனவுகளுக்கு பல வடிவங்கள் உண்டு. கவலை தோய்ந்த கனவுகள், தெளிவான கதை போன்ற கனவுகள், ஆசைகளை நிறைவேற்றும் கனவுகள் மற்றும் பயங்கரமான கனவுகள் என பல உண்டு. கனவுகள் பொதுவாக REM தூக்கத்தின் போது ஏற்படும். REM கனவுகள் (REM dreams) என்றால் என்ன? நாம் கனவு காணும் போது, நம் கண்ணின் கருமணி எல்லா திசைகளிலும் வேகமாக நகரும். இதையே Rapid Eye Movement (REM) என சொல்வார்கள். பொதுவாக தூங்கி 90 நிமிடங்களுக்குள் REM கனவுகள் தொடங்குகிறது. REM தூக்கம் கனவு மற்றும் தொடர் நினைவுகளுடன் தொடர்புடையது. REM தூக்கத்தின் போது ஏற்படும் கனவுகள் மிகவும் தெளிவானதாகவும், கதையைப் போலவும் இருக்கும். அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள எளிதாகிறது. REM தூக்கம் பொதுவாக தூக்க சுழற்சியின் (sleep cycle) பிற்பகுதியில் நிகழ்கிறது. எனவே தூங்கி எழுந்தவுடன் நெருக்கமாக விஷயங்களின் கனவுகள் நினைவில் இருக்கும். REM தூக்கத்தின் போது எழுந்திருக்கும் 80% மக்கள் தங்கள் கனவுகளை நினைவில் வைத்திருக்க முடியும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. மருத்துவ நடைமுறையில், இளைஞர்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எழுந்தவுடன் கனவுகளை நினைவில் கொள்கிறார்கள். இருப்பினும், எல்லோரும் தங்கள் கனவுகளை நினைவில் கொள்வதில்லை. சிலர் தங்கள் கனவுகளை நினைவில் வைத்திருக்க மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் விழித்தவுடன் அவர்களுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை / தகவலை உடனடியாக அணுக முடியாது. தூக்கத்தின் போது மூளையில் உள்ள acetylcholine மற்றும் norepinephrine ஆகிய ரசாயன அளவுகள் மாறுவதால் மக்கள் தங்கள் கனவுகளை மறந்து விடுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஒரு சிலருக்கு NREM (Non-REM) கனவுகளும் வருவதுண்டு. 

கனவுகள் எதனால் வருகிறது?

மக்கள் ஏன் கனவு காண்கிறார்கள் என்பது பற்றி பல கோட்பாடுகள் உள்ளன, ஆனால் உறுதியான பதில் இல்லை. ஒரு சில கோட்பாடுகளில் கனவின் காரணத்தை சொல்ல முயற்சித்துள்ளனர்.

(i) நினைவுகளை ஒருங்கிணைத்தல்: முக்கியமான நினைவுகளைச் சேர்த்து சேமிக்கவும், முக்கியமில்லாதவற்றை அகற்றவும் கனவுகள் தேவைப்படுகிறது. உங்கள் நாளின் நல்ல விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள கனவுகள் உதவுகிறது.
(ii) உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துதல்: உங்களுள் உள்ள பயம்/ காமம்/ கோபம் போன்ற உணர்வுகளை சமாளிக்க கனவுகள் உதவக்கூடும்.
(iii) சவால்களுக்கான பயிற்சி: கடினமான நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் பயிற்சியை கனவுகள் கொடுக்கும் .
(iv) பழமையான உள்ளுணர்வு ஒத்திகை: கனவுகள் உங்கள் விடாமுயற்சிகளுடன் சண்டை போடவும், உங்களை சமாதான படுத்தி விமான போல பறக்கும் உள்ளுணர்வைப் பெற பயிற்சி செய்யவும் உதவும்.

பெரும்பாலும் என்னன்ன கனவுகள் வரும்?

- மேலேயிருந்து கீழே விழுவது. 
- முடி/ பல் உடைந்து கொட்டுவது. 
- பாம்பு தீண்டுவது/அல்லது உடம்பில் ஊர்வது. 
- நாய் / வேறொருவர் துரத்துவது. 
- தண்ணீருக்குள் மூழ்குவது. 
- காலியான அறையை பார்ப்பது.
- வண்டியில் போகும் போது விபத்து நேரிடுவது.
- பெட்டி பெட்டியாய் பணம் இருப்பது. 
- பொது இடத்தில நிர்வாணமாய் போவது. 
- முக்கியமான பரீட்சைக்கு படிக்காமல் இருப்பது. 
- நெருக்கமானவர் இறந்தபின் நம்முடன் பேசுவது. 
- பயங்கர உருவங்களை பார்ப்பது.
- ஆகாயத்தில் பறப்பது. 
- மனதிலுள்ள நிறைவேறாத / நடக்க வேண்டும் என விரும்புகின்ற ஆசைகள் நிறைவேறுவது. 
- கற்பனையான மற்றும் இயற்கைக்கு மாறான விஷயங்கள் (fictional & super natural) நடப்பது.

இது போல பல கனவுகள் உலகளாவிய வகையில் பலருக்கு மீண்டும் மீண்டும் வந்துள்ளது. அதற்கேற்ற பற்பல காரணங்களும் சொல்கிறார்கள்.
உதாரணமாக சில : பற்கள் விழுவது தங்கள் உடல்/உருவத்தை பற்றிய கவலையாக இருக்கலாம். மேலும் மற்றவர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை பொருத்தும் இக்கனவுகள் வரும் என சொல்கிறார்கள். நாய் அல்லது மனிதர்கள் துரத்துவது, உங்கள் வாழ்கையில் ஏற்பட்டுள்ள கவலைகளையும், பிரச்சனைகளையும் கண்டு பயந்து ஓட முயல்கிறீர்கள் என்று சொல்வதுண்டு. நிர்வாணமாய் பொது இடத்தில் நிற்பது என்பது நீங்கள் செய்யாத தவறுக்கு உங்கள் மீது பழி/குற்றம் சுமத்துத்துதலால் ஏற்படுகிறது என் சொல்கிறார்கள். இறந்தவர் கனவில் வருவது, அவர்கள் ஆத்மா உங்களிடம் பேச முற்படுகிறது என சொல்வார்கள். இன்னும் இப்படி சொல்லி கொண்டே போகலாம்...

மேற்கொண்ட காரணங்களையெல்லம் ஒத்துகொள்ள என்  மனம் ஏனோ ஏற்கவில்லை. அறிவியல் மனோதத்துவத்தின் படி, இதற்கெல்லாம் அலைபாயும் மனமும், எண்ண ஓட்டங்களும், வாழ்கையில் நடக்கும் நிகழ்வுகளால் ஏற்படும் பயமும் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

இதில் எனக்கு அடிக்கடி வரும் கனவு, பரீட்சைக்கு படிக்காமல் இருப்பது தான். நான் பள்ளி கல்லூரி படிக்கும் காலத்தில், அடுத்த நாள் பரீட்சைக்கு கூட படிக்காமல் சும்மா மோட்டுவளையை பார்த்து கொண்டே நாள் முழுக்க பகல் கானா கண்டு கொண்டிருப்பேன். காலை 10 மணிக்கு பரீட்சை என்றபோதும் காலை 6 மணிக்கு எழுந்து படிக்க கூட மாட்டேன். (அப்போதெல்லாம் படிக்க பிடிக்க வில்லை என்பதே உண்மை! பின்னர் வருந்தியுள்ளேன்...) பின்பு எப்படியோ படித்து முடித்து பாஸாகி இப்போது ஒரு நல்ல வேலையும் கிடைத்தும் விட்டது. ஆனால் இன்றளவும் எதோ ஒரு முக்கிய பரீட்சை (board exam/university exam/ course certifcation) ஒன்று காலை வேளையில் இருப்பது போலவும், ஒரு வரி கூட படிக்காமல் அசால்டலாக தூங்கி கொண்டிருப்பது போலவும் என் மனம் 'பக் பக்'என அடித்து கொண்டு என்னை பயப்படுத்தும். மூளைக்கு தெரியுது "அடேய் மடையா! நீ படிச்சு முடிச்சு கிழிச்சு 15 வருஷதுக்கு மேல ஆச்சுடான்னு.." சொல்லி என்னை ஒரு உலுக்கு உலுக்கிவிடும். அப்புறம் தான் படுக்கை கட்டில் அதிர 'பே' ன்னு எழுந்து சுதாரித்து கொண்டு, பின்னர் ஒண்ணுக்கு இருந்து விட்டு படுப்பேன். சொல்லி வைத்தது போல ஒவ்வொரு முறையும் இக்கனவு விடியற்காலை வேளையில் தான் வரும். படிக்கும் காலத்தில் கூட இப்படி பயந்ததில்லை, ஏனோ இன்றும் தூக்கத்தில் கனவில் எழுதாத பரீட்சைக்கு பயந்து கொண்டிருக்கிறேன்.😁 

மிகுந்த மனஅழுத்தம் காரணமாக இது போன்ற கனவுகள் வரலாம் என சொல்கிறார்கள். மேலும் வாழ்கையின் அடுத்த கட்டத்துக்கு போக,  என்ன செய்ய போகிறோமோ என்ற இயலாமையும், நம்பிக்கையின்மையும் காரணம் எனவும் சொல்கிறார்கள். என்னவோ ஏதோ.. இது எதுவும் எனக்கு சம்பந்தபட்டதாய் தெரியவில்லை.

இது போல உங்களுக்கு அடிக்கடி வரும் கனவுகள் என்னென்ன என்பதை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்.  கூடவே என் என்னையும், இப்பதிவின் லிங்க்கையும் சேர்த்து tag செய்து பகிருங்கள்.

இனிமையான உறக்கத்துடன் நிம்மதியாய் தூங்குங்கள்... Sweet Dreams!

நன்றி !!!
பி. விமல் ராஜ்
 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!